Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டு படங்கள் - இருவேறு விமர்சனப் பார்வைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு படங்கள் - இருவேறு விமர்சனப் பார்வைகள்

கிருஷ்ணன்

2014ஆம் ஆண்டின் முதல் வெற்றிப் படங்களான விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் தர அளவுகோல்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத சாதாரண வெகுஜன திரைப்படங்களாகவே வந்துபோயின. வெகுஜன ரசனைக்கும் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்களை குதூகலிக்க வைப்பதற்கும் ஏற்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததே இந்தப் படங்களின் வெற்றிக்குப் போதுமானதாக அமைந்துவிட்டது.

இவ்விரு படங்களின் பேரலை சற்று ஓய்ந்தபோது சனவரி 24 அன்று இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று 80களில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய ஸ்ரீப்ரியா இயக்கிய முதல் படம் மாலினி 22 பாளையங்கோட்டை, மற்றொன்று ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய இரண்டாவது படமான கோலி சோடா. இரண்டு படங்களிலும் பணியாற்றியவர்கள் அனைவருமே நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிராதவர்கள். சிறிய அளவில் குறைவான எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகின. இரண்டு படங்களுமே, வெற்றி வாய்ப்பு முழுக்க முழுக்க தரத்தைப் பொறுத்து அமைந்திருக்கும் 'சின்ன படம்' என்று வகைப்படுத்தப்படக் கூடியவை.

கோலி சோடா ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. விமர்சகர்களும் படத்தைக் கொண்டாடுகிறார்கள். இதனால் படத்தைத் திரையிடும் அரங்கங்களின் எண்ணிக்கை கூடியிருப்பதோடு படம் வெற்றி வாய்ப்பை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

வசூல் வெற்றியும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற மலையாளப் படமான 22 ஃபீமேல் கோட்டையம் என்ற படத்தின் தமிழ் பதிப்பான மாலினி, ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது.

இவ்விரு படங்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பில் இமாலய வேறுபாடு இருக்கிறது. அப்படி என்றால் தரத்திலும் உள்ளடக்கத்திலும் அதேபோல் வேறுபாடு இருக்க வேண்டும் அல்லவா? கண்டிப்பாக இருக்கவே செய்கிறது. ஆனால் சில மைய நீரோட்ட திரைப்பட விமர்சகர்கள் செய்ததைப் போல் மாலினி முற்றிலும் புறக்கணிக்கத்தக்க படமும் அல்ல. கோலி சோடா தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய குறைகளற்ற படமும் அல்ல.

 

கவனக் குறைவால் விளைந்த புறக்கணிப்பு

ஒரு திரைப்படம் என்ற அளவில் மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் மீது எண்ணற்ற குறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. திரைக்கதை ஓட்டைகள் புட்டுப் புட்டு வைக்கப்பட்டன. அவை எல்லாவற்றிலும் உண்மை இருந்ததை மறுப்பதற்கில்லை. இந்தப் படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததும், காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனுக்கு நிறைவைத் தரும் அம்சங்கள் இந்தப் படத்தில் முழுமை பெறாததால்தான் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் இந்தப் படம் சில முக்கியமான விஷயங்களை கவனப்படுத்தியிருக்கிறது. அவை மைய நீரோட்டத்தில் எழுதும் விமர்சகர்களால் கவனப்படுத்தப்படவில்லை.

பாலியல் பலாத்காரத்தால் பாதிப்புக்குள்ளான பெண்ணின் பழிவாங்கும் கதை தமிழ் திரைப்படங்களில் பார்த்துச் சலித்ததுதான். ஆனால் 2012இல் இந்திய தலைநகர் தில்லியில் மருத்துவ மாணவி ஒருவரின் மரணத்துக்குக் காரணமான பாலியல் வல்லுறவுச் சம்பவமும் அதைத் தொடர்ந்து அரங்கேறிவரும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் கொடூரமும் பாலியல் வன்முறை குறித்த விவாதங்களை நாடெங்கிலும் எழுப்பியிருக்கின்றன. பாலியல் வக்கிரத்தின் முகத்துவாரத்தை கண்டடைந்து அழிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சியும் கூடியிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் குறித்து குறிப்பாக மரண தண்டனை கொடுக்கலாமா கூடாதா என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்திருக்கின்றன.

இவற்றுக்கிடையே, பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம்சாட்டும் கருத்துகளும் கனமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெண்களின் உடை உடுத்தும் விதம், ஆண்களுடன் பழகுவது, பொது இடங்களில் தனியாக வலம்வருவது ஆகியவைதான் பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்குக் காரணமாக அமைவதாகச் சில கலாச்சார காவலர்கள் கூறினார்கள்.

தில்லி பாலியல் வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சில வாரங்களில் மும்பையில் பணி நிமித்தமாக வெளியே சென்ற ஒரு பெண் நிருபரை ஐந்து காமுகர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போதும் அந்தப் பெண் ஏன் அந்த இடத்துக்கு தனியாகச் செல்ல வேண்டும் என்று கலாச்சார காவலர்கள் மட்டுமல்லாமல் முற்போக்குவாதிகளாக காட்டிக்கொள்ளும் சிலரும் கேட்டார்கள்.

காரைக்காலில் ஒரு பெண் 15 பேரால் பாலியல் வல்லுறவுக்காளானபோது, குற்றவாளிகள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களைக் காப்பாற்றி அதன் மூலம் அரசியல் லாபமடைய நினைக்கும் வெட்கமற்ற செயலை ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் செய்தார்கள். இதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை மீது அவதூறு பரப்பும் இழிசெயலையும் அந்த அரசியல் சுய நலமிகள் செய்யத் தயங்கவில்லை.

இன்னும் எத்தனையோ பாலியல் வல்லுறவு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. அதைவிட அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பல்வேறு காரணங்களால் மூடிமறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கலாச்சாரவாதிகள், போலி பெண்ணியவாதிகள், போலி முற்போக்காளர்கள் ஆகியோரின் விஷமத்தனமாக கருத்துகளும் பரவிவருகின்றன.

இத்தகையதொரு சூழலின் பின்னணியில்தான் திட்டமிட்டு, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, அதற்காக பழிவாங்கும் மாலினியின் கதை முக்கியத்துவம் பெறுகிறது. பெண்ணை போகப்பொருளாக மட்டும் பார்த்து அவளை எதைச் செய்தாவது அடைந்துவிடத் துடிக்கும் வக்கிர மனம் பிடித்த ஆண்களாலும் அவர்களுக்கு ஏவல் செய்து பெண்களை காதல் நாடகத்தில் வீழ்த்தி அவர்களுக்குப் படைக்க நினைக்கும் ஆண்களாலும் பெண்களுக்கு எப்போதும் எந்த நேரத்திலும் இருக்கும் ஆபத்தை இந்தப் படம் வலுவாகவே பதிவு செய்திருக்கிறது.

பெண்களை வல்லுறவுக்கு ஆட்படுத்துவதில் தனி சுகம் காணும் படத்தின் வில்லன், ஒரு நொண்டிப் பெண்ணைப் பார்த்து அவள் மீது காமம் கொள்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் அதைவிட அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. இதுபோன்ற காட்சிகளின் மூலம் பெண்ணின் மீதான சில ஆண்களின் பாலியல் வேட்கை, அவர்களின் உடை, பழக்க வழக்கங்கள், நடத்தை உள்ளிட்ட புறக்காரணிகளுக்கு அப்பாற்பட்டவை என்பதையும் இந்தப் படம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது.

பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை அல்லது பால் நீக்கம் செய்வதுதான் சரியான தண்டனை என்று பலர் வாதாடி வருகிறார்கள். இதுபோல் வாதாடுபவர்களில் சாதாரண பெண்களும் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சினையை தொலைநோக்குப் பார்வையுடன் அணுக முனையும் பெண்ணியவாதிகளும், அறிவுஜீவிகளும் பெண்ணைப் பற்றிய ஆணின் சிந்தனையில் மாற்றம் வந்தால் மட்டுமே பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியும். தண்டனைகளால் அவற்றை சாதித்துவிட முடியாது என்று வாதிடுகிறார்கள்.

இந்தப் படத்தில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை வல்லுறவுக்காளாக்கியவனை கொலை செய்கிறாள். காதல் என்ற பெயரில் ஏமாற்றியவனுக்கு பால் நீக்கம் செய்கிறாள். இந்த தண்டனைகள் சரியானவைதானா என்பது தனி விவாதத்துக்குரியவை. ஆனால் படம், இந்த தண்டனைகளை பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்வினையாகப் பதிவு செய்கிறது. அதன் மூலம் பாலியல் பலாத்காரத்துக்கான தண்டனை குறித்த விவாதத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

படத்தின் மீதான பெரும்பாலான விமர்சனங்களில் இவற்றில் ஒன்றுகூட சுட்டிக்காட்டப்படவில்லை. சில ஊடகங்கள் இந்தப் படத்தை விமரசனத்துக்கே தகுதியற்ற படம் என்று ஒதுக்கிவிட்டன.

 

அளவுக்கதிகமான பாராட்டுணர்வு

மறுபுறம் பல விமர்சகர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடும் கோலி சோடா திரைப்படம் பல சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. தரமான வணிக கேளிக்கைப் படம் என்ற அளவில் பாராட்டத்தக்கதாக இருப்பதோடு சில இடங்களிலேனும் வணிக கேளிக்கை படங்களில் காணக் கிடைக்காத விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக அழகு குறித்த போற்றுதல் உணர்வும் அழகை வியாபாரப் பண்டமாக்கும் வணிக சினிமாவின் ஆகிவந்த வழக்கமும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றன. பாண்டியராஜின் வசனங்கள் இவற்றுக்குத் துணை நிற்கின்றன.

நட்சத்திர அந்தஸ்து பெற்ற நாயகர்கள் செய்யும் அனைத்து விஷயங்களையும் சிறுவர்களை வைத்து நேர்த்தியாகச் செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். இதுவே படத்தின் மிகப் பெரிய பலம். வணிக வெற்றிக்கும் இதுவே முக்கியக் காரணம்.

ஆனால் இதுவே படத்தின் குறையாகவும் அமைந்துவிட்டது. நான்கு அனாதை விடலைச் சிறுவர்களின் வாழ்க்கைச் சித்தரிப்பு அவர்களுக்கான எதிர்ப்பு வரும்வரை யதார்த்தமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் விடலைக் காதலை அதன் இயல்புடன் கையாண்ட மிகச் சில படங்களில் ஒன்றாகவும் இந்தப் படம் அமைந்திருக்கிறது. ஆனால் ஏதுமற்ற நான்கு சிறுவர்கள் சர்வ வல்லமை பொருந்திய கந்துவட்டி சாம்ராஜ்ஜியத்தை ஆள்பவனை அடிபணியவைக்கும் விதம் நட்சத்திர நடிகர்களின் மசாலா படங்களுக்கிணையான தர்க்க மீறல்களைக் கொண்டிருக்கின்றன.

நட்சத்திர நடிகர்களின் படங்களில் இடம்பெறும் தர்க்க மீறல்கள் பெரியோரின் சிறுபிள்ளைத்தனம் என்றால், இந்தப் படத்தில் நடப்பவை சிறியோரின் பெரிய மனிதத்தனமாக அமைந்திருக்கின்றன. இதுவரை சிறுவர்கள்/விடலைகளின் கதைகளைக் கையாண்ட திரைப்படங்களில் இந்த பெரிய மனிதத்தனம் நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும். கோலிசோடா படம், அதைத் தீவிரமான தளத்தில் அணுகியிருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தைத் தோற்றுவிக்கலாம்.

உயிர்பிழைக்கவும் தாங்கள் இழந்ததைப் பெறவும்தான் படத்தின் நாயகர்கள் வன்முறையைக் கையிலெடுக்கிறார்கள் என்றாலும் படம் பார்க்கும்போது நாயகர்கள் வில்லன் கும்பலைச் சேர்ந்தவர்களைத் திருப்பி அடிக்கும்போது ரசிகர்கள் எழுப்பும் கைதட்டலும் காதைக் கிழிக்கும் விசிலொலியும் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன. நியாயமான பின்னணியுடன் நடப்பது போல் தோன்றும் படத்தின் வன்முறைக் காட்சிகள், இந்த கைதட்டலையும், விசிலொலியையும் மனதில் வைத்தே வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.

அழகு ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமல்ல என்று வசனமும் அதை நிரூபிப்பதற்கான ஒரு காதல் ஜோடியும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அழகின் முக்கியத்துவத்தை முற்றிலும் விட்டுக்கொடுக்க முடியாமல் அழகாகத் தோன்றும் மற்றொரு காதல் ஜோடியும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

அழகை ஆராதிப்பது, அழகை ஆராதிப்பது குறித்த குற்ற உணர்ச்சி ஆகிய இரண்டையும் தன் வணிக நோக்கங்களுக்குப் படம் பயன்படுத்திக் கொள்வதாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் மையக்கருவான அடையாளத் தேடல் அதைத் தேடுபவர்களின் வயதுக்குப் பொருத்தமாக இல்லை. இறுதிக் காட்சியில் நால்வரில் ஒருவன், வில்லனிடம் 'அடையாளம்' என்ற வார்த்தையையே நேரடியாக உச்சரிக்கிறான். விடலை வயது அடையாளத்தைத் தேடுவதற்கான வயதுதான். ஆனால் அடையாளம் என்றால் என்ன என்று தெரியாமல் அதைத் தேடும் வயது என்பதை இயக்குநரும் வசனகர்த்தாவும் மறந்தது ஏனோ?

இவற்றையெல்லாம் கணக்கில்கொண்டு கோலி சோடா சில குறைகளைக் கொண்ட நேர்த்தியான வணிகப் படம் என்ற விமர்சனம் பரவலாக வைக்கப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், மாறுபட்ட திரைப்படங்களை வழங்க விரும்புபவர் போல் தோன்றும் விஜய் மில்டனுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=5&contentid=3e69b112-e9c3-44cf-9e08-16004a655cc9

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.