Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தை அழித்த மஹிந்தவுக்கு அரசியலால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை - -அ.நிக்ஸன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தை அழித்த மஹிந்தவுக்கு அரசியலால் தமிழர்களை வெற்றி கொள்ள முடியவில்லை - -அ.நிக்ஸன்-

23 செப்டம்பர் 2013

"மதுவுக்கும் பணத்திற்கும் வாக்குகளை விற்பணை செய்வது மற்றும் நிவாரண அரசிலுக்கும் பழக்கப்பட்டவர்கள் அல்ல தமிழர்கள்"

Mahinda%20cring_CI.jpg

 

 

தமிழ் மக்கள் தமிழ் ஈழம் கேட்கிறார்களா கேட்கவில்லையா என்பதற்கு அப்பால் சுயமரியாதைய இழக்க அவர்கள் விரும்பவில்லை. 

விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் கேட்டு போராடினார்கள். பெரும்பான்மைத் தமிழ் மக்கள் அதற்கு ஆதரவு வழங்கினர். பேரிணவாதத்துக்கு அடிப்பதற்கு புலிகள்தான் சரி என்ற முடிவு தமிழர்களிடம் இருந்தது. ஆனால் சர்வதேசம் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறி அவர்களை அழிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு உதவியளித்தனர். இந்தியா அதற்கான நகர்வுகளை செவ்வனே செய்து கொடுத்தது என்பது கண்கூடு.

ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழல் புலிகள் அழிக்கப்பட்டமைக்கான வேதனைகள் கவலைகள் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுக்கும் மறைமுகமாக இருந்தன. ஏனனில் மஹிந்த அரசின் ஆட்டம் அவ்வளவு கொடுமையானது என்பதை அவர்கள் பின்னர் உணரத் தலைப்பட்டனர். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அவ்வாறான சிந்தனைக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் கட்டியம் கூறிநிற்கின்றன.

தமிழ் ஈழம் அல்ல 

யுதத்தம் அழிக்கப்பட்டாலும் தமிழர்கள் தங்கள் அரசியல் சிந்தனைகளில் இருந்து இன்னமும் விடுபடவில்லை என்பதை மீண்டும் ஒருதடவை நிரூபித்துள்ளனர். ஆந்த விருப்பம்  தமிழ் ஈழம் என்பதற்கு அப்பால் குறைந்தபட்சம் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டி ஆட்சி ஒன்றை தமிழர்கள் விரும்புகின்றனர் என்பதுதான். தமிழத் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் தவறுகள் இருந்தாலும் சயநிர்ணய உரிமையைத் தான் அது சுட்டிக்காட்டுகின்றது.  

வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று அரசாங்கத்துக்கு எற்கனவே தெரிந்த ஒன்றுதான். ஆனாலும் தமிழத்தேசிய கூட்டமைப்பு பெறப்போகின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்று போயிவிட்டது என்பதுதான் அவர்களுக்கு கவலை. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வடபகுதியில் 45 சதவீதமான வாக்குகள் மாத்திரமே பதிவாகியிருந்தன. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 35 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முதலாவது மாகாண சபைத் தேர்தலில் வடமாகாணத்தில் 68 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தனித்தனி மாவட்டங்களாக 65-70 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

தமிழர்கள் விரும்பவில்லை. 

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியின் பின்னரான சூழலில் மரண ஓலங்கள், கை கால் இழந்தவர்கள், பொருள் இழப்புகள், சுகாதார சீர்கேடுகள் சீரான இருப்பிடங்கள் இல்லாமை போன்ற மன உழைச்சல்கள் மக்களிடம் இருந்தன ஆனாலும் அரசியல் ரீதீயாக தங்களுடைய உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதில் அவர்களுடைய மன உறுதிப்பாடு இன்னமும் தளரவில்லை என்பதையே தமிழத்தேசிய கூட்டமைப்பின் வெற்றி காண்பித்திருக்கின்றது. கூட்டமைப்பின் செயற்பாடுகளில் திருப்தியில்லாத நிலைமைகள் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் வாக்களிப்பின் மூலம் அரசாங்கத்தின் பக்கம் அல்லது இலங்கை அரசின் இறைமைக்குள் தமிழர்கள் வாழ விரும்பவில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் எடுத்துக் கூறியுள்ளன.

ஐக்கியதேசிய கட்சி ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றதன்மூலம் 17 ஆண்டுகள் யுத்தம் நடத்தியதன் கொடுமையை மறக்கவில்லை என்பதையும் மக்கள் கோடிட்டு காண்பித்துள்ளனர். இங்கு மூன்று செய்திகள் வெளிக்காட்டப்பட்டுள்ளன.

ஓன்று மதுவுக்கும் பணத்துக்கும் அடிமைப்பட்டு வாக்குகளை விற்கமாட்டோம். இரண்டாவது அபிவிருத்தியல்ல அரசியல் உரிமைகளை வழங்குங்கள். மூன்றாவது இராணுவ அடக்குமுறைக்குள் வாழவிரும்பவில்லை என்பது. இந்த மூன்று செய்திகளும் தனியே மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு மாத்திரமல்ல பிரதான எதிர்க்கட்சியான ஐக்கியதேசிய கட்சி, மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.

 

புலிகள் இல்லாத நிலையில்  

புலிகள் இருந்த காலத்தில் தமிழ் மக்கள் தமிழத்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த போது அது புலிகளுடைய வற்புறுத்தல் என்று அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஐக்கியதேசிய கட்சியும் அவ்வாறுதான் கூறியது. ஆனால் 2009ஆம் ஆண்டின் பின்னரான சூழலிலும் அதுவும் நான்;கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தங்கள் அரசியல் உரிமைகளை பெறுவதில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் என்ற முடிவுக்கு மறுதரப்பினர் முன் வரவேண்டும். தேர்தலுக்கு முன்னர் கிளிநொச்சி வரை ரயில் சென்றது. தொண்டைமானாறு பாலம் திறக்கப்பட்டது. சுன்னாகத்தில் மின் நிலையம் இயக்கப்பட்டது. அரச நிறுவனங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டன. படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகள், வீடுகள் கையளிக்கப்பட்டன. முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர்- ஆனால்--- மக்கள் தமிழத்தேசிய கூட்டமைப்புக்கு மாத்திரமே வாக்களித்தனர்.

அபிவிருத்திகள், சலுகைகள் மக்களுக்கான அரசியல் உரிமைகள் அல்ல. என்பதுதான் அதன் அர்த்தம். அரசாங்கம் ஒவ்வொரு தேர்தல் பிரசாரங்களிலும் அபிவிருத்திகள் பற்றியே பேசியது. மக்கள் அபிவிருத்தியைத்தான் விரும்புகின்றனர். அபிவிருத்தி ஏற்பட்டால் இனப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று ஜனாதிபதி கூறினார். ஆனால் அரசியல் உரிமைகள்தான் முதலில் வழங்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நிலைப்பாடாகவுள்ளது என்பதை தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.

ஆட்சியை கைப்பற்றுவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, சரத்பொன்சேகா ஆகியோருக்கும் வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் பாடம் கற்பித்திருக்கின்றன.

அரசியல் முக்கியத்துவம்

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற நான்கு தேர்தல்களிலும் மக்கள் இந்த செய்தியை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் சனிக்கிழமை இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் காண்பிக்கப்பட்ட இந்த செய்தி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அதிகாரப்பரவலாக்கம் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டதுதான் மாகாண சபை. இந்த மாகாண சபை முறையை மக்கள் அன்றே நிராகரித்திருந்தனர் என்ற அடிப்படையிலும் அரசாங்கத்திற்கு தங்கள் எதிர்ப்பை அல்லது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளாகவும் இதனை கருதலாம்.

 

எதிர்ப்பு அரசியல்

தமிழத்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி அரசியல் செய்யும் ஒரு கட்சி அல்ல எதிர்ப்பு அரசியலில்தான் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எதிர்ப்பு அரசியல்தான் தமிழ்மக்களின் பண்பாகவும் இருந்து வருகின்றது. இதன் காரணமாகவே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகின்ற கட்சிகள் அல்லது அமைச்சுப் பொறுப்புகளை பெற்றுள்ள தமிழர்கள் பெரியளவில் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த முடிவதில்லை உதாரணமாக ஈபிடிபி கட்சி கடந்த 19 வருடங்களாக அரசாங்க ஆதரவு அரசிலில் ஈடுபட்டு வருகின்றது. 

அவ்வப்போது ஓரிரு ஆசனங்களை பெற்றாலும் ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவு அல்லது அவர்கள்; மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் மக்களிடம் இருந்து பாராட்டுக்களையோ அல்லது ஆதரவுகளையோ பெற முடியாமல் உள்ளது. எதிர்ப்பு அரசியல் மூலமாக அபிவிருத்திகளை செய்ய முடியாது, மக்கள் கேட்கும் நிவாரணங்களை வழங்க முடியாது. மாறாக கொள்கை அரசியலை மாத்திரமே முன்னெடுக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ஒதுக்கப்படும் 50 இலட்சம் ரூபா பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம்  அபிவிருத்திகளை நிவாரணங்களை தமிழத்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்; செய்யவும் முடியாது. உள்ளுராட்சி சபைகள் மூலமாகவும் வருமானத்தை பெரிய அளவில் ஈடுட்டவும் முடியாது. ஆகவே மக்களுக்கான நிவாரணங்கள், சலுகைகள் என்பதை அரசாங்கம்தான் கொடுக்க முடியும். அவ்வாறு சொந்த முயற்சியினால் கூட்டமைப்பு தமிழர் பிரதேசங்களில் ஏதேனும் அபிவிருத்திகளை செய்ய முற்படடாலும் அதற்கு கொழும்பில் உள்ள அரச இயந்திரம் எந்த வழியாலவது தடை விதித்துவிடுகின்றது. 

குதிரையோடும் அரசியல்

இதனாலேயே தமிழத்தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றால் எதுவும் செய்ய முடியாது என அரசாங்கம் தேர்தல் பிரசாரங்களில் தினமும் கூறிவந்தது. அபிவிருத்திகளுக்கு பயந்து அல்லது அதுதான் தேவை என்று உணர்ந்து அதுவும் தமிழ் மக்கள் வாக்களிப்பர் என்று அரசாங்கம் தவறாக எடைபோட்டுள்ளது. மலையக முஸ்லீம் அரசியல்வாதிகள் அவ்வாறான அரசியலில்தான் ஈடுபடுகின்றனர் அதனை நினைத்துக் கொண்டு அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் குதிரை ஓட முற்பட்டது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அவ்வாறு குதிரை ஓடுவதற்கு அங்கிருந்த முஸ்லீம், சிங்கள அரசியல்வாதிகளும் வாக்காளர்களர்களும் சாதகமாக அமைந்து விட்டனர்.

ஆனால் வடபகுதியில் இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களிக்கும் பழக்கம் அல்லது குதிரையோடும் அரசியலுக்கு இடம் கொடுப்பதில்லை என்ற உண்மையை அரசாங்கம் இன்னமும் உணராமல் இருப்பதுதான் சோகம். அதேவேளை மற்றுமொரு கேள்வி எழுகின்றது. மக்களின் இத்தனை பலம் இருந்தும் தமிழத்தேசிய கூட்டமைப்பு சில சமயங்களில் அரசாங்கத்தின் சில பேச்சுக்களுக்கு ஏன் எடுபடுகின்றது? தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் அமைச்சர்கள் இனவாத கட்சிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு தமிழத்தேசிய கூட்டமைப்பு கொடுத்த விளக்கம் ஏற்புடையது அல்ல.

அரசியலமைப்புக்கு வெளியில்  

அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கின்றார். ஆனால் இந்த நடைமுறை அரசியலமைப்புத்தான் தமிழர்களுக்கு பிரச்சினை அத்துடன் இலங்கை அரசு என்ற கட்டமைப்பும் பௌத்த தேசியவாத சிந்தனையுடன் உருவாக்கப்பட்டது. எனவே அந்த கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் விஞ்ஞாபனம்தான் இது என்று ஏன் நேரடியாக கூறமுடியாமல் போனது? அது தமிழ் ஈழம் இல்லையே? ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் ஒன்றுபட்ட முறையில் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு ஒரு சமஷ்டி முறை என்று கூறியிருக்கலாமே? இந்தியாவில் இருக்கின்றது ஏன் அமெரிக்காவிலும் அவ்வாறுதான் இருக்கின்றது. என்று உதாரணம் கூறியிருக்கலாம். (இந்திய சமஷ்டி முறை முழுiமான அதிகாரம் கொண்டதல்ல.)

சமஷ்டி முறை என்பதை ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றிருந்தார். 13 பிளஸ் என்று ஜனாதிபதியும் கூறியிருந்தார். ஆகவே அந்த அர்த்தத்தில் விளக்கம் கொடுப்பதற்கு கூட்டமைப்பு தயக்கம் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்று அடித்துக் கூறுவதற்கு தமிழத் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காண்பிக்க வேண்டிய தேவையில்லை. எதற்கும் தேர்தல் முடிவுகள் ஒரு தற்துணிவை கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கினறது. ஆகவே புதிய அரசியல் அணுகுமுறைகளை கையாளுவதற்குரிய நேரம் தற்போது பிறந்திருக்கின்றது. 

 

விக்னேஸ்வரன் செய்ய வேண்டும்

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை நன்கு கற்றிந்த அனுபவம் உள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழத்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ள விடயங்களை நியாயப்படுத்த வேண்டும். அதில் இருந்து பின்வாங்கினால் அல்லது விட்டுக்கொடுத்தால் அது தமிழர் அரசியலின் பலவீனமாகிவிடும். வடமாகாண மக்கள் தமிழ் ஈழம் கேட்கவில்லை. ஆனால் சுயமரியாதைய இழக்க அவர்கள் விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். 

13ஆவது திருத்தச்சட்டத்தை தும்புத்தடியாலும் தொட்டுப்பார்க்கமாட்டோம் என்று சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற விவாதம் ஒன்றில்; கூறியிருந்தார். ஆனால் சட்டத்தின் கீழான மாகாண சபை தேர்தலில் தமிழத்தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது. இதன் அர்த்தம் வெறுமனே மாகாண சபைதான் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதல்ல. சம்பந்தன் கூறியபடி தும்புத்தடியால் தொட்டுக்கூட பார்க்க விரும்பாத 13 ஆவது திருத்தச்சட்டத்திற்கு மேலாக சென்று தீர்வைத் தாருங்கள் என்றொரு ஆணையாக அதனை கருத வேண்டும். அந்த கருத்தை விக்னேஸ்வரன் சர்வதேசத்தின் முன் கொண்டு சென்றாக வேண்டும்

அரசாங்கத்தின் வெற்றி 

மத்திய, வடமேல் மாகாணங்களில் அரசாங்கம் அமோக வெற்றியீட்டியுள்ளது. ஆனால் ஐக்கியதேசியக் கட்சி மண்கவ்வியுள்ளது. ஐக்கியதேசிய கட்சி வடக்கில் தோற்றமைக்கு மேல கூறியபடி பல காரணங்கள் உண்டு. ஆனால் ஏனைய இரண்டு மாகாண சபைகளிலும் கோட்டை விட்டமைக்கு காரணம் தலைமைத்துவ பலவீனம் என்பது கண்கூடு அதுவும் மூன்று இலட்சத்துக்கும் குறையாத வாக்கு வித்தியாசத்திலும் பெற்ற வாக்குகள் 20 சதவீதத்துக்கும் மேற்படாத வகையிலும் ஜதேக தோல்வியடைந்துள்ளது. சரத்பொன்சேகாவின் கட்சி குறைந்த வாக்குகள் பெற்றிருந்தாலும் வடமேல் மாகாண சபையில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றி இருப்பது பெரு வெற்றியாகும்.

எவ்வாறாயினும் அனைவராலும் அவதானிக்கப்பட்டது வடக்கு மாகாண சபைதான். இலங்கையில் சிங்கள அரசியல் கட்சிகளை பொறுத்தவரை வடமாகாண சபைத் தேர்தல் முடிவு சிந்திக்க வைத்திருக்கின்றது. சர்வதேசத்திற்கு இலங்கை தொடர்பான இராஜதந்திர அணுகுமுறையில் மாற்றம் அவசியம் என்பதை காட்டி நிற்கின்றது. தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலின் பின்னரான சூழலில் ஒரு சிறிய நிம்மதியை கொடுத்திருக்கின்றது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைப்பதும், கொள்கை அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதும் தமிழத்தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது?  

 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக அ.நிக்ஸன்

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96866/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.