Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

முத்துக்குமார்
 

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தமிழர் தாயகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றுள்ளது. சென்ற தடவை சிங்கக் கொடியேற்றி சிங்கள அரசியலுக்குள் தமிழ்த் தேசிய அரசியலைக் கரைக்கத் தயார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த அழைத்துச் சென்றனர். சம்பந்தன் ரணிலுடன் சேர்ந்து சிங்கக்கொடியேற்றி கரைக்கும் கைங்கரியத்தை வெளிப்படுத்தினார்.

 

இந்தத் தடவை தமிழ் மக்களின் துயரங்களுக்கெல்லாம் ஒரு மீட்பராக ஐக்கிய தேசியக் கட்சியை அழைத்துச் சென்றனர். இங்கு ஐக்கிய தேசியக் கட்சி தானாகச் செல்லவில்லை. கூட்டமைப்பின் அழைப்பின் பேரிலேயே சென்றது. சம்பந்தன் எதிர்க்கட்சிகளின் கூட்டில் கையொப்பமிடுவதற்கு முன்னர் ரணிலை தமிழ்மக்களின் மீட்பராகக் காட்டவே அழைத்திருக்கின்றார். மீட்பரும் மூன்று நாட்கள் தங்கியிருந்து தனது அருட்போதனைகளை வழங்கியிருக்கின்றார். சீடர்களான விக்கிரமபாகுவும், மனோ கணேசனும் மிகுந்த பயபக்தியுடன் மீட்பரின் போதனைகளுக்கு உதவியுள்ளனர்.

 

வலி.வடக்கு மக்கள் நிலங்களை மீட்பதற்காக காலையிலிருந்து மாலை வரை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் முன்றலில் உண்ணாவிரதம் இருந்தனர். மீட்பரும் அவரது சீடர் பரிவாரங்களும் ஒரு மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். மீட்பர் மட்டுமே உரையாற்றினார். சீடர்கள் இருவரும் உரையாற்றவில்லை. முன்கூட்டியே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதோ தெரியாது.

 

மீட்பர் பலாலி இராணுவ முகாமும் வேண்டும். மக்கள் குடியேறவும் வேண்டும் என அறைகூவல் விடுத்தார். பலாலி இராணுவ முகாமை அமைக்குமாறு தமிழ் மக்களா கேட்டார்கள்? இதற்கு மீட்பரிடமிருந்து பதில் இல்லை. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதிகாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் திணிக்கவே தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலை கொண்டுள்ளது என்பது பற்றி மீட்பர் வாய் திறக்கவில்லை. வாய் திறந்தால் தென்னிலங்கையில் கட்டியிருக்கும் துண்டும் இல்லாமல் போகும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே சிறுதுண்டுடன் மட்டும் தான் அவர் நிற்கின்றார். பலாலி இராணுவமுகாமும் வேண்டும், மக்களும் குடியேற வேண்டும் என்பதன் அர்த்தம் மக்கள் குடியேற்றத்திற்காக பேரினவாத அதிகாரத்தைக் கைவிட முடியாது என்பதே! தமிழ்மக்களுக்கு அரசியல்தீர்வு வழங்கப்பட்டு, அவ் அரசியல் தீர்வினைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்களுடனான ஒரு உடன்பாட்டின் பேரில் இராணுவம் நிலை கொள்வது வேறு விடயம். அங்கும் கூட தமிழ் இராணுவத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்.

 

தாம் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக மக்கள் அனைவரும் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் மீட்பர் கூறினார். மீட்பர் ஆட்சிக்கு வருவதென்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவை. அரசாங்கக் கட்சி பெற்ற வாக்குகளில் அரைவாசியைக் கூட பெறமுடியாத மீட்பர் ஆட்சியமைப்பது பற்றிக் கனவில் மிதக்கின்றார்.

 

எதிர்க்கட்சிகளின் கூட்டு என்றால் அங்கு பெரிய, சிறிய கட்சிகள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களும் சமத்துவமாக மதிக்கப்படல் வேண்டும். இங்கு அதைக் காணோம். உண்ணாவிரதத்தில் மனோ கணேசனோ, விக்கிரமபாகுவோ உரையாற்றவில்லை. அவர்கள் உரையாற்றுவது மீட்பரின் கனதியைக் குறைத்துவிடும் என மீட்பர் கருதியிருக்கலாம். உண்ணாவிரதத்தை விட்டு கிளம்பும்போது கேம்பிரிஜ் பல்கலைக்கழத்தின் கலாநிதி விக்கிரமபாகு 'ஜெயவேவா' கோசம் எழுப்பினார். இது அரசியல்வாதிகளுடன் கூடவரும் அடியாட்கள் கோசமிடுவது போல் இருந்தது. இந்த இடத்தில் கேம்பிரிஜ் கலாநிதி சிறுத்துப்போனது மனதிற்கு கஸ்டமாக இருந்தது.

 

சிறிய கட்சிகள் என்றாலும் உறுதியான தலைவர்கள் என்ற வகையில் விக்கிரமபாகுவிற்கும், மனோ கணேசனுக்கும் மக்கள் மத்தியில் ஒரு மதிப்பிருந்தது. இருவரும் ரணிலின் சீடர்களாகிப்போனதால் அந்த மதிப்புகளும் காற்றில் பறந்துபோயின.

 

மீட்பர் உண்ணாவிரத இடத்தை விட்டு கிளம்பிய மறுகணமே மக்கள் தாக்கப்பட்டனர். மீட்பரும், சீடர்களும் திரும்ப வந்து மக்களைப் பாதுகாக்க முனையவில்லை. அவர்கள் சென்றது சென்றதுதான். மகிந்தர் அரசு மீட்பர் பரிவாரத்தின் கைத்தொலைபேசிகளை செயலிழக்கச் செய்த பின்னர் தான் தாக்குதலை நடத்தியிருக்கவேண்டும். தற்போது மீட்பர் பரிவாரங்கள் வெறும் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

 

உண்ணாவிரத இடத்தில் மீட்பரோடு பக்கத்திலிருந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்கு கூட்டமைப்பு குஞ்சுகளுக்குள் ஒரே அடிபிடி. என்றாலும் சுமந்திரனுக்குத்தான் வெற்றி. வடக்கில் எத்தனையோ போராட்டம் நடந்தும், முறிகண்டிப் போராட்டத்திற்கு பின்னர் அவரது தலைக்கறுப்பையே காணவில்லை. நீண்டகாலத்திற்குப் பிறகு துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் ரணிலின் புண்ணியத்தில் சுமந்திர தரிசனம் மக்களுக்குக் கிடைத்திருக்கின்றது. தமிழ்மக்களும் சுமந்திர தரிசனத்தைப் பெறுவதென்றால் ரணில் வரவழைக்கவேண்டும்.

 

ரணில் உண்ணாவிரதத்தை விட்டு கிளம்பியபோது கூடவே சுமந்திரனும் கிளம்பி பின்னர் மீண்டும் வந்தார். ரணில் பரிவாரம் வரும்வரை பிரமுகர்களுடன் இருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் ரணிலுடன் தாங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக வெளியில் வந்து மக்களுடன் நின்றனர். உண்ணாவிரத ஏற்பாட்டாளர்கள் வலிந்து அழைத்தபோதும் ரணில் சென்ற பின்னர் வருவதாகக் கூறியிருந்தனர். இதனால் ரணில் இருக்கும் புகைப்படங்களில் அவர்களைக் காணமுடியவில்லை.

 

ரணிலை முதன்மைப்படுத்துவதும், உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வது பற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் பலத்த வாதப்பிரதிவாதம் நடந்தது. சிங்களத் தேசியத்திற்குள் தமிழ்த் தேசியத்தைக் கரைக்கும் கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் துணைபோகக்கூடாது என முன்னணியின் உறுப்பினர்கள் பலர் வாதிட்டனர். இடம்பெயர்ந்தோர் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதால் கலந்து கொள்வது என்றும் ரணில் உண்ணாவிரதத்தில் பங்குபற்றும் போது முன்னணியினர் அங்கு நிற்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.

 

ரணிலின் சீடர் மனோ கணேசன் ரணில் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்புக்கு கேட்டபோதும் கஜேந்திரகுமார் அதற்கு இணங்கவில்லை. சிங்கள அரசியலுக்குள் தமிழ் அரசியலைக் கரைக்கும் முயற்சிக்கு தாம் ஒருபோதும் துணைநிற்க மாட்டோம் என அவர் நேரடியாகவே கூறிவிட்டார்.

 

கிளிநொச்சியில் ரணில் காணாமல் போனோரை மீட்டுத்தருவார். சிறையிலிருப்பவர்களை விடுவிப்பார். காணிகளைப் பெற்றுத்தருவார் என மக்களுக்கு கூறியே சிறீதரன் மக்களை ரணிலின் சந்திப்புக்கு இழுத்துவந்தார். மக்களும் தங்களை மீட்க வந்த மீட்பர் எனக்கருதி ரணிலின் காலைப்பிடித்து அழுதனர். காலைக் கட்டிப்பிடிக்கும் போது ரணிலின் காலிலும் தமிழனின் இரத்தம் இருந்ததை அவர்கள் அறிந்தார்களோ தெரியாது.

 

கிளிநொச்சி சந்திப்பு சிறீதரனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்திலேயே இடம் பெற்றது. இதன்போது கூட்டமைப்பின் அலுவலகம் ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைக் காரியாலயம் போலத் தோற்றமளித்தது. மக்கள் ரணிலின் காலைக் கட்டிப் பிடித்தார்களே தவிர மனோ கணேசனதோ, விக்கிரமபாகுவினதோ காலைக் கட்டிப் பிடிக்கவில்லை. அடியாட்களது காலைக் கட்டிப்பிடிப்பது வழக்கமில்லை என அவர்கள் நினைத்திருக்கலாம். ரணிலுக்கு முன்னால் இவர்கள் இருவரும் மிகவும் சிறுத்துப் போயிருந்தனர்.

 

பருத்தித்துறை வல்லிபுரஆழ்வார் கோவிலிலும் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் உள்ளூராட்சிசபைத் தலைவர்களும் உறுப்பினர்களும் இதற்காக ஓடி ஓடி உழைத்தனர். இது 1965ம் ஆண்டினை நினைவுபடுத்தியது. அப்போது தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து அரசாங்கத்தை அமைத்திருந்தது. மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். அதுவரை காலமும் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு, அது ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி ஆர்ப்பாட்டம் செய்தல், கறுப்புக்கொடி காட்டுதல் எனப் போராட்டம் நடாத்திக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியினர் 1965 இன் பின் போட்டி போட்டுக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களை வரவேற்பதிலும், வருகை நிகழ்வுகளுக்கு தோரணம் கட்டுவதிலும் கவனம் செலுத்தியிருந்தனர். அதேபோல தற்போது ஓடி ஓடி உழைக்கின்றனர்.

 

1965இல் ஐக்கிய தேசியக் கட்சியுடனான தமிழரசுக்கட்சியின் காதல் உறவினை சகிக்க முடியாததினால் தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியிலிருந்து முத்துக்குமாரசுவாமி போன்ற முன்னாள் இளைஞர் தலைவர்கள் வெளியேறி, கட்சி அரசியலுக்கு அப்பால் ஒரு விடுதலை இயக்கமாக ஈழத்தமிழர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பினை தோற்றுவித்தனர். அந்த அடித்தளத்திலிருந்தே 1970இல் தமிழ் மாணவர் பேரவையும், பின்னர் 1973இல் தமிழ் இளைஞர் பேரவையும், தொடர்ந்து விடுதலை இயக்கங்களும் தோற்றம்பெற்றன என்பது வரலாறு. இன்று அவ்வாறு புது அரசியல் இயக்கம் தமிழரசுக்கட்சியிலிருந்து தோற்றம் பெறுவதற்கான சூழல் எதுவுமில்லை. தமிழரசுக்கட்சியில் இவ்வாறான போர்க்குணம் மிக்கவர்கள் எவருமில்லை. அங்கு இருப்பவர்கள் எல்லோரும் ஜொலிஅரசியல் செய்பவர்களே!

 

இங்கு கவனிக்கத்தக்க முக்கியமான விடயம், ரணில் பரிவாரங்களை போட்டி போட்டுக்கொண்டு வரவேற்றவர்களில் அதிகம் பேர் தமிழரசுக்கட்சிக்காரர்களாகவே இருந்தனர். கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதுவிடயத்தில் பெரிய அக்கறை எவற்றையும் காட்டவில்லை. தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு வரலாற்று ரீதியாகவே ஐக்கிய தேசியக் கட்சி மீது காதல் இருக்கின்றது. அது தற்போதும் தொடர்வது போலவே தெரிகின்றது. தமிழரசுக்கட்சியின் கொழும்பு உயர்குழாம் இக்காதலுக்கான தூதுவர்களாக உள்ளது. சுமந்திரன் கொழும்புத் தமிழ் உயர்குழாமின் பிரதிநிதியே! தற்போது தமிழரசுக்கட்சி - ஐக்கியதேசியக் கட்சிக் காதல் உறவிற்கு சிறப்புத் தூதராக சுமந்திரனே இருக்கின்றார். முன்னையவர்களோடு ஒப்பிடும்போது சிறு வித்தியாசம், அவர் மகிந்தருக்கும் தூதுவராக செயற்படுகின்றார் என்பதே! மகிந்தருடன் இணைந்து கிறிக்கட் விளையாடிய பெருமை தமிழ் அரசியல் தலைவர்களில் சுமந்திரனுக்கு மட்டுமே உண்டு.

 

கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புதுப்பிக்கப்பட்ட இந்தக் காதல் உறவினை கேள்விக்குள்ளாக்கவில்லை. இதில் செல்வம் அடைக்கலநாதனை விட்டுவிடுவோம். அவர் உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு எப்போதும் தயக்கம் காட்டுபவர். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதியான முடிவுகளை எடுக்காததுதான் கவலைக்குரியது. இதுவிடயத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் பக்கம் நிற்பதா? அல்லது பம்மாத்து அரசியலின் பக்கம் நிற்பதா? என விரைவில் அவர் முடிவுகைளை எடுப்பது அவரின் எதிர்கால அரசியலுக்கு நல்லது.

 

ஐக்கிய தேசியக் கட்சி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறவின் மூலம் ஆட்சிமாற்றத்தை உருவாக்கலாம் என்ற கருத்து சிலரிடம் உள்ளது. மேற்குலகச் சக்திகளும் அதற்காகத்தான் முயன்று வருகின்றனர். ஆட்சிமாற்றம் தமிழர்களுக்கு நன்மை பயக்கும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரணில் தமிழ்மக்களுக்கான தீர்வை முன்வைப்பார் என சுமந்திரனும் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

 

சுமந்திரன் அரசியலுக்கு புதிது என்பதால் இவ்வாறு கூறுகின்றார். ஆனால் இலங்கையின் அரசியல் வரலாற்றை தொடர்ச்சியாக அவதானிப்பவர்களுக்கு உண்மைகள் நன்றாகவே தெரியும். தமிழ்மக்களைப் பொறுத்தவரை இரண்டு சிங்கள பிரதான கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். தமிழ்த்தேசிய அடையாளத்தை அழிக்கும் முயற்சியில் ஒன்று மற்றொன்றுக்கு சளைத்ததாக வரலாற்றில் இருக்கவில்லை. இதனால் தான் மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தமிழ்மக்களின் நெஞ்சில்குத்தும் கட்சியென்றும், ஐக்கிய தேசியக் கட்சியை முதுகில்குத்தும் கட்சியென்றும் குறிப்பிட்டார். இங்கு நெஞ்சில்குத்தும் கட்சியை விட முதுகில்குத்தும் கட்சியே மிகவும் ஆபத்தானது. நெஞ்சில் குத்தவருபவர் நேரடியாகத் தெரியக்கூடியவராக இருப்பதனால் தற்காப்பு முயற்சிகளை ஏதாவது எடுக்கமுடியும். ஆனால் முதுகில் குத்துபவரை நேரடியாகப் பார்க்கமுடியாது. குத்துவாங்கிய பின் தான் குத்தியவரைத் தேடமுடியும்.

 

ஐக்கிய தேசியக் கட்சியின் முதுகில்குத்தும் செயற்பாடுதான் சிங்களக் குடியேற்றங்கள். இவற்றை நுணுக்கமாகக் கணிப்பிட்டு முதன்முதலில் செயற்படுத்தியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் தான். கல்லோயாத்திட்டம், கந்தளாய்த்திட்டம், அல்லைத்திட்டம் ஆகிய முக்கிய சிங்களக் குடியேற்றங்கள் ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் உருவானவைதான்.

 

இங்கு முக்கியமான உண்மை ஒன்றினை நாம் மறக்கக்கூடாது. இலங்கையைப் பொறுத்தவரை அரசுருவாக்கம் சிங்கள - பௌத்த கருத்துநிலைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. சிங்கள அரசியல்கட்சிகள் அக்கருத்து நிலைக்கட்டுக்குமேல் குந்தியிருக்கும் பணியைத்தான் மேற்கொண்டன. இதனால் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள - பௌத்த கருத்துநிலைகளை விட்டுவிடப் போவதில்லை. வெளிநிர்ப்பந்தம் காரணமாக சிறிய செயற்பாட்டை ஒரு கட்சி முன்னெடுத்தாலும் மற்றைய கட்சி பேரினவாதத்தை கிளப்பி அவற்றைக் கவிழ்த்துக்கொட்டிவிடும். பண்டா - செல்வா ஒப்பந்தம் தொடங்கி டட்லி - செல்வா ஒப்பந்தம் ஊடாக சந்திரிக்காவின் தீர்வுப்பொதி வரை இதுதான் இடம்பெற்றது.

 

தற்போதைய கள யதார்த்தமும் இங்கு முக்கியமானது. கனவிலும் நினைத்திராத போர் வெற்றியை மகிந்தர் பெற்றுக்கொடுத்ததினால் சிங்கள மக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஒரு மன்னராக அவர் விளங்குகின்றார். இது ரணிலுக்கு நன்றாகவே தெரியும். தான் ஆட்சியைக் கைப்பற்றுவது இப்போதைக்கு சாத்தியமல்ல என்பது நன்கு தெரிந்த நிலையில் கட்சிக்குள் தமது தலைமையைப் பாதுகாக்கும் விடயத்திற்கே அவர் முன்னுரிமை கொடுக்கின்றார். இப்பாதுகாக்கும் செயற்பாட்டிற்கு மகிந்தரின் ஆதரவு மிகவும் அவசியம். இதுவரை காலமும் அவரின் ஆதரவினாலேயே தலைமைப்பதவியை ரணில் தக்கவைத்திருக்கின்றார்.

 

இதனால் தற்போது ரணிலுக்கு என சொந்த நிகழ்ச்சிநிரல் எதுவுமில்லை. மகிந்தரின் நிகழ்ச்சிநிரலையே அவர் முன்னெடுக்கின்றார். இதனால் ஏற்படும் மிகப்பெரிய அபாயம் மகிந்தரின் பேரினவாத ஆக்கிரமிப்புகளுக்கு தென்னிலங்கையில் தடைகள் எதுவும் இல்லாததே.

 

மகிந்தருக்கு போருக்குப் பின்னரும் மிகப்பெரிய சவாலாக இருப்பது தமிழ்த்தேசிய அரசியல்தான். சர்வதேசரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை சந்திப்பதற்கும் காரணம் இதுதான். படையினரைப் பயன்படுத்தி தமிழ்த்தேசிய அடையாளங்களை அழிக்க முயன்றாலும் மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள தமிழ்த்தேசிய உணர்வு அவரது செயற்பாடுகளுக்குத் தடையாக உள்ளது. இதனால் ரணிலைப் பயன்படுத்தி தமிழ்த்தேசிய அரசியல் உணர்வை அழிக்கும் செயற்பாடுகளை அவர் முடுக்கி விட்டிருக்கின்றார். சிங்கள அரசியலுக்குள் தமிழ் அரசியலைக் கரைக்கும் முயற்சிதான் அது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்த்தேசிய அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் அக்கறை எதுவும் கிடையாது. அதனை முன்னெடுப்பதாயின் ஆபத்துக்கள் நிறைந்த பிரக்ஞைபூர்வமான அரசியலை முன்னெடுக்கவேண்டும். இதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இல்லை. அவர்கள் கதிரைக்கான ஜொலி அரசியலை நடாத்துவதற்கே தயாராக உள்ளனர்.

 

போர் முடிவடைந்த 2009ம் ஆண்டே அவர்கள் அந்த முடிவை எடுத்து விட்டனர். இதன் அடிப்படையில் தேசியம், சுயநிர்ணயம் என்ற கருத்துக்களைக் கைவிடவேண்டும் என 2009ம் ஆண்டே சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

 

இதன் அடுத்தகட்டம் சிங்கள அரசியலுக்குள் தமிழ் அரசியலைக் கரைப்பதுதான். அதனை கடந்த மேதினத்தன்று சிங்களக் கொடியேற்றி அவர் தொடக்கிவைத்தார். இத்தொடர் செயற்பாட்டின் அடுத்த பரிணாமமாகத்தான் ரணிலை வடக்கிற்கு அழைத்து வந்து மீட்பராக காட்டும் முயற்சி இடம்பெற்றது. எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

 

இங்கே கூட்டமைப்பின் செயற்பாடு தமிழ்மக்கள் நகர்த்துகின்ற சர்வதேச நடவடிக்கைகளிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தப் போகின்றது. சர்வதேச ரீதியாக புலம்பெயர் மக்கள் ஆர் -2- பி எனப்படும் 'பாதுகாப்பதற்கான பொறுப்பு' என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி வருகின்றனர். சர்வதேச சமூகமும் அதனைக் கவனத்தில் எடுக்கும் நிலை உருவாகி வருகின்றது. தமிழ்மக்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகின்றது. கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பு இவற்றையெல்லாம் குழப்பும் அபாயத்தை தோற்றுவித்துள்ளது. வெறுமனவே ஆட்சிமாற்றம் மட்டும் தமிழ் மக்களுக்கான தீர்வினைத் தந்துவிடும் என்கின்ற தோற்றத்தைக் கொடுக்கப் பார்க்கின்றது.

 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இக்காட்டிக்கொடுப்புக்கு சவாலாக இருப்பது கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் புலம்பெயர் அமைப்புகளும்தான். அதிலும் நேரடிச்சவாலாக இருப்பது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான். அவர்கள் 'இரு தேசங்கள் ஒரு நாடு' என்ற இலக்கையும் அதனை அடைவதற்கு சுயநிர்ணய உரிமைப் பாதையையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

ஒரு அமைப்பிற்கு இலக்கு, கொள்கை மட்டுமல்ல செயலும் முக்கியம். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் இலக்கும், கொள்கையும் தெளிவாக உண்டு. ஆனால் செயல் முன்னேற்றகரமானது எனக் கூறமுடியாது. ஒரு தன்னியல்பான வேலைமுறையே அதனிடம் வியாபித்து உள்ளது. முதலில் அவர்கள் கருத்துருவாக்கப் பணியினை திறம்படச் செய்தனர். தினக்குரல் மூலம் ஆரோக்கியமான விவாதத்தினையும் கஜேந்திரகுமார் தொடக்கி வைத்தார். ஆனால் இச்செயல் தொடரவில்லை. அவரது கட்டுரைகள் நூலாக்கம் கூட பெறவில்லை. தொடர்ந்து போராட்டங்களை தொடக்கிவைத்தனர். இன்றைய சூழலில் அது நல்ல முன்னெடுப்புத்தான். தற்போது அதிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இப்போக்கு வரவேற்கத்தக்கதல்ல.

 

வரலாறு காலத்திற்கு காலம் சந்தர்ப்பங்களை உருவாக்கித்தரும். அரசியல் சக்திகள் அதனைப் பயன்படுத்தவில்லையாயின் வரலாறு அவர்களை ஒருபோதும் மன்னிக்காது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.