Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களை இந்தியா கைவிடாது என்ற பசப்பு வார்த்தையை நம்ப மக்கள் தயாராக இல்லை -

Featured Replies

Manmohan_TNA-150x150.jpg

Manmohan_TNA-150x150.jpg13ஆவது திருத்த சட்டத்தில் உள்ள அதிகாரங்களை குறைத்தல், மாகாணசபை முறை இரத்து செய்யப்பட வேண்டும் என தென்னிலங்கை சிங்கள இனவாத தரப்புக்கள் போர்க்கொடி எழுப்பியிருக்கும் வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடில்லி செல்கின்றனர் என செய்திகள் பரப்பட்டிருந்தாலும் உண்மை அதுவல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த பயண ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒப்புக்கொண்டிருந்தார்.

புதுடில்லி சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷியை சந்தித்தனர். மன்மோகன் சிங்கை சந்தித்தனர். வழமைபோலவே ஈழத்தமிழர்களை இந்தியா ஒரு போதும் கைவிடாது என மன்மோகன் சிங் கூறினார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஈழத்தமிழர்களை இந்தியா கைவிடாது என மன்மோகன் சிங்கும் இந்திய தலைவர்களும் தங்களிடம் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவது இது முதல்தடவையல்ல. காலத்திற்கு காலம் இந்தியா செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதைத்தான் தமிழ் மக்களுக்கு கூறி வந்தனர்.

இந்தியா மீது இத்தனை அபார நம்பிக்கை வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியா எப்போது தமிழர்களை காப்பாற்றியது என்பதை தங்களை நம்பியிருக்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கு இதுவரை சொன்னதே இல்லை.
சம்பந்தன் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் இந்தியாவை நம்பியிருந்தாலும் இந்தியா காலத்திற்கு காலம் ஈழத்தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா ஆயுதப்பயிற்சி வழங்கிய போது இந்தியா எங்களை காப்பாற்றும் உதவி செய்யும் என ஈழத்தமிழர்கள் நம்பினார்கள். அந்த ஆயுதப்பயிற்சி என்பது முழுக்க முழுக்க தனது நலனுக்காகவே என்பதை பிற்பட்ட காலத்தில் தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

1987ல் உணவு பொட்டலங்களை இந்தியா யாழ்ப்பாணத்தில் போட்ட போது அந்த மகிழ்ச்சியும் ஆரவாரமும் அடங்கு முன்னரே அதே அப்பாவி தமிழ் மக்கள் மீது இந்தியா போட்ட குண்டுகளை தமிழ் மக்களால் எப்படி மறக்க முடியும்.
அமைதிப்படை என்ற பெயரில் தமிழர் பிரதேசத்தில் குவிக்கப்பட்ட இந்திய ஆக்கிரமிப்பு படைகள் ஈழத்தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் எண்ணில் அடங்காதவை. முள்ளிவாய்க்கால் வரை சிறிலங்கா படைகள் தமிழ் மக்களை கொன்றொழித்ததற்கு எந்த வகையிலும் குறையாத வகையில் இந்திய படைகள் படுகொலைகளை புரிந்திருந்தன.

இந்திய இராணுவத்தை தவிர உலகில் எந்த ஒரு இராணுவமும் நோயாளர் தங்கியிருக்கும் வைத்தியசாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது கிடையாது. சிறிலங்கா படையினர் கூட வான்வழியாகவும் எறிகணைகள் மூலமும் வைத்தியசாலைகளில் தாக்குதல் நடத்தினார்களே தவிர நேரடியாக வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள், தாதிகள் நோயாளர்கள் என அனைவரையும் சுட்டுக்கொன்றதில்லை. ஆனால் ஈழத்தமிழர்களை பாதுகாக்க என வந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாண போதான வைத்தியசாலைக்குள் புகுந்து மிகப்பெரிய மனித படுகொலையை புரிந்தது.

யாழ் போதனா வைத்தியசாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த இந்திய படைகள் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் 22ஆம் திகதிகளில் நடத்திய வெறியாட்டத்தில் இலங்கையில் மிகச்சிறந்த வைத்திய நிபுணர்களாக இருந்த வைத்திய கலாநிதி சிவபாதசுந்தரம் வைத்தியகலாநிதி கே.பரிமேலழகர், வைத்தியகலாநிதி கே.கணேசரத்தினம் உட்பட மூன்று தாதிகள், உட்பட 15 வைத்தியசாலை ஊழியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அது மட்டுமன்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் அவர்களுடன் தங்கியிருந்த உறவினர்கள் என 70க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இந்திய படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  அதிலிருந்து 1990ல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறும் வரை நடத்திய படுகொலைகள் மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள் பாலியல் பலாத்காரங்கள் எண்ணில் அடங்காதவை.

இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னரும் தமிழ் மக்களை அழிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்திற்கு பல்வேறு வழிகளிலும் இந்தியா உதவி வந்தது.
2009ல் வன்னியில் தமிழ் மக்கள் மிகப்பெரிய அவலத்தை சந்தித்த போதும் அவர்களை இந்தியா காப்பாற்றும் என்ற நம்பிக்கை சம்பந்தன் போன்ற தமிழ் தலைவர்கள் அப்பாவி தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தார்கள். அதை வன்னியில் இருந்த மக்களும் மலைபோல் நம்பினார்கள். ஆனால் இந்தியா வன்னியில் இருந்த தமிழ் மக்களை அழிப்பதற்கே உதவியது.

சிறிலங்கா இராணுவத்திற்கும் அரசுக்கும் ஆயுத உதவி ஆலோசனை பயிற்சி என பல்வேறு வகையிலும் உதவிய இந்தியா வன்னி யுத்தத்தில் நேரடியாக தனது படையினரையும் இறக்கியதாகவும் தகவல்கள் உண்டு.
யுத்தம் நடந்த காலத்திலும் சரி இப்போதும் சரி சிறிலங்கா படைகளுக்கான பயற்சிகளை இந்தியா வழங்கி வருகிறது. தமிழகத்திலும் இந்தியாவிலும் சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி வழங்க கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உட்பட தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் புதுடில்லி மத்திய அரசை கோரி வருகின்றனர். ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

ஆனால் இந்தியாவின் வேறு மாநிலங்களில் மட்டுமல்ல தமிழகத்திலும் இன்றுவரை சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இந்த சின்ன விடயத்தில் கூட தமிழக கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு இந்திய மத்திய அரசு தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இந்த லட்சணத்தில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா தீர்வை பெற்றுத்தரும் என தமிழகத்தில் உள்ளவர்களோ அல்லது இலங்கையில் இருக்கும் சம்பந்தன் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நம்புவது முட்டாள் தனமாகும்.

தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளையோ அல்லது இலங்கையில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளையோ இந்திய மத்திய அரசு கணக்கில் எடுப்பதில்லை என்பதுதான் யதார்த்தம்.
யுத்தம் முடிந்த பின்னர் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு என 50ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக்கொடுக்கும் என பெரும் எடுப்பில் பிரசாரம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த இந்திய வீடமைப்பு திட்டம் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்கள முஸ்லீம் குடியேற்றங்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல தடவை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்தியா இதனை கணக்கில் எடுக்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த வகையிலும் யுத்தத்தால் பாதிக்கப்படாத சிங்கள மற்றும் முஸ்லீம் குடும்பங்களுக்கே இந்த இந்திய வீடமைப்பு திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைக்கிராமமான கெவிளியாமடு கிராமத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்த சிங்களவர்கள் திட்டமிட்ட வகையில் குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடக்கு கிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு இப்போது இந்தியாவும் உதவி செய்து வருகிறது. கெவிளியாமடுவில் குடியேற்றப்பட்ட வெளிமாட்ட சிங்களவர்களுக்கு இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஏறாவூர் பகுதியை சேர்ந்த முஸ்லீம்கள் உன்னிச்சை புல்லுமலை பகுதிகளில் தற்காலிகமாக தங்கியிருந்து விவசாயம் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். 1990களில் அவர்கள் இடம்பெயர்ந்து ஏறாவூருக்கு வந்த போது அவர்களுக்கு ஈரான் நாட்டின் உதவியுடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. தற்போது இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழும் இவர்களுக்கு புல்லுமலை பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஈரான் நாட்டின் உதவியுடன் வீடுகளை பெற்ற முஸ்லீம்களுக்கு மீண்டும் இந்திய உதவியிலும் வீடுகள் கிடைத்திருக்கிறது. ஆனால் போரினால் பல தடவை இடம்பெயர்ந்து வீடுவாசல்களை இழந்த தமிழர்கள் இந்திய உதவி திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் அவர்களின் பேச்சு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை.

வவுனியாவிலும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கு இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது

எனவே இந்திய வீடமைப்பு திட்டம் என்பது வடக்கு கிழக்கில் தமிழ் குடிப்பரம்பலை குறைத்து சிங்கள முஸ்லீம் குடியேற்றங்களை அதிகரிப்பதற்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது
ஈழத்தமிழர்களை இந்தியா கைவிடாது என மன்மோகன் சிங் சொன்னார், அவர் சொன்னார் இவர் சொன்னார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் காலத்திற்கு காலம் கூறி வருகிறார்களே ஒழிய இந்திய தரப்பினர் நேரடியாக இதுவரை சொன்னது கிடையாது.

இந்திய அரசின் உண்மை நிலைப்பாடுகள் என்ன என்பது பற்றி, தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மயக்க நிலைமை நிலவுகின்றது. இது முடிவுக்கு வரவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித்தலைவர் மனோ கணேசனும் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை நடத்தி முடித்த இந்தியா, தேசிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருமா, இல்லையா என தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள், 13ம் திருத்தம் தொடர்பில் இந்திய அரசாங்கம் தனது உறுதியான நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய வேளை வந்து விட்டது என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.

என்னைப் பொறுத்தவரை இந்தியா தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்காவிட்டாலும் செயலழவில் சிறிலங்காவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது.  13ஆவது திருத்த சட்டத்தை நீக்கி மாகாணசபை முறையை முழுமையாக நீக்கி அதிகாரப்பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என சிறிலங்கா அறிவித்தாலும் இந்தியா எதுவும் பேசப்போவதில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை சிறிலங்கா அரசாங்கம் இரத்து செய்த போது பலரும் எதிர்பார்த்தார்கள் இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என.
ஆனால் இந்தியா வழமை போலவே மௌனம் சம்மதம் என்பது போல அமைதியாக இருந்து விட்டது.

இப்போது தென்னிலங்கை இனவாதக் கட்சிகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கின்றன. அதற்கு அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அவரின் சகோதரர்களான பசில் ராசபக்ச, கோதபாய ராசபக்ச போன்றவர்களும் முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

அவ்வாறு நீக்கப்பட்டு மாகாணசபை ஒழிக்கப்பட்டாலும் இந்தியாவின் மௌனம் தொடரவே செய்யும்.

13 ஆவது திருத்த சட்டமோ அல்லது மாகாணசபையோ தமிழ் மக்களுக்கான அரசியல் நிரத்தரத்தீர்வாக அமையாது என்பதை இச்சட்டம் கொண்டுவரப்பட்ட 1987ஆம் ஆண்டிலேயே உணரப்பட்டது. எனினும் மாகாணசபையை ஏற்றுக்கொண்ட இந்திய ஆதரவுக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட ஒரு வருடத்தில் மாகாணசபையினால் எதையும் செய்ய முடியாது என்று வரலாற்றையும் நாம் மறந்து விட முடியாது.

எனவே இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எந்த காலத்திலும் கைகொடுத்ததும் இல்லை, காப்பாற்றியதும் இல்லை, எதிர்காலத்திலும் அவ்வாறான ஒரு அதிசயம் நிகழாது என்பதை சாதாரண அப்பாவி ஈழத்தமிழ் சனங்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இந்தியாவை நம்பி புதுடில்லிக்கு காவடி எடுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உணராமல் இருப்பதுதான் மிகப்பெரிய கவலை.

ஈழத்தமிழர்களை இந்தியா ஒரு போதும் கைவிடாது என்ற பசப்பு வார்த்தைகளை இனியும் கேட்பதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உணர்த்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

(இரா.துரைரத்தினம்)

- See more at: http://www.thinakkathir.com/?p=50927#sthash.IMmGdLio.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.