Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூனுக்கும் பிள்ளைக்கும் நூறு வித்தியாசம்! - புகழேந்தி தங்கராஜ்

Featured Replies

"போர் முடிந்துவிட்டதாக இலங்கை அறிவித்த 5 நாள் கழித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கீ மூன் வந்தார். அவரது வருகை ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட அவர், போர்ப் பகுதிகளுக்குப் போகவேயில்லை.

முள்வேலி முகாமுக்குப் போனவர், அங்கே 10, 15 நிமிடமே இருந்தார். முகாமைச் சுற்றிப் பார்க்கவும் இல்லை, மக்களிடம் பேசவுமில்லை. தாம் நேரில் பார்வையிட்டதாக சர்வதேசத்துக்குக் காட்டிக் கொள்ளவே அவர் வந்தார் என்பதும், அவர்கள் நமக்காக எதுவும் செய்யப் போவதில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது".........................

2009 மே மாதம் பான் கீ மூன் நடத்திய நாடகத்தைப் பற்றிய சகோதரி வாணி குமாரின் நேரடி சாட்சியம் இது. 'அவர்கள் நமக்காக எதுவும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது' - என்று வாணி சொல்வதில் உள்ள 'அவர்கள்' என்கிற வார்த்தை - மிகுந்த மனவேதனையுடனும் தார்மீகக் கோபத்துடனும் ஐக்கிய நாடுகள் சபையைக் குறிப்பிடுகிறது.

ஒன்றரை லட்சம் உயிர்களைக் கொன்று குவித்ததில் மகிந்தனுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமா பங்கு இருந்தது? கள்ள மௌனம் சாதித்த ஐ.நா.வுக்கும் இருந்தது. உலக மக்களைப் பாதுகாக்க வேண்டிய அந்த சர்வதேச போலீஸ்காரன், 'நான் திரும்பி நின்றுகொள்கிறேன். நீ சத்தம் கேட்காமல் கொன்று முடி' என்று இலங்கை என்கிற ஒரு பொறுக்கிக்கு ஆலோசனை வழங்கியதை எவராலாவது மறுக்க முடியுமா? 'கடைசி ஓரிரு நாளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் சாகப் போவது ஐ.நா.வுக்குத் தெரியும்' என்று ஐ.நா. அதிகாரிகளே வேதனையுடன் சொன்னார்களே... பான் கீ மூனால் அதற்குப் பதில் சொல்ல முடிந்ததா?

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையில் ஐ.நா.வுக்கும் பங்கு இருந்ததை 2009லேயே அம்பலப்படுத்தியவன், பிரெஞ்சு பத்திரிகையாளனான பிலிப் போலோபியன். இன்று, இலங்கைக்கும் ஐ.நா.வுக்கும் கொடுக்கல் வாங்கல் தான் நடந்திருக்கிறது என்பது எல்லா வகையிலும் உறுதியாகி வருகிறது.

என்றாலும், 2009 பான் கீ மூன் விஜயத்தைப் போலில்லாமல், 2013 நவநீதம் பிள்ளையின் விஜயம் உருப்படியானதாக இருக்கும் என்று ஒட்டுமொத்த உலகும் எதிர்பார்க்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையராகப் பதவியேற்றபோது, "பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலாகவும் மனித உரிமைகள் ஆணையம் இருக்கும்' என்று சொன்ன அவர், இன்றுவரை அந்த வார்த்தையைக் காப்பாற்றுகிறார் என்பதால்தான் இவ்வளவு எதிர்பார்ப்பு.

இலங்கை வந்து இறங்கியவுடனேயே, நவநீதம் பிள்ளைக்கு பலத்த வரவேற்பு. ஞாயிற்றுக் கிழமை தான் அவர் கொழும்பு வந்து சேர்ந்தார். திங்கள் கிழமையே பௌத்த பிக்குகள் களத்தில் குதித்து விட்டனர். (ஏன், ஞாயிற்றுக் கிழமை பிக்குகளுக்கு விடுமுறை நாளா?) ராவணா சக்தி - என்கிற சிங்களத் தீவிரவாத அமைப்பு நவநீதம் பிள்ளைக்கு எதிராக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பலரும் - 'வேணும்னா இராக்குக்குப் போய்க்கோ.... இலங்கைக்கு வராதே' என்கிற வாசகம் அடங்கிய அட்டையைப் பிடித்திருந்தனர்.

2009ல் பான் கீ மூன் வந்தபோது இப்படியெல்லாம் யாரும் ஆர்ப்பாட்டம் நடத்தவுமில்லை, அட்டை பிடிக்கவுமில்லை. (பான் கீ மூனை - பிம்ப் - என்று சிங்களத் தீவிரவாதிகள் பாசம் பொங்க அழைத்தது அப்போதல்ல, அதற்குப் பிறகு!) நவநீதம் பிள்ளை வரும்போதே குற்றவாளிகள் டென்ஷன் ஆகிறார்கள் என்பதிலிருந்தே, மூனுக்கும் பிள்ளைக்கும் ஆறு வித்தியாசம் இல்லை, நூறு வித்தியாசம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 'பாலியல் வல்லுறவு, பாலியல் வன்முறையெல்லாம் கூட இனப்படுகொலை குற்றமாகவே கருதப்படும்' என்று அறிவித்தவராயிற்றே நவநீதம் பிள்ளை! இலங்கை நடுங்காதிருக்குமா?

அரசுக்கும் கோதபாயவுக்கும் ஆதரவாயிருக்கும் பௌத்த சிங்கள வெறியர்கள், நவநீதம் பிள்ளைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் இதே வேளையில், "அரசின் மீது தவறில்லை எனில், நவநீதம் பிள்ளையின் விஜயம் குறித்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை' என்று நக்கலடிக்கும் பிக்குகளும் இல்லாமலில்லை. தேசிய பிக்குகள் முன்னணி செயலாளர் தீனியாவெல பாலித ஹெமி தேரர் இதைத்தான் கேட்கிறார்.

"இலங்கையில் உள்ள பிரச்சினைகள் பற்றி இங்கே எவரிடமும் நியாயம் கேட்க முடியாத நிலை உள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் வெள்ளை வேன் கடத்தல் பயத்தால், இருக்கிற பிரச்சினைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கக்கூட எவரும் முன்வருவதில்லை. எம் நாட்டின் பிரச்சினைகளுக்கு, சர்வதேசத்திடம் நியாயம் கேட்கவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதை நினைத்து நாம் வெட்கப்படத் தேவையில்லை" என்று நொந்துபோய் பேசியிருக்கிறார் பாலித ஹெமி தேரர்.

இன்னொரு கடுமையான எச்சரிக்கையையும் பாலித தேரர் விடுத்துள்ளார். மக்கள் பணத்தை அரசு சூறையாடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், "இப்படியே போனால், காமன்வெல்த் மாநாடு முடிவடையும்போது, சாப்பிடுவதற்கு ஒரு ரொட்டித் துண்டு கூட கிடைக்காத நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்படுவார்கள்" என்று எச்சரித்துள்ளார்.

2009ல், அறுபதாயிரம் பேருக்கு இரு நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருளை அனுப்பிவைத்துவிட்டு, 3 லட்சம் தமிழர்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள் அனுப்பப்பட்டு விட்டதாக கொழும்பு அறிவித்ததே! அப்போது இந்தத் தேரர்கள் எல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அப்போது பட்டினி போடப்பட்டவர்கள் தமிழர்கள், தமிழ்க் குழந்தைகள் என்பதால் இவர்கள் வாய் திறக்கவில்லையா?

நவநீதம் பிள்ளை விஜயத்தைப் பற்றி எதிரும் புதிருமாக பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. 'இலங்கையின் திறந்த மனதைக் காட்டவே பிள்ளையை அழைத்தோம்' என்கிற அணுகுண்டையே கூட இலங்கை போட்டுப் பார்த்துவிட்டது. இதற்கு நேர்மாறாக, சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தலாலேயே நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருக்கிறார் என்கிற உண்மை பரவுகிறது. பிள்ளையோ, திறந்த மனத்துடன் இலங்கை வந்திருப்பதாகச் சொல்கிறார்.

நவநீதம் பிள்ளையின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், காணாமற் போனோரைக் கண்டறியும் குழுவின் சார்பில் யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வு நடைபெற இருக்கிறது. போர் நடந்த காலங்களிலும், போருக்குப் பின்னும், போரின் இறுதியில் சரணடைந்த பின்னும் காணாது போனவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அமைப்பு அது. காணாமல் போன தங்கள் உறவுகள் எங்கே - என்று கவலையுடனும் கோபத்துடனும் கேட்கிறார்கள் அவர்கள்.

உறவுகளை இழந்து வாடும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சிங்கள அரசு, நவநீதம் பிள்ளையின் கவனத்தை ஈர்க்கும் தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த எல்லா வகையிலும் முயல்கிறது. கொலைவெறியன் கோதபாய ராஜபக்சே, கூட்டுப் படை தலைமை அதிகாரி ஜகத் ஜயசூரியா, ராணுவத் தளபதி தயா ரத்னாயக மூவரும் நவநீதம் பிள்ளையைச் சந்திக்கப் போகிறார்களாம். போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.வுக்கு மனு அனுப்பிய 6300 பேர் பற்றிய தகவல்களை வெளியிடும்படி பிள்ளையிடம் அவர்கள் கேட்பார்களாம். அந்த 6300 பேரும் மறைந்து வாழ்ந்துகொண்டு இலங்கை அரசுமீது குற்றஞ் சாட்டுகிறார்களாம்... அதை இலங்கை என்கிற யோக்கிய சிகாமணியால் பொறுத்துக் கொள்ளவே முடியாதாம்! (இதைத்தான் 'போங்கு' என்கிறோம் சென்னைத் தமிழில்!)

காணாமல் போன உறவுகளைத் தேடுவதில் அரசின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் முன் நிற்பவர்கள் நமது ஈழத்து உறவுகள். 1996ல் சிங்கள ராணுவ வெறியர்கள் சீரழித்து சிதைத்து புதைத்த இளம் மாணவி கிருஷாந்தி, காணாமல் போனதாகத்தான் கூறப்பட்டது முதலில். கிருஷாந்தி, அவளுடன் காணாமல் போன அவளது தாய், சகோதரன், அண்டை வீட்டுக் காரர் நால்வருக்காகவும், காணாமல் போனதாகக் கூறப்பட்ட மற்றும்சில இளைஞர்களுக்காகவும் நீதிகேட்டு நடந்த மக்கள் போராட்டத்துக்குப் பிறகுதான், கிருஷாந்தி வழக்கில் மர்ம முடிச்சு அவிழ்ந்தது. நால்வரின் உடல்களும் செம்மணிப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டன. ராணுவத்தினரின் பாலியல் வெறியாட்டம் அம்பலமானது.

கிருஷாந்தி வழக்கின் அடிப்படையில் பார்க்கும்போதுதான், காணாமல் போனோரைக் கண்டறியும் குழுவும், அதற்கான போராட்டங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

காணாதுபோனதாகச் சொல்லப்படும் கிருஷாந்தி எங்கே - என்கிற கேள்வி செம்மணியின் பாதாளம் வரை பாய்ந்தது. இன்றைக்குக் காணாது போனவர்கள் ஒருவர் இருவரல்ல! ஒன்றரை லட்சம் பேர் எங்கே - என்று ஆண்மையுடன் ஒலிக்கிறது மன்னார் மாவட்ட மறை ஆயர் ராயப்பு ஜோசப் குரல். என்ன பதில் சொல்லப் போகிறது இலங்கை? ஒன்றரை லட்சம் பேரும் மறைந்து ஒளிந்துகொண்டு இப்படியெல்லாம் கேட்கச் செய்கிறார்கள் - என்று மலைப்பிஞ்சு கூட அழுகிவிடுகிற அளவுக்குப் புளுகப் போகிறதா?

எடுத்த எடுப்பிலேயே, தன்னுடைய கடமையைத் தெளிவாக நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார் நவநீதம் பிள்ளை. இலங்கையின் நீதி அமைச்சர் ஹக்கீமைத் திங்கள்கிழமை சந்தித்தவர், சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்துள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீதான வழக்குகள் இன்னும் நிலுவையிலேயே இருப்பது ஏன்? உறவினர்கள் கூட அவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படாதது ஏன்? போர் முடிந்துவிட்டதாகச் சொன்ன பிறகும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மட்டும் தொடர்ந்து நடைமுறையில் இருப்பது ஏன்? பள்ளிவாசல்கள் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய நிலை என்ன? போலீஸ் திணைக்களம் நீதி அமைச்சகத்தின் கீழ்தானே வரவேண்டும், அதுதானே முறை! நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா?

இவ்வளவு விவரங்களை நவநீதம் பிள்ளை தம்மிடம் கேட்டதாக ஹக்கீம் கூறியிருப்பதிலிருந்து, பிள்ளையின் பயணம் தெளிவாகத் தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.

திங்கள்கிழமை இரவே யாழ்ப்பாணம் போய்விட்டார் திருமதி பிள்ளை. வடக்கில், மீள்குடியேற்றம் செய்யப்பட்டோரையும் முகாம்களில் வைக்கப்பட்டிருப்போரையும் சந்திக்க இருக்கிறார். முள்ளிவாய்க்கால் வரை அவர் செல்வார் என்று சொல்லப்படுகிறது. உண்மையிலேயே அதிர்ந்துபோயிருக்கிறது இலங்கை.

அரசியல் கைதிகள் நிலை, முன்னாள் போராளிகள் விடுதலை, நிலப்பறிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல், இன அழிப்பு நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சுதந்திர விசாரணை - என்று பல்வேறு விஷயங்களை நவநீதம் பிள்ளையின் கவனத்துக்கு வடகிழக்கில் அவர் சந்திக்க இருக்கும் சிவில் சொசைட்டி உறுப்பினர்கள் எடுத்துச் செல்வர் என்பது நிச்சயம். இது இலங்கைக்கு மேலதிகத் தலைவலியாக இருக்கும்.

இந்தச் சிக்கலைச் சமாளிக்கத்தான் போரின்போதும், போரின் பின்னரும் காணாமல் போனோர் பற்றி விசாரிக்க அவசர அவசரமாக புதிய ஆணைக் குழு ஒன்றை இலங்கை அரசு அறிவித்தது. அந்த ஆணைக்குழு அறிவிப்பு ஒரு ஏமாற்றுவேலை என்பதை உணர்ந்த 'அம்னெஸ்டி' (சர்வதேச பொது மன்னிப்பு சபை) போன்ற சர்வதேச அமைப்புகள் அதை நிராகரித்து விட்டன.

இலங்கையில் 31ம் தேதி வரை இருக்கும் நவநீதம் பிள்ளை, தமிழ்த் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ராஜபக்சே, மனித உரிமைக் குழுக்கள், மூத்த நீதித்துறை அதிகாரிகள், தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள், மறு சீரமைப்பு ஆணைய பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப் படுவதைக் கண்காணிக்கும் குழுவினர் ஆகியோரைச் சந்தித்துப் பேச இருக்கிறார். இந்த ஏழு நாளில் ஓய்வொழிச்சல் இன்றி சேகரிக்கும் விவரங்களின் அடிப்படையில் முதல்கட்ட மதிப்பீட்டை, செப்டம்பரில் நடக்க இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் தாக்கல் செய்வார். 2014 மார்ச்சில் முழு அறிக்கையையும் அவர் சமர்ப்பிக்க இருக்கிறார். இந்த அச்சம் தான் இலங்கையை ஆட்டிப் படைக்கிறது இப்போது!

இலங்கையின் அச்சத்துக்குக் காரணம், நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், சுதந்திர சர்வதேச விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுதான். நவநீதம் பிள்ளையை, பான் கீ மூன் போன்று தன்னிஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்க முடியாது என்பதை இலங்கை உணர்ந்திருக்கிறது.

நவநீதம் பிள்ளை நிதானமாகவும் உறுதியாகவும் தன்னுடைய நடவடிக்கைகளை இலங்கையில் தொடங்கியிருக்கும் வேளையில், சிரியா விஷயத்தில் கடுமையான நிலையை எடுக்கப் போவதாக உச்சஸ்தாயியில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பான் கீ மூன். ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு நடத்துகிறாராம். விரைவாகக் கண்டுபிடித்துவிடுவாராம்! இந்த வேகம், எங்கள் தமிழர்கள் கொல்லப்பட்ட போது எங்கே போயிருந்தது என்பது தெரியவில்லை.

இத்தனைக்கும், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கான தடயமே இல்லாமல் செய்துவிட்டது சிரியா - என்று குற்றஞ்சாட்டுகிறது பிரிட்டன். இவ்வளவு சீக்கிரத்தில் சிரியாவால் தடயங்களை அழிக்க முடியுமென்றால், 4 ஆண்டுகளாக தடயத்தை இலங்கை விட்டு வைத்திருக்குமா என்ன?

சிரியா குறித்து சர்வதேசத்துக்கும் பதில் சொல்லும் பொறுப்பு இருப்பதாக இப்போது சொல்லும் பான் கீ மூன், 'தமிழர்கள் உயிர்களுக்கு மட்டும் நான் எந்தக் காலத்திலும் ஜவாப்தாரி அல்ல' என்று வெளிப்படையாக அறிவித்துத் தொலைக்க வேண்டியது தானே!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காதா, நவநீதம் பிள்ளை என்கிற இரும்பு மனுஷியால் அங்கு நடந்த அவலங்கள் அம்பலமாகாதா - என்றெல்லாம் நாம் தவித்துக் கொண்டிருக்க, நேரம் காலம் தெரியாமல் கோலி விளையாடக் கூப்பிடுகிறது பாரதீய ஜனதா கட்சி. 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தி, அதன்மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவேண்டுமாம்! பா.ஜ.க.வின் தேசிய முகங்களில் ஒன்றான மீனாட்சி லகீ இப்போதுபார்த்து கவலைப்படுகிறார். அட, போங்கம்மா!

வாசக நண்பர்களுக்கு ஒரு தகவல்!

இனப்படுகொலை இலங்கையே! 

3 லட்சம் தமிழரின் 

பிணக்குவியல் மீது காமன்வெல்த்தா?

என்கிற கேள்வியுடன், திருச்சியிலிருந்து சென்னைக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருக்கும் 50 மாணவக் கண்மணிகள், பயண நிதிக்காக எனது 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை ஆல்பட் திரையரங்கில் செப்டம்பர் 1-ம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி நடைபெறுகிறது.

http://www.sankathi24.com/news/32641/64//d,fullart.aspx

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.