Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதகுல நீதிக்கான குரல் கொண்ட கௌரவமான தேசிய இனம் நாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதகுல நீதிக்கான குரல் கொண்ட கௌரவமான தேசிய இனம் நாம்

தத்தர்
 

ஜனநாயகக் கண்ணோட்டம் இன்றி உலகக் கண்ணோட்டம் இன்றி ஒரு தேசிய கட்டுமானம் அமைய முடியாது. அதே வேளை 'சரியாக நடந்தால் மட்டும் போதாது சரியாக நடந்ததாகக் கருதப்படவும் வேண்டும்'.

 

பரப்புரை என்பது எதிரியை அம்பலப்படுத்துவதிலும் எம்மை நியாயப்படுத்துவதிலும் அடங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையோடு எதிரி தன்னைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளான். ஆனால் அந்த அம்பலப்பட்டுள்ள நிலையை அரசியல் தீர்மானங்களாக்கவேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது. இந்நிலையில் நாம் எம்மை அதிகம் நியாயப்படுத்தி எதிரிக்கெதிரான அரசியல் தீர்மானங்களை உருவாக்கவேண்டும்.

 

உலகில் நாம் வெடிகுண்டு வைப்பவர்களாயும், மனித வெடிகுண்டுகளாயும், பயங்கரவாதிகளாயும் பரப்புரைக்கு உள்ளாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், உலகப் பயங்கரவாதிகளாய் சர்வதேச அரங்கில் சித்தரிக்கப்பட்டுள்ளோம். எமது நியாயம் உலகில் ஒலிக்கவில்லை. உலகின் கண்களுக்கும் அது தெரியவில்லை. நாம் அநீதிக்கெதிரான போராட்டத்திலும் தர்மயுத்தத்திலும் ஈடுபட்டுள்ளவர்கள்.

 

நாம் ஒடுக்கப்படுபவர்கள் என்று இந்த உலகம் ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது, ஒடுக்குமுறைக்கெதிரான எமது போராட்ட வழிமுறைகள் நீதியானவை என்றும் அவர்களுக்கு தோன்றவேண்டும். இந்த வகையில் எம்மை நியாயப்படுத்த வேண்டிய விடயத்தில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. ஒன்று நாம் ஒடுக்கப்படுபவர்கள் என்பதை அவர்களுக்குப் புரியக்கூடிய வகையில் சொல்லவேண்டி இருப்பது. இரண்டு ஒடுக்குமுறைக்கெதிரான எமது போராட்டங்கள் சரியானவை என்று அவர்களை ஏற்கச் செய்யவேண்டி இருப்பது.

 

ஈழத்தமிழர்களாகிய நாம் செம்மையான மொழிமையும், செழிப்பான பண்பாட்டையும் வளமான வாழ்க்கை முறையையும் கொண்ட ஒரு வளர்ச்சியடைந்த தேசிய இனத்தவர்கள். அயராத உழைப்பையும் அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகளையும் கொண்டவர்கள். ஆயினும் உலக அரங்கில் கேட்பாரற்று துரத்தியடிக்கப்படும் பிராணிகளாய் காணப்படுகின்றோம். அகதிகளாய், கைதிகளாய், கையேந்திகளாய் வேண்டத்தகாதவர்களாய் ஆக்கப்பட்டுள்ளோம்.

 

சுயமரியாதை, தேசிய கௌரவம், உயர்ந்த சிந்தனை, உன்னதமான மனித விழுமியங்கள், முன்னுதாரணமான வாழ்க்கை முறை என்பவற்றையெல்லாம் கொண்ட ஒரு செழிப்பான தேசிய இனத்தவர்கள் என்பதை எம் வாழ்வால் நாம் நிரூபித்தாக வேண்டும்.

 

செம்மையான மொழி, செழிப்பான பண்பாடு, தேசிய தனித்துவம் என்பவற்றுடன் ஜனநாயகம், மனிதஉரிமை என்பனவற்றில் கண்ணும், கருத்தும், செயல்முறையும் கொண்டவர்கள் என்பதை நாம் உணர்வுபூர்வமாய் வெளிப்படுத்தி ஆகவேண்டும். உலகம் எம்மிடம் ஜனநாயக நடைமுறைகளையும், மனிதஉரிமை பேணல்களையும் எதிர்பார்க்கின்றது. எமது போராட்டம் ஒடுக்குமுறைக்கு எதிரானது என்ற வகையில் அது உள்ளடக்கத்தில் ஜனநாயகத்திற்கான போராட்டமாகும். எமது தேசிய இன தனித்துவத்தைப் பேணுவதற்கான, எமது தேசிய வாழ்வை நிலைநிறுத்துவதற்கான ஜனநாயக உரிமையை எதிரி தன் இராணுவ பலம் கொண்டு ஒடுக்குவதால் அதற்கெதிரான எமது போராட்டம் உள்ளடக்கத்தில் ஜனநாயகத்திற்கானது.

 

ஜனநாயகத்திற்கெதிரான போராட்டம் உள்ளும் புறமும் ஜனநாயக வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும். எனவே ஜனநாயகத்திற்கான ஒரு போராட்டத்தில் போராட்டத்திற்கான வழிமுறைகளும் ஜனநாயகத் தன்மை கொண்டவையாய் அமைய வேண்டும். ஜனநாயகம் முன்நிறுத்தப்பட்டு ஜனநாயகத்திற்கான செயல்வடிவம் துலாம்பரமாய் காட்சிப்படுத்தப்படும் போதுதான் இந்த உலகம் ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பதை ஏற்றுக்கொள்ளும்.

 

அரசுகள் எப்போதும் நலங்களின் அடிப்படையிற்தான் எதனையும் ஏற்கவும் நிராகரிக்கவும் செய்யும் என்பதே யதார்த்தமாகும். ஆனால் எதனையும் ஏற்கச் செய்வதற்கான முன்நிபந்தனையானது நாம் சரியானவர்கள் என்பதை நிரூபிப்பதிற்தான் ஆரம்பமாகின்றது. அரசுகள் எமது நியாயத்தை சரி அல்லது பிழை என்று ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருபுறமிருக்க பரந்துபட்ட உலகமக்கள் மத்தியில் நாம் சரியானவர்கள் என்பதை நிரூபிக்கவேண்டிய முதற்கட்டப் பொறுப்பு எம்பக்கமுண்டு. அரசுகள் நிராகரித்தாலும் கூட மக்கள் ஏற்கக்கூடிய ஒரு நிலையைத்தான் பொதுஜன அபிப்பிராயம் என்கிறோம். ஆதலால் பொதுஜன அபிப்பிராயத்திற்கு நாம் முதலில் பொறுப்பாக வேண்டும்.

 

பூத்துக்குலுங்கவல்ல எம் தேசிய வாழ்வு கசக்கி எறியப்படும் மலர்களாய் இப்போது காட்சியளிக்கிறது. எம்மை எதிரி 'பிரிவினைவாதிகள்' என்றும் 'குறுகிய மனப்பாங்கு கொண்டவர்கள்' என்றும் கொச்சைப்படுத்துகின்றான். நாம் பிரிவினைவாதிகளுமல்ல, குறுகிய மனப்பாங்கைக் கொண்டவர்களுமல்ல. எமது தேசிய வாழ்வு மறுக்கப்படும் போதும், எமது தேசிய வளர்ச்சி தடுக்கப்படும் போதும் அத்தடைகளை நீக்குவதற்காகவும் மறுக்கப்படும் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் நாம் போராடுகிறோம்.

 

ஒரு இலட்சத்து 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளான பின்பும் அதற்காக அனுதாபப்படாத, வருத்தப்படாத சிங்கள இனத்தவர்களுடன் நாம் எவ்வாறு இணைந்து வாழ முடியும். இந்த அநீதி நிகழ்ந்தது என்பதை தெரிந்த பின்பும் இதற்காக குறிப்பிடக்கூடியளவு குரல்கள் எதுவும் சிங்கள மக்கள் அரங்கிலோ, ஊடக அரங்கிலோ, சிங்கள அறிஞர் அரங்கிலோ ஏற்படாதபோது இந்த அநீதிக்கெதிராக குரல்கொடுக்க சிங்கள மக்கள் மத்தியில் அறிஞர் மட்டத்திலோ, மதத்தலைவர்கள் மட்டத்திலோ நீதிமான்கள் இல்லாதபோது அந்த இனத்துடன் ஈழத்தமிழர் இனியும் எவ்வாறு இணைந்து வாழ முடியும் என்ற கேள்வி மிகவும் அடிப்படையானது.

 

இந்த வகையில் உயிர் பாதுகாப்பிற்கானதும்;, தேசிய மீட்பிற்கானதுமான போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டமாக உன்னதப்படுகிறதே தவிர அது ஒரு குறுகிய பிரிவினவாதமல்ல. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தேசிய வாழ்வுண்டு. எந்தவொரு மனிதனது வாழ்வும் வளர்ச்சியும் தேசியத் தன்மையில்தான் அத்திவாரமிடப்படுகின்றது. எனவே எமது வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குமான அடித்தளம் எமக்குரிய தேசிய கட்டுமானத்தில்தான் தங்கியுள்ளது. எந்தவொரு மனிதனதும் தேசிய கட்டுமானம் தகர்க்கப்படுமேயானால் அவனது வாழ்வு அழிக்கப்படுகின்றது என்பதே அர்த்தம். தேசிய வாழ்வு என்பது எமது ஜீவாதார மனித கூட்டுரிமை. இந்த ஜீவாதார கூட்டுரிமைக்காகப் போராடுவதில் தப்பேதும் இல்லை.

 

நாம் ஒரு செழிப்பான தேசிய இனத்தவர். எமது தேசிய இன வளர்ச்சிக்கு எதிரான தடைகள் நீக்கப்படவேண்டும். இவற்றைவிடவும் முதலாவது பிரச்சனை எமக்குப் பாதுகாப்பு இல்லை என்பதுதான். மிருகங்கள் உயிர்வாழ பாதுகாப்பான சர்வதேச விதிகள் இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத ஒரு கொடூரம் இலங்கைத் தீவில் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அடிப்படையாக வாழ நிலமும் பாதுகாப்பும் வேண்டும். எமது நிலத்தில் உரிமையும் இல்லை உயிர்வாழ பாதுகாப்பும் இல்லை. உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க வீடும் என்ற மூன்றுக்கும் அப்பால் முதலாவதாக எமக்கு உயிர்வாழப் பாதுகாப்பு வேண்டும்.

 

சிங்கள அரசு தேசிய பாதுகாப்பு என்று கூறும் வார்த்தையினதும் செயலினதும் அர்த்தம் தமிழின அழிப்பு என்பதுதான். அரசு உள்ள சிங்கள இனம் அரசென்ற நியாயத்தின் அடிப்படையில் துப்பாக்கியும் வெடிகுண்டும் கொண்டு அது எம்மை அழிக்கிறது. சிங்கள இராணுவம் துப்பாக்கியும் வெடிகுண்டும் வைத்திருப்பதற்குப் பெயர் 'இறைமை'. கொல்லப்படும் மக்கள் தற்பாதுகாப்பிற்காக ஆயுதந் தாங்குவதற்குப் பெயர் 'பயங்கரவாதம்'. அரசற்ற ஒரு தேசிய இனம் என்ற வகையில் நாம் ஒரு பலவீனமான இடத்தில் இருக்கின்றோம் என்பதை விருப்பு வெறுப்புக்கப்பால் கருத்திலெடுத்தாக வேண்டும்.

 

உலகில் இன்று அதிகம் ஒடுக்கப்படும் ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையிலும், பல்வகையான உள்நாட்டு வெளிநாட்டு தாக்கங்களுக்கு உள்ளாகின்ற மக்கள் கூட்டம் என்ற வகையிலும் எம்மினத்தின் மத்தியிலிருந்தே இந்த உலகிற்கு சிறப்பானதும் முன்னுதாரணம் மிக்கதுமான வழிகாட்டலுக்குரிய கருத்துக்களும் சிந்தனைகளும் தோன்றக்கூடிய யதார்த்தம் உள்ளது. ஆதலால் இந்த உலகிற்கு நாம் புதிய சிந்தனைகளையும் முன்னுதாரணம் மிக்க கருத்துக்களையும் முன்வைக்க வேண்டிய பொறுப்பிலுள்ளோம். இவ்வகையில் சிறப்பான உலகத்தரம் வாய்ந்த உரைகளும், கட்டுரைகளும், நூல்களும், கருத்துக்களும் அதிகம் வெளிவரவேண்டிய அவசியமுள்ளது.

 

இரண்டாம் உலக மகாயுத்த அனுபவங்களும், துயரங்களும் இற்றைவரையான உலகளாவிய கலை, இலக்கியம், திரைப்படம் மற்றும் சிந்தனைப் போக்கில் செல்வாக்கைச் செலுத்தி வருகின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலை அனுபவமும் துயரமும் குறைந்தபட்சம் வரப்போகும் இரண்டு தசாப்தங்களுக்கான கலை இலக்கிய மற்றும் சிந்தனைக்கான கருவூலங்களாக அமைய முடியும். முள்ளிவாய்க்கால் படுகொடுலையின் துயரத்தையும் அனுபவத்தையும் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. இதில் நாம் அதிக உண்மைத் தன்மையுடனும் விசுவாசத்துடனும் மனிதகுலத்துக்கான பங்களிப்பென்ற உணர்வுடனும் செயற்பட்டாக வேண்டும்.

 

தேசிய விடுதலை, ஜனநாயக மீட்பு, மனிதகுல மேன்மை என்கின்ற அடிப்படையில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை நாம் வடிவமைத்தாக வேண்டும். எமது தேசிய விடுதலைப் போராட்டம் உலகளாவிய மனிதகுல மேன்மையுடனும் காலத்தால் அழியாத நியாய வழிமுறைகளுடனும் இணைக்கப்பட்டதாக வேண்டும்.

 

செம்மையான மொழி, செழிப்பான பண்பாடு, வளமான வாழ்க்கை முறை, உன்னதமான ஜனநாயக விழுமியம், மனித உரிமைகள் என்கின்ற அனைத்தையும் தமிழ்தேசிய, சர்வதேசிய பூகோள யதார்த்தத்திற்குப் பொருத்தமான வகையில் மனிதகுல மேன்மையுடன் இணைத்தாக வேண்டும். உலகில் தேசியப் போராட்டத்தால் உன்னதப்பட்ட தேசங்களையும் அத்தேச மக்களையும், அத்தேசங்களின் தேச பிதாக்களையும், தேசிய சிந்தனையாளர்களையும், கலை இலக்கியப் படைப்பாளிகளையும் நாம் ஒரு கணம் நினைந்து பார்க்க வேண்டும்.

 

உலகில் எதனையும் நாம் தூய்மையானவையாகப் பார்க்க முடியாதே ஆயினும் உள்ளவற்றுக்குள் நல்லவற்றைத் தேடவேண்டும். உலகில் பரிபூரணமானதென்று எதுவுமில்லை. புனிதரென்று யாருமில்லை. ஆயினும் உள்ளவற்றுக்குள் நல்லவற்றை அடையாளம் கண்டு ஆகவேண்டும். வேண்டத் தகாததைத் தவிர்த்து நல்லவற்றைத் தேடி நாம் முதன்மைப்படுத்த வேண்டும்.

 

ஒரு செழிப்பான தமிழீழ தேசியக் கட்டுமானத்திற்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 'பிரிவினைவாதிகள்' 'பயங்கரவாதிகள்' என்று பெயர் சூட்ட வாய்ப்பளிக்காது, எம்மை உன்னதமான விடுதலை வீரர்களாக வடிவமைக்க வேண்டும்.

 

திருவள்ளுவர் ஒரு சிறப்பான சிந்தனையாளர். அவர் தமிழின் பெருமைக்கு மகுடம் போன்றவர். ஆனால் வள்ளுவரோடு எமது வளர்ச்சியும் பெருமையும் நின்றுவிடக் கூடாது. வள்ளுவரின் பின்னால் 2000ஆண்டுகளைத் தாண்டி நாம் பெரும் மகுடங்கள் பலவற்றை தரித்தாக வேண்டும். எமது சிந்தனையின் தந்தை வள்ளுவப் பெருந்தகைதான். அந்த வள்ளுவரின் பாரம்பரியத்தில் வந்த நாம் அவரின் பெருமைக்கு முத்தாய்ப்பு வைக்கும் வகையில் 21ஆம் நூற்றாண்டில் உலகிற்கு பல சிந்தனைகளை வழங்கவேண்டும். ஒரு புதிய தேசிய, சர்வதேசிய, பூகோள சிந்தனையின் திறவுகோலை இந்த பூமியில் வழங்கவேண்டிய பொறுப்பிலுள்ளோம். அதிகம் ஒடுக்கப்படும் எமக்கே அதிக பொறுப்பும் உண்டு.

 

ஈழத்தமிழர்களின் போராட்டம் மனிதகுல மேன்மையில் ஒரு புள்ளியாய் அமையவேண்டும். ஜனநாயகம், நாகரிகம், பரந்த மனப்பாங்கு என்பவற்றை இந்த பூமிக்கு எம் வாழ்வால் நாம் நிரூபித்தாக வேண்டும். பெருமைக்குரிய எமது போராட்டத்தை நாம் பட்டந்தீட்டி உலகிற்குக் காட்ட வேண்டும். காலத்திற்குப் பொருத்தமான வகையில் நாம் கருத்துக்களை உருவாக்கி ஜனநாயகத்தின் சிற்பிகளாய் காட்சியளிக்க வேண்டும். எமது போராட்டத்திற்கான பெருமை நாம் எவ்வளவு தூரம் ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றுவோம் என்பதிலேயே தங்கியுள்ளது.

 

குழந்தைகளை நேசிப்பது, இயற்கையைப் பேணுவது, காற்றையும் மண்ணையும் சூரிய ஒளியையும் பச்சைத் தளிர்களையும் பெண்ணுரிமை சிறுவர் பாதுகாப்பு, முதியோர் நலவாழ்வு ஜனநாயக மேன்மை ஆகிய அனைத்தையும் நாம் ஒருகோட்டில் இணைத்துக் காட்ட வேண்டும்.

 

'ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று கோப ஆவேசத்துடன் ஒரு மனிதனின் வாழ்வையும் உரிமையையும் உலகப் பரப்புடன் இணைத்த பாரதியாரின் வழிவந்தவர்கள் நாம்.

 

பாரதியாருக்கும் 2000ஆண்டுகளுக்கு முன்னமே

 

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் '

 

என்று வள்ளுவர் கூறிய தொன்மையான பாரம்பரியத்தின் வழித்தோன்றல்களாக உள்ளவர்கள் நாம். ஒரு மனிதனுக்கு நீதி கேட்டு உலகையே அக்கினிக் கண்ணால் பார்த்த பாரதியாரினதும், ஒரு மனிதனுக்கு நீதி கேட்டு உலகைப் படைத்த கடவுளையே சபிக்கத் தவறாத வள்ளுவரின் புதல்வர்களாயும் உள்ளவர்கள் நாம். அவ்வழியில் வந்த எமக்கு எமது உரிமையோடு உலகின் உரிமையை இணைக்கவேண்டிய பொறுப்பு மிகப்பெரியது. நாங்கள் குறுகிய வட்டத்தில் நின்றுகொண்டு எமக்காக மட்டும் போராடவில்லை. பரந்துபட்ட மனிதகுல தர்மத்துக்காகவும் போராடுபவர்கள் என்ற ஓர் உயர்ந்த பிம்பத்தை இந்த உலகிற்கு நாம் காட்டியே ஆகவேண்டும்.

 

நாம் ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழும் சிறிய மக்கள் கூட்டமே ஆயினும், பரந்துபட்ட உலகளாவிய மக்களின் உரிமைக்கான முன்மாதிரியாய் உள்ளவர்கள். உலகிற்கு நாம் ஒன்றைச் சொல்வோம். இசைப்பிரியாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றிப் பேசாமல் பெண்களுக்கான நீதியைப்பற்றி யாரும் பேசமுடியாது. மனிதகுல தர்மத்தைப் பற்றியும் பேசமுடியாது. ஜனநாயக உரிமையைப் பற்றியும் பேசமுடியாது. அப்படியாயின் இசைப்பிரியாவே இந்த உலகளாவிய பெண்களின் உரிமைக்கான அடையாளச் சின்னமாகிறாள். இப்படியே நாம் எமது பிரச்சினைகளையும் போராட்டத்தையும் உலகிற்குக் காட்டவேண்டும்.

 
 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=7&contentid=7ac7ee4c-e475-4d17-b5f8-30e374be626b

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.