Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமினி பாஸ் தவறு செய்துவிட்டார்

Featured Replies

காமினி பாஸ் தவறு செய்துவிட்டார்

 

2l9ox.jpg

 

சரிநிகர் இதழில் என். சரவணன் எழுதிய பிரேமாவதி மன்னம்பேரி குறித்த கட்டுரையொன்றை பல வருடங்களுக்கு முன்பு நான் படித்திருக்கின்றேன். அந்தக் கட்டுரையின் விபரங்கள் இப்போது எனக்குத் தெளிவாக ஞாபகமில்லை என்றாலும் மன்னம்பேரி மரணிப்பதற்கு முன்பு சொன்ன அவருடைய இறுதிச் சொற்கள் மட்டும் என் நெஞ்சில் இப்போதும் அழியாமலுள்ளன. கதிர்காமத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண்ணான மன்னம்பேரி, ஜே.வி.பியினர் நடந்திய 1971 ஏப்ரல் கிளர்ச்சியில் பங்கெடுத்தவர். கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்பாக அரசபடையினரால் கைது செய்யப்பட்டு, வதைக்கப்பட்டு, வல்லாங்கு செய்யப்பட்டு மன்னம்பேரி சுட்டுக் கொல்லப்பட்டபோது மரணத்தறுவாயில் அவர் சொன்ன சொற்கள்: “காமினி பாஸ் தவறு செய்துவிட்டார்”. காமினி பாஸ், ஜே.வி.பியின் கதிர்காமப் பகுதிப் பிரிவுக்குப் பொறுப்பாகயிருந்தவர். அவரது அரசியல் அல்லது நடைமுறைத் தவறுகளைக் குறிப்பதாக மன்னம்பேரியின் அந்த இறுதிச் சொற்கள் இருந்திருக்கக்கூடும்.

2011ல் ஜே.வி.யிலிருந்து பிரிந்து வந்த ‘முன்னிலை சோசலிஸக் கட்சி’யைக் குறித்தும் அது முன்னின்று உருவாக்கிய ‘சம உரிமை இயக்கம்’ குறித்தும் அண்மைக் காலங்களில் அரசியல் சூழல்களில் நடைபெறும் குறுக்கும் நெடுக்குமான விவாதங்களைக் கவனித்தபோது மன்னம்பேரியின் இறுதிச் சொற்களே என்னில் மின்னிச் சென்றன. இப்போது சம உரிமை இயக்கம் தனது அறிமுகக் கூட்டங்களை அய்ரோப்பாவில் தொடர்ச்சியாக நடத்திவரும் சூழலிலும் அக்கூட்டங்களில் முன்னிலை சோசலிஸக் கட்சியின் முதன்மைத் தலைவர்களில் ஒருவரான குமார் குணரட்ணம் தொடர் உரைகளை நிகழ்த்திவரும் சூழலிலும் இவ்விரு அமைப்புகள் குறித்தும் சிந்திக்க வேண்டியது அரசியல் ஓர்மையுள்ளோரின் தவிர்க்க முடியாத கடமையாகிறது.

இவ்விரு அமைப்புகள் மீதும் எழுத்துபூர்வமான பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருப்பதை நான் பார்க்கிறேன். ஆனால் இவ்விரு அமைப்புகளும் அந்த விமர்சனங்களிற்கான பதில்களை எழுத்துபூர்வமாக அளித்ததை இதுவரை நான் காணவில்லை. கூட்டத்தில் எழுப்பப்படும் பல கேள்விகளிற்கு குமார் குணரட்ணம் மழுப்பலுடன் கூடிய பதில்களையே அளிக்கின்றார் என சுவிஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட சயந்தன் பதிவு செய்திருக்கிறார். குமார் குணரட்ணம் தெளிவாகவா அல்லது மழுப்பலாகவா பதிலளிக்கிறார் என்பதை நேரில்  காண்பதற்கு வரும் 10ம் தேதிவரை நான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. 10ம் தேதி பாரிஸில் சம உரிமை இயக்கத்தின் அறிமுகக் கூட்டமும், குமார் குணரட்ணத்தின் சிறப்பு உரையும் நிகழவிருக்கின்றன.

எனினும் இப்போது என்னுடைய மேசையில் சம உரிமை இயக்கம் தமிழில் அச்சிட்டு 28 பக்கங்களில் வெளியிட்டிருக்கும் அதனது ‘கொள்கை விளக்கப் பிரசுரம்’ இருக்கிறது. சில நாட்களிற்கு முன்பு தோழர் வன்னியசிங்கத்திடமிருந்து அதை நான் பெற்றுக்கொண்டேன். அந்தப் பிரசுரத்தை முன்வைத்துச் சில குறிப்புகளைச் சொல்லிவிட எத்தனிக்கிறேன்.

 

பிரசுரத்தின் முதல் 20 பக்கங்களில் சம உரிமை இயக்கம் தனது அரசியல் நோக்கு நிலையிலிருந்து காலனிய காலத்தினதும், பின் காலனிய காலத்தினதும் இலங்கைத் தீவின் இனமுரண்களை சுருக்கமாக விளக்கிச் செல்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னான அரசாங்கங்கள் எவ்வாறு முதலாளிய - இனவாத நோக்குடன் சிறுபான்மை இனங்களை நசுக்கின என்பதையும் அது விபரிக்கிறது. குறிப்பாக முள்ளிவாய்க்காலின் பின் தமிழ் மக்கள் மீது அரசாங்கத்தால் ஏவப்படும் கொடுமைகளையும் ஏற்றப்படும் சுமைகளையும் அது தெளிவாக அடையாளம் காட்டுகிறது. அரசியல் கைதிகள், அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்கள், அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசுக்கு எதிரான சனநாயகப் போராட்டங்களை அரசு ஒடுக்குவது, வெள்ளை வேன் கடத்தல்கள், சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், தமிழர் பகுதிகளில் திணிக்கப்படும் பவுத்தம், கட்டப்படும் புதிய விகாரைகள், இடிக்கப்படும் மசூதிகள்,  ஊடகச் சுதந்திரமின்மை எல்லாவற்றையும் அது எடுத்துக்காட்டிக் கண்டிக்கிறது.

 

சம உரிமை இயக்கம் வாயளவு கண்டனத்துடன் நின்றுவிடும் ஓர் அமைப்புக் கிடையாது. அது இலங்கை முழுவதும், குறிப்பாக வடக்கு - கிழக்கில் தனது கால்களை ஊன்றி நின்று அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறது. தனது பெறுமதிமிக்க தோழர்களான லலித்தையும் குகனையும் அது இலங்கை அரசாங்கத்திடம் பறிகொடுத்துமுள்ளது. ஆனால் இத்தகைய குறிப்பான முற்போக்கு அம்சங்கள் மட்டுமே ஓர் அரசியல் இயக்கத்தை முழுமையாக மதிப்பீடு செய்யப் போதுமானவையாக இல்லை என்றே நான் கருதுகின்றேன். இதை நமக்கெல்லாம் தெரிந்த ஓர் எளிய உதாரணத்தின் மூலம் விளக்கலாம் என நினைக்கிறேன்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சனநாயகத் தேர்தல் முறையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளாக இருப்பவர்கள். தமிழ் மக்களின் இனரீதியான பிரச்சினைகளையும் இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளையும் 20 பக்கங்களில் அல்லாமல் விட்டால் 20 நாட்களிற்கும் தொடர்ச்சியாகப் பேசக்கூடியவர்கள்  கூட்டமைப்பினர். அதை மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்குகளிலும் செய்தும் வருகிறார்கள். முள்ளிவாய்க்காலின் பின்பாக மட்டுமல்லாமல் முன்பாகவும் அரசுக்கு எதிராகச் சிறிதும் பெரிதுமாகப் பல போராட்டங்களை அவர்கள் நடத்தியிருக்கிறார்கள். அவர்களது போராட்டங்களின் போது அரசு அடக்குமுறையை ஏவியிருக்கிறது. அவர்களது கூட்டத்தில் புகுந்து இராணுவம் தாக்கியிருக்கிறது. அவர்களையும் அரசு கைது செய்கிறது. புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்கிறது. அவர்களும் தமது அமைப்பின் பெறுமதி மிக்க உயிர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்களைப் பறிகொடுத்துமுள்ளார்கள். ஆனால் இத்தகைய குறிப்பான வரவேற்கத்தக்க அம்சங்களை மட்டுமே வைத்து நாம் கூட்டமைப்பினரை முழுமையாக மதிப்பீடு செய்துவிட முடியாது. அவர்களது புலிகளது ஆதரவுப் போக்கு, தமிழ் குறுந்தேசியவாதம், அரசியல் சந்தர்ப்பவாதம், யாழ் மேட்டுக்குடி மையவாதம் போன்ற பல்வேறு காரணிகளையும் கணக்கிலெடுத்துத்தான் நாம் கூட்டமைப்பினரின் அரசியலை ஆய்வு செய்து ஒரு முழுமையான மதிப்பீடை எட்ட முடியும். அதைப் போலவே சம உரிமை இயக்கத்தினதும் அதை வழிநடத்தும் முன்னிலை சோசலிஸக் கட்சியினதும் முற்போக்கு அம்சங்களை மட்டுமல்லாமல் அவர்கள் மீதான விமர்சனங்களுக்குரிய அம்சங்களையும் நாம் கணக்கில் எடுத்துத்தான் அவர்கள் மீதான மதிப்பீடை எட்ட வேண்டியிருக்கிறது.

 

எனினும் முன்னிலை சோசலிஸக் கட்சி மிகப்பெரும்பான்மையாக சிங்கள உறுப்பினர்களைக் கொண்டதும், சிங்களப் பகுதிகளில் பரவலாக அறிமுகத்தையும் அரசியல் இருப்பையும் கொண்டதுமான கட்சியாக இருக்கும்போது அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதை நாம் கறாரான அரசியல் மதிப்பீடுகளை சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு நல்லெண்ணத்துடன் ஆதரிக்க வேண்டாமா என்றொரு வாதமும் சொல்லப்படுகிறது. நிச்சயமாக நாம் நல்லெண்ணத்தைத் தெரிவிக்கவே வேண்டும். அவர்கள், மக்கள் சார்ந்து அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டங்களில் நாம் அவர்களோடு கைகோர்த்து நிற்கவும் வேண்டும். ஆனால்  குறிப்பான பிரச்சினைகளில் அவர்களோடு கரம்பற்றி நிற்பதுவும்,  நல்லெண்ணமும் பிரச்சினைகளுக்குள் புகுந்து தீர்க்கமாக ஆராய்வதைத் தடுக்கும் திரைகளாக இருந்துவிடக் கூடாது. தோழமையுடனான கறாரான விமர்சனமே நல்லெண்ணத்தின் விளைவாக இருக்க வேண்டும். அது இரு தரப்புகளிற்குமே அரசியல்ரீதியாக நன்மை பயக்கக்கூடியது.

 

சிங்களவர்கள் மத்தியிலிருந்து இவ்வாறு ஒரு கட்சி சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளைக் கவனப்படுத்திப் பேசிவருவது ஒரு நல்ல வரலாற்றின் தொடக்கமல்லவா எனவும் கேட்கப்படுகிறது. சிங்கள மக்கள் மத்தியிலிருந்து தமிழர்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசும் முதலாவது இடதுசாரிக் கட்சி  ‘முன்னிலை சோசலிஸக் கட்சி’ அல்ல என்பதை இங்கே அழுத்தமாகச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. நவ சம சமாஜக் கட்சி, ஸ்ரீதுங்க ஜெயசூர்யா தலைமையிலான அய்க்கிய சோசலிஸக் கட்சி, கீர்த்தி பாலசூரியாவால் நிறுவப்பட்டு விஜே டயஸ் தலைமையில் இயங்கும் சோசலிஸ சமத்துவக் கட்சி, மற்றும் வெவ்வேறு சிறிய அமைப்புகளும் சிறுபான்மையினங்களின் உரிமைக்காகவும் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகவும் எப்போதும் குரல் கொடுத்தே வந்திருக்கிறார்கள். இவர்கள் சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமையை கொள்கைரீதியாக மறுக்காதவர்கள். சோசலிஸ சமத்துவக் கட்சியோ இன்னும் ஒருபடி முன்னேறி  ‘ஈழம்-ஸ்ரீலங்கா  சோசலிஸக் குடியரசு’ என்ற முன்னோக்கை வைத்துப் பல வருடங்களாகப் போராடுகிறார்கள். நாட்டில் யுத்தம் தீவிரமாக நடந்து, அரச அடக்குமுறைகளும் சிங்கள இனவாதமும் கொடூரமாகத் தலைவிரித்து ஆடிய காலங்களில் கூட இவர்கள் தமது முன்னோக்குகளை விட்டுக் கொடுத்ததில்லை. இந்தக் கட்சிகளுடன் தமிழர்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இணைந்திருந்தார்கள். இந்தக் கட்சிகளினது உறுப்பினர்களை அரசாங்கமும் புலிகளும் கொன்றதைக்காட்டிலும் ஜே.வி.பியினரே  அதிகமாகக் கொன்றொழித்தார்கள் என்பதை இங்கே குறிப்பிடுவதும் பொருத்தமே.

 

‘ஆனால் மேலே சொன்ன இடதுசாரிக் கட்சிகள் மக்களிடம் செல்வாக்கோ அமைப்புப் பலமோ அற்றவர்கள், ஆனால் முன்னிலை சோசலிஸக் கட்சியோ இளைஞர்களிடேயே செல்வாக்கும் அமைப்புப் பலமும் கொண்டவர்களல்லவா’ என்றொரு வாதமும் வைக்கப்படுகிறது. ஓர் அரசியல் கட்சியின் முற்போக்குப் பாத்திரத்தையும் அதனது எதிர்கால இயங்குதிசையையும் அதனது அமைப்புப் பலத்திலும் மக்கள் செல்வாக்கிலுமல்லாமல் அதனது அரசியல் வேலைத் திட்டத்தை வைத்து மதிப்பிடுவதே சரியானதாக இருக்கும். மிருகத்தனமான அமைப்புப் பலத்துடனும் மூன்றில் இரண்டு பங்கு மக்களிடையே செல்வாக்கும் பெற்றிருக்கிறது என்பதற்காகவே நாம் ராஜபக்சவின் கட்சியை ஆதரிக்க முடியுமா என்ன! அந்த வகையில் நான் மேலே சொன்ன இடதுசாரிக் கட்சிகளைவிட முன்னிலை சோசலிசக் கட்சி எந்தவகையில் முற்போக்கு வேலைத்திட்டத்தைக் கொண்டிருக்கிறது என நாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியல் வேலைத்திட்டத்தை கண்டுகொள்ளாமல் அமைப்புப் பலத்தின் பின்னால் மந்தைகளாகத் திரள்வது அறியாமையும் அரசியல் சந்தர்ப்பவாதமுமாகும். இனவாதம் நாலாபக்கமும் புரையோடிப் போயிருக்கும் இலங்கைத் தீவில் சகல இனவாதங்களிற்கு எதிராகவும் நிற்பவர்கள் எந்த இனத்திடமும் செல்வாக்குப் பெறமுடியாமல் இருப்பதும் இனவாதக் கட்சிகளும் சிறுபான்மைத் தேசிய இனங்களின்  இருப்புகளை மறுப்பவர்களும் ஒரே இரவில் அரசியல் செல்வாக்கைப் பெற்றுவிடுவதும் தானே  எழுபது ஆண்டுகால வரலாறாகயிருக்கிறது. முன்னிலை சோசலிசக் கட்சியின் செல்வாக்கும் அமைப்புப் பலமும் அவர்களது அரசியல் வேலைத்திட்டத்தாலும் உழைப்பாலும் உருவானது என்று சொல்வதைவிடவும் அந்தப் பலம் அவர்கள் தாய்க் கட்சியான ஜே.வி.பியிடமிருந்து பிரித்துக்கொண்டு வந்த முதுசொம் - கருணா புலிகள் இயக்கத்தில்  பிரித்துக்கொண்டு வந்த 6000 போராளிகள் போல - என்று சொல்வதில் தவறுண்டா. இந்த இடத்தில்தான் முன்னிலை சோசலிசக் கட்சியின் மீது சரமாரியாக வைக்கப்படும் ‘சுயவிமர்சனம் செய்யுங்கள்’ என்ற அழுத்தம் முக்கியமாகிறது.

 

இந்த நாடு எத்தனையோ சுயவிமர்சனப் புராணங்களை இதுவரை கண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து கே.பி வரைக்கும் சுயவிமர்சனங்களைச் சொல்லிக் கண்ணீர் உகுப்பதை நாம் கண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், முஸ்லீம்களுக்கு இழைத்த கொடுமைகளையிட்டு தாம் சுயவிமர்சனம் ஏற்பதாகப் புலிகள் கூட வாயடிக்கவில்லையா என்ன! ஒரு நபரோ, ஓர் அமைப்போ தங்களது கடந்த கால அரசியல் தவறுகளிலிருந்து தம்மைத் துண்டித்துக்கொண்டு தவறுகளை நேர் செய்யும் நடவடிக்கைகளில் இறங்காதவரை சுயவிமர்சனங்களுங்கு உள்ள பெறுமதி வெற்றுக் காகிதங்கள் என்பதுதான். எனவே கடந்த காலங்களுக்கான சுயவிமர்சனம் என்பதைக் காட்டிலும் சுயவிமர்சனம் செய்பவர்கள் நிகழ்காலத்தில் என்னவகையான அரசியலைக் கொண்டிருக்கிறார்கள் என்பதே சுயவிமர்சனத்தின் உண்மைத்தன்மையை நடைமுறையில் நிரூபிக்கும். அந்த வகையில் முன்னிலை சோசலிசக் கட்சி, ஜே.வி.பியின் அடிப்படை இனவாதக் கருத்துகளிலிருந்தும் ஜே.வி.பியின் பாஸிச நடைமுறைகளிலிருந்தும் தம்மைப் பூரணமாகத் துண்டித்து அதற்கு நேர் எதிர் திசையில் இயங்குகிறார்களா அல்லது இந்த உடைவு சித்தாந்தரீதியாக அல்லாமல் வெறுமனே அமைப்புரீதியாக நிகழ்ந்த உடைவா  என நாம் கேட்க வேண்டியிருக்கிறது. முன்னிலை சோசலிஸக் கட்சி, ஜே.வி.பியின் அடிப்படைக் கருத்துகளிலிருந்து தம்மைத் துண்டித்துக்கொண்டதாக இதுவரை நிரூபிக்கவில்லை. மாறாக ஜே.வி.பியின் அடிப்படைக் கருத்துகளிலிருந்து தற்போதைய ஜே.வி.பி  தலைமை விலகிச் செல்கின்றது என்பதே அவர்களது குற்றச்சாட்டாகயிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலிருந்தே கட்சிக்குள் உடைவும் நிகழ்ந்திருக்கிறது.

 

ஜே.வி.பியின் அடிப்படைக் கருத்துகள் எனச் சொன்னேன். அதைச் சுருக்கமாக இங்கே கவனிக்க வேண்டும். செயலூக்கமும் வசீகரமும் கொண்ட , அந்தக் காலத்தில் இளைஞர்களது மனதில் புரட்சிப் பிம்பமாகத் திகழ்ந்த ரோகண விஜேவீரவை இனவாதத்திற்கு அடிபணிந்து தோற்றுப்போன புரட்சியாளன் என்றே நான் சொல்வதுண்டு. அந்தத் தோற்றுப்போன புரட்சியாளனுக்கு எனது சிறுகதைத் தொகுப்பொன்றைச் சில வருடங்களிற்கு முன்னால் நான் சமர்ப்பணமும் செய்திருந்தேன்.

 

ஜே.வி.பியினரது அரசியலை மார்க்ஸியச் சொல்லாடலில் வரையறுப்பதாக இருந்தால் அதை ‘சாகசவாத குட்டி முதலாளித்துவ அரசியல்’ என்றே வரையறுக்கலாம். இலங்கையினது தனித்துவமான வரலாற்றுச் சூழலைக் கவனத்தில் எடுக்காமாலும், சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரச்சினைகளை எடுத்தடிமடக்காக நிராகரித்தும், தேசிய இனங்களின் இருப்பை மறுதலித்து ‘இலங்கையர்’ என்ற பொது அடையாளத்துக்குள் ஒடுக்கும் இனத்தையும் ஒடுக்கப்படும் இனங்களையும் அடக்கியும்; மாவோ, சே குவேரா, கோ சி மின் எல்லோரையும் வெந்தும் வேகாமலும் கலந்து கட்டி உருவாக்கப்பட்ட ‘திடீர் புரட்சி’ அரசியல் ஜே.வி.பியுடையது. இன்னொரு புறத்தில் தமிழின விரோதத்தில் - குறிப்பாக இந்தியா வம்சாவழித் தமிழர்கள் மீதான விரோதத்தில் - ஜே.வி.பி தனது இனவாத அரசியலைக் கட்டி எழுப்பியது.

 

அப்போது ஜே.வி.பி. தனது உறுப்பினர்களிற்கு கற்பித்த ‘அய்ந்து வகுப்புகள்’ பிரசித்தம் பெற்றவை. அவற்றுள் ‘இரண்டாவது வகுப்பு’ அறிக்கையை இளஞ்செழியன் முழுவதுமாக மொழிபெயர்த்து தனது ‘ஈழத்தில் பெரியார் முதல் அண்ணாவரை ‘ என்ற நூலில் இணைத்திருக்கிறார். அந்த அறிக்கையைப் படித்தபோது இனவாதத்தையும் அதனிலும் விஞ்சிய அடி முட்டாள்தனத்தையும் ஒரு கட்சி தனது உறுப்பினர்களிற்கு இப்படியும் கற்பிக்க முடியுமா என நான் ஒருகணம் அயர்ந்தே போய்விட்டேன்.

அந்த ‘இரண்டாவது வகுப்பு’ இலங்கை மக்களின் மிகப் பெரும் இரட்டை எதிரிகளாக மு.கருணாநிதியின் தி.மு.கவையும், இலங்கை தி.மு.கவையும் கற்பிக்கின்றது. பாடத்தைச் சுவாரசியமாக்க அப்போது வெளியாகியிருந்த எம்.ஜி. ஆரின் ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தையும் அது கட்டுடைத்துக் காட்டுகிறது. அதாவது அந்தப் படத்தில் எம்.ஜி. ஆர் அண்டை நாட்டில் ஆட்சி செய்யும் பெண்ணை (அப்போது இலங்கையில் ஸ்ரீமாவோவின் ஆட்சி)வெற்றிகொண்டு தனது ஆட்சியை அங்கே நிறுவுகிறாராம். இதுதான் தி.மு.கவின் உள்ளார்ந்த சதித் திட்டமாம். அவர்கள் எம்.ஜி. ஆரை முன்னிறுத்தி இலங்கையைக் கைப்பற்றி அதை இந்தியாவோடு இணைக்கப்போவதையே ‘அடிமைப்பெண்’ படம் விளக்குகிறதாம். இலங்கைத் தி.மு.கவுக்கு ஜே.வி.பி தடையையும் கோரியது. இலங்கை தி.மு.கவின் தலைவர் இளஞ்செழியன்அரசால் கைது செய்யப்பட்டார்.

 

ஜே.வி.பியின் அரசியல் நோக்கு இந்த இலட்சணமென்றால் அவர்களது செயற்பாடுகளோ அராஜகத்தின் உச்சம். மற்றவற்றின் இருப்பை மறுப்பதுதான் பாஸிசம் என்றால் 1987 -89 காலப்பகுதிகளில் ஜே.வி.யினர் செய்தவை பாஸிசமே எனத் துணிந்து சொல்லலாம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை பிரபாகரனாவது சிலபல நிபந்தனைகளிற்குப் பின்பாகத் தன் பங்குக்குக் குழப்பியடித்தார். ஆனால் ஜே.வி.பியோ எடுத்த எடுப்பிலேயே அந்த ஒப்பந்தத்தை நிராகரித்தது. அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.வி.பி ஏற்பாடு செய்த கடையடைப்புகளிலிலும் வேலைநிறுத்தங்களிலும் ஒத்துழைக்க மறுத்த தொழிற்சங்கவாதிககளையும் மாற்று அரசியல் கட்சியினரையும் பொதுமக்களையும் நூற்றுக்கணக்கில் ஜே.வி.பி. கொன்றொழித்தது. அந்த ஒப்பந்தத்தைப் புலிகள் தவிர்ந்த மற்றைய தமிழ் அரசியல் சக்திகள் வரவேற்றார்கள் என்பதையும் இங்கு பொருத்தம் கருதிக் குறிப்பிடலாம்.

சந்திரிகா பண்டாரநாயக்காவின் தீர்வுப் பொதி, ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், யுத்த நிறுத்தம், அதிகாரப் பரவலாக்கல், மகாண சபைகளிற்கான அதிகாரங்கள் என எல்லாவற்றிற்கு எதிராகவும் ஜே.வி.பி. கடுமையாகப் போராடியது. சமாதானப் பேச்சுவார்த்தைகளிற்குத் தலைமை தாங்கிய எரிக் சொல்கெய்மை ‘வெள்ளைப் புலி’ என நையாண்டி செய்தது. யுத்தத்தை முழுப்பலத்துடன் நடத்துமாறு அது கூக்குரலிட்டது. அந்த வகையில் போர்க் குற்றங்களிலும் மனிதவுரிமை மீறல்களிலும் ஜே.வி.பியும் ஓர் அரசியல் பங்காளிதான். இத்தகைய வெறுக்கத்தக்க அரசியலிலிருந்தும் ஜே.வி.பியின் இனவாதப் பாரம்பரியத்திலிருந்தும் இதுவரை தங்களை ‘முன்னிலை சோசலிஸக் கட்சி’யினர் சித்தாந்தரீதியாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்களா என நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அப்படி வேறுபடுத்திக் காட்டாதவரை அவர்கள் எத்தனை பக்கங்களில், எத்தனை மொழிகளில் சுயவிமர்சனங்களைச் செய்து வெளியிட்டாலும் அவை அரசியல் பெறுமதியற்ற வெற்றுக் காகிதங்களே.

வருந்தத்தக்க முறையில் முன்னிலை சோசலிஸக்கட்சி, ஜே.வி.பியின் அடிப்படை அரசியலோடு தன்னை வேறுபடுத்திக்காட்டாமல் அந்த அரசியலைத் தனது மரபாகவும் பெருமை கொள்கிறது. முன்னிலை சோசலிசக் கட்சியினர் ஜே.வி.பியிலிருந்து பிரிந்த தருணத்தில் அவர்கள் வெளியிட்ட கருத்துகள் அவ்வாறாகவே அமைந்திருந்தன. கொழும்பில் புபுது ஜயக்கொட  ‘சோசலிசப் பாதையை தேடுவதே இடதுகளின் சவால்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையிலும் சரி, சாமர கொஸ்வத்த ‘நாம் காக்கும் மரபுகள் ‘  என்ற தலைப்பில் ஆற்றிய உரையிலும் சரி, ‘கட்சியின் நிறுவனத் தலைவர் ரோகண விஜேவீர கற்பித்தவைக்கு நாம் திரும்ப வேண்டும், கட்சி இழந்த அடையாளத்தை மீளப் பெறவேண்டும்’ போன்ற அழைப்புகளே முன்னிறுத்தப்பட்டதாக ‘உலக சோசலிச வலைத்தளம்’ பதிவு செய்திருக்கிறது. கொஸ்வத்த தனது உரையில், “ரோகண விஜேவீர  மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை பூமிக்கு கொண்டுவந்த மனிதர் ” எனப் பொருந்தாத் துதி செய்தாரே தவிர ரோகணவின் அரசியலின் அடிப்படைகளை கேள்வி கேட்பதாகவோ சுயவிமர்சனங்களுடனோ அவர்களது உரைகள் அமைந்திருக்கவில்லை. 2011 நவம்பர் மாதம் ரோகண விஜேவீரவையும் ஏனைய ஜே.வி.பி தியாகிகளையும் நினைவுகூறும் கூட்டமொன்றில், “நாம் சுதந்திரமான அழகான புதிய உலகுக்காகப் போராடுவோம். தேவையெனில் கடந்த காலத்தில் அவர்கள் செய்தது போல் நாமும் போராடுவோம்”  என கொஸ்வத்த முழங்கியதையும் உலக சோசலிச வலைத்தளத்தில் கே. ரத்நாயக்க பதிவு செய்திருக்கிறார். இவற்றையெல்லாம்  பார்க்கும்போது முன்னிலை சோசலிஸக் கட்சி, ஜே.வி.பியின் அடிப்படைக் கருத்துகளிலிருந்து விலகி வருகிறதா அல்லது அந்த அடிப்படைக் கருத்துகளிற்கும்’தேவையெனில்’ மீளவும் ஆயுதப் போராட்டத்திற்கும் தனது உறுப்பினர்களை அழைத்துச் செல்லவும் முயற்சிக்கிறதா என்ற அய்யம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

பிரிந்து வந்த குழுவின் தலைவர்களில் ஒருவரான சேனாதீர குணதிலக ‘ஜனரல’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், 2004ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டரசாங்கத்தில் ஜே.வி.பி. நுழைந்து கொண்டதை  பெருந்தவறாக  விவரித்தார். அதே போல், 2006ல் இராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் ஜே.வி.பி. இணைய வேண்டுமென பரிந்துரைத்தமைக்காக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவை  ‘கூட்டணிவாதி’ என அவர் தாக்கினார். 2010 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஜே.வி.பி. ஆதரித்ததும் தவறு என குணதிலக விமர்சித்தார்.  எனினும் அடுத்த வரியிலேயே “அரசியலில் அத்தகைய விவகாரங்களுக்கு சந்தர்ப்பம் கிடையாது என நான் நிராகரிக்கவில்லை”  என அந்தரத்தில் ஒரு பல்டி அடிக்கவும் குணதிலக தவறவில்லை. இந்த முரணைச் சுட்டிக்காட்டி விளக்கும்போது “குணதிலகவும் மாற்றுக்குழுவில் உள்ள ஏனையவர்களும் தமது எதிர்தரப்பினரைப் போலவே முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலை கட்டியணத்துக் கொண்டவர்களாவர். முதலாளித்துவக் கட்சிகளுடனான பல்வேறு கூட்டுக்களை ‘பெருந்தவறு’ மற்றும் ‘பிழைகள்’ என அவர்கள் விவரிப்பதன் பின்னணியில் உள்ள காரணம், ஜே.வி.பி. தொடர்ந்து மக்களிடம் ஆதரவு இழந்து வந்தமையே ஆகும்.  அந்தப் பேட்டியில் “அரசியலில் அத்தகைய விவகாரங்களுக்கு சந்தர்ப்பம் கிடையாது என நான் நிராகரிக்கவில்லை” எனக் கூறியதன் மூலம் குணதிலக அத்தகைய கூட்டணிகளுக்கு கதவைத் திறந்தே வைத்தார்”  என்கிறார் ரத்நாயக்க . ஆக அடிப்படைக் கருத்தியலிலும் முரணில்லை, கூட்டணி வைப்பது போன்ற சந்தர்ப்பவாத நடைமுறைகளிலும் பெரிய முரணில்லை என்ற போது இந்தப் பிளவு வெறுமனே கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மட்டுமே ஏற்பட்ட பிளவா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது. இந்தக் கேள்விகளையெல்லாம் கேள்விகளாகவே இங்கு நிறுத்தி வைத்துவிட்டு நாம் மீண்டும் சம உரிமை இயக்கத்தின் கொள்கை விளக்கப் பிரசுரத்துக்கே  திரும்புவோம்.

 

பிரசுரத்தின் தலைப்பே சம உரிமை இயக்கத்தின் அரசியல் பண்பைச் சொல்லிவிடக் கூடியதாக அமைந்திருக்கின்றது. ” அனைத்து தேசிய பிரஜைகளும்  சம உரிமையை பெற்றுக் கொள்வதற்கான அத்தியாவசிய நுழைவு” என்பதே அப்பிரசுரத்தின் தலைப்பு. அனைத்து ‘தேசிய இனங்களிற்குமான’ சம உரிமை எனச் சொல்லாமல் அனைத்துத் ‘தேசியப் பிரஜைகளிற்குமான ‘ சம உரிமை எனச் சொல்வது தேசிய இனங்களின் இருப்பையே மறுப்பதாகும். நாட்டின் மொத்த சனத்தொகையில் முக்கால்வாசியாக இருக்கும் சிங்கள தேசிய இனத்தின் இருப்புக்கு முன்னால் பலவீனமாகச் சிதறிக் கிடக்கும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் இருப்பை ‘தேசியப் பிரஜைகள்’ என்ற கருத்தாக்கம் சிதைத்து, பெரும் தேசிய இனத்திற்குள் கரைத்துவிடும் அபாயமிருக்கிறது. இன்னொருவகையில் ஒடுக்கப்படும் இனங்கள் தங்களது இன அடையாளங்களின் அடிப்படையில் அரசியல் சக்திகளாகத் திரளும் உரிமையையும் இது மறுப்பதாகும்.

சிங்கள இனத்தின் அரசியல் இருப்பு, மைய அரசினது பலத்திலேயே இருக்கிறது என்பதைத்தான் சுதந்திர இலங்கையின் வரலாறு நமக்குக் காட்டியிருக்கிறது. 1972 அரசியல் சாசனம் பௌத்த சிங்களவர்களை நாட்டின் சிறப்புரிமை பெற்ற இனமாக நிறுவியுள்ளது. இந்த நிலையில் சிறுபான்மை இனங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி அவர்களை உதிரித் தேசியப் பிரஜைகளாகக் கரைத்துவிடுவது சரியான அரசியலாகாது. ஜே.வி.பி தனது வரலாறு முழுவதும் தேசிய இனங்களின் இருப்பை மறுத்து ‘நாம் இலங்கையர் ‘என்ற பெரும்கதையாடலுக்குள் மற்றைய சிறுபான்மை இனங்களைக் கரைக்கவே முயன்றது. அதனது தொடர்ச்சியாகவே ‘சம உரிமை இயக்கம்’ தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முயல்கிறதோ என்ற எனது அய்யத்தை வெகு சீக்கிரமே பிரசுரத்தின் 27வது பக்கத்தில் சம உரிமை இயக்கம் மேலும் வலுப்படுத்தியது.

சம உரிமை இயக்கத்தின்அடிப்படைத் திட்டத்தின் 11வது பிரிவு இவ்வாறு சொல்கிறது. ‘பிறப்புச் சான்றிதழிலும் மற்றும் தேசிய அடையாள அட்டையிலும் இனம்: சிங்களம், தமிழ், முஸ்லீம் மற்றும் இந்தியத் தமிழர் எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாக இலங்கையர் எனக் குறிப்பிடுவதற்காக மக்களோடு சேர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்தல்.’

 

ஆக, இங்கே திட்டவட்டமாகவே இலங்கையில் இனங்கள் என்ற பேச்சே வேண்டாம் நாம் எல்லோருமே இலங்கையர்கள் என்ற முடிவுக்கு சம உரிமை இயக்கம் வந்துவிட்டது. ஆனால் இந்த முடிவை சம உரிமை இயக்கம் வந்தடைவதற்குப் பல வருடங்களிற்கு முன்பே மகிந்த ராஜபக்ச  வந்தடைந்து விட்டார் என்ற உண்மையையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். இந்த வாரம் திருகோணமலையில் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய சனாதிபதி  “இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை உள்ளது. இன மற்றும் மொழிரீதியில் பிரிவினைக்கு இந்த நாட்டில் இடமில்லை நாம் எல்லோரும் இலங்கையர்” என்றார். இனவாத மகிந்த ராஜபக்சவின்  கூற்றுக்கும் ‘இடதுசாரி’ சம உரிமை இயக்கத்தின் கூற்றுக்கும் இடையில் ஓர் எழுத்துக் கூட வித்தியாசமில்லையே. மகிந்தவின் கூற்றிற்குப் பின்னால் மறைந்திருப்பது பேரினவாதம் என்றால் சம உரிமை இயக்கத்தின் கூற்றுக்குப் பின்னால் மறைந்திருப்பது வேறொன்றா என்ற கேள்வி எழுத்தானே செய்யும். தேசிய இனங்களின் இருப்பை இவர்கள் இவ்வாறு மறுக்கும் போது அதற்கு நேர் எதிராக ‘தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை’ என்ற மார்க்ஸிய அரசியல் கருத்தாக்கத்தையும் இலங்கையில் அதனது பொருத்தப்பாட்டையும் நாம் இவர்களிற்கு நேராக உறுதியுடன் உயர்த்திப் பிடிக்க வேண்டியிருக்கிறது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் 1896ம் வருட லண்டன் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாசகம் இப்படி ஆரம்பிக்கிறது: “எல்லாத் தேசிய இனங்களிற்கும் சுயநிர்ணயம் செய்துகொள்ளும் முழு உரிமையைத் தான் ஆதரிப்பதாக இக் காங்கிரஸ் அறிவிக்கிறது”. தொடர்ந்து 1903ம் வருடம் ருஷ்ய மார்க்ஸிஸ்டுகளின் செயற்திட்டத்தின் 9வது பிரிவில் தேசிய இனங்களிற்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துத் தீர்மானம் சேர்க்கப்பட்டது. இந்த 9வது பிரிவை எதிர்த்து லீப்மென், யுர்கேவிச், ஸெம்கோவ்ஸ்க்கி போன்றோர் கடுமையாக எழுதினாலும் ரோஸா லக்ஸம்பெர்க், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் 9வது பிரிவை ‘வெற்றுக்கோட்பாடு’ எனத்தாக்கி 1908ல் எழுதிய ‘தேசியப் பிரச்சினையும் சுயநிர்வாகமும்’ என்ற கட்டுரையும் ரோஸாவின் வாதங்களுக்கு ஆதரவாக ட்ரொட்ஸ்கி நின்றதுமே  கம்யூனிஸ்ட் அகிலத்தில் பெரும் கருத்துப் போருக்கு காரணமாயின. நடுவில் ஆட்டோ பாயர் போன்றவர்கள் தேசிய இனங்களின் சுயநிர்ணயத்திற்குப் பதிலீடாக பண்பாட்டு சுயநிர்ணயத்தை முன்னிறுத்தனார்கள். இவற்றுக்கு எதிராக லெனின், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடத்திய விட்டுக்கொடுக்காத சித்தாந்தப் போராட்டமே பின் வந்த தேசிய இன விடுதலைப் போராட்ட  இயக்கங்களுக்கான ஒப்பற்ற நெறிகாட்டி ஆவணமாகத் திகழ்ந்தது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்தவர்களின் வாதங்களை  தனது சித்தாந்தப் பலத்தாலும் வரலாற்றுப்  பொருள்முதலிய நோக்கின் துணைகொண்டும் லெனின் மறுத்துரைத்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எந்தவிதச் சமரசங்களுமற்று உயர்த்திப் பிடித்தார்.

 

முன்னிலை சோசலிசக் கட்சியும் சம உரிமை இயக்கமும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா என்ற விசயத்தில் இதுவரை இருந்து வந்த ஒருவிதப் பூடகத்தன்மையை சம உரிமை இயக்கத்தின் இந்த கொள்கை விளக்கப் பிரசுரம் இப்போது உடைத்துவிடுகிறது. தேசிய இனங்களின் இருப்பையே மறுத்து எல்லோரும் இலங்கையர்களே, தேசியப் பிரஜைகளே என்ற கோஷத்தை வைக்கும்போதே தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை என்ற பேச்சுக்கே அவர்களிடம் இடமில்லை என்று ஆகிவிடுகிறது. அவ்வாறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் அவர்கள் அதை ஏன் பகிரங்கமாக சிறுபான்மை இனங்களின் மத்தியில் தங்கள் தரப்பு ‘நியாயங்களுடன் ‘ முன் வைக்க மறுக்கிறார்கள்? குமார் குணரட்ணம் கலந்துகொள்ளும் கூட்டங்களில் சுயநிர்ணய உரிமை குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும்போது கறாராகப் பேசாமல் அவர் அரைகுறையாக மழுப்புகிறார் என்றால் அது அரசியல் சந்தர்ப்பவாதமாகாதா? பெரும்பான்மை சிங்கள மக்களின் இனவாத உளவியலுக்கு அவர் அடிபணிகின்றாரா?

 

‘சிங்களப் பெரும்பான்மையின் உளவியல் சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக இருப்பதால் இப்போது சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசுவது நடைமுறைத் தந்திரமல்ல’ என்றொரு வாதமும் இணையங்களில் அரசல் புரசலாகச் சொல்லப்படுவதைப் பார்த்திருக்கின்றேன். ஒருவேளை இது உண்மையாயிருந்தால் அதைப் போலவே நடைமுறைத் தந்திரத்தைக் கருத்திற்கொண்டு தமிழ் மக்களிடம் என்னவற்றையெல்லாம் முன்னிலை சோசலிஸக் கட்சி மறைத்து வைத்திருக்கின்றது என்ற அடிப்படைக் கேள்வியை நாம் எழுப்ப வேண்டியிருக்கும். இந்த மந்திர தந்திரமெல்லாம் நேர்மையான அரசியல் வழிகளல்ல. சுயநிர்ணய உரிமை குறித்த நெடிய விவாதத்தில் கவுட்ஸ்கியையும் பௌவரையும் ஒப்பிட்டு லெனின் திரும்பத் திரும்ப ஒரு கருத்தை வலியுறுத்துவார். பிரச்சினைகளை வரலாற்று - பொருளாதாரரீதியான சித்தாந்தத்தில் அணுகவேண்டுமே தவிர உளவியல் ரீதியான சித்தாந்தத்தோடு அணுகக் கூடாது என்பார் லெனின்.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பது பெருந் தேசிய இனத்திடம் அதிருப்தியைப் பெற்றுத்தராதா என்ற வாதத்தை எதிர்கொண்டு, சுயநிர்ணய உரிமையை ஆதரித்து  ருஷ்ய மார்க்ஸிய இயக்கத்தின் தந்தை பிளாக்னவ் இவ்வாறு எழுதினார்: “நமது சொந்த பெரிய- ருஷ்ய தேசிய இனத்தைச் சேர்ந்த நமது சக தேசத்தவர்களின் தேசியத் தப்பெண்ணங்களை எங்கே புண்படுத்திவிடுவோமோ என்ற பயத்தினால் இவ்வுரிமையை நாம் மறந்துவிட்டாலோ அல்லது தயங்கினாலோ உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற அறைகூவல் நமது வாயிலிருந்து வரும் வெட்கக்கேடான பொய்யுரையாகப் போய்விடும்”. இலங்கைத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என முழங்கும் முன்னிலை சோசலிசக் கட்சியும், சம உரிமை இயக்கமும் மனம் திறந்து பிளக்னவ்வின் வார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டும்.

சரி முன்னிலை சோசலிஸக் கட்சி சுயநிர்ணய உரிமையை  ஏற்றுக்கொண்டால் சிறுபான்மை இனங்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா? அப்போதும் கூட அது செயல்பூர்வமற்ற வெற்றுக் காகிதத் தீர்மானமாகத்தானே இருக்கும் என ஒருவர் கேட்கக்கூடும். இதற்கு லெனின் இவ்வாறு பதிலளிக்கிறார்: “சந்தர்ப்பவாதிகளைப் பொறுத்தவரை இது செயல்பூர்வமற்றதாக இருக்கலாம். ஆனால் நிலபிரபுக்கள், தேசிய பூர்ஷ்வாக்கள் ஆகியவர்களையும் மீறிய வகையில் தேசிய இனங்களுக்கிடையில் அதிக சம அந்தஸ்தையும் சமாதானத்தையும் உண்டு பண்ண இது ஒன்றுதான் உண்மையான உத்தரவாதத்தை அளிக்கிறது”. இலங்கையில் வரலாற்றுரீதியாகவே முரண்பட்டு நிற்கும் இனங்களிடம் பரஸ்பரம் நம்பிக்கையையும் ஒற்றுமையும் ஏற்படுத்த இந்த உத்தரவாதம் முக்கியமானதல்லவா.

 

சம உரிமை இயக்கத்தின் வேலைத்திட்டத்தின் 3வது பிரிவு “தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் மத மற்றும் கலாசார தனித்துவங்களை ஏற்றுக்கொள்ளும், அவற்றை மதிக்கும் நிலைமையை ஏற்படுத்த சம உரிமை இயக்கம் போராடும் ” என்கிறது. நான் முன்பே குறிப்பிட்ட ஆட்டோ பாயரின் பண்பாட்டுச்  சுயநிர்ணயம் என்ற நிலைப்பாட்டை இந்தக் கோரிக்கை நெருங்கிவருகிறது. ஆனால் இந்தப் பண்பாட்டுச் சுயநிர்ணயம் என்பது தேசிய இனங்களின்  சுயநிர்ணய உரிமையை நிராகரிப்பதற்காக மொழியப்படும் தந்திரமே என்றார் லெனின்.

நூறு வருடங்களிற்கு முந்தைய ருஷ்ய எதார்த்தத்தை மனதில் கொண்டு சொல்லப்பட்டதெல்லாம் இன்றைய சூழலில் இலங்கை எதார்த்தத்துக்குப் பொருந்துமா என்ற கேள்வி தோழர்களிற்கு எழக்கூடும்.  லெனின் சுயநிர்ணய உரிமையை எல்லாக் காலத்துக்கும் எல்லாத் தேசங்களிற்குமாக வரையறை செய்யவில்லை. சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு ‘மாறாநிலைவாதப்பட்டதல்ல’ என்பதை அவர் தெளிவாகவே குறிப்பிடுகிறார். ஆஸ்திரிய உதாரணத்தைச் சுட்டும்போது, அங்கே தேசிய விடுதலை இயக்கங்கள் செயற்படாததால் அங்கே சுயநிர்ணய உரிமை என்ற கேள்விக்கு இடமே இல்லை என்கிறார். தேசிய இனப் பிரச்சினைகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டிருப்பாதால் சுவிஸிலும் அந்தக் கோரிக்கைக்கு அவசியமில்லை என்கிறார். ஆனால் இதையொத்தது ஏதாவது ருஷ்யாவில் உண்டா என வினவும் லெனின் ருஷ்யாவில் சிறுபான்மை இனங்கள் மீது பெரிய - ருஷ்ய இனத்தின் ஒடுக்குமுறையைச் சுட்டிக்காட்டி சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை வலியுறுத்துவார். இன ஒடுக்குமுறையைப் பொறுத்தளவில் நூறாண்டுகளிற்கு முன்பு ருஷ்யாவில் சிறுபான்மை இனங்கள் அனுபவித்த ஒடுக்குமுறையைத்தான் இப்போதும் இலங்கையில் சிறுபான்மை இனங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை முன்னிலை சோசலிஸக் கட்சி கூட ஏற்றுக்கொள்ள மறுக்காது என்றே நம்புகின்றேன். எனவே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை இப்போதும் இலங்கைக்கு பொருத்தப்பாடு உள்ளதாகவே நான் கருதுகிறேன். இதை முன்னிலை சோசலிசக் கட்சி சித்தாந்தரீதியாக மறுத்துரைக்குமானால் அதைப் பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

 

‘தேசிய இன அடையாளம் என்று பேசிப் பேசித்தான் எல்லா நாசமும் வந்தது, எனவே இனம் என்ற அடையாளத்தைக் கடந்து சிந்திக்க வேண்டும்’ என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. ஒடுக்கும் இனம் அமைப்பாகத் திரள்வதையும் ஒடுக்கப்பட்ட இனங்கள் அமைப்பாகத் திரள்வதையும் நேர்படுத்திப் பேசுவது சரிதானா என இவர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒடுக்கும் சாதிகளான பார்ப்பனர்கள், வெள்ளாளர்கள் போன்றவர்கள் சாதி அமைப்புகளாகத் திரள்வதையும், அந்த ஒடுக்குமுறையிலிருந்து  தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தோன்றிய தலித் சாதி அமைப்புகளையும் நேர்படுத்திப் பேசுவது எவ்வளவு தவறானா வாதமோ அதையொத்த வாதமே  சிறுபான்மை இனங்கள் இன அடையாள அரசியலைக் கைவிட வேண்டும் என்பது. இதே இன அடையாள அழிப்பு அரசியலை பாலஸ்தீனர்களிடம் குர்துகளிடமும் தீபெத்தியர்களிடமும் இவர்கள் சொல்வார்களா, அதிகம் வேண்டாம் இலங்கை முஸ்லீம் இனத்திடம் இதைச் சொல்ல முடியுமா என்ன! தமிழ் இன விடுதலைப் போர் என்ற பெயரில் புலிகள் ஒரு பாஸிச அரசியலைச் செய்து தோற்றுப்போனார்கள் என்பதால் ஒடுக்கும் இனத்திலிருந்து தங்களையும் தங்களது கலாசாரங்களையும் நிலங்களையும் பாதுகாத்துக்கொள்ள எழும் இன அடையாள அரசியல் நியாயமற்றதாகிவிடாது. ஏனெனில் புலிகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள்  தங்களது இன அடையாளத்தைப் பாதுகாக்கப் போராடத் தொடங்கிவிட்டார்கள்.

 

‘சுயநிர்ணய உரிமையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு நிற்பதால் இலங்கை அரசு வழங்கக் கூடிய அற்ப சொற்ப உரிமைகளைக் கூட நாம் பெறமுடியாமல் போய்விடும்’ என வீ. ஆனந்தசங்கரி அடிக்கடி சொல்வதுண்டு. அவரின் பேச்சில் ஒரு நியாயம் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். தமிழர்கள் தரப்புடன் அரசு  ஒரு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்போது, அல்லது இந்தியா ஏதோவொரு அரைகுறைத் தீர்வையாவது தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுக்க பேச்சுவார்த்தையை நடத்தும்போது அங்கே தமிழர் தரப்பு, சுயநிர்ணயக் கோரிக்கையைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு கிடைக்கக் கூடிய உரிமைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஒன்றுமில்லாமல் இருப்பதற்கு ஏதோ ஒன்றிரண்டாவது கிடைப்பது நல்லதுதான்.

ஆனால் இப்போது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் பேசிக்கொண்டிருக்கும் நான் ஆனந்த சங்கரியுமல்ல, குமார் குணரட்ணம் மகிந்தவோ மன்மோகன்சிங்குமல்ல. இது  சலுகைகளைக் கோரும் ஒரு பேச்சுவார்த்தை மேசையுமல்ல. மார்க்ஸியப் புரட்சிகரக் கட்சியாகத் தங்களை அடையாளப்படுத்தும் ஒரு கட்சியிடமே நான் மார்க்ஸிய அடிப்படையில் சுயநிர்ணய உரிமை குறித்துக் கேள்வியை எழுப்புகின்றேன். இதற்குப் பொறுப்புடன் பதிலளிப்பது அவர்களது கடமையே.

 

சம உரிமை இயக்கத்தின் பிரசுரத்தை வாசிக்கையில் அவர்களிடம் ஒரு கடிவாளப் பார்வை இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தனக்கு எதிரான குரலை ‘பிரிவினைவாதம்’ என அடையாளப்படுத்தி அரசு ஒதுக்குவதுபோல, தமக்கு எதிரான குரலை ‘துரோகம்’ எனச் சொல்லிப் புலிகள் ஒதுக்கியதைப் போல, சம உரிமை இயக்கத்திற்கு ‘முதலாளித்துவம்’ என்ற சொல் துருப்புச் சொல்லாய் இருக்கிறது. ஒரு வரலாற்று நிகழ்வில் இனம், சாதி, பால், மொழி, பண்பாடு என எத்தனையோ காரணிகள் குறுக்கும் நெடுக்குமாக பின்னிப் பிணைந்துள்ளன என்பதை இவர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை. எடுத்ததற்கெல்லாம் ‘முதலாளித்துவம்…முதலாளித்துவம்’  எனச் சொல்லிப் பிரச்சினையைச்  சுலபமாக முடிக்கப் பார்க்கிறார்கள். வரலாறு அவ்வளவிற்கு எளிமையான ஒன்றல்ல. முதலாளி எதிர் தொழிலாளி என முடிப்பதற்கு வரலாறு ஒன்றும் எம்.ஜி.ஆர் படமல்ல.

எடுத்துக்காட்டாக, 1833 சட்டவாக்க சபை, 1889 சீர்திருத்தம்,  1921ல் இலங்கை தேசிய சங்கத்திலிருந்து தமிழ்த் தலைமைகள் பிரிந்து இலங்கைத் தமிழ் காங்கிரஸை தோற்றுவித்தது என எல்லாமே இவர்களிற்கு இனங்களைப் பிரித்தாளும் முதலாளித்துவ சதியாக மட்டுமே தெரிகின்றது. இந்த வரலாற்று நிகழ்வுகளிற்கு அடியிழையாக இருக்கும் சிலோன் அரசின் தோற்றம், அதில் இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் எல்லாமே முதலாளித்துவச் சதியாகத்தான் இவர்களிற்குத் தெரிகிறது. 1833 காலப்பகுதியில் முதலாளியத்திற்கு இருந்த முற்போக்குப் பாத்திரம், முதலாளித்துவ சனநாயக நெறிகளை இலங்கைக்கு  வழங்கிய அதனது பாத்திரம் எல்லாமே இவர்களுக்கு முதலாளியச்  சதியாகவே தெரிகின்றது. இதைத்தான் வரலாற்றுக் குருடான கடிவாளப் பார்வை என்றேன்.

 

யாழ்ப்பாணம், கண்டி, கோட்டை என்ற மூன்று இராச்சியங்களை இணைத்து 1833ல் ‘சிலோன் அரசு’ உருவாக்கப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட சட்டநிரூபண சபையில் மரபு வழி அய்ரோப்பியர்கள் மூவர் தவிர இன அடிப்படையில் சிங்களவர், தமிழர், பறங்கியர் ஆகியோருக்கு தலா ஓர் இடம் வழங்கப்படுகிறது. 1889ல் இது விரிவாக்கப்பட்டு கண்டிச் சிங்களவருக்கு ஒரு இடமும் முஸ்லீம்களுக்கு ஒரு இடமும் வழங்கப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட தேசத்தில், புதிதாக முதலாளிய சனநாயக நெறிகளைப் புகுத்தும் முயற்சி இவ்வாறான படிநிலை வளர்ச்சியையே கொண்டிருக்கும். ஆனால் சம உரிமை இயக்கமோ இதை இனங்களைப் பிரித்தாளும் தந்திரமாகப் பார்க்கிறது. பல்லினங்கள் வாழும் நாட்டில் இனரீதியாகப் பிரதிநிதித்துவம் வழங்குவது எப்படி இனங்களைப் பிரிக்கிறது என விளக்குவது சம உரிமை இயக்கத்தின் கடமையாகிறது.

எந்தவொரு இனத்திற்கும் விசேட உரிமைகளை வழங்கக் கூடாது எனப் பிரசுத்தின் 20ம் பக்கம் வலியுறுத்துகின்றது. மேம்போக்காகப் பார்த்தால் இக் கோரிக்கை சரியானதாகத் தோன்றும். சற்று ஆழமாகப் பார்த்தால் மண்டல் கமிஷனுக்கு எதிராக ஒலித்த குரல்களை ஒத்ததாக இது இருக்கும்.

அறுதிப் பெரும்பான்மையினர்களாகச் சிங்களவர்கள் வாழும் நாட்டில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளைக் காக்க அவர்களிற்குச் சில சிறப்புரிமைகளை வழங்கத்தான் வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் தலை எண்ணும் சனநாயகத்தின் அடிப்படையில் மிகச்  சுலபமாக நிறைவேற்றப்படலாம். அதைத் தடுக்கவே காலனி காலத்தில் உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனங்களைப் பாதுகாக்கும் சிறப்புரிமையான 29 (2) வது சரத்து சேர்க்கப்பட்டது. 1972ல் உருவாக்கப்பட்ட புதிய இனவாத அரசியல் சாசனத்தில் இச் சிறப்புரிமை பறிக்கப்பட்டது. இத்தகைய சிறப்புரிமைகளையும், தேவைப்பட்டால் சிறப்பு ஒதுக்கீடுகளையும், தனி வாக்காளர் தொகுதிகளையும் சிறுபான்மையினருக்கு வழங்குவதே முதிர்ந்த சனநாய நெறியாகும். தட்டையான வர்க்க சாராம்சவாதப் பார்வையால் அல்லாமல் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளையும் பிரிவுகளையும் அவற்றுக்குரிய தனித்துவமான பிரச்சினைப்பாடுகளுடன் அணுகித் தீர்வை எய்துவதே சரியான அரசியல். அதைவிடுத்து ‘எல்லோருமே சமம் ஆகவே எல்லோருக்கும் பொதுநீதி’ எனப் பொதுமைப்படுத்துவது தவறான நிலைப்பாடு. ஏனெனில் இச் சமூகத்தில் எல்லோரும் சமமாக இல்லை, இது ஏற்றத்தாழ்வான சமூகம் என்பதே எதார்த்தமாயிருக்கிறது. தாழ்வான நிலையிலிருப்பவர்களிற்கு சிறப்பு உரிமைகளை வழங்குவதுதான் ‘சமூகநீதி’ எனச் சொல்லப்படும்.

மேல் மகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்குவோம் என வாக்களித்த இலங்கைத் தேசிய சங்கத்தின் சிங்களத் தலைவர்கள் அந்த வாக்குறுதியை மீறியதாலேயே 1921ல் இலங்கை தேசிய சங்கத்திலிருந்து தமிழ்த் தலைமைகள் வெளியேறி  இலங்கை தமிழ் காங்கிரஸை உருவாக்குகிறார்கள். இதை இனரீதியான பிரச்சினையாக அணுகுவதா அல்லது முதலாளித்துவ சதி எனக் கடந்து செல்வதா? ஒருவேளை இருகாரணங்களுமே இதில் பங்காற்றியுள்ளன எனச் சொன்னால் கூட அது ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் இதில் இனவாதம் என்ற விசயத்தையே விட்டுவிட்டு முதலாளித்துவ சதி எனச் சொல்வதையே இயந்திரரீதியான கடிவாளப் பார்வை என்றேன். இவ்வாறாக சமகாலம் வரைக்கும் ஏகப்பட்ட கடிவாளப் பார்வைகள் சம உரிமை இயக்கத்தின் பிரசுரத்தில் காணப்படுகின்றன. வர்க்க சாராம்சவாத நோக்குத் தளையிலிருந்து விடுபட்டு, பன்முகப் பார்வைகளை  உள்வாங்கிப் பிரச்சினைகளை சம உரிமை இயக்கம் ஆய்வு செய்யும் போது புதிய வெளிச்சங்கள் அவர்களிற்குத் தோன்றக்கூடும்.

 

‘எல்லாப் பிரச்சினைகளிற்கும் தீர்வு சமவுடமைச்  சமுதாயமே’ எனச் சொல்லும்  சம உரிமை இயக்கத்தின் அறம் சார்ந்த கனவுக்கு நான்  மரியாதை செய்கின்றேன். அதே வேளையில் தேசிய இன அடையாளங்களை வேரறுத்துவிட்டுத்தான் தங்களது பாதையில் முன்னேறலாம் என்பது போகாத ஊருக்கு வழி என்பதையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அது மேலும் மேலும் இனமுரண்களையும் பகைமையையுமே வளர்க்கும். சாதிவெறி பிடித்த பாட்டாளிக்கும் அவனால் ஒடுக்கப்படும் தலித் பாட்டாளிக்கும் நடுவில் சுவராகச் சாதியம் இருக்கும் வரை எப்படி உண்மையான அய்க்கியம் அவர்களிடையே எற்படாதோ, அதுபோலவே இன ஒடுக்குமுறையை ஆதரிக்கும் பாட்டாளிக்கும் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பாட்டாளிக்கும் இடையே உண்மையான அய்க்கியம் ஏற்படுவதும் சாத்தியமில்லை.  நேபாள மாவோயிஸ்ட் இயக்கம் அனைத்து இனங்களையும் பழங்குடிகளையும் அங்கீகரித்து அவர்களிற்கான இனரீதியான பிரதிநிதித்துவங்களையும் வழங்கி அரவணைத்தபடியே முன்னோக்கிச் சென்றது நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பிரசண்டா பாதையா அல்லது பொல்பொட் பாதையா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

இது தவிரவும் தலித் அரசியல், பெண்ணிய அரசியல், சமபாலுறவாளர்களது அரசியல், கலை கலாசாரம் போன்றவற்றில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பார்வைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்துவது கட்சி குறித்து ஒரு மதிப்பீட்டை மக்கள் எட்டுவதற்குத் துணை செய்யும் என்று நான் நம்புகின்றேன். ஏனெனில் நாங்கள் மார்க்ஸிடம் திரும்ப விரும்புகிறோமே அல்லாமல் ஸ்தானோவிஸத்துக்குத் திரும்ப விரும்பவில்லை.

 

முன்னிலை சோசலிஸக் கட்சியும் சம உரிமை இயக்கமும் இளம் அமைப்புகள், அவர்கள் தம்மை வளர்த்துக் கொள்ளவும் திருத்திக்கொள்ளவும் அவகாசம் வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ‘இளம் அமைப்புகள்’ என்பதை விமர்சனங்களிற்கும் கேள்விகளிற்கும் முகம் கொடுக்க மறுக்கும் ஓர் உத்தியாக இவர்கள் பயன்படுத்தவில்லை என்றே நம்புகின்றேன். அமைப்பாகியது அண்மையில்தான் என்றாலும் குமார் குணரட்ணம் போன்ற நீண்ட கால அரசியல் வரலாறுள்ளவர்கள், ஜே.வி.பியில் அதி முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் இந்த அமைப்புகளை வழிநடத்துகிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். முன்னிலை சோசலிஸக் கட்சி  வேகவேகமாக உறுப்பினர்களைத் திரட்டும் காரியத்தைச் செய்வதிலும் விட முக்கியமானது  தனதுஅரசியல் வேலைத் திட்டத்தை ‘தெந்தெட்டாக’ அன்றி திட்டவட்டமாக மக்கள் முன் வைப்பதும் அதை மும்மொழிகளிலும் வெளியிடுவதுமே.

 

நல்லெண்ணரீதியான அய்க்கியம் ஏற்படுவதைக் காட்டிலும் தெளிவான அரசியல் புரிதலுடன் அய்க்கியம் ஏற்படுவதே சரியானதாயிருக்கும். ‘நல்லெண்ணமே பல சமயங்களில் நரகத்துக்கும் வழி வகுக்கிறது’ என்பார் லெனின். வரும்காலத்தில் இன்னொரு மன்னம்பேரியோ, மதிவதனியோ, மலாலாவோ மரணப் படுகுழிக்குள்ளிருந்து “குமார் தோழர் தவறு செய்துவிட்டார்” எனச் சொல்லக் கூடாது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.