Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேர்ந்துவாழும் உறவு திருமணத்துக்கு மாற்றாகுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்துவாழும் உறவு திருமணத்துக்கு மாற்றாகுமா?

ஆர்.அபிலாஷ்

 

சேர்ந்துவாழும் (Live-in together) உறவுகள் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்னேயே இதைப் போன்று திருமணமற்ற உறவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்ப்புகள் 2008இல் இருந்தே சில வந்துள்ளன. ஆனால் சமீப தீர்ப்பு, அதில் செக்ஸுக்கு தரப்பட்ட அதிகாரபூர்வ அந்தஸ்து காரணமாக பரபரப்பான விவாதத்துக்கு உள்ளானது. ஏற்கனவே விவாதங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைப் போல இத்தீர்ப்பு செக்ஸ் வைத்தால் திருமணம் என எளிமைப்படுத்தவோ வலியுறுத்தவோ இல்லை. தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு கால அளவுக்குத் தம்பதியினர் சேர்ந்திருந்தால் அது திருமணமாக அங்கீகரிக்கப்படலாம் என்கிறது. கூடவே “உடலுறவு கொண்டிருந்தால்” எனும் சொற்களும் சேர, சிலர் அதை எப்படி நிரூபிக்க முடியும், திருமணம் என்பது செக்ஸ் மட்டும் அல்லவே என நியாயமான கேள்விகளைக் கேட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, திருமணம் எனும் சடங்கு அவசியமில்லை என்கிற சமகால போக்குக்கு இத்தீர்ப்பு தரும் அங்கீகாரம்தான் மரபார்ந்த ஆட்களைப் பதற்றப்பட வைத்திருக்கிறது. ஆனால் இந்தத் தீர்ப்பு கூட சேர்ந்துவாழும் உறவுகளைத் திருமணம் என்கிற சட்டகத்துள் கொண்டு வருகிற முயற்சிதான். உதாரணமாக, சேர்ந்து வாழ்கிறவர்கள் குடும்ப நீதிமன்றத்திற்குச் சென்று தங்களது உறவு நிலைக்கான ஆதார சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நீதிமன்றம் வேறு ஏதாவது ஆவணங்கள் அல்லது சாட்சிகளைப் பரிசீலித்து சான்றிதழை அளிக்கலாம். ஆனால் இப்படி சான்றிதழ் பெறுவது பதிவுத் திருமணத்துக்கு கிட்டத்தட்ட நிகர்தான். ஒருவிதத்தில் இது சேர்ந்துவாழும் உறவின் நோக்கத்தை முறியடிக்கக் கூடியது.

சேர்ந்து வாழும் உறவைத் திருமண அமைப்போடு ஒப்பிடுகிறவர்கள் பின்னதன் பத்திரத்தன்மையை, சாஸ்வதத்தை அழுத்துகிறார்கள். சேர்ந்துவாழும் உறவுகளைப் பற்றி விவாதிக்கும் முன் இது எந்தளவுக்கு உண்மை என கேட்க வேண்டும். ஒருபுறம் இன்றைய திருமணங்கள் கணிசமாக விவாகரத்தில் சென்று முடிவதைப் பற்றிப் பேசிக்கொண்டே நாம் இன்னொரு புறம் திருமண அமைப்பை அப்பழுக்கற்ற கச்சிதமான ஒன்றாக முன்வைக்கவும் முடியாது. திருமண அமைப்பு இன்றுள்ள எதார்த்தத்தை கணக்கிலெடுத்து தகவமையாமல் விரிசல் விடத்துவங்கி உள்ளது என்பதே உண்மை. சேர்ந்துவாழும் உறவு குறித்த நீதிமன்றத் தீர்ப்பும் அதனை இந்த சமூகம் முழுக்க உதாசீனிக்காமல் சீரியஸாக விவாதிப்பதும் இதைக் காட்டுகிறது.

ஆனால் இந்தியாவில் குடும்ப அமைப்பு எளி தில் காலியாகாது. அதற்கு அதன் பாதுகாப்போ உயர்வோ காரணமல்ல. குடும்ப அமைப்பு நம் சாதி அமைப்பைத் தக்க வைக்க மிகவும் அவசியம். சாதியும் குடும்பமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பா.ம.க.வினரும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் தொடர்ந்து காதலை எதிர்ப்பது சாதியப் படிநிலையைக் காப்பாற்றுவதற்குத்தான். இதை நேரடியாக ஒத்துக் கொள்ள முடியாமல்தான் தொடர்ந்து குடும்ப அமைப்பின் பரிசுத்தம், மகத்துவம் குறித்து பாவனை செய்து கொண்டிருக்கிறோம்.

சாதி பெருமிதம் மிகச்சிறு வயதில் இருந்தே நமக்குத் தொற்றுகிறது. வீட்டுக்குள் அப்பா, அம்மா எப்படிப் பிறரிடம் இருந்து தம்மைத் தனித்து மேலாகக் காட்டிப் பேசுகிறார்கள் என குழந்தை கவனிக்கிறது. என்னுடைய குடியிருப்பில் ஒரு ஆறு வயது பிராமணக் குழந்தை இப்போதே கடும் மமதையுடன் நடந்து கொள்கிறது. பிறரை மதிக்காமல், தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளும் அதன் முயற்சிகள் வியப்பளிக்கின்றன. இந்த சாதி மனநிலையை அது தன் பெற்றோரிடம் இருந்து மட்டும்தான் கற்றுக் கொண்டிருக்க முடியும். நம்முடைய குடும்ப அமைப்பு வெறுமனே ஒரு வாழ்க்கை முறை அல்ல. எந்த நாட்டின் நகரத்தில் சிதறி இருந்தாலும் நம்முடைய சாதி அடையாளத்தை பத்திரமாகப் பாதுகாக்க இந்த உறவுப்பின்னல்தான் பயன்படுகிறது. சேர்ந்துவாழும் உறவுகள் இந்தப் பின்னலைச் சிதறடிக்கின்றன. வேறுபட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் இணைந்து தாமே தேர்ந்தெடுக்கும் நண்பர்களை சொந்தக்காரர்களாக மாற்றி ஒரு புது சமூகம் உருவாக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.

குடும்பத்தின் பண்புகள் குறித்து நமக்குள்ள பல நம்பிக்கைகள் வெறும் கற்பிதங்கள். முதலில் சேர்ந்து வாழும் உறவுகளைப் போன்றே சம்பிரதாய குடும்ப உறவுகளும் தற்காலிகமாகவே இன்று மாறி வருகின்றன. கணவன் உயர்ந்த அந்தஸ்தோடு நிறைய சம்பாதிக்கிறவனாக இல்லாவிட்டால் பெண்ணின் பெற்றோர் தலையிட்டு தம்பதியினரைப் பிரித்து வைத்து விடுகிறார்கள். இது என் நண்பர்கள் நான்கு பேருக்கு நடந்ததைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். வரதட்சணை போதாது என்று பெண்கள் கொளுத்தப்படுவது மற்றொரு வாடிக்கை. சேர்ந்துவாழும் உறவில் குறைந்தபட்சம் மாமனார் மாமியார்கள் உருவாக்கும் ஆபத்துகள் இல்லை.

இன்னொரு கற்பிதம், மரபான குடும்ப அமைப்புக்குள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கிறார்கள் என்பது. இதுவும் உண்மை அல்ல. கணிசமான குடும்பங்களில் குழந்தைகள் தம் பாட்டுக்கு வளர்கின்றன. அவர்களைக் கவனிக்க பெற்றோர்களுக்கு அக்கறையோ நேரமோ இருப்பதில்லை. திருச்சியில் உள்ள ஒரு பிரபல போர்டிங் பள்ளியில் ஏன் இவ்வளவு குழந்தைகளை விட்டுப் போகிறார்கள் என ஒரு ஆசிரியரைக் கேட்டேன். தங்களிடம் வளர்வதை விட விடுதியில் தங்கிப்படித்தால் தான் குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வார்கள் என பெற்றோர்கள் நம்புவதாய் அவர் சொன்னார். குழந்தை கள் பல தம்பதியினருக்கு இன்று ஒரு பாரம்தான் (வெளிப்படையாக அவர்கள் ஏற்க மறுத்தாலும்). உளவியல்படி மனிதர்களுக்கு உள்ள பல ஆளுமைக் கோளாறுகள் இளவயதில் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் தோன்றுகின்றன. நம்முடைய குடும்பங்களில் ஆரோக்கியமான வளர்ப்புச் சூழல் இருந்தால் இவ்வளவு வளர்ந்தவர்கள் ஏன் கோணலான மனதோடு இருக்கிறார்கள்? ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைப் படிக்கிறவர்கள், அவர் விமானத்தில் பணிபுரிந்த, திருமணம் செய்யாத தன் அத்தையைப் போல் சுதந்திர மாக நவீனமாக ஆகி, குடும்பச் சூழலில் இருந்து வெளியேற எவ்வளவு ஏங்கினார் என புரியும். இன்று முதலமைச்சராக ஆனபின் அவரிடம் உள்ள ஆளுமைக் கோளாறுகளுக்கு அவர் வளர்ந்து வந்த அழுத்தமான குடும்பச் சூழலும் ஒரு காரணமே. கணிசமான சர்வாதிகாரிகள் ஒரு காலத்தில் தம் அப்பா அல்லது அம்மாவை எதிர்க்க முடியாமல் அந்தக் கோபத்தை, வெறுப்பை சமூகத்தின் மீது ஆதிக்கமாக காட்டுகிறவர்கள்தாம். தொடர்ந்து குழந்தைகளை ஒரு அச்சில் வைத்து வார்க்க முயலும் இந்த குடும்ப அமைப்பு அவர்களைச் சிதைத்து கொடூரமானவர்களாக மாற்றி சமூகத்துக்கு அனுப்பி விடுகிறது. குடும்பங்கள் மோசமான வாழ்க்கைப் பயிற்சி நிறுவனங்கள்.

பல ஒற்றைப் பெற்றோர் குழந்தைகளைத் தத்தெடுத்து சுணக்கமின்றி ஆரோக்கியமாக வளர்ப்பதைப் பார்க்கி றோம். அப்பாவால் அறிவு போதிக்கப்பட்டு, அம்மாவின் மடியில் படுத்துப் பால் குடித்து, பாட்டியிடம் கதை கேட்டு, சாலையில் போகிற நாயின் மீது கல்லெறிந்து தாம் குழந்தைகள் கச்சிதமாக வளர முடியும் என்பது ஒரு கற்பனை. கலீல் ஜிப்ரான் சொன்னது போல் குழந்தைகள் இறைவன் எய்த அம்பு. அது சரியான இலக்கை போய் அடைந்து விடும். நீங்கள் தடுக்காமல் இருந்தால் போதும். சேர்ந்துவாழும் உறவில் குழந்தை பிறந்தால், பிறகு தம்பதி பிரிய நேர்ந்தால் யாராவது ஒருவர் அக்குழந்தையை வளர்க்க முடியும். இன்று பல ஒற்றைப் பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பதற்கு சம்பிரதாய குடும்ப ஆதரவுகள் அவசியமில்லை என நிரூபித்திருக்கிறார்கள்.

சேர்ந்துவாழும் உறவின் நோக்கம் என்ன? அது அந்த உறவின் வகையைப் பொறுத்தது. பொதுவாக (1) தற்செயலாய் திட்டமிடப்படாமல் நடப்பவை, (2) கவன மாய் திட்டமிடப்படுபவை, (3) கடப்பாடு கொண்டவை, (4) மாற்று உறவு என நான்காகப் பிரிக்கப்படுகின்றன. நாம் பொதுவாக சேர்ந்துவாழும் உறவை வெறும் செக்ஸுக்காக சேர்ந்து வாழ்வது அல்லது எதிர்கால திருமணத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு அவகாசம் என பார்க்கிறோம். ஆனால் எல்லா சேர்ந்து வாழும் உறவுகள் இந்த நோக்கத்துக்காக உருவாவதில்லை.

முதல்வகையில் காதல் ஜோடிகள் ஒரு வசதிக்காகச் சேர்ந்துவாழ்கிறார்கள். தினமும் ஒருவரை ஒருவர் சந்திக்க கடற்கரை, பூங்கா, காபி டே என அலைவதற்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சேர்ந்து வாழ்வது மேல் என நினைத்து சேர்ந்துவாழும் உறவுக்குள் நுழைகிறார்கள். இவர்கள் சேர்ந்துவாழும் காதலர்கள், தம்பதி அல்ல. வெறும் செக்ஸுக்காகவும் சேர்ந்து வாழும் உறவை இவர்கள் வரிப்பதில்லை. ஏற்கனவே செக்ஸ் உறவு இவர்களுக்குள் இருக்கிறது தான். சேர்ந்து வாழும் வாழ்க்கை இவர்களின் காதல் உறவுக்கு கால இட வசதிகளைத் தருகிறது, அவ்வளவு தான். நகரங்களில் மேற்தட்டு காதலர்கள் அல்லது நன்கு சம்பாதிக்கும் இளைஞர்கள் இப்படியான திட்டமிடாத சேர்ந்து வாழும் உறவுக்குள் நுழைகிறார்கள். சென்னையில் வாழும் சிங்கி என அழைக்கப்படும் பல வடகிழக்கு மாநில இளைஞர்கள் ஜோடியாக சேர்ந்துவாழும் உறவில்தான் வாழ்கிறார்கள். கறாராக ஒரே மொழி பேசும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்த ஜோடிகள்தாம் இவ்வாறு சேர்கிறார்கள். ஒரு மலையாளிப் பெண்ணும் தமிழ் இளைஞனும் சேர்ந்துவாழ்வது போல் வடகிழக்கு மாநில ஆட்களிடையே பார்க்க இயலாது. அவர்கள் மேற்கத்திய நாகரிகத்தை வரிக்கிறவர்கள். ஆனால் இனக்குழு விசயத்தில் மட்டும் கட்டுப்பெட்டி.

இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு ஆதரவானது என ஒரு கருத்து பரவலாகத் தெரிவிக்கப்பட்டது. நாம் மேலும் குறிப்பாக இதனைத் திருமணம் செய்யும் நோக்கில் சேர்ந்துவாழ்கிற பெண்களுக்கு என புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் அத்தனை பேரும் தாம் செக்ஸ் வைத்துக் கொள்கிற ஆண்களை மனதுக்குள் கணவனாக வரிக்கிறார்கள் என்பது ஒரு அபத்தமான புரிதல். சேர்ந்து வாழும் உறவுகளில் அதிகமும் படித்த வேலை பார்க்கும் சுதந்திரமான பெண்கள்தாம் ஈடுபடுகிறார்கள்.

குழந்தை பெற்று குடும்பத்தைப் பராமரிப்பதற்கும் பணம் சம்பாதித்து வாழ்வில் சுதந்திரத்தை அடைவதற்கும் இடையே ஒரு எதிர்வித சம (inversely proportional) உறவு உள்ளது. அதாவது நிறைய சம்பாதித்து தொழிலில் உயர விரும்புகிற பெண்கள் தாமதமாக திருமணம் செய்கிறார்கள் அல்லது குழந்தைப்பேறைத் தள்ளிப் போடுகிறார்கள். முப்பதில் இருந்து முப்பத்தைந்து வயதைத் தாண்டுகிற பட்சத்தில் அவர்களின் குழந்தைப்பேறு திறனும் குறைகிறது. ஆனால் இப்பெண்கள் இதை ஒரு பெருங் குறையாக நினைப்பதில்லை. இன்றைய தொழில்நுட்பம் மூலம் திருமணம் (செக்ஸ்) இல்லாமலே குழந்தை பெறலாம் அல்லது தத்தெடுக்கலாம். நம் சமூகம் அதிக பொருளாதார வளர்ச்சி அடைய அடைய குழந்தைப் பேறு குறைந்து கொண்டே போகிறது. இந்தப் போக்கு அமெரிக்காவில் வலுவாக இருந்து இப்போது இந்தியாவிலும் கணிசமாகப் பரவி வருகிறது. கவனியுங்கள். குழந்தை பெறாத தற்கும் குடும்ப அமைப்பிற்கும் சம்பந்தமில்லை. குடும்பம் மூலம் கிடைக்கும் செக்ஸ், குழந்தை, பாதுகாப்பு, அந்தஸ்து என பலவும் அது இல்லாமலே கிடைக்கும் நிலையில் குடும்பம் காலாவதி ஆவது இயல்புதானே. முப்பத்தைந்து வயதுக்கு மேல் ஒரு பெண் திருமணம் செய்து பிறகு குடும்பம் அமைக்க பகீரத முயற்சிகள் செய்வதற்கு அதுவரை சேர்ந்து வாழும் உறவில் இருந்து விட்டு வேண்டுமென்றால் தொடர்வது மேலும் வசதிதானே. மாறாக, குடும்ப அமைப்புக்குள்ளும் தம்பதியினர் செக்ஸ் வைப்பதும், குழந்தைப் பேறும் கணிசமான அளவில் இன்று குறைந்து வருவதும் இன்னொரு எதார்த்தம்.

இது முற்றிலும் சமூக வளர்ச்சி, பொருளாதாரம், தனிமனித சுதந்திரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இந்த பிரச்சினைக்கான விடை இன்றைய குடும்ப அமைப்பில் இல்லை என்பதே முக்கிய சிக்கல். அதனால்தான் குடும்ப அமைப்பின் மீதுள்ள நம்பிக்கையை இளைய தலைமுறை மெல்ல மெல்ல இழக்க துவங்கி உள்ளது. பெண்களுக்கு குறிப்பாய் தொழில் வாழ்வில் தொடர்ந்து முன்னேறும், சுதந்திரமாக வாழும் இடத்தைக் குடும்ப அமைப்பு நல்காத சேர்ந்துவாழும் உறவுக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே போகும். குடும்ப ஆதரவாளர்கள் சேர்ந்து வாழும் உறவுக்கு எதிராக அல்ல போர்க்கொடி தூக்க வேண்டியது. அவர்கள் தம் வீட்டின் ஒழுகும் கூரையை முதலில் சீர்செய்ய வேண்டும்.

இன்று சேர்ந்துவாழும் உறவுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்னும் புள்ளிவிபரம் முக்கிய கோணம் ஒன்றைத் தருகிறது. இது முழுக்க ஒரு பணக்கார மேட்டுக்குடி சமாச்சாரம் அல்ல. என் வீட்டில் வேலை செய்த பெண் ஒரு அசாம்காரருடன் சேர்ந்துவாழும் உறவில் உள்ளார். அவருக்கு அசாமில் மனைவி உள்ள விபரத்தை மறைத்து தான் உறவு கொண்டார். பின்னர் தெரிந்த பின் அவரது குழந்தையையும் சேர்த்து இப்பெண் பார்த்துக் கொள்கிறார். இவ்விசயத்தில் சேர்ந்து குடும்பத்துக்கும் குடும்பமின்மைக்கும் இடைப்பட்ட ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். சேர்ந்துவாழும் உறவை வகைப்படுத்துவது மிக சிரமம். ஆனால் இன்றுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொதுவான சமூக உளவியல் அழுத்தங்களுக்கும் சேர்ந்துவாழும் உறவுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. எந்த விசயத்திலும் பொறுப்பெடுக்க ஒரு அச்சம் எல்லோருக்குள்ளும் உள்ளது. திருமணம் செய்து குடும்பம் நடத்த ஆகும் செலவுகள் மட்டுமல்ல, அப்படி ஒரு பொறுப்பை மேற்கொள்ள வேண்டும் எனும் எண்ணமே ஒரு பதற்றத்தை கிலியைத் தூண்டுகிறது. இது எப்படி வெளிப்படுகிறது என்றால் பல காதல் ஜோடியினர் தம்மிடம் போதுமான சேமிப்பு இல்லை என்று சாக்கு சொல்லியே திருமணத்தை தள்ளிப் போடு கிறார்கள். திருமணத்தை ஏதோ கோடிக்கணக்காய் முதலீடு செய்து ஒரு தொழிற்சாலை நிறுவுவது போல் பார்க்கிறார்கள். இதன் விளைவாக நமக்கு எதிலும் ஒட்டாமல் ஒட்டியிருக்கத் தோன் றுகிறது. சேர்ந்துவாழும் உறவு இந்த அணுகுமுறையின் ஒரு நோய்க்குறி என்றும் பார்க்கலாம்.

திருமண உறவில் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தைக் கூடிய மட்டும் மறைமுகமாக மட்டுமே மீற முடியும். பாலியல் ஒழுக்கத்தை இதன் ஒரு பகுதி எனலாம். சேர்ந்து வாழும் உறவில் இருப்பவர் பேஸ்புக்கில் திருமணமானவர் என போடமாட்டார். “In a relationship”தான். அதாவது ஒப்பந்தம், கறாரான விதிமுறைகள் இல்லை. மிஸீ ணீ க்ஷீமீறீணீtவீஷீஸீsலீவீஜீல் இருக்கிறவர் ஒரே நொடியில் அந்த ஆப்ஷனை மாற்றி விட்டு மற்றொரு பெண்ணைக் காதலிக்கலாம். சரி, திருமண உறவிலும் அப்படி செய்யலாம். உங்களைக் கைது பண்ண வெல்லாம் முடியாது. ஆனால் சமூக அழுத்தம் உங்களை அப்படிப் பண்ணாமல் தடுக்கும். திருமணமானவர் என்று சொன்னால் உங்கள் காதல் தகுதி பிற பெண்களிடையே எப்படியும் குறைந்து போகும். ஆனால் சேர்ந்துவாழும் உறவில் இந்த சமூக அழுத்தம், அது தரும் அரூபமான ஆனால் வலுவான பாதுகாப்பு இல்லை. இது உறவுக்குள் ஒரு பதற்றத்தைத் தூண்டுகிறது என்பது உண்மைதான். நான் முதலில் குறிப்பிட்ட வகைமைகளுக்குள் முதல் மூன்றிலும் இது நடக்கலாம்.

எனக்கு ஒரு நண்பர். ஆங்கிலோ இந்தியர். அவர் ஒரு மலையாளி சிறியன் கிறித்துவப் பெண்ணைக் காதலித்தார். அப்பெண் சென்னையில் தனியாக ஒரு குடியிருப்பில் வாழ்ந்து வந்தார். நண்பருக்கு ஒரு நாள் அவர் அப்பாவுடன் கடும் தகராறு. பெட்டி படுக்கையோடு காதலியின் வீட்டுக்கு வாழ வந்து விட்டார். இப்படி அவர்களின் சேர்ந்துவாழும் உறவுமுறை ஆரம்பித்தது. ஒருமுறை அப்பெண் கர்ப்பமாக, கலைத்து விட்டார்கள். அதைக் கேட்க எனக்கு வருத்தமாக இருந்தது. இன்னொரு முறை நடந்ததுதான் சுவாரஸ்யம். அவர்கள் பெங்களூரில் வேலை கிடைத்து அங்கே சேர்ந்துவாழ்ந்தார்கள். ஒரு நாள் அப்பெண்ணின் தோழி வீட்டுக்கு வந்திருந்தார். அன்றிரவு நண்பர் காதலியின் தோழியின் அறைக்குப் போய் செக்ஸ் வைத்துக் கொண்டார். அத்தோழி பெண்களுக்கே உரிய “சமயோஜிதப் புத்தியுடன்” அடுத்த நாள் காலையில் இந்த சாகசத்தைப் பற்றி என் நண்பரின் காதலியிடம் சொல்லி விட்டார். கடும் சண்டை. சில வாரங்கள் பேசாமல் இருந்துவிட்டு மீண்டும் இணைந்து கொண்டார்கள். இந்தப் பிரச்சினையில் யாரும் யாரையும் குறை கூற முடியாது. சமூகமும் என் நண்பரைக் குற்றம் சாட்டாது. அவர்தான் எந்த ஒப்பந்தத் தையும் மீறவில்லையே! ஆனால் தற்போதைய சட்டம் இருவரின் சேர்ந்துவாழும் உறவையும் திருமணமாக அங்கீகரிக்குமானால் நண்பர் செய்தது சட்டப்படி குற்றம் ஆகும். ஆக, இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு சேர்ந்துவாழும் உறவின் ஆதார நோக்கத்துக்கே எதிரானது எனலாம். செக்ஸை ஒரு பாத்தியதையாக அது மாற்றுகிறது.

இறுதி வகையான மாற்று உறவு அதாவது சேர்ந்து வாழும் உறவு இன்று ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் குடும்ப அமைப்புக்கு நிகரான அந்தஸ்தை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த வகை சேர்ந்து வாழும் திருமணத்துக்கு ஒரு மாற்றாக இயங்குகிறது. இது திருமணத்துக்கான தயாரிப்போ பரிசோதனையோ அல்ல. ஸ்வீடனில் சேர்ந்துவாழும் உறவில் குழந்தைகள் பிறப்பதும் அதிகம். அங்குள்ள குழந்தைகளில் பாதி சதவீதம் சேர்ந்துவாழும் உறவில் பிறந்து சேர்ந்துவாழும் உறவிலே வளர்க்கப்படுபவைதான்.

ஒரு மாற்றுத் திருமணமாக சேர்ந்துவாழும் உறவின் சாத்தியங்களை நாம் பரிசீலிக்கத் துவங்க வேண்டும். பெரியார் சாதியை அழிப்பதற்கு முதலில் கடவுளை மறுத்தது போல சாதியைப் பலவீனமாக்க நாம் சேர்ந்து வாழும் உறவை ஆதரிக்கத் துவங்கலாம். எல்லா உறவுகளையும் திருமணத்தில் போய் முடிக்க நினைக்கும் பிடிவாதத்தையும் நாம் கைவிட வேண்டும். காதல் திருமணங்களின்போது கூட யாரோ ஒருவர் இன்னொருவரின் சாதி மேலாண்மையை அங்கீகரிக்க, மத சடங்குகளை ஏற்க வேண்டி வருகிறது. சொந்த பந்தங்களின் அழுத்தம் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சேர்ந்துவாழும் உறவுகளுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் காதலிப்பவர்கள் இவ்வளவு சமரசங்கள் செய்துதான் இணைய முடியும் (அதற்காக கிராமங்களையே ஒட்டுமொத்தமாக சாதி வெறியர்கள் எரிக்க அனுமதிக்கும்) அவலம் இல்லாமல் ஆகும். பொருளாதார நெருக்கடி மிக்க, தொழில்முறை முன்னேற்றத்திற்காக கடும் தியாகங்களைப் பெண்கள் செய்ய நேர்கிற சூழலில் அவர்கள் பாசாங்கின்றி குற்றவுணர்வின்றி சுதந்திரமாக வாழவும் சேர்ந்து வாழும் உறவுகள் நல்ல மாற்று வழியாக இருக்க முடியும்.

ஒன்று, குடும்ப அமைப்பு நவீனப்பட வேண்டும் அல்லது அது சீரழிந்து சேர்ந்துவாழும் உறவுமுறை அந்த இடத்தை எடுக்கும் அல்லது சமூகத்தில் இரண்டும் சரிசம ஆதரவோடு சேர்ந்துஇருக்கும் ஒரு சூழலும் கூட எதிர்காலத்தில் உருவாகலாம்.

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6272

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் திருமணமும்.. இதுவும் கொண்டுள்ள தேவை ஒன்று தான். இதில் கூடிய சுதந்திரம் உள்ளது. திருமணம் அநாவசிய சடங்கு சம்பிரதாயங்களை திணிக்கிறது. சடங்கு சம்பிரதாயம் சமூகக் கண்காணிப்புக்குள் சிறை இருக்க விரும்பிறவை அல்லது அவற்றை நம்பி திருமண வாழ்வை நடத்திறவை அதற்குள் இருக்கட்டும். சுதந்திரமா குடும்ப வாழ்வில் ஈடுபட விரும்பிறவங்க.. இந்த லிவ்விங் ருகதெரில்.. போகலாம். ஒன்னுமே வேணாங்கிறவங்க பிரமச்சாரியாக இருக்கலாம்.

 

முக்கிய குறிப்பு: இதில எதைச் செய்தாலும் செய்யாட்டிலும்.. உயிர் போயிடப் போறதில்ல..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.