Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் முதல் அன்னக்கொடி வரை: தலைகளின் தோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல் முதல் அன்னக்கொடி வரை: தலைகளின் தோல்வி

சகோ

 

 

2013ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு முடிந்துவிட்டது. இந்த ஆறு மாதங்களில் 75 படங்கள் வெளியாகிவிட்டன. இவற்றுள் பல சிக்கல்களைக் கடந்து வெளியீட்டுத் தேதி தள்ளிப்போடப்பட்டு, சில இடங்களில் படம் திரையிட்டுப் பாதியில் நிறுத்தப்பட்டு வெளியான விஸ்வரூபம் "பிளாக்பஸ்டர்" என்று சொல்லப்படும் மாபெரும் வசூல் வெற்றியைப் பெற்றிருக்கிறது (இதில் நடித்ததோடு தயாரித்து இயக்கியவரும் கமல்ஹாசன்தான்). விஸ்வரூபத்தையும் சேர்த்து நான்கே படங்களை மட்டுமே இயக்கியவர் என்றாலும் கமல்ஹாசன் ஒரு சிறந்த இயக்குனராகவும் புகழப்படுபவர். இவரது பல படங்களில் திரைமறைவு இயக்குநராக இவர்தான் செயல்படுவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் இருந்துவருவதுண்டு. அந்த வகையில் கமல்ஹாசன் என்னும் இயக்குநருக்கும் இந்த ஆண்டு வெற்றிகரமானதுதான். அவர் இயக்கி நடித்துவரும் அடுத்த படமான விஸ்வரூபம் 2ஆம் பாகம் மீதும் அதிக எதிர்பார்ப்பு குவிந்திருக்கிறது. அந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாகவிருக்கிறது.

 

கமலஹாசனைத் தவிர ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த இயக்குநர்கள் பலரின் படங்கள் இந்த ஆண்டு வெளியாகிவிட்டன. அவற்றில் "தீயா வேல செய்யணும் குமாரு" (சுந்தர்.சி), "கேடி பில்லா கில்லாடி ரங்கா" (பாண்டிராஜ்) ஆகிய படங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. மற்றைய படங்கள் தோல்வியடைந்திருப்பதோடு அந்தந்த இயக்குநர்களின் மற்றைய தோல்விப் படங்கள் ஏற்படுத்திய சலனங்களைக் கூட ஏற்படுத்தத் தவறிவிட்டதுதான் இந்த ஆண்டின் விசித்திரம். ஆனால் இவற்றுள் சில வசூல் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பரவலான பாராட்டுகளைப் பெறத் தவறவில்லை.

 

கடல்: ஓய்ந்த அலைகள்

 

தமிழ்த் திரைப்பட வழக்காடலில் பெரிய படம் என்றால் நட்சத்திர மதிப்பு கொண்ட நாயகன் அல்லது இயக்குநரைக் கொண்ட படம் என்று பொருள். விஸ்வரூபத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனதால் இந்த ஆண்டு வெளியான முதல் பெரிய படம் என்று பிப்ரவரி 1 அன்று வெளியான மணிரத்னத்தின் கடலைத் தான் சொல்ல வேண்டும்.

 

கடல் படத்தின் முன்னோட்டமே பரபரப்பைக் கிளப்பியது. 16 வயதேயான துளசியை உதட்டு முத்தக் காட்சியில் ஈடுபடுத்தியமைக்கு மூத்த பத்திரிகையாளர் ஞாநி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தபிறகு அந்தக்காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டது. படம் வெளியானபோது வழக்கமான மணிரத்னம் படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் சென்றார்கள். கதை வசனம் மட்டுமல்லாது திரைக்கதையிலும் ஜெயமோகன் பெயர் போடப்பட்டது. அதுவும் அவர் பெயருக்குக் கீழேதான் மணிரத்னத்தின் பெயர் இடம்பெற்றது. இதனால் இலக்கிய வாசகர்களும் படத்துக்கு ஆர்வமாகச் சென்றார்கள்.

 

ஆனால் படம் ஜெயமோகனின் ரசிகர்களை மட்டுமே ஈர்த்தது. மணிரத்னத்தின் தோல்விப் படங்களைக்கூட அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்தப் படம் அவரது ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என்பதுதான் சோகம்.

 

நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போரை, கடவுள் மற்றும் சாத்தானின் மூலம் உருவகப்படுத்தி இறுதியில் அன்புதான் வெல்லும் என்ற மேன்மையான கருத்தை வலியுறுத்தியது இந்தப் படம். இந்தச் செய்தியின் மேன்மையைப் புரிந்துகொண்ட தேர்ந்த இலக்கியவாசகர்கள் வரவேற்கவே செய்தார்கள். ஆனால் படத்தைப் படமாக பார்க்கும் ரசிகர்களை ஈர்க்கும் எந்த அம்சமும் படத்தில் சிறப்பாக அமையவில்லை. ஏ.ஆர். ரகுமானின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும் படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தப் படாததாலும் திரைக்கதையின் ஒட்டத்தைப் பாதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாலும் ரசிக்கப்படவில்லை. தாலாட்டுப் பாடல்போல் பாவிக்கப்பட்ட நெஞ்சுக்குள்ள பாடலின் ஒரு சில வரிகள் மட்டும் அதுவும் பின்னணிப் பாடலாக படத்தில் வைக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். அர்ஜுன், அரவிந்த்சாமியின் சிறப்பான நடிப்பும் கைகொடுக்கவில்லை. அறிமுகங்களான கௌதம் கார்த்திக், துளசி ஆகியோர் தங்கள் பங்கைக் குறைசொல்ல முடியாத அளவுக்குச் செய்திருந்தார்கள்.

 

படம் முழுக்க முழுக்க கிறிஸ்தவச் சூழலில் நடப்பது போல் அமைந்திருந்தது. ஒரு சாரார் படம் கிறிஸ்தவ மதப் பிரச்சார நோக்கம் கொண்டது என்றார்கள். சிதிலமடைந்த தேவாலயத்தையும் பிரார்த்தனையில் ஈடுபாடில்லாத மீனவ கிறிஸ்தவர்களையும் காட்டியதற்காக படம் கிறிஸ்த்துவத்தை இழிவுபடுத்துகிறது என்று வேறொரு சாரார் விமர்சித்தார்கள். ஆனால் இந்த விமர்சனங்கள் வருவதற்குள் கடல் படம் திரையரங்குகளைவிட்டு வெளியேறிவிட்டது.

 

 

அமீரின் ஆதிபகவன்: களையிழந்த காட்சி

 

பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி அமீரின் ஆதிபகவன் வெளியானது. நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்த இந்தப் படம் ஒரு வழியாக இந்த ஆண்டு திரைக்குவந்தது அந்தப் படத்தில் நாயகனாக நடித்த ஜெயம் ரவிக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஆனால் இந்தப் படத்துக்காக அவர் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காத்திருந்ததற்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்பதால் ரவியின் மேல் பரிதாபமே மிஞ்சியது. 2006இல் வெளியான பருத்திவீரனுக்குப் பிறகு வெளியாகும் அமீரின் படம் என்றாலும் இந்த மாபெரும் இடைவெளியும் இடையில் அவர் நடிப்பின் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியிருந்ததும் (யோகி) ஆதிபகவன் மீதான எதிர்பார்ப்பை மட்டுப்படுத்தியிருந்தது

 

விஸ்வரூபத்துக்கு இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்க, ஆதிபகவனுக்கு இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆதிபகவன் என்பது இந்துக் கடவுளின் பெயரைக் குறிக்கும் சொல் என்றார்கள். எனவே படம் 'அமீரின் ஆதிபகவன்' என்ற பெயரிலேயே வெளியானது.

 

படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடம் ஏற்றிருந்தது கடைசிவரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. முதல் பாதி அரதப் பழசான கள்ளக் கடத்தல் காட்சிகள் மற்றும் தாய்-மகன் உறவுச் சிக்கல் போராட்டங்களால் நிறைந்திருந்தாலும் ரவி - நீது காதல் காட்சிகள் ரசனையுடன் அமைக்கப்பட்டிருந்தன. இரண்டாம் பாதியில் வில்லனாக மற்றொரு ஜெயம் ரவி அறிமுகமாவதும் நீது அவரது காதலி என்பதும் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைத்தன. ஆனால் வில்லன் ரவியின் பாத்திரப் படைப்பில் இருந்த வலிமையும் சுவாரஸ்யமும் திரைக்கதையில் துளிக்கூட இல்லை. ஒரு சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும் நாயகனுக்கும் வில்லனுக்கும் மோதல் ஏற்படும் விதம் பலவீனமாக இருந்ததாலும் ரசிகர்கள் படத்தை நிராகரித்தார்கள். ஜெயம் ரவியின் நடிப்பை மட்டும் சில விமர்சகர்கள் பாராட்டினார்கள்.

 

அமீரின் யதார்த்த முத்திரையும் இல்லாமல், ஆக்ஷன் படத்துக்கான நேர்த்தியும் இல்லாமல் ஆதிபகவன் களையிழந்தது.

 

 

பரதேசி: விருது உண்டு வசூல் இல்லை

 

மார்ச் 15 அன்று பாலாவின் பரதேசி வெளியானது. இந்தப் படத்தின் முன்னோட்டமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் நடிப்பவர்களை நடிப்புச் சொல்லிக்கொடுப்பதற்காக பாலா குச்சியால் அடித்துத் துவைப்பதுபோல் அந்த முன்னோட்டத்தில் காட்சிகள் அமைந்திருந்தன. இதை ஒரு சாரார் கடுமையாக விமர்சித்தாலும் மற்றொரு சாரார் பாலா செய்வதும் நடிப்பே என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார்கள். மொத்தத்தில் இந்த முன்னோட்டம் படத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டிவிட்டது.

 

ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டத்தில் சிக்கித் தவித்த தலித் தொழிலாளர்களின் கண்ணீர்க் காவியமான ரெட் டீ (தமிழில்: எரியும் பனிக்காடு) கதையைத் தழுவி படம் எடுக்கப்பட்டிருந்தது. மற்றைய பாலா படங்களைவிட இருண்மையான விஷயத்தைப் பேசிய இந்தப் படங்களின் காட்சிகளில் பாலாவின் வழக்கமான திரை ஆளுமை அதிக வீரியத்துடன் வெளிப்பட்டது. காட்சிகளின் யதார்த்தம், அனைத்து நடிகர்களிடமிருந்தும் இயல்பான நடிப்பு, பாத்திரத்துக்கேற்ற உடையலங்காரம் என பாலா படத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய அனைத்துச் சிறப்புகளும் இந்தப் படத்துக்கும் இருந்தன. அதர்வா, தன்ஷிகா ஆகியோர் சிறப்பாக நடித்து நல்ல பெயர் சம்பாதித்துக்கொண்டார்கள். செழியனின் ஒளிப்பதிவு உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்திருந்ததாகப் பாராட்டப்பட்டது. ஜி.வி. பிரகாஷின் இசை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பல காட்சிகள் திரையில் நடக்கும் சோகத்தை பார்ப்பவரின் நெஞ்சுக்குள் இறக்கிவைத்தன. இறுதிக் காட்சி கண்ணீர் சிந்தவைத்தது. வெகுஜனப் பத்திரிகைகள் படத்தைக் கொண்டாடின.

 

ஆனால் படம் மிகக் கடுமையான விமரசனங்களையும் சந்தித்தது. இரண்டாம் பாதியில் கிறிஸ்தவ மருத்துவராக வருபவர் அனைவரையும் மதம் மாற்ற முயற்சிப்பதுபோன்ற காட்சிகள் கிறிஸ்தவ மதத்தை மிக மோசமாக இழிவுபடுத்துவதாகக் கண்டனங்களைச் சம்பாதித்தன. நாவலாசிரியரான பி.எச். டேனியலைத்தான் இந்தப் பாத்திரத்தின் மூலம் பாலா இழிவுபடுத்தியிருக்கிறார் என்று கருதவும் இடமிருந்தது.

 

தலித் மக்களின் வாழ்வியலை முறையாகப் பதிவு செய்யவில்லை என்றும் 1940களில் தொடங்கிவிட்ட தொழிற்சங்கப் போராட்டங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 

சமமான பாராட்டுக்களையும் விமர்சனங்களையும் பெற்ற பரதேசி வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை.

 

 

கௌரவம்: ஒப்பனை முகங்கள்

 

ராதாமோகனின் படங்களில் மொழியைத் தவிர வேறெதுவும் வசூலை ஈட்டியதில்லை. ஆனால் அனைத்துப் படங்களுமே கணிசமான ரசிகர்களை ஈர்க்கத் தவறியதில்லை. அந்த விதிக்கு விலக்காக அமைந்தது ஏப்ரல் 19 அன்று வெளியான கௌரவம்.

 

தமிழ்க் கிராமங்களில் நடக்கும் கௌரவக் கொலைகளைப் பதிவுசெய்த முதல் படமாக அமைந்தது இந்தப் படம். சாதிய ஒடுக்குமுறை முதல் சில காட்சிகளிலேயே சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மேல் சாதிக்காரர்களின் சாதி வெறி அந்த அளவுக்கு வலிமையாகப் பதிவுசெய்யப்படவில்லை. தொலைந்துபோன ஜோடி கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்ட பின்னும் அதை ஒரு ரகசியம் போலப் பாதுகாத்து, இரண்டாம் பாதியில் முடிச்சை அவிழ்க்கும் திரைக்கதை அமைப்பு பொருந்திப்போகவில்லை. பாடல்களும் புதுமுக நடிகர்களின் நடிப்பும் பெரிதாக யாரையும் ஈர்க்கவில்லை. இதனால் செய்தித்தாளில் படித்த செய்திகளை வைத்து சாதிக் கொடுமை பற்றி இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கப்பட்டது. சாதி எதிர்ப்பாளர்களின் பாராட்டையும் கணிசமாகப் பெற்றாலும் படம் வந்த சுவடே தெரியாமல் திரையரங்குகளைவிட்டு வெளியேறியது.

 

 

 

மூன்று பேர் மூன்று காதல்: ஆழமற்ற காதல்கள்

 

வஸந்தின் பல படங்கள் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தவை. ஆனால் அவற்றில் பெரும்பாலான படங்கள் இந்தப் படம் ஏன் தோல்வியடைந்தது என்று குழம்பவைக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த ஆண்டு மே 1 அன்று வெளியான மூன்று பேர் மூன்று காதல் இந்தப் படம் எப்படி வெற்றிபெறும் என்று ரசிகர்களை யோசிக்க வைக்கும் வகையில் இருந்தது.

 

மலை, கடல், நிலம் என மூன்று பகுதிகளின் காதல் கதைகளைப் பேசிய இந்தப் படத்தில் விமல். சேரன், அர்ஜுன் ஆகியோர் நாயகர்களாக நடித்தார்கள். விமலின் காதல் கதையில் எந்த சுவாரஸ்யமுமில்லாமல் கடந்துசென்றது. நகைச்சுவை என்ற பெயரில் அவரால் பேசப்பட்ட வசனங்கள் புன்னகையைக்கூட வரவைக்கவில்லை. சேரன் பானு காதலிலும் சேரனின் பாத்திரப்படைப்பிலும் அத்தனை வலிமை இல்லை என்றாலும் அந்தக் காட்சிகளை ரசிகர்கள் பொறுத்துக்கொண்டார்கள். பானு சிறப்பாக நடித்ததோடு வழக்கமான வஸந்த் பட நாயகியர் போல் லட்சணமாகவும் தெரிந்தார். அர்ஜுன்-சுர்வீன் காதல்தான் ஓரளவு முதிர்ச்சியுடன் கையாளப்பட்டிருந்தது என்றும் அதுவே படத்தின் ரசிக்கத்தக்க பகுதி என்றும் பலர் கருதினார்கள். ஆனால் மூன்று காதல்களுக்குமான இணைப்பும் சரியாக அமையாததால் படத்தின் காரணமே கேள்விக்கு உட்படுத்தப்படக்கூடியதாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

 

யுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த பாடல்கள், மனதைக் குளிரவைக்கும் ஒளிப்பதிவு ஆகிய தொழில்நுட்ப அம்சங்களால் படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

 

 

அமைதிப்படை 2: பரிதாபமான நகல்

 

 

1994இல் வெளியாகி தமிழ் சினிமாவில் அரசியல் நையாண்டி என்னும் வகைமைக்கு அரிச்சுவடியாக அமைந்த அமைதிப்படையின் இரண்டாம் பாகம் பரவலான எதிர்பார்ப்பைப் பெற்றிருந்தது. சத்யராஜ் - மணிவண்ணன் கூட்டணியில் எதிர்பார்க்கப்படும் நக்கல் வசனங்களும் அரசியல் நையாண்டியும் சிறப்பாகவே அமைந்திருந்தன. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் கைதட்டல்களைப் பெற்றன. ஆனால் கதை, திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. பாடல்கள், பாத்திரப் படைப்பு, நடிகர் தேர்வு, நடிப்பு, வசன உசசரிப்பு, இசை, ஒளிப்பதிவு ஆகியவை பற்றி அக்கறை செலுத்தப்பட்டதாகத் தெரியவில்லை

 

படத்தைக் காப்பாற்ற தலைப்பின் வசீகரமும் பகடி செய்யும் திறமையும் மட்டும் போதாது என்று நிருபணமானது போல் படம் படுதோல்வியடைந்தது.

 

 

அன்னக்கொடி: அரைக் கம்பத்தில்

 

பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்த பாரதிராஜா படம். பார்த்திபன் நடிப்பதாக இருந்து அவர் விலகி, பிறகு அமீர் வந்து அவரும் விலகி, கடைசியில் ஒரு புதுமுக நாயகனுடன் படம் வெளியானது. பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ராதாவின் மகள் கார்த்திகா மையப் பாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

 

சாதி கடந்த காதலைப் பேசிய இந்தப் படத்தில் பாரதிராஜாவின் கலைத்திறன் சில இடங்களில் வெளிப்பட்டிருக்கிறதே தவிர புதுமையாக எதுவும் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. கார்த்திகாவின் நடிப்பு பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. தன் மகன் மனோஜ் குமாரை நாயகனாக்க முயற்சித்துவந்த பாரதிராஜா வேறு வழியில்லாமல் இந்தப் படத்தில் வில்லனாக்கிவிட்டார்.

 

சில ரசிகர்கள் சுமாரான படம் என்று சொன்னாலும் படம் வெற்றி பெறவில்லை.

 

 

வெற்றி, தோல்விக்கு அப்பால் பார்க்கும்போது இந்த ஆண்டு பாலாவைத் தவிர அனைத்து முன்னணி இயக்குநர்களுமே ஏமாற்றிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கணிசமான ரசிகர்களின் மதிப்பைப் பெற்ற மேலும் சில இயக்குநர்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியாகவிருக்கின்றன. செல்வராகவனின் இரண்டாம் உலகம், மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. இந்த இரு இயக்குநர்களுமே அடுத்தடுத்து தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆண்டாவது பரவலான ரசிகர்களைக் கவரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து இவர்களின் திரை வாழ்வையும் தமிழ்த் திரையுலகின் தற்காலிக போக்கையும் மாற்றுவார்கள் என்று நம்பலாம்.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=8e4b69aa-6b64-472b-bcfa-7dca0e409cb2

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.