Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓநாயை உள்ளே விடாதீர்கள் விக்கி! புகழேந்தி தங்கராஜ்

Featured Replies

அலைபேசி ஒலிக்கும் போதெல்லாம் பயமாக இருக்கிறது. சிவகாமியைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் - என்று அடம்பிடிக்கிறார் நண்பர் அப்புசாமி. கதர் கோஷ்டியே மறந்துவிட்டது அந்த ஏழைத் தாயை! அவர்களைப் பொறுத்தவரை, அன்னை என்றால் சோனியா, சோனியா என்றால் அன்னை. இத்தாலிச் சாத்தனாருக்கோ சோனியா என்றால் மணிமேகலை, மணிமேகலை என்றால் சோனியா! அரசியல் பிழைப்பு நடத்தும் இவர்களில் எவரும், இந்த நவீன மணிமேகலையின் கையிலிருக்கும் அமுதசுரபியிலிருந்து ஒன்றரை லட்சம் ஈழச் சொந்தங்களின் ரத்தம் நிரம்பி வழிவதைக் கவனிப்பதே இல்லை. (ஏம்பா, உங்களுக்கெல்லாம் என்ன கண்ணவிஞ்சு போச்சா?)

விருதுநகரிலிருந்த தாயார் சிவகாமிக்கு, வீட்டுச் செலவுக்காக  மாதந்தோறும் எழுபது ரூபாயோ எண்பது ரூபாயோ அனுப்பிக்கொண்டிருந்தார் முதலமைச்சராக இருந்த காமராஜர். ஒருமுறை விருதுநகருக்கு வந்த மகனிடம், கூடுதலாகப் பணம் அனுப்பச் சொல்லி முறையிட்டார் சிவகாமி அம்மையார். 'இதுக்கு மேல உனக்கு என்ன செலவு' என்று கேட்டார் காமராஜ். 'என்னைப் பார்க்க வருபவர்களுக்கு ஒரு சோடாவோ கலரோ வாங்கிக் கொடுக்க வேண்டாமா' என்றார் சிவகாமி. 'நீ இப்படியெல்லாம் பணத்தை வீணடிக்காதே! பார்க்க வருபவர்கள் உன்னிடம் சோடாவோ கலரோ கேட்டார்களா' என்று காமராஜர் கோபமாகக் கேட்க, அதற்குமேல் பேசவேயில்லை சிவகாமி.

மேலேயுள்ள இரண்டு பத்தியை டைப் செய்து முடிப்பதற்குள் அப்புசாமி அலைபேசி வாயிலாக அழைக்க, 2 பத்தியையும் படித்துக் காண்பித்தேன். 'நான் சொன்ன சிவகாமி காமராஜரின் தாயார் சிவகாமி அல்ல' என்று அப்புசாமி சொல்வதற்குள், சிக்னல் போய்விட்டது. எந்த சிவகாமியைச் சொல்கிறார் இவர்?

காமராஜரின் தாயாரைத் தவிர இன்னொரு சிவகாமி இருக்கிறார். கருணாநிதி முதலான நம்மூர் நடிகர்களின் சாதனையையே முறியடித்த சிவகாமி. சாகும்வரை நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியின் சாதனையைப் போலவே, இவரது மாபெரும் தயிர்சாத உண்ணாவிரதப் போராட்டத்தைப் பற்றியும் கின்னஸ் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லையே  என்பதில் உள்ளபடியே வருந்துபவன் நான்.

ராஜீவ் கொலை வழக்கில் அநியாயத்துக்குப் பழி சுமத்தப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் எப்படியாவது  தூக்கில் போட்டுவிட சிவகங்கை மாவீரர்கள் தலைகீழாய் நின்ற சமயத்தில், ஒட்டுமொத்தத் தமிழகமும் பொங்கி எழுந்தது. கோவையைக் கந்தகபூமியாக்கிய கு.ராமகிருஷ்ணன் தலைமையிலான போராட்டங்கள், சகோதரிகள் வடிவாம்பாள், அங்கயற்கண்ணி, சுஜாதா ஆகிய 3 பெண் வழக்குரைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் என்று தமிழகமே பற்றி எரிந்தது. அனைத்து அரசியல் இயக்கங்களும் தோளோடு தோள் நின்று, அந்த மூன்று உயிர்களுக்காக நியாயம் கேட்டனர். முத்தாய்ப்பாக காஞ்சிபுரத்து வீர வித்து தங்கை செங்கொடி, தன் அண்ணன்மார் மூவருக்காக தன் உயிரை அர்ப்பணித்தாள். தன் உயிரைத் தாரைவார்த்து மூவரின் உயிரைக் காத்தது அந்தப் பெண்தெய்வம்.

மத்திய உள்துறை பின்னிய சதிவலை அறுத்தெறியப்பட்ட பிறகு, பேரறிவாளன் முதலானோருக்காக மட்டுமின்றி, மரண தண்டனை அறவே ஒழிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் சென்னையில் நடத்தியது. 40 நாட்களுக்கு மேல் அந்தப் போராட்டம் நடந்தது. வெவ்வேறு நாளில் வெவ்வேறு இயக்கங்கள் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை கோயம்பேட்டில் அந்தப் போராட்டம் நடந்தது. (சென்னையில் திருச்சி சௌந்தரராசன் என்கிற அந்த ஒரு மனிதரைத் தவிர வேறு யார் இதற்கெல்லாம் இடம் கொடுக்கிறார்கள்!)

உச்சிதனை முகர்ந்தால் - திரைப்பட இறுதிக்கட்டப் பணிகள்  நடந்துகொண்டிருந்த அந்த நாட்களில், முடிகிற சமயத்திலெல்லாம் அந்த உண்ணாவிரதப் பந்தலுக்குப் போய்வந்தவன் என்கிற முறையில், அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கவனித்து வந்தவன் நான். அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்  பங்கேற்ற அமைப்புகளின் தலைவர்களில் பலரும் அதில் முழுமையாக, மனப்பூர்வமாக ஈடுபட்டவர்கள். அண்ணன் வைகோ போன்ற தலைவர்கள்,  3 உயிர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்கிற உறுதியுடனும் ஓர்மத்துடனும் ஒருநாள்  உண்ணாவிரதப் போராட்டத்தில்  முழுமையாக ஈடுபட்டார்கள் என்று நினைவு.

சில தலைவர்கள், தங்களது அரசியல் பணிகள் காரணமாக சில மணி நேரங்கள் மட்டுமே அதில் பங்கேற்க முடிந்தது. பல்வேறு அரசியல் பணிகளுக்கிடையே, அது இயல்பான ஒன்றுதான். அதிலும் சாதனை படைத்தவர் சிவகாமி. அவரது அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, மின்னல் மாதிரி வந்து மின்னல் மாதிரி மறைந்தவர் அவர். (மாயி அண்ணன் வந்திருக்காக.... மாப்பிள்ளை மொக்கசாமி வந்திருக்காக... மற்ற உறவினர்களெல்லாம் வந்திருக்காக.... வாம்மா மின்னல் - என்கிற டயலாக்கை தயிர்சாதம் கொண்டுவந்த காரில் பண்பலை வானொலியில் கேட்டீங்களா சிவகாமி?)

சாகும் வரை போராட்டத்துக்கே கருணாநிதிக்கு 4 மணிநேரம் என்றால், ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இரண்டரை மணி நேரம் போதாதா என்று சிவகாமி நினைத்தாரோ என்னவோ! அதற்குப் பிறகு அந்த வானவில்லைக் காணவில்லை! ஈழத்து உறவுகளுக்காக  நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையெல்லாம்  முறியடித்த சாதனை இது! (லிம்கா புக்குலயாவது போடுங்கப்பா!)

அதைக்காட்டிலும் மிகப்பெரிய சாதனை - உண்ணாவிரதப் பந்தலுக்கு தயிர் சாத அண்டாவோடு வந்த முதல் 'போராளி' என்கிற சிவகாமியின் சாதனை. (அது அண்டாவா குண்டாவா?  சாஸ்திரி பவன் கேன்டீனில் தயாரிக்கப்பட்டதா, கியூ பிரான்ச் கேன்டீனில் தயாரிக்கப்பட்டதா? தயிர்சாதம் 'ரா'வாக இருந்ததா அல்லது உப்பு உறைப்பெல்லாம் சேர்த்திருந்தார்களா? இதைப் பற்றியெல்லாம் விசாரித்து இன்னொரு கட்டுரையில் எழுதுகிறேன்!)

தயிர்சாத அண்டாவை அன்புச் சகோதரி சிவகாமி உண்ணாவிரதப் பந்தலுக்குள் கொண்டுவந்தபோது - 3 உயிர்களைத் தங்கள் உயிராகவே கருதிப் போராடிக் கொண்டிருந்த போராட்டக் குழு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும், அதனால் அதை வேறு இடத்தில் கொண்டுபோய் வைத்ததும், இடையே போய் சாப்பிட்டுவிட்டு வந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்ததும், உன்னதமான அந்த உயிர்காப்புப் போராட்டத்துக்கு ஒரு மாஜி ஐ.ஏ.எஸ். அதிகாரியால் வைக்கப்பட்ட கரும்புள்ளி. (கரும்புள்ளியாக இருந்தால்தான் பெரும்புள்ளியாக மாறமுடியும் என்கிற 'ரா'வான உண்மையை மட்டும் புரிந்துகொண்டீர்களென்றால், பார்க்கிற வேலையை உதறித் தள்ளிவிட்டு வந்து படையோ கடையோ ஏதோ ஒன்றை நடத்தி நீங்களும்  பிழைப்பு நடத்திக் கொள்ளலாம்!)

எனக்குத் தெரிந்த இரண்டு பேரைப் பற்றி எழுதியாகிவிட்டது. சிக்னல் கிடைத்ததும் அப்புசாமியிடம் கேட்கவேண்டும்... வேறு  எந்த சிவகாமியைப் பற்றி எழுதச் சொல்கிறார் என்று! சரத்குமார் போல் எதையுமே முழுமையாகத் தெரிந்து கொண்டு எழுதுவதுதானே நல்லது! (இந்தக் கட்டுரையையும் வேறு பெயரில் போட்டுடாதீங்க சரத்!)

இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதா - என்கிற கோபத்துடன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  திருச்சியிலிருந்து சென்னைக்கு சைக்கிள் பயணம் வந்துகொண்டிருக்கிறார்கள் மாணவத் தம்பிகள்.

இனப்படுகொலை இலங்கையே!

3 லட்சம் தமிழரின்

பிணக்குவியல் மீது காமன்வெல்த்தா?

என்பது அவர்களது கோபாவேசக் கேள்வி! 

விழுப்புரத்தில் அவர்களைச் சந்தித்து வாழ்த்திவிட்டு அவசர அவசரமாகச் சென்னை திரும்பியதே, இந்த இதழ் கட்டுரையை எழுதுவதற்காகத்தான்! (இந்த இதழ் வெளியாகும் 19ம் தேதி  வியாழக்கிழமையன்று மாலையில் சைக்கிள் பயணம் செங்கல்பட்டு வந்து சேர்ந்துவிடும்!)

இந்த வாரம் திலீபன் வாரம். அந்த மாவீரன் பற்றித்தான் எழுத நினைத்தேன். 'தாயகத்துக்காகத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த 650 மாவீரர்களுடன் இணைகிறேன்' என்று சாகும் தருவாயிலும்  பெருமிதத்துடன் அறிவித்தானே.... அந்த மாவீரனின் வார்த்தைகளை நினைத்தபடியே தான் திரும்பினேன் விழுப்புரத்திலிருந்து!  எதை நினைத்தேனோ அதை எழுதியே ஆக வேண்டும்.

இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன் குறித்த தொலைநோக்குப் பார்வை இல்லாமல், இலங்கை செய்த இனப்படுகொலையை வன்மையாகக் கண்டித்த தாயார் இந்திராவின் அரசியல் ஆண்மையை உள்வாங்கிக் கொள்ளாமல், பெருமைமிக்க பாரத தேசத்தின் படையையே இலங்கையின் கூலிப்படையாக மாற்றியவர் யார் - என்று கேட்டால், சட்டென்று பதில் சொல்லி விடுவீர்கள் "ராஜீவ்காந்தி" என்று! இலங்கைக்கு விலைபோனவர்களின் தவறான வழிகாட்டுதலே, இலங்கை என்கிற குட்டிச் சுவரில் போய் ராஜீவின் இந்தியா முட்டிக்கொண்டதற்குக் காரணமாக இருந்தது. இந்தியாவின் இந்த  முட்டாள்தனத்தை முதல்முதலாக அம்பலப்படுத்தியவன் திலீபன்.

ஜெயவர்தனே - ராஜீவ்காந்தி ஒப்பந்தத்திலிருந்த ஓட்டைகளை அம்பலப்படுத்தியது திலீபனின் உண்ணாவிரதம். அது, தமிழீழ  வரலாற்றின் திருப்புமுனை. அவனது வரலாறு சிவகாமிகளின் வரலாற்றைப் போல் தயிர் சோற்றால் எழுதப்படவில்லை, தண்ணீர் கூட குடிக்க மறுத்து உண்ணாவிரதம் இருந்த அந்த இளைஞனைப் பார்த்துக் கண்ணீர் வடித்தார்களே ஆயிரமாயிரம் ஈழத் தாய்மார்கள்..... அந்தக் கண்ணீர் ஊற்றால் எழுதப்பட்டது.

நல்லூர் முருகன் கோயில் திடலில் உண்ணாவிரதம் இருந்த திலீபனைத் தரிசிக்கத் திரண்டிருந்த எங்கள் தாய்மார்களும் சகோதரிகளும், அந்த மகனுடன்......... அந்தச் சகோதரனுடன் சேர்ந்து மூன்றுவேளை உணவு மறந்து  கண்கலங்கக் கூடியிருந்தார்கள். (தயிர்சாத அண்டாவுடன் வர, அவர்கள் என்ன படையா நடத்துகிறார்கள்?) காந்திய மொழியில் பேசிய திலீபன் என்கிற அந்த இளைஞனின் குரலைக் கேட்க மறுத்தது ராஜீவின் ஐந்தாம்படை.

ராஜீவ் காந்தி ஒரு மாஜி பைலட். அரசியலை நன்கு அறிந்த திலீபன் என்கிற அறிவு முதிர்ச்சி மிக்க ஓர் இளைஞனின் குரல் அவருக்குக் கேட்காது போயிற்று. அதைப்பற்றி அடுத்த இதழில் எழுதவேண்டும். அதற்குமுன், ஒரு மாஜி நீதிபதி பற்றி இந்த இதழிலேயே எழுதியாகவேண்டும். திலீபன் என்ன சொன்னான் என்பதையே புரிந்துகொள்ளாத நீதிபதி அவர். (மாஜி பைலட்டுகள், மாஜி  நீதிபதிகள், மாஜி ஐ.ஏ.எஸ்.கள் எல்லாம் தயிர்ச் சோறாகவே தான் இருப்பார்கள் போலிருக்கிறது!)

அந்த மாஜி நீதிபதியின் பெயர், விக்னேஸ்வரன். பெயரைச் சொன்னதும் புரிந்துகொண்டிருப்பீர்கள்..... வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர். 'பிரபாகரன் பிறந்த மண்ணில் நின்றுகொண்டு சொல்கிறேன்... பிரபாகரன் பயங்கரவாதி அல்ல, மக்களுக்காகப் போராடிய மாவீரன்' என்று வல்வெட்டித்துறையில் நின்று கொண்டு பேசுகிறார். (இப்படிப் பேசாட்டா எப்படி ஓட்டு விழும்?) இன்னொரு பக்கம், 'உரிமைகளைக் கேட்க இந்தியாவையும் சர்வதேசத்தையும் நாடுவோம்' - என்கிறார்.

உரிமைகளைப் பெற எந்த இந்தியாவை நாடப்போகிறார் விக்னேஸ்வரன்? ஒன்றரை லட்சம் பேர் கொன்று குவிக்கப்படவும், பல்லாயிரம் சகோதரிகள் பாலியல் பலாத்காரத்தால் சிதைக்கப்படவும் பூரண ஆசீர்வாதம் கொடுத்து இலங்கை அரக்கர்களுக்கு அருள்பாலித்ததே, அந்த இந்தியாவையா? திலீபன் என்கிற அகிம்சைப் போராளியை எங்கள் கண்ணெதிரில் சிறிதுசிறிதாகச் சாகவிட்டதே, அந்த இந்தியாவையா? எந்த இந்தியாவை?

திலீபன் உண்ணாவிரதம் இருந்தது 1987ல். அப்போதே திலீபன் தெளிவாக இருந்திருக்கிறான். உண்ணாவிரதத்தைத் தொடங்கும்போதே, விக்கிகள் போல குழம்பிக் கொண்டிராமல் தெளிவாகப் பேசியிருக்கிறான். "நாம் இழந்த உரிமைகளை நாமே மீட்டெடுக்க வேண்டும்" என்றான் திலீபன். "என்றேனும் ஒருநாள் எம் மக்கள் தங்களது சுதந்திரத்தை தாங்களே வென்றெடுப்பார்கள்.  மற்றவர்களைக் கொண்டு அதை வென்றெடுத்துவிடலாம் என்று எதிர்பார்க்கவே கூடாது" என்றான் உறுதிகுலையாத குரலில்!

திலீபனின் குரல் மாவீரர்களின் குரல் என்றால், இந்தியாவின் உதவியை நாடுவோம் -  என்று கதைக்கும் மேதாவிகளின் குரல் எவரது குரல்? 'தமிழகத்திலிருப்பவர்கள் ஈழப் பிரச்சினையில் தலையிடத் தேவையில்லை' என்று மூச்சுவிடும் போதெல்லாம் முனகுபவர்கள், துரோக இந்தியா மட்டுமே தலையிட வேண்டும் - என்று வெட்கமில்லாமல் பேசுவது எப்படி? ஆட்டுப்பட்டிக்குள்  ஓநாயை மீண்டும் அனுமதித்துவிடாதீர்கள் விக்கி!

இந்தியாவின்  விரும்பத்தகாத தலையீட்டால்தான், இந்தியாவின் நயவஞ்சகத்தால்தான், உண்மையோடும் உறுதியோடும் போராடிய எங்கள் உறவுகளின் சுய உரிமைப்  போராட்டம் நசுக்கப்பட்டது.  இந்தியாவின் துரோகத்தால்தான் எங்கள் திலீபன், எங்கள் இனத்தின் இளைய வேங்கை உயிர் துறக்க நேர்ந்தது -  என்பதை அம்பலப்படுத்த மறுப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  ரா கேன்டீனில் மிச்சம் மீதி தயிர் சாதமும் அண்டாவும் இப்போதும்  இருக்கக்கூடும்.

விக்னேஸ்வரன்தான் வெற்றிவாகை சூடவேண்டும் - என்றே விரும்புகிறோம் நாங்களும். அதேசமயம் விக்கிகளுக்கு ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும்! ஒன்றரை லட்சம்பேரைக் கொன்றது எங்கள் பாரதம். அதைத் தட்டிக்கேட்க வேண்டியது, பாரத புத்திரர்களான எங்களது கடமை. கூட்டுக் குற்றவாளியைக் காட்டிக்கொடுக்க கூடாது என்று எவரும் எங்களைத் தடுக்கக் கூடாது.

தீர்ப்பைத் திருத்தி எழுதுங்க விக்கி! எங்க வேலையை நாங்க பாக்கறோம், உங்க வேலையை நீங்க பாருங்க! நடந்தது இனப்படுகொலைங்கற உண்மையைப் பூசி மெழுகுற பூசாரியா ஆயிடாதீங்க! அந்த வேலையைத் தான் இந்தியா பாக்குதே!

http://www.sankathi24.com/news/33421/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.