Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருப்பெரிந்த நிலத்தின் சாம்பல் சாட்சியங்கள்...

Featured Replies

முற்றுகை நிலம் 1


மக்கள் ஓடத் தொடங்கியிருந்தார்கள். அவர்களை விடவும் போரின் கால்களுக்கு வலு அதிகம். அது உசைன் போல்ட்டை விடவும் வேகத்தோடு பின்னாலேயே துரத்திக் கொண்டு வந்தது.

 

அதன் நாக்குகளில் இரை கவ்வும் ஆர்வம், வீணீராய் நிலமெங்கும் வழிந்துகொண்டிருந்தது.

எங்கும் கந்தகத்தின் நெடி. மூச்செடுக்கும் ஒவ்வொரு கணத்திலும் கந்தகக் காற்று சுவாசப் பையை முத்தமிட்டு வெளியேறிக் கொண்டிருந்தது. வெடிச்சத்தம் கேட்டவுடன், என்ன செய்கிறோம்? ஏது செய்கிறோம்? என்ற யோசிப்புகளுக்கு கால்களும் கைகளும் இடங்கொடுப்பதில்லை.

கால்கள் ஓடுவதற்கு பழக்கப்பட்டுப் போனவை. எது தேவை? என்றறிந்து கைகள் தம்பாட்டுக்கு உரப் பைக்குள் பொருள்களை அடைந்துகொள்ளும். இலக்கேதுமின்றி ஓட்டம் தொடரும். பாதுகாப்பான இடம் என்று எல்லோரும் நம்பும் ஓர் இடத்தில் கால்கள் நிதானிக்கும். தறப்பாள் வீடாகும். கட்டாந்தரையே தஞ்சமாகும்.

மோதல் தவிர்ப்பு வலயம் என்று அரச வானொலி அடையாளப்படுத்திய இடங்களில் விழுகின்ற எள்ளெல்லாம் எண்ணையாகி வழிந்தோடும். எள்ளே எண்ணையாகையில், குண்டு வீழ்ந்தால் என்னவாகும்? ஆனாலும் மோதல் தவிர்ப்பு வலயம் என்று சொல்லிவிட்டுக் குண்டுபோட மாட்டார்கள் என்ற ஒருதுளி நப்பாசை மனதில் ஒட்டியிருந்தது.

ஆனாலும் சற்று நேரத்துக்கெல்லாம் முழங்கத் தொடங்குகின்ற பல்குழல் ஓசையும் உறுமுகின்ற "கிபிர்' இன வருகையும் எல்லா நப்பாசைகளையும் கழுவில் ஏற்றிவிடும். கால்கள் மீள ஓட எத்தனிக்கும் முன்பாகவே குண்டுகள் குருட்டாம்போக்கில் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கும்.

இந்தக் குண்டுகளுக்கு இரைகளைத் தேடவேண்டிய அலைச்சல் இருக்காது. எங்கெல்லாம் விழுகின்றனவோ அங்கெல்லாம் அந்தக் குண்டுகளுக்குக் குருதியையும் தசையையும் சுவை பார்க்கும் தருணங்கள் தப்பாமல் கிட்டும்.

குண்டுச் சிதறல்களை விடவும் தசைச் சிதறல்களே எங்கும் பரவிக் கிடக்கும். கால் வைக்கும் இடமெல்லாம் உறையத் தொடங்கிய தடித்த குருதி ஒட்டியிழுக்கும். வீழ்ந்து கிடக்கும் தசைத் துண்டங்களை மிதித்தபடி ஓட்டம் தொடரும்.

 



முற்றுகைநிலம் 2

எறிகணைகளின் வீச்செல்லையை விடவும், மிகக் கிட்டவாக மக்கள் வந்திருந்தார்கள். ஓடுவதற்கு இனிப் போக்கிடமில்லை. ஒரு பக்கம் நந்திக்கடல் மறுபக்கம் முல்லைப் பெருங்கடல். எந்தப் பக்கம் ஓடினாலும் காவுகொள்ளக் கடலும் காத்திருந்தது.

இந்தக் கடல்கள் போதாதென்று குருதிக் கடலும் குடியிருப்புக்கள் நடுவே ஊற்றெடுக்கத் தொடங்கியிருந்தது. எறிகணைகளை ஏவிவிடும் குழல்கள் ஆற்றாமையோடு படுத்திருந்தன. இனியும் அவை எறிகணைகளை உமிழ்ந்தால் அது மக்கள் குடியிருப்பைத் தாண்டி மறுமுனையில் இருக்கும் படைத் தளங்களுக்குள்ளேயே விழ வேண்டியதுதான்.

"கிபிர்' குத்தி எழுவதற்குரிய சிறுவெளி கூட இருக்கவில்லை. பின்னெப்படி அது குண்டுகளை எச்சமிட முடியும்? கட்டுநாயக்க கட்டுக்கொடியில் அவை இரை மீட்டபடி ஓய்ந்திருந்தன. இப்போது துப்பாக்கிச் சன்னங்களுக்கே அதிக வேலை இருந்தது.

பல்குழலின் அதிர்வையும் கிபிரின் உறுமலையும் இனங்கண்டாவது ஓரளவுக்கு தப்பிக்கும் வழி தேட முடியும். ஆனால் எல்லாத் திசைகளிலும் சன்னங்களைக் கக்கத் துப்பாக்கிகள் காத்திருந்தன. எப்போது வேண்டுமானாலும் அவை காற்றைக் கிழித்துக் கொண்டு குடிமனைகளை எட்டிப் பார்க்கலாம்.

காப்பரண் அமைக்க உரப்பைகள் இல்லை. கடைசியாக மிஞ்சிக் கிடந்த சேலைகளுக்கு வேலை வந்தது. கைக்கணக்கில் வெட்டப்பட்டு, பைகளாக்கப்பட்ட சேலைகள், மணலை உள்வாங்கி கர்ப்பிணிகளின் வயிறு போன்று உப்பிக் கிடந்தன.

அவையே இப்போதைக்கு காக்கும் தூண்கள். பட்டுச் சேலையில் பாதுகாப்பு அரண் அமைத்த பெருமை அந்த மக்களுக்கு. எவ்வளவு நேரம் தான் பங்கருக்குள்ளும், புழுங்கித் தள்ளும் காப்பரணுக்குள்ளும் "குறண்டிக்' கொண்டு கிடக்க முடியும்? நல்ல காற்றைச் சுவாசிக்க வெளியே வரத்தானே வேண்டும்.
 

 

 

தாகம் தீராப் பொழுது

பங்கருக்குள் பத்துப் பதினைந்து பேர். வெக்கை எல்லோரையும் வேக வைத்துக் கொண்டு இருந்தது. ஏற்கனவே பசியிலிருந்த குழந்தை அழத்தொடங்கியிருந்தது. அதற்கு குண்டுச்சத்தங்களை விடவும் தன்னுடைய தாகமே பெரிதாக இருந்தது. பங்கரும் போதாக்குறைக்கு புழுக்கத்தால் சினத்தை உண்டுபண்ணியிருந்தது.

குழந்தைகளுக்கு அழுகையைத் தவிர  வேறு மொழி தெரிந்திருக்கவில்லை.நேரம் செல்லச் செல்ல குழந்தையின் அழுகையின் வேகம் தீவிரப்பட்டுக் கொண்டிருந்தது. உடல் பசியால் துவண்டிருந்தாலும், அதன் அழுகையின் வீரியம் மட்டும் குறைவதாயில்லை.

இனியும் சமாளிக்கமுடியாது. வேட்டுச்சத்தங்கள் ஓரளவுக்கு ஓய்ந்திருந்தன. சுட்டவர்கள் களைத்திருப்பார்கள் போலும். அவன் மனைவியைப் பார்த்தான். பிள்ளைக்கு ஒருக்கா பாலைக் குடுத்திட்டு வாவன். என்று மெல்லிய குரலில் சொன்னான்.

அவளும் அந்தமுடிவுக்கே வந்திருந்தாள். அவன் பங்கருக்கு மேலால் எட்டிப்பார்த்தான். சனநடமாட்டம் தெரிந்தது. இவ்வளவு நேரமும் பங்கருக்குள் முடங்கிக் கிடந்தவர்கள் வேட்டோசை ஓய்ந்தவுடன், உணவு தேடி ஓடத்தொடங்கியிருந்தார்கள்.

சனக்கள் திரியத் தொடங்கிட்டு. கெதியா வந்து குடும் அவன் அவசரப்படுத்தினான். அவள் குழந்தையோடு வெளியே வந்தாள். குளிர்காற்றுப்பட்டதும், குழந்தையின் அழுகை காணாமல் போனது.

புன்னகை துளிர்த்தது. தங்கள் மழலையின் அந்தப்புன்னகைக்கு உலகில் எதுவும் ஈடாகமுடியாது என்று அவள் எண்ணிக் கொண்டாள். பங்கருக்கு பக்கத்தில் கட்டப்பட்டருந்த தறப்பாளுக்கு கீழிருந்து பால் கொடுக்க ஆரம்பித்தாள். அசுரத்தனமான அந்தரிப்போடு குழந்தை பாலை பருகத்தொடங்கிற்று.

திடீரென மீண்டும் வேட்டோசை. சன்னங்கள் உடலை உரசிச்செல்வது போல அவள் உணர்ந்தாள். குழந்தையைத் தூக்கிக்கொண்டு மீண்டும் பங்கருக்குள் ஓடினாள். அவனும் பின் தொடர்ந்தான்.குழந்தை அழுகையை நிறுத்தியிருந்தது.

தாகம் தீர்ந்ததால் பிள்ளை அழவில்லை என்று நினைத்தவள், கையில் ஏதோ ஈரமாகப் பிசுபிசுப்பதை உணர்ந்து திடுக்கிட்டாள். குழந்தையைப் பார்த்தாள். அது சலனமற்றுக் கிடந்தது. கழுத்திலிருந்து குருதி ஓடிக்கொண்டிருந்தது. அதன் வாய் இன்னமும் பாலுக்காக ஏங்கியபடியே உறைந்திருந்தது. ஐயோ! என்ர பிள்ளை! அவள் அழுவதைத் தவிர என்ன செய்ய முடியும்?

 



முற்றுகை நிலம் 3

எல்லாம் முடிந்து போயிருந்தது. ஓடவும் இடமில்லை. குண்டுகள், ரவைகள் பாயவும் இடமில்லை. எஞ்சிக் கிடந்தவைகள் எரிந்து கொண்டிருந்தன. ஓலங்கள் எல்லாத் திசைகளிலும்.

பொறிக்குள் அகப்பட்ட முயல், தப்ப வழிதேடி எல்லாப்பக்கமும் ஓடித்திரிந்து ஓய்வது போன்று, மக்களும் தப்பும் வழிதேடி களைத்துப்போயினர். வழியென்று ஒன்றிருந்தால் தானே தப்பிக்கமுடியும்?

சரணடைதலே அவர்களுக்கான ஒரேயொரு தெரிவு. சரணடைந்தார்கள். மூன்று தசாப்தங்களாக தலைநிமிர்த்தி நின்றவர்கள், வரிசையில் தலைகுனிந்தபடி. ஆண்களில் பலர் நிர்வாணமாக்கப்பட்டு சோதிக்கப்பட்டார்கள்.

சோதனையின் முடிவில் தரம் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு தரத்தினருக்கும் ஒவ்வொரு விதமான தண்டனைகள். நிர்வாணக் கொலைகள், பெண்ணுடலின் இளமையை உறிஞ்சுதல், கட்டையால் அடித்துக் கொல்லல், காவோலைக்குள் உயிருடன் போட்டு கொளுத்துதல், ஒவ்வொரு கேள்விக்கு ஒரு வெட்டு என்ற வீதத்தில் கழுத்தை பிளேட்டால் அறுத்தல் என்று கொலையிடலில் என்னென்ன வழிகளெல்லாமுண்டோ அவையெல்லாம் ஒன்றும் விடாமல் பிரயோகிக்கப்பட்டன. அந்தக் கொலையிடலில் குழந்தைகளும் தப்பவில்லை.

கொத்துக் கொத்தாக, சத்தமின்றி கொன்று குவிக்கப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தடுப்புக்கு ஏற்றப்பட்டனர். மற்றைய தரத்தினர் நலன்புரி நிலையங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பரந்தவெளிச்சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இவை போரின் கடைசி நாள்களில் நிகழ்ந்தவை. போர் தொடங்கியதில் இருந்து, தனக்கு வசதிப்பட்ட எல்லா வழிகளையும் பிரயோகித்து மக்களைக் கொல்லும் பணியை அதிகாரம் விடாப்பிடியாகத் தொடர்ந்தது.

அவற்றில் சிலவற்றை அந்தக் குறுநிலத்திலிருந்த ஊடகவியலாளர்கள், போராளிகள், பொதுமக்கள், சிப்பாய்கள் என்போரின் ''கமெராக்கள்' பதிவு செய்து, தமக்குள் பதுக்கிவைத்திருந்தன.

இப்போது அவற்றில் சிலவற்றை தேடியெடுத்தே மோதல் தவிர்ப்பு வலயம் என்ற கண்ணீரின் மொழியிலான திரைப்படத்தை சனல்4 வெளியிட்டிருக்கிறது. இந்தக் காட்சிகளைக் கண்டு ஜெனிவா கண்ணீரில் மூழ்கியது.

ஆனால் அந்த திரைப்படத்தில் காட்டப்பட்டவை வன்னியில் நிகழ்ந்த கோரத்தின் ஒரு துளி மாத்திரமே. இதைவிடவும் வலிகொண்ட, ரத்தக்கண்ணீரை வரவழைக்கும் துயர்கள் கமெராக்களுக்குள் சிக்கவில்லை. அல்லது அதனைப் பதிவுசெய்தவர்கள் வெளியிட அஞ்சுகிறார்கள். சிலர் உயிருடன் இல்லை.

இறுதிப்போர் நடைபெற்ற போது, கடைசி நாள்களில் மக்களின் அவலங்களை சில போராளிகள் வேட்டு மழையில் நனைந்தபடி புகைப்படம் எடுத்தபோது, நாங்கள் சாகக்கிடக்கிறம்.

இவங்கள் படம் பிடிக்கிறாங்கள் என்று அவர்களை மண்ணள்ளி திட்டாதவர்கள் குறைவு. ஆனால் அவையே இப்போது நெருப்பெரிந்த நிலத்தின் சாம்பல் சாட்சியங்களாக உருவெடுத்து, அட்டூழியம் புரிந்தவர்களை கலங்கடிக்கும் ஆயுதமாக மாறிநிற்கிறது.

அதிகாரத்தை வேரறுப்பதற்காக இன்னும் சாட்சியங்கள் சாம்பலில் இருந்து எழக்கூடும். அப்போதெல்லாம் எல்லாமே பொய். புனைவைத் தவிர வேறொன்றுமில்லை என அவற்றை மறுதலிப்பதற்கான ''ரெடிமேட்' சொல்லை உச்சரிக்க அதிகாரம் தயாராக இருந்தாலும், அதை எவரும் நம்பப் போவதில்லை.


- ஒளண்யன்

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5356546603182739

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.