Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு

 

கலையரசன்


 

000218827.jpg

மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஐரோப்பியர்கள், "வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே,  நாகரீகத்தில் சிறந்து விளங்கியது போலவும், ஜனநாயகம், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது போலவும்", பலர் இன்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாமர மக்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் கூட அவ்வாறான நம்பிக்கையை கொண்டுள்ளனர். புராதன ஐரோப்பியர்களின் தலை சிறந்த  நாகரீகம், நமது காலத்திய சவூதி அரேபியர்களும், தாலிபான்களும் நடைமுறைப் படுத்திய "இஸ்லாமிய மத அடிப்படைவாத" நாகரீகத்தை பெரிதும் ஒத்திருந்தது, என்பது ஆச்சரியத்திற்குரியது. பலருக்கு இது புதிய தகவலாக இருக்கலாம்.

இன்றைக்கும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பாடநூல்களில் கிரேக்க நாகரீகம் பற்றி வியந்து பேசப் படுகின்றது. "ஏதென்ஸ் தான், உலகில் முதன் முறையாக ஜனநாயகத்தை கண்டுபிடித்து, நடைமுறைப் படுத்திய நாடு என்று, இன்றைய ஜனநாயக காவலர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். ஏதென்ஸ் நகரம், ஐரோப்பிய நாகரீகத்தின் தொட்டில் எனவும், அங்கிருந்து தான் ஐரோப்பிய நாகரீகம் தோன்றி வளர்ந்தது என்றும் போதிக்கின்றார்கள். அத்தகைய பெருமைக்குரிய கிரேக்க நாகரீகம் எவ்வாறு இருந்தது? அங்கு பெண்களின் உரிமைகள் மதிக்கப் பட்டனவா? இது பற்றி எந்த பாடநூலும், தமது மாணவர்களுக்கு சொல்வதில்லை.

ஐரோப்பிய பெண்களின் நிலைமை, பண்டைய ஐரோப்பிய நாகரீகத்தில் எந்த வகையிலும் சிறந்ததாக இருக்கவில்லை.நாகரீகத்தில் சிறந்த கிரேக்க நாட்டு பெண்கள், அங்கிருந்த அடிமைகளை விட சிறிதளவே சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக திருமணமான பெண்கள், வீட்டு வேலைகள் செய்வதற்கும், குழந்தை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர். "எமது அன்றாட பாலியல் இச்சைகளுக்கு அடிமைப் பெண்களையும், சட்டபூர்வ குழந்தைகளை பெறுவதற்காக மனைவியரையும் வைத்திருக்கிறோம்..." என்று ஒரு கிரேக்க அறிஞர் எழுதுமளவிற்கு, அது சர்வ சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் போது, பெண்கள் மீதான அடக்குமுறை, தற்போது சவூதி அரேபியாவில் பெண்கள் சுதந்திரமற்று இருக்கும் நிலைமை, இஸ்லாம் என்ற மதம் சார்ந்தது என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். அது அந்தப் பிராந்திய மக்களின் பாரம்பரிய கலாச்சாரம் என்ற உண்மை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இஸ்லாத்துக்கு முந்திய அரேபியாவை, கிரேக்க- ஐரோப்பியர்களே பல நூற்றாண்டுகளாக ஆண்டு வந்தனர். அதே போல, ஆப்கானிஸ்தானும் அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு பின்னர், கிரேக்கர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த நாடுகளில், கிரேக்கர்களின் கலாச்சாரம் பரவாமலா இருந்திருக்கும்? ஒரு காலத்தில் கிரேக்கர்களாக இருந்த மக்கள், இன்றிருக்கும் அரேபியர்களுடனும், ஆப்கானியர்களுடனும் ஒன்று கலக்காமல் இருந்திருப்பார்களா? இதையெல்லாம் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை.

கற்பு குறித்த இந்தியர்களின் புரிதல் என்னவென்று, தமிழ் வாசகர்களுக்கு நான் கூறத் தேவையில்லை. ஆனால், பெண்களின் கற்பு பற்றிய விதிகள் யாவும், பண்டைய கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டு வந்தன என்பது வியப்புக்குரியது அல்லவா?  "கற்பு நெறியானது ஆரியர்களால் புகுத்தப் பட்டது," என்று திராவிட அரசியல் சார்ந்த அறிஞர்கள் கூறி வருகின்றனர். அப்படியானால், இந்தியாவுக்குள் நுளைந்த ஆரியர்களும், கிரேக்கர்களும் ஒரே மாதிரியான இனத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இது சரித்திர பூர்வமாக நிரூபிக்கப் பட்ட விடயம் தான். இன்றைய ஈரான் முதல் பாகிஸ்தான் வரையிலான பிரதேசங்களில் "சீத்தியர்கள்" என்ற ஈரானிய மொழி ஒன்றை பேசும் இனம் வாழ்ந்ததாக, கிரேக்க இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது.

"இந்து பண்பாடு" என்று கருதப்படும், இறந்த கணவனின் சிதையில் மனைவி உடன்கட்டை ஏறுவது சீத்தியரின் (Scythian)  கலாச்சாரம் ஆகும். வட இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஆரியர்கள் சீத்திய இனத்தவர்களாக இருக்கலாம்.  வட இந்திய ஆரியர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசியவர்கள் என்று கருத முடியாது. அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்த போதிலும், இந்தியாவை வெல்ல முடியாமல் திரும்பிச் சென்றான் என்று நமது சரித்திர நூல்கள் கூறுகின்றன. ஆனால், அலெக்சாண்டரின் படையில் இருந்த கிரேக்கர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கி விட்டனர். கிரேக்க தளபதி, பிற்காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்தான். அந்த ராஜ்ஜியம் ஒரு காலத்தில் இந்தியாவின் வட-மேற்குப் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இதைப் பற்றி எந்த சரித்திர நூலும் தெரிவிப்பதில்லை. ஏனிந்த வரலாறு இருட்டடிப்பு செய்யப் படுகின்றது?

இன்று உலகம் முழுவதும், ஐரோப்பிய மையவாத கருத்துக்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இன்றைய ஐரோப்பிய ஆட்சியாளர்கள், பண்டைய கிரேக்க வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே தெரிவு செய்து படிக்கிறார்கள். அவற்றை எமக்கும் படிப்பிக்கிறார்கள். அதிலிருந்து தான் இன்றைய ஆதிக்க அரசியல் கட்டமைக்கப் படுகின்றது. 

"உலகிற்கு நாகரீகத்தை போதிப்பது, நாகரீகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த வெள்ளை இன மனிதனின் கடமை" என்று ஐரோப்பிய மையவாதிகள் நம்புகிறார்கள். இந்த காலனிய கால சிந்தனை இன்றைக்கும் கோலோச்சுகின்றது. 2001 ம் ஆண்டு, "பெண்களை கொடுமைப் படுத்தும் காட்டுமிராண்டி தாலிபானின் பிடியில் இருந்து, ஆப்கான் பெண்களை விடுதலை செய்வதற்காக படையெடுத்ததாக," அமெரிக்கா ஒரு காரணத்தை கூறியது.  ஆனால், மறந்து விடாதீர்கள். 19 ம் நூற்றாண்டில், இதே காரணத்தை கூறித் தான் பிரித்தானியா இந்தியா மீது படையெடுத்தது! "பெண்களை உடன்கட்டை ஏற வைத்து கொடுமைப் படுத்தும், காட்டுமிராண்டி இந்துக்களிடமிருந்து இந்தியப் பெண்களை விடுதலை செய்வதற்காக..." என்று ஒரு காரணத்தை கூறித் தான், பிரிட்டன் இந்தியாவை காலனிப் படுத்தியது. 

மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு, கிரேக்கத்தில் இருந்து தான் உலகிற் சிறந்த நாகரீகத்தை ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர். அதன் அர்த்தம், அன்று கிரேக்கத்தை தவிர, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர். ஆகவே அவர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஜனநாயகத்தை கண்டுபிடித்த ஏதென்ஸ் நாட்டு நாகரீகம் எப்படி இருந்தது? ஏதென்ஸ் நாட்டவரின் ஜனநாயகம் ஆண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சம். கிரேக்க பெண்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. அவர்கள் மக்கள் மன்றத்திற்கு சென்று அரசியல் விவாதம் செய்யவும், கருத்துரைக்கவும் தடை இருந்தது.  பெண்கள் மட்டுமல்ல, அடிமைகளும் கிரேக்க ஜனநாயகத்தில் சேர்த்துக் கொள்ளப் படவில்லை. அதற்குப் பெயர் ஜனநாயகமா?

பெண்களை திருமணம் செய்து வைப்பதற்கு, பெற்றோர்கள் சீதனம் கொடுப்பது,  இந்தியர்களின் பாரம்பரியம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும், சீதனம் கொடுக்கும் மரபு பின்பற்றப் பட்டு வந்தது. பணக்காரப் பெற்றோர்கள், தமது சொத்து வெளியில் போகக் கூடாது என்பதற்காக, தமது மகளுக்கு ஒரு உறவுக்கார பையனாகப் பார்த்து மணம் முடித்து வைப்பார்கள். Medea என்ற கிரேக்க நாடகத்தில் பின்வரும் வசனம் ஒன்று வருகின்றது. "ஒரு ஆணை வாங்குவதற்கு மலையளவு பணம் தேவை. அப்படிக் கொடுத்த பின்னர், அந்த ஆண்  எமது உடலுக்கு உரிமை கொண்டாடுவது இன்னும் மோசமானது."

ஒரு சராசரி கிரேக்கப் பெண், 14 வயதிலேயே திருமணம் செய்து விட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. தாலிபான் ஆண்ட ஆப்கானிஸ்தானில், 13-14 வயது சிறுமிகள், முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டத்தை, செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். பண்டைய கிரேக்கத்திலும், 14 வயது பருவ மங்கை,  30 வயதுக்கு மேற்பட்ட ஆடவனை திருமணம் செய்வது சட்டப்படி அனுமதிக்கப் பட்டது. திருமணம் முடிக்கும் நேரத்தில், அந்தப் பெண் கன்னியாக இருக்க வேண்டும். மணப்பெண் கன்னித் தன்மை இழந்துள்ளமை கணவனுக்கு தெரிய வந்தால், அவளை அடிமையாக விற்கலாம்.

"பெண்கள் படிக்கக் கூடாது" என்று, ஆப்கானிஸ்தானில் சட்டம் போட்ட தாலிபான்கள், பெண்களின் பாடசாலைகளையும் மூடினார்கள். எவராவது காரணம் கேட்டால், "அது தான் இஸ்லாமிய ஷரியா சட்டம்" என்று நியாயம் கற்பித்தார்கள். படிப்பறிவற்ற ஆப்கான் பாமர மக்களும், மெத்தப் படித்த சர்வதேச சமூகமும், அதனை உண்மை என்று நம்பியது. உண்மையில் அதுவும், இஸ்லாத்துக்கு முந்திய கிரேக்க நாகரீகம் என்று அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பண்டைய ஏதென்ஸ் நாகரீகத்தில், ஆண் பிள்ளைகளை மட்டுமே கல்வி கற்க பாடசாலைக்கு அனுப்பினார்கள். பெண்பிள்ளைகள் வீட்டில் இருக்க வேண்டும். 

படித்த மனைவியை எந்த ஆணும் விரும்பவில்லை. கிரேக்க நாடக ஆசிரியர் Menander  பின்வருமாறு எழுதுகின்றார்: "எவனொருவன் ஒரு பெண்ணுக்கு எழுதப் படிப்பிக்கிறானோ, அவன் ஒரு பாம்புக்கு நஞ்சைக் கொடுக்கிறான்." பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கும், குழந்தைகளை பெற்று பராமரிக்கவும் மட்டும் தெரிந்திருந்தால் போதும் என்பதே, பண்டைய கிரேக்கர்களின் நிலைப்பாடு. பொதுவாக நல்ல தண்ணீர் கிணறுகள் வீட்டுக்கு வெளியே சிறிது தூரத்தில் இருந்ததால், பெண்களே தண்ணீர் அள்ளிவர வேண்டியிருந்தது. ஆனால் அவ்வாறு வெளியே போகுமிடத்தில், அந்நிய ஆண்கள் பார்த்து விடுவார்கள் என்ற அச்சம் இருந்தது. அதனால், பணக்கார வீட்டுப் பெண்கள், தமது அடிமைகளையே தண்ணீர் அள்ளி வருமாறு வெளியே அனுப்புவார்கள்.  

ஆண் விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால், பெண்கள் சமையலறைக்குள், அல்லது படுக்கையறைக்குள் சென்று விட வேண்டும். விருந்தினர்களின் கண்ணில் படுமாறு வெளியே நடமாடக் கூடாது. இது ஏதோ சவூதி அரேபியா அல்லது ஆப்கானிஸ்தானில் மட்டுமே காணக்கூடிய பெண் அடக்குமுறை என்று நினைத்து விடாதீர்கள். பண்டைய கிரேக்க சமுதாயத்திலும் அது தான் நடைமுறை. நான் சிறுவனாக இருந்த காலத்தில் கூட, யாழ்ப்பாணத்தில் பல சைவத் தமிழர்கள் வீடுகளில், இது போன்ற நடைமுறை இருந்ததை நேரில் கண்டிருக்கிறேன்.  எனது உறவினர்கள் சிலர் கூட அத்தகைய வழக்கத்தை பின்பற்றினார்கள். இன்றைய தலைமுறையில் அது பெருமளவு மாறியிருக்கலாம். 

பாலியல் சுதந்திரம், ஆண்கள் மட்டுமே அனுபவிக்கும் உரிமையாக இருந்தது. கிரேக்க ஆண்கள், வீட்டில் வேலைக்கு வைத்திருக்கும் பெண் அடிமைகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது மட்டுமல்ல, வெளியே பாலியல் தொழிலாளிகளிடமும் சென்று வந்தனர்.  இந்தக் காரணங்களாலும்,   தேவையான அளவு பிள்ளைகளை பெற்ற பின்னரும், கிரேக்க ஆண்கள் தங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்வதை பெருமளவு குறைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அது பற்றி ஒரு மனைவி யாரிடமும் முறையிட முடியாது. ஒரு மாணவி, மாதத்தில் மூன்று தடவை உடலுறவு கொள்ள உரிமையுடையவள் என்று கிரேக்க சட்டம் ஒன்றில் எழுதப் பட்டிருந்தது.

கிரேக்க மனைவிமார், கணவனுடன் மட்டுமே உடல் உறவு வைத்து, தமது கற்பை பாதுகாக்க வேண்டும். கணவன் வெளியூர் சென்றிருந்தாலும், பல வருடங்களாக காணாமல்போனாலும், அல்லது மரணமடைந்தாலும், வேறொரு ஆடவனோடு உறவு வைக்கக் கூடாது. பெண்கள் விவாகரத்து பெறுவதை கிரேக்க சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. "ஒரு தடவை, ஒரு பெண் விவாகரத்து கோரி  சட்ட மன்றத்திற்கு செல்லும் வழியில், இடைமறித்த கணவனால் பலவந்தமாக கடத்திச் செல்லப் பட்டதாகவும், தெருவில் நின்ற யாரும் தலையிடவில்லை என்றும்..." கிரேக்க இலக்கியம் ஒன்றில் எழுதப் பட்டுள்ளது. 

சரஸ்வதி என்ற பெண் கல்வித் தெய்வத்தை வழிபட்ட பண்டைய கால இந்து மதத்தில், பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டிருந்தது. அவர்களுக்கு கலைகளை பயிலும் சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை. அதே நேரம், மேட்டுக்குடியினரின் பாலியல் அடிமைகளான "தேவ தாசிகள்" என்ற பெண்கள் மட்டுமே, நடனம், இசை போன்ற கலைகளை கற்றிருந்தனர். அதே மாதிரியான "தேவ தாசிகள்" பண்டைய கிரேக்கத்திலும் இருந்தனர். அவர்களின் பெயர் "Hetaeren".  "கிரேக்க தேவதாசிகள்" மட்டுமே, பண்டைய கிரேக்கத்தில் ஓரளவு கல்வியறிவு பெற்ற பெண்கள், என்று சொன்னால் அது மிகையாகாது. அவர்கள் தாம் பெற்ற அறிவுக்கு விலையாக, உடலை விற்றுக் கொண்டனர்.  

கிரேக்க மேட்டுக்குடி பாலியல் தொழிலாளர்கள், தமது வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்துவதற்காக, நடனம், இசை போன்ற கலைகளை கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. ஏதென்ஸ் நகர ஆட்சியாளர்கள், நிர்வாகிகள் பலர் விபச்சார விடுதிக்கு வந்து செல்வதால், அங்கே அரசியல் விவாதங்களும் நடக்கும். இதனால் கிரேக்க தேவதாசிகள் சிலர் அரசியல் அறிவு கைவரப் பெற்றிருந்தனர். அஸ்பாசியா (Aspasia) என்ற பெண், மதி நுட்பம் மிக்கவர் என்றும், அரசியல் உரைகளை எழுதுமளவு அறிவாளி என்றும் புகழப் படுகின்றார். தத்துவ அறிஞர்களுடன் வாதிடும் அளவுக்கு புலமை பெற்றிருந்தார். Pericles என்ற அரசவை உறுப்பினரின் வைப்பாட்டியாக இருந்ததால், அவருக்கு அரசாங்க அலுவல்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அஸ்பாசியா தான்,  புராதன ஐரோப்பாவின் வரலாற்றில், பெண்கல்வியை ஊக்குவித்த, முதலாவது பெண் உரிமைப் போராளியாக இருக்க வேண்டும்.  

(இந்தக் கட்டுரை, Historia (2/2013) சஞ்சிகையில் பிரசுரமான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டது.)

 

நன்றி - கலையகம்
 
 

http://www.penniyam.com/2013/03/blog-post_9745.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.