Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டியத்திலிருந்து கோட்டை வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டியத்திலிருந்து கோட்டை வரை

பா. ஜீவசுந்தரி

jan_2014_7.jpg

அந்த நாள் முதல் இந்த நாள் வரை தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வேறுபாடுகளைப் பொதுவாகப் பார்க்கலாம். 1930களின் கதாநாயகிகள் பலரும் திரைப்படத்தில் நடிக்க வரும்பொழுதே திருமணம் ஆனவர்களாகவே இருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே திருமணம் ஆகாத நடிகைகள் நடிப்புத் தொழிலைத் தேர்வுசெய்து வந்தனர். அப்போது திருமணம் ஒரு பாதுகாப்புக் கவசம் என்ற நிலையிலும் வைத்துப் பார்க்கப்பட்டது ஒரு காரணம். அக்கால வழக்கப்படி குழந்தைப் பருவத்தில் மணம் செய்து வைக்கப்பட்டதும் இன்னொரு காரணம். வறுமையின் காரணமாக நாடகம், திரைப்படங்களைத் தேர்வு செய்தும் சிலர் வந்தனர். நடிகையானதால் கணவர்கள் பிரிந்து போனவர்களும், தங்கள் விருப்பமின்றி நடைபெற்ற திருமணங்களை விலக்கி வைத்துவிட்ட சில நடிகைகளும், அதன்பிறகு தாங்கள் விரும்பியவர்களைத் தேர்வுசெய்து மணந்துகொண்டு வெற்றிகரமாகத் தங்கள் மணவாழ்க்கை, நடிப்புத் தொழில் இரண்டையும் அழகாக பாலன்ஸ் செய்திருக்கிறார்கள்.

ஆனால், இப்போது கனவுக் கன்னிகளாக நடிகைகள் இருக்க வேண்டும் என்ற மனோபாவமே மேலோங்கியிருக்கிறது. நடிகைகளும் சராசரிப் பெண்கள்தான், அவர்களும் மற்றவர்களைப் போல குடும்பம், குழந்தைகள் என்று இருப்பதை ஏற்காத ஒரு மனநிலை ரசிகர்களுக்கு வந்துவிட்டதா அல்லது திருமணம் ஆகிவிட்ட நடிகைகளைக் கதாநாயகிகளாக ஏற்றுக்கொள்ளத் தயங்கும் ஒரு மனநிலையை நோக்கித் தள்ளப்பட்டு விட்டார்களா என்பது புரியவில்லை. இது ரசிகர்களின் பரிணாம வளர்ச்சியா திரையுலகி னரின் குறைபாடா என்பது கேள்விக்குறிதான். நடிகைகள், அதிலும் கதாநாயகிகள் ‘கனவுக்கன்னி’களாகவே காட்சி தர வேண்டுமென்பது சாபக்கேடா?

1924இல் சென்னை ராஜதானியைச் சேர்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம், வைக்கத்தில் பிறந்தவர் வைக்கம் நாராயணி ஜானகி. வசதி வாய்ப்புகள் உள்ள நாயர் குடும்பம் என்றாலும் குடும்பத்தின் முன்னோர்கள் சூதாட்டம் மற்றும் கேளிக்கைகளில் குடும்பத்தின் சொத்தினைத் தொலைத்ததால் உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலைக்குக் குடும்பத்தினர் தள்ளப்பட்டனர். நாராயணி அம்மா இளம் வயதிலேயே பிழைப்புக்காக மகள் ஜானகியுடன் ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிலை. கும்பகோணம் சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றிய பாபநாசம் ராஜகோபாலய்யரை நாராயணி அம்மா மணம் செய்துகொண்டதால் ஜானகி தன் தாயார் நாராயணியுடன் குடந்தைக்குச் சென்றார். அந்த நாளைய புகழ்பெற்ற பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான பாபநாசம் சிவனின் சகோதரர்தான் இந்த ராஜகோபாலய்யர்.

சகோதரர் பாபநாசம் சிவன் முயற்சியால் ராஜகோபாலய்யருக்கு சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. ‘மெட்ராஸ் மெயில்’ என்ற படத்துக்குப் பாடல் எழுதுவதற்காக 1936இல் மெட்ராஸுக்கு மெயில் ஏறினார் ராஜகோபாலய்யர். தொடர்ச்சியாகப் பாட்டெழுதும் வாய்ப்புகள் வந்து சேர்ந்ததால், தமிழாசிரியர் பணியை விட்டு விலகி குடும்பத்துடன் சென்னையைத் தஞ்சமடைந்தார். அப்போது ஜானகிக்கு வயது 12. சிறு வயதிலிருந்தே ஆடுவதிலும் பாடுவதிலும் அதீத நாட்டம் கொண்டு நாட்டியம் மற்றும் இசையினைக் கற்றுத் தேர்ந்திருந்த ஜானகி, இப்போது சினிமாவில் நடிப்பதிலும் தீராத மோகம் கொண்டார். அதற்கான வாய்ப்புகளும் கைக்கெட்டும் தொலைவிலேயே இருந்தன.

அழகே உருவான 16 வயது இள மங்கையாக, சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பினை எதிர் நோக்கியிருந்தார் ஜானகி. ஆனால், ஜானகியின் தாயார் நாரயணி அம்மாளுக்கு அதில் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ஆனாலும், மகளின் விருப்பத்துக்கு செவி சாய்ப்பதைத் தவிர அவருக்கு வேறுவழியில்லை. மகளின் விருப்பத்துக்காக அவரை அந்த நாளைய புகழ் பெற்ற இயக்குநர் கே. சுப்பிரமணியத் திடம் அழைத்துச் சென்றார் ராஜகோபாலய்யர்.

நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை நடத்தி வந்த புகழ் பெற்ற ‘இன்பசாகரன்’ நாடகத்தை கே. சுப்பிரமணியம் திரைப்படமாகத் தயாரித்து வந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு சில நடனப் பெண்கள் தேவைப்பட்டதால், ஜானகியை நடிக்க வைக்கத் தீர்மானித்து ஒப்பந்தம் செய்தார், இயக்குநர் கே. சுப்பிரமணியம். படமும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.

நண்பர்களின் கூட்டு முயற்சியில் 1937இல் உருவாகியிருந்த அவரின் மோஷன் பிக்சர்ஸ் கம்பைன்ஸ் ஸ்டுடியோ (பின்னாளில் அதுவே ஜெமினி ஸ்டுடியோ ஆனது) மூன்றே ஆண்டுகளில் நொடித்துப் போகும் நிலை ஏற்பட்டிருந்தது. நண்பர்களுக்குள் விளைந்த போட்டி பொறாமையில் ஸ்டுடியோவில் தீ விபத்து ஏற்பட்டு, ‘இன்பசாகரன்’ தீயில் கருகிப் போனான். ஜானகியின் முதல் பட அனுபவமே சோகத்தில் ஆழ்த்தும் நிகழ்வாகிப் போனது. அதன்பின் ஜானகியின் திரையுலக மறு பிரவேசத்துக்காக அவர் பெரும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தது.

அதன்பின் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் நடனமாடுவது மட்டுமே. தமிழில் கண்ணாம்பா நடித்த முதல் படம் ‘கிருஷ்ணன் தூது’, அதில் ஒரு நடனம்; அதே ஆண்டில் வெளியான ‘மும்மணிகள்’ படத்திலும் ஒரு நடனம்; ‘மன்மத விஜயம்’, ‘கச்ச தேவயானி’ போன்ற படங்களிலும் இப்படியான வாய்ப்புகள் மட்டுமே. இரண்டாண்டுகள் இப்படியே கழிந்தன.

முதல் பட வாய்ப்பளித்த கே. சுப்பிரமணியம், 1942இல் இயக்கி, நடித்த ‘அனந்த சயனம்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்க ஜானகிக்கு வாய்ப்பளித்தார். அதே ஆண்டில் ‘கங்காவதார்’ என்றொரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முக்கியமான கதாபாத்திரங்கள் கிடைக்காததால் தொடர்ந்து நடனமாடுவதே சரி என்ற முடிவுக்கு வந்தார் ஜானகி. இயக்குநர் கே. சுப்பிரமணியமும் அவரது மனைவியும் நடிகையுமான எஸ்.டி. சுப்புலட்சுமியும் இணைந்து ‘நடன கலாசேவா’ என்ற நாட்டியக் குழுவினை ஏற்படுத்தி நாட்டிய நாடகங்களை நடத்தி வந்தனர். ஜானகி இந்தக் குழுவில் இணைந்து நாட்டிய நாடகங்களில் நடித்து வந்தார். இந்தக் குழுவினர் இந்தியா முழுவதும் சென்று நிகழ்ச்சிகளை நடத்தினர். இடையிடையே கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் படங்களிலும் நடித்து வந்தார், ஜானகி. அப்படி 43இல் கிடைத்த ஒரு படம் ‘தேவகன்யா’. அதிலும் ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே.

1945இல் பிரிட்டிஷ் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று யுத்தப் பிரசாரப் படங்கள் தயாரிக்கப்பட்டன. கே. சுப்பிரமணியமும் ‘மான சம்ரட்சணம்’ என்ற ஒரு படத்தினைத் தயாரித்தார். பிரிட்டிஷாரைப் புகழ்ந்து படமெடுக்காமல் இந்திய மக்களின் குணாதிசயங்கள், மனிதாபிமானம் போன்றவற்றை மட்டுமே தன் படத்தில் அவர் வெளிப்படுத்தினார். தொடர்ச்சியாக ஜானகிக்கு தன்னுடைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினை அளித்து வந்த சுப்பிரமணியம், ‘மான சம்ரட்சணம்’ படத்திலும் நடிக்க வாய்ப்பளித்தார்.

1946இல் ‘சகடயோகம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஜானகியைத் தேடி வந்தது. படம் வெற்றி பெறவில்லை என்றாலும், ஜானகிக்கு அதன் பின் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

1947... இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு. ஜானகியும் மிகப் பெரிய நிறுவனத்தின் படம் ஒன்றில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த நிறுவனம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்; படம்: ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’. கதாநாயகி சிந்தாமணியாக ஜானகி நடித்தார். படத்தை இயக்கியவர்: டி.ஆர். சுந்தரம், மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி.

சுயம்வரத்துக்கு பதிலாகத் தன்னை மணக்க விரும்பி வரும் இளைஞர்களுக்கு இளவரசி சிந்தாமணி சில போட்டிகளை நடத்துவாள். அவற்றில் வெற்றி பெறுபவரே தன்னை மணக்க முடியும் என்றும் அறிவிப்பாள். போட்டியில் தோற்றுப் போகிறவர்களின் தலையை வாளால் வெட்டி வீசுவாள். 999 பேர்களின் தலைகள் வெட்டி வீசப்படும். 1000 ஆவது நபர் இளவரசியைத் தோற்கடித்து வெற்றி பெறுவார். வெற்றி மாலை சூடிய கதாநாயகனாக நடித்தவர் புளிய மாநகர் புலிக்குட்டி பி.எஸ். கோவிந்தன். சூழ்ச்சிகளும் தந்திரங்களும் நிறைந்த கதை. ஜானகிக்கு பேர் சொல்லும் படமாக இது அமைந்தது.

இதே ஆண்டில் எம்.ஜி. ராமச்சந்திரனுடன் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். படம்: ‘மோகினி’. இந்தப் படம் 1948இல் வெளியானது. படம் நன்றாக ஓடியதோ இல்லையோ, ஜானகியின் வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றிப்போட்டது. உடன் நடித்த எம்.ஜி.ஆருடன் ஆயுள் பரியந்தம் பிரிக்க இயலாத ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது.

மற்றுமொரு வெற்றிப் படம் ‘சந்திரலேகா’. இப்படத்தில் ஜானகியின் பங்களிப்பு குறைவுதான். கதாநாயகி சந்திரலேகாவைப் பாதுகாக்கும் ஜிப்ஸி நாடோடிக் கூட்டத்தினருள் ஒரு ஜிப்ஸிப் பெண்ணாக தமிழ், இந்தி என் இரு மொழிப் படத்திலும் நடித்திருப்பார். வில்லனின் ஆட்கள் துரத்தி வரும்போது, ஜிப்ஸிக் கூட்டத்தைச் சேர்ந்த பெண்களுடன் கதாநாயகியும் வேடமிட்டு ஆடிப் பாடும் அந்தக் காட்சியில் ஜானகியின் முகமும் பளிச்சென்று அடையாளம் தெரியும். நடிப்பு என்பதைவிட வெறும் நடனப் பெண்ணாக மட்டும் தான் தோன்றினார் என்றே சொல்லலாம்.

தியாகராஜ பாகவதர் சிறையிலிருந்து விடுதலையான பின் நடித்த ‘ராஜமுக்தி’ திரைப்படத்தில் ஜானகியும் நடித்திருந்தார். ஆனால், அந்தப் படம் வெற்றி பெறவில்லை. (இந்தப் படம் மட்டுமல்ல, சிறை மீண்ட பின் நடித்த பாகவதரின் எந்தப் படமுமே வெற்றி பெறவில்லை.)

1949இல் மீண்டும் ஒரு வெற்றிப்படம். அண்ணாதுரையின் கதை, வசனத்தில் வெளியான ‘வேலைக்காரி’. இது நாடகமாக நடத்தப்பட்டபோதே வெற்றிகரமாக நடத்தப்பட்டதுதான். இன்றைக்கு பிரேமானந்த, நித்தியானந்த சாமிகள் போடும் போலி வேடங்களை அன்றைக்கே தோலுரித்துக் காட்டிய எழுத்தில் உருவான நாடகமும் படமும் பெரும் வெற்றியைப் பெற்றன. போலிச் சாமியார்களின் கபட வேடத்தையும், உழைப்பவரை மதிக்காத பெருந்தனக்காரர்களையும் சாடிய படம். நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி, பாலையா, எம்.என். நம்பியார், எம்.வி. ராஜம்மா, வி.என். ஜானகி என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் பங்காற்றியிருந்தனர். பணத்திமிர் பிடித்த பெண்ணாக ஜானகி இதில் நடித்திருந்தார். இரண்டாவது கதாநாயகி வேடம் என்றாலும் பிரதான வேடம்தான்.

மறுபடியும் ஒரு ராஜா ராணி படம்; கதாநாயகன் எம்.ஜி.ஆர். படம்: ‘மருத நாட்டு இளவரசி’. வசனம் எழுதியவர் கருணாநிதி. கதாநாயகி மருத நாட்டு இளவரசியாக ஜானகி நடித்தார். தான் இளவரசி என்பதை மறைத்து, நாடோடியாகத் திரியும் கதாநாயகனுடன் காதல் மொழி பேசி, ஆற்றங்கரையில் ஆடிப் பாடும் பெண்ணாக நடித்திருப்பார். ஆடிப் பாடியதோடு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆருடன் வாள் சண்டையும் போட்டிருப்பார். நாடோடியான நாயகனே உண்மையில் இளவரசன் என்பது க்ளைமாக்ஸில் தெரியவரும். ஆனால், இந்தப் படத்துக்குப் பின் உண்மையில் ஏறுமுகம் எம்.ஜி.ஆருக்குத்தான். இதன் பின் ஜானகிக்குப் பெரியளவில் படங்கள் இல்லை.

இதே ஆண்டில் ‘சந்திரிகா’ என்றொரு படம். பாலையா, கே. சாரங்கபாணி, லலிதா, பத்மினி இவர்களுடன் ஜானகியும் நடித்திருந்தார். 1951இல் கருணாநிதியின் வசனத்துடன் வெளியான படம் ‘தேவகி’. இப்படத்தில் மாதுரி தேவியும் ஜானகியும் சகோதரிகளாக நடித்திருந்தனர். என்.என். கண்ணப்பா கதாநாயகன். எஸ். பாலச்சந்தர், எம்.என். நம்பியார் என பிரபலமான முகங்களும் உண்டு.

1953இல் மீண்டும் எம்.ஜி.ஆருடன் ஒரு படம்; ‘நாம்’. ஒரு கூட்டுத் தயாரிப்பில் உருவானது இந்தப் படம். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, பி.எஸ். வீரப்பா, இயக்குநர் காசிலிங்கம் நால்வரும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் ‘மேகலா பிக்சர்ஸ்’. இதனுடன் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்தனர். கதை, வசனம்: கருணாநிதி; இசை: சிதம்பரம் ஜெயராமன். தோல்விப் பட வரிசையில் இப்படம் சேர்ந்ததால் மேகலா பிக்சர்ஸ் பங்குதாரர்களும் பிரிந்து போயினர். அதன்பின் கருணாநிதி மட்டுமே மேகலா பிக்சர்ஸ் பெயரில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வந்தார். 1970கள் வரையிலும் இந்நிறுவனம் படங்களைத் தயாரித்து வந்தது.

இந்தப் படத்துக்குப் பின் ஜானகியும் எம்.ஜி.ஆரும் படங்களில் இணைந்து நடிக்கவில்லை. ஜானகி நடிப்பதையே நிறுத்திக்கொண்டார். நீண்ட வாழ்க்கைப் போராட்டத்துக்குப் பின் எம்.ஜிஆரின் துணைவியானார்.

ஜானகியின் திரையுலகப் பிரவேசம் எளிதாக இருந்தாலும் அவரின் திரையுலக வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. போரட்டங்கள் நிறைந்ததாகவும் ஏற்ற இறக்கங்கள் கொண்டதாகவும் இருந்திருக்கிறது. நடிகர்களுக்கு அது சாத்தியமாக இருக்கலாம். ஆனால், நடிகைகளைப் பொறுத்தவரை அது அவ்வளவு எளிதல்ல. சின்னச் சின்ன வேடங்கள், குழு நடனம், தனி நடனம், இடையிடையே நாட்டிய நாடகங்கள், பின்னர் கதாநாயகியாக முன்னேற்றம். இப்படி எத்தனை கதாநாயகிகளுக்கு வாய்க்கும்? அம்மா, அக்கா, அண்ணி வேடங்கள் ஏற்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்படவில்லை. மொத்தமாக 20 படங்களுக்குள் நடித்திருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லும் படியான படங்கள் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘மோகினி’, ‘வேலைக்காரி’, ‘மருத நாட்டு இளவரசி’ போன்ற படங்கள் மட்டுமே...

எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கையும் இப்படியானதே... ஆனால், ஒரு கட்டத்துக்குப் பின் அவருக்கு திரும்பிப் பார்க்க நேரமில்லாமல், ஒரே சீரான வேகத்தில், சரிவுகளற்ற ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஜானகி ஒரு சில படங்களில் நடனமாடிக் கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகரும் ஒப்பனைக் கலைஞருமான கணபதி பட் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு கன்னடத்துக்காரர். அவர்களுக்கு அப்பு என்ற சுரேந்திரன் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், இந்த மணவாழ்க்கை தொடர்ந்து நீடிக்கவில்லை.

1947இல் ‘மோகினி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்கும்போது, ஜானகியைப் பார்த்த எம்.ஜி.ஆர். துணுக்குற்றார். அவரின் மறைந்து போன முதல் மனைவி பார்கவியின் சாயலில் ஜானகி இருந்ததே அதற்குக் காரணம். அப்போது எம்.ஜி.ஆர்., சதானந்தவதியை இரண்டாவது மனைவியாகத் திருமணமும் செய்து கொண்டிருந்தார். ஜானகியுடன் ஏற்பட்ட காதல் பின்னர் திருமணத்தில் முடிந்தது. ஆனால், இந்தத் திருமணத்துக்காக அவர்கள் இருவரும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பலதார மண தடைச்சட்டம்; மற்றது எம்.ஜி.ஆரை விட அதிகம் சம்பாதிப்பவராக இருந்ததால் ஜானகியின் கார்டியனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என பல போராட்டங்களைக் கடந்த பின்னரே இவர்களின் திருமணம் சட்டப்பூர்வமானதாக ஏற்கப்பட்டது.

எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசம், ஆட்சிப் பொறுப்பு, இவர்கள் இருவரின் நெடிய மண வாழ்க்கை, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் கட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள், பிரச்சனைகள், அதன் தொடர்ச்சியாக 23 நாட்களுக்குத் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார் வைக்கம் நாராயணி ஜானகி என்ற வி.என். ஜானகி.

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர், திரைப்பட நடிகையாயிருந்து முதல்வரானவர்களில் முதல்வர் என்ற பெருமையும் ஜானகிக்கு உண்டு.

http://www.kaatchippizhai.com/index.php?option=com_content&view=article&id=493:2014-01-20-08-37-38&catid=71:january-2014

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.