Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மக்களை அடிமைகளாக வாட்டி வதைக்கும் மகிந்த இராஜபக்சாவின் சிங்கள - பவுத்த பேரினவாதக் கட்சியை தேர்தலில் தோற்கடியுங்கள்! - நக்கீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mahintha_seithy150.jpg

முடியப்பு றெமிடியஸ் என்ற பெயர் நினைவிருக்கிறதா? இவர் ஒரு சட்டவாதி. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர். மனித உரிமை வழக்குகளில் நீதிமன்றம் ஏறி வாதாடுபவர். அண்மையில் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிவிட்டார். விலகிய கையோடு ஆளும் அய்க்கிய சுதந்திர மக்கள் முன்னணி என்ற சிங்கள (அவரே சொல்வது) கட்சியோடு சங்கமமாகிவிட்டார்.

  

யாழ்ப்பாண மாநகர சபைக்குத் தேர்தல் நடந்த போது ததேகூ சார்பாகப் போட்டியிட்டு றெமிடியஸ் வென்றார். அதிகப்படியான விரும்பு வாக்குகள் பெற்ற காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவராகவும் கொலுவிருந்தார். அது கொஞ்ச நாட்கள்தான். பின்னர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு ஆளும் கட்சியை ஆதரிக்கத் தொடங்கினார். மாநகரசபையில் ஆளும் கட்சி கொண்டு வரும் தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்தார். உச்ச கட்டமாக மாநகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தனுக்கு எதிரான ஒழுங்காற்று நடவடிக்கைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தார்!

 

சும்மா சொல்லக் கூடாது, இது ஒரு மாபெரும் அரசியல் எதிர்ப் புரட்சி. அப்போதே அண்ணர் கட்சி தாவப் போகிறார் என்பது தெரிந்துவிட்டது.

 

ததேகூ இப்படிப்பட்ட கட்சிதாவிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது கிடையாது. அதாவது தாமாக முன்வந்து அப்படிப் பட்டவர்களுக்கு வெளிவாசல் கதவைக் காட்டுவது கிடையாது. ததேகூ கண்டும் காணாதவாறு இருந்துவிட்டது. அது பெருந்தன்மையா அல்லது வேறா என்பது தெரியவில்லை.

 

நல்ல காலம் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ சார்பாகப் போட்டியிட்ட றெமிடியஸ் தோற்றுப் போனார். அவர் வென்றிருந்தால் பொடியப்பு பியசேனாவின் வழியில் முடியப்பு றெமிடியசும் கட்சி தாவியிருப்பார்!

 

இப்போது எதிர்பார்த்தது போல் அண்ணர் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். கட்சி மாறிகள் -அரசியலில் சோரம் போகிறவர்கள் - தங்களது குத்துக்கரணங்களை நியாயப்படுத்தப் பல செல்லக் கதைகள் சொல்வார்கள். றெமிடியஸ் அதற்கு விதிவிலக்கல்ல. அவர் ஏறிய ஏணியை உதைத்துத் தள்ளுகிறார். கோடாரிக் காம்புபோல் நடந்து கொள்கிறார். மரங்களை வெட்டிச்சாய்க்கும் கோடரியின் காம்பு ஒரு மரத்தால் ஆனது என்பது ஒரு குரூரமான உண்மை. றெமிடியஸ் இதற்கு இலக்கணமாக விளங்குகிறார்.

 

பிரான்ஸ் நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் ஒலி வானொலி றெமிடியசை அண்மையில் காற்றலையில் நேர்காணல் கண்டது. அப்போது அவர் சிங்களவர்கள் பெரிய இராசதந்திரிகள் - புத்திசாலிகள் - என்றும் அவர்களோடு ஒத்தோடித்தான் காரியங்களை சாதிக்க வேண்டும் என்றும் சொன்னார். 1949 தொடங்கி தமிழ் அரசியல் தலைவர்கள் சிங்கள அரசோடு ஒத்துழைக்காது எதிர்ப்பு அரசியல் செய்தார்களாம். அதனால் எல்லாம் பாழ் என்கிறார். இந்த ஞானோதயம் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் ததேகூ சார்பாக போட்டியிட்ட போது தோன்றவில்லையா? குறைந்தது 2010 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டி போட்ட போதும் தோன்றவில்லையா? இப்போது எந்தப் போதி மரத்தின் கீழ் இருந்தபோது இந்த ஞானோதயம் பிறந்தது?

 

அரசியலில் இவர் தன்னைத் தந்தை செல்வநாயகத்தை விட, அமிர்தலிங்கத்தை விட, சிவசிதம்பரத்தை விடப் புத்திசாலி என்று நினைக்கிறார். தான் பெரிய அரசியல் சாணக்கியன் என்று எண்ணுகிறார். தமிழ்த் தலைவர்கள் உடன்பாடுகள் மூலம் சிங்கள அரசியல் தலைமைகளோடு ஒத்துப் போகப் பார்த்தார்கள். சமரசம் செய்து பார்த்தார்கள். அதற்காக குறைந்த பட்ச கோரிக்கைகளை முன்வைத்தார்கள். 1965 - 1968 காலப் பகுதியில் அமைச்சரவையில் கூட ஒரு தமிழர் அமைச்சராக இருந்தார். பலன் ஒன்றும் இல்லை. சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களை ஏமாற்றினார்கள். நீலம் - பச்சை என்ற நிறவேறுபாடின்றி ஏமாற்றி வருகிறார்கள்.

 

மகிந்த இராசபக்சே போரின் போது வி.புலிகளுக்கு இராணுவத் தீர்வு தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு என்றார். போரின் குறிக்கோளே வி.புலிகளின் கைகளில் சிக்குண்டு தவிக்கும் தமிழ் மக்களை விடுவிப்பதே என்றார்.

 

ஆனால் போர் முடிந்து நாலு ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசியல் தீர்வைக் காணோம். 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மேலாக மாகாண சபைகளுக்கு உரிமை வழங்கப்படும் என்று திருவாய் மலர்ந்த மகிந்த இராசபக்சே இப்போது 13 ஆவது சட்ட திருத்தம் மாகாண சபைகளுக்கு வழங்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைப் புடுங்கப் போவதாகச் சொல்கிறார்.

 

போர் முடிந்த பின்னர் தமிழ்மக்கள் பிச்சைக்காரர்கள் போல் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளார்கள். இடம்பெயர்ந்த 286,000 மக்களில் 93,000 மக்கள் இன்னும் அவர்களது சொந்தக் காணிகளில் மீள் குடியமர்த்தப்படவில்லை. போரில் கணவர்களை இழந்த 89,000 கைம்பெண்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ளார்கள். வி.புலிகளுக்கு தேநீர் கொடுத்தார்கள், இடியப்பம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுமார் 1,000 தமிழ் அரசியல் கைதிகள் தென்னிலங்கைச் சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

 

காணாமல் போன தங்கள் கணவன்மார், பிள்ளைகள் எங்கே என்று கேட்டு தமிழ் மக்கள் அவர்களது படங்களோடு தெருத் தெருவாக கண்ணீரும் கம்பலையுமாக அலைகிறார்கள்.

 

இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு வீட்டைத்தானும் இந்த அரசு கட்டிக் கொடுக்கவில்லை. மாறாக தமிழ்மக்களது காணி, பூமிகளை அபகரித்து அவற்றில் இராணுவ தளங்கள், இராணுவ குடியிருப்புக்கள், உல்லாச விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், உணவுவிடுதிகள், பழத் தோட்டங்கள், நெல்விதைப்பு, சிங்களக் குடியேற்றங்கள், பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள், போர் அருங்காட்சியகங்கள் (War Museums) வெற்றித் தூண்கள் (War Memorials) சிங்கள இனவாத அரசு நிறுவி வருகிறது.

 

முல்லைத்தீவு மாவட்டம் திருமுருகண்டி - கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட கிழக்குப் பக்கமாகவுள்ள காட்டுப் பகுதியில் 4,000 ஏக்கர் நிலத்தில் �போர் வீரர் வீட்டுத் திட்டம்" (War Heroes Housing Scheme) என்ற பெயரில் 8,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அரை ஏக்கர் காணியில் கட்டப்படும் இந்த வீடுகளில் போரில் உறுப்புகளை இழந்த படையினர் குடியேற்றப்படுவர். இந்தக் குடியேற்றம் ஒட்டிசுட்டான் பிரதேச சபைப் பகுதிக்குள் வருகிறது. போர் வீரர் வீட்டுத்திட்டம் என்ற பெயரில் 50,000 வீடுகள் வடக்கில் கட்டப்படும் என மகிந்த இராசபக்சே அறிவித்துள்ளார். மின்சாரம், குடிதண்ணீர், கழிவறை, வீதிகள், மருத்துவமனைகள், வங்கிகள், சந்தைகள், பள்ளிக்கூடங்கள் எனச் சகல வசதிகளையும் இந்த வீட்டுத் திட்டம் கொண்டிருக்கிறது.

 

வலிகாமம் வடக்கிலும் கிழக்கிலும் மட்டும் இராணுவம் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வளமான 6,382 ஏக்கர் (102,112 பரப்பு) உறுதிக் காணிகளை சுவீகரித்துள்ளது. இது 25.8 சதுர கி.மீ நிலப்பரப்புக்கு ஒப்பானது. கொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஈடானது. இதனால் தங்கள் சொந்தக் காணி பூமிகளில் மீள் குடியேறலாம் என 23 ஆண்டு காலம் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த வலிகாமம் வடக்கை சேர்ந்த 7 ஆயிரத்து 60 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்து 328 பேர்களது (27 கிராம சேவைப் பிரிவுகள்) நம்பிக்கை நொருக்கப்பட்டுள்ளது. அவர்களது கண் எதிரிலேயே அவர்களது வீடுவாசல்கள் இராணுவத்தால் இடிக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழ்மக்களது வளமான காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு இராணுவ முகாம்கள் உருவாக்கப்படுவது பற்றி யாழ்ப்பாணம் வந்த (செப்தெம்பர் 10, 2013) அமைச்சர் பசில் இராசபக்சேயிடம் நிருபர்கள் வலிகாமம் வடக்கு காணி அபகரிப்புக் குறித்து கேட்டபோது "அந்த நிலம் முழுமையாக அரச தேவைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது" என ஆணவத்தோடு பதில் இறுத்தார்.

 

காணாமல்போனவர்கள் குறித்துக் கேள்வி கேட்டதற்கு "வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பலர் காணாமல் போயிருக்கிறார்கள். எனவே அந்தச் சிக்கலை மக்கள் மறக்க நீண்டகாலம் செல்லும். அதனைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்த யாரும் நினைக்கவேண்டாம். அதேபோல் ஊடகங்களும் மக்கள் அந்த விடயத்தை மறக்கும் வகையில் செய்திகளை வெளியிடவேண்டும்" எனக் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றிப் பதில் அளித்தார்.

 

றெமிடியாஸ் தமிழ் ஒலி வானொலிக்கு கொடுத்த செவ்வியில் சிங்களவர்கள் புத்திசாலிகள் என்கிறார். அவர்களுக்கு இருக்கிற புத்தி எங்களுக்கு இல்லை என்றார்.

 

புத்திசாலிகள் என்றால் நாடு இந்த அலங்கோலத்தில் இருக்குமா? வளமே இல்லாத சிங்கப்பூர் இன்று தெற்காசியாவில் ஒரு குட்டி வல்லரசு. சராசரி வருமானம் 60,900 (2012 மதிப்பீடு) அ.டொலர்கள். ஆனால் சிறீலங்காவின் சராசரி வருமானம் 2,923 அ.டொலர்கள் மட்டுமே. இப்போது சொல்லுங்கள்? சிங்களவர்கள் புத்திசாலிகளா?

 

மே 19, 2009 இல் போர் முடிந்த பின்னர் தமிழர்களை அவர்களது வீடு வாசல்களில் மீள் குடியேற்றி, அவர்களது உடைந்த வீடுகளை மீளக் கட்டிக் கொடுத்து, வேலை வாய்ப்புக்களை செய்து கொடுத்து, இராணுவத்தை விலத்தி, மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ அனுமதித்திருக்க வேண்டும். திட்டங்கள் தீட்டி அவர்களது வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும். செய்தார்களா? மேலே குறிப்பிட்டது போல் இன்றும் இடம்பெயர்ந்த 286,000 மக்களில் 93,000 மக்கள் கண்ணீரும் கம்பலையும் ஆக தெருவீதிகளில் விடப்பட்டிருக்கிறார்கள்.

 

வட கிழக்கில் ஒரு இராணுவ சர்வாதிகார ஆட்சிதானே நடக்கிறது? தமிழ்மக்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் இரணில் விக்கிரமசிங்கி ஒப்புதல் வாக்கு மூலம் அளிக்கிறார். சென்ற மாதம் இலங்கைக்கு வந்த அய்நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அதைத்தானே தனது ஆறு பக்க அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

 

"இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளத. சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகளால் மனிதஉரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளது. சிறீலங்கா சர்வாதிகார பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. என்னுடன் கலந்துரையாடிய மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் சிறீலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர். இது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

 

இதுபோன்ற கண்காணிப்பும் துன்புறுத்தலையும் வைத்துப் பார்க்கும் போது சிறீலங்கா மோசமான நிலையில் உள்ளது என்று தோன்றுகிறது. போர் நடந்த வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து போர்க் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். தகவல் அறியும் சட்டத்தை இலங்கை நடைமுறைப்படுபடுத்த வேண்டும்.காணாமல் போனவர்கள் குறித்த சிறீலங்கா அரசின் விசாரணைக் குழு ஏமாற்றம் தருகிறது. சிறீலங்காவில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்."

 

நவநீதம் பிள்ளை வருணித்தவாறு மனித உரிமைகளை காலில் போட்டும் மிதிக்கும் ஆளும் கட்சியில்தான் றெமிடியஸ் சரணாகதி அடைந்துள்ளார். சரண் அடைந்துவிட்டு சாக்கடையை சந்தணம் என்கிறார். கோட்டானைக் குயில் என்கிறார்.

பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும். ஆனால் பன்றியோடு சேர்ந்த கன்று இனி மலம் தின்னப் போகிறது.

மரங்களை வெட்டிச்சாய்க்கும் கோடரியின் காம்பு ஒரு மரத்தால் ஆனது என்பது எத்தகைய குரூரமான உண்மை.

சிங்களவர்கள் புத்திசாலிகள் என்றால் இன்று உலகில் இரண்டொரு நாடுகள் நீங்கலாக மற்ற நாடுகளின் பகையை மகிந்த இராசபக்சேயின் குடும்ப ஆட்சி தேடிக் கொண்டுவிட்டதே? அய்நா மனித உரிமை அவையில் ஒருமுறைக்கு இருமுறை சிறீலங்காவுக்கு எதிரான அமெரிக்க நாட்டின் தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறதே?

 

ததேகூ தலைவர்கள் கொழும்பில் வீடு வாசல்கள் வாங்கி சுகபோகம் அனுபவிக்கிறார்கள் என்று றெமிடியாஸ் வயிறு எரிகிறார். யார் அந்தத் தலைவர்கள்? சுமந்திரனுக்கு வீடு இருக்கிறது. மாவைக்கு வீடு இருக்கிறதா? சிறீதரனுக்கு வீடு இருக்கிறதா? யோகேஸ்வரனுக்கு வீடு இருக்கிறதா? சொல்லக் கதை இல்லாவிட்டால் செல்லக் கதையா?

 

வடமாகாண சபைத் தேர்தலை இராசபக்சே நடத்துகிறாராம். அதன் மூலம் சனநாயகத்தை நிலைநாட்டுகிறாராம். ஆனால் உண்மை என்ன? இராஜபக்சே தானே முன்வந்து நடத்துகிறாரா அல்லது பன்னாட்டு அழுத்தம் காரணமாக நடத்துகிறாரா?

 

தமிழ்மக்கள் மே 2009 குப் பின்னர் நடந்த எல்லாத் தேர்தல்களிலும் மகிந்த இராசபக்சேயையும் ஆளும் கட்சியையும் அடியோடு நிராகரித்திருக்கிறார்கள். இது சிங்கள ஆட்சியாளரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறதா? மகிந்த இராசபக்சே தமிழர்களை ஏய்ப்பதில் புத்திசாலி என்று சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நாட்டை ஆளுவதில் அவர் புத்திசாலியாய் நடந்து கொள்கிறாரா? சிறீலங்காவில் ஒரு சர்வாதிகார குடும்ப ஆட்சி நடைபெறுகிறதாக முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் சொல்கிறார். சிறீலங்கா இலங்கை சர்வாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது என்று அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை சுட்டிக் காட்டியுள்ளார்.

அய்நா மனித உரிமை பேரவையின் 24 வது பருவகால அமர்வு ஜெனீவாவில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கிய போது சிறீலங்கா குறித்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை அங்கு மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து சிறீலங்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மகிந்த இராசபக்சே ஒரு திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி என சிங்கப்பூரின் நவீன சிற்பி என்று அழைக்கப்படும், சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ "லீ குவான் யூ உடனான உரையாடல்கள்" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் அவர் அந்த நூலில் கூறியிருப்பதாவது:

 

சிறிலங்காவில் சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. சிறிலங்கா ஒரே நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.

 

சிறிலங்காவில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். இதன்மூலம் சிறிலங்கா இனச்சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்று அதிபர் இராஜபக்ச கூறி வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் அடங்கிப் போகமாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடிவிடவும் மாட்டார்கள். சிறிலங்கா அதிபர் இராஜபக்சவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன்.

 

அவர் ஒரு சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன். அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ முடியாது.

 

சிறிலங்கா இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மையாக உள்ள சிங்களவர்கள் விடுதலைப் புலிகளை அழித்து விட்டனர் என்பது உண்மைதான். ஆனால், சிறுபான்மையினரான தமிழர்களை வெல்லும் தகுதியும் துணிச்சலும் அவர்களுக்கு நிச்சயம் இல்லை.

 

யாழ்ப்பாணத் தமிழர்களை அவர்களால் நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி, ஒடுக்க முனைகிறார்கள். முன்பும் இப்படித்தான் செய்தார்கள். இதுதான் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய முனைகிறார்கள்.

 

ஆனால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அழித்துவிட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருதுகிறேன். சிறிலங்காவில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்டமான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

 

தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்டகாலம் காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன். அதற்கேற்றபடி தான் சிறிலங்கா அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

 

என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்களுக்குத் தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும்.

 

மகிந்த இராஜபக்சே இன் சாமுத்திரிகா இலட்சணங்கள் இப்படி அலங்கோலமாக இருப்பதைத் தெரிந்து கொண்டும் அப்படியான ஒரு சிங்கள தீவிரவாதியின் கட்சியில் சேர்ந்து மாகாணசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்துக்கு புள்ளடி போடுங்கள் என்று தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்க றெமிடியாசுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை, துக்கம், சோகம் எதுவுமே இல்லையா?

 

உலகில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளின் 2013 ஆம் ஆண்டுப் பட்டியலை அய்.நா வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை டென்மார்க் பிடித்துள்ளது. கனடா 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 17 ஆவது இடம். அய்க்கிய இராச்சியம் 22 ஆவது இடம். இந்தியா 111 ஆவது இடம், பங்காளதேஷ் 108 ஆவது இடம், நேப்பாளம் 135 ஆவது இடம். சிறீலங்கா? 156 நாடுகளில் 137 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது சிங்களவர்கள் புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறதா?

 

முடியப்பு றெமிடியஸ் தன்னை மனித உரிமைக்காகப் பாடுபடும் வழக்குரைஞர் என்கிறார். அப்படியென்றால் மற்றவர்களை விட மகிந்த இராஜபக்சாவின் மனித உரிமை மீறல்களை அடி முதல் நுனிவரை அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்தும் மகிந்த இராஜபக்சேயின் கட்சியில் சேருவது ஏன்?

 

மக்களாட்சி முறைமையில் ஊடகங்கள் நான்காவது தூணாகப் போற்றப்படுகிறது. ஆனால் மகிந்த இராஜபக்சாபின் ஆட்சியில் லசந்தா விக்கிரமதுங்க உட்பட 34 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 25 பேர் நாட்டை விட்டு ஓடித் தப்பிவிட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் 30 பேர் தமிழர்கள், 3 பேர் சிங்களவர்கள் ஒருவர் முஸ்லிம்.

 

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் ஊடக சுதந்திரத்துக்காக பாரிய விலை கொடுத்துள்ளது. 2006 ஆம் ஆண்டு தொடங்கி அதன் ஆசிரியர்கள், நிருபர்கள், பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். தாக்கப்பட்டுள்ளார்கள். காணாமல் போயுள்ளார்கள்.

 

இந்த ஆண்டு ஏப்பிரில் 13 ஆம் நாள் காலை 4.30 மணியளவில் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் அச்சு இயந்திர பிரிவ இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன் போது அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. இதனால் உதயன் நிர்வாகத்துக்கு ஒரு கோடி உரூபாய் இழப்பு ஏற்பட்டது. தாக்குதல்களில் ஈடுபட்ட எவரும் கைது செய்யப்படவில்லை.

உலக அரங்கில் ஊடக சுதந்திரத்தில் 165 ஆவது இடத்துக்கு கடந்த வருடம் இலங்கை தள்ளப்பட்டிருந்தது. இன்னமும் விடாது தொடருகின்ற ஊடகங்கள் மீதான வன்முறைகளால் இந்நாட்டில் ஊடக சுதந்திரத்தின் நிலை மேலும் மோசமாகி விடும்.

 

ஆனால் றெமிடியஸ் இந்த கொலை, கொள்ளை, தாக்குதல், எரிப்பு போன்றவற்றுக்குப் பின்னால் உள்ள மகிந்த இராஜபக்சேயின் கட்சிக்கு இப்போது நாலுகால் பாய்ச்சலில் தாவியிருக்கிறார்.

 

இந்த இலட்சணத்தில் மனித உரிமை மீறல் வழக்குகளைத் தான் ஒருவனே அதிகளவில் நடாத்துவதாக தம்பட்டம் வேறு அடிக்கிறார்.

 

700 க்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் விசாரணையின்றி, வழக்கின்றி அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்துவர்கள் யார்? அவர்களைச் சித்திரவதை செய்து அதில் இன்பம் காண்பவர்கள் யார்? மகிந்த இராசபக்சே ஆட்சிதானே இந்த தமிழ் அரசியல் கைதிகளை அணுவணுவாக கொலை செய்கிறது?

 

இப்படியான ஒரு கொடுங்கோல் ஆட்சி நடத்துபவர்களின் கட்சியில்தானே றெமெடியஸ் சங்கமம் ஆகியிருக்கிறார். சங்கமம் ஆனபின் அவர்களை அரசு விடுவித்து விட்டதா? விடுவிப்பதாக அரசு சொல்கிறதா?

 

இது எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில் சக்கிடுத்தார் ஏறி விழுந்த கதைமாதிரி இல்லையா?

 

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள - பவுத்த வெறியரான மகிந்த இராஜபக்சே ஆட்சியில் தமிழ்மக்கள் வரலாறு காணாத உயிரழிவையும் உடைமை அழிவையும் சந்தித்துள்ளார்கள். போரின் இறுதிக் கட்டத்தில் குண்டடி பட்டும் செல்லடி பட்டும் மக்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டார்கள். போர் விதிகளை மீறி நச்சு வாயுக் குண்டுகள் வீசப்பட்டன. கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. மருத்துவமனைகள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன.

 

வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைக் குடியேற்றி அந்த மாகாணங்களில் தமிழர்களை சிறுபான்மை ஆக்கும் முயற்சியில் சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழர்களது காணிகள் வலோத்காரமாகப் பறிக்கப்பட்டு சிங்களவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

 

வடக்கிலும் - கிழக்கிலும் ஆளுநராகவும் அரச அதிபர்களாகவும் ஓய்வு பெற்ற சிங்கள படைத்தளபதிகளே நியமிக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பான்மை தமிழ்மக்கள் வாழும் வவுனியா, திருகோணமலை, அம்பாரை மற்றும் மன்னாரில் சிங்களவர்களே அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

இவற்றை எல்லாம் கண்டும் கேட்ட பின்னரும் பட்டம், பதவி, பணத்துக்காக ஆளும் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் றெமிடியாசுக்கு மக்கள் உரிய தண்டனை வழங்க வேண்டும். இராணுவ ஆட்சியன் கீழ் தமிழ்மக்களை அடிமைகளாக, பொட்டுப் பூச்சிகளாக, புன்மைத் தேரைகளாக நசுக்கி அடக்கி ஒடுக்கி வாட்டி வதைக்கும் சிங்கள - பவுத்த பேரினவாதக் கட்சியையும் கட்சி தாவிய முடியப்பு றெமிடியசையும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும். எதிரியைவிடத் துரோகிகள் ஆபத்தானவர்கள்.

 

 

 

http://www.seithy.com/breifArticle.php?newsID=92836&category=Article&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.