Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அணு உலைகள்: விக்னேஸ்வரன் எச்சரிக்கை - புகழேந்தி தங்கராஜ்

Featured Replies

சென்ற இதழ் கட்டுரையைப் படித்தவுடன் வழக்கறிஞர் விஜயகுமார் தொடர்புகொண்டு கட்டுரையில் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டிய செய்தி ஒன்றைச்    சுட்டிக்காட்டினார். நீதியரசர் விக்னேஸ்வரனின் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்'  நேர்க்காணலில், அவரிடம் கேட்கப்படும் ஒரு  கேள்வியில், அந்தச் செய்தி இடம்பெற்றுள்ளது.

2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் - என்கிற உண்மையை, இவ்வளவு காலமாக தேசிய ஊடகங்கள் மூடிமறைத்து வந்தன. இங்கேயிருந்து ஐந்தாயிரம் ஆறாயிரம் மைலுக்கு அந்தப்புறம், பெயர் கூட வாயில் நுழையாத ஒரு நாட்டில், ஒரு பத்து பேரை அந்த நாட்டு அரசு சுட்டுக் கொன்றால்கூட, அய்யோ அய்யோ என்று அலறி, மனித உரிமைக்காக வரிந்துகட்டிக் கொண்டு தலையங்கம் எழுதுகிற 'மனிதாபிமான பத்திரிகைகள்' அவை. 26 மைலில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரும் தமிழர்களாயிற்றே.... எந்தப் பத்திரிகையும்  வாய் திறக்கவில்லை. (தமிழனெல்லாம் மனுஷனா?)   முதல் முறையாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தான் அந்த மௌனத்தை உடைத்துள்ளது.

2008-2009ல்  ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின்  எண்ணிக்கை 'ஒரு லட்சத்துக்கும் மேல்' - என்பதை விக்னேஸ்வரனிடம் பேட்டி எடுத்த செய்தியாளர் பகிரங்கமாகக் குறிப்பிடுகிறார். மிகப் பெரிய  தேசிய ஊடகம் ஒன்றில் இந்தக் கொடுமையான எண்ணிக்கை முதல் முறையாகப் பதிவாகியிருப்பதைச் சுட்டிக்காட்டிய தம்பி  விஜயகுமாருக்கு நன்றி!

நான் விஜயகுமாருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் இதே வேளையில், 'நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி' என்று நாச்சி, நா.சா. கோஷ்டியுடன் சேர்ந்து டெசோவும் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும்.

2008-2009ல், ஈழத்தில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நியாயம் கேட்கிறோம் நாம். இதுகுறித்து சர்வதேச சுதந்திர விசாரணை அவசியம் - என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையமே கூறுகிறது. மகிந்தன் அசைந்து கொடுக்கவேயில்லை. நாங்களே அதுபற்றி விசாரிப்போம் - என்று கொட்டாவி விட்டான் அந்தக் கள்ளப் புத்தன். அது ஒரு கெட்ட ஆவி என்பதைக் கூட உணராமல், 'இதுதான் பரிசுத்த ஆவி' என்று சர்டிபிகேட் கொடுத்தது அமெரிக்கா. ஆமாம், ஆமாம் - என்று அமெரிக்காவுக்குப் பின்பாட்டு பாடுகிறது இந்தியா. அதற்குப்  பக்கவாத்தியம் வாசிக்கிறார்கள் இங்கேயிருக்கும் மார்க்சிஸ்டுகள்.

இப்போது, புதிதாக ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறான் கள்ளப் புத்தன். 30 ஆண்டுக்கால போரில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்கப் போகிறார்களாம். அப்படியென்றால் இதற்குமுன் இதுபற்றி விசாரிக்கவே இல்லையா? பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பே இதைப்பற்றி விசாரிப்பதாக அறிவித்தார்களே, இவனுடைய மூதாதையர்கள்...... அதெல்லாம் உடான்ஸா?

4 ஆண்டுகளுக்கு முன் நடந்த திட்டமிட்ட இனப்படுகொலைக்கும் பாலியல் வன்முறைகளுக்கும் காரணமானவர்களைக்  கண்டுபிடித்துக் கூண்டில் நிறுத்து -  என்கிறோம் நாம். 30 ஆண்டுகளாகக் காணாமல் போனவர்களைத் தேடுவோம் என்கிறார்கள் அவர்கள். இரண்டுக்கும் இடையில்  வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?

வடக்கில் இன்றும் பலாத்காரம் தொடர்கிறது - என்று சிங்கள இனவாத அமைப்புகளில் ஒன்றான ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் நெத்தி சொல்லியிருப்பது பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். 2009 பாலியல் வன்முறைகளில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 ஆண்டுகள் கழித்தும் கூண்டில் நிறுத்தப்படாமல் இருந்தால், அது தொடராமல் வேறெது தொடரும்!

3 பேர் கொண்ட விசாரணைக் குழு, 30 ஆண்டுகளில் காணாமல் போனவர்களைத் தேடுமாம். இதைவிட ஒரு பம்மாத்து அறிவிப்பை ராஜபக்சேவே நினைத்தால் கூட இன்னொருமுறை  வெளியிட முடியாது.

இந்த அறிவிப்பை யாரும் சட்டை செய்யாத நிலையில், தானே அதைப்பற்றிப் பேசியாக வேண்டிய கட்டாயம் மகிந்தனுக்கு. கொழும்பு செய்தியாளர்களிடம், 'இந்த 3 பேர் விசாரணை ஆணையத்தை அறிவித்ததற்கு, சர்வதேச அழுத்தம் காரணமில்லை' என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறது மகிந்த மிருகம். சர்வதேச அழுத்தத்தால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாக யாராவது குற்றஞ் சாட்டினார்களா.... இல்லையே! உண்மையான காரணத்தை மூடி மறைப்பதற்காகவே, எவரும் சுமத்தாத குற்றச்சாட்டு ஒன்றுக்கு, டெசோ மூலவர் போன்று 'கேள்வியும் நானே, பதிலும் நானே' பாணியில் பதில் சொல்கிறது மிருகம்.

இந்த விசாரணை ஆணைய அறிவிப்பின் பின்னணியில் யார் யார் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்த்தால், இரண்டு பேரின் பெயர்கள் தான் முதலில் நினைவுக்கு வருகின்றன. ஒருவர், சேட்டன் சிவசங்கர் மேனன். இன்னொருவர், காமன்வெல்த் செயலகத்தின் செயலர் கமலேஷ் சர்மா.

3 மாதங்களுக்கு முன், லண்டன் காமன்வெல்த் செயலகத்தில்,   இலங்கை மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்பட்டமாக மனித உரிமைகளை மீறிய இலங்கையில் மாநாடு நடத்துவது பொருத்தமல்ல - என்று சுட்டிக்காட்ட பல நாடுகள் தயாராயிருந்தன. அந்தக்  கூட்டத்தில், இந்தியாவின் பின்னணியுடன் இலங்கையை பெயிலில் எடுத்த   ஜெகதலப் பிரதாபன் இந்த சர்மா. நவம்பர் மாநாட்டுக்கு முன்,  இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம் - என்கிற யோசனையை முன்வைத்த மேதாவி அவர்தான். இப்போது, காமன்வெல்த் மாநாடு நடக்க 3 மாதங்களே இருக்கும் நிலையில், இலங்கை 3 பேர் விசாரணை ஆணையத்தை அமைக்கிறது - என்றால், நிச்சயமாக அதன் பின்னணி - இந்தியா மற்றும் கமலேஷ் சர்மாவாகத் தான் இருக்க முடியும்.

எந்தப் பிரயோஜனமும் இல்லாத ஒரு விசாரணை ஆணையத்தைப் புதிதாக அமைப்பது, மனித உரிமை அடிப்படையில் காணாமல் போனவர்களைத் தேடப் போவதாக சீன் போடுவது, அதைவைத்து 'மனித உரிமையை ராஜபக்சே தேடுறாருல்ல' என்கிற தோற்றத்தை உருவாக்குவது, இதையெல்லாம் காட்டி காமன்வெல்த் மாநாடு தடைப்பட்டு விடாதபடி பார்த்துக் கொள்வது - இதுதான் மேனன் - சர்மா - மகிந்தன் கோஷ்டியின் திட்டமாக இருக்கவேண்டும்.

2009 இனப்படுகொலை தொடர்பாக மகிந்தன் அறிவித்த எந்த அறிவிப்பாவது செயல்படுத்தப் பட்டிருக்கிறதா - என்பதுபற்றி விவாதித்தால், மகிந்தனின் முகமூடி கிழிந்துவிடும். அது கிழிந்துவிடாமல் தடுக்க, அந்த முகமூடிக்கு மேல் இன்னொரு முகமூடியை அணிவிக்க முயல்கிறார்கள். அதுதான், இந்த 3 பேர் விசாரணை ஆணையம்.

வட மாகாணத் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்வதற்காக இந்த ஆணையம் அமைக்கப்படுகிறது என்கிற வாதம் கூட  அபத்தமானது. இந்த மோசடி வாரியத்தை அறிவும் தெளிவும் மிக்க வட மாகாண மக்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள் என்பது இலங்கைக்கு நன்றாகத் தெரியும். 'மனித உரிமை மேம்பாட்டு நடவடிக்கைகளில் இலங்கை தீவிரம் காட்டுகிறது' என்று காமன்வெல்த் நாடுகளை ஏமாற்றுவதே சர்மாவின் திட்டம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் - காமன்வெல்த் மாநாடு முடிவடைந்தபிறகு, இந்த விசாரணை ஆணையம் காணாமல் போய்விடும். அதைக்  கண்டுபிடிக்க இன்னொரு ஆணையம் தேவைப்படும்.

சர்வதேசத்தின் முட்டாள்தனத்தின் மீதுதான் சர்மா போன்ற  சதிகாரர்கள் கோட்டை கட்டுகிறார்கள். சர்வதேசம் அதை நம்புகிறது. இதுதான் யதார்த்தம். சர்வதேசம் என்பது மனசாட்சி செத்துப்போன ஒரு அரைகுறைப் பிணம். ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே - என்றெல்லாம் உலக நாடுகள் கவலைப்படப் போவதில்லை. இந்தியா சொல்வதற்கு எதிராக உண்மையைப் பேசிவிட்டால், 110 கோடி இந்தியர்களின் மார்க்கெட்டை இழந்துவிடுவோமே - என்கிற கவலையைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு இருக்கப் போவதுமில்லை.

சர்வதேசத்தை வழிக்குக் கொண்டுவருகிற ஒரே சக்தியாக, ஏழரைக் கோடி தமிழர்கள் இருக்கும் தமிழ்நாடு மட்டுமே இருக்கமுடியும். நம் எண்ணிக்கை ஒன்றே அவர்களை வழிக்குக் கொண்டுவரும். இனப்படுகொலை செய்த இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் பொருட்களைப் புறக்கணிப்பது பற்றி தமிழ்நாடு பரிசீலிக்கும் - என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கட்டும்... அதன்பிறகு காமன்வெல்த் மாநாட்டில் எத்தனை நாடுகள் பங்கேற்கின்றன என்று பார்ப்போம்! இதுதான் சர்வதேசத்தின் லட்சணம்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை முயலாவிட்டால் இந்தியாவிடம் சொல்வோம், இந்தியாவால் முடியாவிட்டால் சர்வதேசத்திடம் சொல்வோம் - என்று கூறும் நீதியரசர் விக்னேஸ்வரன் போன்றவர்கள், இந்தியாவின் லட்சணத்தையும் சர்வதேசத்தின் லட்சணத்தையும் புரிந்துகொள்ளவேயில்லையா? இந்தியா எங்கள் தமிழ் உறவுகளைக் கொன்று குவிக்கத் துணை நின்றுவிட்டு, இழவு வீட்டில் வந்து ஒப்பாரியும் வைக்கிற ஒரு நயவஞ்சக நண்பன். இன்னுமா நம்புகிறார்கள் நீதியரசர்கள்!

இனப்படுகொலை - என்கிற வார்த்தையே தன்னுடைய அகராதியில் இல்லாததைப் போல் நீதியரசர் விக்னேஸ்வரன் நடந்துகொள்வதைக் குறித்து வெளிப்படையாக விமர்சிப்பது நமது உரிமை. அதேசமயம், அவரது தனிப்பட்ட குடும்ப விவகாரங்களைக் குறித்து எழுதுவதைத் தவிர்க்க வேண்டுமென்று நினைக்கிறேன் நான். அது நாகரிகமும் இல்லை, அதனால் நமக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதும் இல்லை.

இந்தியாவுக்கு விக்னேஸ்வரன் விடுத்துள்ள ஒரு எச்சரிக்கை அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. 'வடக்கில் இருக்கும் ஒன்றரை லட்சம் இலங்கை ராணுவத்தினர், தென்னிந்தியாவின் அணு உலைகளுக்கு மிக மிக அருகில் நிற்கிறார்கள். கச்சத்தீவு அருகே நடமாடும் கடற்படைப் படகுகளில் சீன வீரர்கள் காணப்படுகிறார்கள். இது இந்தியாவுக்கு ஆபத்தா இல்லையா' - என்கிற அவரது கேள்வி புதிதாக அதைக் கேள்விப்படுகிற எவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். டெல்லியின் சௌத் பிளாக்கிலும் நார்த் பிளாக்கிலும் வேரூன்றியிருக்கிற மலை முழுங்கி மகாதேவன்களுக்கு அதிர்ச்சியோ முதிர்ச்சியோ இருக்கிறதா இல்லையா?

சுப. உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்ட இடிந்தகரை போராளிகளை மேலும் மேலும் தொல்லை செய்ய சங்கடமாகத்தான் இருக்கிறது. என்றாலும், அவர்களை விட்டால் வேறு வழியில்லை.  தமிழக அணு உலைகளுக்கு மிக மிக அருகில் வந்து நிற்கிறது சீனா. இந்த அபாயம் குறித்து, கடலோரப் பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை, அவர்களைத் தவிர வேறெவராலும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டார்கள். (சுப. உதயகுமார் கவனத்துக்கு!)

அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் உச்சந்தலையில் வந்து அமர்ந்து கொள்வதும், அங்கிருந்து நகரமாட்டேன் என்று அடம்பிடிப்பதும் சீன டிராகன்களின் வழக்கமான பொழுதுபோக்கு. அவர்களை, இந்தியாவின் வால் வரை கூட்டிக்கொண்டு வந்து அமர்த்தியிருக்கிறான் மகிந்தன். அணு உலையே ஆபத்து என்றால், அந்த அணு உலைக்கே எளிதில் ஆபத்தை உண்டாக்கிவிடக் கூடிய தூரத்தில் வந்து குந்திக் கொண்டிருக்கிறது, சீனாவின் அரவணைப்பில் இருக்கும் இலங்கையின் ஒன்றரை லட்சம் ராணுவம். இந்த ஆபத்தை உணரவே உணராமல், ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆபத்து இருக்கிறதா என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், நாடு நாசமாய்த்தான் போகும்!

விக்னேஸ்வரன் இப்போது குறிப்பிடும் இந்த ஆபத்தை, 4 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவோடும் தொலைநோக்குப் பார்வையோடும் விரிவாக எடுத்துச் சொன்னார், தமிழகத் தலைவர் ஒருவர். அவர், பழ. நெடுமாறன். 2009ல் சென்னையில் நடந்த சிறப்புக் கூட்டமொன்றில், இந்த ஆபத்து குறித்து விலாவாரியாக விளக்கினார் அவர். இந்தியாவின் வாலில் வந்து சீன ஆபத்து அமர்ந்திருப்பது, அரசு மற்றும் அதிகாரிகளின் தொலை நோக்கின்மையால்தான் - என்பதை ஓர் ஆராய்ச்சியாளர் போல் அவர் விளக்கியபோது வியப்பாக இருந்தது. அன்று நெடுமாறன் சொன்னதைத்தான் இன்று சொல்கிறார் விக்னேஸ்வரன்.

நெடுமாறன் போன்ற பழுத்த அரசியல் தலைவர் ஒருவர், நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய ஆபத்தை எடுத்துச் சொன்னபோது, எத்தனை பத்திரிகைகள் அதை வெளியிட்டன - என்று திரும்பிப் பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது. இப்போது, விக்னேஸ்வரன் சொன்னபிறகாவது அதைப்பற்றி எழுத வேண்டாமா?

தமிழக அரசியல் தலைவர்கள் பற்றி தவறான கருத்து தெரிவித்த நீதியரசர் விக்னேஸ்வரன், 2009ல் நெடுமாறன் இவ்வளவு தொலைநோக்குடன் பேசியபோது, என்ன செய்து கொண்டிருந்தார்  என்று கேட்பது நாகரிகமல்ல! அதனால், அந்தக் கேள்வியைத் தவிர்க்கிறேன்.

இந்தியாவுக்கு எதிராகப் பேசுபவர்கள், ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியாத தர்மசங்கடமான நிலைக்கு இந்தியாவைத் தள்ளுகிறார்கள் - என்பது சிலரது வாதம். இந்தியாவை வைத்துக் கொண்டே தான் காரியம் சாதிக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். இந்திய அரசு தான் - அதாவது இப்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசுதான் - ஒன்றரை லட்சம்பேர் கொல்லப்பட்டதற்கு அஸ்திவாரமாக இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா? இந்த இந்தியாவை நம்பினால் காரியம் நடக்காது, ஈழத்தில் மிஞ்சியிருக்கும் மிச்சம் சொச்சம் உறவுகளுக்கும் காரியம்தான் நடக்கும்.

எங்களில் எவரும் கண்மூடித்தனமாக இந்தியாவை எதிர்க்கவில்லை. 'இலங்கை எந்தக் காலத்திலும் இந்தியாவின் உண்மையான நண்பனாக இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. ஈழம் அமைவதுதான் இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லது. ஈழம்தான் இந்தியாவின் உண்மையான நண்பனாக இருக்கும்' என்று எடுத்துச் சொன்னோம். ராஜீவ்காந்திக்கோ அவர்களது சீடர்களுக்கோ அது புரிந்ததா? எல்லாம் பரமார்த்த குரு கதை மாதிரி ஆகிவிட்டது. தங்களது அறியாமையால் ஈழத்தையும் அழித்து, இந்தியாவின் வாலிலும் விஷ வண்டைக் கொண்டுவந்து குடி வைத்திருக்கிறார்கள். இனி அவர்களை நம்புவதை விட உதயகுமார், புஷ்பராயன் போன்ற உண்மையான தேச பக்தர்களை நம்புவது தான் உத்தமம்.

ஈழப் பிரச்சினையில் இந்தியா எடுத்த முட்டாள்தனமான முடிவால் இந்தியா எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் ஆபத்து ஒருபுறம் இருக்கட்டும். தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் உரிமை  அதற்கு இருக்கலாம். ஆனால், இன்னொரு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க அது யார்?

1975 வரை, அனைத்து அகிம்சை வழிகளிலும், ஒரே இலங்கைக்குள் சுய கௌரவத்தோடு  வாழ்வதற்காகத்தான் போராடிப் பார்த்தார்கள் தமிழீழத் தலைவர்கள். ஒவ்வொரு முறையும் இலங்கையின் நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டார்கள். அதன்பிறகே, 'தமிழீழம்தான் தீர்வு' என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

விக்னேஸ்வரனும் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். 'கடவுள் தான் காப்பாற்றவேண்டும்' என்று தமிழீழத் தலைவர்கள் நொந்துபோய் குறிப்பிட்டதாகச் சொல்லும் அவர் - "தமிழீழம்தான் தீர்வு" என்று மூத்த தலைவர்கள் வெளிப்படையாக அறிவித்ததை ஏன் மறைக்க வேண்டும்!

13வது சட்டத் திருத்தம் ஒரு வெங்காயம், உரித்துப் பார்த்தால் எதுவுமே இல்லை - என்பதை விக்னேஸ்வரன் போன்றவர்களும் ஒப்புக்கொள்கின்றனர். அதே சமயம், 'பதின்மூன்றாவது திருத்தத்தை இழக்காமலிருக்க மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். அதன் மூலம், ஆளுநர் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்' என்று அறைகூவல் விடுக்கிறார் விக்னேஸ்வரன். இதைத்தானே தந்தை செல்வா போன்றவர்கள் 77ல் கூறினர். ஈழம் வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள் - என்கிற அவர்களது அறைகூவலை ஏற்றுத்தானே தமிழ்மக்கள் அவர்களை வெற்றி பெறச் செய்தனர். அந்த வரலாற்றை யாரும் மறைக்க முயலக்கூடாது.

தேர்தல் சூழலில் - 'ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு' என்று யாராவது பேசினால் அதை நாம் பெரிது படுத்தப் போவதில்லை. ஈழம் - என்று உச்சரிக்கவே பயப்படுவதைக் கிண்டல் செய்யப் போவதில்லை. ஆனால், நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்கும் முயற்சிக்கு அறிந்தோ அறியாமலோ யார் துணை போனாலும் நாம் மன்னிக்க முடியாது.

தேர்தலைக் கண்காணிக்க வெளிநாட்டுப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் - என்று கோரிக்கை வைக்கிறார்கள் விக்னேஸ்வரன் முதலானவர்கள். அது அவர்களது முன்னெச்சரிக்கையைக் காட்டுகிறது. தேர்தல் விஷயத்தில் இவ்வளவு அக்கறை காட்டுபவர்கள், ஒன்றரை லட்சம் உயிர்கள் விஷயத்தில் எவ்வளவு அக்கறை காட்ட வேண்டும்! நடந்த இனப்படுகொலை குறித்த சர்வதேச சுதந்திர விசாரணையை ஏற்க மறுக்கும் இலங்கையை எப்படிக் கண்டித்திருக்கவேண்டும்! இந்த ஆதங்கமெல்லாம் இருந்தாலும், இனப்படுகொலைக்கு நீதி கேட்பதில் உயிருக்கு அஞ்சாமல் முதல் ஆளாக முன்நிற்கின்ற மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் - 'முதல்வர் பதவிக்கு விக்னேஸ்வரன் சரியான தேர்வு' என்று சொல்வதைக் கேட்கும்போது நம்பிக்கை பிறக்கிறது.

2001ம் ஆண்டு, கொழும்பு நகர எல்லைக்கு உள்ளேயே நடந்த ஒரு கொடுமையான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் தமிழ்ப் பெண் ஒருத்திக்கு, இலங்கை அரசு ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் - என்று 2002ம் ஆண்டில் இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை வழங்கிய  3 நீதிபதிகளில் விக்னேஸ்வரனும் ஒருவர்.

அந்த இளம் பெண்ணுக்கு என்ன நடந்தது - என்று கேட்பவர்களுக்காகச் சொல்கிறேன்.... அந்தச் சகோதரிக்கு நடந்தது வேறு எந்தச் சகோதரிக்கும் நடக்கக் கூடாது. அந்தச் சகோதரிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிட்டதுடன் தனது சமூகக் கடமை முடிந்துவிட்டது என்று எதிர்கால முதல்வர்  விக்னேஸ்வரன்  நினைத்துவிடக் கூடாது!

http://www.sankathi24.com/news/32054/64//d,fullart.aspx

Quote" இந்தியாவின் லட்சணத்தையும் சர்வதேசத்தின் லட்சணத்தையும் புரிந்துகொள்ளவேயில்லையா? இந்தியா எங்கள் தமிழ் உறவுகளைக் கொன்று குவிக்கத் துணை நின்றுவிட்டு, இழவு வீட்டில் வந்து ஒப்பாரியும் வைக்கிற ஒரு நயவஞ்சக நண்பன். இன்னுமா நம்புகிறார்கள் நீதியரசர்கள்!"

 

றோ & சோனியாவின் கூட்டுகள் இறக்கும் போதாவது உணருவார்கள் தாம் செய்த நாசகார வேலைகளை. ஆட்டமெல்லாம் பதவியிருக்கும் வரைதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.