Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்த யாழை மீட்டும் இளைஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த யாழை மீட்டும் இளைஞன்

ஜெய சரவணன்

யுவன் சங்கர்ராஜா - 100

எங்கோ ஆடிக்கொண்டிருந்த ஆறு வயதுப் பிள்ளையை பியானோ தட்டிப்பார்க்க அழைக்கிறார் அப்பா. இன்று சினிமா ரதமேறி வலம்வரும் ஜூனியர் மேஸ்ட்ரோவின் மைக்ரோ பிரதிதான் அந்த வாண்டு. தந்தைக்குத் தெரிந்தும் தெரியாமலும் அன்று தொட்டுப் பார்த்த கருவிகள்தான் இன்று யுவன் சங்கர் ராஜாவின் கனவுகளை நனவாக்கிக்கொண்டிருக்கின்றன. நரம்புகளை மீட்டியே வரம்புகளைக் கடந்து சாதனை படைத்த பரம்பரையில் 1979இல் அந்தப் புது மெட்டு பிறக்கிறது. பள்ளியில் படிப்பென்பது ஒரு கட்டாயமாக மாறிப்போன சூழலில் ஓர் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் சிக்கியவருக்குப் பதினாறாவது வயதில்தான் 'அரவிந்தன்' படம் மூலம் இசைப் பயணத்தைத் தொடங்க முடிந்தது. அம்மாவிடம் அன்பையும் அப்பாவிடம் அர்ப்பணிப்பையும் திருடிக்கொண்ட இவர் நடிகர்கள் சூர்யா, கார்த்தி இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ஆகியோருடன் பள்ளியில் படித்தவர்.

பத்தாவதோடு படிப்புக்கும் பத்தியம் போட்டுவிட்டு பாட்டுப் படைக்க ஜகோப் மாஸ்டரிடம் இசையைக் கற்றார். முதல் வருடம் ஒரு படம், இரண்டாம் வருடம் இரண்டு படம் என இப்போது பதினாறு வருடங்களில் தன் நூறாவது படமாக கார்த்திக் மற்றும் ஹன்சிகா நடித்து வெளிவர இருக்கும் பிரியாணிக்கு இசைப் பொடி தூவுகிறார். ஆரம்பித்த காலங்களில் அரவிந்தன், வேலை, கல்யாண கலாட்டா ஆகியவை அவ்வளவு கவனம் பெறாவிட்டாலும் வஸந்தின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் பாடல்களின் வரவேற்புக்குப் பிறகு 2001இல் துள்ளுவதோ இளமை படத்தின் பாடல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு ஆட்பட்டார். அதன் பிறகு அவர் தமிழ், தெலுங்கு என தன் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டார். அவர் இசை இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இருவரின் கலவையாக இருக்கும் என்று பலர் பாராட்டுரைப்பார்கள். ஆனாலும் அந்தக் கூற்றை மீறிய தனித்தன்மை அவரிடம் உண்டு.

அவருடைய தனித்தன்மையாகப் பலவற்றைக் குறிப்பிடலாம். தன் படைப்புகள் வித்தியாசமாகவும் ரசிக்கக் கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பும் அவர்தான் ஹிப்ஹாப் ரக இசைகளைத் தமிழில் புகுத்தியவர். அதுவரை மெல்லிசை, கானா அல்லது குத்துப் பாடல்களையே பார்த்துவந்த மக்கள் அதனை ரசிக்க ஆரம்பித்தனர். மேற்கத்தியக் கலாச்சாரத்தால் இழுக்கப்பட்ட 20ஆம் நூற்றாண்டுத் தலைமுறையினருக்கு அவர்களின் ரசனைக்கேற்ப பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்து நினைவூட்டியதும் பலர் அதனைப் பின்பற்றச் செய்ததும் இவர்தான். அவர் கருவிகளிலும் இசை வகைகளிலும் உள்ளூர், உள்நாடு, வெளிநாடு என மாறி மாறித் தாவி நம்மை இழுப்பது வழக்கம்.

அதனாலேயே செல்வராகவன், வஸந்த், வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன், ராம், அமீர் ஆகிய பல இயக்குநர்களோடு இணைந்து பல படங்களுக்குத் தொடர்ந்து இசையமைக்க அவரால் முடிந்தது. அவருடன் பால்ய நண்பர்களாக உலாவிய வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரோடு இன்றும் நட்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடந்துகொண்டிருப்பதும் அவருக்குச் சாத்தியமாகிறது. எந்தப் புதிய இயக்குநருடனும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பணிபுரிந்து அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் பலர் தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் பல நற்குணங்கள் அவருடைய வெற்றிப்பாதைக்குப் படிக்கட்டுகளாக இருக்கின்றன.

படங்களின் சூழ்நிலைக்கேற்ப பின்னணி இசையும் காதல், தாய்மை, நகைச்சுவை, நட்பு, கிராமம் என பாடல் தன்மைக்கேற்ப இசை வகைகளையும் விதவிதமாகத் தந்திருக்கிறார் யுவன். அவருடைய படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற்ற பல பாடல்களையும் பின்னணி இசையையும் பட்டியலிடலாம். 2001இல் வெளியான துள்ளுவதோ இளமை மற்றும் நந்தா ஆகியவை அவரை ஒரு சிறந்த இசையமைப்பாளராக அடையாளம் காட்டின. 2002இல் வெளியான அவரது படங்களில் ஏப்ரல் மாதத்தில், புன்னகைப் பூவே, மௌனம் பேசியதே ஆகியவற்றின் பாடல்கள் அவருக்குப் பல ரசிகர்களைக் கொண்டுவந்து சேர்த்தன. அதன் பிறகு வெளியான நகைச்சுவைப் படமான வின்னரின் பாடல்கள் அவ்வளவாகக் கவரவில்லை. ஆனால் அந்த வருடத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த காதல் கொண்டேன் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கதை மாந்தரின் வலியை, ஆதங்கத்தை ரசிகர்களின் உள்ளத்தில் தைத்தன என்றால் அது மிகையில்லை.

2004இல் வெளியாகி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்ட படங்களான மன்மதன் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி ஆகிய படங்கள் அவரின் இசைப் பயணத்தில் பூக்கள் தூவின. நினைத்து நினைத்துப் பார்த்தால் என்னும் பாடலின் வருடலைக் காதல் கொண்ட எந்த நெஞ்சத்தினாலும் மறக்க முடியாது. அமீரின் ராம் திரைப்படத்தில் ஒரு தாய் மகனின் பாசத்தைக் கச்சிதமாகப் பிரதிபலித்தது ஆராரோ பாடல். சண்டக்கோழி, கள்வனின் காதலி, ஒரு கல்லூரியின் கதை ஆகியவற்றில் பல பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தளித்தன. கண்ட நாள் முதல் திரைப்படப் பாடல்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததோடு இன்றும் பலருக்குப் பிடித்தமான பாடல்களாக விளங்குகின்றன. இவை அனைத்துமே ஒரே வகையில் அமைந்த பாடல்களாக இல்லாமல் வேறு வேறு வகைமைகளில் வசீகரித்தது யுவனின் தனித்தன்மை.

சென்னை ரவுடிகளின் வாழ்க்கையைக் காட்டும் செல்வராகவனின் புதுப்பேட்டை திரைப்படத்தின் பாடல்கள் வடசென்னை மக்களின் வாழ்க்கைப் பாடலாக வெளிப்பட்டன. அதன் பிறகு பட்டியல், வல்லவன் பாடல்கள் பள்ளி, கல்லூரிகளில் நடனத்திற்கு அம்மாடி ஆத்தாடி போடவைத்தது.

அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்தி வீரன் திரைப்படத்தின் இசை யுவன் மீதும் அவர் இசையின் மீதும் அதுவரை மக்கள் வைத்திருந்த பார்வையையே மாற்றி அமைத்தது. அதன் பிறகு வந்த தாமிரபரணி, தீபாவளி, யாரடி நீ மோகினி ஆகியவை பல நல்ல பாடல்களை ரசிகர்கள் தங்கள் ப்ளே லிஸ்டில் வரிசைப்படுத்திக்கொண்டனர்.

சத்தம் போடாதே, கற்றது தமிழ் ஆகியவற்றின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அவருக்கு மேலும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பாராட்டுகளையும் சேர்த்தன. அதற்கெல்லாம் மேலாக பில்லா படத்தில் அஜித்தின் அசைவுகளுக்கு ஒலி கொடுத்து அவரைப் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கவைத்து அழகுபடுத்தினார் என்றால் மிகையில்லை. அதுவரை அஜித்துக்கு எந்தப் படத்திலும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்தில் கிடைத்ததற்கு இசையும் ஒரு காரணம். மங்காத்தாவிலும் பின்னணி இசையின் துணையுடன் அஜித்தின் நாயக பிம்பம் ஏற்றம் பெற்றது.

சரோஜாவில் க்ளைமேக்ஸில் வரும் நிமிர்ந்துநில் பாடல் ஒரு நிமிடம் அனைவரது துடிப்பையும் தூண்டியது. சிவா மனசுல சக்தி, சர்வம், வாமணன், தீராத விளையாட்டு பிள்ளை, ஏகன், பையா, கோவா, பாணா காத்தாடி, நான் மகான் அல்ல, வானம், கழுகு, அவன் இவன், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்களின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பையா படத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தன. பாடகரின் குரல் உச்சஸ்தாயிக்குச் செல்லும் இடங்களில் யுவனின் தனி முத்திரையை நன்கு உணரலாம். சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல், என் காதல் சொல்லத் தேவையில்லை ஆகிய பாடல்களில் உச்ச ஸ்தாயி உணர்ச்சியின் உச்ச வேகத்தை வெளிப்படுத்தும். இதே வரிகள் கீழ் ஸ்தாயியில் பாடப்படும்போது மனதை மெல்லிறகால் வருடும் உணர்வு ஏற்படும்.

யாரடி நீ மோகினியில் உதித் நாராயணனின் தமிழ்க் கொலையையும் தாண்டி எங்கேயோ பார்த்த மயக்கம் பாடல் வசீகரிப்பதற்குக் காரணம் யுவனி மெட்டும் அந்த மெட்டுக்குள் அவர் பொதிந்துவைத்திருக்கும் பாவங்களும்தான். அதே படத்தில் உள்ளார்ந்த சோக தொனி கொண்ட வெண்மேகம் பெண்ணாக என்னும் பாடலை ஹரிஹரன் பாடும்போது ஒவ்வொருவருக்கும் தங்கள் காதல் நினைவுக்கு வராமல்போகாது. யுவனின் மெட்டு செய்யும் மாயம் அது.

அவருடைய இசையும் பாடல்களும் இளைஞர்களைக் கவர்ந்திழுப்பதாக இருப்பது அவருடைய வெற்றிக்கு முக்கியக் காரணம். ரஹ்மானுக்கு அடுத்து இளைஞர்களின் ஆதரவை அதிகம் பெற்றவர் யுவன்தான். ஒரு பெரிய மேதையின் மகனாகப் பிறந்தும் அவரது சாயலைக் கவனமாகத் தவிர்த்துப் புதிய பாணியை உருவாக்கியது யுவனின் சாதனைகளில் ஒன்று.

யுவனின் சிறப்பம்சங்களில் ஒன்று அவரது பின்னணி இசை. படத்தின் சாரத்தோடும் காட்சிகளின் உணர்வோடும் இயைந்துசெல்லும் பின்னணி இசையை வழங்குவதில் ராஜா சாதனை புரிந்தார் என்றால் ஆரண்யகாண்டம் போன்ற சில படங்களில் குட்டி பதினாறடி பாய்ந்திருக்கிறது.

இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் தங்கமீன்களின் இசையும் பாடல்களும் பெற்றுத் தந்த மகுடம் 2011இல் ஆரண்ய காண்டம் படைப்பிற்கு அமைத்த பின்னணி இசைக்காகக் கிடைத்த ரத்தினத்தைத் தன்னில் பதித்துக்கொள்ள விரும்புகிறது. இப்போது ஆரம்பம் படத்தில் அவரது இசையில் திரையரங்கங்கள் அதிர்கின்றன. பலரது கைபேசிகளின் அழைப்பொலிகள் தங்கமீன்களில் யுவன் தந்த ஆழந்த யாழை மீட்டிக்கொண்டிருக்கின்றன.

2002லிருந்து 2010வரை சராசரியாக ஆண்டுக்கு ஏழு படங்கள் இசையமைத்துக்கொண்டிருந்த யுவனுக்கு அதற்கு பிறகு படங்கள் குறைந்து வந்தன. ஆனால் வரும் ஆண்டில் அவருக்குப் பல பட வாய்ப்புகள் குவிந்திருக்கின்றன.

ராம் படத்திற்காக சிப்ரஸ் இண்டர்நேஷனல் ஃப்லிம் ஃபெஸ்டிவல் விருதையும் பட்டியல் படத்திற்குத் தமிழ்நாடு மாநில விருதோடு சேர்த்து பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ள அவரைக் குறை கூறும் விமர்சனங்கள் மிகக் குறைவு. அவருடன் பணியாற்றிய அனைவருமே அவருடன் தொடர் நட்பில் இருக்கிறார்கள். அடுத்தடுத்த படங்களிலும் அவரையே பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். சில ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தாலும் பல நல்ல பாடல்களைத் தந்து தன் ரசிகர் வட்டத்தைத் தக்கவைத்துக்கொள்கிறார் யுவன்.

தனக்குக் கிடைத்த வாய்ப்புகளும் வெற்றிகளும் தன் தந்தையின் பேரால் அல்ல தன் தனித்தன்மையின் பேரால் என்று நிருபித்துவரும் அவருக்கும் இந்த நூறு முக்கியமான மைல்கல். அவர் வெற்றிப் பயணத்தில் இதுபோல இன்னும் பல மைல்கற்களைக் காண வாழ்த்துவோம்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=eb7a2b0c-1bba-4626-b666-62a9ff9dafe4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.