Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??
 

 

 

 

வண. சோபித தேரர் அவர்கள் கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகைக்கு ஒரு விரிவான நேர்காணல் வழங்கி இருந்தார். அந்த நேர்காணல் தொடர்பான விடயங்கள்   colombotelegraph.com உட்பட பல இணையத்தளங்களிலும் , சிங்கள , ஆங்கில ஊடகங்களிலும்  வருவதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் , எதிர்பார்ப்பினையும் ,அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை தொடர்பான கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளதுடன், வண. சோபித தேரர் அவர்களின் முழு நேர்காணலும் , தமிழ்சூழலின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.  உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் (ஆசிரியர் குழு)

 

முன்வைக்கப்படும் கருத்துக்கள்/ விமர்சனங்கள்

———————————————–

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரும் திருப்புமுனை என வர்ணிக்கப்படும் அரசியல் வரலாறு தற்போது ஆரம்பித்துள்ளது.

 ஆளும் மகிந்த அரசு நாட்டின் எதிர்காலத்தை மிகவும் மோசமான நிலைக்கு எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும் என்ற உணர்வு ஒரு பிரிவு மக்களிடையே தற்போது வெகுவாக வேர்விட்டு வருகிறது..

CIMG3256-768x1024.jpgநாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டு அரச கட்டுமானம் ராணுவ மயமாக்கலுக்குள் தள்ளப்பட்டு வருகின்ற பின்னணியில் ஆளும் அரசாங்கம் ஓர் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று குடும்ப ஆட்சி என்ற வரையறைக்குள் சென்றுள்ளது.இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

 இதற்கான பிரதான காரணம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையே என்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதி ஆட்சியை முற்றாக ஒழிப்பது பிரதான தேவையாக உள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை யார் மேற்கொள்வதுஅதற்கு ஒருவர் பகிரங்கமாக முன்வந்தால் நாம் ஆதரவு வழங்குதல் வேண்டும்.

 ஐ தே கட்சிக்குள் காணப்படும் உள் முரண்பாடுகளும்அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கா அவர்களின் ஆளுமை தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களும் ஐ தே கட்சி சார்பில் ஜனாதிபதி அபேட்சகரை நியமிப்பதும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாக இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது.

 

 மகிந்த ராஜபக்ஸ அவர்களைத் தோற்கடிக்க வேண்டுமெனில் இலங்கையின் அனைத்துசமூகங்களின் முழுமையான நம்பிக்கையை பெற்ற ஒருவர் போட்டியில் இறங்கினால் மட்டுமே அது சாத்திமாகும். யார் அவர்? வண. சோபித தேரர்இதற்குப் பொருத்தமானவாரா?

 

கடந்த கால தேர்தல்களில் ஐ தே கட்சிக்கு கிடைத்த வாக்குகளை அவதானிக்கும்போது சுமார்30 சதவீத வாக்குகள் தொடர்ச்சியாக அக் கட்சிக்கு கிடைத்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.அவ்வாக்கு வங்கியும் நாளுக்கு நாள் சிதைவடைகிறது . சிறுபான்மை சமூகங்களின் அமோக ஆதரவுடன்ஐ தே கட்சியின் 30 சதவீத ஆதரவையம் கூட்டி சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கணிசமான வாக்ககளைப் பிரித்தால் பலமான வெற்றியை ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றைச் சாதிக்கக்கூடிய ஒருவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா அவர்களே உள்ளதாக பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஆனால் சந்திரிகா அவர்கள் தான் அரசியலிற்கு வரப்போவதில்லை என தொடர்ந்து தெரிவித்து வருவது பலருக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காத்திரமான பிளவினை அவரால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் அவர் அரசியலிலிருந்து விலகி இருக்கப்போவதாக தொடர்ந்து தெரிவிப்பதால் மாற்று ஒருவரை தேடுவது அவசியமாகி உள்ளது.

 தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஓர் அமைப்பை நிறுவி தொடர்ந்து செயற்பட்டு வரும் கோட்டே நாக விகாரையின் பிரதம விகாராதிபதி வண. சோபித தேரர் அவர்களே பொருத்தமானவர் என்ற அபிப்பிராயம் பலரின் மத்தியிலே எழுந்துள்ளது.

வண. சோபித தேரர் அவர்களை ஜனாதிபதி தேர்தலில் ஓர் குறிப்பிட்ட நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காக நிறுத்துவதற்கு யோசனை தெரிவிக்கப்படுகிறது. அதாவது அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு கையளிக்க வேண்டும். ஜனாதிபதி தற்போதுள்ள பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிடவேண்டும். புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை வரைந்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இவ் அரசியல் அமைப்பு ஜனாதிபதி பதவியை நீக்கிய ஒன்றாகவும்பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் ஒன்றாகவும் அமையும். இதற்கான மாதிரி அரசியல் அமைப்பு ஏற்கெனவே அரசியல் அமைப்பு நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 வண. சோபித தேரர் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் புதிய அரசியல் அமைப்பு செயலுக்கு வரும் வகையில் செயற்படுவார். புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட்டதும் அவர் பதவியிலிருந்து தாமாக விலகுவார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வண. சோபித தேரர் அவர்கள் ஓர் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே போட்டியிடுவார். அதாவது ஒற்றைப் பரிமாணமுள்ள நோக்கில் அவரது போட்டி அமையும்.நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியை ஒழித்து பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் புதிய அரசியல் அமைப்பை செயற்படுத்துவதோடு அவரது பதவிக் காலம் முடிவுபெறும். இது  முக்கிய விடயம்.

exacutive-1024x121.png

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் இத் தேர்தலில் போட்டியிட்டால் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து நிராகரித்து வருவதால் வண. சோபித தேரர் அவர்கள்  தாமாக முன் வந்து மிகப் பகிரங்கமாகவே இச் சவாலை வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.இவ்வாறான சூழலில்எதிர்காலத்தில் இத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அல்லது முன்னாள் நீதியரசர் போட்டியிட முன்வருவார்கள் எனில் தாம் அப் போட்டியிலிருந்து மகிழ்ச்சியோடு விலகுவதாக தெரிவித்துள்ளார். ஒரு சரியான மாற்று இல்லாதால்தான் அவர் இந்த பொறுப்பினை எடுக்க முன் வந்துள்ளார்.

மகிந்த அரசுக்குள் மிக அதிக அளவிலான உள் முரண்பாடுகளும்பிரதமரே ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுவதாகவும்கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் அதிருப்தி நிலையில்  இருப்பது அடிக்கடி வெளிப்படுகிறது./

சர்வதேச சமூகத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் போர்க்குற்றம் தொடர்பாக வண. சோபித தேரர் அவர்கள்  கருத்துக்கள் பலரை ஆச்சரியத்திற்குள் தள்ளியுள்ளன. நாட்டின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகிறது?

 ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் அறிவித்தலை மேற்கொள்ள தமிழ் பத்திரிகையை தேர்ந்தெடுத்தமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த விபரங்கள் ஏற்கெனவே பல மாதங்களுக்கு முன்னர் வந்த போதிலும் வண. சோபித தேரர் போட்டியிட வேண்டும் என்ற வேண்டுகோள்களே கடந்த காலங்களில் காணப்பட்டன. ஆனால் முதல் தடவையாக தமிழ்ப் பத்திரிகை வாயிலாக அவரது விருப்பம் வெளியிடப்பட்டது.இது அரசியல் நோக்கம் கொண்டதுஎன சொல்லப்படிகிறது. அத்துடன் புலிகள் இதற்குப் பின்னால் இருக்கலாம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. ஒரு பகுதியினர் இப் பௌத்த பிக்குவை புலிகளின் ஆதரவாளர் எனப் பட்டங்கட்டி அவரது நோக்கங்களை கிண்டலடிக்கிறார்கள் .

இவரும் அடுத்த சரத் பொன்சேகா எனவும், இவர் பலமான அடி வாங்குவது உறுதி எனவும் கருத்துகள் வைக்கப்படுவதுடன், மகிந்த ராஜபக்சவின் அரசை இன்றைய நிலையில் யாராலும் அசைக்க முடியாது எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.

போரை நடத்திய சரத் பொன்சேகா அவர்களை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்த தமிழ் மக்கள் பௌத்த துறவியை மகிந்த ஆட்சியை அகற்றவதற்காக ஆதரிப்பது சாத்தியமே என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

 வண. சோபித தேரர் அவர்களின் இந்த அறிவித்தல் பல தரப்பினருக்கு சவாலாக மாறியுள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக மகிந்த ஆட்சியை அகற்றவேண்டுமெனக் கூறி வரும் ஐ தே கட்சிஜே வி பி தமிழர் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இந்த ஒற்றை நோக்கத்தில் போட்டியிடவுள்ள அபேட்சகர் குறித்து தமது கருத்துகளை வெளியிடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். இனிமேல் பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். இதோ நான் போட்டியிடத் தயாராக உள்ளேன். எனது நிலைப்பாடு இதுதான். ஆதரிக்கத் தயாராஅதுமட்டுமல்ல அரசாங்கத்தின் அங்கமாக உள்ள இடதுசாரிக் கட்சிகள் நிலையும் சிக்கலாகியுள்ளது. மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கு முன்பதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை அவரே கலைக்க வேண்டும். இல்லையேல் அதனை அகற்றும் நிகழ்ச்சி நிரலுடன் பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ஏற்கெனவே எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தன.

 இந்த நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து சந்திரிகா அவர்கள் இவ்வாறான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றினார். தற்போது காவி உடையை நம்ப வேண்டுமாஎனவும்சிங்கள வாக்காளர்களுக்கு தனது எண்ணங்களை மறைக்கவும் தமிழர்களை ஏமாற்றவும் தமிழ்ப் பத்திரிகையை தேர்ந்தெடுத்துள்ளார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. புத்த மதத்திற்கு எதிரானவர்கள் பௌத்த பிக்குவை ஆதரிப்பதன் மூலம் தமது பழிவாங்கலை மேற்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் எனவும் இந்த அறிவிப்பு மகிந்த ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல புலி ஆதரவாளர்களுக்கும் திகிலை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஏனெனில் சிங்கள மக்கள் தமது பிரச்சனைகளை மிகவும் நாகரீகமான முறையில் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பதை இவை எடுத்துக் காட்டுவதாகவும்சொல்லப்படுகிறது.  

தேசிய இனப் பிரச்சனை குறித்தும்நாட்டின் பொருளாதாரக் கட்டுமானம் குறித்தும்சர்வதேச அரசுகளால் முன்னெடுக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் குறித்தும் மிகவும் தெளிவான நிலைப்பாடுகளைக் வண. சோபித தேரர்  கொண்டுள்ளார் என்றும் சிங்கள பௌத்த சமூகத்திலிருந்தே அவர்இவற்றை முன்வைப்பது சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதுஎனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்  என்பதனை உடன் பதிவிடுங்கள்………

—————————————————————————————————————

நேர்காணல் வண. சோபித தேரர்

நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார்
6 மாதங்களே ஜனாதிபதியாக இருக்க முடியும்

நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும்.  பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்த தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம்.
இலங்கைக்கு எதிராக  சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.  குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.  சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும்.

ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்படக்கூடியவர் பொதுவேட்பாளரில் இருந்து  தெரிவு செய்யப்படுவார். அவர் 6 மாதங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன் பிறகு அவர் வேறொருவருக்கு அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு  பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி பிரதமர்  ஒருவரை நியமிக்க வேண்டும்.  சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்கி 18 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். என கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி  ஓமல்பே சோபித தேரர் தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

 

கேள்வி: இன்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என  கூறிவருகின்றீர்களா?

 

பதில்: 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவினால்  முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்புத்தான் இதுவரை நடைமுறையில் இருக்கின்றது. அன்று ஆறுக்கு ஐந்து என்ற பெரும்பான்மை அதிகாரம் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு இருந்தது.  இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திதான் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தினார். அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால்  சர்வாதிகாரப் போக்கு  உண்டாகும் என  தெரிவித்தார். எனவே இதனை நீக்க வேண்டும் எனவும் அவர் குரல் எழுப்பினார்.  அதேபோல பேராசிரியர் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர் த சில்வா, சி.விக்கிரமசிங்க போன்ற இடதுசாரித் தலைவர்கள் ஹைபாக் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றையும் பேரணி ஒன்றையும் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக  நடத்தினர்.  அன்றிலிருந்து இன்றுவரை  தொடர்ந்து எதிர்ப்புக்கள்  வந்துக்கொண்டே இருக்கின்றன.

அதேபோல, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்த போது  ஜனாதிபதியுடைய அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவதாகக் கூறி  நாள் ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் அதை செய்யவில்லை.  எனவே  தான் ஜே.வி.பி.யும் கூட்டணியில் இருந்து விலகியது. சந்திரிக்காவிற்கு  நிறைவேற்று முறைமையை மாற்றக்கூடிய அதிகாரம் இருக்கவில்லை.

அடுத்தபடியாக மகிந்த ராஜபக்ஷ அந்தக் காலம் முதலேயே  ஜனாதிபதி முறைமையை மாற்றவேண்டும் என கதிர்காமத்திற்கு நடைபவணி சென்றார். இந்த நடைபவணியின் நோக்கத்தில்  நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்பதே இருந்தது.  மகிந்த ராஜபக்ஷ, அணுரபண்டாரநாயக்க போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவொன்றும் இருந்தது.  அடுத்தபடியாக மகிந்த சிந்தனையில் நான்  ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின்  அதிகாரங்களை  பாராளுமன்றத்திற்கு வழங்கி  பிரதமர் ஒருவரை நியமிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதை செய்யவில்லை. ஆனால், அவருக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையிருக்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி  நீதித்துறையில் தலையிட்டார்.  அதனால்  நீதியரசர் நெவில் சமரகோன் பதவி விலகினார்.  இன்று  நீதி, நிர்வாகம், நிதி போன்ற எல்லா துறைகளிலும் ஜனாதிபதியின் தலையீடு இருக்கிறது. அதன் காரணமாகவே 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பிற்கு எதிராக வாதம் எழுந்துள்ளது.  நிறைவேற்று அதிகாரமுறைமையை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி கூட அதை எதிர்க்கிறது.  நிறைவேற்று அதிகாரமுறைமையை நீக்குகின்ற காலம், தேவை  ஏற்பட்டுள்ளது.  இன்று எந்த கட்சி இந்த முறைமையை ஆதரிக்கின்றது என்பதை நான் கேட்டுகொள்ள விரும்புகின்றேன். அதற்காக பல கட்சிகளுடன்  கலந்துரையாடியுள்ளேன். கூடிய விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்படும்.

 

கேள்வி : நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்று கூறும் நீங்கள் அதற்காக எத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள்?

பதில்:  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முதல் தேர்தல் முறையை மாற்ற வேண்டும். ஆரம்பத்தில் எங்களுக்கு என பிரதி நிதி மாவட்ட அடிப்படையில் இருந்தார். ஆனால், இன்று  மாகாண மட்டத்திலேயே ஒரு பிரதிநிதி இருக்கின்றார். மாவட்ட பிரதிநிதி எனும் போது அதிகளவு பொறுப்புக்கூறவேண்டியவராக இருப்பார். ஆனால், மாகாணம் எனும் போது  பெரிய நிலப்பரப்பில்  அதிக மக்களை உள்ளடக்கி இருப்பதால் பொறுப்புக்கூறுவது கடினம். தலைவர் என்ற  பெயர் மட்டுமே இருக்கும்.  கோடிக்கணக்கில் மாகாணத்திற்கு செலவு செய்வார். அதில் குறித்த மாகாணத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை கூறமுடியாது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது. மாகாண சபைக்கு கூட தெரிவு செய்ய மாட்டார்கள்.

எனவே,  லஞ்சம் ஊழல் அதிகரிக்கின்றது. தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பதவிக்கு வந்த பின்னர்  மாறுகின்றனர். தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என அமைச்சர் குணவர்தன  தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினது அறிக்கையும் வெளியிடப்பட்டது. இருந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அரசாங்க அறிக்கையின் படி சிறுபான்மை சமூகத்தினரும்  தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள்.

அடுத்ததாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களை கேட்காமல் கட்சி மாறுகின்றனர்.  மக்கள் வழங்கிய வரப்பிரசாதத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றனர்.  இன்று  பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது விலைபேசி விற்கக் கூடிய ஒரு பொருளாகிவிட்டது. இது விலைபோகும் பதவி என்று அனைவருக்கும் தெரியும். இந்த முறை மாற்றப்பட வேண்டும். கட்சி மாறுவதாக இருந்தால் கட்சியில் இருந்தது விலகி ராஜினாமா செய்ய வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை வரையறைபடுத்த வேண்டும். லலித் எத்துலத் முதலி காலத்தில் பாராளுமன்றத்திற்கு 25 CIMG3264-300x225.jpgஉறுப்பினர்கள்  போதும் என குறிப்பிட்டார்.  ஆனால், இன்று குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வழங்கி  பாராளுமன்றத்தை நிரப்பி விட்டிருக்கின்றார்கள்.
தேர்தல் ஆணையாளருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.  கடந்த  கால தேர்தல்களில் தேர்தல் வன்முறைகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். ஆனால், இன்று  தேர்தலில் குற்றவாளி யார் என்று தெரிந்திருந்தும் அவர்களை கைதுசெய்ய முடியாதளவிற்கு  அதிகாரமில்லாதவராக தேர்தல் ஆணையாளர் இருக்கிறார். அடுத்தது நீதித்துறையில் தலையிடுகின்ற அதிகாரத்தை குறைக்க வேண்டும்.  நீதியான சுதந்திரமான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படவேண்டும். தேர்தல் ஒன்றை நடத்துவதாக இருந்தால் ஊடகவியலாளர்கள், மக்கள், குற்றவாளிகள், நீதித்துறை, பொலிஸ் போன்ற அனைவரையும் தன்வசப்படுத்தி  நடத்துகின்றனர்.  இதனால் நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவொன்று  அதிகாரத்துடன் உருவாக்கப்படவேண்டும்.  சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு எவ்வளவு ஊழல் இடம்பெற்றிருக்கிறது என்பதை  இந்த ஆணைக்குழு நிரூபிக்க வேண்டும். இன்று ஒரு அமைச்சருக்கான செலவு 4000 கோடி என்று கூறப்படுகிறது. சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவருக்கு இத்தகைய செலவுகள் எப்படி அதிகரித்தது. அடுத்ததாக தகவல் அறியும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். செலவு செய்கின்றார்கள் என்று சொல்லும் போது எவ்வளவு செலவு செய்கின்றார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு தகவல் அறியும் சட்டம் அவசியம்.

குற்றம் செய்தவர் கேள்வி கேட்கின்ற நிலைமையை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில்  பார்க்க முடிந்தது. சுதந்திரமான நீதித்துறை இங்கு இல்லை. இன்றுள்ள பிரதம நீதியரசர் ஜனாதிபதியுடைய ஆலோசகர். அவர் எவ்வாறு ஜனாதிக்கு எதிரான தீர்ப்பொன்றை வழங்குவார். மாவட்ட நீதிவான், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு நீதிபதிகள் போன்ற  அனைத்து நீதித்துறை நியமனங்களையும் ஜனாதிபதியே வழங்குகின்றார். அவரால் நியமனம்  பெறும் போது  இலங்கை அரசுக்கு கட்டுப்பட்டவர் என்ற நிலைமையை அந்த  நியமனம் உறுதிப்படுத்துகின்றது. சட்டமா அதிபர் திணைக்களமும்  ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்கு கீழே இருக்கிறது.

இது தொடர்பாக இன,மத, மொழி கடந்து மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்படக்கூடியவர் பொதுவேட்பாளரில் இருந்து  தெரிவு செய்யப்படுவார். அவர் 6 மாதங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன் பிறகு அவர் வேறொருவருக்கு அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு  பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி பிரதமர்  ஒருவரை நியமிக்க வேண்டும்.

சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்கி 18¬ ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  ஒருவர் எத்தனை முறைவேண்டுமானாலும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படலாம் என்ற நிலைமை மாற வேண்டும். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

 

கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார குமாரதுங்கவை  பொதுவேட்பாளராக  நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

பதில்: யார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் எமக்கு கவலை இல்லை. ஆனால், அவர் 6 மாதங்களே பதவி வகிக்க வேண்டும்.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நாடி  பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருவதாக நானும் அறிந்தேன். அதற்கு அவர் தெளிவான ஒரு பதிலை இன்னும் அளிக்கவில்லை.  எங்களுடைய கொள்கைக்கு இணங்கி ஒருவர்  போட்டியிடுவதற்கு முன்வருவாராக இருந்தால் அவரை நாங்கள் பொதுவேட்பாளராக முன்நிறுத்துவோம். பொதுவேட்பாளர் என்பது இங்கு முக்கியம் அல்ல. அவர் என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியம். சந்திரிக்கா விருப்பப்பட்டால் பொதுவேட்பாளராக நிறுத்த   நாங்கள் தயார்.

 

கேள்வி :  ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நீங்கள் நிற்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்:  நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும்.  பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்த தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம்.

 

கேள்வி : வடமாகாண சபை சுயாதீனமாக செயற்பட முடியவில்லை என வடமாகாண முதலமைச்சர் கூறுகின்றாரே இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்: சுயாதீனமாக செயற்படமுடியாமைக்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமையே காரணம்.  பொலிஸ், காணி ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இருக்குமாக இருந்தால் மாகாண சபையும் சுயாதீனமாக செயற்பட முடியும்.  மாவட்ட  ஆட்சிமுறை இருந்தால் மாகாணசபை  இல்லாமல் செய்யப்படும். மாகாண சபையை பெரியதொரு நிலப்பரப்பாக அரசாங்கம் பார்க்கின்றதோ தெரியவில்லை.  எனினும் மாகாண ஆட்சி முறைமை  சீராக நடைபெறுவதற்கு அரசியல் யாப்பு நடைமுறையை பின்பற்றினாலேயே போதுமானதாகும்.

 

கேள்வி :  தென்,மேல், மாகாண  சபைத் தேர்தல்களில்  நடிகர் நடிகைகள் வேட்பாளராக நிறுத்தப்படுவது தொடர்பாக உங்களது கருத்து என்ன?

பதில் : எந்தவொரு தொழிலுக்கும் அனுபவம், தொழில் தகைமை என்று இருக்கின்றது. இந்தத் தொழிலை இவர்கள் தான் செய்யவேண்டும் என்று இல்லை. தகுதி இருந்தால் செய்யலாம். ஆனால, அரசியல் என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை.  பொதுமக்கள் நலன்கருதிய ஒரு சேவை. முழு நாட்டையும் நிர்வகிக்க வேண்டும்.  அந்த செயற்பாட்டில்  எல்லோராலும் ரூடவ்டுபட முடியாது. இது மக்களை திசைதிருப்பி வாக்குகளை சிதறடிக்கும் ஒரு முறையாகும்.நடிகை,நடிகர்கள்,பாடகர்கள் முகத்தைப் பார்த்து புள்ளடியிட வேண்டாம். எந்தவொரு கட்சியிலும் வேட்பாளராக இருந்தாலும் உங்களுக்கு இவரால் ஏதேனும் பயன் இருக்கின்றதா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

 

கேள்வி : ஆட்சி கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா?

பதில் : ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று அரசாங்கத்திற்குள்ளேயே குழப்பங்கள் தோன்றியுள்ளன.   இந்த குழப்பங்களே ஆட்சி கவிழ்வதற்கான சந்தர்ப்பங்கள். சிறந்த முறையில்  நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  இந்த ஆட்சியை மாற்றியமைக்க முடியும். பிரதமருக்கு எதிராக  அரசாங்கத்திற்குள்ளேயே  பிரச்சினை எழுந்துள்ளது. இன்று பிரதமர் நாளை ஜனாதிபதி என்ற  நிலை உருவாகலாம்.  வேறொரு நாட்டில்  ஒரு ஜனாதிபதியுடைய ஆட்சியில்  பெருந்தொகையிலான போதைவஸ்து  இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் ஜனாதிபதியே ஆட்சியிலிருந்து  பதவிவிலகுவார். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை.  எனவே இந்த நிலை மாறுவதற்கு மக்களே சிந்திக்கவேண்டும்.

 

கேள்வி : ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக  மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவரப்போவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சவாலை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? அதற்கு உங்களுடைய பங்கு எவ்வாறு அமையும்?

 

பதில் : நாங்களே செய்து கொண்ட பிழை தான் ஜெனீவா.  இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது.  இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரியவில்லை.18ஆவது திருத்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு பரிந்துரையாகும்.  இலங்கை அரசாங்கம்  ஐ.நா.பிரதிநிதிகளை வரவழைப்பதற்காகவே கதவுகளை திறந்துவிட்டுள்ளது.

அரசாங்கம் எத்தகைய நடைமுறைகளை பின்பற்றினாலும் நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன். அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை  நிறைவேற்ற வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை.  இலங்கைக்கு எதிராக  சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.  குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.  சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும்.

 

கேள்வி: வடமாகாண சபை சுயாதீனமாக செயற்பட நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்:  ஆளுநரை வெளியேற்ற வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமென்பதே வடமாகாண சபையின் கோரிக்கை. உண்மையில் ஆளுநரை தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும். கிறீஸ் போன்ற நாடுகளில் ஆளுநர் ஒருவரை தெரிவு செய்வதில் பல நடைமுறைகள் இருப்பதை நான் அவதானித்தேன். நிர்வாக சேவையில் 15 வருடங்கள் அனுபவமும்  பரீட்சைகளில் சித்தியடைந்த பின்னருமே ஒருவரை ஆளுநராக அங்கு தெரிவுசெய்வார்கள். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை. இதனால் சிவில்  சமூகத்திற்கு  பிரச்சினை எழுகின்றது. அதேபோல வடமாகாண சபை கூறும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின்படி வழங்கினாலும் மாவட்ட ஆட்சிமுறைமை உருவாக்கப்பட வேண்டும்.
00000000

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்  என்பதனை உடன் பதிவிடுங்கள்………

http://eathuvarai.net/?p=4225

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.