Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம் கோரிக்கைகள்தாம் எமது உயிர் - தோழர் தியாகு நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம் கோரிக்கைகள்தாம் எமது உயிர் - தோழர் தியாகு நேர்காணல்

 

நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு நடக்க இருக்கிறது. அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக அழித்தொழித்த சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியப் பிரதமரோ இந்திய அரசின் வேறொரு பிரதிநிதியோ கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இவற்றில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் தமிழகக் கிளையும் அடக்கம். இம்மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இந்திய அரசு இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

 

இந்நிலையில் இலங்கையில் நடக்க இருக்கும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதற்கான மக்கள் போராட்டம் தமிழகத்தில் உருவாகி வருகிறது. தமிழ் தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி வழிநடத்திவருபவரான தோழர் தியாகு (கே.தியாகராஜன்) சென்னையில் அக்டோபர் ஒன்றாம் திகதி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். இவரது போராட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தொடங்கி இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இந்த செவ்வி எழுதப்படும் நாளில், ஒன்பதாம் நாளாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கை நீக்கப்படவேண்டும். மாநாடு இலங்கையில் நடைபெறக்கூடாது, அப்படி நடந்தாலும் அதில் இந்தியா இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராடிக்கொண்டிருக்கும் தோழர் தியாகு அவர்களை மருத்துவமனையில் சந்தித்தோம்:

 

***

 

 

உங்கள் போராட்டத்தின் சாராம்சம் என்ன?

 

இலங்கையை பொதுநலவாய கூட்டமைப்பிலிருந்து நீக்குக என்பதுதான் எமது முதன்மைக் கோரிக்கை. இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை மெய்ப்பிக்கப்பட்டுவிட்டன. ஐ.நா ஆவணங்கள். சானல் 4 சான்றுகள், டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், பாங்கி மூனே தெரிவித்த ஒப்புதல், சார்லர் பெப்ரி அளித்துள்ள ஆய்வறிக்கை, ஐ.நா மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை கொழும்பிலேயே அளித்த பேட்டி ஆகியவை இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு அசலான சான்றுகள். மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, இனப்பாகுபாடின்மை ஆகியவற்றை விழுமியங்களாகக் கொண்ட பொதுநலவாய அமைப்பில் இடம்பெற இலங்கைக்குத் தகுதி இல்லை என்பதற்கு இதற்கு மேல் சான்று வேண்டாம். ஆகவே தென்னாபிரிக்காவை 1961 முதல் 1994 வரை விலக்கிவைத்ததைப் போல், ராணுவ ஆட்சியைக் காரணம் காட்டி பாகிஸ்தானை நீக்கிவைத்ததைப் போல், இப்போது வரை ஃபிஜி நாட்டை விலக்கிவைத்திருப்பதைப் போல், இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து நீக்க வேண்டும். 1971ஆம் வருடத்திய சிங்கப்பூர் பிரகடனம், 1991ஆம் வருடத்திய ஹராரே பிரகடனம், 2013 மார்ச்சு மாதம் எலிசபெத் இராணி வெளியிட்டுள்ள பொதுநலவாய கொள்கை ஆவணம் ஆகிய ஆவணங்களின்படி இலங்கையை நீக்குவதைத் தவிர பொதுநலவாய அமைப்பிற்கு வேறு வழியில்லை.

 

இதற்குப் பெருந்தடையாக இருப்பது இந்திய அரசு. இப்படி நீக்காவிட்டாலும் இலங்கையில் பொதுநலவாய உச்சி மாநாட்டை நடத்தக்கூடாது, அப்படியே நடந்தால் அதில் பிற பொதுநலவாய அரசுகள் குறிப்பாக இந்திய அரசு கலந்துகொள்ளக் கூடாது என்பது எமது கோரிக்கை.

 

 

இவற்றின் பயன் என்ன?

 

தென்னாபிரிக்காவை விலக்கிவைத்ததால் தென்னாப்பிரிக்க இனஒதுக்கல் அரசுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், இன ஒதுக்கலை எதிர்த்துப் போராடிய கறுப்பு இன மக்களுக்கு கிடைத்த ஊக்கத்தை உலகறியும். இலங்கையை விலக்குவதால் இலங்கை அரசு பாதிக்கப்படுவது மட்டுமல்ல, சிங்கள் மக்களிடம் காலம்காலமாக இருந்துவரும் பேரினவாத உளவியலுக்கு அது பேரிடியாக அமையும். மறுபக்கம் நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் கடும் நெருக்கடிகளுக்கிடையே போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்களுக்கு அது பேரூக்கமாக அமையும். இது மக்கள் போராடுவதற்கான சனநாயக வெளியை உருவாக்கத் துணை செய்யும்.

 

இரண்டாவதாக பன்நாட்டளவில் இலங்கையில் பொருளியல் வளங்கள் பாதிப்படையும். மூன்றாவதாக இதனால் இந்திய வல்லாதிக்கத்துக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கும் இடையிலான முரண்பாடு கூர்மையடையும். ஈழமக்களின் உரிமைப் போராட்ட அரசியலும் இந்தியாவின் புவிசார் அரசியலும் ஒரு கோட்டில் இணைவதை நோக்கி இந்த முரண்பாட்டை நகர்த்த முடியும்.

 

 

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்வதன் மூலம் இலங்கை அரசை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வை சீரமைக்கவைக்க நிர்பந்திக்க முடியும். அந்த வாய்ப்பை இந்தியா தவறவிட்டுவிடக்கூடாது என்ற வாதத்தை இந்திய இலங்கை எல்லைப் படைகளில் முக்கியப் பதவிவகித்தவரான கர்னல் ஹரிஹரன் தெரிவித்திருக்கிறாரே?

 

இப்படிச் சொல்பவர்கள் எந்த உலகத்தில் வாழ்கிறார்கள்? இந்திய அரசு, அதன் தலைமை அமைச்சர் அல்லது அயலுறவு அமைச்சர் நாங்கள் பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்வது இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து ஈழத் தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்காகத்தான் என்று வெளிப்படையாக அறிவிக்கட்டும். பிறகு பார்க்கலாம்.

 

 

உங்கள் கோரிக்கைகளை ஒட்டி தமிழக அரசும் இந்திய அரசும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

 

இலங்கையில் நடைபெற இருக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசு கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் விரிவான மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதோடு நில்லாமல், தமிழக அரசு சட்டப்பேரவைத் தீர்மானம் போன்ற பிறவழிகளில் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். தமிழக அரசு இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். இவை எதுவும் பயனளிக்காதபோது ஆளும் கட்சி பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து இதற்காகப் போராட வேண்டும். அவர்களாகப் போராடாவிட்டாலும் இதற்காகப் போராடும் எம்மைப் போன்றோருக்கு ஆதரவு தரலாம்.

 

இந்திய அரசைப் பொறுத்தவரை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்வது உண்மையன்று. அது ஏற்கனவே இலங்கை அரசுக்கு ஆதரவாக எடுத்துள்ள முடிவை மாற்றிக்கொண்டால் வரவேற்போம்.

 

 

உங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தமிழக அரசு கையாண்ட விதம் குறித்து?

 

உண்ணாநிலைப் போராட்டம் சனநாயக முறையிலான போராட்டம். இதையே தமிழகக் காவல்துறையினர் எதிர்த்து உண்ணாநிலை ஒரு குற்றச் செயல் என்று கூறி என் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தார்கள். உயர்நீதிமன்றத்தில் வழக்காடித்தான் அனுமதி பெற்றேன். என் போராட்டத்தைத் தமிழக அரசு கையாண்ட முறையில் ஒலிபெருக்கிக்கு அனுமதி மறுப்பு போன்ற சில தடைகள் இருந்திருப்பினும் நான் பெரிதாகக் குறை சொல்ல ஒன்றுமில்லை. என் கவனம் முழுவதும் கோரிக்கைகளில்தானே தவிர எனக்கு ஏற்படும் சிறு தொல்லைகளில் அல்ல.

 

 

ஒன்பது நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள். உங்கள் கோரிக்கையை நோக்கிய நகர்வு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா?

 

உண்ணாநிலை என்பது தன்னளவிலேயே ஒரு போராட்டம் அல்ல. மக்கள் போராட்டம் அல்லாமல் ஒருவரின் உண்ணாநிலையால் எந்தக் கோரிக்கையையும் சாதிக்க முடியாது. ஆனால் இது மக்கள் போராட்டத்துக்கான குவிமையமாக அமையும். என் உண்ணாநிலை அப்படிப்பட்டதுதான். என் போராட்டம் தமிழக மக்களையும் மாணவர்களையும் போராட்டக் களத்துக்குக் கொண்டுவருவதில் எந்த அளவுக்கு வெற்றிபெறுகிறதோ அந்த அளவுக்குத்தான் வெற்றிபெற இயலும்.

 

 

மாணவர்கள் பற்றி நீங்களே சொன்னதால் கேட்கிறேன். மார்ச்சு மாதம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகமெங்குமுள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்தார்கள். ஆனால் இப்போது அவர்களைக் காணோம் என்று சொல்லும் அளவுக்கு ஒடுங்கிவிட்டதாகத் தோன்றுகிறதே?

 

ஒவ்வொரு போராட்டத்தின் வெற்றிக்கும் ஒரு அளவு உண்டு. மார்ச்சில் நடந்த மாணவர் போராட்டம் தமிழக மக்களிடையே ஈழப் போராட்டம் குறித்து ஒரு புதிய விழிப்பைத் தோற்றுவித்தது. அதனால்தான் பெரிய அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாட்டை மாற்றி உலகத் தமிழர்களின் கோரிக்கைகளான இனக்கொலை, போர்க்குற்றங்கள் குறித்து ஒரு தர்ச்சார்புள்ள பன்நாட்டு புலனாய்வு, தமிழீழ மக்களை பாதுகாப்பதற்கான பன்நாட்டு பொறியம் (International Mechanism), பொதுவாக்கெடுப்பு ஆகியவற்றை மக்கள் கோரிக்கையாக மாற்ற மாணவர் போராட்டம் துணை செய்தது. தமிழக சட்டப்பேரவையில் இந்தக் கோரிக்கைகளை ஆதரித்து தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

 

 

தங்கள் போராட்டத்துக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளார். உண்ணாநிலையைக் கைவிடக் கோரியுள்ளார். அதற்குத் தங்களது பதில் என்ன?

 

முன்னாள் முதல்வர் கலைஞர் என் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது நற்செய்தி. ஆனால் ஒரு கட்சித் தலைவரின் ஆதரவு என்பது வடிவம்தான். அவர்களுக்குப் பின் நிற்கிற மக்களின் ஆதரவு என்பதுதான் உள்ளடக்கம்.

 

உண்ணாநிலையைக் கைவிடக் கோரி என் உயிரின் மீது அக்கறை கொண்டு அவர் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு நன்றி. அதேபோது இப்போராட்டத்தின் கோரிக்கைகள்தான் என் உயிர். என் கோரிக்கைகளை வெற்றிபெறச் செய்வதன் மூலம் என் உயிரைக் காக்க முற்படட்டும் என்பது அவருக்கும் மற்றவர்களுக்கும் நான் முன்வைக்கும் வேண்டுகோள்.

 

 

அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள வடக்கு மாகாணத் தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி ஈழத் தமிழர்களுக்கு ஏதேனும் நலன் பயக்குமா?

 

எவ்வித நன்மையும் விளையாது. மாகாண சபைக்கு சட்டமியற்றும் அதிகாரம் இல்லை. மாகாண அரசுக்கு அடிப்படையில் எவ்வித அதிகாரமும் இல்லை. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றமும் ராஜபக்சேவும் வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள். ஒரு விரிவடைந்த பஞ்சாயத்து தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் ஒன்றுமில்லை.

 

 

அப்போது ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தாங்கள் முன்வைக்கும் மாற்று அல்லது தீர்வுதான் என்ன?

 

தனித் தமிழீழம் மட்டுமே தீர்வு, ஒன்றுபட்ட இலங்கையில் ஒன்றும் நடக்காது. ராஜபக்சே முன்னிலையில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் சி.வி. விக்னேஸ்வரன் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி. அவர் இலங்கையின் ஆரசமைப்புச் சட்டத்தை மதிக்காதவராக இருக்க முடியாது. அச்சட்டங்களின் இரண்டாவது விதி (Article 2 ) இலங்கை ஒற்றையாட்சி அரசு என்பதைத் திட்டவட்டமாகச் சொல்கிறது.

 

ஒற்றையாட்சி அமைப்புக்குள் தன்னாட்சியோ வேறு அதிகாரமோ எப்படிக் கிடைக்கும்? ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று பேசுபவர்கள் ஏமாற்றுப் பேர்விழிகள் அல்லது ஏமாளிகள்.

 

***

சந்திப்பு: எஸ். கோபாலகிருஷ்ணன்

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=3&contentid=328f05c1-64ac-4380-ad2e-ca7103820da3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.