Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கால சர்வதேச சட்ட மற்றும் அரசியல் ஒழுங்கில் போருக்குப் பின்னரான தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்?

Featured Replies

paper%20123.jpg

“திருமதி. யோகலட்சுமி பொன்னம்பலம் அவர்களே, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே, அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் எனது இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் மகிழ்வுறுகிறேன்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபாகார்த்த குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆனால் ‘பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்கு புக்கென’ -  பாற் கடலை நக்கி உண்ணலாம் என நினைத்த பூனையினது செய்கையைப் போன்றது இராமாயணத்தை எழுத நான் விரும்பியது - எனக் கம்பன் அவையடக்கமாகக் கூறியமை எனது சிந்தனையில் மேலோங்கி நிற்கின்றது. மாமனிதர் குமார் பொன்னம்பலத்தினுடைய நினைவுப் பேருரை ஆற்ற வயதோ, அரசியல் அனுபவமோ எனக்கு இல்லை. குறையுளென பொறுத்தருள்க.  

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தினது அரசியலை இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம் என்பதனைப் பற்றி ஆரம்பத்தில் சில வார்த்தைகள் கூறி இவ்வுரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன். சிலோன் சுதந்திரமடைந்த காலப் பகுதியிலிருந்து தமிழ் பாராளுமன்றத் தலைமைகள் தமிழத் தேசிய அரசியலுக்குரிய மொழியைப் பாவித்தனராயினும் நடைமுறையில் விட்டுக்கொடுப்பு அரசியலையே நடாத்திவந்தனர்.

paper%20124.jpg

உதாரணமாக சிங்களம் ஆட்சி மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரதமர் S.W.R.D பண்டாரநாயக்காவுடன் நடாத்திய பேச்சுவார்த்தையில் தமிழுக்கு சில விசேட உபயோக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதோடு அப்போதைய தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைத்துவம் திருப்திப்பட்டுக் கொண்டது. அப்போது தமிழரசுக் கட்சியின் இளைஞரணியில் இருந்த திருவாளர்கள் இராசதுரை, அமிர்தலிங்கம் போன்றோர் திரு செல்வநாயகத்திடம் தமிழ், சிங்களத்திற்கு சம அந்தஸ்து வேண்டும் என்று கூறிக் கொண்டு பேச்சுவார்த்தைக்குப் போனதை ஞாபகப்படுத்தி அவரைக் கேள்விக்குட்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1957இல் பிராந்திய சபைகளை பண்டா - செல்வா ஒப்பந்தத்தினுVடாக ஏற்றுக்கொண்ட அப்போதைய தமிழ்ப் பாராளுமன்றத் தலைமைத்துவம் பின்னர் 1965இல் டட்லி - செல்வா ஒப்பந்தத்தினுVடாக மாவட்ட சபைகளை ஏற்றுக் கொண்டனர். 1976இல் தனித் தமிழீழப் பிரகடனத்தைச் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1981இல் மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்றுக் கொண்டனர். 1980களிற்குப் பின்னர் தமிழரின் பாராளுமன்றத் தலைமை பின் தள்ளப்பட்டு ஆயுதப் போராட்ட அரசியல் மேலோங்கிய சூழலில் அத்தகைய இரட்டைத் தனமான அரசியலைச் செயவதற்கான வெளி சுருங்கத் தொடங்கியது.

1994இல் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழர்களது ஆயுதப் போராட்ட அரசியலின் ஏற்புடைத் தன்மையை (egitimacy) சர்வதேச அரங்கிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் வலுக்குறைப்புச் செய்யும் ஒரே நோக்கத்திற்காக சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அரசாங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு இணைந்து அரசியலமைப்பு திட்ட யோசனைகளை முன்வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

மற்றொரு புறத்தில் தமிழ்ப் பெயர் கொண்ட ஓர் வெளிநாட்டமைச்சரை நியமித்து அந்நபரைக் கொண்டு உலகளாவிய ரீதியில் ஆயதப் போராட்ட அரசியலின் சர்வதேச ஏற்புடைமையை சனாதிபதி சந்திரிக்கா இல்லாமல் செய்ய முயற்சித்தார். இம் முயற்சிகளைக் கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்தி, அவற்றின் தந்திரோபாய இலக்குகளை விளங்கிக் கொண்டு ஆயுதப் போராட்ட அரசியலை முழுமையாக அங்கீகரித்த ஒரே தலைவராக அப்பொழுது குமார் பொன்னம்பலம் செயற்பட்டார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தினுடைய அரசியலை கட்சி எதிர்ப்பரசியல் என்று மலினப்படுத்துவோர் குமார் பொன்னம்பலத்தினுடைய அரசியலின் இந்த உயரிய நோக்கத்தினை விளங்கிக் கொள்வதில்லை அல்லது மூடி மறைப்பவர்கள். குமார் பொன்னம்பலத்தினுடைய இந்த அரசியலின் நீட்சயாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் நிறுவனம் உருவாக்கப்பட்டது என்பது எனது கருத்து. மிதவாத அரசியலையும் ஆயுதப் போராட்ட அரசியலையும் தமிழரசியலில் முரண் அரசியலாக (political dichotomoy) காட்டப்படுவதைத் தகர்த்தெறிந்து ஆயுதப் போராட்ட அரசியலினதும் மிதவாத அரசியலினதும் அரசியல் ஒன்றே என்பதைனைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனும் நிறுவனம்.

சனநாயகச் செயன்முறை ஒன்றினுVடாக ஆயுதப் போராட்ட அரசியலை நடத்தும் தரப்பைத் தமது (ஏக) பிரதிநிதிகளாக மிதவாத அரசியல் தலைமைகள் அடையாளங் காட்டுவதன் மூலம் இந்த இரு துருவ நிலைப்பாட்டைத் தகர்த்தெறிவதற்காக உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று மாமனிதர் தராகி சிவராம் அவர்கள் பதிவு செய்துள்ளார். ஒரு வகையில் பார்த்தால் குமார் பொன்னம்பலத்தினது அரசியல் சித்தாந்தமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கான அரசியல் சித்தாந்தமாகியது.

மே 2009இல் பின்னர் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று மீள 1980களிற்குப் முன்னரான மிதவாத அரசியலுக்குச் சென்றுவிட்டதை நாம்  அவதானிக்கலாம். இத்தகைய அரசியல் மீள் சுழற்சிக்கு உடன்படாதவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விட்டு 2010 பொதுத் தேர்தலின் போது வெளியேறி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எனும் கட்சியைத் தோற்றுவித்தார்கள் என்பது அண்மைய வரலாறு. நிற்க.

போருக்குப் பிந்திய சூழலை ஒரு நிலைமாறுகால சூழல் என்று வகைப்படுத்தலாம். தமிழரசியலுக்கும் இந்தச் சூழல் ஒரு நிலைமாறுகால அரசியலுக்குரிய சூழல். இந்த நிலைமாறுகாலச் சூழல் தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாரிய சவால்களை ஏற்படுத்தியுள்ள ஒரு சூழல். போராட்டம் முடிவடைந்த விதம், அது தந்த மீள முடியாத வலி, அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களிற்கெதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide), அவ்வினப்படுகொலை மூலம் ஏற்படுத்தப்படுகின்ற நுண்ணிய கூட்டு வலியின் தொடர்ச்சி என்பன எமது கடந்த கால அரசியல் தொடர்பிலான கசப்பாக மாறுகின்ற பயங்கரம் ஏற்படுமோ என்ற அச்சம் மேலோங்கியிருக்கின்ற காலப்பகுதி இது.

இச்சூழலைத் வெளிச் சக்திகள் தத்தமது நிகழ்ச்சித் திட்டங்களிற்குப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இவர்களுடைய நிகழ்ச்சித்திட்டம் தமிழரசியலை தேசிய அரசியலிலிருந்து விலகிச் செல்ல வைக்க வேண்டும் என்பதேயாகும். தொடர்ந்து வரும் அடக்குமுறைகள் தமிழ்த் தேசிய அரசியல் என்ற வரையறை தொடர்பில் முகமன் அளவிலேனும் இயங்கும் கட்சியையே தேர்தலில் மக்கள் தெரிவு செய்யும் நிலைக்குள் வைத்திருக்கின்றதாயினும் அவ்வரசியலானது நீண்ட காலத்தில் தமது பிரச்சனைக்கான தீர்வைத் தர மாட்டாது என மக்கள் சிந்திக்கத் தொடங்குவார்களாயின், அந்த நம்பிக்கை அற்றுப் போனால் -  தமிழ்த் தேசிய அரசயலிற்கு மாற்று இல்லாவிடினும் அது தொடர்பில் அரசியல் பண்பாட்டு ரீதியான பிடிப்பு மக்களுக்கு இல்லாது போய் விடக் கூடும்.

அத்தகைய சூழலில் தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் என்றும், ஒற்றுமை என்றும் பேசுபவர்களுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கத் தலைப்பட்டாலும் நாளாந்த வாழ்வில் ஒடுக்குமுறையோடு வாழ மக்கள் பழக வேண்டிய சூழல் ஏற்பட்டு விடக் கூடும். இச் சூழலில் தானும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றான ‘இணக்க அரசியல்’ எனக் கூறப்படும் அரசியல் வரையறைகளால் இப்போதைக்கு, (தொடர்ந்து நிலவும் அடக்குமுறைக் சூழலால்) தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றீடாக வர முடியாது.

ஏனெனில் மக்கள் எதிர் நோக்கும் ஒடுக்குமுறைக்கு அவையிடம் பதிலில்லை. அவ்வொடுக்குமுறையை ஏற்றுக் கொண்டு அதற்குள் பிழைத்துக் கொள்வதைப் பற்றித் தான் சிந்திக்க வேண்டும் என்பது இணக்க அரசியலின் நிலைப்படாகவுள்ளது. மே 2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தேசிய அரசியலானது வெறுமனே அபிலாç� அரசியலாக (aspirational politics) இல்லாமல், சிங்களப் பேரினவாதத்திற்கெதிரான எதிர்ப்பரசியலின் குறியீடாக மட்டுமில்லாமல், ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட உதவுகின்ற அரசியல் வரையறையாக உரு மாற வேண்டுமாயின் அதற்கான ஒரு ஆழமான உரையாடலைச் செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த உரையாடல் அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கி நகர்த்தப்படுகின்ற உரையாடலாக இருக்க வேண்டும். அத்தகைய உரையாடல் மூலமாகச் செய்யப்படக் கூடிய மக்கள் அணிதிரட்டலே ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட உதவுகின்ற அரசியல் வரையறையாக தமிழ்த் தேசிய அரசியல் உரு மாற வாய்ப்பளிக்கும். அவ்வுரையாடல் ஒரு வெற்று வெளிக்குள் நடக்க முடியாது.

சர்வதேச வெளியைப் புரிந்து கொண்டும் செய்யப் பட வேண்டிய கலந்துரையாடலாவே இது உள்ளது. அவ்வெளி தொடர்பிலான சிறு குறிப்பாக இவ்வுரை அமைவதே மாமனிதர் குமார் பொன்னம்பலத்தினுடைய நினைவாக நாம் கூடியிருக்கும் இந்த வேளையில் செய்யப்படக் கூடியவற்றில் மிகப் பொருத்தமான செயலாக இருக்கும் என்பது எனது சிந்தனை. பின்வரும் கேள்விகள் தொடர்பில் இவ்வுரை தனது கவனத்தைச் செலுத்த முயற்சிக்கின்றது.

மே 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தேசம் மற்றும் சுயநிர்ணயம் என்று பேசுவதற்கான வாயப்பான சர்வதேசச் சூழல் உள்ளதா?

உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலா சுயநிர்ணய உரிமையை நாம் வலியுறுத்த வேண்டும்?

படிப்படியாக தீர்வைப் பெற்றுக் கொள்ளலாமா?

பொதுசன வாக்கெடுப்பு ஒன்றைக் கோருவதற்கான உரிமை உள்ளதா?

நிலைமாறு நிர்வாகம் ஒன்றை வலியுறுத்த முடியுமா?

இவை யாவும் யதார்த்தபூர்வமானதா?

என்ற கேள்விகள் தொடர்பில் இவ்வுரை

யில் சில ஆரம்ப கட்டப் பதில்களை வழங்க முயற்சிக்கலாம் என எண்ணுகின்றேன்.

(உரை அடுத்த இதழில் தொடரும்...)

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32542/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.