Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"தைப் பொங்கல்" திருநாளும் தமிழர் பண்பாடும் - பொங்கல் நிகழ்வுகள் விளக்கங்களுடன்

Featured Replies

pongal-105.jpg

 

தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பெறுகின்றது. இத் திருநாளை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது.

இவ் விழா சங்க காலத்தில்;  வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும் (வெய்யிலையும்), காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்தகால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக உழவர்களால் கொண்டாடப்பெற்று வந்ததுள்ளது.

உழவர்கள் இயற்கையின் உதவியால் ஆடி/ஆவணி மாதங்களில் விதைத்து, பயிராக்கி அவை மிருகங்களினால் அழிந்து போகாது பேணிக் காத்து, பராமரித்து அறுவடைசெய்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் விழா என்றும் கூறலாம்.

மானிடர் வாழ்க்கையை வழிநடத்தும் சக்தியைக் கொண்டிருக்கும் சூரிய பகவான் ஒரு வருடத்தின் கால நிலையை வரையறுத்து மக்களுக்கு தேவையான மாதங்களில் மழை வீழ்ச்சியையும், பயிர்கள் வளர்வதற்கு தேவையான சாதகமான கால நிலையையும் ஏற்படுத்தி உலகில் மானிடர்கள் மட்டுமன்றி ஏனைய உயிரினங்களும் உயிர்வாழ்வதற்கு ஓர் உந்து சக்தியாக இருந்து வருகிறார்.

சூரிய பகவான் தனது சூரிய சக்தியை வெளிப்படுத்தாமல் இருந்தால் நாம் வாழும் உலகம் மட்டுமல்ல சூரிய மண்டலத்தை சூழ்ந்துள்ள சகல கிரகங்களும் ஐஸ் கட்டிகளாக உறைந்துவிடுமென விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக கூறுகின்றார்கள். எனவே, உலகில் வாழ்ந்து கெண்டிருக்கும் மானிடப் பிறவிகளான நாம் சூரிய பகவானை துதித்து வழிபடவேண்டிய நிலையில் இருக்கின்றோம். சூரிய பகவானின் அனுக்கிரகத்தினால் தான் உலகில் பயிர்கள் செழித்து வளர்ந்து மக்களுக்கு தேவையான உணவை பெற்றுக் கொடுக்கின்றன.

மனித நாகரிகம் நைல் நதிக்கரையில் தோன்றிய காலம் தொட்டு நதிகளும், நீர்த்தேக்கங்களும் மக்களின் உணவு உற்பத்திக்கு இன்றியமையாத பணியை ஆற்றி வருகின்றன. நதிகளில் இருந்தும், நீர்த்தேக்கங்களில் இருந்தும் நீரைப் பயன்படுத்திய விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் விளைச்சல் நிலங்களை பொன் விளையும் பூமிகளாக மாற்றுகின்றார்கள்.

 

 

தற்பொழுது உழவர்கள் மட்டுமன்றி வேறு பல தொழில்புரியும் எல்லா தமிழ் மக்களும் (தம் மூதாதையினரான உழவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த) பண்டிகையாக கொண்டாடுகின்றார்கள். அதன் காரணமாக இப் பண்டிகை "உழவர் பண்டிகை" என்னும் பெயர் மழுங்கி ”தமிழர் பண்டிகையாக”பொங்கியெழுந்துள்ளது.

பொங்கல் விழாவானது முன்போல் வீடுகளில் மட்டுமன்றி; ஆலயங்கள், கல்விக் கூடங்கள், தொழில் நிலையங்களிலும், இந்துக்கள் அல்லாத தமிழ் மக்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பெற்று வருவதனால் தமிழர் பண்டிகையாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பெற்று சிறப்புப் பெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது. 

"தைப்பொங்கல் பண்டிகை"யை உழவர்கள் தாம் அறுவடைசெய்த “புதிரை” (நெற் கதிர்களை) அரிசியாக்கி அதில் பொங்கல் செய்து கொண்டாட, பல்வேறு தொழில் புரிவோர் உழவர்களிடம் புதிய அரிசியை வாங்கி பொங்கல் செய்து கொண்டாடுகின்றார்கள். இப் பண்டிகை இவ்வருடம் 14.01.2014 செவ்வாய்கிழமைஅமைவதாக சோதிடம் கணிக்கின்றது. 

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் அதிகமாக வாழும் கனடாவில் உள்ள மிகப்பெரிய ”மார்க்கம்” மாநகர சபை ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஜனவரி 13ம், 14ம், 15ம் திகதிகளை தமிழர்களின் பாரம்பரிய நாட்களாகவும், தைப்பொங்கல் பண்டிகையை  பாரம்பரிய விழாவாகவும் அங்கீகரித்துள்ளதுடன் தை மாதத்தினை தமிழர்களின் புனித மாதமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.  

இதன் மூலம் கனடாவில் ஒரு தமிழர் பண்டிகையையும் அதனோடு தொடர்புடைய மாதத்தினையும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் வெளிநாட்டு மாநகர சபை என்ற பெருமையை மேற்படி மார்க்கம் நகர சபை பெற்றுள்ளது. 

பொங்கல் என்பதற்கு ”பொங்கி வழிதல்”, ”பொங்குதல்” என்பது பொருள். அதாவது புதிய பானையில் பால் பொங்கி எழுந்து பொங்கி வழிந்து வருவதால், எதிர்காலம் முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கிச் சிறக்கும் என்பதும், களனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதும் இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

“உழவர் சேற்றில் கால் வைத்தால்தான் ஏனையோர் சோற்றில் கை வைக்க முடியும்” என்பது பலரும் அறிந்த பழமொழி. அதனால் போலும் உழவுத் தொழிலின் சிறப்பை கூற வந்த திருவள்ளுவர் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” எனவும், “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”என பாரதியாரும் கூறியுள்ளனர். 

மழை பொய்த்துவிட்டால் வேளாமையும் பொய்த்து விடும் என்பதனை கூறவந்த “திரைக்கவித் திலகம் மருதகாசி “ பூமியிலே மாரி (மழை) எல்லாம் சூரியனாலே, பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என்று கூறினார். சூரியனால் மழையும், பயிர் வளர்ச்சியும்; மழையினால் பயிர் வளர்ச்சியும், விளைச்சலும் உண்டாகின்றன என்பதனை உணர்ந்த எம் மூதாதயினர் மழைக்கு மூலகாரணியாக விளங்கும் சூரியனை அறுவடைக் காலத்தில் வணங்கி தாம் பெற்ற நெல்மணியில் பொங்கி விருந்து படைத்து நன்றிக் கடன் செலுத்துவது மரபாகி வந்துள்ளது.

இலங்கையில் ஒருவருடத்தில் மூன்று போகம் நெல் சாகுபடிசெய்யும் வளம் சில பகுதிகளில் காணப்படுகின்றன. அங்கே நீர்ப்பசன வசதிகளும் ஆறுகளும் அவற்றிற்கு சாதகமாக அமைந்துள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இருபோகம் விவசாயம் செய்யும் வசதிகள் இருந்துள்ளன, அதற்கு அங்கு காணப்பெறும் பெருங் குளங்களே காரணமாகும்.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கு ஆறுகளோ, பெரிய குளங்களோ இல்லாத காரணத்தால் வானம்பார்த்த பூமியாக மழைநீரை நம்பி ஒரு போகமே வேளாண்மை செய்யப் பெறுகின்றது. மழைவீழ்ச்சி கிடைக்கும் வருட இறுதிக் காலாண்டுப் பகுதியிலே இம்மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. மழை நீரை சிறிய குளங்கள், குட்டை, துரவுகளில் சேமித்து வைத்து மழை குறைந்த காலத்தில் நீர்பாச்சுகின்றார்கள். 

புரட்டாதி மாதம் முடிவடைந்த பின்னர் மழைவீழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்தில் யாழ் விவசாயிகள் தங்கள் நிலங்களை பண்படுத்தி, உழுது, நெல் விதைப்பார்கள். அதன் பின் பருவத்தில் களையெடுத்து, பசளையிட்டு கண்ணும் கருத்துமாக பாராமரித்து வருவார்கள். இக் காலப்பகுதியில் பயிரிடம்பெறும் நெல் மார்கழி/தைமாதத்தில் விளைந்து அறுவடைக்கு தயாராகிவிடுகின்றது.  

உழவர்கள் மார்கழி மாதத்தில் (தைப்பொங்கலுக்கு முன்) ஒரு நல்ல நாள் பார்த்து “புதிர் எடுத்தல்” நிகழ்வை நடத்துவார்கள். குடும்பத்தலைவர் குறிப்பிட்ட ஒரு நல்ல நாளில் காலையில் குளித்து கடவுளை வணங்கி வயலுக்குச் சென்று; வயல் வரம்பில் முதற்கடவுளான பிள்ளையாரை வைத்து பூ, பழம், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை படைத்து தேங்காய் உடைத்து விநாயகரையும், குலதெய்வத்தையும் வணங்கி, அதன் பின்னர் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவை வெட்டி வீட்டுக்குக் கொண்டு செல்வார். இதேநேரம் குடும்பத்தலைவி தோய்ந்து, வீடு பெருக்கி, கழுவி, மெழுகி புதிர் வாங்குவதற்கு தயாராக இருப்பார்.

தலைவன் கொண்டு வருகின்ற நெற்கதிர்களை மனையாள் வாங்கி சாமியறைக்கு கொண்டு செல்லும் வழக்கம் உண்டு. அதன்பின்னர் கடவுளை வணங்கி புதிய நெற்கதிர்களை சாமியறை மற்றும் சமையல் அறைகளில் கட்டித் தொங்கவிடுவார்கள். 

மிகுதியாக உள்ள நெற்கதிர்களை அரிசியாக்கி தைப் பொங்கலுக்காக வைத்திருப்பார்கள். கடின உழைபின் மூலம் கிடைக்கப்பெற்ற நெற்கதிர்களை நல்ல நாளில் “புதிர்” எடுப்பதன் மூலம் வருடம் முழுவதும் அவர்களுக்கு சாப்பாட்டிற்கு குறைவிருக்காது என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும்.

 

பொங்கல் நிகழ்வுகள்:

 

யாழ்ப்பாணத்து மக்கள் தைப்பொங்கலுக்கு உரிய ஆயத்தங்களை முதல் நாளே தொடங்கிவிடுவதோடு முதல் நாள் நடைபெறும் சந்தை முக்கியமான ஒரு சந்தையாக கருதப்படும். இதைப் "பொங்கல் சந்தை" என சிறப்பாக அழைப்பார்கள். பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் தங்களிடம் அதிகமாக இருந்தால். அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்றுவிட்டு தம்மிடம் இல்லாத தேவையான பொங்கல் பொருட்களை வாங்கி வருவார்கள். 

புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்பூரம், கரும்பு, இஞ்சி இலை, மஞ்சள் இலை போன்ற பொருட்கள் யாழ் மக்களுடைய பொங்கலில் முக்கிய இடத்தைப்பிடிக்கிறன. இப்பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே வாங்கி பொங்கலை ஆவலோடு வரவேற்பார்கள்.

தைப்பொங்கல் தினத்தன்று ஒவ்வொரு குடிமகனும் தம்வீட்டுப் பொங்கல் படையல் சூரியன் உதிக்கும் போதே முதல் விருந்தாக அமைய வேண்டும் என்ற ஆதங்கத்தில் அதிகாலையே விழித்தெழுந்து பொங்கலுக்கான ஆயத்தங்களைச் செய்வார்கள்.  எல்லோரும் அதிகாலையில் தோய்ந்து (முழுகி), வீடு பெருக்கி, கழுவி, முற்றம் கூட்டி, வாசலில் சாணம் கொண்டு மெழுகி அதில் உலக்கை வைத்து அரிசி மா, மஞ்சள் மாவினால் அல்லது செங்கட்டி மண்ணால் கோலம் போடுவார்கள். முற்றம்  சீமந்தினால் ஆனதாயின் அதனை சுத்தம் செய்து கழுவி கோலம் போடுவார்கள். அத்துடன் வீட்டு வாசலில் (கதவு நிலையில்) மாவிலை கட்டி சூரிய பகவானை வரவேற்க தயாராக இருப்பார்கள்.

புதுமனை, புதுமணமக்கள் இருப்பவர்கள் பொங்கல் விழாவை ”தலைப் பொங்கல்” என வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு வெள்ளையடித்து, வீட்டை அலங்கரித்து, தாமும் புத்தாடை அணிந்து சூரிய பகவானின் ஆசியைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். துக்கமான நிகழ்வுகள் நிகழ்வுற்ற குடும்பத்தினர் பொங்கல் விழாவை ஒரு வருடத்திற்கு தவிர்த்துக் கொள்வார்கள்.

யாழ்ப்பாணதில் அமைந்துள்ள வீடுகளில் பெரும்பான்மையானவை வடக்கு வாசல் அல்லது கிழக்கு வாசல் வீடுகளாக  இருப்பதனால் வீட்டு முற்றத்தில் காலையில் சூரிய ஒளி விழக்கூடியதாக அமைந்திருப்பதனால் சூரிய ஒளி பற்றி சிந்திக்க தேவை ஏற்படுவதில்லை. ஆனால் வீடு மேற்கு அல்லது தெற்கு வாயிலாக அமைந்திருக்குமாயின் சூரிய ஒளி படும் படியான இடமாக தேர்ந்தெடுத்தல் அவசியமாகின்றது.  (வெளிநாடுகளில் வசிப்பவர்கள் காலநிலை, சுவாத்தியம், சட்டங்களுக்கு ஏற்ப பொங்க வேண்டி இருப்பதனால் வசதிகளை கருத்திற் கொண்டு வீட்டு குசினியை சுத்தம் செய்து பொங்கல் பொங்கி சூரியஒளி படும் இடத்தில் படைத்து வழிபடுகின்றார்கள்)

நாற்சதுரமாக நாற்புறமும் வாசல் வைத்து கோலம் போட்டு குறிக்கப்பட்ட இடத்தை புனித இடமாக மதிப்பார்கள். கோலம் போடப்பெற்ற இடத்தினை நான்கு கம்புகள் நட்டு அதில் நூல கட்டி  தோரணம், மாவிலை தொங்க விடுவார்கள். கோலமிட்டு புனிதமாக்கிய இடத்தின் நடுவில் புதிதாக மண்ணினால் பிடித்து வைத்த மூன்று அடுப்பு கட்டிகளையும் வைத்து பொங்கல் பானை வைப்பதற்கு அடுப்பை தயார்படுத்துவார்கள். சூரிய பகவானுக்கு பொங்கல் பொங்கு முன் வீட்டின் சுவாமி அறையில் தீபம் ஏற்றி வணங்கியபின் சூரிய பொங்கலை ஆரம்பிப்பார்கள்.

குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தோத்திரங்கள் பாடி நிற்க சாணத்தினால் பிள்ளையார் பிடித்து வைத்து (பிள்ளையார் சிலையும் வைக்கலாம்),நிறைகுடம் வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து வைத்து தூபம், தீபம் காட்டி  விநாயகரை வழிபெற்றபின், அடுப்பில் நெருப்பு மூட்டி, புதுப்பானையின் கழுத்தில் மாவிலை, இஞ்சி இலை, மஞ்சள் இலைகளைக் கட்டி(காப்புக் கட்டி), விபூதிக் குறிகள் வைத்து, திலகமிட்டு புனிதமாக்கி அதனுள் நீரும் பசுப்பாலும் விட்டு அடுப்பில் பொங்க வைப்பார்கள். 

பால் பொங்கி எழுந்து வழியும் வரை நெருப்பை கூட எரிய விடுவார்கள். பால் பொங்கி வழியும்போது கடவுளை வணங்கி ”பொங்கலோ பொங்கல்” என ஆரவாரித்து புது அரிசியை வீட்டுத் தலைவர் அல்லது ஆண்மகன் இரு கைகளினாலும் அரிசியை கிள்ளி மூன்று முறை (வலஞ்சுளியாக) சுற்றி பானையில் இட்டு மகிழ்ச்சியுடன் பொங்கலிடுவார்கள். 

அப்போது சக்கரைப் பொங்கலாயின் பயிற்றம் பருப்பு, சக்கரை, கஜு, ஏலக்காய் முதலியவற்றை போட்டு பொங்கல் செய்வார்கள். பொதுவாக தைப் பொங்கலின்போது சக்கரைப் பொங்கலே பொங்குவது வழக்கம் ஆனால் சிலர் வெண்புக்கையும் சாம்பாரும் (கறியும்) வைப்பார்கள். சிறுவர்கள் பட்டாஸ் கொழுத்தி, மகிழ்ச்சியோடு ஆடிப்பாடுவர்.

பால் பொங்கி அரிசி போட்டபின் பானையில் இருக்கும் மிதமிஞ்சிய நீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து அதனை பூஜைகள் முடியும் வரை வைத்திருந்து அதனை மாவிலை கொண்டு வீட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் படும் படியாக தெளிப்பார்கள். அந் நீரில் சூரியனின் சக்தி இருப்பதால் சூரிய பகவானின் சக்தி எல்லா இடங்களிலும் பட்டு பிரகாசிக்கும் (தோஷங்கள் நீங்கும்) என்பது அவர்களின் நம்பிக்கை.

பொங்கிய பொங்கலை ஒரு தலை வாழையிலையில் படைத்து அதன் மேல் பகுதியை குழிவாக்கி அதன் மேல் வாழைப்பழத்தை உரித்து வைத்து அதன் மீது தயிர் விட்டு, சக்கரையும் வைப்பார்கள்.

பலகாரங்களை (வடை,மோதகம், முறுக்கு) என்பனவற்றை இன்னொரு தலைவாழையிலையிலும், சுத்தம் செய்யப் பெற்ற பழங்களை வேறு ஒரு தலை வாழையிலையிலும் படைப்பார்கள். 

படையல் படைக்கும் போது (சூரியனுக்கு வலப் பக்கத்தில் இலையின் அகன்ற பகுதி இருக்குபடி படைத்தல் வேண்டும்.  வாழை இலைகளில் படைத்த பின், தேங்காய் உடைத்து வைத்து சூரிய பகவானுக்கு தூப, தீபம் ஆராத்தி எடுத்து அனைவரும் பக்தியோடு பஜனை பாடி சூரியனை வணங்குவார்கள். சூரியனுக்கு படைத்த (படையல்) பொங்கலை அனைவரும் சேர்ந்து உண்டு மகிழ்ந்து பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள். 

உறவினர்கள், நண்பர்கள் துக்க நிகழ்வுகள் (ஆசூசம்) அல்லது வேறு சமூகத்தவர் என்னும் காரணமாக பொங்காது இருந்தால் அவர்களுக்கும் தமது பொங்கலை பரிமாறி அவர்களையும் மகிழ்விப்பார்கள். 

பொங்கல் பண்டிகை நாளில் ஊரில் பல பாகங்களிலும் தமிழன் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் முத்தமிழ் (இயல், இசை, நாடக) கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். அவற்றிலும் மக்கள் பங்கேற்று மகிழ்ச்சி பொங்குவர். 

 

”பட்டிப் பொங்கல்/மாட்டுப் பொங்கல்”

 

பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் “பட்டிப் பொங்கல்/மாட்டுப் பொங்கல்” தினமாக உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்துக்கு நன்றி கூறும் கொண்டாடும் வழக்கமும் அவர்களிடம் உண்டு. 

உழவனின் நண்பனாக இருந்து உழைத்த (மாடாக உழைத்த) மாடுகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக பட்டிப் பொங்கல் கொண்டாடும் மரபு காணப்படுகிறது. 

அன்றைய தினம் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதி குறிகள் வைத்து, சந்தணம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை அணிவித்து, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து; 

“பொங்கலோ பொங்கல், பட்டிப் பொங்கல் மனசு பெருக, பால் பானை பொங்க, நோயும் பிணியும் தெருவோடு போக” என்று மாட்டுத்தொழுவத்தில் பொங்கல் பொங்கி மாட்டை கடவுளாக மதித்து அதற்கு படையல் படைத்து உண்ணக் கொடுத்து, தாமும் உண்டு மகிழ்வர்.

மாடு உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பார்கள். பட்டிப்பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களிலும் மக்கள் கலந்து கொண்டு மகிழ்வார்கள். 

 

அரிவி வெட்டு:

 

வீட்டு சாமியறையிலும், சமையலறையிலும் கட்டப்பட்ட “புதிர்” நெல் அடுத்த வருடம் புதிர் எடுக்கும் வரை அப்படியே இருக்கும். பொதுவாக பொங்கல் தினம் முடிவடைந்த பின்னர் வசதியான ஒரு நாளில் “அருவி வெட்டு” இடம்பெறும். அல்லது பொங்கலுக்கு முன்பாகவே அரிவி வெட்டு நிகழ்ந்திருக்கும்.

பொதுவாக  விதைக்கப்பெற்ற நெல்லின் வர்க்கத்தைப் பொறுத்தே அதன் விளைவு காலம் இருக்கும். பொதுவாக சில நெல் 3, 4, 5-6 மாதங்களில் பூரண விளைவை அடைந்து விடும். ”மொட்டைக் கறுப்பன்” நெல்லின் விளைவு காலம் 5-6 மாதங்களாகும். 

இதன் விளைவும், ருசியும் பிரமாதம். பொதுவாக மொட்டைக் கறுப்பன் நெல் ஆடி/ஆவணி மாதங்களில் விதைத்து மார்கழி/ தை மாதங்களில் அறுவடை செய்வார்கள். காலத்தையும், தேவையான தண்ணீரின் அழவைப் பொறுத்து பள்ளக் காணிகளில் மாத்திரம் பயிர் செய்யப் பெறுகின்றது.

பாடுபட்டு உழைத்த உழைப்பின் மூலம் கிடைத்த நெற்கதிர்களை அறுத்து காயவைத்து “சூடடிப்பார்கள்”. சூடடிப்பிற்கு முற்காலத்தில் மாடுகளே அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும் தற்காலத்தில் ட்ரக்ரர்களின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது. எந்த முறை மூலம் என்றாலும் சூடடித்த நெற்தானியங்களை வீட்டுக்கு கொண்டு சென்று சாமியறைகளில் வைக்கும் வழக்கம் இன்றும் அங்கு காணப்படுகிறது. 

நெல் தானியம் என்பது செல்வங்களுள் முக்கியமான ஒன்றாக அவர்களால் கருதப்படுகிறது. எனவே இறைவன் இருக்கும் இடத்தில்தான் செல்வம் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய கருத்தாகும். அதனால் சாமியறையில் “கோர்க்காலி” என்னும் உயர்ந்த மேடையில், தங்கள் உழைப்பின் மூலம் கிடைக்கப்பெற்ற செல்வங்கள் அனைத்தையும் மூட்டைகளாக கட்டி வைக்கிறார்கள்.

சூடு அடிக்கப்பெற்றபின் எஞ்சியிருக்கும் வைக்கோலைக் காயவைத்து, கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடான நேரம் கொடுப்பதற்காக குவியலாக(பட்டடையாக) குவித்து வைப்பார்கள். பதிர்களை (சப்பட்டை) எடுத்து அவற்றை இளம் பசுக்கன்றின் சாணத்துடன் சேர்த்துக் குழைத்து அதனைக் காயவைத்துவிபூதி செய்வதற்காக பாவிக்கின்றார்கள்.

அறுவடை மூலம் கிடைக்கும் நெல்லில், தமக்கு உதவி புரிந்த தொழிலாளர்களுக்கும் பகிந்து கொடுத்தபின், தமக்குத் தேவையானவற்றை சேமித்து வைக்கிறார்கள். மிகுதியானவற்றை விற்று விடுவார்கள். அவர்களின் உழைப்பின் மூலம் கிடைக்கின்ற செல்வம் தை மாதத்தில் கிடைக்கப் பெறுவதனால் போலும் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி தோற்றம் பெற்றிருக்கிறது. தை மாதத்தில் அவர்களிடம் பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். 

இதன் காரணமாக திருமணங்கள் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை அதிகமாக தை மாதத்தில் தமிழர்கள் நடாத்துவார்கள். இந்தப் பழமொழியின் தாக்கம் யாழ்ப்பாணத்து மக்களிடையே இன்றும் காணலாம்.

ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதலாந் திகதியை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். 

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை 'மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனி பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை- தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.

இத்தகைய புண்ணிய தினமான சங்கராந்தியன்று சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்திர அயனம் என்று பெயர். இத்தினத்தில் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.

இன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில் அடைய முடியாதவையே கிடையாது என வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. "நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே"என்று வேதம் கூறுகிறது.

மேலும், சூரியன் ஆன்மாவைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை "ஓம் ய ஏஷோந் தராதித்யே ஹிரண்மய புருஷ" எனப் புகழ்கிறது.

யாழ்ப்பாணத் தமிழர்கள் தைப் பொங்கல் விழாவை இரு தினங்கள் கொண்டாட; இந்தியாவில் நான்கு தினங்கள் பெரும் கொண்டாட்டமாக கொண்டாடுகின்றார்கள். போகிப் பண்டிகை, சூரியப் பொங்கல், பட்டிப் பொங்கல், காணும் பண்டிகை என அடுத்து வரும் நான்கு நாட்களிற்கு கொண்டாடப் பெறுகின்றது.

 

போகிப் பண்டிகை: 

 

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (பொங்கல் திருநாளின் முதல் நாள்) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ”பழையன கழித்து, புதியன புகவிடும்” நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

போகியன்று வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி” என்றனர். 

அந்த “போக்கி” என்ற சொல் நாளடைவில் மருவி “போகி” என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

 

சூரியப் பொங்கல்:

 

நம்மை வாளவைக்கும் சூரியபகவானை வணங்கி பொங்கல் செய்து நன்றி செலுத்தும் நன்நாள்

 

பட்டிப் பொங்கல்:

 

உழவனுக்கு உற்ற தோழனாக இருந்து உழவுத் தொழிலுக்கு உதவிகள் செய்த மாடுகளுக்கு பொங்கல் படைத்து நன்றி செலுத்தும் நன்நாள்.

 

காணும் பண்டிகை:

 

தனது பெற்றோரையும்; அறிவு புகட்டிய குரு முதலான பெரியோர்களையும், இறைவனையும் கண்டு வணங்கி நன்றி கூறும் நன்நாளாக கொண்டாடுகின்றார்கள். 

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.