Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகுத்தறிவுப் பகலோன் தந்தை பெரியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவுப் பகலோன் தந்தை பெரியார்
ரூபன் சிவராஜா

 

 

5531b71d-7810-419f-a408-77ec149482921.jp

 

சொல்லப்படுகின்ற கருத்துக்கள் மீது கேள்விகளை எழுப்பாது அப்படியே நம்புவதும் ஏற்பதும் அறிவுடமையாகாது. கருத்துக்கள் மீது ஏன்- எதற்காக- எதனால் என்ற கேள்விகளை எழுப்புவதன் மூலமே தெளிவடைய முடியும் என்ற ஆழமான மெய்யறிவின் பாற்பட்ட சிந்தனையை வலியுறுத்தியவர் தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி).

 

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற சிந்தனையாளர் தந்தை பெரியார். 1879ம் ஆண்டு பிறந்து, 1973ம் ஆண்டு தனது 95வது அகவையில் காலமானார். 2013 டிசம்பர் 24 பெரியாரின் 40வது ஆண்டு நினைவு நாள் ஆகும்.

 

அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படமுடியாத பிற்போக்கான கருத்துக்களை, மக்களை அச்சத்திற்கு ஆளாக்குவதனூடு புகுத்துவதற்கும் - திணிப்பதற்கும் இடமளிக்காதிருப்பதே உண்மையான பகுத்தறிவுள்ள- சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய காரியம் என்பது பெரியாரின் திண்ணமான நிலைப்பாடாகும். அது மட்டுமல்ல ஏற்க முடியாதவை - பிற்கோக்கானவை என்று உணரப்படும் கருத்துக்களை எதிர்ப்பதற்குரிய துணிச்சலும் நெஞ்சுரமும் கொண்டிருக்க வேண்டுமென்பதையும் பெரியார் வலியுறுத்தி வந்தார்.

 

சமூக மாற்றத்திற்கும் மறுமலர்ச்சிக்குமான அதி முற்போக்கான சிந்தனைகளை மானிடம், வாழ்வியல், சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி போன்ற பல்வேறு தளங்களில் விதைத்தவர். வெறுமனே கருத்துக்களை சொல்லியும் எழுதியும் திருப்தி கண்டவர் அல்ல பெரியார். சமூக மாற்றத்திற்காக தனது வாழ்க்கையை முற்றுமுழுதாக அர்ப்பணித்து, சிந்தனைப் புரட்சி நிகழ்த்தி, நேர்த்தியான திட்டங்களை வகுத்து, களத்தில் இறங்கிச் செயற்பட்டவர்.

 

அறிவுக்கண்களை மூடிக்கொண்டு, மூடநம்பிக்கைக் குழியில் புதைந்து கிடந்த தமிழக மக்கள் வாழ்வில் பகுத்தறிவு ஒளியைப் பாய்ச்சியவர் தந்தை பெரியார். தமிழ் நாட்டின் தமிழர்கள் மானமும் அறிவுமுள்ள புரட்சிகரமான இனமாக எழுச்சி கொள்ள வேண்டுமென்பதற்காக தனது இறுதி மூச்சிருக்கும் வரையும் தளராத உறுதியோடு போராடியவர். தனது போராட்டங்கள் மூலம் தமிழகத்தின் சமூக-அரசியல்-பொருளாதார நிலைகளில் பெரும் சீர்திருத்தங்களுக்கும் மாற்றங்களுக்கும் வழிவகுத்தவர்.

 

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தமிழினத்தையும் பகுத்தறிவுப் பாதைக்கு இட்டுச்செல்லும் பெரியாரின் இலக்கு நிறைவேறவில்லை என்றாலும், சமத்துவநெறியையும் சமூகநீதியையும் வலியுறுத்துகின்ற பகுத்தறிவாளர்ளையும் போராளிகளையும் உருவாக்கிய அரும்பணி பெரியார் அவர்களைச் சாரும். புதிய சிந்தனைகளும் போர்க்குணமும் கொண்ட சிறு தொகுதியினராவது இன்று தமிழத்தில் இருப்பதற்கு, அன்று வேரூன்றியவர் பெரியார் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

 

உலக வரலாற்றில் சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகளின் சிந்தனை வெளிப்பாடுகளையும் தத்துவக் கோட்பாடுகளையும் நாம் படிக்கும் போது, அவர்கள் பல்வேறு ஆய்வுகள், தத்துவ நூல்களையும் பல்வேறு சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் ஊன்றிப்படித்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தியதன் ஊடாகவே புதிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் வகுத்தார்கள் - வெளிப்படுத்தினார்கள் என்பதை அறிகின்றோம். ஆனால் பெரியார் எந்தவொரு உலக அறிஞர்கள், தத்துவஞானிகளின் சிந்தனைகளையோ தத்துவங்களையோ படித்து, ஆய்வுசெய்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியவர் அல்லர்.

 

மாறாக சிறுபராயத்திலிருந்து பெற்ற தனது சுய வாழ்பனுபவங்களினூடாகவும், தான் சந்தித்த நிகழ்வுகளினூடாகவுமே தனது சிந்தனையை வளர்த்துக்கொண்டார். மானுடப் பெறுமதிகளுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகள், புறக்கணிப்புக்கள், மூட நம்பிக்கைகள், சாதிக் கொடுமைகள், பெண்ணடிமைத்தனங்கள் போன்ற பெரியாரின் கண்முன் நிகழ்ந்த, அவர் பட்டறிந்து கொண்ட சமூக அநீதிகளே அவரது சிந்தனையின் தோற்றுவாய்க்கான ஊற்றுவாய் என்பதை இன்று நாம் அறிகின்றோம்.

 

'மானமும் அறிவும் மனிதருக்கு அழகு' - என்பது பெரியார் தாங்கி நின்ற முதன்மைக் கொள்கையாகும். இந்த வாசகம் வெளிப்படுத்தி நிற்கும் அடிப்படை வாழ்வியல் தத்துவமே பெரியாரின் போராட்டத்தின் முதன்மை இலக்கினை எடுத்தியம்புகின்றது. அறிவு வளர்ச்சியே மனித வாழ்வை மேம்படுத்துகின்றது. அறிவின் பாற்பட்ட சிந்தனைகளே மனிதனை நாகரீகமானவன் ஆக்குகின்றது. இவைபோன்ற பல முற்போக்கு சிந்தனைகளை உடையவராகவும் வாழ்வியல்-சமூகம்-அரசியல்-மதம் போன்ற விடயங்களில் மிகமிக முற்போக்கான கருத்துக்களை உடையவராகவும் தந்தை பெரியார் களப்பணி ஆற்றினார்.

 

நம் தமிழர்கள் பலர் பெரியாரை கடவுள் மறுப்பாளர், நாத்திகர் என்ற குறுகிய வரையறைக்குள் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர். அவருடைய புரட்சிகரமான-முற்போக்கான, வாழ்வை, சமூகத்தை, தேசத்தை மேம்படுத்தவல்ல கருத்துக்களையும் கொள்கைகளையும், பெண்ணியம் பற்றிய தெளிவான பார்வைகள் பற்றியும் ஈழத் தமிழர்கள் பலர் அறியாதிருப்பது, சரியான முறையில் உணராதிருப்பது வேதனைக்குரியது.

 

பெரியார் தனது போராட்டத்திற்கான அடித்தளமாக கடவுள் மறுப்பு, மதநீக்கம் ஆகியவற்றை ஏன் கையிலெடுத்தார் என்பதை விளக்குவதன் மூலமும் அவரது போராட்ட முன்னெடுப்பின் தார்ப்பரியம் யாதென்பதைத் தெளிவுபடுத்துவதன் மூலமும் பெரியாரை முழுமையாக அறிந்துகொள்ள முடியும்.

 

இந்திய சமூகத்தில், குறிப்பாக தமிழகச் சூழலில் சகல துறைகளிலும் தமிழர்களின் சமூக வளர்ச்சிக்கு பார்ப்பனியம் பாரிய தடைக்கல்லாக இருந்தது. திட்டமிட்ட முறையில் இன்றும் தடையாக இருந்து வருகின்றது. அந்த அடிப்படையில் பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது பரந்துபட்ட தொலைநோக்குப் பார்வையுடையது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெரியாரது களச்செயல்களில் பார்ப்பன எதிர்ப்பே முதன்மை பெற்று நிற்கின்றது.

 

பண்டைத்தமிழன் அறிவியலிலும் நாகரிகத்திலும் உலகில் முன்னிலை வகித்தான் என்ற மெய்ப்பிக்கப்பட்ட வரலாறு உண்டு. சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்ட பொருட்கள், அங்கு காணப்படும் கட்டட எச்சங்கள் என்பன தமிழரின் அறிவியல் சிந்தனைக்கும் வாழ்வியல் நாகரீக வளர்ச்சிக்கும் சான்று பகர்கின்றன என்பது வரலாற்றாசிரியர்களின் கூற்று.

 

இந்நிலையில் கி.மு 1500 காலப்பகுதியில் ஈரானிலிருந்து வந்தேறுகுடிகளாக வந்த பார்ப்பனியர்களின் வருகையோடு அறிவியலில் மேம்பட்ட நிலையில் வாழ்ந்த தமிழரின் வாழ்வில் அழிவுக்காலம் ஆரம்பித்தது. தொடர்ந்து ஆரியர்களால் திட்டமிட்ட முறையில் தமிழர் வாழ்வும் வளமும் சிதைக்கப்பட்டது என்பதே உண்மை நிலை.

 

ஆரிய இன பார்ப்பனர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி இந்துமத தர்மம், மனுநீதி என்ற பெயரில் தமிழர்களிடையே சாதிப் பிரிவினைகளையும் மூட நம்பிக்கைளையும் விதைத்து வளர்த்தனர். புராண இதிகாசங்கள் என்ற பெயரில் பொய்களையும் புரட்டுக்களையும் தமிழர் பால் திணித்து, பல சூழ்ச்சிகள் மூலம் தமிழர்களை ஏமாற்றித் தம்மை வளர்த்துக் கொண்டனர்.

 

அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடியாத சாத்திர- சமயச் சடங்குகளை எண்ணுக்கணக்கில்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் புகுத்தினர். இதன் அடிப்படை நோக்கம் பொருளாதார சுரண்டல் என்பதை அறியாத தமிழர்கள் அவற்றைக் கண்மூடித்தனமாக நம்பினர். மூடத்தனங்களும் பிற்போக்குவாதங்களும் திட்டமிட்ட முறையில் தமிழர்கள் மத்தியில் வேரூன்றச் செய்யப்பட்டு, அவற்றினூடக அடிமை மனப்பான்மை, சாதி-மதவெறி போன்ற இழிநிலைகள் புகுத்தப்பட்டன.

 

பிராமணராகிய தாமே பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும் மற்றையவர்கள் (தமிழர்கள்) பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்ற அறிவுக்குப் புறம்பான, சிந்திக்கத் தெரிந்த எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத மூடக்கருத்தை பாமரத் தமிழர் மத்தியில் பரப்பினர். பரப்பியதோடு மட்டுமல்லாமல் அந்த மக்கள் இப் பொய்யுரைகளையும் கபடத்தனம் நிறைந்த சூழ்ச்சிகளையும் நம்பும்படியும் செய்திருந்தனர்.

 

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் பார்ப்பனர்களே முதலிடம் வகித்தனர். பல துறைகளில் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டன. அதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்டு, பெருந்துன்பங்களுக்காளானார்கள். தீண்டாமைக் கொடுமையால் சொல்லிலடங்காத அவலங்களுக்கு உள்ளானார்கள்.

 

மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகள் புகுத்தப்படுவதால் உண்மை அறிவு இழக்கப்படுகின்றது, அச்ச உணர்வில் உழலவேண்டிய நிலை ஏற்படுகின்றது, நம்பிக்கையீனம் ஏற்படுகின்றது, கோழைத்தனமும் சோம்பேறித்தனமும் வளர்க்கப்படுகின்றது. அறிவியல்- தர்க்கவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட முடியாத புராண இதிகாசங்களை நம்புவதால், கடவுளிடம் மன்னிப்புக் கோரலாம் என்ற துணிவில் (பரிகாரம் தேடலாம் என்ற மனநிலை உந்துதலால்) மனிதன் குற்றங்களையும் தவறுகளையும் புரிவதற்குத் தூண்டப்படுகின்றான். இவை பல்வேறு சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றன என்பதான உண்மைகளை தனது பட்டறிவு மூலம் கண்டறிந்து புரட்சிகரமான கருத்துக்களை, சமூதாய மறுமலர்ச்சிக்குரிய கருத்துக்களை தந்தை பெரியார் பரப்பினார்.

 

மானிடத்தின் சம பாதியானவர்கள் பெண்கள். சமூகத்தில் பெண்கள் பற்றிய பார்வையில் மனநிலை மாற்றம் ஏற்படவேண்டும். ஆணும் பெண்ணும் சமமென்ற நிலை ஏற்படவேண்டும். 'கற்பு' என்ற கற்பிதம் மூலம் பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சிந்தனையை கடுமையாக எதிர்த்துப் போராடினார். பெண்களின் உணர்வு, அறிவு, உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற கொள்கையோடு ஆணாதிக்கத்தைத் தோலுரிப்பதற்கும் பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அயராது உழைத்தார்.

 

'மனைவி' என்பவள் மனைக்கு உரியவள் என்ற கற்பிதத்தோடு வீட்டு வேலைகள் செய்வதற்கும், கணவனின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பிள்ளைகள் பெறும் இயந்திரமாகவும் வீட்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருந்த அடக்குமுறையை கண்டு கொதித்து, பெண்களின் உரிமைக்காக கருத்துப் போர் நடத்தி சாதித்தவர் தான் பெரியார் அவர்கள். (மனைவியென்ற சொல்லைத் தவிர்த்து 'துணைவி' என்ற சொல்லைப் பயன்படுத்துவதே கருத்து ரீதியாக பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்க)

 

இவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்துச் சமூகச் சீர்கேடுகளுக்கும் பார்ப்பனியமும் கடவுள் நம்பிக்கையுமே அடிப்படை என்பதை பெரியார் அறிவுபூர்வமாக உணர்ந்து கொண்டார். அத்தோடு கடவுள் நம்பிக்கை மூலம் போதிக்கப்பட்ட மூடநம்பிக்கையே அடித்தளம் என்ற உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கொண்ட அவர், தமிழர்கள் மத்தியில் அறிவுப்புரட்சியை ஏற்படுத்த உறுதிகொண்டார்.

 

மக்கள் மனங்களில் விழிப்புணர்வை விதைக்க வேண்டுமாயின் அதற்குத் தடையாக எல்லா மட்டங்களிலும் ஆழமாக ஊடுருவியுள்ள கடவுள், மதம் என்ற சூழ்ச்சிகளை தோலுரிக்க வேண்டும் என்றும் திடங்கொண்டார். மதம் அறிவைத் தடைப்படுத்தக்கூடாது, உரிமைகளைப் பறிக்கக்கூடாது. மதத்தின், கடவுளின் பெயரால் ஒருவரை ஒருவர் ஏமாற்றுகின்ற இழிவு இல்லாதொழிய வேண்டும். எல்லா மக்களும் ஒன்றென்ற உண்மை உணரப்பட்டு, ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமுதாயம் உருவாகவேண்டும். இவைபோன்ற பகுத்தறிவுக் கருத்துக்களை மக்கள் மத்தியில் வளர்ப்பதற்கு, தன்னை வருத்தி தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை உறுதியோடு போராடினார்.

 

வரித்துக் கொண்ட கொள்கைக்கமைய களச் செயல்களை வீச்சாக்கும் பொருட்டு வெளிநாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். அந்நாடுகளிலுள்ள அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த இயக்கத் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். அந்தந்த நாடுகளிலுள்ள அரசியல்-சமூக இயக்கங்கள்-அமைப்புக்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதையும், அவை தமது அரசியல்-சமூக-பொருளாதார நிலைகளில் எவ்வாறு உயர்ந்தன என்பதையும், அவை மக்களின் உரிமைகளை எவ்வாறு வெற்றி கொண்டன என்பதையெல்லாம் நேரடியாகப் பட்டறிந்து கொண்டார். ஏற்கனவே பெரியாரிடம் குடிகொண்டிருந்த இலட்சிய வேட்கையும் வெளிநாடுகளில் பெற்ற பட்டறிவும் அவரை புயல் வேகத்தோடு மக்களுக்காக உழைக்க வைத்தது.

 

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்ற அமைப்புக்களை நிறுவி அவற்றினூடாக பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை இணைத்து பகுத்தறிவு - விழிப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொண்டார்.

 

தமிழகத்தின் இன்றைய அரசியல் கட்சிகளின் தாய்க்கட்சியாக அன்று பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகமே விளங்குகின்றது. தமிழக அரசியலில் பெரியார் ஒரு மாபெரும் சக்தியாகத்தான் இருந்தார். இன்று பெரியார் உயிரோடு இல்லாத போதிலும் கூட பெரியாரின் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் நடத்த முடியாது, தேர்தல் களத்தில் இறங்க முடியாது என்ற உண்மை ஒருபுறமிருக்க, பெரியாரின் கொள்கைகளை மூட்டைகட்டி ஒதுக்கிவிட்டு இன்றைய தமிழக அரசியல் கட்சிகள் சில வாக்குகளைச் சேகரிப்பதற்கு மட்டுமே பெரியார் பெயரை உச்சரிப்பது உண்மையில் வேதனைக்குரியதாகும்.

 

தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு தடைகளையும் தாண்டி குடியரசு, விடுதலை, பகுத்தறிவு, புரட்சி, திராவிடன் ஆகிய இதழ்களை வெளியிட்டு, அவற்றின் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் சுதந்திர தன்மான உணர்வையும் வளர்ப்பதற்கு அஞ்சாது சேவையாற்றினார்.

 

முற்போக்குடைய சமதர்மக் கருத்துக்களை (குடியரசு, விடுதலை) இதழ்களில் பதிவுசெய்தவர் என்ற காரணங்களுக்காகவும் பெரியார் அவர்கள் பலதடவைகள் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட சம்பவங்களும் நிறையவே உண்டு. ஆனபோதும் சற்றேனும் சலிப்படையாது தாங்கி நின்ற கொள்கைக்காக அல்லும் பகலும் ஓயாது செயற்பட்டார். துளியளவு கூட தன்னலமின்றி தமிழின விடிவிற்காக தன் வாழ்நாளின் இறுதிக்கணங்கள் வரை களத்தில் நின்று போராடிய தந்தையை நினைவு கொள்வதும் அவரது சிந்தனைகளை தமிழர்கள் மத்தியில் அறியச்செவ்வதும் காலத்தின் தேவையும் ஆகும்.

 

 

உசாத்துணை நூல்கள்

 

'தமிழர் தலைவர்': சாமி சிதம்பரனார், 'பெரியார் கணினி-1': முனைவர் மா.நன்னன், 'பெரியாரியல்': கி.வீரமணி ஆகிய நூல்கள் இக்கட்டுரைக்கு பெரிதும் பயன்பட்டன என்பதை நன்றியோடு பதிவுசெய்கின்றேன்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=5531b71d-7810-419f-a408-77ec14948292

 

இணைப்புக்கு நன்றி கிருபன்ஜி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.