Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நான் இந்த மக்களுக்கு எனது பணி தேவைப்படும் வரை தொடர்ந்தும் பணியாற்றுவேன்' - முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CM-14.jpg

எவ்வித மாயைகளுமின்றி செயற்படுகின்ற ஒரு நிர்வாகியாக அரசியல்வாதியாக இவர் உள்ளார். இவர் சமாதானம் மற்றும் நீதி ஆகிய இரண்டினதும் கலவையாக உள்ளார் என்பதை நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் மேற்கொண்ட நேர்காணலின் மூலம் அறிந்துகொண்டேன். 

இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Island ஆங்கில ஊடகத்திற்காக நேர்காணல் செய்த NILANTHA ILANGAMUWA* தெரிவித்துள்ளார். அந்நேர்காணலை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர், நீதிபதி கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரனுடன் அண்மையில் நான் மேற்கொண்ட நேர்காணலானது மிகவும் முக்கியமானதாகும். நீதிபதி விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. இவர் ஒரு சிறிலங்காத் தமிழ் சட்டவாளரும், நீதிபதியும் அரசியல்வாதியும் ஆவார். இவர் ஒரு நீதிவான் நீதிபதியாகவும் மாவட்ட நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். 2013ல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலின் பின்னர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபை முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். 

இவர் தற்போது ஊடகச் செய்திகளைத் தீர்மானிக்கின்ற சக்தியாகவும் விளங்குகிறார். விக்னேஸ்வரன் மாற்றத்தைப் பெற்றுத் தரக்கூடிய ஒருவர் என பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். ஜனநாயகம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள மிகவும் கறைபடிந்ததும் மோசடி மிக்கதுமான அரசியல் முறைமைக்குள் விக்னேஸ்வரன் தற்போது நுழைந்துள்ளார். எதுஎவ்வாறிருப்பினும், இவர் மிகவும் ஆர்வமுள்ள ஒரு அரசியற் தலைவராகவும், மக்களுக்குப் பயனுள்ள ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்ற கருத்தியலைக் கொண்ட ஒருவராகவும் விக்னேஸ்வரன் செயற்படுகிறார். 

இவர் மிகவும் நேர்மையாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியமை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாடு என்ற வகையில் நாங்கள் இன்று எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் மூலவேர் என்ன என்பதை விக்னேஸ்வரன் மிகவும் ஆழமான புரிதலுடன் வெளிப்படுத்தியிருந்தார். எவ்வித மாயைகளுமின்றி செயற்படுகின்ற ஒரு நிர்வாகியாக அரசியல்வாதியாக இவர் உள்ளார். இவர் சமாதானம் மற்றும் நீதி ஆகிய இரண்டினதும் கலவையாக உள்ளார் என்பதை நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் மேற்கொண்ட நேர்காணலின் மூலம் அறிந்துகொண்டேன். "இந்த வாழ்க்கையானது உங்களது அறிவாற்றலால் வடிவமைக்கப்பட வேண்டுமே தவிர இது உணர்ச்சி வசப்படுவதன் மூலம் வடிவமைக்கப்படக் கூடாது" என முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார். 

சிறிலங்காவின் அரசியல் என்பது அதிகார வர்க்கத்தால் ஆளப்படும் மிக மோசமான சீரழிவான, நீதியற்ற ஒன்றாகும். சிறிலங்காவில் செயற்படும் புத்திமான்களை வேரோடு அழிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ள இந்நிலையில், விக்னேஸ்வரனின் அரசியல் மூலம் மக்கள் எவ்வளவு காலம் நலன்களைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. தான் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறேன் என விக்னேஸ்வரன் கூறும்போது அது எவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்காது. 

வடக்கு மாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரனுடன் மேற்கொண்ட நேர்காணலின் முழுவடிவம் இங்கு தரப்படுகின்றது: 

நிலாந்த இளங்கமுவ [நி.இ]: "நீங்கள் உங்கள் மீசையை சுத்தமாக வைத்திருக்க விரும்பினால் நீங்கள் கஞ்சி குடிக்க முடியாது" என தமிழ்ப் பழமொழியில் கூறப்படுகிறது. உங்களது வாழ்வை மேலும் பயனுள்ளதாக ஆக்குவதற்காக நீங்கள் தற்போது அரசியலில் நுழைந்துள்ளீர்கள். நீதிபதி விக்னேஸ்வரன் ஆகிய நீங்கள் இந்த நாட்டில் மிகவும் மதிக்கப்படுகின்ற நீதிபதிகளில் ஒருவராவார். நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் அரசியலில் நுழைந்தீர்கள். ஆனால் சிறிலங்காவின் 'அரசியல்' என்பது நடைமுறையில் மிகத் துரிதமாக மிகவும் ஆதிக்கம் மிக்கதாக மாறிவிட்டதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக சீர்குலைவுகளால் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை சிதைவடைந்துள்ளதை என்பதையும் நாம் அறிவோம். இந்நிலையில் தாங்கள் அரசியல்வாதியாக மாறியது ஒரு புத்திசாதுரியமான செயல் எனக் கருதுகிறீர்களா? 

சி.வி.விக்னேஸ்வரன் [சி.வி.வி]: ஏன் நீங்கள் இந்தத் தீர்மானத்தை சாதகமாக நோக்கக் கூடாது? முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அரசியலுக்குள் நுழைந்ததானது நீங்கள் இங்கு குறிப்பிட்டது போன்று மிகவும் மோசமான நிலை நிறுத்தப்படலாம் எனக் கருதலாமா? என்னைச் சூழ சாதகமான முன்னேற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன என்பதை நான் கண்டுள்ளேன். அரசியல் நலனுக்காக முன்னர் விமர்சனம் செய்தவர்கள் பின்னர் தமது கருத்துக்களிலிருந்து மாறுவதென்பது மனித இயல்பாகும். நாங்கள் எமக்கெதிரான விமர்சனங்களை நினைத்துக் கவலைப்படாது அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இருட்டை வெறுத்துக் கொண்டிருப்பதை விட மெழுகுதிரி ஒன்றை ஏற்றிவைப்பது மிகவும் சிறந்தது என பெஞ்சமின் பிராங்கிளின் கூறியிருந்தார். 

நான் அரசியலுக்குள் நுழைந்ததென்பது மிகவும் அறிவார்ந்த தீர்மானமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் நான் நிச்சயமான கருத்தைக் கூறமுடியவில்லை. நான் குறித்த கட்சியைச் சேர்ந்தவனாக இருக்கமாட்டேன் என்பது நிச்சயமாகும். நான் கடவுளின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். கடவுள் தான் என்னை இந்தப் பணியைச் செய்யுமாறு பணித்துள்ளார். நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவன் என்னை இந்தப் பணியில் அமர்த்தியுள்ளார். அவர் என்னை வேளைக்கு அழைக்க விரும்பினால் அதுவும் நடக்கும். ஏன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்? கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். 

நி.இ: நாங்கள் நீண்ட காலமாக விவாதித்து வரும் பிரச்சினை தொடர்பாக நீங்கள் மிகத் தெளிவான கருத்தைக் கொண்டுள்ளீர்கள் என நான் நம்புகிறேன். "நாங்கள் எமது சொந்தத் தாய்நாட்டைக் கேட்கவில்லை. ஒன்றுபட்ட நாட்டுக்குள் எமக்கான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதை மட்டுமே நாம் விரும்புகிறோம்" என நீங்கள் அண்மையில் குறிப்பிட்டிருந்தீர்கள். மத்திய அரசாங்கத்திடமிருந்து முற்றுமுழுதான சுதந்திரத்தைப் பெற்று அதனை அனுபவிப்பதற்கான தாய்நாட்டை உருவாக்குதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பிழை என்பதில் நீங்கள் நிச்சயமாக உள்ளீர்களா? 

சி.வி.வி: பிழையோ சரியோ அது உங்களைப் பொறுத்தது. இந்தப் பிரச்சினையின் கருத்தியல் ரீதியான விளக்கம் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் யதார்த்தம் என்ன என்பதை நாங்கள் ஆராயவேண்டும். சிலர் தனிநாடு கோரிப் போராடியதனால் நாம் போருக்கு முன்னர் பெற்றிருந்த மிகக் குறைந்த சுதந்திரத்தைக் கூட இழக்கவேண்டியேற்பட்டது. அவர்கள் இந்தப் பிரச்சினையை அனைத்துலக அரங்கிற்குக் கொண்டு சென்றனர் என்பது நிச்சயமாகும். சிறிலங்காவின் வடக்கானது தற்போதும் 150,000 வரையான இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதைவிட வடக்கில் வாழ்ந்த அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் சிறிலங்காவை விட்டுப் புலம்பெயர்ந்தனர். தனிநாடு கோரிப் போராடியவர்களால் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். இந்நிலையில், தமிழ்மக்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்துள்ள நிலையில் யுத்தம் என்பது யாருக்கானது? 

மிகக் கொடுமையான, இரத்தம் தேய்ந்த போரின் பின்னர் பெறப்படும் தனிநாட்டில் சமாதானத்தை நிலைநாட்டி ஒற்றுமையுடன் செயற்பட முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா? தனிநாடு பிரிக்கப்படும் போது அந்த நாடு எதிலிருந்து பிரிந்தததோ அதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக பிறிதொரு நாட்டிடம் மண்டியிட வேண்டி வரலாம் என்பதை நீங்கள் நினைக்கவில்லையோ? உங்களது எல்லைகள் தாக்கப்படலாம் என்ற அச்சத்துடன் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்படலாம் என நீங்கள் கருதவில்லையா? முழுச் சுதந்திரம் அல்லது பகுதியளவான சுதந்திரம் என்பதெல்லாம் மனநிலையைப் பொறுத்தது.

ஆகவே வாழ்க்கை என்பது உங்களது அறிவாற்றலால் மட்டுமே வடிவமைக்கப்பட வேண்டுமே தவிர உணர்ச்சிகளால் வடிவமைக்கப்பட முடியாது என்பதை தயவுசெய்து நினைவு வைத்திருக்க வேண்டும். கலாசார ரீதியாக அனைவரும் ஒன்றுசேர வேண்டும். சாதகமாகவும், மனிதாபிமானமாகவும், யதார்த்தமாகவும் சிந்தியுங்கள். இதன்மூலம் நீங்கள் நாங்கள் எடுத்த தீர்மானம் சரியானது என்பதை அறிவீர்கள். 

நி.இ: ஆகவே பல நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட, சில பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட குருதி தோய்ந்த பயங்கர யுத்தமானது பயனற்றது என நீங்கள் கருதுகிறீர்களா? 

சி.வி.வி: தெளிவாகத் தெரிந்த சில விடயங்களைக் கொண்டு எதிர்காலத்தைப் பார்க்க மறுத்தவர்களை நோக்கியே இந்தக் கேள்வி எழுப்பப்பட வேண்டும். கலாநிதி அன்ரன் பாலசிங்கம் மாநாடொன்றின் இறுதியில் மிகவும் அறிவார்ந்த ஆலோசனைகளை வழங்கியிருந்தார் என்பதை என்னால் நினைவுபடுத்த முடிகிறது. குறித்த சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதையும் அன்ரன் பாலசிங்கம் விரும்பினார். இந்த நிலையில் நாங்கள் மிகவும் முதிர்ச்சியான அரசியற் தெளிவைக் கொண்டிருந்தால், குறிப்பாக எமது இராணுவத் தலைமை முதிர்ச்சியான அரசியற் தீர்வை எட்டியிருந்தால் இன்று அதிகளவான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும். ஏனென்றால் நாங்கள் நிறைய உயிர்களை இழந்துவிட்டோம். நாங்கள் மேலும் மேலும் யுத்தம் புரிந்து எம்மிடம் உள்ள அனைத்தையும் இழந்துவிட வேண்டும் என நீங்கள் மறைமுகமாக என்னிடம் கூறுகிறீர்கள். 'விட்டில்பூச்சியின்' கதை உங்களுக்குத் தெரியும். இரவில் தெரியும் ஒளியைப் பார்க்கும் விட்டில் பூச்சிகள் அதனை நோக்கிச் சென்று அந்த வெப்பத்தில் எரிந்து சாகின்றன. எங்களது சொந்தங்கள் இறந்துவிட்டனர். இனியும் மேலும் மேலும் இவ்வாறான இழப்புக்கள் ஏற்படக் கூடாது. எமது நியாயமான அரசியல் பலப்பரீட்சையானது எங்களது பக்கத்திற்கு உங்களையும் கொண்டு வரலாம். அதாவது எங்கள் பக்கம் என்பது தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம். 

நி.இ: மே 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தத்தில் போராளி அமைப்புக்களின் பங்குகள் என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்? 

சி.வி.வி: தற்போது இங்கு எவ்வித அமைப்புக்களும் இல்லை. இவை அனைத்தும் ஜனநாயக அரசியலில் இணைந்து விட்டனர். மிகக் குறைந்தளவானவர்கள் மட்டும் அரசாங்கத்தின் ஆதரவுடன் தற்போதும் ஆயுதங்களுடன் உலாவுகின்றனர். இது மிகவும் கெட்டவாய்ப்பாகும். தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பென்பது மிகவும் உரமானதாகவும் தெளிவானதாகவும் உள்ளது. நாங்கள் எமது உறுதி, தைரியம் மற்றும் வளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவோம். வன்முறைகளைத் தவிர்ப்போம். 

நி.இ: யதார்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் போது அது தனிநாடு கோரிப் போராடக் கூடாது என வழிகாட்டுவதுடன், ஒன்றுபட்ட நாடொன்றிற்குள் நிலையான தீர்வை எட்டுவதற்கு வழிகாட்டும் எனவும் தனித் தமிழ்த் தாய்நாடு என்பது நடைமுறைச் சாத்தியமற்ற தீர்வு என மறைந்த பேராசிரியர் ஸ்ரான்லி ஜே.தம்பையா குறிப்பிட்டிருந்தார். இதனையே தற்போது நீங்களும் கூறுகிறீர்கள். தமிழ் மக்கள் தமக்கிடையில் ஒற்றுமையாகச் செயற்படவில்லை என்பதே இதற்கான காரணம் என பேராசிரியர் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மக்களுக்கிடையில் நிலவிய சாதி முறைமைகள் மற்றும் மத நம்பிக்கைகள் போன்றன பிளவுகளை ஏற்படுத்தின. இவை இன்றும் நிலைத்திருக்கின்றன. மத்திய அரசாங்கத்துடன் தொடர்பைப் பேணும் அதேவேளையில், நல்லதொரு தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நீங்களும் இணைந்து மக்களின் மனப்பாங்கை மாற்றமுடியும் என நீங்கள் கருதுகிறீர்களா? 

சி.வி.வி: மன்னிக்கவும், நான் பேராசிரியர் தம்பையா கூறியதை நான் வாசிக்கவில்லை. இதனால் என்னால் இது தொடர்பாக கருத்துக் கூறமுடியாது. தமிழ் மக்கள் மிகவும் கெட்டிக்காரர்களாக இருப்பதால் இவர்கள் தமக்கிடையில் பிளவுபடுகின்றனர். ஆனால் இந்தக் கெட்டித்தனம் என்பது பெரும்பாலும் சுயநல நோக்கில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றமை ஒரு கெட்டவாய்ப்பாகும். இருப்பினும், ஆயுதங்களுடன் பிரபாகரன் செயற்பட்டமை பிளவுபட்ட தமிழர்களை ஒன்றுபடுத்த உதவியிருக்கலாம். இவர்கள் கெட்டிக்காரர்களாக இருந்த போதிலும், இவர்கள் அச்சப்பட்டனர். நாங்கள் புதிய வழியில் இதனைக் கொண்டு நடாத்த முயற்சிப்போம். இது இரண்டு விதமான அணுகுமுறைகளைக் கொண்டது என நான் நினைக்கிறேன். இவையிரண்டும் ஒரே விதமான பாதையையே சுட்டிநிற்கின்றன. முதலாவது வழிமுறையானது அனுதாபம் மற்றும் மனிதாபிமானத்தைக் கொண்டதாகும். போர் மூலம் மக்கள் இவ்விரு அணுகுமுறைகளையும் உணர்ந்து கொண்டனர். இவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்கள் புலமைசார் வாதத்தால் கவர்ந்திழுக்கப்படுவர் என நான் நினைக்கிறேன். பொதுமக்களின் அறிவாற்றலையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இவ்வாறான இரட்டை அணுகுமுறை எமது கருத்தியல்களைத் தெளிவுபடுத்தவும், மக்களின் மனப்பாங்குகளையும் மத்திய அரசாங்கத்தை போக்கையும் மாற்றிக் கொள்வதற்கு நடைமுறையில் உதவும் என நான் கருதுகிறேன். வன்முறைப் பாதை தெரிவு செய்யப்பட்ட போது தமிழ் மக்கள் மிகப் பெரிய தியாகங்களைப் புரிந்தனர். இதேபோன்று இவர்கள் வன்முறையற்ற வழிமுறையில் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கும் தமது ஆதரவை வழங்குவதில் ஆர்வமாக உள்ளனர். மத்திய அரசாங்கம் உட்பட எமது அதிகார சக்திகளுடன் மீண்டும் மீண்டும் நாங்கள் எமது கோரிக்கைகளை முன்வைக்க முயற்சிப்போம். முயற்சிப்பதிலும் தோல்வியடைவதிலும் எவ்வித பிழையும் இல்லை. 

நி.இ: ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொள்வதில்லை எனவும் உங்களது அரசாங்கத்தைச் சேர்ந்த ஒருவரை ஜெனீவாவுக்கு அனுப்புவதென நீங்கள் தீர்மானித்துள்ளீர்கள். ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குகொள்வதற்காக வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தற்போது ஜெனீவாவில் தங்கியுள்ளார். நீங்கள் அங்கு செல்வதற்குப் பதிலாக அனந்தியை ஜெனீவா அனுப்பியதன் காரணம் என்ன? மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? 

சி.வி.வி: எமது நாடாளுமன்ற உறுப்பினர்களால் அரசியல் நடாத்தப்படுகின்றது என்பது முதலாவது விடயமாகும். இவர்கள் உண்மையான அரசியல்வாதிகள் ஆவர். நிர்வாகி என்ற வகையில் எனக்கு அதிகமான அல்லது குறைவான அதிகாரங்கள் காணப்படும். ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குகொள்ள முடியும். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பங்குகொள்ளக் கூடிய மிகவும் பொருத்தமானவராக அனந்தி உள்ளதால் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுத்தோம். 

இரண்டாவதாக, ஜெனீவாவில் பங்குகொள்கின்ற நாடுகள் சிறிலங்காவின் மீறல்களை நிரூபிக்கக் கூடிய போதியளவான சாட்சியங்களைக் கொண்டுள்ளன. அனந்தி, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான மீளிணக்க ஆணைக்குழு, நவி பிள்ளை மற்றும் அண்மையில் இடம்பெற்ற பரனாகம ஆணைக்குழு ஆகியவற்றில் முன்னால் தனது சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தார். போரின் போது கொல்லப்பட்ட தமது அன்புக்குரிய உறவுகளுக்கான நட்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்காக கிளிநொச்சிக்கு செல்கின்ற மக்களை சிவில் உடை அணிந்த 'நபர்கள்' தடுப்பதாக அனந்தி எம்மிடம் தெரிவித்திருந்தார். எமது மக்களால் இன்று எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகளை மிகவும் உறுதியாக முன்வைக்கக் கூடிய பொறுப்பு மிக்க பதவியில் அனந்தி உள்ளார் என்பதை நாம் அறிவோம். இந்த வகையில் ஜெனீவாவில் இடம்பெறும் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக நாங்கள் எமது பிரதிநிதியாக அனந்தியை அனுப்பியுள்ளோம். 

மூன்றாவதாக, போரின் போது அதிகம் இழந்த, இன்றுவரை நலிவடைந்த மக்களாக வாழ்கின்றவர்கள் எமது பெண்களாவர். இந்தப் பெண்களைப் பொறுத்தளவில் தமது எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற ஒருவர் இவர்களுக்குத் தேவை. அந்தவகையில் எமது பெண்களின் நிலைப்பாடுகளை வெளிக்கொண்டு வருவதற்கு மிகவும் பொருத்தமானவராக அனந்தி உள்ளார் என்பதால் நாங்கள் அவரைத் தெரிவுசெய்தோம். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

நி.இ: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தங்களுக்கு எதிராக சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தங்களுக்கு எதிராக கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கருத்துக்களைத் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையை நீங்கள் எவ்வாறு விளங்கிக் கொள்கிறீர்கள்? இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீங்கள் எந்த வழியைக் கையாளுகிறீர்கள்? 

சி.வி.வி: இவ்வாறு எனக்கு எதிராக சதி செய்கின்ற ஒருவரை நான் அண்மையில் அழைத்து நான் அவரது செயற்பாடுகள் தொடர்பாக விழிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தேன். "ஏன் நீங்கள் நீங்களாகவே இவ்வாறான பிரச்சினையை உண்டுபண்ணுகிறீர்கள்?" என நான் அவரிடம் வினவினேன். என்னை எனது பதவியிலிருந்து நீக்குவதற்கு மிகவும் இலகுவான வழி உள்ளதாகவும் நான் அவரிடம் கூறினேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறப்புப் பொதுக் கூட்டம் ஒன்றைக் கூட்டி முதலமைச்சராக விக்னேஸ்வரன் பதவி வகிக்கக்கூடாது அல்லது நான் ஒரு உறுப்பினராகக் கூட இருக்கக் கூடாது என தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முடியும் என நான் குறித்த நபரிடம் தெரிவித்தேன். "நீங்கள் இவ்வாறானதொரு தீர்மானத்தை நிறைவேற்றி சில கணங்களில் நான் கொழும்புக்குத் திரும்பிச் செல்வதற்கான நகர்வுகளை மேற்கொள்வேன். உங்களால் இதனைச் செய்ய முடியாவிட்டால் தயவு செய்து நான் இந்தச் சுமையை சுமப்பதற்கு உதவி செய்ய முயற்சியுங்கள்" என நான் அவரிடம் கூறினேன். நான் ஒரு சட்டவாளர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் தற்போது ஒரு பணியை ஏற்றுக்கொண்டுள்ளேன். கூட்டமைப்பு என்னை இந்தப் பணிக்காக அமர்த்தியுள்ளது. இதைவிட வடக்கு மாகாண மக்களின் விசுவாசம் என்னை முதலமைச்சராக ஆக்கியுள்ளது. இதனால் நான் இந்த மக்களுக்காகச் செயற்படுவேன். அவர்களுக்கு எனது பணி தேவைப்படும் வரை நான் தொடர்ந்தும் பணியாற்றுவேன். 

அரசியலுக்கு அப்பால் எனது வாழ்வானது மிகவும் நிறைவானதும் அழுத்தம் குறைந்ததும் ஆகும். நான் மக்களுக்குப் பயன் செய்வேன் எனக் கருதி கூட்டமைப்பு என்னை அரசியலுக்கு வருமாறு கோரினார்கள். அவர்கள் நான் தொடர்ந்தும் சேவையாற்றுவதில் பயனில்லை எனக் கருதினால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியேறுவேன். அரசியல் என்பது எனக்கு தனிப்பட்ட ரீதியாக எவ்வித நலனையும் வழங்காது. அதனால் நான் நீங்கள் கூறிய பிரச்சினையைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

நி.இ: யாழ்ப்பாணத்தில் வைத்தியசாலை ஒன்றைத் திறக்கும் நிகழ்வின் போது இராணுவக் குறைப்பு மற்றும் இராணுவ முகாங்களை அகற்றுதல் போன்றன தொடர்பாக சிறிலங்கா அதிபர் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவமயமாக்கலை மேற்கொள்வதாக கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இந்த நிகழ்வின் போது தாங்கள் சிறிலங்கா அதிபருக்கு அருகில் அமர்ந்திருந்ததையும் அதிபரின் கருத்துக்களுக்கு எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பதையும் நான் பார்த்தேன். இந்நிலையில் சிறிலங்கா அதிபர் நேர்மையானவர் என நீங்கள் நம்புகிறீர்களா? வடக்கில் இராணுவமயமாக்கல் எவ்வாறு உள்ளது என்பதை நீங்கள் விளக்குவீர்களா? 

சி.வி.வி: தயவுசெய்து மற்றவர்கள் மீது முத்திரை குத்தாதீர்கள். எனக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான வேலை ரீதியான உறவை சீர்குலைக்காதீர்கள். முதலாவதாக, மரியாதை மற்றும் கண்ணியத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் முதன்மையானதாகும். எங்களுக்குள் உடன்பாடுகள் எட்டப்படாதிருக்கலாம். ஆனால் நாங்கள் உடன்பாடுகளை எட்டமுடியாதவர்களாக இருக்கவேண்டிய தேவையில்லை. நாங்கள் மனிதநேயம், கலாசாரம் மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை கவனத்திற்கொள்ள வேண்டும். 

மேஜர் ஜெனரல் உதய பெரேரா பதவியேற்ற பின்னர் இராணுவ சோதனைச் சாவடிகள் மற்றும் முகாங்கள் போன்றன குறைக்கப்பட்டுள்ளன என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் இவர் ஒரு சிறந்த இராணுவ வீரராவார். ஆகவே இவர் இராணுவ ரீதியான எண்ணப்பாங்கையே கொண்டிருக்க முடியும். ஏனெனில் இராணுவ முகாங்கள் அகற்றப்பட்ட இடங்களில் இராணுவத்தினர்கள் ஈருருளிகளில் நிற்பதை நீங்கள் அவதானிக்க முடியும். இதன்மூலம் மக்கள் தொடர்ந்தும் இயல்பு வாழ்வை வாழமுடியாதவர்களாகின்றனர். இவர்கள் அச்சத்தின் மத்தியில் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறிலங்கா இராணுவத்தினர் வடக்கிலிருந்து முற்றாக வெளியேற வேண்டும் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். அத்துடன் இராணுவத்தினர் முற்றாக அகற்றப்பட்டு சிவில் காவற்துறையினர் மக்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட வேண்டும் என மக்கள் கருதுகின்றனர். துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் மிகக் குறைந்தளவில் பாதுகாப்புச் சேவையில் ஈடுபடுத்தப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. 

அண்மையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கில் என்னால் வழங்கப்பட்ட பிரதம உரைக்கான சிறிலங்கா அதிபரால் விடுக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக நான் இங்கு குறிப்பிட வேண்டும். மிகக் குறைந்தளவான இராணுவத்தினரே தற்போது வடக்கு மாகாணத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளதாகவும் ஆனால் அதிபரின் செயலர் மற்றும் இராணுவ அதிகாரிகளின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் சிறிலங்கா அதிபரால் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையின் ஐந்து மடங்கிற்கும் அதிகமான இராணுவத்தினர்கள் வடக்கில் குவிக்கப்பட்டுள்ளதாக நான் எனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அதாவது சிறிலங்கா அதிபர் இது தொடர்பில் தவறுதலான தகவலை வழங்கியிருந்தார். இந்த விடயத்தை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் ஆராய்வதற்கு எம்மை அணுகவேண்டும். இதன்மூலம் ஜனநாயக சுதந்திரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற முக்கியப்படுத்தப்பட்டு உறுதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் இவர் நல்லவர் இவர் கெட்டவர் என ஒருவர் மீது முத்திரை குத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஒரு செயற்பாட்டுக்காகச் சண்டை பிடிக்க வேண்டுமே தவிர, நடிகராக இருக்கக் கூடாது என்பதை நினைவிற் கொள்ளுங்கள். 

நி.இ: வடக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் விமர்சித்திருந்தனர். இது வடக்கு மாகாண சபையின் ஆபத்தான வெளிப்பாடு என சிலர் கருதினர். இது தொடர்பான தங்களது கருத்து என்ன? இது வடக்கு மாகாண சபையால் எடுக்கப்பட்ட ஆபத்தான தீர்மானம் இல்லை என மக்களை நீங்கள் எவ்வாறு நம்பவைக்க முடியும்? 

சி.வி.வி: உண்மையை உறுதிப்படுத்துமாறு ஒருவரிடம் கேட்பதில் எவ்வித ஆபத்துமில்லை. உள்நாட்டு விசாரணை அமைப்புக்கள் நம்பகமாகச் செயற்படவில்லை என நாங்கள் கூறுவது ஆபத்தானதா? மிக மோசமான அரசியற் செயற்பாடுகள் இடம்பெறும் சிறிலங்காவில் நீதி எட்டப்பட முடியும் என யாராவது இதயசுத்தியுடன் கூறமுடியுமா? 

போரின் இறுதியில் வடக்கில் எமக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் நாம் விழிப்பாக உள்ளோம். இதைவிட சிறிலங்கா அரசு இது தொடர்பாக நன்கறியும். உண்மை வெளிவரக் கூடாது என சிறிலங்கா அரசாங்கம் விரும்புவதே தற்போதுள்ள பிரச்சினையாகும். தன்னால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளை மறைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடுகிறது. குற்றம் செய்பவர்களுக்கு உடந்தையாக இருத்தல் குற்றம் இழைப்பதற்கு சமானமாகும். ஆகவே ஆபத்தான பாதையில் நடப்பது சிறிலங்கா அரசாங்கமே தவிர வடக்கு மாகாண சபை அல்ல. 

நி.இ: மிக முக்கியமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய வேளையில், 'இனப்படுகொலை' என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், பேச்சாளர் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டியிருந்திருக்கும். நீங்கள் தங்களது விவாதத்தின் போது இனப்படுகொலை என்ற பதத்தை பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் தங்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 'இனப்படுகொலைக்குச் சமமானது' என விசாரணையில் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்நிலையில் இவ்வாறான விவாதமானது சில செயற்பாட்டாளர்களுக்கு அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. 'விக்னேஸ்வரனின் வாதமானது சட்டத்திற்கு மாறானது. இது நீதிச்சேவைக்கு எதிரானது' என சிலர் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான தங்கள் கருத்துக்கள் என்ன? 

சி.வி.வி: நீங்கள் கூறுகின்ற விடயத்தை நான் வாசிக்கவில்லை. இதனால் எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன என்பது எனக்குத் தெரியாது. முதலில் எம்மால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியை இவ்வாறு விமர்சித்தவர்கள் வாசித்தார்களா என்பதைக் கேளுங்கள். போரின் போது மீறல்கள் இடம்பெற்றதாக நான் இத்தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தேன். இந்த மீறல்கள் தொடர்பாக நீதி சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் போரின் இறுதியில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக தெளிவைக் கொண்டுள்ளோம் எனச் சுட்டிக்காட்டியிருந்தேன். சிறிலங்காத் தீவில் காலாதி காலமாக வாழ்ந்த மக்கட் கூட்டத்திற்கு எதிராக போரின் இறுதியில் மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக நாம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இதில் எவ்வித சந்தேகமும் எமக்கில்லை. நீதி சார் விசாரணைகளின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் போதே எமது அபிப்பிராயம் சரியா பிழையா என்பது தெரியவரும். இந்த விடயங்கள் நாங்கள் உணர்ச்சி வசப்படாது, நடைமுறை ரீதியாகவும் யதார்த்த ரீதியாகவும் சிந்திக்க வேண்டும் என நான் குறிப்பிட்டிருந்தேன். 

நி.இ: அதிகாரப் பரவலாக்கல், அநீதிக்கு எதிராகப் போரிடுதல், மத்திய அரசாங்கத்துடன் உறவைப் பேணுதல் போன்றன அரசியல் யாப்பு மாற்றப்படாவிட்டால் பொய்த்துப் போய்விடும் என நான் கருதுகிறேன். நாட்டில் உள்ள அரசியல் யாப்பின் குறைபாடுகளைக் கதைப்பதற்கு ஏன் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தயக்கம் கொள்கின்றனர்? இந்த நாட்டில் நிலவும் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமைக்கு எதிராக நீங்கள் ஏன் ஒரு தீர்மானத்தை முன்வைக்க முடியாது? நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையால் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் போன்றன தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைவருக்கும் மறுக்கப்படும் இந்நிலையில் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை ஒழிப்பதற்கான தீர்மானத்தை நீங்கள் ஏன் முன்வைக்க முடியாது? 

சி.வி.வி: நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என விளங்கிக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் எங்களில் குறைகாண முடியாது. வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது எம்மால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விளக்கவுரையில் நாங்கள் குறிப்பாக அரசியல் யாப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தோம். சமஸ்டி நிர்வாக அரசியல் யாப்பை நாம் முன்னர் கொண்டிருந்தோம். இது தற்போது ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பாக மாறியுள்ளது. சமஸ்டி ஆட்சி போன்று, ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் மிகக் கூடிய அரசியல் அதிகாரத்தைப் பகிருகின்ற அரசியல் யாப்பொன்றை நாம் முன்னர் கொண்டிருந்தோம். 

நிறைவேற்று அதிகார முறைமையானது தனியொருவர் நாட்டை ஆளுகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் மக்களின் அதிகார ஆட்சி தற்போது தனியொருவரிடம் சேரும் நிலை ஏற்பட்டது. 1973 அரசியல் சீர்திருத்தத்தின் பிரகாரம், தமிழ் மக்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக மாறவேண்டிய நிலை ஏற்பட்டதை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஆனால் அப்போது நிறைவேற்று அதிபர் முறைமை காணப்படவில்லை. நிறைவேற்று அதிகார முறைமையைக் கொண்ட 1978 அரசியல் யாப்பு மற்றும் மிக மோசமான 18வது திருத்தச் சட்டம் போன்றவற்றை நான் எனது பல உரைகளில் குற்றம் சுமத்தியுள்ளேன். இந்த முறைமைகளால் தனியொருவர் நாட்டின் அதிகாரத்தைத் தக்க வைத்திருக்க முடியும். 

நி.இ: தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் ஒற்றுமையாக வாழ்ந்தனர். ஏன் இவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர் எனவும் தமது காணிகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கவில்லை என்பது தொடர்பில் சிங்கள அரசியல்வாதிகள் மிகவும் பலமான விவாதத்தைக் கொண்டுள்ளனர். வடக்கில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இது தொடர்பில் தங்கள் விளக்கம் என்ன? 

சி.வி.வி:  சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்த்தப்பட்ட அனைத்து மக்களும் மீளக்குடியேற்றப்பட வேண்டும். எவ்வாறெனினும், உண்மையில் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேற்றப்பட வேண்டும். மக்களின் வாழ்வியலில் பலவந்தமாக மாற்றத்தை ஏற்படுத்துவது மறுக்கப்பட வேண்டும். தமது சொந்த இடங்களுக்கு வருபவர்கள் தமது அடையாளங்களை சரியாக உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில் சிறிலங்கா அரசாங்கத்தால் அல்லது குறித்த சிங்கள தேசியவாத அமைப்புக்களால் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் இடம்பெறுவதால் மக்கள் தமது சொந்த இடங்களை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. 

முஸ்லீம் மக்களைப் பொறுத்தளவில் அவர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான நிறுவகம் ஒன்றை நாம் விரைவில் அமைக்கவுள்ளோம். வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என நாங்கள் ஏற்கனவே எமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். மக்களும் இது தொடர்பில் தமது ஆணையை வழங்கியுள்ளனர். இதை நிறைவேற்றுவது எமது கடமையாகும். தனது சொந்த அரசியல் நலனுக்காக வெளியாட்களை வடக்கில் குடியேற்ற முயற்சிக்கும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நாம் கவனம் செலுத்தவில்லை எனக் கருதக்கூடாது. 

சிங்களவர்கள் வடக்கில் எங்கே வசித்தார்கள் என்பதை எமது மூத்தவர்கள் இலகுவாக இனங்காட்டுவார்கள். இவர்கள் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையினரே. எடுத்துக்காட்டாக, நான் மிகச் சிறியவனாக இருந்தபோது மானிப்பானியில் எமக்குப் பாண் விற்றவர் மாத்தறையைச் சேர்ந்த அப்புகாமி ஆவார். இவர் மிகவும் அன்பானவர். இவர் யாழ்ப்பாண மக்களைப் போல மிகவும் அழகாக தமிழ் பேசுவார். இதேபோன்று அளவெட்டியைச் சேர்ந்த மூத்த சட்டவாளர் இளையதம்பி தமக்கு பாண் விற்ற சிங்களவர் தொடர்பாகக் கூறினார். இவரும் நீண்டகாலம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்ததாகவும் தமிழை நன்றாகப் பேசுவார் எனவும் இளையதம்பி என்னிடம் தெரிவித்திருந்தார். 1983ல், சிறிலங்கா இராணுவத்தினர் இவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி குறித்த சிங்களவரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றினர். இவ்வாறானவர்கள் தமது அடையாளங்களை உறுதிப்படுத்தும் போது இவர்கள் மீண்டும் குடியேற்றப்பட முடியும். 

சிறிலங்காவின் தெற்கிலும் தமிழ் மக்கள் வாழ்ந்தனர் என்பதை மறக்கக் கூடாது. மாத்தறையில் ஆலய பரிபாலன சபை ஒன்று உள்ளது. இதன் தலைவராக ஓய்வுபெற்ற ஆணையாளர் திரு.கிருஸ்ணதாசன் செயற்பட்டார். ஆனால் தற்போது இந்தப் பரிபாலனசபை செயற்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் சொத்துக்கள் மீளவும் கையளிக்கப்பட்டதா? இதற்காக இவர்கள் முயற்சி செய்தும் தோல்வியடைந்து விட்டது. 1950 களில் 60 களின் ஆரம்பத்தில் திஸமகரகமவில் அரைவாசி நெல்வயல்களை திரு.பசுபதி மற்றும் அவரது சகோதரர் வைத்திருந்தனர். ஆனால் இவை அனைத்தும் கலவரத்தின் போது கூலிப்படைகளால் அழிக்கப்பட்டன. இதனால் இங்கு மீளச் செல்வதற்கான சந்தர்ப்பம் இவர்களுக்குக் கிடைக்கவில்லை. தென் சிறிலங்காவிலிருந்து தமிழர்கள் திட்டமிட்ட ரீதியில் வெளியேற்றப்பட்டனர். தற்போது வடக்கில் சிங்களவர்கள் குடியேற்றப்படுவதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கிறது. நாங்கள் இதற்கான தீர்வைச் சட்டத்தின் மூலம் அடைய விரும்புகிறோம். 

நி.இ: கொழும்பில் பெரும்பாலான தமிழ் மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ்கின்றனர். இந்த சாதகமான நிலையை ஏன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்த முடியாது? 

சி.வி.வி: 'ஏனையவர்கள்' கொழும்பில் பெரும்பாலான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். இதனால் அங்கே அமைதி நிலவுகிறது. கொழும்பில் தற்போதும் கூட ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள முடிகிறது. கொழும்பில் வாழ்பவர்கள் ஆங்கிலத்தில், சிங்களத்தில் அல்லது தமிழில் உரையாட முடியும். இவற்றைவிட, கொழும்பில் தூதரங்கள் காணப்படுகின்றன. இதனால் இங்கு அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பு உள்ளது. இதனால் கொழும்பில் அமைதி நிலவ வாய்ப்புக்கள் காணப்படுகின்றது. 
வடக்கில் சமாதானத்துடன் வாழ்வதற்கு நீங்கள் எம்மை அனுமதித்தால் நாங்கள் எவ்வித சந்தேகமுமின்றி அமைதியுடன் வாழ்வோம். வடக்கு மாகாணத்தின் வரலாற்றை மீளஎழுத முயற்சித்து, இங்கு சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டால் எவ்வாறு அமைதி நிலவ முடியும்? மக்களின் நாளாந்த வாழ்வில் சிறிலங்கா இராணுவத்தின் தலையீடுகள் அதிகம் காணப்படுகின்றன. ஏற்கனவே வடக்கு மாகாண சபை சுயாதீனமாக இயங்குவதற்குத் தேவையான அதிகாரங்கள் மறுக்கப்பட்ட நிலையில், நாங்கள் எவ்வாறு இங்கு சமாதானமாக வாழமுடியும்? 

வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழ்ந்த மக்கள் பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்பட்டனர். 1983 என்பது மிகவும் மோசமான ஆண்டாகும். பிந்துனுவௌ மற்றும் ஏனைய இடங்களில் பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றன. மதத் தீவிரவாதம் தற்போது தெற்கு மற்றும் மேற்கில் தலைவிரித்தாடுகிறது. முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் இந்துக்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் எவ்வாறு சமாதானமான அமைதியான வாழ்வை நிலைநாட்ட முடியும்? 

நி.இ: மிக மோசமான அனுபவங்களைக் கொண்ட நாட்டில் நாம் வாழ்கிறோம். பல நூறாண்டுகளாக, நாங்கள் சுதந்திரத்திற்காகப் போராடினோம். ஆனால் நாங்கள் இதனை அடைந்தோமா? நாங்கள் இந்த உலகில் மிக மோசமாக நடாத்தப்படும் மக்களாக மாறினோம். எமது தலைவர்கள் எம்மைப் பாதுகாப்பார்கள் என நாம் கருதினோம். ஆனால் இதற்குப் பதிலாக எமது சுதந்திரத்தை அவர்கள் பறித்தார்கள். இதனால் எமக்கு பாதுகாப்போ அன்றி விடுதலையோ கிடைக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளால் கலாநிதி ராஜினி திறனாகம படுகொலை செய்ததிலிருந்து முதலாவது பெண் பிரதம நீதியரசர் சிறிலங்கா அதிபரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை வரை நாங்கள் அண்மையில் பல்வேறு சோகமான, மோசமான மற்றும் விசர்த்தனமான அனுபவங்களைப் பெற்றுள்ளோம். மிகவும் அடிப்படைவாதக் கேள்விக்குப் பதிலளிக்கப்பட வேண்டும். நாங்கள் எவ்வாறு ஒருவரையொருவர் மதிக்கத் தொடங்கப் போகிறோம்? எமக்கு உண்மையில் என்ன தேவை என்பதை நாங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கப் போகிறோம்? 

சி.வி.வி: நீங்கள் இத்தகைய கேள்வியை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரிடம் வினவக்கூடாது. நீங்கள் இதனைப் பழைய விக்னேஸ்வரனிடம் வினவவேண்டும். இதற்கான பதில் அவரிடமிருந்து வருமே ஒழிய முதலமைச்சர் விக்னேஸ்வரனிடமிருந்து கிடைக்காது. 

உங்களது கேள்விக்கு எமது மதங்கள் அனைத்தும் பதிலளித்துள்ளன. எமது மத நெறிமுறைகளில் என்ன கூறப்பட்டுள்ளன என்பதை நாங்கள் மறந்துவிட்டோம். பௌத்தமதத்தை எடுத்துக் கொண்டால், விரதமிருத்தல் என்பது எமது நோய்களைத் தீர்ப்பதற்காகும். கெட்டவாய்ப்பாக, எமது அரசியல்வாதிகள் அதிகாரங்களைக் கொண்டுள்ளனர். இவர்கள் தமக்கான அதிகாரங்களை தமது நலன்களுக்காகப் பயன்படுத்துகின்றனர். தமக்காக வாக்களித்த மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்காகவே தாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளோம் என்பதை அரசியல்வாதிகள் மறந்துவிட்டனர். அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதை நிறுத்த வேண்டும். சமாதான நடவடிக்கையின் போது பெருமளவான தென் சிறிலங்கர்கள் தமது ஆதரவை வழங்கினர். ஆகவே மக்களை வழிநடாத்த வேண்டியது அரசாங்கமே. அரசியல் உறுதியையும் அதிகார ஈடுபாட்டுடனும் அரசியல்வாதிகள் செயற்பட்டால் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

நி.இ: கலந்துரையாடுவதற்கு இன்னமும் அதிகமான விடயங்கள் உள்ளபோதிலும் அதற்கான நேரம் போதாது. ஆனால் இந்த முதலாவது நேர்காணலில் நாங்கள் மிக முக்கிய விடயங்களைக் கலந்துரையாடியுள்ளோம் என நான் நம்புகிறேன். நான் மீண்டும் உங்களுடன் நேர்காணலை மேற்கொள்வேன் என நம்புகிறேன். இதற்கும் மேலாக நீங்கள் ஏதாவது கூறவிரும்புகிறீர்களா? 

சி.வி.வி: ஆம். சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் சிங்கள மக்கள் தமிழ் மக்கள் தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள். இந்த மக்கள் உண்மைகளைக் கண்டறியவேண்டும் என நான் விரும்புகிறேன். பல்வேறு அமைப்புக்களால் சித்தரிக்கப்படுவது போன்ற நிலைமை மிக மோசமானதல்ல என்பதை நீங்கள் தற்போதைய நேர்காணல் மூலம் உணர்ந்திருப்பீர்கள். நாங்கள் எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொருத்தமான தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பை நாம் பயன்படுத்தியிருக்கலாம் என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். தமிழ் பேசும் மக்கள் மிகத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். இவர்கள் வன்முறைகளை விரும்பவில்லை. இவர்கள் ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் அரசியற் தீர்வொன்று எட்டப்படுவதற்கான ஆதரவை வழங்குகின்றனர். தமிழ் பேசும் மக்கள் உங்களைப் போன்றே இந்த நாட்டை மிகவும் நேசிக்கிறார்கள். ஆனால் இவர்கள் மனிதர்களின் பாதுகாப்பு, அடிப்படைவாத சுதந்திரம் தமது பாரம்பரிய இடங்களில் தமது விவகாரங்களைத் தாமே நிர்வகிப்பதற்கான உரிமை போன்றவற்றையே கோரிநிற்கின்றனர். 

நீங்கள் எல்லோரும் சமாதானம் மற்றும் செழுமையுடன் வாழ்வதற்கு கடவுள் வழிகாட்டுவார். உங்களுக்கு நன்றி.

*Nilantha Ilanguamuwa edits the Sri Lanka Guardian, an online daily newspaper, and he also an editor of the Torture: Asian and Global Perspectives, bi-monthly print magazine. He is the author of the just released non-fiction, "Nagna Balaya" (The Naked Power), in Sihalaese.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140227110044

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.