Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கை மையப்படுத்தி நிலத்தை அபகரிப்பது ஏன்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை மையப்படுத்தி நிலத்தை அபகரிப்பது ஏன்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஆவணப்படம்:-

18 பெப்ரவரி 2014

Army%20land_CI.jpg

இலங்கைத் தமிழர்களுக்கு புலிகளின் காலத்தில் கிடைக்காத வாழ்வு பரிசளிக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில்தான் நாளும் பொழுதும் தமிழர் தாயகம் அபகரிக்கப்படுகிறது. ஈழத்து மக்கள் இழந்த உரிமைகளுக்காக போராடினார்கள். இப்பொழுது போராட்டம் நடத்தியமைக்காக எஞ்சிய உரிமைகளும் அபகரிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறோம். நில அபகரிப்பே இன்றைய ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக எழுந்துள்ளது. இலங்கை சுகந்திரம் அடைவதற்கு முன்பாகவே திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தொடங்கிவிட்டன. தமிழ் மக்கள் தமது உரிமையைக் கோரத் தொடங்கிய காலத்தில் நில அபகரிப்புக்கள் இன்னுமின்னும் விரிவுபடுத்தப்பட்டன. ஏனெனில் உரிமை மறுக்கவும் ஒரு இனத்தை அழிக்கவும் நில அபகரிப்பே தகுந்த வழியெனச் இலங்கையை ஆட்சி செய்யும் அரசுகள் நினைக்கின்றன.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஆழ்வதானால்தான் ஜனநாயகமும் உரிமைகளும் மறுக்கப்படுவதாக ஒருபோதும் சொல்லிவிட இயலாது. இலங்கையை யார் ஆட்சி செய்தாலும் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உரிமை மறுக்கப்படுகிறது. சிங்கள பௌத்த ஆட்சி ஒன்றை நிறுவுவதிலேயே இலங்கையை ஆட்சி செய்த எல்லா ஆட்சியாளர்களும் அக்கறையாய் இருந்துள்ளனர். யார் ஆட்சி செய்தாலும் தமிழர் நிலத்தை அபகரிப்பதில் குறியாய் இருந்துள்ளனர்.

ஈழத்தின் கிழக்குப் பகுதி நில அபகரிப்பால் கிட்டத்தட்ட இழக்கப்பட்ட ஒரு மாகாணமாகிவிட்டது. அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தமிழ் கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டுவிட்டன. இப்பொழுது அந்தக் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. அந்தக் கிராமங்களுக்குப் பின்னால் சிங்களக் கதைகளும் பெளுத்தக் கதைகளும் புனையப்படுகின்றன.

அண்மையில் நான் திருகோணமலைக்குச் சென்றிருந்தேன். அது ஒரு பௌத்த நகரத்தைப் போலக் காட்சி அளிக்கிறது. எல்லாமும் சிங்கள மயமாகவும் பௌத்த மயமாகவும் காட்சி அளிக்கிறது. திருகோணமலை தமிழ் மக்களின் தலைநகராக அறிவிக்கப்பட்ட பகுதி. திருகோணமலை ஈழத் தமிழர்களின் வரலாறு பொதிந்த பூமி. அங்குள்ள திருக்கோணேச்சரர் ஆலயம் பல்லவர் காலத்தில் பாடல் பெற்ற தலம். அதுமட்டுமின்றி அங்கு பல தொன்மங்கள் இருக்கின்றன. கன்னியா வெந்நீருற்று, இராவணண் கல்வெட்டு என்று பல இடங்கள் வலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. திருகோணமலையை சிங்களத்தில் 'திருக்கணாமலே' என்று சிங்களவர்கள் அழைக்கப்படுகின்றனர். திருகோணமலை என்பதைவிடவும் 'திருக்கணாமலே' என்று அழைக்கப்படும் சத்தம்தான் அந்த திருமலை நிலத்தில் அதிகமாகக் கேட்கிறது.

திருகோணமலையில் இருந்த கன்னியா வெந்நீருற்று தமிழ் மக்களின் தொன்மை வாய்ந்த இடங்களில் ஒன்று. அது இன்று சிங்கள பௌத்த அடையாளத்தால் முற்றாக மாறிப் போயிருக்கிறது. அங்கிருந்த தமிழ் பெயர்ப்பலகை நீக்கப்பட்டு தற்பொழுது சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பெயர்பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெயர்பலகைப் பிரச்சினை அங்கு பெரும் பிர்சினையாக உருவெடுத்தது. ஈற்றில் சிங்கள ஆங்கலத்திலேயே பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. விடுலைப் புலிகள் அந்தக் கிணற்றை தாக்கினார்கள் எனவும் அக்கிருந்த பௌத்த விகாரையை தாக்கினார்கள் எனவும் அதை புனரமைக்க நிதி உதவி செய்யும்படி சிங்களத்தில் எப்பொழுதும் ஒரு ஒலிபெருக்கி சொல்லிக்கொண்டே இருக்கிறது. அங்கு பௌத்த விகாரை இப்பொழுதே அமைக்கப்படுகிறது. முன்பு அந்தப் பகுதியில் தமிழர்களே வசித்தார்கள். ஆனால் சிங்கள பௌத்த பிக்குகள் புலிகள் எதையோ அழித்தார்கள் என்று சொல்லி நிதி சேகரித்;துக் கொண்டிருக்கிறார்கள்.

கவிஞர் ஈழவாணி திருகோணமலைக்குச் சென்ற அனுபவம் பற்றி தனது பூவரசி இதழில் எழுதியிருந்தார். தான் திருகோணேச்சரர் ஆலயச் சூழலில் நின்றபோது சில சிங்களவர்கள் அந்த ஆலயம் பற்றி பேசிக்கொண்டிருந்ததை தன் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். திருகோணேச்சரர் ஆலயம் புத்தர் ஆலயம். தமிழர்கள் அதைக் கைப்பற்றி சிவன் ஆலயமாக மாற்றிவிட்டார்கள் என்று பேசிக் கொண்டிருந்ததாக குறிப்பிடுகிறார். இவ்வாறான புனைவுகள் நாளுக்கு நாள் வாய்க்கு வந்தபடி உருவாக்கப்படுகின்றன. இதுபோலவே சிங்களவர்கள் வரலாற்றில் பல புனைவுகளை உருவாக்குகின்றனர். அந்த வகையில் ஈழத் தலைநகர் திருகோணமலையிலும் இவ்வாறான புனைவுகளை உருவாக்கி அந்த அண்ணை முற்றுமுழுதாக ஆக்கிரமிக்க விரும்புகின்றனர்.

திருகோணமலையில் நில அபகரிப்பின் உச்சம் அந்த நகரம்தான். திருக்கோணமலை ஆலயம் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் உள்ள ஈச்சரம்தான் அந்த நகரத்தினது அடையாளம். அது திருகோணமலைக்கு மாத்திரமல்ல கிழக்கு ஈழத்திற்கே பெருமையும் அழகும் தரும் மலையாக இருந்தது. இப்பொழுது அந்த மலையை மறைக்கும் அளவுக்கு புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்பொழுது திருகோணமலை பெத்த சிங்கள நகரத்தைப் போலக் காட்சி அளிக்கிறது. ஈழத்தின் தலைநகரமாக திருமலையை போராளிகள் அறிவித்தார்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டபோதும் திருகோணமலை தலைநகரமாகவே குறிப்பிடப்பட்டது. இதனால் தமிழர் தாயகத்தை நோக்கி நில அபகரிப்புக்களை பெருமளவில் மேற்கொண்டுவரும் சிங்களப் பேரினவாதிகள் திருகோணமலையை முற்றாக அபகரிக்க முற்றுகையிட்டுள்ளனர்.

இந்திய அரசின் அனல் மின்னிலையம் அமைப்பதற்காக திருகோணமலையில் சம்பூர் பகுதி மக்கள் தங்கள் கிராமத்தை முற்றாக இழந்தனர். திருமலையில் சிங்களவர்கள் இருக்கக்கூடிய பகுதி ஒன்றில் அனல் மின்னிலையத்தை அமைக்காது தமிழ் மக்களின் நிலத்தில் அமைக்க திட்டமிட்டது அந்தப் பகுதி தமிழர் நிலம் என்பதனாலேயே. ஏனெனில் இலங்கை அரசபை; பொறுத்தவரையில் தமிழ் மக்களின் நிலத்தை அபகரிப்பது அவ்வளவு எளிதானதாக மாறிவிட்டது. எப்படியாவது தமிழர் நிலத்தை அபகரிக்க வேண்டுமென்பதும் சிங்கள அரசின் திட்டம். 2006ஆம் ஆண்டு சம்பூர் பகுதியிலேயே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் யுத்தம் தொடங்கியது. நான்காம் ஈழ யுத்தத்தின் முதல் அகதிகள் சம்பூர் மக்கள். புலிகளிடமிருந்து சம்பூரையும் யுத்தக் கைதிகளாகவுள்ள மக்களையும் மீட்கவே யுத்தம் தொடங்கப்பட்டது என்று அப்பொழுது இலங்கை அரசு குறிப்பிட்டது.

ஆனால் இன்று ஏழு வருடங்கள் கடந்த பின்னரும் சம்பூர் மக்கள் தங்கள் நிலத்திற்குத் திரும்பவில்லை. உண்மையில் இலங்கை அரசு புலிகளின் பிடியிலிருந்து நிலத்தை மீட்கிறதா, இல்லை அபகரிக்கிறதா? எனவும் புலிகளிடம் பணயக் கைதிகளாக உளளனர் மக்கள் என்று சொல்லிக்கொண்டு மக்களை மீட்கிறதா அல்லது அகதிகளாக்கிறதா என்பதற்கு சம்பூர் கதையும் நல்லதொரு எடுத்துக்காட்டு. இலங்கை அரசின் கொடிய யுத்தததின் பின்னால் உள்ள அரசியலையும் விடுதலைப் புலிகள்மீது இலங்கை அரசு முன் வைக்கும் குற்றச்சாட்டுகளும் அதற்குப் பின்னால் உள்ள அரசியலையும் சம்பூர் கதையும் அம்பலமாக்குகிறது.

தமிழ் மக்கள் தெற்கில் வாழ்ந்த இடங்கள் எல்லாம் சிங்களமயமாகிவிட்டது கதிர்காமம் ஆலயம் தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகள் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. இப்பொழுது கதிர்காம என இக் கோவில் அழைக்கப்படுவதுடன் இந்த ஆலயப் பூசகர் முதல் நிர்வாகம் எல்லாமே சிங்களவர்களிடம் சென்றுவிட்டது. புத்தளத்தில் அழகிய தமிழ்ப் பெயர்களுடன் உள்ள கிராமங்கள் பல இன்னமும் இருக்கின்றன. மதுரங்குளி, பலாவி, உடப்பு என்று பல கிராமங்கள் உள்ளன. புத்தளம், சிலாபம், அனுராதபுரம் எல்லாமே தமிழ்ப் பெயர் கொண்ட கிராமங்கள். இவை எல்லாமே சிங்கள தேசமாகிவிட்டது. பொலநுருவையில் உள்ள சிவன் ஆலயம் அழிந்து எச்சக்காடாக இருக்கிறது. சோழர்கள் இலங்கையைக் கைப்பற்றிய பொழுது அமைக்கப்பட்டது அந்த ஆலயம்.

தெற்கில் உள்ள பல இந்து ஆலயங்கள் தினந்தேறும் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆலயங்கள் சேதப்படுத்துவது எதற்காக? கொள்ளை என்ற பெயரில் அந்த ஆலயங்கள் அழிக்கப்படுவதனால் அவற்றின் பூர்வீகம் மட்டுமல்ல அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் பூர்வீகமும் அழிக்கப்படுகிறது. வடக்கில் புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது இலங்கைத்தீவு முழுவதும் உள்ள இந்து ஆயலங்கள் தாக்கப்படுகின்றன. ஈழத் தமிழர்களின் மதத் தொன்மங்களை அழிக்க வேண்டும் என்பது இதைச் செய்பவர்களின் திட்டம். தொன்மங்களை அழிப்பதன் மூலம் ஒரு இனத்தின் அடையாளங்களையும் அந்த இனத்தையும் அழிக்கலாம் என்று இதை மேற்கொள்பவர்கள் கருதுகின்றனர்.

தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் என்பதற்கு பல்வேறு வரலாற்றுச்சான்றுகள் உண்டு. சிங்களவர்கள் குடியேறி வசிக்கும் பெரும்பலான இடங்களை நோக்கி தமிழ்மக்கள் செல்லவும் இல்லை. அவற்றை கோரவும் இல்லை. ஆனால் சிங்களவர்கள் தமிழர்கள் காலம் காலமாக பெரும்பான்மையாக வசித்து வந்த ஆட்சி செய்து வந்த, தமிழர்கள் கோரிய வடக்கு கிழக்கு தாயகப் பகுதியை - நோக்கி தொடர்ந்தும் படையெடுத்துக் கொண்டே இருக்கின்றனர். தமிழர்கள் பொலநுருவையையோ அம்பாந்தோட்டையையோ கேட்கவில்லை. அபகரிக்கப்படும் தங்கள் தாயகத்தை அபகரிக்க வேண்டாம் என்பதே தமிழர்களின் கோரிக்கை. ஆனால் தமிழர்களின் ஒட்டுமொத்த தாயகத்தையும் கடந்து வந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பகுதியை இராணுவத்தினர் அபகரித்துள்ளனர்.

தமிழர் தேசம் முழுவதையும் ஆக்கிரிக்க இலங்கை அரசு நினைக்கின்றது. ஆனாலும் கிழக்கின் பல பகுதிகளை வேகமாக அபகரிப்பது ஏன்? கிழக்கின் பெரும்பகுதி தெற்கை எல்லையாக கொண்டிருக்கிறது. கிழக்கில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்ககள் பலவும் முன்னெடுக்கப்பட்டு பல கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக மாறிவிட்டன. வடக்கு கிழக்கை இணைய முடியாத நிலமையை ஏற்படுத்தவே கிழக்கு மிக வேகமாக அபகரிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கிற்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தி வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசம் என்ற கோட்பாட்டை உடைக்க அரசு நினைக்கிறது. கிழக்கில் பல இடங்களில் தெற்கு மக்களுக்கு காணிகள் பகரிந்தளிக்கப்பட்டிருக்கின்றன.

அந்தப் பகுதியை சேராத மக்கள் பலருக்கு காணிகள் கொடுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அங்கு பெயருக்கு ஒரு குடிசையை போட்டுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கச் சென்றுவிட்டனர். தமிழர் நிலத்தை அபகரிப்பதற்கு எதிராக போராடத் தொடங்கினோம். ஆனால் அந்தப் போராட்டத்தை ஒடுக்க அதே நில அபகரிப்பையே தீர்வாக இலங்கை அரசு நடைமுறைப்படுத்துகிறது. இது இலங்கை இனப்பிரச்சிiயை மேலும் மேலும் சிக்கலாக்கும் நிலைக்கே கொண்டு செல்லுகிறது.

புலிகள் தொடர்பாகவும் பிரபாகரன் தொடர்பாகவும் பேசிக்கொண்டிருக்கும் பலருக்கு ஈழத்து நிலம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து ஏன் பேச இயலவில்லை? இன்றைய ஈழச் சூழலில் எது அவசியம்? ஈழத்தில் இன்று நிகழ்வது நிலத்தை அபகரிக்கும் போரல்லவா? இலங்கை ஜனாதிபதி நல்லிணக்கம், ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டு நிலத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறத்தில் சிலர் ஈழம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் விடுதலைப் புலிகள் குறித்து தமது விமர்சனங்களை வைத்து ஆதாயம் தேடிக்கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நாட்களில் இந்தளவுக்கு நில அபகரிப்புக்கள் நடைபெறவில்லை. புலிகளின் ஆட்சி இல்லை என்றால் இன்று இருக்கும் பல பகுதிகளை நாம் இழந்திருக்கககூடும்.

சிங்ளவர்கள் விரும்பி காணிகளை விலைக்கு வாங்கி தமிழ் ஈழத்தில் குடியேறுவதை தமிழர்கள் எதிர்க்கவில்லை. தமிழர்களின் தாயகத்தை அழிக்க வேண்டும் அபகரிக்க வேண்டும் என்று சிங்கள அரசின் திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட வலிந்த சிங்களக் குடியேற்றங்களையே எதிர்க்கிறார்கள். தமிழ் மக்களின் நிலங்களை பறித்து அவர்களை அகதியாக்கி அவர்களின் நிலத்தில் இராணுவத்தையும் சிங்களவர்களையும் குடியேற்றுவதையே தமிழ் மக்கள் எதிர்க்கிறார்கள். சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் சிங்கள மக்களுக்கு குற்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை தமிழ் மக்கள் மத்தியில் இதுவே மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஈழ மக்களைப் பொறுத்தவரையில் நிலம் என்பது மிகப் பெரிய கனவு. அதுவே அவர்களிடம் எஞ்சியுள்ள ஒன்று. அதுவே அவர்கள் இன்னமும் வாழவும் மீளவும் நம்பிக்கையளிக்கும் மூலதனம். எந்த ஒரு மக்கள் கூட்டமும் தாம் காலம் காலமாக பூர்வீகமாக வாழும் நிலத்தை யாரும் பறிக்கும்போது பெரும் துயரத்திற்கும் ஆவேசத்திற்கும் உள்ளாகின்றனர். ஈழத்துக் கிராமங்கள் பலவற்றில் இந்த துயரமும் ஆவேசமும் கிளர்ந்திருக்கின்றன. அறிவிக்கப்பட்ட ஆயுத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அறிவிக்கப்படாத நில அபரிப்பு யுத்தத்தை இன்னமும் நடத்திக்கொண்டே இருக்கிறது. நிலத்தை அபகரித்தல் என்பது இனத்தை அழித்தலுக்கு ஒப்பானது. இலங்கை அரசின் மிகப் பெரும் செயற்பாடு இதுவே.

இனப்படுகொலை என்பது முடிந்துபோன ஒன்றல்ல. ஈழத்தில் இன்னமும் பல வடிவங்களில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. இனத்தை அழிக்கவே நில அபகரிப்பை சிங்கள அரசு பெருமெடுப்பில் செய்து கொண்டிருக்கிறது. இனக்கொலை எத்தகைய குற்றமோ அவ்வாறே நிலத்தை அபகரிப்பதும் குற்றமே. நடந்த இனப் படுகொலைக்கு தீர்வை கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். போராடிக்கொண்டிருக்கும் தமிழர்களை ஒடுக்கவும் அழிக்கவும் அவர்களின் நிலத்;தை குறி வைத்து நில அபகரிப்பு யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

முழு ஈழத்தையும் அபகரித்து போராட முடியாத தனிநாடு கோர முடியாத ஒரு சூழலை உருவாக்குவதே இலங்கை அரசின் நோக்கம். அதுவே ஈழத் தமிழ் மக்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்குகிறது. இது தமிழ் மக்களை தொடர்ந்து போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளுகிறது. அத்துடன் தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்த நிலப்பகுதியை பாதுகாக்கும் உறுதியான தீர்வு ஒன்று தேவை என்பதையும் இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கிறது.

 

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103166/language/ta-IN/article.aspx

வடக்கு பற்றியே பலரும் பேசும் நிலையில் (தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட) வட கிழக்கு தமிழர் தாயகம் என்ற கருத்தாக்கம் மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்ற கவலை எலாருக்கும் இருக்கு! ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அவசியம் என்றதை காலம் உணர்த்தி நிற்குது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.