Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்படுகொலை ஓர் ஊடகவியலாளரின் சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை: குருதியில் நனைந்த சாட்சியங்கள் ஈழப்படுகொலை

ஓர் ஊடகவியலாளரின் சாட்சியம் biggerfont.pngsmallfont.png ஃபிரான்ஸிஸ் ஹாரிசன்

தமிழில்: என்.கே. மகாலிங்கம் அதிபயங்கரமான படுகொலைகள் நடந்த அந்தப் பொன்னிற மணல் பிரதேசத்திலிருந்து தப்பி வருகிறார் லோகீசன். ஆறு அடி உயரம். மழிக்கப்படாத தாடி. நீண்ட குழம்பிய தலைமுடி. இருபத்தேழு வயது. தன் தந்தையை ஒரு குழந்தையைப் போல் தூக்கி வருகிறார். தன் தலைக்கு மேலாகப் பறந்துகொண்டிருக்கும் துப்பாக்கிக் குண்டுகளை அவர் கவனிக்கவில்லை. காலடியில் கிடக்கும் செத்த உடல்களைக் கவனிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு இப்போது தண்ணீர்த் தாகம். பயங்கரமான தண்ணீர்த் தாகம். அது மட்டுந்தான் அவருக்கு இப்போது நினைவிலிருக்கிறது. அது 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். கொடுமையான வெயில் எரிக்கும் பின் மதியம்.

SriLanka-1.jpg

லோகீசனின் முழு வாழ்க்கையையுமே தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த புலிகளின் நிர்வாகம் சில மாதங்களிலேயே சிதைவுற்றது. ஒரு காலத்தில் வெல்லவே முடியாது என்று நினைத்திருந்த புலிப்படை இலங்கை ராணுவத்துக்கு முகங்கொடுக்க முடியாமல் பின்வாங்கிக்கொண்டிருந்தது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துவதற்காக ஒரு சிறிய கடற்கரைப் பகுதிக்குத் தங்களுடன் கூட்டிச் சென்றார்கள் என்ற குற்றச்சாட்டும் புலிகள்மீது சுமத்தப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டை லோகீசன் மறுத்தார். எங்குமே மக்களால் ஓடித் தப்ப முடியவில்லை. ஒரு பக்கம் கடல். மற்றொரு பக்கம் முழுவதும் ராணுவம். அதுவொரு கொலைக்களக் காட்சி. இறந்த பொதுமக்கள் வெள்ளைக் கொடிகளைப் பிடித்தபடி கிடந்தார்கள். மருத்துவமனையைச் சுற்றிக் குண்டுகள் விழுந்த குழிகள். அவற்றின் பின்னாலும் பனை மரங்களிடையே விழுந்துகொண்டிருக்கும் குண்டுகளின் சத்தங்கள். திக்குமுக்காட வைக்கும் பழுப்பு நிறப் புகை காற்றில் பரந்திருந்தது.

வரும் வழியில் லோகீசன் ஒரு சிறிய கூடாரத்தைக் கண்டார். அதில் முதியவர் ஒருவர் சத்தமின்றி அழுதுகொண்டிருந்தார். அவரைப் பாதுகாப்பாகத் தூக்கிச் செல்ல ஒருவரும் இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். அதனால் முதியவர்களையும் காயம்பட்டவர்களையும் கைவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

பல மாதங்களாகப் பயமுறுத்திக்கொண்டிருந்த தோல்வி வெகு விரைவிலேயே வந்துவிட்டது. புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கடைசியாக வைத்திருந்த சிறியதொரு நிலத்தின் நடுப்பகுதியையும் இழந்துவிட்டார்கள். பீதியுற்றிருந்த யுத்தத்தால் சலிப்படைந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ராணுவத்திடம் சரணடைவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டுத் துண்டித்து விடப்பட்டிருந்தார்கள். லோகீசன், தாய், தந்தை, தோழி ஆகியோர் அவ்விடத்தை விட்டுச் செல்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. இருட்டில் ஆபத்து அதிகமாக இருக்கும். படையினர் இறுதியில் துடைத்துச் சுத்தமாக்கும் நடவடிக்கைக்காக வரும்போது அவர்கள் அந்தக் கடற்கரையில் தங்கியிருக்க விரும்பவில்லை. அதற்கு ஒரே வழி நன்னீர்க் கால்வாய் வழியாக நடந்து செல்வதுதான். அந்த நன்னீர்க் கால்வாய்தான் ராணுவத்தையும் அவர்களையும் பிரித்திருந்தது.

தந்தை தோளில் கிடக்க சிறு அலையடித்துக் கொண்டிருக்கும் அந்தக் கால்வாய்க்குள் கால்களை வைத்தார் லோகீசன். இப்போதாவது தண்ணீர் குடிக்கலாம் என நினைத்தார். தண்ணீரில் இரண்டு பெண்களின் சடலங்கள் மிதந்தன. சடலங்களின் நடுவே நடந்துகொண்டிருந்ததை அப்போது தான் உணர்ந்தார். சிறிது நேரம் தயங்கினார். தண்ணீர் தாகத்தைத் தணித்துக்கொள்ள, எந்த நீராக இருந்தாலும் பரவாயில்லை என்று அள்ளிக் குடித்தார். “அதுதோர் மிகப் பயங்கரமான அனுபவம். அருவருப் பானது என்பதற்காக அல்ல. ஆனால் அந்தளவு மிக மோசான நிலைக்கு நான் தள்ளப்பட்டு விட்டேனே என்பதற்காக. ஆறு மாதமாகச் சடலங்களுக்கு மேலாக நடந்திருக்கிறேன். கடைசியில் சடலங்கள் மிதக்கும் தண்ணீரையே குடிக்கிறேன்”

SriLanka-3.jpg

பல ஆண்டுகளின் பின், பெர்லினில் கறுத்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி பாட்டில் தண்ணீரைக் குடித்துக்கொண்டு கண்களில் நீர் மல்க, ஒரு காலத்தில் சடலங்களால் மாசுபடுத்தப்பட்ட நீரைக் குடித்ததை நினைத்துக் கண் கலங்கினார் லோகீசன். ஒட்ட வெட்டிய தலை மயிர். கஞ்சி போட்டு அழுத்திய சுத்தமான சட்டை. கரு நீல ஜீன்ஸ். தன்னடக்கமும் பணிவும் நிறைந்த இந்த இளைஞர் அப்படிப்பட்ட கடுந்தொல்லைக்கு ஆளாகியிருந்ததைக் கற்பனை செய்வதுகூடச் சிரமமாக இருந்தது. உயரமான விளையாட்டு வீரனைப் போன்ற தோற்றம். மற்றவர்களுடன் பழகும்போது மிகக் கவனமாகப் பரிவுடன் கூடிய சாந்தத்தை வெளிப்படுத்துகிறார். கவனத்துடன் பழகுகிறார். தன்னுடைய கதையைத் திரும்பவும் சொல்லும்போது சமநிலையுடனும் துல்லியமாகவும் சொல்கிறார். ஆனால் துயர் நிறைந்த கறுத்த கண்கள் உள்ளார்ந்த அவருடைய உணர்ச்சிகளைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றன.

மக்கள் அனுபவித்த பயங்கரங்களைத் தெரிவிப்பதே லோகீசனுடைய தொழில். ஆனால் அவரிடமே பல பயங்கரக் கதைகள் இருந்தன. தமிழ்நெட் என்னும் புலிகள் சார்பான ஊடகவியலாளனாகப் பல்லாயிரக்கணக்கான சடலங்களைப் பார்த்திருக்கிறார். கேமராக் கண்கள் வழியாக மக்கள் தங்கள் இறுதி மூச்சை விடுவதை அவதானித்திருக்கிறார். தன் கண்ணாலேயே உயிர்கள் பிரிவதைப் பார்த்திருக் கிறார். குழந்தைகளின் மண்டை சிதறி மூளை வெளியே தெரிவதைக் கண்டிருக்கிறார். தாய்மாரின் ஆதரவற்ற அலறல்களைக் கேட்டிருக்கிறார். சாவின் துர்நாற்றத்தை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுத்திருக்கிறார். இறுதி யுத்தத்தில் நடந்த பல நூறு தாக்குதல்களின் பின் விளைவுகளுக்குச் சாட்சியாக இருந்திருக்கிறார். தன் உயிருக்காக ஓடியபடி தன் குடும்பத்தைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டுக் கொலைக் களத்தைப் பதிவுசெய்யத் திரும்பவும் சென்றிருக்கிறார்.

உயிர் பிழைத்திருப்பவர்களில் லோகீசனும் ஒருவர். நேரில் பார்த்த சாட்சிகள் சிலரில் அவரும் ஒருவர். மக்களின் துயரங்களைத் துடிப்புடன் கேட்டறிந்து பதிவுசெய்தவர்களில் அவரும் ஒருவர். சிறைபட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், சுருங்கிக் கொண்டு போகும் ஒரு சிறிய இடத்தில் குவிக்கப்படுவதைக் கண்டிருக்கிறார். எறிகணைகள், பீரங்கிகள் குண்டுகள் மக்களைக் கடலை நோக்கி ஓடச் செய்தன. உணவில்லாமல் இழிவான கூடாரங்களில் அடைக்கப்பட்டார்கள். பல பத்தாண்டுகளாக நடந்த யுத்தம் கடும் துன்பங்களிலிருந்து எப்படித் தப்பிப் பிழைத்திருப்பது என்பதை அவர்களுக்கு நன்றாகவே கற்றுத் தந்திருந்தது. ஆனால் இந்தக் கடைசிச் சில மாதங்கள் அனைவரையும் ஒருவகை உணர்ச்சியற்ற, பெரும் பயங்கரத்திற்கு ஆளாக்கி விட்டிருந்தன. சாவு எந்தத் தருணத்திலும் அவர்களைத் தாக்கலாம். சிலரை இல்லாமல் செய்யலாம். சிலரை விட்டும் விடலாம். ஆனால் முடிவில் நெஞ்சை ஊடுருவும் துக்கத்தைத் தான் விட்டு செல்லும். அதில் எந்தப் பாங்கோ தர்க்கமோ எல்லையோ இருக்காது. பெரும் ரத்தக்களரியும் இழப்பும்தான் இருக்கும்.

முதலில் லோகீசன் தான் கண்ட காட்டுமிராண்டித்தனத்தையே மடிக் கணினியைப் பயன்படுத்திக் காணொளியில் பதிவுசெய்தார். பிறகு செயற்கைக்கோள் கும்பாவைப் பயன்படுத்தி நார்வே தலைமையகத்துக்கு அனுப்பினார். நார்வே இலங்கையுடன் நீண்டகாலத் தொடர்புடைய நாடு. அதற்கு உதவி வழங்கிய நாடு. சமாதான நடுவராகவும் பணிபுரிந்த நாடு. தான் அனுப்பும் பிம்பங்கள் மிக மிகக்கோரமானவை என்பது தாமதமாகத் தான் லோகீசனுக்குப் புரிந்தது. அவற்றுக்குப் பதிலாகக் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கினார். வேண்டுமென்றே கொலைப் படங்களையும் அழிவையும் தணிந்த தொனியில் காட்டினார்.

லோகீசன் எழுதிய செய்திக் கட்டுரைகளை உலகம் முழுவதும் இருந்த தூதுவர்கள், ஊடகவியலாளர்கள், புலம்பெயர் தமிழர்கள் வாசித்தார்கள். இருப்பினும் அவற்றை இலங்கை ராணுவம் வெறுத்தது. அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் அவருடைய பதிவுகளை வாசித்துப் பெரும் ஆத்திரமடைந்தார்கள். தமிழ்நெட்டை அவர்கள் வெறுத்தார்கள். அதைப் பயங்கரவாதப் பிரச்சாரத் தளம் என்றார்கள். சர்வதேச ஊடகங்கள் இலங்கை ராணுவம் சொல்லிய இறந்தவர் தொகையுடன் லோகிசன் எழுதிய தொகையை ஒப்பிட்டு ஒரு சமன்பாட்டை எட்டினார்கள். அதை மேற்கோளாகக் காட்டினார்கள். அதைக் கண்டு ராணுவத்தினர் பெரும் சீற்றத்துக்குள்ளானார்கள். பிற ஊடகங்களைப் போலல்லாது தமிழ்நெட்டிற்கு உண்மையில் ஒரு நிருபர் களத்தில் இருந்தார். லோகீசன் விமர்சிக்கவில்லை. ஆனால் ஆகாயத்திலிருந்து பொழியும் மரணங்கள் நடைபெறும் இடத்தில் அகப்பட்டிருப்பது எப்படி இருக்கும் என்பதை உலகத்திற்குச் சொல்ல முயன்றார். மற்ற ஊடகவியலாளர்களைப் போல சொல்வதன் வழி நிகழ்வுகளின் விளைவை மாற்றலாம், என்ன நடக்கின்றன என்பது உலகத்திற்குத் தெரிந்தால் அவர்கள் அதை நிறுத்த முயலலாம் என்றே இவரும் நம்பினார்.

“பல தமிழர்கள் அங்கே துன்பப்படுகிறார்கள் என்று உலகத்திற்குத் தெரியும். செயற்கைக்கோள்களின் மூலம் உலகம் போரைப் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் அது ஒன்றுமே செய்யவில்லை. ராய்ட்டர் அல்லது பிபிசி அங்கிருந்திருந்தால் அதைச் செய்ய நிறுத்தியிருக்கலாம். அதை என்னுடைய அமைப்பால் செய்ய முடியவில்லை” என்றார் சோகத்துடன்.

SriLanka-6.jpg

செப்டம்பர் 2008இல் டிக்ஸியும் ஐநாவினரும் புலிகளின் பிரதேசத்தை விட்டு வெளியேறினார்கள். அன்று தான் லோகீசனுக்கு மிக பீதியேற்பட்டது. பீரங்கிக் குண்டுகள் கிளிநொச்சியை அண்மித்த போது பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சர்வதேச உதவி மிகத் தேவையாக இருந்தது. அந்த நேரத்தில்தான் சர்வதேசச் சேவைப் பணியாளர்களை அரசாங்கம் வெளியேறச் சொல்லி ஆணையிட்டது. ஐநாவின் வெள்ளை நிற ஜீப்புகள் வேகமாகப் போய்க் கொண்டிருக்கையில் தன் எதிர் காலத்தைப் பற்றிய பயத்துடன் அந்த இளைய ஊடகவியலாளர் அந்தச் செம்புழுதித் தெருவின் முனையில் நின்றுகொண்டிருந்தார். தலைக் கவசத்திலும் பாதுகாப்புச் சட்டையிலும் இருந்த சேவைப் பணியாளர்களின் தெரிந்த முகங்களை ஒரு கணம் பார்த்தபோது எவ்வளவு மோசமாக யுத்தம் செல்லப் போகின்றது என்பதைப் பற்றி யோசித்தார். ஏற்கெனவே ஜனத் தொகையில் அரைவாசிப் பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டனர். கந்தலான உடைகளில் அதிர்ச்சிக்குள்ளான விவசாயிகளும் கடைக்காரர்களும் மரங்களின் கீழ் தங்கி இருந்தனர். வான் தாக்குதல்களில் மாவட்ட மருத்துவமனை தாக்கப்பட்டு அங்கே தங்கியிருந்த காயம்பட்டவர்கள் நரம்பு வழி ஏற்றியிருந்த குழாய்களைக் கழற்றி எறிந்துவிட்டு திரவம் மணலில் ஒழுக உயிருக்காக ஓடினார்கள். அதை லோகீசன் கண்டிருக்கிறார். ஐநா அங்கிருக்கும்போதே முதலுதவி வண்டிகள், பள்ளிக்கூட வண்டிகள்கூடத் தாக்கப்பட்டன.

“மக்கள் மனம் நொந்து போனார்கள். ஐநாவினர் எங்களைக் கைவிட்டுச் செல்வார்கள் என்று நாங்கள் எவருமே உண்மையில் கற்பனைகூடச் செய்யவில்லை. சாட்சியாக இருக்கக்கூட வெளிநாட்டவர் எவரும் இல்லை. இத்தனை கொலைகள் நடந்ததற்கு முதல் பெரும் காரணம் ஐநா வெளியேறியமை என்றே நான் நினைக்கிறேன். போர்க்களத்தில் என்ன நடக்கிறது என்று அறிவிப்பதற்கு எந்த நிறுவனமும் அங்கிருக்கவில்லை. அவர்கள் அங்கிருந்திருந்தால் குண்டுகள் போடுவது குறைவாகவே இருந்திருக்கும்,” என்று சொன்னார்.

போராட்டம் தோற்றுவிட்டது, போரிடுவது வீண் வேலை என்று தெளிவாகத் தெரிந்த பின்னரும், பதின் வயதுச் சிறுவர், சிறுமிகளை புலிகள் பலவந்தமாகப் பிடித்துக்கொண்டு போகும்போது அதைத் தடுப்பதற்கும் அங்கே ஒருவரும் இல்லை. ஐநாவின் வெளியேற்றத்துடன் நிர்வாகத் தோற்றமும் குலைய ஆரம்பித்தது. புலிகளின் பிரதேசத்திற்குள் சுதந்திரமாகச் சென்று செய்திகளைச் சேகரிப்பதற்கு புலிகளிடமிருந்து விசேஷ கடிதம் தேவைப்பட்டது என்றும் அப்படி இல்லாவிட்டால் ஆட்களைப் பிடிப்பவர்கள் அவரையும் பிடித்து, போர் முன்னணிக்கு அனுப்பியிருப்பார்கள் என்றும் லோகீசனின் நிறுவனத் தலைவர் சொன்னார்.

இலங்கை ராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த பிரதேசத்திற்குள் குண்டுகளைப் போட்டபோது பொதுமக்கள் கரையோரத் தெருக்களில் ஓடினார்கள். அத்தெருக்கள் மேடுபள்ளங்கள், குழிகள் நிறைந்த சிறிய பாதைகள். வளைந்து செல்லும் அழகான கிழக்குக் கடலோரம். பனைகள் நிரம்பிய நீண்ட கடற்கரைப் பிரதேசம். தட்டையான சதுப்பு நிலக் கழிமுகங்கள் இருந்தன. உட்பிர தேசத்தில் விவசாயக் கிராமங்கள் இருந்தன. அங்கே நிழல் கொடுக்கும் தென்னந் தோப்புக்களுக்கிடையில் நீர்ப்பாசனக் குளங்களும் பழ மரங்களும் இருந்தன. வசதியான கிராமங்கள் அவை. பொதுவாக பறவைகள் மிருகங்கள் ஆகியவற்றின் சத்தங்களையும் இடையிடையே செல்லும் மோட்டார் சைக்கிள்களின் சத்தங்களையும் தச்சுத் தொழிலாளர்களின் சுத்தியல் சத்தங்களையும் அல்லது இந்துக் கோவில்களில் கேட்கும் பக்திப் பாடல்களையும் தவிர வேறொரு சத்தமும் கேட்காத இடங்கள் அவை. 2009 ஜனவரியில் அமைதியான அந்தக் கிராம வாழ்வு பழைய நினைவாகிவிட்டது. அழு குரல்கள் காற்றைக் கிழித்துக்கொண்டிருந்தன. பல குரல்கள் பல்வேறு தொனிகள். ஓலங்கள், அலறல்கள், கத்தல்கள். தேம்பல்கள், கூக்குரல்கள். ஒரே நேரத்தில் பல்வேறு திசைகளிலிருந்து. அவற்றில் பல திகைத்துப் போய் நடுக்கத்துடன் தாய்மாரை அழைக்கும் குழந்தைகளின் குரல்கள்.

மற்றவர்களைப் போலவே லோகீசனும் அவரது குடும்பமும் சிறிய சிறிய கிராமங்கள் வழியாக ஓடினார்கள். கிராமங்கள் வழியாக ஓடுவது பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார்கள். ஒவ்வொரு இடத்திலும் லோகீசன் பதுங்கு குழி வெட்டினார். கூடாரம் அமைத்தார். குறைந்து கொண்டே போன பொருட்களை அவிழ்த்து வைத்தார். ஆனால் எவ்வளவு காலம் அவ்விடத்தில் தங்குவோம் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் தன் அறிக்கைகளை அனுப்பிக்கொண்டேயிருந்தார். வழக்கத்திற்கு மாறாகப் பெருத்த பருவமழை பெய்து துன்பத்திற்கு மேல் துன்பத்தைக் கொடுத்தது. மாதக்கணக்கில் பெய்த மழை வெள்ளத்தை உண்டாக்கியது. அதனால் பதுங்கு குழிகள் அழுக்கு நீரால் நிரம்பின. குளங்கள், ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. விவசாயிகள் தங்களிடமிருந்த கொஞ்சநஞ்சப் பொருட்களையும் இழந்தார்கள்.

பாதுகாப்புக்காக ஓடும் பாதைகளும் பாதசாரிகளால் நிரம்பி வழிந்தன. வாகனங்களில் மக்கள் பிதுங்கி வழிந்தனர். டிராக்டர்கள் தெருக்களில் ஆடி அசைந்து சத்தத்துடன் சென்றன. தெருக்கள் இப்பொழுது வெள்ளத்தால் சிறு சிறு நீரோடைகளாக மாறிவிட்டன. நீர் செம்மண் சேற்று நிறத்தில் இருந்தது. டிரக்குகள் வாழ்வாதாரக்குரிய அத்தியாவசியப் பொருட்களை அல்ல, எவருடையதோ சட்டு முட்டுச் சாமான்களைக் கொண்டு போவதுபோலக் காணப்பட்டன. மீட்டெடுத்த கூரை வளைகள், நெளிந்த கூரைத் தகடுகள். பலவற்றில் துருப்பிடித்த பெரிய டீசல் பீப்பாக்களும் சைக்கிள்களும். உழுவதற்குப் பயன்பட்ட எருதுகள் தங்கள் எசமானர்களின் எஞ்சி இருந்த பொருட்களை வண்டிகளில் இழுத்துக் கொண்டு சென்றன. அவற்றில் குடிசை கட்டத் தேவையான பனையோலைகள்கூட இருந்தன. ஜனவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் அந்தத் தெருவில் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடந்தன. குண்டுகள் மரங்களைப் பிளந்தன. வாகனங்கள் தீப்பற்றின. மனித உடல்களும் கால்நடைகளின் அங்கங்களும் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன.

ஜனவரியில் நடந்த தாக்குதலுக்குப் பின் லோகீசன் இறந்தவர்களை எண்ணினார். எண்ணிக்கை 300க்கும் அதிகமானதும் எண்ணுவதைக் கைவிட்டார். இறந்துபோன தங்கள் பெற்றோர்களைத் தேடி குழந்தைகள் வீறிட்டு அலறிக்கொண்டே இருந்தன. பலர் வாகனங்களில் ஏறி ஓட முயன்றுகொண்டிருந்தபோது வாகனத்துக்குள்ளேயே கொல்லப்பட்டார்கள். அவர்களை லோகீசன் எண்ணவில்லை. நிழற்படங்களும் காணொளிப் படங்களும் எடுத்தார். தூரத்தில் நின்று மனம் உடைந்து கண்ணீர் பெருக விழுந்தார்.

SriLanka_AprilAttacks.jpg

நினைவில் ஆழமாகப் பதிந்த அந்தப் பிம்பங்கள் தீய கனவுகளாக வெளிப்பட்டன. ரத்தம் பீறிட்டு இறந்துபோன குழந்தையை நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு புலம்பி அழும் தாய். சைக்கிள்களில் அம்பாரமாக சாமான்களுக்கு மேலே கயிற்றால் கட்டியுள்ள ரத்தம் சொட்டும் சடலங்கள். குடும்பங்கள் இறந்தவர்களைக் கைவிட்டுச் செல்ல விரும்பவில்லை. குண்டுகள் விழுந்துகொண்டிருந்ததால் நின்று சடலங்களைப் புதைக்கவும் முடியவில்லை. ஆதலால் தங்கள் அன்புக்குரியவர்களின் சடலங்களை எங்காவது கொண்டு சென்று அவசரம் அவசரமாக எந்தவிடத்திலாவது ஒரு புதை குழியைத் தோண்டிப் புதைக்க விரும்பினார்கள்.

லோகீசன் தனக்குக் குழந்தைகள் இல்லை என்பதை நினைத்து ஆறுதல் அடைந்தார். “தங்கள் குழந்தைகள் பசியால் வாடுவதைக் கண்டு துன்புற்ற பெற்றோரைக் கண்டிருக்கிறேன். அதை எந்த மனிதராலுமே தாங்க முடியாது.” இருபத்தி நான்கு மணி நேரமும் பதுங்கு குழிகளில் எந்தப் பெற்றோராலும் குழந்தைகளை அடைத்து வைக்க முடியாது. தாய் கவனிக்காத நேரத்தில் அவை வெளியே தப்பிவிட முயலும். “குழந்தை வெளியே ஓடி விளையாடும் போது குண்டு விழும். தாய் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற ஓடிப் போவாள். அவளும் குழந்தையும் கொல்லப்படுவார்கள். அதிகமாகத் தாயும் குழந்தையும்தான் அந்த இடங்களில் சாவார்கள்.” தங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்து ஒரு நிமிஷம்கூடப் பிரிந்திருப்பதை ஒருவரும் விரும்புவதில்லை. காரணம், எந்த நேரம் ஒருவர் கொல்லப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருந்தது. அத்துடன், ஏற்கெனவே இருந்த பயம், அதிர்ச்சி, துன்பம், பசி, களைப்பு. அத்துடன் பிரிவால் ஏற்படும் துயரத்தையும் தனிமையில் தாங்கிக்கொள்ள வேண்டும்.

ஊடகவியலாளனாகக் கடமையாற்ற வெளியே செல்கையில் லோகீசன் தன் பெற்றோரையும் காதலியையும் பதுங்கு குழியில்தான் விட்டுச் செல்வார். தனக்கு ஏதாவது நடந்தால் தன் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும்படி காதலிக்குச் சொல்லியிருந்தார். அவர் பயணிக்கும்போது வயது முதிர்ந்தவர்கள் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் இருப்பதை அடிக்கடி கண்டிருக்கிறார். அதேபோல தன் பெற்றோருக்கும் நடந்துவிடக் கூடாதே என்ற பயம் அவரை ஆட்கொண்டிருந்தது. அவன் உயிருடன் திரும்புவானா என்ற நிச்சயமில்லாமல் கஞ்சி குடிக்காமல் அவர்கள் காத்திருப்பார்கள். “அவர்கள் ஒருநாளாவது ‘இதைச் செய்யாதே’ என்று எனக்குச் சொன்னதில்லை. ஆனால் அவர்களால் என்னை விட்டுவிட்டுச் சாப்பிட முடிந்ததில்லை. எந்த நேரமும் ஆவலுடன் காத்திருப்பார்கள். நான் திரும்பி வரும்வரை இடை நிறுத்தப்பட்ட தொலைக்காட்சி போலக் காத்திருப்பார்கள்.”

தன் கூடாரத்திற்குத் திரும்பியவுடன் லோகீசன் செய்யும் முதல் வேலை தன் தொலைபேசிக்கும் கேமராவுக்கும் கதிரொளி மின்திறன் மூலம் மின்னூட்டம் அளிப்பதே. அப்படிச் செய்வது, அடுத்த நாளும் சென்று செய்தி சேகரிக்கப் போகிறேன் என்னும் சமிக்ஞையைப் பெற்றோருக்குக் கொடுப்பதே. லோகீசன் என்ன செய்கிறார் அல்லது என்ன ஆபத்துகளைச் சந்திக்கிறார் என்பதைப் பற்றி அவர்கள் பேசிக் கொள்வதே இல்லை.

லோகீசன் எண்ணற்ற முறை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் உடையார் கட்டு மருத்துவமனைக்குக் காயம்பட்டவர்களைப் பார்க்கச் சென்றார். தன்னுடைய மோட்டார் சைக்கிளை எங்கே நிறுத்துவது என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. ஒவ்வொரு இடமாகப் பார்த்தார். சில நிமிஷங்களுக்குப் பிறகு இருபது குண்டுகள்வரை மருத்துவமனை வளாகத்திற்குள்ளும், அதைச் சுற்றியும், பிரதான வீதியிலும் விழுந்தன. அவ்விடத்தில்தான் வண்டியை நிறுத்த நினைத்திருந்தார். இன்னொரு நாள் குண்டுகள் விழுவதிலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த மக்களைப் படம் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு குண்டு அவர் படுத்துக் கிடந்து படம்பிடித்த இடத்திலிருந்து முப்பது மீட்டருக்கு அப்பால் விழுந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு கோவிலிலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்தார். அந்தக் கோவிலில் ஒரு குண்டு விழுந்தது. செய்திகளைச் சேகரிக்கும்போது அவர் மேல் குண்டு விழுந்திருந்தால் அவருடைய பெயரும் காயமடைந்தவர்களின் அல்லது இறந்தவர்களின் பெயர் பட்டியிலில் இருந்திருக்கும்.

பயணம் செய்வதுதான் ஆபத்தென்று இல்லை. சாட்டிலைட் தொலைபேசியில் பேசுவதே ஆபத்தானதுதான். லோகீசன், தன்னுடைய அழைப்புகளை வைத்து இலங்கை ராணுவம் தன்னுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாம் எனச் சந்தேகப்பட்டார். ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னும் அவ்விடத்தை விட்டு விரைவாக வெளியேறி வேறிடம் சென்றுவிடுவார். தொலைபேசியை வைத்தவுடன் அவர் இருந்த இடத்தில் எந்த நிமிஷமும் தாக்குதல் நடைபெறலாம் என்ற பயம். அவருடைய குரலை அரசாங்கம் மௌனிக்க முயலும் என்று உணர்ந்திருந்தார்.

ஜனவரி மாதம் ராணுவம் சட்டத்திற்குப் புறம்பாக வெள்ளை பாஸ்பரஸை பொதுமக்கள்மீது பிரயோகித்துள்ளது என்பதைத் தான் தான் முதல்முறையாகக் கண்டறிந்ததாக லோகீசன் திடமாக நம்பினார். காரணம், இருபத்து மூன்று உடல்களில் சன்னங்கள் உள்ளே சென்ற அல்லது வெளியேறிய அடையாளங்கள் இல்லை. யுத்தகளத்தில் படைகள் முன்னேறுவதற்காக வெள்ளை பாஸ்பரஸைப் பிரயோகித்து அடர்த்தியான வெள்ளை புகைமூட்டத்தை உண்டாக்குவார்கள். அது தோல்களில் ஒட்டிக்கொண்டு ஆழமானத் தீக்காயத்தை உண்டாக்கி மொத்த மேற்தோல் பரப்பையும் கீழ்த்தோல் பரப்பையும் எரித்துவிடும். அத்துடன் தோலை முழுவதாக எரித்து பிராணவாயுவையும் இல்லாமல் ஆக்கிவிடும். “எல்லாவற்றையும் எரித்துவிட்டது. உடம்பு முழுவதும் மஞ்சள் - வெள்ளை நிற கொழுப்பு மட்டும் காணப்பட்டது. தோல் கிழிந்துவிட்டது. அதற்கடியிலிருந்த கொழுப்பையும் அது உருக்கிவிட்டது.” சிலர் தெருவோரம் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்ன நடந்தது என்று தெரியாமலே பல கோணங்களில் இறந்து கிடந்தார்கள். சிலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஒளிந்துகொண்டிருந்தனர். “ஒருவரைக் கொல்வதற்கு வித்தியாசமான முறைகள் எல்லாம் உள்ளன,” என்றார் லோகீசன். அவர் இப்பொழுது இறந்தவர்களைக் கணக்கெடுப்பதில் விற்பன்னராகிவிட்டார்.

அவரால் பல இடங்களுக்கும் போய்ப் பார்த்து அந்தக் கதைகளை எழுத முடியவில்லை. அவர் காணாதவையே அவருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தன. “எங்களுக்குத் தெரியாத இன்னும் பல விஷயங்கள் அங்கிருந்தன. அவற்றுக்குச் சாட்சியங்கள் இல்லை. பலர் கொல்லப்பட்டார்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது.” விசுவமடு என்பது சிறியதொரு நகரம். அது பிரதான சாலைக்குப் பக்கத்தில் இருந்தது. அங்கிருந்து ஏறக்குறைய எல்லா ஜனங்களும் ஓடிவிட்டார்கள். புலிகளின் மயானமான அந்த இடத்தில் ஜனவரி மாதக் கடைசியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைபட்டுக் கிடந்தார்கள். புலிகளிடமிருந்து அங்கிருந்த பொது மக்களைப் பிரிப்பதற்காக இலங்கை ராணுவம் அவ்விடத்தைச் சுற்றி வளைத்து அவர்கள் தப்பியோட முடியாமல் தெருவில் குண்டுகளைச் சரமாரியாகப் பொழிந்தது. “குண்டுகள் எல்லா பக்கமும் விழுந்துகொண்டிருந்ததால் எங்களால் போக முடியவில்லை. அந்த மூன்று நாட்களும் கற்பனை செய்யமுடியாதவை. அந்தப் பெருந்தெருவில் பலர் இறந்தனர். ஆனால் அவர்கள் எத்தனை பேர் என்பது பற்றி எங்களுக்கு எந்த விபரமும் தெரியாது.”

SriLanka-2.jpg

அந்தத் தெரு மரணப்பொறி ஆகிவிட்டதால் லோகீசனும் அவருடைய குடும்பமும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் கால் நடையாக காடு வழியாக ஓடினார்கள். மழை இன்னும் கடுமையாகப் பெய்துகொண்டிருந்தது. வாழ்வாதாரத்திற்குத் தேவையான பொருட்களைச் சுமக்க ஒவ்வொருவரும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். லோகீசன் தன்னுடைய மோட்டார் சைக்கிளைச் சகதி வழியாகத் தள்ளிக்கொண்டு, உடுப்புப் பெட்டி ஒன்றையும் சமையல் பாத்திரப் பெட்டியையும் அரிசியையும் தூக்கிக்கொண்டு சென்றார். அந்த ஆறு கிலோ மீட்டர் பிரயாணத்தை முடிக்க ஏழு நாட்கள் பிடித்தன. குண்டுகள் விழுந்துகொண்டிருந்தன. கடலை நோக்கிச் செல்ல மனிதக் கூட்டம் விழுந் தடித்தது. ஆனால் வேகமாகச் செல்ல முடியவில்லை. மனிதக் கூட்டத்தினாலும் பொருட்களால் நிரப்பட்ட வாகனங்களின் சுமையாலும் வெள்ளக் காடாகக் கிடந்த சாலையில் கடும் நெருக்கடி உண்டானது. அதில் காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவமனைகளுக்குக் கூடப் போக முடியாமல் துன்பப்பட்டு இறந்தார்கள்.

“எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அலறினார்கள். துன்பப்பட்டார்கள். உதவி கேட்டார்கள். அங்கே பிணங்களுடன் தூங்குவது என்பது அப்படி ஒன்றும் புதிதல்ல. அந்த ஜனவரி மாதத்திற்குப் பின் அந்த உலகத்தில்தான் நாங்கள் வாழ்ந்தோம். பழுத்த மாம்பழங்கள் விழுவதுபோல ஆகாயத்திலிருந்து குண்டுகள் விழுந்தன. அந்தச் சத்தம் கேட்டுத்தான் நான் எழும்புவேன்.” தாய்மார் குழந்தைகளைக் காணாமல் அவர்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுத் தேடுவதை லோகீசன் படம் பிடித்திருக்கிறார். குழந்தைகளை உயிருடன் காணமுடியுமா என்ற கவலை தாய்மாருக்கு. சடலங்கள் பலவும் உருக்குலைந்து போய் இருந்தன. அவற்றை எவரின் உடல் என்று கண்டுபிடிக்கவே முடியாத நிலை.

அவர்கள் கடைசியாகக் கடலை அடைந்தபோது மணல் கடற்கரை மிகவும் அடர்த்தியாக மக்களால் நிரம்பியிருந்தது. அங்கே அவர்களுக்கு இடமோ அந்தரங்கமோ இருக்கவில்லை. ஒரு குண்டு விழுந்தால் நிச்சயமாக அது பலரைக் கொல்லும்.

அந்தக் கட்டத்தில் புலிகளால் செய்யக் கூடியது தங்களிடமுள்ள சிறிய துண்டுப் பிரதேசத்தைப் பாதுகாத்துக் கொண்டு இலங்கை ராணுவத்தைத் தூர இருக்கச் செய்வதே. அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பெரிய நகரங்கள் எல்லாவற்றையும் அவர்கள் இழந்துவிட்டார்கள். இருந்தும் புலிகள் எப்படி பொதுமக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் சிறைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று மனித உரிமைக் குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன. மக்கள் ராணுவம் இருந்த பக்கம் செல்ல முயல்கையில் புலிகள் அவர்களை நோக்கிச் சுட்டிருக்கிறார்கள். நிகழ இருக்கிற தோல்வியை முற்றாக மறுத்துக் கொண்டு, தமது தனி நாடு என்ற கனவுக்காகச் சாவதற்காக மேலும் பல இளைஞர்களை சேர்த்திருக்கிறார்கள்.

வாரங்கள் செல்லச் செல்ல யுத்த பூமியிலிருந்த தமிழர்களும் அதற்கு வெளியே இருந்த தமிழர்களும் சர்வதேசச் சமூகம் இந்த யுத்தத்தில் தலையிடும் என்று நம்பினார்கள். லோகீசன் அதுவே ஒரேயொரு தீர்வு என்று எண்ணினார். ஆனால் அது பகற்கனவாகவே ஆகியது.

கடற்கரையில் லோகீசன், தற்காலிகமாக இன்னும் இயங்கிக்கொண்டிருந்த இரண்டு மருத்துவ மனைகளின் ஒன்றின் அருகில், தாறுமாறாக அமைக்கப்பட்டிருந்த அந்தக் குடியிருப்புப் பகுதியில், தன் கூடாரத்தையும் அமைத்துக்கொண்டார். முன்பு பாடசாலையாக இருந்த ஒரு கட்டடத்தில் மருத்துவர்கள் தங்கள் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அக்கட்டடம் ராணுவத்தினரின் கண்களுக்குத் துல்லியமாகத் தெரியக்கூடிய ஓர் இடம். குறி பார்த்துச் சுடும் ராணுவத்தினர் ஏறக்குறைய 250 மீட்டர் தூரத்திலிருந்து நீண்ட கடல் கழிக்கு மறுபக்கத்திலுள்ள காட்டுக்குள் மறைந்திருந்தார்கள். மக்களின் நடவடிக்கைகளைப் படையினர் சாதாரணமாகவே பார்க்கமுடியும். ஆனால் ராணுவம் தம்மிடமிருந்த இருந்த ஆளில்லாத விமானங்கள் மூலம் தாழப் பறந்து அவர்களைப் படம் பிடித்துக்கொண்டிருந்தது. நாள் முழுவதும் மருத்துவமனையை நோக்கித் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுக்கொண்டே இருந்தன. மருத்துவமனை வளாகத்துக்குள்ளே அல்லது வெளியே சராசரியாக ஒரு வாரத்துக்கு மூன்று தரம் குண்டுகள் விழுந்தன என்று லோகீசன் கூறினார். எறிகணையால் உந்தப்பட்ட கைக்குண்டுகளும் சுடப்பட்டன. அவை மருத்துவமனை, மருந்து பொருட்கள், படுக்கைகள், கூடாரங்கள் ஆகியவற்றின் மீது விழுந்தன என்றார்.

மருத்துவமனையைச் சுற்றியிருந்த பகுதியில் இறந்த உடல்களின் நாற்றம் வீசியது. “அதுவொரு கசாப்புக் கடையைப் போன்றது. மருத்துவமனைக்குள் சென்றபோது அங்கே ஒரு மரம் இருந்தது. அதன் கீழ் காயம்பட்டவர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர் விரைவில் இறந்துபோவார்கள்.” மருத்துவமனை வளாகம் முழுக்க நோயாளிகளைப் பராமரிக்கும் குடும்பத்தினர் விட்டுச்சென்ற நீல பிளாஸ்டிக் விரிப்புகளும் கிழிந்த சேலைகளும் கிடந்தன. அவற்றில் ஊனமுற்றவர்களும் மயக்கத்தில் கிடக்கும் நோயாளிகளும் நிறைந்து காணப்பட்டார்கள்.

அங்கு கொண்டு வரப்படும் நோயாளிகளில் அரைவாசிப் பேரைத்தான் மருத்துவர்களால் காப்பாற்ற முடிந்தது. மீதிப் பேர் சிகிச்சை கிடைக்குமுன்பே இறந்துபோயினர். ஒரு முதிய பெண் தலையில் காயத்துடன் வந்து இவர் கண்முன்னாலேயே இறந்து போனார். “அந்தப் பெண் காயத்திற்குக் கட்டுக் கூடப் போடாமலே வேதனையில் அலறிக்கொண்டிருந்தார். வலியால் பேசக்கூட முடியவில்லை. என் கண் முன்னாலேயே தள்ளாடி, விழுந்து இறந்து போனார். அப்படிப் பலர் இறப்பதைக் கண்டிருக்கிறேன்,’ என்று சாதாரணமாகச் சொன்னார், லோகீசன்.

அங்கே மருந்துகளோ கட்டுப் போடச் சல்லடைத் துணிகளோ இல்லை. அத்துடன், அங்கங்களை வெட்டுதற்குரிய அறுவை சிகிச்சைக் கத்திகள்கூட இருக்கவில்லை. குழந்தைகளின் உறுப்புகளை நீக்குவதற்கு மயக்க மருந்துகூட இல்லாமல் மருத்துவர்கள் கசாப்புக் கத்திகளை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். தலையில், வயிற்றில், நெஞ்சில் காயம் உள்ளவர்களைப் பொதுவாக மருத்துவமனைக்குள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதில்லை. காரணம், அவர்களுக்கு அங்கே சிகிச்சை அளிக்கக்கூட முடியாது. மருத்துவர்களின் புள்ளி விவரப் பதிவு ஏட்டில் காயம்பட்டவர்களில் மூன்றிலொரு பகுதியினர் தான் பதிவுசெய்யப்பட்டிருப்பார்கள் என்று லோகீசன் மதிப்பிடுகிறார். யுத்தம் மும்மரமாக நடை பெறுகையில் இறந்தோர் தொகை விகிதமும் பெருமளவில் அதிகரித்தது. “கடற்கரைக்கு நாங்கள் ஓடுவதற்கு முன்பு இறந்தவர்களையும்விட காயம்பட்டவர்கள்தாம் அதிகம். பத்துப் பேர் இறந்தால் இருபத்தைந்து பேர் காயம்பட்டிருந்தனர். அந்தக் காலத்தில் இன்னும் மக்கள் ஆரோக்கியத்துடனும் திடகாத்திரத்துடனும் இருந்தனர். சிகிச்சைக்குப் பயனும் கிடைத்தது. ஆனால் கடைசி வாரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் காயம்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய சம அளவில் இருந்தன.”

ஒரு நாள் லோகீசன் மருத்துவமனையில் நின்று காயம்பட்டவர்களையும் இறந்தவர்களையும் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது கழுத்திலும் நெஞ்சிலும் பெரிதாகக் காயம்பட்ட ஆனால் இன்னும் மயக்கமடையாமல் இருந்த ஒரு தாய் தன் குழந்தையைக் கத்திக் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தாள். ஒரு முதியவள், சிலவேளை குழந்தையின் பாட்டியாகக்கூட இருக்கலாம், கொஞ்சம் காயம்பட்ட ஆறு மாதக் குழந்தையைக் கொண்டு வந்தாள். தாய் அந்தக் குழந்தையை வாங்கி அதன் தலையில் மெள்ளக் கொஞ்சிவிட்டு முலைப் பால் கொடுத்தாள். அவள் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் தன் குழந்தைக்குப் பால் கொடுக்காவிட்டால் அக்குழந்தை இறந்துவிடும் என்று நினைத்துப் பால் கொடுத்தாள். அக்காலத்தில் பால் பவுடருக்குத் தங்கத்தைவிடவும் விலை மதிப்பு அதிகம். குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்தபோதே தாய் இறந்து கிடந்ததை லோகீசன் பிறகு கண்டார். அவள் கொடுத்த அந்தப்பால் குழந்தைக்குத் தாய் அளித்த கடைசிப் பரிசு. அவள் தன் குழந்தையை அவசரமாகத் தேடியபோதே அவளுக்குத் தான் செத்துக்கொண்டிருக்கிறேன் என்பது தெரியும்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் லோகீசன் மருத்துவமனைக்குப் பின்பக்கத்திலும் வளாகத்திலும்கூட குண்டு விழுவதைக் கண்டார். தாக்குதல் முடிந்தபோது டிராக்டர் ஒன்று அலறிக்கொண்டிருந்த காயம்பட்டவர்களுடன் மருத்துவமனைக்குள்ளே நுழைந்தது. மருத்துவர்கள் ஏழு கர்ப்பிணிப் பெண்களை அதிலிருந்து வெளியே தூக்கி எடுத்தார்கள். இன்னொரு பெண்ணைத் துணியால் மூடியிருந்தார்கள். அவளின் வயிற்றிலிருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. அவளும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்பதை ஒருவரும் உணரவில்லை. காரணம், அப்போது பலருக்குச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருந்தது. “விரைவாகத் திரும்பியபோது அவளுடைய வயிற்றைப் பார்த்தேன். அதிலிருந்து சிறிய வெள்ளை நிறப்பொருள் ஒன்று வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. அது குழந்தையின் கை. அதைக் கண்டு முழு மருத்துவமனையுமே அதிர்ச்சிக்குள்ளாகியது.” அந்தப் பெண்ணும் குழந்தையும் இறந்துவிட்டனர் எறு லோகீசன் நினைக்கிறார்.

 

ஒரு மாலை நேரம் லோகீசன் தன் பெற்றோருடன் கூடாரத்தில் இருந்துகொண்டிருந்தபோது ஏவுகணை ஒன்று அடுத்த கூடாரத்தைக் கிழித்துக்கொண்டு சென்றது. அது ஒரு பீரங்கியிலிருந்து வந்திருக்கலாம். அது தரைமட்டத்தில் சென்று ஒரு முதியவரின் வயிற்றைத் துளைத்தது. பின்னர் இன்னொரு கூடாரத்தையும் வாகனத்தையும் கிளர்ந்தபடியே சென்று கடைசியில் ஒரு வீட்டைத் தாக்கியது. கூடாரத்திற்கு வெளியே அந்த முதியவரைப் புதைப்பது ஆபத்தானதாக இருந்ததால் அவர் குடும்பத்தினர் சடலத்தை அவர்கள் தோண்டியிருந்த புதைகுழியிலேயே இறக்கி, மணலால் மூடிவிட்டு, தங்குவதற்கு வேறொரு இடத்தைத் தேடி சென்றுவிட்டார்கள். ஒரு கூடாரத்தை அமைப்பதற்கு இரண்டு மீட்டர் இடத்தைக் கண்டுபிடிப்பதே அங்கே கஷ்டமாக இருந்தது. அவர்கள் போய் அரை மணிநேரத்தின் பின் இன்னொரு குடும்பம் அவ்விடத்திற்கு வந்து அந்த இடத்திலேயே ஒரு கூடாரத்தை அமைத்தார்கள். அவர்கள் ஒரு சவக்குழிக்கு மேல் படுத்திருந்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.

 

ஏப்ரல் மூன்றாம் வாரம் இலங்கை ராணுவம் புலிகளின் அரண்களை உடைத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த அந்தச் சிறிய மணல் பிரதேசத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றியது. மண் மூடைகள் கொண்டு தானே அமைத்த பதுங்கு குழிக்குள் லோகீசன் பத்து மணி நேரம் ஒரேயடியாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் அம்மக்கள் கூட்டத்தைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்தன. குண்டுகள் அவர்களின் தலைக்கு மேலாகப் பறந்தன. பயங்கர மரணங்களை உண்டாக்கின. மரங்களை விழ்த்தின.

பல்குழல் ஏவுகணைச் செலுத்திகள் நடமாடும் வாகனங்கள். அவை ஒரே நேரத்தில் நாற்பது வட்ட அதிர் வெடிகுண்டுகளைச் செலுத்தி, ஒரே சூட்டில் இருபது விநாடியில் துகள் துகளாக வெடிக்க வைக்கக்கூடியவை. அந்த ஆயுதம் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் கொண்ட வெடிப் பொருட்களை ஒரு சில ஹெக்டர் - பத்தாயிரம் சதுர மீட்டர்கள் பரப்புள்ள இடத்தில் பரவும். அவை அங்கிருந்த அனைத்தையும் பாகுபாடின்றித் தொடர்ந்து தாக்கும். வடக்கு, மேற்கு, கிழக்கு என்று எல்லாத் திசைகளிலிருந்தும் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தன. இப்பொழுது கடற்கரையில் பல இடங்களில் ராணுவம் நிலைகொண்டுவிட்டது. புலிகள் இருப்பதன் அறிகுறிகளே தெரியவில்லை. அவர்கள் ஏற்கெனவே தெற்காகப் பின்வாங்கத் தொடங்கிவிட்டிருந்தனர். லோகீசன் மிக உயரமானவர். உட்கார்ந்திருந்தால் அவரது தலை பதுங்கு குழிக்கு மேலாகத் தெரியும். அதனால் அவர் குனிந்துகொண்டிருந்தார். குண்டுகள் மணல் சாக்குகளைத் தாக்கின.

லோகீசன் தன் தகவல் கருவிகளைத் தன்னுடனேயே வைத்திருந்தார். இரண்டு மடிக் கணினிகள், ஒரு கேமரா, பிகான் என்ற கையடக்க இணையத் தட்டு, கையடக்க சாட்டிலைட் தொலைபேசி ஆகியவை. மருத்துவமனையைப் பார்க்கச் சென்றார். இப்போது அது அரைப் பகுதி எரிந்துவிட்டது. “மக்கள் உதவி வேண்டி கூக்குரலிட்டுக்கொண்டிருந்தார்கள். ராணுவம் இருந்த இடத்தை நோக்கி அவர்கள் ஓடினார்கள். காரணம், அந்தப் பக்கம் மட்டுந்தான் குண்டுகள் விழவில்லை. உடுத்திருந்த சேலையில் பாதியைக் கிழித்தெடுத்து வெள்ளைக் கொடியாகப் பிடித்துக்கொண்டார்கள். நான் போனபோது அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. அங்கே பல உடல்கள் கிடந்தன. ராணுவம் அருகேதான் இருந்தது. ஆகவே அவர்களுக்கு இது பொதுமக்கள் என்று தெரியும்."

SriLanka-9.jpg

மருத்துவமனையைக் கடந்து சென்ற தெருவின் மத்தியில் குண்டுகள் விழுந்த பெரிய குழிகள் இருந்தன. அந்த நேரம் இலங்கை ராணுவம் நெருங்கி வந்துவிட்டது. புலிகள் இருந்த இடத்திலிருந்து லோகீசன் பிரிந்து வந்துவிட்டார். “எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கே நின்றாலும் சாவேன். அவ்விடத்தை விட்டுப் போனாலும் சாவேன். எந்த வழியிலும் நான் சாகப் போகிறேன்” என்று நினைத்துக்கொண்டதாக லோகீசன் சொன்னார்.

ஏப்ரல் 20ஆம் தேதி பின் மதியம் நாலு மணிக்கு ஒஸ்லோவிலிருந்த தன் நிறுவனத் தலைவர் ஜெயாவுக்கு தன் கடைசி அறிக்கையைத் தொலை பேசி மூலம் லோகீசன் அனுப்பினார். “இவை என் வாழ்க்கையில் நான் பேசும் கடைசி வார்த்தைகளாக இருக்கலாம்” என்று நினைத்தேன். ஜெயாவுக்கும் அந்தக் கடைசி தொலைபேசிப் பேச்சு நினைவிருக்கிறது. “தகவல் கருவிகளை உடைத்து எறிந்துவிட்டு, பெற்றோரையும் உன்னையும் எப்படியாவது காப்பாற்றிக்கொள்” என்று அவருக்குச் சொன்னேன் என்றார் ஜெயா.

முதலில் தன் மடிக் கணினியை உடைத்தார். பின் பிகான் தட்டை உடைத்தார். அதை உடைக்க முடியவில்லை. அதன் பிறகு தொலைபேசியை உடைத்தார். கணினியின் வன் தட்டுகளைக் கழற்றிப் பதுங்கு குழியின் ஈர மணலுக்குள் புதைத்துவைத்தார். கடல் உப்பு நீர் அதை அரித்துவிடும் என்ற எண்ணத்துடன். “நான் பல காலமாக பாதுகாத்த என்னுடைய எல்லாக் கருவிகளையும் அழிப்பதை என்னுடைய உடம்பின் ஒரு பகுதியைக் கொல்வது போல உணர்ந்தேன்” என்றார் அவர்.

அது லோகீசன் வெளிவரும் கடைசி நாள். குப்பைகள்போல நிறைந்து காணப்பட்ட சடலங்கள், கைவிடப்பட்ட கூடாரங்கள், குண்டுகள் விழுந்து உடைந்த கட்டடங்கள். அந்த நிலப்பகுதியைக் கைவிட்டு, லோகீசன் குளிர்ச்சியான அந்தக் கால்வாயில் நடந்தார். கால்வாய் நீர் சில இடங்களில் அவரது கீழ்த் தாடை வரை ஆழமாக இருந்தது. மிதக்கும் சடலங்களைத் தாண்டிய பிறகு தட்டையான, பச்சை நிறப் பரந்த வெளியைத் தாண்ட ஓர் அரை மணி நேரம் பிடித்தது. தன் தந்தையை இன்னும் தோளில் சுமந்துகொண்டிருந்தார். களைத்துப்போன தன் தாய்க்கும் தோழிக்கும் உதவினார். ஒரு சிறிய துணிப் பையையும் முக்கிய ஆவணங்களையும் கையில் பிடித்திருந்தார்.

கடற்கரையை அவர்கள் அடைந்தபோது தூரத்தில் பெரும் ஆயுதங்களுடனும் பீரங்கிகளுடனும் படையினர் நிற்பதை லோகீசன் கண்டார். இத்தனை சமீபத்தில் எதிரியைக் கண்டதால் அவர் விறைத்துப் போனார். முதல் கண்ட ராணுவ வீரன் தன் முகத்தை ஒரு கறுப்புத் துணியால் சுற்றிக் கட்டியிருந்தான். தன் அடையாளத்தை மறைத்துக்கொள்வதற்காக. தலைக் கவசமும் அணிந்திருந்தான். குண்டுப் பட்டியை தோளில் குறுக்காகப் போட்டிருந்தான்.

“இங்கு வராமல் இருந்த இடத்திலேயே நின்று இறந்திருக்கலாம்’ என்ற உணர்வுதான் எனக்கு முதலில் ஏற்பட்டது. அவர்களைப் பார்க்கவே பயமாக இருந்தது. படுகொலைகளைப் பற்றி முன்பு நான் செய்திகளை அனுப்பும்போது எப்படிப்பட்டவர்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதே என் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது எதிரியை நான் கற்பனை செய்தேன். நான் எதிர்பார்த்த அந்த முதல் படிமம் இப்போது சரியாகவே பொருந்தியது. அது பயங்கரமானது."

எல்லாத் தமிழர்களும் புலி அனுதாபிகள் என்று படையினர் நினைத்துக் கொண்டிருக்கும்போது, வெற்றிகொண்ட படையினரின் தயவை தமிழர்கள் நம்பியிருக்கும்போது பயப்படவே செய்வார்கள். தான் தேடப்படும் ஒருவன் என்பது லோகீசனுக்குத் தெரியும். விவரிக்க முடியாதளவு நடந்த மானிடத் துயரத்தை தன் செய்திகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை அரசாங்கத்தின் ‘பொதுமக்கள் எவரையும் அழிப்பதில்லை’ போன்ற பொய்களை அம்பலப்படுத்தியிருந்தார். அவன் யார் என்பதை ராணுவம் அறிந்தால் அவனை அது என்ன செய்யும்? மின்னல்போல் வந்த குண்டுகள், தாறுமாறாக விழுந்த சன்னங்கள் ஆகியவற்றிலிருந்து தப்பிப் பிழைத்து இவர்களிடம் பிடிபட்டுச் சித்திரவதைப்படவும் நிர்வாணமாக்கப்படவும் கண்கள் கட்டுப்படவும் கொலை செய்யப்பட்டு உடலை எங்காவது கண் காணாத புதைகுழிக்குள் புதை படவுமா வந்தோம்?

நனைந்த உடுப்புகள் உடம்பில் ஒட்டிக்கொள்ள, நீர் ஒழுக, லோகீசனும் அவருடைய குடும்பமும் முற்று முழுதாக மௌனமாக நின்றார்கள். ஒரு வார்த்தை பேசக்கூடத் துணியவில்லை. பீதியால் உறைந்துபோய் நின்றார்கள். மாறாக, படையினர் சந்தோசமாக அரட்டை அடித்துக்கொண்டு சிங்களத்தில் பாடிக் கொண்டிருந்தார்கள். வந்திருக்கின்ற குழுக்களில் எவராவது ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களா என்று அவர்களின் உடம்புகளைத் தேட ஆரம்பித்தார்கள். பெண்களின் உடம்புகளைத் தேட பெண் படையினர் ஒருவரும் இருக்கவில்லை. அதனால் ஆண் படையினரே அவர்களையும் சோதித்தனர். தன்னுடைய தாயையும் காதலியையும் நினைத்து லோகீசன் பயந்தார். படையினரின் பாட்டுகள் அவர் மனத்தில் எங்கோ ஓர் ஆழத்தில் ஏற்கெனவே புதையுண்டிருந்த இன்னொரு சத்தத்துடன் கலந்தன. அவருக்கு ஆறு வயதாக இருக்கும்போது நெல் வயல் ஒன்றில் ஒரு பெண் அலறுவதைக் கேட்டிருக்கிறார். மிகவும் இளவயது என்றபடியால் அது என்ன என்பது அவருக்குத் தெரியாது. 1980களில் புலிகளின் ஆயுதங்களைக் களைய அனுப்பப்பட்ட இந்தியப் படையினர் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்தனர். “இன்றைக்குவரை அந்தப் பெண் போட்ட சத்தம் எனக்கு நினைவில் இருக்கிறது” என்று அந்தப் பயங்கரத்தால் இன்றும் விறைத்துப் போய் அவர் சொன்னார்.

SriLanka-8.jpgஅன்றைக்குக் காலையில் இந்தப் பக்கம் ஓடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து கொண்ட பின்னருங்கூட அவரது பீதி குறையவில்லை. மங்கல் பொழுது. அலங்கோலமாக ஈரம் காயாமல் இருந்த மக்களை மேலும் சோதிக்க வரிசையில் நிற்கச் சொன்னார்கள். நள்ளிரவுக்கு முன்பு சோதிக்கப்பட்டுவிட்டால் நல்லது என்று எண்ணி லோகீசன் வரிசையில் முன்னுக்குச் சென்று நின்றுகொண்டார். நள்ளிரவானால் எதுவும் நடக்கலாம் என்று எண்ணிக்கொண்டார். தான் பிடிபடாமல் இருப்பதென்றால் துணிவும் பெரும் அதிர்ஷ்டமும் தேவை என்பது அவருக்குத் தெரியும்.

ந்த நேரம் எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அவர்கள் தாக்குதலுக்குள்ளாகினார்கள். கடலில் நின்ற கடற் படையினர் அவர்கள் அருகேயுள்ள நிலத்தை நோக்கிப் பீரங்கியால் சுட்டனர். குண்டுகள் அவர்களுக்கு மிக அருகில் விழுந்தன. “விழுந்துபடுங்கள், விழுந்து படுங்கள்” என்று ராணுவ அதிகாரிகள் கத்தினார்கள். அவர்கள் பயன்படுத்திய எல்லா வெளிச்சங்களையும் உடனடியாக அணைத்தார்கள். ஆயிரமாயிரம் பொதுமக்கள் நிலத்தில் கிடந்தார்கள். படையினர் பதுங்கு குழிகளில் ஒதுங்கிக்கொண்டார்கள். தமிழ்ப் பொதுமக்கள் மாதக் கணக்கில் பதுங்கு குழிகளில் ஒதுங்கிக்கொள்வதுபோலப் படையினரும் பதுங்கு குழிகளில் பதுங்குவதை அன்றுதான் முதன்முதலாக லோகீசன் கண்டார். அதைப் பார்த்த அவருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

காலை இரண்டு மணியளவில் திரும்பவும் சோதிக்க அனுப்பப்பட்டார்கள். ஆண்கள் வேறாக பெண்கள் வேறாக. வெவ்வேறு இடங்களில். லோகீசன் மனத்தில் ஓடியதெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அந்தப் பெண்ணின் ஓலம்தான். அவருடைய தோழிக்கும் தாய்க்கும் என்ன நடக்கும்? அவரால் அவர்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாது. அந்தப் பெண்கள் திரும்பி வந்து சேர்ந்துகொள்ள இரண்டு நாட்கள் ஆகின.

லோகீசனும் அவருடைய தந்தையும் திறந்த வெளியில் நீண்ட வரிசையில் நின்றார்கள். அவர்களின் உடைகளைக் களையச் சொன்னார்கள். உள்ளாடைகள் உட்பட எல்லாவற்றையும். ஒன்றுமே இல்லாது, பசியுடன், பல மரணங்களைப் பார்க்க நேரிட்டதால் மரத்துப்போன அவர்கள் இப்போது தன்மானத்தையும் இழந்துபோய் நின்றார்கள். “எப்படி உணர்ந்தேன் என்று என்னால் விவரிக்க முடியாது. என்னுடைய தந்தையை நிர்வாணமாகப் பார்ப்பதை. அதுவும் என் முன்னால். எல்லாரும் நிர்வாணமாக நின்றார்கள். நான் தோளில் சுமந்து வந்த என் தகப்பனாரிலிருந்து சிறு குழந்தைகள் வரை” அந்த அவமானத்தை எத்தனையோ ஆண்டுகளின் பின்னர் விவரிக்கும்போது லோகீசனின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

ஒட்டு மொத்தமாக உடல் சோதனைக்குள்ளான அந்த அவமானத்தின் பின் ஒவ்வொருவராக விசாரணைக்கு அனுப்பப்பட்டார்கள். தன்னுடைய வயதைக்கொண்டு தான் ஒரு போராளியாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிப்பார்கள் என்பது லோகீசனுக்குத் தெரியும்.

“நீ அங்கே என்ன செய்துகொண்டிருந்தாய்?” அவர்கள் கேட்டார்கள்.

“நான் ஒரு படப்பிடிப்பாளன்” லோகீசன் சொன்னார். அரைப் பொய் சொல்வது நல்லது என்று தீர்மானித்தார். காரணம், யாராவது அவரைக் கேமராவுடன் கண்டதாகச் சொன்னால் என்ன செய்வது என்ற எண்ணம்.

“நீ ஒரு புலியா?” புலனாய்வு அதிகாரி நல்ல தமிழில் கேட்டார்.

“இல்லை. என்னுடைய அப்பாவால் நடக்க முடியாது. அதனால் எனக்கு அவர்கள் விலக்களித்திருந்தார்கள். போகும் போக்கிலேயே பதில்களை உருவாக்கிக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தார். தன்னுடைய தகப்பன் தான் சொல்வதற்குச் சாட்சியாக இருப்பார் என்று நம்பினான்.

“நீ திருமணம் செய்துவிட்டாயா?” மணம் முடித்தவர்கள் வலுக் கட்டாயமாகப் போராட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள் குறைவு.

“ஆம்” ஆனால் அந்த நேரம் லோகீசனும் காதலியும் மணமுடித்திருக்கவில்லை.

ஆயிரக்கணக்கானவர்களை அன்றிரவு விசாரிக்க வேண்டியிருந்ததால், அந்த அதிகாரி லோகீசனைப் போகவிட்டார். ராணுவச் சீருடையில் இருந்த இரண்டு தமிழர்கள் கவனித்துக் கொண்டிருக்க மிகப் பெரிய பொட்டொளியின் கண்களைக் கூசும் வெளிச்சத்திற்குள் லோகீசன் நடந்து சென்றார். அங்கே சீருடையில் நின்ற இரண்டு தமிழர்கள் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றனர். லோகீசனுக்கு அவர்களை முன்பு எங்கோ பார்த்த நினைவு. போராளிகளின் பிரதேசத்திற்குள். போர் நடந்துகொண்டிருக்கையில் அவர்கள் உள்ளே நுழைந்திருக்கலாம். அல்லது கடைசியில் அவர்கள் ராணுவத்தின் பக்கம் சேர்ந்து காட்டிக் கொடுப்பவர்களாக மாறியிருக்கலாம். அதிர்ஷ்டவசமாக அவர்கள் லோகீசனை அடையாளம் காணவில்லை. தாடியுடனும் தலை மயிர் வெட்டாமலும் இருந்ததால்.

அரசத் தொலைக்காட்சிச் செய்தியாளர்கள் குழு ஒன்று அகதிகளைப் படம் எடுக்க வந்தபோதுதான் முதல்முறையாக அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்கப்பட்டன. கேமராக்களில் காட்டுவதற்காக ராணுவம் அவர்களுக்குச் சிறிய அளவு மலிபன் கிரீமையும் கிராக்கர் பிஸ்கட் பாக்கட்டுகளையும் வழங்கியது. சுயமரியாதையை இழந்து பட்டினியாகக் கிடந்த அந்த மக்கள் பிஸ்கட்டுக்காகச் சண்டை போட்டுக்கொண்டனர். சிலர் பசியால் பக்கத்திலிருந்த மாமரத்தில் ஏறி பழுக்காத காய்களைக்கூட ஒட்டப் பிடுங்கினர். ஆனால் லோகீசனோ தன்னை யார் என்று கண்டுபிடிக்கக் கூடாது என்ற காரணத்திற்காகத் தலையைக் குனிந்துகொண்டிருந்தார். அந்த நேரம் படையினர் சுற்றிச் சுற்றி வந்து அங்கொருவர் இங்கொருவராக விசாரணைக்காக சிலரைக் கூட்டிக்கொண்டு சென்றனர். லோகீசன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தகப்பனுக்குப் பக்கத்தில் தூங்குவது போல நடித்துக்கொண்டிருந்தார். போனவர்கள் யாரும் திரும்பி வந்ததை அவர் பார்க்கவில்லை.

இரண்டு மணிநேரப் பிரயாணம் செய்யும் தூரத்திலிருந்தது அகதிகள் முகாம். அதற்குப் பேருந்தில் போக வேண்டும். பேருந்தில் ஏறுவதற்கு முன் அவர்களைச் சோதனை செய்தார்கள். அதற்காக இரண்டு நாட்களாக எரிக்கும் வெயிலில் அவர்கள் வரிசையில் நின்றார்கள். லோகீசனின் தந்தை பல நாட்களாகச் சாப்பிடவில்லை. அதனால் மிகப் பலவீனமாக இருந்தார். அவர் முகாம் போய்ச் சேருவாரோ என்று லோகீசனுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்தது. மழைத் தண்ணீர் நிலத்தில் சில குழிகளில் வெள்ளமாய் நின்றது. சிலர் அந்த அசுத்தமான தண்ணீரை அள்ளித் தாகக் கொடுமையில் குடிக்க ஆரம்பித்தார்கள்.

நெரிசல் மிகுந்த பேருந்தில் இருக்க இடமில்லாமல் லோகீசனுடைய தகப்பன் நடுப்பகுதியில் துணிப்பைகளுக்கு மேலே இருந்தார். மேலும் விசாரிப்பதற்காக அவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்ற வதந்தி அங்கே பரவியிருந்தது. நிச்சயமாகத் தான் கண்டுபிடிக்கப்பட்டு விடுவோம் என்று லோகீசன் நம்பினான். “இறைச்சி வெட்டுமிடத்திற்கு பட்டினி கிடக்கும் மாடுகளை அழைத்துச் செல்வது போல நான் உணர்ந்தேன்” என்றார். அகதிகள் தப்பி ஓடுவதைத் தடுப்பதற்காக ஆயுதம் தரித்த படையினர் பேருந்து வாசலில் நின்றனர்.

லோகீசன் பல மாதங்கள் படுகொலைகளை ஆவணப்படுத்திய அதே கடற்கரைச் சாலையில் பேருந்து சென்றது. இலங்கையின் மஞ்சள் நிறத் தேசியக் கொடி இருபதாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது முதல்முதலாகப் பறந்தது. போர் ஏறக்குறைய முடிந்துவிட்டது என்று அனைவருக்கும் தெரியும். புலிகள் கட்டுப்பாட்டில் ஒருசில சதுர கிலோ மீட்டர் கடற்கரை, சதுப்பு நிலம், புதர்க்காடு ஆகியவையே இருந்தன. அவர்களின் உச்சகட்ட ஆட்சிக் காலத்தில் அவர்களிடம் இலங்கையின் ஏறக் குறைய கால்வாசி இடம் இருந்தது. இப்போது அப்படிச் சுருங்கிவிட்டது.

இலங்கையின் முதுகெலும்பான வடக்கு - தெற்காக ஓடும் பிரதான சாலையில் பேருந்து ஏறியது. இருபத்து மூன்றாண்டுகளில் முதல் முதலாக அச்சாலை அரசாங்கத்தின் கைக்கு வந்துவிட்டது. இலங்கை படையினர் காக்கிச் சீருடையில் நிற்பது லோகீசனுக்கு அந்நியமாகத் தெரிந்தது. ஒரு காலத்தில் அவ்விடத்தில்தான் புலிகளின் போக்குவரத்துக் காவலர், வேகமாக ஓடும் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்தார்.

விநோதமான முனகல் சத்தம் ஒன்று அவருக்குக் கேட்டது. முதலில் அது என்னவென்று எவருக்கும் புரியவில்லை. பேருந்தில் இருந்த ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறாள். வயது முதிர்ந்த ஒரு பெண் அந்தத் தாயைக் காப்பாற்றும்படி கடவுளை வேண்டி உரக்கப் பாடினாள். குழந்தையை ஈனும் அந்தத் தாய்க்கு தனியிடம் ஒன்றைக் கொடுக்க எவராலும் முடியவில்லை. பேருந்து ஓட்டியை நிறுத்தச் சொல்லிக் கேட்பதற்கும் மிகவும் பயந்துபோய் இருந்தார்கள்.

புலிகளின் தலைமையகமாய் இருந்த கிளிநொச்சி வழியாகப் பேருந்து போய்க்கொண்டிருந்தது. அங்கிருந்த மாவட்ட மருத்துவமனை இப்பொழுது ராணுவ முகாமாக மாறி இருப்பதைப் பலகை ஒன்று காட்டியது. அதை லோகீசன் கவனித்தார். வழி நெடுகிலும் ராணுவச் சோதனைச் சாவடிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றிலும் பேருந்து நின்றது. கடைசியாக இருந்த சாவடியில் ஒரு ஆம்புலன்ஸ் நின்றது, தாயையும் பிறந்த குழந்தையையும் எடுத்துச் செல்வதற்கு. அந்தப் பெண் குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு உதவாமல் இரக்கமற்று இருந்த படையினரைக் கண்டு லோகீசன் அதிர்ச்சியுற்றிருந்தார். சிங்களவர்கள் மனிதாபிமானமும் அற்றவர்கள் என்று நம்பினார்.

யுத்த வலயத்தில் உயிருடன் தப்பிப் பிழைத்த எல்லாத் தமிழர்களையும் புதிதாக அமைக்கப்பட்ட மாணிக்கம் பண்ணை என்னும் அகதி முகாமுக்கு அனுப்பினார்கள். தோற்கடிக்கப்பட்டவர்களிடையே படையினர் தானியங்கித் துப்பாக்கிகளுடன் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருந்தனர். வெளியே ராணுவத்தினரின் ரோந்து சுற்றும் கவச வாகனங்கள் மண் சாக்குகள் போட்ட பதுங்கு குழிகளின் அருகே நின்றன. எல்லா இடங்களிலும் ஏழடி உயரமான மரத்தூண்கள் நடப்பட்டிருந்தன. அவற்றில் முள் கம்பிகளாலும் கூரிய கம்பிச் சுருள்களாலும் கட்டப்பட்ட வேலிகள் போடப்பட்டிருந்தன. அகதிகள் தப்பி ஓடிவிடாதபடி வேலியைச் சுற்றிவர அகழி வெட்டப்பட்டிருந்தது. வானத்திலிருந்து பார்த்தால் பச்சைப் பசேலேன்ற காட்டுக்குள் பிரமாண்டமான, அவலட்சணமான, வழுக்கையான சிவத்த நிறத் திட்டுப் போல அந்த முகாம் காணப்பட்டது. அவ்விடம் முழுவதும் வெள்ளை நிறக் கூடாரங்களாலும் தகரக் கொட்டகைகளாலும் நிரம்பி இருந்தன. பலத்த காற்று வீசுகையில் ஒருசில ஆணிகள் அறையப்பட்டு அமைக்கப்பட்ட அந்தக் கொட்டகைகள் விழுந்துவிடும். தகரங்கள் தாறுமாறாகப் பறந்து மக்களைக் காயப்படுத்திவிடும். மாணிக்கம் பண்ணை 20,000 பேர் கொண்ட வலயங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவ்வலயங்கள் மக்களால் நிரம்பியவுடன், மரங்கள் வெட்டப்பட்டு முகாம் மேலும் விரிவாக்கப்பட்டது.

பொதுமக்கள் அவ்விடத்தில் பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டனர். பல்லாண்டுகள் நடந்த யுத்தத்தாலும் ஊட்டச்சத்தின்மையாலும் காயங்களாலும் நோய்களாலும் மீண்டும் மீண்டும் துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகள், பெண்கள் அனைவரும் பல மாதங்கள் அவ்விடத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். குடும்பத்தில் கடைசியாக உயிருடன் எஞ்சியிருந்த ஒரு சில அங்கத்தவர்களும் அங்கிருந்தனர். அனைவருமே நீண்ட காலம் நடந்த யுத்தத்தால் களைத்துப் போனவர்கள். முதியவர்கள் வெளியே தலையில் கை வைத்துக்கொண்டு, தாம் அடைந்த துன்பத்தின் எல்லையைப் புரிந்துகொள்ள முடியாமல் நிலத்தில் சும்மா குந்திக் கொண்டு இருந்தார்கள். நிலைமைகள் பயங்கரமானவை. அகதிகள் அழுக்கடைந்த ஆற்று நீரில் குளித்தார்கள். கொப்புளிப்பானும் தட்டம்மையும் பரவ ஆரம்பித்தன. மாணிக்கம் பண்ணைக்குக் கடைசியாக வந்தடைந்த 2,82,000 அகதிகளுக்கும் உறவினர்கள் அண்மையில் இருந்தனர். அவர்கள் இந்த அகதிகளைச் சந்தோஷமாகப் பொறுப்பேற்று கவனித்திருப்பார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் எந்தப் போராளியும் தங்கள் வலைக்குள்ளிருந்து தப்பிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு அகதியையும் சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்று அடம்பிடித்தது. அதுவொரு தேசியப் பாதுகாப்பு நடவடிக்கை என்று வெளிநாட்டுக் கொடையாளிகளுக்கு அது கூறியது. ஆனால் வெளிநாட்டுக் கொடையாளிகளிடம் முகாமை நடத்துவதற்கான நிதியை எதிர்பார்த்தது.

முதலில் லோகீசன் மறைவாகத் தான் இருந்தார். ஆனால் பிறகு வெளியே சென்று உணவை எடுத்துவர வேண்டும் என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அவருடைய தந்தை பலவீனமாகிக்கொண்டு வந்தார். அவர்கள் கொடுத்த சாப்பாட்டை அவரால் சாப்பிட முடியவில்லை. அவருக்குப் பற்கள் இல்லை. அகதி முகாமில் வேலை செய்யும் ஒரு தமிழ்க் கூலியாளிடம் கெஞ்சி தந்தைக்காக மென்மையான ரொட்டியை வாங்கினார். “ஒருவருக்கும் சொல்ல வேண்டாம். சொன்னால் எனக்குப் பிரச்சினை. இதைச் செய்ய எங்களுக்கு அனுமதி இல்லை” என்று சொல்லி இரக்கப்பட்டு ஒரு வெள்ளை ரொட்டியைக்கொண்டு வந்து அவர் கொடுத்தார். முகாமைப் பெரி தாக்கும் வேலை செய்யும் சிங்கள வேலையாட்கள் ஒரு சிறிய கடையை நடத்தினார்கள். காசு கொடுத்து வாங்கக்கூடிய அகதிகளுக்குத் தேநீர் விற்றார்கள். லோகீசனிடம் ஆயிரம் ரூபாய்தான் இருந்தது. அவரும் ஒரு தேநீர் கோப்பை வாங்கினான். “நான் ஒரு மனிதனாகப் பிறந்ததற்காக வருத்தப்பட்டேன். அதுவொரு வாழ்க்கை அல்ல. அப்படியான வாழ்க்கை வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை” தடுப்பு முகாமில் இருந்த அந்த நாற்பத்தைந்து நாள் வாழ்க்கையை நினைத்துக்கொண்டு லோகீசன் சொன்னார்.

ராணுவமும் புலனாய்வு அதிகாரிகளும் முடிவில்லாத கூடாரங்களின் வரிசைகளில் தேடித் தேடி, குடும்பம் இல்லாமல் தனியாக இருந்த வாலிபர்களைப் போராளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்துக்கொண்டு சென்றனர். முகாமில் தன் பெயரை லோகீசன் பதிவுசெய்தபோது, தன் முதல் பெயரையும் கடைசிப் பெயரையும் மாற்றிப் பதிவுசெய்திருந்தார். அவரைத் தேடுபவர்களை குழப்புவதற்காக. அந்தத் தந்திரம் சில நாட்கள் வேலை செய்தது. ஒருநாள் முகாம் ஒலிபெருக்கியில் ஓர் அறிவிப்பு வந்தது. “லோகீசன் என்ற செய்தியாளர். நீ இங்கிருப்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே புலனாய்வு அதிகாரியான குஷானிடம் வந்து சரணடை”

லோகீசன் உடனடியாக ஓர் உறவினரின் கூடாரத்திற்குச் சென்று மறைந்திருந்தார். ஆனால் அது ஒரு தற்காலிகமான நடவடிக்கை என்றும் அவர்கள் அவரை விரைவில் கண்டு பிடித்துவிடுவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதற்கிடையில் ஐரோப்பாவிலிருக்கும் அவருடைய சகோதரரைத் தொலைபேசியில் அழைத்தார். சகோதரர் ஒரு கடத்தல்காரரைப் பிடித்து லஞ்சம் கொடுத்து அவரையும் அவரது குடும்பத்தையும் முகாமிலிருந்தும் நாட்டிலிருந்தும் வெளியே எடுத்துவிட்டார். லஞ்சத் தொகை பெரியது. பதினாறு இலட்சம். ஆனால் அந்த ஒரு வழிதான் இருந்தது, அவர்களின் உயிரைக் காப்பாற்ற. கடத்தல்காரன் அரசாங்கத்துக்கு ஆதரவான தமிழ் அரசியல் கட்சியைச் சேர்ந்தவன். ஆனால் பொதுவாக ராணுவமும் போலீசுமே அகதிகள் தப்பிக்க உதவிசெய்வார்கள். அகதிகள் முகாமைச் சுற்றி அடித்திருந்த முள் கம்பிக்குக் கீழாக நுழைந்து தப்பித்து ஒடும்போது அவர்கள் கண்களை மூடிக்கொண்டு பார்த்தும் பார்க்காமல் இருந்துவிடுவார்கள். மும்முரமாகத் தேடப்பட்டு வந்த லோகீசன் போன்ற ஒருவரே தப்பிச் செல்வதற்கு முடியுமாயின் எல்லோரையும் அங்கே அடைத்து வைப்பதில் எந்த நியாயமும் இல்லை.

லோகீசனும் அவருடைய குடும்பமும் கொழும்பை அடைந்தபொழுது அங்கே வெற்றிக் கொண்டாட்டம் பெரிதாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. நகரத்தின் அகன்ற வீதிகள், வெள்ளை காலனிய மாளிகைகள், பளபளக்கும் கண்ணாடிப் பெருங்கடை மையங்கள். அது வேறோர் உலகம். புலிகளின் பிரதேசத்தைப் போன்றதல்ல. அமைதியான காலத்தில் இருந்ததைப் போன்ற ஒன்றுமல்ல. கொழும்பிலுள்ள வீதிகள் யாரிடம் அதிகாரம் இருக்கின்றது என்பதைக் காட்டின. பிரமாண்டமான பதாகைகள் வெற்றியீட்டிய ஜனாதிபதியை, “தேசத்திற்கு அளிக்கப்பட்ட தெய்வீகக் கொடை” என்று புகழ்ந்தன. சுற்றுலாப் பயணிகள் நிறைய வரத் துவங்கிவிட்டார்கள். போர் முடிந்துவிட்டது என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை எட்டு வீதம் உயர்ந்துவிட்டது. ஆனால் லோகீசனுக்கோ யுத்தம் இன்னும் முடியவில்லை. தன் குடும்பத்திற்கும் தனக்கும் பாஸ்போர்ட் எடுப்பதற்கும் இந்திய விசா எடுப்பதற்கும் ஒரு முகவரிடம் பணம் கொடுத்திருந்தார். முகவரைச் சந்திக்க வெளியே வந்தபோது ஹோட்டலுக்கு முன் ஒரு வெள்ளை வேன் ஒன்று வந்து கதவைத் திறந்துகொண்டது. உள்ளே திடகாத்திரமான மூன்று பேர் இருந்துகொண்டு இவரை வாகனத்துக்குள் ஏறும்படி கட்டளை இட்டார்கள். லோகீசன் மறுத்தார். ஆனால் அவர்கள் அவரை உள்ளே இழுத்துப் போட்டனர்.

“நீ ஒரு புலியா?”என்பதுதான் அவர்கள் கேட்ட முதல் கேள்வி.

“இல்லை, இல்லை. நான் ஒரு ஆசிரியன். நான் யாழ்ப்பாணத்திலிருந்து வருகிறேன்” என்று பொய் சொன்னார். இவ்வளவு பிரச்சினைகளுக்குத் தப்பி வந்து இப்போது இந்த வெள்ளை வேன் கடத்தல்காரரிடமா பிடிபட்டு விட்டோம் என்று நினைத்துக்கொண்டார். வெள்ளை வான் என்றால் ஆட்கள் காணாமல் போவது, சித்திரவதை என்பதே அர்த்தம். எப்படியோ லோகீசன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேசாமல் இருந்தபடியால் கடைசியில் அவரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். விசா எடுத்துத் தருவேன் என்று சொன்ன முகவரும் இலங்கைப் புலனாய்வினருக்கு வேலை செய்பவன் என்பது கடைசியில் தெரிய வந்தது. மயிரிழையில் தப்பினார். ஆனால் அதுதான் முதல் முறை. இன்னும் பல நடக்க இருந்தன.

அடுத்த நாள் காலை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் திடீர்ச் சோதனைக்குள்ளானது. எல்லோரும் விசாரிக்கப்பட்டார்கள். சோதனைக்குள்ளாக்கப்பட்டார்கள். படம்பிடிக்கப்பட்டார்கள். லோகீசனுடைய குடும்பம் மானிக் பண்ணையிலிருந்து தப்பி வந்தவர்கள் என்று போலீஸ் சந்தேகப்பட்டு அவர்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன. அவர்கள் திரும்பவும் வந்தபோது லோகீசன் மறைந்து விட்டார். தன் குடும்பத்துடன் தென்னிந்தியாவுக்குப் பறந்துவிட்டார். அங்கேயுள்ள தமிழ் மக்களுடன் கலந்து விடுவது சுலபமானதொரு விஷயம்.

போர் முடிந்த காலம் தொடங்கி ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் வழியாக மேற்கு நாடுகளுக்குச் சென்றார்கள். சிலர் நார்வே வழியாகவும் சிலர் வேறு வழிகளிலும். முதலில் அவர்கள் மூன்று மாத இந்திய விசாவுடன் தொடங்குவார்கள். பிறகு லஞ்சம் கொடுத்து விசாவை நீட்டிப்பார்கள். இலங்கை, இந்தியப் புலனாய்வினர் முன்னாள் புலிகளைப் பிடிக்கக் கூட்டாக இயங்கி வருகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதிகாரிகள் தங்களைக் கண்காணித்தார்கள் என்றும் விசாரித்தார்கள் என்றும் சொன்னார்கள். சிலரைக் கைது செய்து நாடு கடத்தினார்கள். தப்பிச் சென்று இந்தியாவில் தங்கிய பலருக்கு அந்த மாதங்களில் கணக்கில்லா இன்னல்களை அனுபவித்துக் கொண்டு காத்திருக்கவேண்டியிருந்தது. சிலர் தங்களைக் கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் குழந்தைகளை உள்ளே அடைத்து வைத்திருக்க வேண்டியும் இருந்தது. சிலருக்குக் குறைந்துகொண்டு செல்லும் பணத்தில் தங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருந்தது.

லோகீசனும் அப்படியானதொரு வாழ்க்கையையே வாழ்ந்தார். அவர் இந்தியாவில் பதினாறு மாதங்கள் இருந்தார். அந்தக் காலத்தில் அவர் திருமணம் முடித்து ஓர் ஆண் குழந்தைக்குத் தந்தையும் ஆனார். மாதங்கள் செல்லச் செல்ல மேலும் மேலும் நம்பிக்கை இழந்து வந்தார். அவருடைய பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதால் எப்படி நாட்டை விட்டு வெளியேறுவது? அதைப் புதுப்பிப்பதற்கு தூதரகத்திற்குச் செல்ல அவருக்குத் துணிவில்லை. அவர் நினைத்திராத ஓரிடத்திலிருந்து உதவி வந்தது. நாட்டை விட்டு வெளியேறிய ஒரு சிங்கள ஊடகவியலாளர் அவருக்குக் கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் தயாரிக்கவும், அதற்கு உதவியான ஆவணங்களை ஒழுங்குபடுத்தவும் தேவையான ஆவணங்களை மொழிபெயர்க்கவும் முன்வந்தார். முதலில் லோகீசன் அவரை நம்பவே இல்லை. துப்பாக்கியைக் காட்டாத ஒரு சிங்களவனுடன் முன்னொரு போதும் அவர் பேசியதே இல்லை. இப்பொழுது படிப்படியாக அவர்கள் இருவரும் நண்பர்களானார்கள்.

அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இலங்கையில் என்ன நடந்தது என்பதைச் சொல்ல விரும்பினார்கள். “நான் வெளியே சென்றவுடன் அங்கு என்ன நடந்தது என்பதைச் சொல்ல விரும்பினேன். அப்படிச் சொன்னால் தான் அங்கு இறந்த ஒவ்வொரு மனிதனும் மதிப்பு மிக்கவன் என்பதை மற்றவர்கள் உணர்வார்கள். இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு வேண்டும். இதற்கு அர்த்தம் இருக்க வேண்டும். நான் செய்ய வேண்டியது இதை உலகத்திற்குச் சொல்வதையே” என்று விளக்கினார் லோகீசன்.

அதனால்தான் லோகீசன் தன்னுடைய கதையை எனக்குச் சொல்லச் சம்மதித்தார். முதல்முறை நாங்கள் சந்தித்தது அவர் வாழ்ந்த நகரத்தில். அவருடைய அலுவலுகத்தில் அதிகாலை நேரம் சந்திப்பதற்கு உடன்பட்டோம். லோகீசன் வந்து கதவுகளைத் திறந்தபோது அவர் ஏற்கெனவே அறிமுகமானவராகத் தெரிந்தார். அதை நான் எதிர்பார்க்கவில்லை. “நாம் முன்பு சந்தித்திருக்கிறோமா?” என்று அவரைக் கேட்டேன். ‘ஓம்’ என்றார், என்னைப் போலவே ஆச்சரியப்பட்டு. “சுனாமி காலத்தில்.” புலிகளின் பிரதேசத்திற்கு சுனாமியின் பின்விளைவுகளைப் பற்றி அறிக்கை தயாரிக்க 2004இல் சென்றிருந்தேன். அழிக்கப்பட்ட தேவாலயத்திற்குப் பக்கத்தில் நான் நின்றபோது பிணங்களின் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. முதல் நாள் ஓர் இளைய ஊடகவியலாளன் என்னை அணுகி அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி நான் எப்படி உணர்கிறேன் என்று கேட்டார். அந்த நேரம் அவர் என்னைப் பேட்டி கண்டார். இப்போது என்னுடைய முறை! இருவருமே சிரித்துக்கொண்டோம். சிரிக்காமல் இருக்க முடியவில்லை. உலகத்தின் மறு பக்கத்தில் தற்செயலாக திரும்பவும் நாங்கள் சந்திக்கிறோம். ஏதோ தெய்வச் செயல். விதியால் விளைந்த திருப்பம். ரத்தம் தோய்ந்த குழந்தைகளின் நினைவுகளால் சித்திரவதைக்குள்ளான இளைஞன் ஒருவனுக்குக் கிடைத்த ஒரு சிறு ஆறுதல் அது. “அங்கிருந்த அனைவரும் இறந்துவிட்டனர் என்பதே என் அபிப் பிராயம். எங்களிடமும் இப்போது உயிரில்லை. நாங்கள் இப்போது நடமாடும் இறந்த மனிதர்கள். மண்டையோட்டுடன் கூடிய எலும்புக் கூடுகள்” என்றார் அவர்.

துன்பப்படும் லோகீசனின் பரிதாபத்தைக் கண்ட அவரது நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து புதிய கேமரா ஒன்று வாங்கி அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். லோகீசன் முதலில் தன் ஒரு வயது மகனைப் படம் பிடிக்கவே நினைத்தார். முடியவில்லை. திரும்பவும் உலகைக் கேமராவின் கண்ணால் பார்ப்பது பெரும் மனத் துயரத்தைக் கொடுத்தது. “கேமரா லென்ஸ் வழியாகப் பார்த்தபோது எனக்குத் தெரிந்ததெல்லாம் போரின்போது நான் எடுத்த படங்கள். இறந்த குழந்தைகளின் உடல்கள். இரண்டு வயதுப் பெண் குழந்தை சுக்குநூறாகிப் பறந்த காட்சி. அதை அழகான ஒரு குழந்தையாகவே அப்படியே இப்பொழுதும் என்னால் கற்பனை செய்ய முடியும். நீண்ட கேசம். பூப்போட்ட சட்டை. வெடிப்பினால் தூக்கி வீசப்பட்டு குப்புறக் கிடக்கிறாள். கீழ் உடம்பைக் காணவில்லை” இனிமேலும் கேமராவில் பார்க்க முடியாத படப்பிடிப்பாளன் அவர். லோகீசனால் தொலைக் காட்சிச் செய்திகளைப் பார்க்க முடியாது. எங்கோ நடைபெறும் போர்ப் பிம்பங்கள் அவருக்குப் பெரும் மனத் துன்பத்தைக் கொடுத்தன.

ஆண்டுகள் சென்றன. யார் இன்னும் உயிருடன் பிழைத்திருக்கிறார்கள் என்று அவர் இன்னும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார். புலிகளின் பிரதேசத்திலிருந்த பலரை அவருக்குத் தெரியும். காரணம், அவர் அங்கு வளர்ந்தவர். அவர் படித்த பள்ளி போர்க் காலத்தில் இடைக்கால மருத்துவமனையாக்கப்பட்டது. தற்காலிகப் பிணவறை அவருடைய உயர்வகுப்புக்குப் பக்கத்து அறை. “நாங்கள் இன்னும் இறந்தவர்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம். நானும் அங்கே இறந் தொழிந்திருக்கலாம் என்று சில வேளை நினைத்துக்கொள்வேன்” என்று என் கண்களை ஆழ்ந்து பார்த்துக்கொண்டு சொன்னார் லோகீசன். றீ

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் ஈழம்: சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் என்னும் நூலிலிருந்து சில பகுதிகள்.

http://www.kalachuvadu.com/issue-157/page26.asp

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.