Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ அரசியல் இனி தமிழக அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ அரசியல் இனி தமிழக அரசியல்

சந்திப்பு: அரவிந்தன், ச.கோபாலகிருஷ்ணன்


நேர்காணல்: செ.ச.செந்தில்நாதன்


ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், அத்தீர்மானத்தை நிராகரித்து இந்தியா புதிய தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கையுடன் வெடித்துக் கிளம்பிய தமிழகக் கல்லூரி மாணவர்கள் போராட்டம், மாணவர்களைப் பின்தொடரும் மக்கள் எழுச்சி என்று ஈழத் தமிழர் பிரச்சினை தமிழக அரசியல் மற்றும் சமூகத்தளங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் இதுவரை இல்லாத அளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.


இதன் பின்னணியையும் விளைவுகளையும் பற்றிப் பேச ஊடகவியலாளரும் சர்வதேச அரசியல் குறித்துத் தொடர்ந்து எழுதிவருபவருமான செ.ச.செந்தில்நாதனைச் சந்தித்தோம்.


செந்தில்நாதன், தமிழ் ஆழி என்ற மாத இதழின் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர். உலகெங்கும் ஆதரவு நிலைப்பாடுள்ள அறிவுஜீவிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் தமிழர்களுக்கான உலகளாவிய பிரச்சார இயக்கம் (Global Campaign for Tamils) என்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். உலகத் தமிழர்கள் பிரச்சினை பற்றி இணையம் மூலமாகவும் நேரடியாகவும் பிரச்சாரம் மேற்கொள்வது இந்த இயக்கத்தின் நோக்கம்.


ஐ.நா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் அமெரிக்கத் தீர்மானத்துக்கு உள்நோக்கம் இருப்பது தெரிந்தும் அதைச் சில ஈழ ஆதரவாளர்கள் ஆதரித்தார்கள். ஆனால் இப்போது ஆதரித்தவர்களும் எதிர்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன? இந்த விஷயத்தில் அமெரிக்காவை நம்பலாமா கூடாதா?


இலங்கையில் 2006-2009 வரை நடத்தப்பட்ட புலிகளுக்கெதிரான யுத்தத்தை 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அரசால் கொண்டுவரப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தம் (War against Terrorism) என்ற கோட்பாட்டின் ஒரு பகுதியாகத்தான் அமெரிக்கா பார்த்தது. எனவே அந்த யுத்தத்தில் இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதவி செய்தது. ஐ.நா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட அமெரிக்க சார்பு அமைப்புகள் மற்றும் நாடுகள் அனைத்தும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டன.

 

விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பை உடைப்பதில் அமெரிக்கா முன்னிலை வகித்தது. புலிகளுக்கெதிரான யுத்தத்தில், தொடக்கம் முதல் இறுதிவரை என்ன நடந்தது என்பது அமெரிக்காவுக்கு முழுதாகத் தெரியும். சுருக்கமாகச் சொல்வதென்றால் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஒப்புதலுடனும் துணையுடனும்தான் ராஜபக்சே அரசின் புலிகளுக்கெதிரான யுத்தம் நடைபெற்றது.


யுத்தம் முடிவுக்கு வந்தபின் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிர்வினையாக அமெரிக்கா சில சமன்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. ராஜபக்சே, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பக்கம் சாயத் தொடங்கினார். அதற்காக அவர் மீது அழுத்தத்தை அதிகரித்துத் தன்வழிக்குக் கொண்டுவர அமெரிக்கா நினைத்தது.

 

அந்த அழுத்தத்தையும் கொஞ்சம் கனிவுடனே கொடுத்தது அமெரிக்கா. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்கவும் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வை மறுசீரமைக்கவும் இலங்கை அரசே உருவாக்கிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவை (Lessons Learnt and Reconciliation Comittee) அனுமதித்தது. உலக வரலாற்றில் எந்த நாட்டுக்கும் வழங்கப்படாத சலுகை இது. இதன் மூலம் இலங்கை அரசிடம் 'நான் என்றும் உன் நண்பனாகவே இருப்பேன்' என்று அமெரிக்கா, மறைமுகமாகச் சொன்னது.

 

இந்தியாவும் இதே நிலைப்பாட்டைக் கடைபிடிக்கிறது. இதுதான் இன்றைய உலக அரசியல். புவிசார் அரசியலைக் கடந்த உலக அரசியல் இது.


இதைப் புரிந்துகொள்ளாத விடுதலைப் புலிகள் அமைப்பினர் அமெரிக்காவை நம்பி தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டனர். ஒபாமா அதிபராவதை அவர்கள் ஆதரித்தார்கள். அவரது வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆனால் வாஷிங்டன் என்றுமே சிங்கள அரசுக்கான ஆதரவு நிலைப்பாட்டுடன்தான் செயல்பட்டுவந்திருக்கிறது.


அப்படியானால் அமெரிக்கா இப்போது ஏன் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது?


சனல் 4 வெளியிட்ட காணொளிகள் ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களை உலகளாவிய கவனத்துக்குக் கொண்டுசென்றன. மேற்குநாடுகளின் மனித உரிமை ஆர்வலர்களும் குடிமைச் சமூகமும் ராஜபக்சே அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்கள். இதனால் இலங்கை அரசு மீதான அழுத்தத்தை அமெரிக்க அரசு அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இந்த நிர்ப்பந்தம்கூட அழுத்தத்தை அதிகரித்து இலங்கையைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ள அமெரிக்காவுக்கு உதவுவதாகவே அமைந்துவிட்டது.

 

இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த முதல் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இரண்டாவது தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்தது. இப்போது மூன்றாவது தீர்மானம். இதை இந்தியா ஆதரித்தாலும் எதிர்த்தாலும் எந்த நலனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஏனெனில் தீர்மானம் ஒவ்வொரு ஆண்டும் பல்வீனமாகிக்கொண்டே வருகிறது.


ஆனால் இவையெல்லாம் தெரிந்துதானே சில தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறினர்?


இந்தக் குறைந்தபட்ச நெருக்கதலைக்கூட ராஜபக்சே அரசுக்கு எதிரான நகர்வாகப் பயன்படுத்தத் தமிழர் அமைப்புகள் நினைத்தன. எனவேதான் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை சில தமிழ் அமைப்புகளாலும் ஆர்வலர்களாலும் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டது.


சர்வதேச அரங்கில் மேற்குலக நாடுகளின் ஆதரவு இல்லாமல் எந்தப் பிரச்சினையிலும் அடுத்த கட்டத்துக்குப் போக முடியாது. எனவே வேறதுவும் இல்லாத சூழலில் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் பெருவாரியான ஆதரவாளர்களுக்கு இருந்தது.


இப்போது அவர்களது நிலைப்பாடு மாறியதற்குக் காரணம் என்ன?


இந்த ஆண்டு தீர்மானத்தைப் பற்றிய பேச்சு வந்தபோதே அதன் பலவீனம் புரிந்துகொள்ளப்பட்டது. இலங்கைக்கு எதிரான ஷரத்துக்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதில் இல்லை.


தமிழீழ ஆதரவாளர் அமைப்புகளும். அவற்றுக்கு ஆதரவாக இருக்கும் மனித உரிமை அமைப்புகளும், தமிழ் மாணவர்கள் மற்றும் மக்கள் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியபோது அத்தனை பலவீனமான தீர்மானத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினர்.


சானல் 4இன் புதுக் காணொளி வெளியானது, Human Rights Watch, International Crisis group ஆகிய சர்வதேச அமைப்புகளின் ஆவணங்கள் வெளியானது, மிகச் சமீபத்தில் தமிழர்களுக்கு சுயாட்சி மகாணங்களை வழங்க முடியாது என்று ராஜபக்சே தெளிவாகத் தெரிவித்துவிட்டது, LLRC பரிந்துரைகளைக்கூட இலங்கை அரசு பொருட்படுத்தாதது ஆகிய அனைத்தும் இணைந்து உலகின் நிர்ப்பந்தம் இலங்கையின் மீது அதிகரிக்கும் என்கிற ஒரு எதிர்ப்பார்ப்பை விதைத்தது. இதற்கிடையில் இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்க விஷயத்தில் அமெரிக்கா எதிர்ப்பைத் தெரிவித்திருந்து. எனவே ஒருவேளை அமெரிக்காவின் நிர்ப்பந்தம் கூடுதலாகலாம் என்றொரு நடைமுறைசார்ந்த எதிர்பார்ப்பு இருந்து. ஆனால் அது மாயமாகிவிட்டது. எனவேதான் ஜெனீவாவில் தீர்மானத்தின் வரைபுகள் அடுத்தடுத்து சாரமிழந்துகொண்டே வந்த சூழலில், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் ஒரு நாடகம் என்ற உணர்வை உலகத் தமிழர்கள் மத்தியில் மேலெழும்பச் செய்தன.


வலுவற்ற நிலையில் அமெரிக்கத் தீர்மானமாவது வரட்டுமே என்று நினைத்த நிலை மாறி மக்கள் போராட்டத்தால் வலுப்பெற்ற தமிழீழ ஆதரவு இயக்கங்கள் சுற்றி வளைக்காமல் நேரடியான முழக்கங்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டன.


நேரடியான முழக்கங்கள் எவை?


ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மீதான சுதந்திரமான சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும், தமிழீழப் பகுதிகளில் இடைக்கால அரசு நிறுவப்பட வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதியில் சர்வதேச மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.


தமிழகத்தில் தொடங்கிய மாணவர் மற்றும் மக்கள் போராட்டம் இந்த முழக்கங்களை முன்னெடுப்பதில் பெரும்பங்காற்றியிருக்கின்றது. சர்வதேச அரசியல் விளையாட்டுகளை விட மக்கள் போராட்டம் அதிக பலம் வாய்ந்தது என்பதை நிரூபித்திருப்பதே இந்தப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம்.

 

மாணவர்களின் திடீர் எழுச்சி எப்படி ஏற்பட்டது?


இது திடீர் எழுச்சி அல்ல.


2009 மே மாதம் போர் முடிந்ததிலிருந்தே இலங்கை விஷயத்தில் தமிழக மக்களுக்கு ராஜபக்சேவுக்கு சமமான கோபம் இந்திய அரசின் மீதும் அப்போது தமிழகத்தை ஆண்ட தி.மு.க அரசின் மீதும் இருந்தது. ராஜபக்சேவை எதிரியாகவும் காங்கிரஸ், தி.மு.க அரசுகளை துரோகியாகவும் பார்த்தார்கள் தமிழகத் தமிழர்கள்.


ஆனால் இந்தக் கோபத்துக்கு அரசியல் ஒருங்கிணைப்பு என்கிற அடிப்படையோ அமைப்பு ரீதியான அணிதிரட்டல் வாய்ப்புகளோ இருக்கவில்லை.


போர் முடிந்த பிறகு இலங்கையில் அமைதி திரும்பிவிடும் என்றும் அங்கு எஞ்சியுள்ள தமிழர்களாவது நிம்மதியாக வாழ்வார்கள் என்று நம்பினார்கள்.


ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மே 17 இயக்கம், நாம் தமிழர் இயக்கம் போன்ற இயக்கங்கள் உருவாகி வலுப்பெறத் தொடங்கின. ம.தி.மு.க, தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அதிக கவனம் பெறத் தொடங்கின. இந்த இயக்கங்களும் கட்சிகளும் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இந்திய அரசையும் தி.மு.க அரசையும் அம்பலப்படுத்தின. சோனியா அரசும், தி.மு.க அரசும் துரோகம் இழைத்தன என்ற கருத்து சாதி, மத இன வேறுபாடுகளைக் கடந்து அனைவர் மனங்களிலும் ஆழமாக வேரூன்றியது.


இதனடிப்படையில்தான் இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழ ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறார். மக்கள் மனதில் ஏற்பட்டுவிட்ட மாற்றத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் செயல்படுகிறார். அவரது கடந்த காலம் எப்படி இருந்தாலும் சட்டமன்ற தீர்மானங்கள் மூலம் இதை அவர் செய்தார். இவையனைத்தும் இணைந்து ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சிக்கான மனநிலையை தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கிவிட்டன.


தற்போது சானல் 4 காணொளி, பாலச்சந்திரன் புகைப்படம், தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்பட்டுவருவது, அமெரிக்கா உட்பட மேற்குலகு நாடுகளின் அரசுகள் இலங்கை விவகாரத்தில் உறுதியில்லாமல் செயல்படுவது என அனைத்தும் ஒரே நேரத்தில் வெளிப்பட்டபோது மக்கள் பொறுமையிழந்தார்கள். லயோலாவில் தொடங்கிய ஒரு சிறிய போராட்டம் எதிர்பாராத விதத்தில் தமிழகம் முழுவதும் பரவியது. தீப்பிடித்ததுபோல இந்தப் போராட்டம் பரவியதற்கு காரணம், தீப்பற்றிக்கொள்ளக்கூடிய நிலையில் மக்கள் இருந்ததுதான்.


போராட்டம் வெடிப்பதற்கான திரியை மாணவர்கள் பற்ற வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்த பல்வேறு நிகழ்வுகள் இந்த வெடிக்கான மருந்து. உள்ளார்ந்த உணர்வில்லாமல் ஒன்றையும் எழுப்ப முடியாது.


சுயநலவாதிகள் என்று சுட்டப்படும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பது வெளிப்படையாகத் தெரிந்தும் ராஜபக்சே அரசை ஆதரிக்க இந்திய அரசு சொல்லும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை குறைந்தபட்ச நியாய உணர்வுகொண்ட யாராலும் பொறுத்துக்கொள்ள முடியாது.


தற்போது வெளிப்பட்டிருக்கும் கோபம் அனைவர் மனதிலும் இருக்கக்கூடிய அநியாயத்துக்கு எதிரான கோபம். ஹிட்லரை எதிர்ப்போர் அனைவரும் கம்யூனிஸ்ட்கள் அல்ல. ராஜபக்சேயை எதிர்ப்பவர்கள் எல்லோரும் புலிகள் அல்ல. அநியாயத்துக்கெதிரான கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே மாணவர் போராட்டத்தை அனைவரும் பார்க்கிறார்கள்.


ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எப்போதுமில்லாத ஆதரவு இப்போது கிடைத்திருக்கிறது. தொடர்ச்சியாக வெளிப்பட்டுவரும் காங்கிரஸின் மக்கள் விரோதப் போக்கும் இதில் பெரும்பங்கு வகிக்கிறது.


ஆனால் ஒரேயடியாக காங்கிரஸையும் தி.மு.கவையும் மட்டும் எதிர்ப்பது இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாகிவிடுவதாகவும் சிலர் கவலைப்படுகிறார்களே? நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் சிவசேனைக் கட்சியைப் பாராட்டுவதை அதன் விளைவாகத்தானே பார்க்க வேண்டியிருக்கிறது?


ஈழ விடுதலை ஆதரவு அமைப்புகள் சிலர் காங்கிரஸுக்கு எதிரி என்பதற்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பா.ஜ.க, சிவசேனை போன்ற கட்சிகளை ஆதரிக்கிறார்கள்.


ஆனால் ஈழம் தொடர்பான இந்திய அரசு நிலைப்பாட்டில் காங்கிரஸ், பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் வெவ்வேறு கருத்துகள் கிடையாது. அதே சமயத்தில் காங்கிரஸ், சிபிஎம் அளவுக்கு பாஜகவிடம் மிகத் தீவிரமான ஈழ எதிர்ப்பு அரசியலும் இல்லை.


ஈழத் தமிழர்கள் இந்துக்கள் என்ற அடிப்படையில் இந்துத்துவ கட்சிகளின் ஆதரவைப் பெற முடியும் என்ற உத்தியை இந்த அமைப்புகள் கடைப்பிடிக்கின்றன. ஒரு நாடாளுமன்ற உத்தியாக (Floor coordination) வேண்டுமானால் இது சில சமயங்களில் சாத்தியமாகலாம். ஆனால் இந்த அணுகுமுறை வெற்றிபெறாது. பா.ஜ.க தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை சென்றுவிட்டு வந்து பேசிய வார்த்தைகள் காங்கிரஸ் அமைச்சர்கள் பேசும் வார்த்தைகள் போல்தான் இருந்தன.


காங்கிரஸ் எதிர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக முடிந்துவிடும் என்ற சந்தேகம் எழுப்பும் அறிவுஜீவிகள் பலர் தீவிரமான ஈழ எதிர்ப்பாளர்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.


என்னைப் பொறுத்தவரை ஈழப் பிரச்சனையில் தமிழ்நாடு, தமிழ்நாடு தவிர்த்த இந்தியா என இரு தளங்கள்தான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் விதிவிலக்கான ஒரு சில தரப்பினர் தவிர பிறர் அனைவரும் ஈழ மக்களின் பக்கம் நிற்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே விதிவிலக்கான ஒரு சில தரப்பினரைத் தவிர வேறு யாரும் இதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இதில் சோனியா பரிவாரம், சங் பரிவாரம், சிவப்பு பரிவாரம், ஜனதா பரிவாரம், ஆம் ஆத்மி பரிவாரம் என எதுவுமே விதிவிலக்கில்லை.


இலங்கையில் இந்துக் கோயில்களை இடித்துத்தள்ளுகிற, முஸ்லீம்களுக்கு எதிராக இனவாத அடக்குமுறையைச் செலுத்துகிற ராஜபக்சேயை நேற்று நடந்த சர்வகட்சி கூட்டத்தில் இந்துத்துவ கட்சிகளும் ஆதரித்தன, செக்குலர் பேசும் கட்சிகளும் ஆதரித்தன. வினோதமாக இல்லையா இது? 'த இந்துவும்' 'த பயனீரும்' ஒரே தலையங்கத்தைத்தான் எழுதுகின்றன. எல்லா வண்ண அறிவுஜீவிகளும் விதிவிலக்கில்லை. ஒரு தேசிய இன கண்ணாடித்திரை இரு தளங்களையும் தெளிவாக பிரித்து நிற்பதாகத் தெரிகிறது. ஆனால் முதன் முறையாக இந்த முறை மாணவர்கள் அந்த கண்ணாடித் திரைமீது ஒரு சிறு கல்லை எடுத்து எறிந்திருக்கிறார்கள். ஐஐடி மும்பையில்கூட இந்த முறை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் நடந்தது என்பதை மறக்க முடியாது.


மாணவர் போராட்டத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


1.) இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் இரு பெரும் திராவிடக் கட்சிகளின் அரசியைலைக் காலாவதியாக்கியிருக்கிறது.


2.) தமிழ்நாட்டை இந்திய அரசு நடத்தும் விதம் குறித்த மிகவும் கவலைக்குரிய கருத்தை இது விதைத்திருக்கிறது. இதன் மூலம் தமிழ் தேசியத்துக்கான கோரிக்கை மைய நீரோட்டத்துக்கு வந்திருக்கிறது.


3.) இந்தப் போராட்டம் சர்வதேச அளவிலான தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச அரசியலைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. நமது மாணவர்கள் ஜெனீவா, நவநீதம்பிள்ளை, பான் கீ மூன் போன்ற வார்த்தைகளை சர்வசாதரணமாகப் பேசுகிறார்கள்.


இவற்றை இந்தப் போராட்டத்தின் 3 முக்கியமான விளைவுகளாக நான் கருதுகிறேன்.


இந்தப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு இணையான விளைவுகளை உருவாக்ககூடிய போராட்டம் என்று சொல்லலாம்.

 

இதைப் புரிந்துகொண்டதால்தான் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவசர அவசரமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார்.


திராவிடக் கட்சிகளை இந்தப் போராட்டம் காலாவதியாக்கியிருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் அந்த இரு கட்சிகளும் இந்தப் போராட்டத்தின் மூலம் ஆதாயம் பெறத்தானே முயற்சிக்கின்றன?


ஈழத் தமிழர்களுக்கான போராட்டத்தை வழிநடத்தும் அமைப்புகளாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் இரு திராவிடக் கட்சிகளும் இருந்திருக்க வேண்டும். ஆனால் உருவான போராட்டத்தின் பின் இவர்கள் ஓடுகிறார்கள்.


போராட்டத்துக்கான முறையான எதிர்வினையைக்கூட இந்த இரு கட்சிகளால் ஆற்ற முடியவில்லை. அடுத்த தலைமுறை இந்தக் கட்சிகளின் பின் நிற்காது. புதிதாக எழும் கட்சிகளுக்குத்தான் துணைபோகும்.


ஆனால் மாற்று அரசியல் கட்சிகள் இதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் இரு திராவிடக் கட்சிகளையே மக்கள் மாறி மாறித் தேர்ந்தெடுக்கும் நிலை தொடரும்.


டெசோ அமைப்பைப் புதுப்பித்தது, ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகியது உள்ளிட்ட நடவடிக்கைகள் தி.மு.க மீதான நம்பிக்கை ஏற்படுத்தும் காரணிகளாக வலுப்பெற வாய்ப்பிருக்கிறதா?


ஐ.மு. கூட்டணியிலிருந்து பிரிந்துவிட்டதற்காக தி.மு.கவை ஈழ ஆதரவு சக்தியாக யாரும் ஏற்க மாட்டார்கள். தொடர்ச்சியான செயல்பாடுகளால் தி.மு.க அந்த நிலையை அடைய முயற்சிக்க வேண்டும். டெசோவை ஒரு பலமான ஆயுதமாக மாற்றினால் பல ஈழ ஆதரவு சக்திகளில் ஒன்றாக அது உயர முடியும்.


2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து தி.மு.க. அரசியல் செய்ய வேண்டும். ஈழ ஆதரவு நிலைப்பாட்டை ஏற்கும் கூட்டணிக்குத்தான் ஆதரவு தெரிவிப்பது எனபதில் உறுதியாக நின்றால் 2009 போரின்போது எதுவும் செய்யாமல் துரோகம் இழைத்த பாவத்துக்குப் பிராயச்சித்தம் கிடைக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவதும் நழுவவிடுவதும் மு.கவின் கையில்.


2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து ஈழப்பிரச்சினையை தமிழகத்தின் பிரச்சினையாக மக்கள் கருதவில்லை என்று சில அரசியல்வாதிகளும் அறிவுஜீவிகளும் கூறினார்கள். அதற்கு இடமளிக்கும் வகையில் தமிழக மக்களின் வாக்குகளும் அமைந்தனவே?


2009 தேர்தலைப் பொறுத்தவரை ஈழப் பிரச்சினை குறித்த சோகம் தமிழகத்தில் பரவவில்லை. இறுதி யுத்தமும் தேர்தலும் ஒரே சமயத்தில் நடந்தன. இறுதி யுத்தத்தில் முழுவதுமாக என்ன நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. அது தவிர ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் தீவிரமாகச் செயல்பட முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால் அப்போது இது தேர்தல் பிரச்சினையாக மாறியிருக்கவில்லை.


2010-11இல்கூட ஈழப் பிரச்சினை தமிழகத்தில் ஒரு தேர்தல் சார்ந்த அரசியல் பிரச்சினையாக மாறியிருக்கவில்லை. இன்று காங்கிரஸ் கட்சியின் தொடர்ச்சியான ராஜபக்சே ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாகத்தான் ஈழப் பிச்சினையைத் தமிழக மக்கள் அரசியல் பிரச்சினையாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.


இப்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த சில தசாப்தங்களிலேயே மிகப்பெரிய மாணவர் போராட்டம் இதுதான். தமிழகத்தை சாதி, மதம் கடந்து இணைத்த பிரச்சனை இதுதான். இனி எப்படி தமிழ்நாட்டில் ஈழப் பிரச்சனை தேர்தல் பிரச்சனை இல்லை என்று கூறமுடியும்?


இனி ஈழ அரசியல் என்பது தமிழக மக்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் அரசியலும்கூட. இனியும் இவற்றைப் பிரித்துப் பார்க்க முடியாது. முன்பு புலிகளின் தாகமாக மட்டுமே இருந்த தமிழீழ தாயகம், இப்போது உலகத் தமிழர்களின் தாகமாக மாறிவிட்டது. அதற்கு காரணம் நமது மாணவர்கள். மக்களும் அதை வழிமொழிந்திருக்கிறார்கள். இதை ஏற்க மறுப்பது அவரவர் ஆசையைப் பொறுத்தது.


 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=3&contentid=ef046fb6-a59e-4ea2-b1eb-947986922129

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.