Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாரதத்துடன் தர்மயுத்தம்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 66) – நிராஜ் டேவிட்

Featured Replies

 

Frame-0020.jpg

திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.

உரும்பிராய் சைவ தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் முடித்துக்கொண்ட திலீபன், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனாக இருந்தபோதுதான், தமது இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.

யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளின் யாழ்.குடா பொறுப்பாளராக இருந்த கிட்டுவுடன் இணைந்து, ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களில் திலீபன் பங்குபற்றியிருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் வட்டுக்கோட்டைப் பகுதி பிரச்சாரப் பொறுப்பாளர், நவாலி பிரதேசப் பொறுப்பாளர், யாழ் அரசியல் பொறுப்பாளர் என்று திலீபன் கடமையாற்றியதால், மக்களுடன் நெருங்கிப் பழகி, யாழ் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும், நட்பையும் திலீபன் பெற்றிருந்தார்.

இதனால், திலீபன் இறந்துவிட்டான் என்ற செய்தி மக்கள் மத்தியில் பரவியபோது, மக்களால் தமது சோகத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. யாழ். குடாவே சோகத்தில் மூழ்கியது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் திலீபனின் உருவப் படம் தாங்கிய சிறிய கூடுகள் ஓலையாலும், சீலையாலும் அமைக்கப்பட்டு, அவற்றினுள் தீபம் ஏற்றப்பட்டிருந்தன.

வீதியெங்கும் வாழை மரங்களாலும், தென்னங் குருத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அந்த தியாக இளைஞனின் இறுதி ஊர்வலத்திற்கு தமது மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்த தயாராக இருந்தன.

யாழ். குடாவில் அழாத மக்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஒப்பாரிகள் முகாரிகளாக ஒலித்தபடி இருந்தன. போதாததற்கு ஒவ்வொரு வீதிகளிலும், கோவில்களிலும், பாடசாலைகளிலும் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளில் சோக கீதங்களும், சோக நாதங்களும் ஒலித்தபடி இருந்தன.

இதே நிலைமை வடக்கு கிழக்கு முழுவதிலும் காணப்பட்டது. ஒவ்வொரு தமிழன் மனதிலும் தாங்கமுடியாத வேதனை. இந்திய அரசு மீது வெறுப்பும், கோபமும், அதனைத் தீர்த்துக்கொள்ள முடியாத தமது இயலாமையை நினைத்து அவமானமும் குடிகொண்டிருந்தன.

சிலருக்கு புலிகளின் பதிலடி எப்படி இருக்கும் என்ற பயமும் ஏற்பட்டிருந்தது. மொத்தத்தில் தமிழ் இனமே பலதரப்பட்ட உணர்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டது.

இராணுவச் சீருடை தரித்து, புலிக்கொடியால் போர்த்தப்பட்டு, மலர்ப்போர்வையால் மூடப்பட்ட அமரர் ஊர்தியில், கரும்புலிகளின் அணிவகுப்புடன் திலீபனின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. யாழ் குடாவில் கிராமம் கிராமமாக இறுதிப் பயணம் மேற்கொண்ட தங்களது வரலாற்றுத் தியாகிக்கு, இதய அஞ்சலி செலுத்த தமிழ் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தார்கள்.

சத்தியாக்கிரகத்தின் பிதாமகர் என்று கூறப்படுகின்ற மகாத்மா காந்தியையே, நீராகாரம்கூட அருந்தாத தனது உண்ணாவிரதத்தினாலும், தற்கொடைத் தியாகத்தினாலும் விஞ்சியிருந்த அந்த வீர இளைஞனுக்கு இறுதி அஞ்சலியைச் செலுத்த, ஒவ்வொரு தமிழ் மகனும் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

தலைவரின் செய்தி:

ew025.jpg

திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், ஒரு இரங்கல் செய்தியை வெளியிட்டார்.

எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைச் செய்திருக்கின்றது. வீர காவியங்களைப் படைத்திருக்கின்றது. இவை எல்லாமே எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள்.

ஆனால் எமது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது. வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது.

சாத்வீகப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து திலீபன் ஈடிணையற்ற தியாகத்தைப் புரிந்துள்ளான்.

அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி.

தமிழீழ தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி.

பாரத தேசத்தை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி.

உலகத்தின் மனச்சாட்சியைத் தீண்டிவிட்ட நிகழ்ச்சி.

திலீபன் தமிழ் மக்களுக்காகவே இறந்தான். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவே இறந்தான். தமிழ் மக்களின் மண்ணுக்காக இறந்தான். தமிழ் மக்களின் பாதுகாப்புக்காக இறந்தான். தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக, கௌரவத்திற்காக திலீபன் தன்னை மாய்த்துக்கொண்டான்.

ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.

நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த இலட்சியப் போராளி என்ற ரீதியில் அவன் மீது அளவு கடந்த பாசம் எனக்குண்டு..என்று தெடர்ந்த தலைவரின் இரங்கல் செய்தியில், இந்தியாவின் பாராமுகத்தையும் அவர் பகிரங்கமாக கண்டித்திருந்தார்.

பாரதத்துடன் தர்மயுத்தம்:

திலீபனின் மரணம் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கின்றது. இது அர்த்தமற்ற சாவு என்று இந்தியத் தூதுவர் கூறியிருக்கின்றார். தமது உறுதிமொழிகளை நம்பியிருந்தால் திலீபன் உயிர் தப்பியிருப்பான் என்றும் அவர் சொல்லியிருக்கின்றார். ஆனால், உண்மையில் நடந்தது என்ன, நடந்து கொண்டிருப்பது என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எமது உரிமைகள் வழங்கப்படும். எமது மக்களுக்கும், எமது மண்ணுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும். தமிழ் மக்கள் தமது பாரம்பரிய பூமியில் தம்மைத்தாமே ஆழும் வாய்ப்பு அளிக்கப்படும் – இப்படியெல்லாம் பாரத அரசு எமக்கு அளித்த வாக்குறுதிகளை நம்பி, நாம் எமது ஆயுதங்களைக் கையளித்தோம். எமது மக்களதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவுக்குப் பொறுப்பளித்தோம்.

இதனையடுத்து என்ன நடைபெற்றது என்பதெல்லாம் எமது மக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

தமிழ் அகதிகள் தமது சொந்தக் கிரமங்களுக்குச் செல்ல முடியாமல் அகதி முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க, சிங்களக் குடியேற்றம் துரித கதியில் தமிழ் மண்ணை விழுங்க ஆரம்பித்தது. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ் பகுதிகளில் விஸ்தரிக்கப்பட்டது.

சிங்கள இனவாத அரச இயந்திரம் அவசர அவசரமாக தமிழ் பகுதிகளில் ஊடுருவியது. சமாதான ஒப்பந்தம் என்ற போர்வையில், சமாதானப் படைகளின் அனுசரனையுடன் சிங்கள அரச ஆதிக்கம் தமிழீழத்தில் நிலைகொள்ள முயன்றது.

இந்தப் பேரபாயத்தை உணர்ந்துகொண்ட திலீபன், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க திடசங்கற்பம் கொண்டான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. பாரதம்தான் எமது இனப் பிரச்சினையில் தலையிட்டு, எம்மிடம் இருந்த ஆயுதங்களை வாங்கியது. பாரதம்தான் எமது போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆகவே பாரத அரசிடம்தான் நாம் உரிமை கோரிப் போராட வேண்டியிருந்தது.

எனவேதான் திலீபன் பாரதத்துடன் தர்மயுத்தம் ஒன்றை ஆரம்பித்தான். பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாகவும் அவன் எடுத்திருந்தான்.

நீராகாரம் கூட அருந்தாது மரண நோன்பைத் திலீபன் தழுவிக் கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே இந்தியத் தூதுவர் டிக்சித்துக்கு நாம் முன்னறிவித்தல் கொடுத்திருந்தோம். உண்ணாவிரதம் ஆரம்பமாகி எட்டு நாட்கள் வரை எதுவுமே நடைபெறவில்லை.

பதிலுக்கு இந்திய அரசின் கீழுள்ள தொடர்பு சாதனங்கள் எம்மீது விஷமத்தனமான பொய்ப் பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டன. திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தின.

உண்ணாவிரதம் ஆரம்பமாகி ஒன்பதாவது நாளே இந்தியத் தூதர் வந்தார். உருப்படியில்லாத உறுதி மொழிகளைத் தந்தார். வெறும் உறுதிமொழிகளை நம்பி காலாகாலமாக எமது இனம் ஏமாற்றப்பட்டு வருகின்றது.

உருப்படியான திட்டங்களை முன்வையுங்கள்! எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வையுங்கள்: அதுவரை உண்ணாவிரதத்தை கைவிட திலீபன் சம்மதிக்கமாட்டான் என்பதை அவருக்கு தெரியப்படுத்தினோம்.

உங்களுக்கு திலீபனின் உயிர் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், நீங்கள் அவனை வந்து பாருங்கள். எமது மக்கள் முன்னிலையில் அவனிடம் உறுதிமொழியினைக் கூறுங்கள். அப்பொழுதுதான் திலீபன் உண்ணா விரதத்தை கைவிடுவான் என்று அவரிடம் கூறினேன். அதற்கு இந்தியத் தூதுவர் மறுத்துவிட்டார். இவ்வாறு பிரபாகரன் அவர்களின் செய்தி தொடர்ந்தது.

திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இந்தியா மிகவும் கேவலமான, பிற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. திலீபனின் போராட்டத்தையும், அவனது தியாகத்தையும் கொச்சைப்படுத்தும்படியான பலவித நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருந்தது.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ வானொலி சேவையான ~அகில இந்திய வானொலி (ALL INDIA RADIO) திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தும்படியான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. திலீபனைப் பற்றியும், புலிகளின் தலைவரைப் பற்றியும் தவறான கருத்துக்களை தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில், அது முழுமூச்சுடன் இறங்கியிருந்தது.

மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தவர்தான். ஆனால் அவர் தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி கூறவில்லை. மகாத்மாவே நேரடியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தார். ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி ஆணையிட்டுள்ளார் என்று அகில இந்திய வானொலி பிரச்சாரம் செய்தது.

அதேபோன்று, திலீபன் தொடர்பாக, மற்றொரு வதந்தியும் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. திலீபன் ஏற்கனவே நடைபெற்றிருந்த சண்டை ஒன்றில் காயம் அடைந்திருந்ததால், அவனது ஈரலில் ஒரு பகுதியும், மற்றைய சில உள்ளுறுப்புக்களும் ஏற்கனவே வைத்திய சிகிச்சையின் போது அகற்றியெடுக்கப்பட்டுவிட்டன.

திலீபன் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதனால்தான் திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை துணிந்து மேற்கொண்டு வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டன.

(இந்தியப்படையுடன் ஈழத்திற்கு வந்திருந்த தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் இப்படியான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் அரும்பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.)

அதேபோன்று, திலிபன் மரணம் அடைந்த பின்பும், இந்தியாவின் சகபாடிகளால் மேலும் பல வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இறுதி நேரத்தில் திலீபன் தன்னைக் காப்பாற்றும்படி சக போராளிகளிடம் கெஞ்சியதாகவும், ஆனால், புலிகள் திலீபனை வலுக்கட்டாயமாக உண்ணாவிரதம் இருந்து சாகடித்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன.

திலீபன் புலிகளால் விஷ ஊசி ஏற்றிக் கொல்லப்பட்டதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் இந்தியாவின் அடிவருடிகளால் வதந்திகள் பரப்பப்பட்டன.

திலீபனின் போராட்டமானது, இந்தியா பற்றி தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மாயையை உடைந்திருந்தது. இதனைப் பொறுக்க முடியாத இந்தியாவின் உளவுப் பிரிவினரே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதில் பிரதான பங்கு வகித்திருந்தார்கள்.

அவர்கள் தமது திட்டத்திற்கு இந்தியப் படைகளின் தயவில் தங்கியிருந்த தமிழ் அமைப்பின் உறுப்பினர்களையும், அவர்களின் குடும்பத்தினர்களையும் பயன்படுத்தினார்கள்.

ஆனால், இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்களை இந்தியாவிற்கு எதிராக மேலும் கோபம் கொள்ள வைத்ததுடன், திலீபன் மீது தாம் கொண்டிருந்த அன்பை மென்மேலும் அதிகரிக்கவும் செய்தது.

சண்டைகளின் போது விழுப்புண் அடைவது புலிகளுக்கு புதிதல்ல. இதை புலிகளுடன் தோளோடு தோள் நின்ற தமிழ் மக்கள் நன்கறிவார்கள். சுமார் ஆறு மாத காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சண்டையின் போது திலீபன் வயிற்றில் காயமடைந்திருந்தது உண்மைதான்.

ஆனால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அளவிற்கு திலீபனுக்கு உடல்நிலை ஒன்றும் மோசமாக இருக்கவில்லை என்பதை, திலீபனின் வாழ்க்கையில் பிண்ணிப் பிணைந்திருந்த யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.

அத்தோடு, மரணத்திற்கு முன்பதாக திலீபன் ஆற்றியிருந்த உரை, தனது குறிக்கோளில் திலீபன் கொண்டிருந்த உறுதியை வெளிப்படுத்துவதாக இருந்தது.

நான் என் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்.

மக்கள் அனைவரும் எழுச்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது. எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க வேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக் கூடாது.

ஈழப் பிரச்சனையின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா:

திலீபனின் மரணமும், அது தொடர்பான உணர்வலைகளும் தமிழ் மக்களை ஆட்கொண்டிருந்த அதேவேளை, இந்திய இராணுவம் தனது 36வது காலாட் படைப்பிரிவை மிகவும் இரகசியமாக யாழ். குடாவிற்கு நகர்த்த ஆரம்பித்தது.

சென்னை, பறங்கிமலைப் பகுதியில் உள்ள Defence Colony இல் ஏற்கனவே முகாம் அமைத்து நிலைகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் இந்தப் படைப்பிரிவு, சிறிது சிறிதாக யாழ். குடாவை நோக்கி நகர்த்தப்பட்டது.

இந்தியா, ஈழப் பிரச்சனையின் அடுத்த கட்டத்திற்குள் தன்னை நுழைத்துக் கொள்வதற்கு தயாரானது.

தொடர்புபட்ட காணொளி:

 

 

http://www.nirajdavid.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.