வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு வெளியானதும் சர்ச்சை - என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,FACEBOOK
கட்டுரை தகவல்
நந்தினி வெள்ளைச்சாமி
பிபிசி தமிழ்
17 மார்ச் 2026, 09:58 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பிரபல கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மீதான மீடூ' குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன.
வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த முக்கிய நபர்களுள் ஒருவரான பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதையும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பவர்களையும் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார்.
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது குறித்து இலக்கிய உலகிலும் சர்ச்சை எழுந்துள்ளது.
தனக்கு விருது வழங்கப்படுவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்த வைரமுத்துவின் கருத்தை அறிய அவரை பிபிசி தமிழ் தொடர்புகொள்ள முயன்றது. எனினும், அவருடைய கருத்தை அறிய முடியவில்லை. அவருடைய கருத்து பெறப்பட்டவுடன் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.
பாரதிய ஞானபீடம் (jnanpith) எனும் சுயாதீன அமைப்பால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மொழி இலக்கியங்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ. 11 லட்சம் பணமும், வெண்கல சரஸ்வதி சிலையும் விருது பெறும் நபருக்கு குடியரசு தலைவரின் கைகளால் வழங்கப்படும்.
தமிழ் மொழியில் இதுவரை 1975-ம் ஆண்டில் எழுத்தாளர் அகிலனுக்கும் 2002-ம் ஆண்டில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இந்த விருதை பெறுபவராக ஆகியிருக்கிறார் வைரமுத்து.
வைரமுத்துவுக்கு பாராட்டு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் வைரமுத்துவை பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஞானபீட விருது பெறுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வைரமுத்து, "கால் நூற்றாண்டுக்குப் பிறகு வாராது வந்த மாமணியாக தமிழுக்கு இந்த விருது வந்திருக்கிறது. என்னை நானே வியந்துகொள்கிறேன். மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்." என தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் கேள்வி கேட்கலாம் என தெரிவித்த வைரமுத்து, அவை ஞானபீட விருது மற்றும் தமிழ் தொடர்பானதாக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். அதுபோன்றே, செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
1980-ல் வெளியான நிழல்கள் படத்தில் 'இது ஒரு பொன்மாலை பொழுது' என்ற பாடல் மூலம் திரையுலகில் வைரமுத்து அறிமுகமானார்.
கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட புதினங்கள், பல கவிதை மற்றும் கட்டுரை தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
சாகித்ய அகாடமி, தேசிய விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வைரமுத்து பெற்றுள்ளார்.
தற்போது வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது தொடர்பான வாழ்த்துகளுக்கு மத்தியில் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
பின்னணி பாடகி சின்மயி விமர்சனம்
பட மூலாதாரம்,Chinmayi Sripada
படக்குறிப்பு,சின்மயி
குறிப்பாக, வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகாரை முன்வைத்த சின்மயி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய சின்மயி, "வைரமுத்து மீது புகார் கொடுத்ததால் நான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து தடை செய்யப்பட்டேன். சினிமாவில் உள்ள பலதுறை சங்கங்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. என் மீது சமூக வலைதளங்களில் இன்னும் விமர்சனங்கள் தொடர்கின்றன. 17 பேர் வைரமுத்துவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். மூன்று பேர் வீடியோ முன்பாக வந்து கூறினர். எங்களின் போராட்டம் தனி, சினிமா வாழ்க்கை தனி என பார்க்கின்றனர்" என்றார்.
வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது ஒரு கலைஞரை அவருடைய கலை ரீதியாக மட்டும் அணுக வேண்டுமா அல்லது அவர் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சைகள், செயல்பாடுகளுடன் சேர்த்தே அணுக வேண்டுமா என்ற விவாதத்தையும் தூண்டியுள்ளது.
இதுகுறித்து பதிலளித்த சின்மயி, "கலையையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது." என தெரிவித்தார்.
"என்னுடைய 32 வயதில் இந்த புகாரை கூறினேன். இப்போது எட்டு ஆண்டுகளாகிவிட்டன. 40 வயதாகிறது. என்னுடைய 30 வயதுகளை நான் எப்படி கழிக்க வேண்டுமென நினைத்தேனோ, அப்படி என்னால் கழிக்க முடியவில்லை. என்னுடைய பாடல்கள் பலவும் மிகப்பெரிய ஹிட். ஆனால், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு எனக்கு வாய்ப்புகளே இல்லை." என்கிறார் சின்மயி.
"நான் டப்பிங் பேசுகிறேன் என்றால், அந்த படத்தில் யாரும் டப்பிங் பேச மாட்டார்கள் எனும் அளவுக்கு என்னை ஒதுக்கினர்."
பிரபலம் அடையவும் பணத்துக்காகவும் தான் இத்தகைய குற்றச்சாட்டுகளை சொல்வதாக இன்று வரை தன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக சின்மயி தெரிவித்தார்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க 2018-ஆம் ஆண்டில் 'மீ டூ' இயக்கம் பரவலாக கவனம் பெற்றது. அப்போது வைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டினார்.
வைரமுத்து மீதான சின்மயி குற்றச்சாட்டு என்ன?
2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சின்மயி தனது சமூக ஊடக பதிவில், அந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழ மாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்சர்லாந்தில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியிருந்தார்.
விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் என்று கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.
எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருந்தார்.
ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதுகுறித்து வைரமுத்து அச்சமயத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்." என்று பதிவிட்டார்.
சின்மயி உட்பட 17 பெண்கள் வைரமுத்து மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
2023-ஆம் ஆண்டு புவனா சேஷன் எனும் பாடகியும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
வைரமுத்து உடனான தொலைபேசி உரையாடல்கள் ஒருகட்டத்தில் அசௌகரியமாக உணர வைத்ததாக அச்சமயத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம்,chinmayi/Instagram
படக்குறிப்பு,சின்மயி
வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி 2019-ம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
திரைத்துறையில் உள்ள சங்கங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்கான உள் புகார்கள் குழு (ஐசிசி புகார் குழு) அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் அமைக்கப்படவில்லை என சின்மயி கூறுகிறார்.
வழக்கறிஞர் கருத்து
சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கீதா ராமசேஷன், "சினிமாவின் பல்வேறு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்க சட்டப்படி குழுக்கள் அமைக்க வேண்டும், அதை விசாரிக்க வேண்டும். சினிமா ஓர் அமைப்பாக இல்லை. அங்கு இத்தகைய குழுக்கள் அமைப்பது சவாலாக உள்ளது. கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு பல பரிந்துரைகளை வழங்கியது. தமிழ் சினிமாவில் அப்படி அமைக்கப்படவில்லை. இந்த மாதிரியான புகார்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை." என தெரிவித்தார்.
மலையாள திரை உலகில் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் 2024-ம் ஆண்டு பொது வெளிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்தனர். மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே கூட பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
'சட்ட ரீதியான இடைவெளிகள்'
பட மூலாதாரம்,Tara Krishnaswamy/Facebook
படக்குறிப்பு,தாரா கிருஷ்ணசுவாமி
எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான தாரா கிருஷ்ணசுவாமி கூறுகையில், "தனியார் அறக்கட்டளை வழங்கும் விருதாக இருந்தாலும் இதை வழங்குவது குடியரசு தலைவர். எனவே, அந்த வகையில் அரசுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது." என்றார்.
தாரா கிருஷ்ணசுவாமி, பெண் எம்எல்ஏக்கள், எம்.பிக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வலியுறுத்தும் 'பொலிட்டிக்கல் ஷக்தி' (Political Shakti) எனும் அமைப்பின் இணை நிறுவனராக உள்ளார்.
பெண்ணின் குற்றச்சாட்டுகளை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதில் சட்ட ரீதியாக பல இடைவெளிகள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
"பெண்ணுக்கு எதிரான பல குற்றங்கள், குற்றமாகவே அங்கீகரிக்கப்படவில்லை. திருமண உறவில் பாலியல் துன்புறுத்தல் அதற்கு ஓர் உதாரணம். அமைப்புசாரா தொழிலில் பெண்களுக்கு நேரும் பாலியல் குற்றங்களில் தகுந்த ஆதாரங்களை சேகரிப்பது சவாலாக இருக்கிறது. இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்ற வெளிப்படையான விவாதமே இங்கு நடைபெறவில்லை. பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடிய சமூகமாக, கலாசாரமாகத்தான் இந்திய சமூகம் பெரும்பாலும் இருக்கிறது" என்றார் தாரா கிருஷ்ணசுவாமி.
இலக்கிய உலகில் சர்ச்சை
பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல், இலக்கிய உலகிலும் வைரமுத்துவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஜெயமோகன், பவா செல்லதுரை போன்ற எழுத்தாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
"ஞானபீடப் பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டுள்ளது." என்று எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்துள்ளார்.
அதேவேளையில் வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன.
பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா தன் பேஸ்புக் பக்கத்தில், "இந்திய அளவிலான கவிஞர்களில் தமிழ்நாட்டிலிருந்து ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு பொதுவாக விருதுகள் குறித்து பெரிய பிரமிப்பு ஏதுமில்லை. நான் பெரிய இலக்கிய அறிவு பெற்றவளுமில்லை. எனவே கருத்துரைக்க வேண்டாமென்றே ஒதுங்க எண்ணினேன். ஆனால் முகநூலைத் திறந்ததும் திரண்டு வந்து நின்ற படையைப் பார்த்து அசந்து போனேன்.
ஏதோ புனிதர்களும் தேவதூதர்களுமான இந்த படைப்பாளிகள் உலகத்தில் ஒரேயொரு ஒற்றைக் கறுப்பு மனிதனாக வைரமுத்துவை இவர்கள் சித்தரிப்பதைப் பார்த்த பின் இதுபோன்று ஒரு ரவுடியிசக் கலாசாரத்தை ஆதரிக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு விருதை தாஜா செய்தும் பணம் கொடுத்தும் வாங்குவது எவ்வளவு கேவலமோ அதைவிட கேவலம் இது போன்று ஒருவருக்கு விருதளிக்கப்பட்ட பின் இவ்வளவு பேர் சேர்ந்து சேற்றை வாரியிறைப்பது.
இன்றுவரை நேரம் ஒதுக்கி தமிழ்க் கவிதைகளில் வைரமுத்துவின் இடம் குறித்து படிக்கவில்லை. (எத்தனையோ பாடல்கள் இதயம் தொட்டதுண்டு. அதேபோல் முகம் சுளிக்க வைத்ததும் உண்டு) இப்போதைய எனது நேர நெருக்கடிகளில் உடனடியாக அதனைச் செய்யும் திட்டமுமில்லை. நிச்சயமாக தமிழ் எழுத்து வரிசை குறித்து இன்னும் தீவிர வாசிப்புக்குள் போகும் போது கண்டிப்பாகக் கவிஞர் வைரமுத்துவின் எழுத்தும் என்னுடைய கவனத்தில் இடம் பெறும்." என பதிவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cx24ermz1kyo
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.