Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா?

அருண் நரசிம்மன்

arun_graphic_comic_kill_lady_blood_tim_b

 

 

வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் 

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் ப்ரும்மராட்சதரும்

அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட

 

எங்கள் வீட்டு உதவியாளி சமீபத்தில் தன் பேத்திக்கு உடல் நலமில்லை என்று விடுப்பு கேட்டாள். விசாரிக்கையில் இரவு மாடி அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென்று எக்கச்சக்கத்திற்குக் காய்ச்சலாம். அருகில் படுத்திருந்த இவள் தரையெல்லாம் என்றுமில்லாத அளவிற்கு சில்லிட்டுப்போய்விட்டதாய் உணர்ந்திருக்கிறாள். கதவு திறந்திருக்கவே, வெளியே வந்து பார்த்தால், கீழ்ப் படிக்கட்டில் விரிந்த கூந்தலுடன் யாரோ உட்கார்ந்திருப்பது மாதிரியிருந்ததாம். யாரது என்றதும் திரும்பிய கரிய உருவத்தைப் பார்த்து இவள் அலறியதில் கீழ்க்கட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் விழித்தெழுந்து ஓடிவந்து சமாதானப்படுத்தியுள்ளனர். குழந்தையின் ‘திடீர்’ காய்ச்சலுக்குக் காரணம் இவள் பார்த்த ‘முனி’ குழந்தையைச் சாப்பிட இழுத்துக்கொண்டு போக முயன்றதுதான் என்கிறாள். கடவுள் புண்ணியத்தில் தப்பிவிட்டதாம். விடுப்பில் குழந்தையுடன் வேறு ஊருக்குச் சென்றுவர விரும்புகிறாள்.

மனித உயிரியல், மற்றும் பௌதீக இயங்கு விதிகளுக்குக் கட்டுப்படாத, அவ்வப்போது தட்டுப்பட்டு அலறவைக்கும் அருவங்கள், அதாவது பேய் பிசாசுகள் இருப்பதாய் நம்மில் பலர் நம்புகிறோம். அதேபோல, சாமான்யர்கள் கண்களில் தட்டுப்படாத அணுக்கள், அணுக்கருத் துகள்கள் எனவும் பொருள்கள் இருப்பதாய் அறிவியலாளார்கள் என்றழைக்கப்படுபவர்களில் பலர் நம்புகிறார்கள்.

முன்னதைக் கிட்டத்தட்ட மூடநம்பிக்கை என்கையில், பின்னதை அவ்வாறு நாம் கருதுவதில்லை. இது புரட்டில்லையா? பேய் பிசாசு இருப்பதாய் நம்புவதை அறிவியல் சிந்தை மறுக்கிறதா? அப்படியெனில் உலகில் சாமான்யர் இதுவரை பார்த்திராத ஏலியன்கள், வளி-அறிவு-ஜீவராசிகள் இருப்பதாய் ஏன் நம்பலாம்? எவ்வகைத் தேடலுக்கும் இதுவரை தென்படாத இவர்கள் இருப்பதாய் மட்டும் ஏன் நம்பவேண்டும்? அறிவியல் சிந்தைக்கே ஒவ்வாத செயலாய் படுகிறதே. ஏன் ஒப்புக்கொள்கிறோம்?

 

இக்கேள்விகள் பேய், பிசாசு, ஏலியன்கள் பற்றியவைமட்டுமில்லை. அறிவியல் சிந்தைக்கும் அதை புரிந்துகொள்ள முற்படும் சாதா /மசாலா ரோஸ்ட் சிந்தைக்கும் நடக்கும் ஆதர்ச¹ சம்பாஷணையின் ஒரு சரடு.

சற்று விஷயம் தெரிந்தவர்கள் இவ்வகைக் கேள்விகளின் சாராம்சத்தை அறிவியலாளர்களிடம் வேறுவகையாகக் கேட்பார்கள். பேய் பிசாசு இருப்பதை நம்ப மறுக்கிறீர்கள், ஆனால் நியூட்ரினோ, ஹிக்ஸ் போஸான் என்றெல்லாம் கண்ணுக்குத் தெரியாத, இதுவரை யாருமே பார்த்திராத, அணுவிலும் சிறிதான துகள்களை இருப்பதாய் நம்பி Large Hadron Collider என்று பெரிய உந்திகள் வைத்து துகள்களை முடுக்கி, மோதவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறீர்களே.

(ஹிக்ஸ் போஸானை விஞ்ஞானிகள் ‘கண்டு’விட்டதாய் சென்றவருடம் செய்திகள் வந்தது நினைவிருக்கலாம். விஞ்ஞானிகள் ‘கண்றாவித் துகள்’ என்றதை ‘கடவுள் துகள்’ என்கிற ஊடகத்திரிபாய் வெளிப்படுத்தி அதைவைத்து பகுத்தறிவிற்கு ஒவ்வாத தங்கள் சிந்தனைகளை ஏற்றிச்சொல்லி ஜல்லியடித்ததை நாம் “அறிவியலும் சந்தை அறிவியலும்” கட்டுரையில் விவரித்திருந்தோம். ஞாபகமிருக்கலாம்.)

 

rev_t_bayes_1701_1761_portraits_faces_pe

 

ஒரு புதிய கோணத்தில் இவற்றை விவாதிப்போம். தெளிவு பிறக்கலாம். ஏலியன்கள், மற்றும் பேய் பிசாசுகள், மனிதப்புலன்களுக்கு நேரடியாகக் கைகூடாத இயற்கை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு சுருக்கமான பதில்: பேய்ஸ் தியொரெம் (Bayes theorem).

ரெவரெண்ட் தாமஸ் பேய்ஸ் தன் கோட்பாட்டின்மூலம் நிகழ்தகவு (probability) கணிதவியலில், ‘நிபந்தனையுள்ள நிகழ்தகவுகள்’ (கண்டிஷனல் பிராபபிலிட்டீஸ்) எனும் கருத்தாக்கத்தை வைத்து, புதிய உள்ளொளிபெற்ற திறப்புகளைக் கொணர்ந்தார். ஒரு கருத்தாக்கம் அல்லது நிகழ்வின் சாத்தியம், புதிய சாதக, பாதகச் சான்றுகள் அல்லது ருசு உருவாகுகையில், எவ்வாறு மாறுபடும் என்பதை கணக்கிட வல்லது பேய்ஸ் கோட்பாடு. நடக்கக்கூடிய ஒரு நிகழ்வின் நம்பகத்தன்மையை, அதனை பாதிக்கும் பிற நிகழ்வுகளை, தகவல்களை வைத்து, கணித மதிப்பீடாய், அறுதியாக்க, பேய்ஸ் கோட்பாட்டை உபயோகிக்கலாம். பேய்ஸ் கோட்பாட்டின் நிகழ்தகவு கணிதச் சமன்பாட்டு வடிவை மேலும் விளக்கிப் பயமுறுத்தப் போவதில்லை. பேய் பிசாசே தேவலாம் என்று நீங்கள் கருதிவிடலாம். வார்த்தைகளிலேயே விளக்கப்பார்ப்போம்.

பிரசித்திபெற்ற வானியலாளர் மற்றும் அறிவியல் உபாசகர் கார்ல் ஸேகன் (Carl Sagan) தன் ‘காஸ்மாஸ்’ (Cosmos) புத்தகத்தில், “அசாத்தியமான சாதிப்புகளுக்கு, அவற்றின் நம்பகத்தன்மையை உயர்த்த அசாதாரணமான சாட்சியங்கள் வேண்டும்,” (Extraordinary claims demand extraordinary evidence) என்றார். இக்கூற்றை கார்ல் ஸேகன் தான் முதன்முதலில் சொன்னாரா என்பது நிச்சயமில்லை. ஆனாலும் முதலில் அறிவியல் சிந்தைக்குகந்த சொலவடையாய் பரிச்சயமாக்கியவர் என்று எடுத்துக்கொள்வோம். இக்கூற்றே ‘பேய்ஸ் தியொரெ’த்தின் சாராம்சம் எனலாம்.

உதாரணமாக எங்கள் வீட்டில் தினம் ஒன்றரை லிட்டர் பாக்கெட் பால் வாங்குவோம். இதை, விடியற்காலை நாங்கள் எழுவதற்கு முன்பே, வாசலில் மூன்று அரை லிட்டர் பாக்கெட்டுகளாக பால்காரர் போட்டிருப்பார். தூக்கக்கலக்கத்துடன் மரவட்டையையெல்லாம் மிதித்து (செருப்புகாலுடந்தான்) தடுமாறியபடி பொறுக்கிக்கொள்வேன். தினம் எழுந்து காலையில் வாசலுக்கு வந்தால் மூன்று பால் பாக்கெட் இருக்கும் என்பது எனக்குப் பரிச்சயம். ஆச்சர்யம் இல்லை. எனக்கு இது இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்க்கக்கூடிய, சாதாரண சாத்தியம் உள்ள நிகழ்வு.

ஆனால், ஒரு காலை வாசலில் ஐந்து பால் பாக்கெட்டுகள் இருக்கிறது என்போம். நான் எதிர்பாராத, ஆச்சர்யமான நிகழ்வு இது. எப்படி? இதை விளக்க எனக்கு போதிய நம்பத்தகுந்த சாத்தியங்கள் வேண்டும். உதாரணமாக, ஒருவேளை பால்கார பையன் புதுசோ, எங்கள்வீட்டிற்கு எவ்வளவு என்று அளவு தெரியாமல் போட்டுவிட்டானோ? இருக்கலாம். கடையில் பால்காரரைச் சந்தித்து விசாரிக்கையில்தான் இந்த விளக்கத்தின் உண்மை தெரியும். அதுவரை காரணம் நிச்சயம் இல்லை. அதனால் இது அசாத்தியமாக நடக்கக்கூடியாதா, உளவியல் ரீதியாக, மனித இயல்பாக, இது நடக்கக்கூடியதா, ஊரில் மற்றவர்களுக்கு இப்படி நடக்கலாமா, போன்றவைகளை வைத்துதான் என்னுடைய இந்த விளக்கத்தின் நம்பகத்தன்மையை உயர்த்தி, ஒப்புக்கொள்ளமுடியும். மறுப்பு தெரிவிக்க நான் கூறும் விளக்கத்தைக்காட்டிலும் வலுவான சாத்தியங்களுடனான ஒரு விளக்கத்தை, காரணத்தை ஐந்து பால் பாக்கெட் இருப்பதற்காக நீர் கூற வேண்டும். அதுவரை, என் விளக்கம் ஓரளவு ஒப்புக்கொள்ளக்கூடியதே.

 

carl_sagan_1934_1996_science_universe_sp

 

மறுப்பாக, நீர், ஒரு வேளை பக்கத்து வீட்டிற்குப் போடும் பாக்கெட்டுகளையும் சேர்த்து உங்க வீட்டுக்குப் போட்டுவிட்டுபோயிருக்கலாம் என்று விளக்கம் கொடுத்தால், அதுவும் சாத்தியமே. என் விளக்கத்தையும் உங்கள் விளக்கத்தையும் எப்படிச் சரிபார்த்து ஒன்றின் நம்பகத்தன்மையை (அதன் நிகழ்தகவின் மதிப்பை) உயர்த்துவது?

இதற்கு மேலும் நமக்கு தகவல்கள் வேண்டும். இதை ‘முன் நிகழ்தகவு’ (prior probability) என்பார்கள். அதாவது, எங்கள் பக்கத்தில் வீடே இல்லை என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் கூறும் விளக்கம் உடனே சரியில்லை என்றாகிவிடும். அதாவது, நீங்கள் கூறும் விளக்கத்திற்கான ‘முன் நிகழ்தகவு’ மிகக்குறைவு. பூஜ்ஜியம் (நிச்சயமாய் நடக்கும் செயலுக்கு நிகழ்தகவு மதிப்பு ஒன்று). இல்லாத வீட்டிற்கு பால் பை ஏன் போடவேண்டும். இதனால் நான் கூறிய விளக்கமான, பால்காரப்பையன் தவறுதலாகப் போட்டுவிட்டிருப்பான் என்பதன் நம்பகத்தன்மை உயருகிறது. ஆனால் ஊர்ஜிதம் இல்லை.

 

aliens_et_ufo_extra_terrestrial_android_

 

 

ஏனெனில் அடுத்த விளக்கமாய் நீர் பால்காரப்பையன் மூன்றுதான் போட்டிருக்கிறான், ஒருவேளை குரங்கு வேறு எங்காவதிருந்து இழுத்துவந்து இரண்டு பாக்கெடுக்களை போட்டிருக்கலாம் என்று புதிய விளக்கம் கூறலாம். இது அசாத்தியமான விளக்கம். ஊரில் மற்ற இடங்களில் விசாரித்தால் வீட்டில் இவ்வாறு நடப்பதாக முன்னுதாரணம் இருக்காது. அதனால் இந்த விளக்கம் உடனே பொய் என்று கூறுவதா? முடியாது.

எங்கள் வீடு இருப்பது குரங்கு மான் போன்ற விலங்குகள் பெருவாரியாக இருக்கும், சுதந்திரமாக மனிதர்களுடன் வெளியில் உலாவிப்பழகும், இடத்தில்தான். அதனால் குரங்குகள் உணவிற்காக இப்படி எங்கள் வீடுகளில் புகுந்து சூறையாடிவிடுவது நடப்பதே. அதனால் உம்முடைய புதிய விந்தையான விளக்கம் எனக்கு அவ்வளவு விந்தையில்லை.

ஆனாலும், அடுத்த கேள்வியாக மற்றவர் வீட்டிலிருந்து பால் பாக்கெட்டை தன் உணவாக எடுத்துவந்த குரங்கு, என் வீட்டில் மற்ற பாக்கெட்டுகளுடன் ஏன் போடவேண்டும். எங்கள் மூன்று பாக்கெட்டுகளையும் சேர்த்தல்லவா எடுத்துச்சென்றிருக்கவேண்டும்? இந்த கேள்விக்கான விடை நம்பகமாகக் கிடைக்காத வரை, உம் விளக்கம் மொத்தமாக பொய்யுரையில்லையெனினும், ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருக்காது. அவ்வகையில் நடந்திருப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு என்பதால், இதன் நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்களை நீர் சொல்ல வேண்டும்.

கையில் ஏற்கனவே குரங்குகள் இதுபோல் வேறு வீட்டில் செய்திருப்பதற்கான ‘விடியோப்படம்’ வைத்திருந்தால், அது அசாத்தியமான சாட்சியம். உடனே நீர் கூறும் புதிய விளக்கம், விந்தையாக இருந்தாலும், பொதுவில் நடக்காத, அசாத்தியமான நிகழ்வாக இருந்தாலும், ஒப்புக்கொள்ளும் நம்பகத்தன்மையை பெறுகிறது (உம் விடியோப்படம் ஒரிஜினல் என்று நம்புவோம்).

ஆனாலும் வாசலில் கிடக்கும் ஐந்து பால் பாக்கெட்டுக்கு அதுதான் சரியான விளக்கம் என்று இப்போதும் கூறமுடியாது. ஏனெனில் நான் கூறிய விளக்கம் பொதுவானது. மிகச்சாத்தியமானது. அதை முறியடிக்கும் அளவிற்கு உங்கள் விந்தை விளக்கம் நம்பகத்தன்மையை பெறவில்லை. அதனால், இரண்டு விளக்கமும் விளையாட்டிற்கு உண்டு. யார் கெலித்தார்கள் என்று நான் பால்காரரைப் பார்த்து விசாரிக்கும்வரை தெளிவாகாது.

போதும். இப்படிச் சிந்திப்பதின் கணித சாராம்சம்தான் பேய்ஸ் கோட்பாடு . ஒரு நிகழ்வின் ‘முன் நிகழ்தகவு’ (prior probability) எவ்வளவு அதிகமோ, அவ்வளவு அதிகம் அந்த நிகழ்வின் மூலம் அடுத்து நடக்கக்கூடிய நிகழ்வின் சாத்தியம் அல்லது அசாத்தியம் (அதாவது, posterior probability, ‘பின் நிகழ்தகவின்’ மதிப்பும் அதிகரிக்கும்).

இப்போது முன்னர் கேட்ட கேள்வியை பரிசீலிப்போம். பேய் பிசாசுகள் மனிதர்கள் இல்லை என்பது திண்ணம். அவைகளை உலகில் அநேகர் தினநிகழ்வாய் பார்க்காதிருக்கையில், நான் பார்த்தேன் என்றால், அது அசாத்தியமான நிகழ்வு. அதற்கான நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும். இதுவரை நமக்குக் கிடைக்கக்கூடிய சாட்சியங்கள் அவ்வளவு அசாத்தியமானது அல்ல என்று நிரூபிக்கமுடிகிறது. பேய் பிசாசுகளை பார்த்ததற்கான தருணங்களை வேறு எளிய காரணங்களால் விளக்கமுடியும் என்று தெரிகிறது.

meet_the_foreigner_alien_calvin_hobbes_c

 

ஒரு உபகதை. பிற்காலத்தில் அமேரிக்க ஜனாதிபதியான தாமஸ் ஜெஃப்ஃபெர்ஸன் (Thomas Jefferson) ஒருமுறை சொன்னது: “எரிகற்கள் இருக்கிறது என்று நம்புவதைவிட, இரண்டு பேராசிரியர்கள் பொய் சொல்லியிருக்கலாம் என்று நம்புவது எனக்குச் சரி”. வானிலிருந்து எரிந்துகொண்டே கற்கள் வந்து விழுந்தன என்று இரண்டு பேராசிரியர்கள் தாங்கள் நேரில் பார்த்த சாட்சியாக அமேரிக்காவில் நாளிதழில் பேட்டியளித்தனராம். இதைக் கேள்விப்பட்டு ஜெஃப்ஃபெர்ஸன் கொடுத்த பதிலடி அது.

பதினெட்டாம் நூற்றாண்டில் எரிகற்களைப்பற்றி மனிதகுலம் விரிவாக அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு நிகழ்வின் சாத்தியம் கிடையாது என்றே நினைக்கக்கூடும். அதைக்காட்டிலும், இரண்டு பேர்வழிகள் ‘பதினைந்து நிமிடப் புகழுக்காக’ பொய் சொல்லியிருக்கலாம் என்பதன் சாத்தியமே அதிகம். ஆனாலும், பேராசிரியர்கள் கூறியது நிஜம் என்று வரலாற்றில பிறகு கண்டோம்.

இன்று எரிகற்கள் விழுவதை பார்த்து நம் குழந்தைகள் நம்மிடம் சொன்னாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவர்களை நம்புவோம். இதுவரை நாம் அறிவியல் மூலம் எரிகற்களைபற்றி அறிந்துகொண்ட தகவல்கள், இந்த நிகழ்வு நடக்கலாம் என்பதற்கான ‘முன் நிகழ்தகவை’ அதிகமாகிவிட்டது. ஆனால், இன்றும் பேய் பிசாசுகள் அசாத்தியமான நிகழ்வே. இதுவரை அறிந்துகொண்டுள்ள அறிவியல் கட்டுமானத்திற்குள் வருவதற்கான ‘முன் நிகழ்தகவு’ மிகவும் கம்மியாகவே இருக்கிறது.

அணுக்கருத் துகள்கள், நியூட்ரினோக்கள், ஹிக்ஸ் போஸான்கள் என்று இயற்பியலாளர்கள் தேடும் வஸ்துகளுக்கும், பேய் பிசாசுகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் இதுதான். குருட்டாம்போக்கில் கண்ணுக்குத் தெரியாத துகள்களை இயற்பியலாளர்கள் தேடிக்கொண்டிருக்கவில்லை. இவ்வகைத் துகள்கள் இருப்பதற்கான ஒரு இயற்பியல் கோட்பாடு, கட்டுமானம் ஏற்கனவே இருக்கிறது. இதைச் சார்ந்த பல துகள்களை ஏற்கனவே அறிவியல் விதிகளையும் அவற்றின் நீட்சிகளையும் வைத்துக் கண்டுள்ளனர்.

உதாரணமாக, ‘பாஸிட்ரான்’ (positron) என்பது எலக்ட்ரானுக்கு (electron) எதிர் குணங்கள் கொண்ட அணுக்கருத் துகள். இது இயற்கையில் உண்டு என்பதாக முதலில் பால் டிராக் (Paul Dirac) என்பவரின் கோட்பாடு– கூற்று – அனுமானித்தது. அன்றுவரையிலான பௌதிக அறிவுத்துறையின் விதிகளை மீறாவண்ணம்  அதே சமயம் அவற்றின் விந்தையான நீட்சியாக வெளிவந்த இந்தக் கூற்றின் நம்பகத்தன்மையினால் இந்தத் துகளை அணுக்கருத் துகள் முடுக்கிகளின் (particle accelerators) பரிசோதனைகளில் தேடத்துவங்கினார்கள். கண்டார்கள். பால் டிராக் நோபல் பரிசு வென்றார்.

இந்த உதாரணத்தில் கவனிக்கவேண்டியது, அணுக்கருத் துகள்கள் அல்லது இவ்வகை ‘புதிய’ துகள்கள் நமக்கு இதுவரை தெரிந்த பௌதிகப் புரிதலுக்குட்பட்டே இருக்கிறது. இவை இருக்கலாம் என்பதற்கான சாத்தியங்கள், ஏற்கனவே குரங்கு பால் பாக்கெட் போட்டிருக்கலாம் என்று கூறினோமே அதுபோல, சற்று நடைமுறைக்கு விந்தையான விளக்கங்களை வைத்து அமைந்திருந்தாலும், கட்டுக்கோப்பான அறிவியல் சிந்தனைக்குள்ளேயே வருகிறது.

கருந்துளைகள் (black holes), சரடுக் கோட்பாடு (string theory), குவாண்டம் கணினி (quantum computers), நேனோபுகள் (nanobes), மாற்று உயிர் (alternate life – ஏற்கனவே சில கட்டுரைகளில் விவரித்துள்ளோம்) என்று எவ்வளவுதான் விந்தையான விஷயங்களாக இருந்தாலும், இவை அறிவியலின் விதிகளைச் சார்ந்தே தோன்றிய சிந்தனைகள்.

ஆனால், வேறு உதாரணமாக, டெலிபதி (telepathy) உண்டா என்றால், உடனே இருப்பதாய் ஒப்புக்கொள்ளமுடியாது. அப்ப பொய்யா என்றால், மொத்தமாக இல்லை. ஆனால், உண்மை என்பதற்கு அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும்.

ரூப்பர்ட் ஷெல்டிரேக் (Rupert Sheldrake) என்பவர் (2003இல் வெளியான) The sense of being stared at: And other aspects of the extended mind என்கிற தன் புத்தகத்தில் டெலிபதியை விளக்க முற்பட்டு ஒரு அறிவியல் கோட்பாட்டை, பொய்யாக்க முடிகிற அனுமானங்களை வைத்து அமைக்க முனைந்துள்ளார். ஆர்த்தர் கிளார்க் (Arthur Clarke), பால் டேவிஸ் ( Paul Davies) போன்ற அறிவியல் புனைகதை மற்றும் உபாசக எழுத்தாளர்கள் இம்முயற்சியை விவரித்து சிலாகித்துள்ளனர். ஆனால் இந்தக் கோட்பாட்டை இன்னமும் கணிதக் கட்டமைப்பிற்குள் கொண்டு வர இயலவில்லை. அறிவியல் கருத்துலகு ஏகமனதாய் ஒப்புக் கொள்ளவில்லை.

 

பௌதிக விதிகளை வைத்து, டெலிபதியை விளக்க கணித மாதிரி (மாடல்) ஒன்றை நாளை செய்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாதிரியை வைத்து டெலிபதி யார் யாருக்கிடையே நடக்கும், முன்னரே அறிமுகமானவரிடையே மட்டும்தானா (ஏன்), இல்லை ‘ரயில் ஸ்நேக’ உறவுகூட இல்லாத, புதிதாகச் சந்திக்கும் இருவரிடையே நடக்குமா, டெலிபதிக்கு மொழி ஒரு தடையா, தூரம் தடையா, இப்படி பல கேள்விகளுக்கு நமக்கு இதுவரை தெரிந்துள்ள அறிவிற்குட்பட்டு அல்லது அதன் நீட்சியாய், விளக்கங்களை கொடுக்கமுடிகிறது என்போம். அதன் பிறகு ‘விளங்கமுடியாக் கவிதையிலிருந்து’ டெலிபதி ஒப்புக்கொள்ளக்கூடிய, புரிகிற கிவிதையான, சாதாரண விஷயமாகிவிடும்.

mind_transfer_nfc_iphone_app_human_conne

 

இதெல்லாம் சரி, ஏலியன்கள் விஷயத்தில் எப்படி? பேயஸ் தேற்றத்தை² ஏலியன் - கள் இருக்கிறார்களா, நம்பலாம என்ற மேட்டருக்கு பிரயோகித்தால், உடனே கேட்கவேண்டிய ஆதாரக் கேள்வி: ஒரு வளி-அறிவு/ஜீவன் பிரபஞ்சத்தில் எங்கோ இருக்கிறது என்பதற்கான முன்-நிகழ்தகவு (prior probability) என்ன? நேர்மையான பதில்: ஒருவருக்கும் தெரியாது.

ஆனால் முன்னர் குரங்கு பாக்கெட் பால் கொண்டு போடும் உதாரணத்தில் விளக்கியதுபோல, அவை அப்படி செய்வதை விடியோ எடுக்கத்தவறி ஆனால் நேரில் பார்த்திருக்கிறீகள், மற்றவர் நம்பவில்லை என்றால், உங்கள் நிலை என்னவொ, அதுபோலத்தான் ஏலியன்களை நீங்கள் நம்புவதும் நம்பாததும்.

ஏனெனில், பிரபஞ்சத்தில் அறிவு-ஜீவராசிகள் இருக்கலாமா என்றால், நிச்சயம் இருக்கலாம், நாம் இருக்கிறோமே. என்பீர்கள். அதனால் நிச்சயம் ஏலியன்கள் இருக்கலாம். அதற்கான முந்நிகழ்தகவு கிட்டத்தட்ட ஒன்று என்பீர்கள். ஆனால், உங்களுக்கே தெரியும், கணிதத்தில் ஒரு புள்ளி வழியாக மட்டும் எந்த வகை வரைகோடுவேண்டுமானாலும் வரையலாம். நாம் இருக்கிறோமே என்கிற புள்ளிக்கு, அது சும்மா பிரபஞ்சத்தின் தற்செயல் அதிர்ஷ்ட நிகழ்வு, இல்லை கடவுள் செயல், இல்லை ‘பிரபஞ்சத்தில் நீ மட்டும்தான் அறிவுள்ள இனம்’, இப்படி எந்தக் கோடு வேண்டுமானாலும் வரையலாம். சம நிகழ்தகவுகொண்ட (equally likely events) சாத்திய விளக்கங்களாய். சுருக்கமாக, “ஒண்ணு இங்கருக்கு, இன்னொன்னு எங்கடா, இன்னொன்னு தாங்க இது…” என்கிற கௌண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடியாகிவிடும்.

அப்ப, ஏலியன்கள் இல்லையா என்றால், அதற்கும் பதில் நாம் இருப்பதை வைத்துமட்டும் கூற முடியாது. இதனால், ஏலியன்கள் தேடல் விரயம் என்று உறுதியாக சொல்லமுடியாது. இல்லை என்பதற்கான சாட்சியங்களோ, அறிவியல் கட்டுமானங்களுட்பட்ட நிரூபணங்களோ நம்மிடம் இல்லையே.

பேய்ஸ் தியரம் (Bayes theorem) தரும் அறிவார்ந்த வாதப்படி ஏலியன்கள் புரட்டல்ல. பேய் பிசாசுகள் போல அறிவியல் கட்டுமானங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. ஏலியன் கள் ஒன்று சுத்தமாக கிடையாது. இல்லை பிரபஞ்சத்தில் எங்கும் விரவி, அநேகம் இருக்கின்றனர். விரைவில் சந்திக்கப்போகிறோம். இந்த இரண்டு நிலைப்பாட்டில் ஒன்றைத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டிவரும். காரணங்களை விரிவாய் விளக்குவதற்கு தனிக் கட்டுரைகள் தேவை. ஆனால் இதில் நிச்சயம் எது என்றால், ஏலியன்களுக்கான தேடல் வழிமுறைகள் அனைத்தும் அறிவியலுக்கு ஒப்புமையானதே. லேட்டஸ்ட் தொழில்நுட்ப உதவியுடன் (ரேடியோ தொலைநோக்கி போன்ற), தேடல்களை அமைத்துள்ளோம்.

‘உளன் எனில் உளன், அலன் எனில் அலன்,’ என்று நம்மாழ்வார் கடவுளுக்குச் சொன்னது அப்படியே ஏலியன்களுக்குப் பொருந்துகிறது.

பேய் பிசாசுகளைப் பொறுத்தவரையில் அறிவியல் சிந்தையில் அவை நிஜம், உண்மை, என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை பேயஸ் தியரத்தின் விவரணைப்படிச் சொன்னால், அவற்றின் ‘முன் நிகழ்தகவு’ மிகவும் சிறியது (பூஜ்ஜியத்திற்கு அருகில்). மூட நம்பிக்கைகள் என்பதை விட, பொறுப்புகளிலிருந்து விடுபட, நிஜங்களின் வீரியத்தைக் குறைக்க, கடந்தகாலப் பிழைகளுக்கு வடிகாலாக, முக்கியமாக-மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லாத-அறியாமையில், இப்படிப் பல காரணங்களுக்காக நம்மில் பலர் அருவங்களின் இருத்தலை நம்பலாம். இவ்வகை மனச்சோம்பலில் இருந்து நம்மால் வெளிவரமுடியும். ஒரு தொடக்கமாய், பேய் பிசாசுகளைப் பொறுத்தமட்டில், கட்டுரைத்தொடக்கத்தில் உள்ள ‘சஷ்டி கவசம்’ வரிகளில் ‘அடியனைக் கண்டால்’ என்பதற்கு பதில் ‘அறிவியலைக் கண்டால்’ என்று மாற்றியும் செபிக்கலாம்.

 

 

http://solvanam.com/?p=26539

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம் :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.