Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஞ்சலி: கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி

சத்யானந்தன்
 


gabriel_garcia_marquez.jpg

நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் மரணமடைந்தார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என இவரது படைப்புகள் உலக அளவில் மொழிபெயர்க்கப் பட்டு வாசிக்கப் பட்டு விவாதிக்கப் பட்டவை. 1967ல் வெளியான One hundred years of Solitude என்னும் இவரது நாவல் இவரது படைப்புகளில் ஆகச் சிறந்தது என்று கூறலாம். 18ம் நூற்றாண்டில் மகாண்டோ என்னும் மிகவும் சிறிய கிராமம் புயந்தியஸ் என்னும் ஒரு குடும்பத்தினரால் விவசாயத் தொழிலை மையமாகக் கொண்ட சிறு நகரமாக உருவெடுக்கிறது. ஜோஸ் அர்காடியோ புயந்தியா குடும்பத் தலைவர். அவர் கிராமத்தின் மையமாகவும் தலைமையாகவும் செயற்படுவரும் ஆவார். அந்தக் கிராமத்தின் மிகப் பெரிய தனித்தன்மை அதை சில ‘ஜிப்ஸி’ என்னும் பழங்குடியினரைத் தவிர யாருமே அறிந்திருக்கவில்லை என்பதே. படிப்படியாக வெளியுலகத்துடன் அந்தக் கிராமம் தொடர்பு வைத்துத் தன்னுள் காணும் பல மாற்றங்களே நாவலின் மையக் கருத்து. இந்த கிராமம் ஒரு படிமமாக உலக அளவில் நிலத்துக்காகவும், இயற்கை வளத்துக்காகவும் நடக்கும் போர்கள் பற்றிய ஒரு புரிதலை நாம் அடைகிறோம். உலக அரசியல் – சரித்திரம்- மற்றும் மனித மனத்தின் பலவீனமான குறுகிய இடங்கள் எப்படி மனித நேயத்தடத்திலிருந்து நம்மை திசை திருப்புகின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

இந்த நாவலும் அவரது வேறு சில படைப்புகளும் மாய யதார்த்தத்தை உலகுக்கு அறிமுகம் செய்தவை என்று ஒரு கருத்து உண்டு. மாய யதார்த்ததுக்காகவே இவரைப் பற்றி விவாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.

யதார்த்தம் என்பது ஓரளவு நமக்கு இப்போது பரிச்சயமான எழுத்து முறை. அது என்ன மாய யதார்த்தம்?


மாய யதார்த்தத்துக்கு நாம் அனைவரும் மிகவும் ரசித்த ‘டாம் அண்ட் ஜெர்ரி’ என்னும் கதாபாத்திரங்களையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஜெர்ரி மிகவும் சிரமப் பட்டு ஒரு கல்லை உருட்டி டாம் மீது தள்ளி விட்டு விடும். அந்த இடத்திலேயே டாம் தூள் தூளாகி விடும். ஆனால் அந்தத் துகள்களெல்லாம் ஒன்று சேர டாம் மீண்டும் ஜெர்ரியைத் துரத்தும். நம்மால் அதை யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியும். ஏன்? இந்த இடத்தில் எந்த அளவு டாமுக்கு அது வலித்தது என்பதாக ஒரு பக்கம் எடுத்துக் கொள்கிறோம். மறுபடி டாம் தன் இயல்புப்படி ஜெர்ரியைத் துரத்தியாக வேண்டுமே!

Magical Realism என்னும் மாய யதார்த்தத்துக்கு ஒரு பிரதியில் இடம் உண்டு. அது ஒரு சிக்கலான விஷயத்தை அந்த சிக்கல் அவிழாமலேயே நாம் பற்றிக் கொள்ள உதவுகிறது. இரவு கொடுங்கனவு கண்டு எழுகிறோம். ஆனால் அதில் நாம் கண்ட மரணமோ அல்லது காயமோ ரத்தமோ பொய் என்று நாம் உணரவே ஓரிரு நிமிடங்களாகின்றன. இல்லையா? அப்படி ஒரு பகுதி மாயயதார்த்தம் ஒரு படைப்புக்குள் வரும் போது வாசகன் ஒரு விடைபுரியாத கேள்வியை அல்லது சூழலை எளிதாக உள் வாங்குகிறான்.

செவ்விலக்கியம், நவீனத்துவம், பின்னவீனத்துவம் என்னும் இலக்கிய வளர்ச்சி கால கட்டங்களில் இவர் பின்னவீனத்துவத்தின் ஒரு முக்கியமான ஆளுமை. அவருக்கு நம் அஞ்சலி.


http://sathyanandhan.com/2014/04/20/கேப்ரியல்-கார்சியா-மார்க/


புகழ் பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார்

140417210334_gabriel_garcia_marquez_512x
காலமானார் கேப்ரியல் கார்சியியா மார்க்வெஸ்


புகழ் பெற்ற கொலம்பிய எழுத்தாளரும், இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவருமான, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் , காலமானார்.

அவர் மெக்சிகோ சிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறந்தார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலம்பிய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
 


அவருக்கு வயது 87.

ஸ்பானிய மொழியில் எழுதிய நாவலாசிரியர்களில் புகழ்பெற்ற மிகப்பெரும் எழுத்தாளர்களில் ஒருவர் என்று கருதப்படும் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், "நூறாண்டு காலத் தனிமை" ( ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஒப் சாலிட்டியூட்) என்ற மாஜிக்கல் ரியலிச பாணி புதினத்தால் உலகப் புகழ் பெற்றவர்.

1967ல் எழுதப்பட்ட இந்தப் புதினம் உலகெங்கும் 3 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றது. 1982ல் அவர் நோபல் பரிசைப் பெற்றார்.

சமீபத்தில் அவர் நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர் மெக்சிகோவில் 30 ஆண்டுகளுக்கும் மேலான காலம் வாழ்ந்தார். ஆனால் சமீப ஆண்டுகளாக அவர் பொது மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் தோன்றுவதைப் பொதுவாகத் தவிர்த்து வந்தார்.

"காலரா காலத்தில் காதல்" ( லவ் இன் டைம்ஸ் ஒப் காலரா) " ஒரு மரணத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லப்பட்ட கதை" (க்ரோனிக்கில் ஒப் எ டெத் போர்டோல்ட்") மற்றும் "சந்து பொந்துகளில் சிக்கிய ஜெனரல்" ( தெ ஜெனெரல் இன் ஹிஸ் லேபிரிந்த்") ஆகியவை அவர் எழுதிய நூல்களில் மற்றவையாகும்.


இறுதிச்சடங்கு, அஞ்சலிகள்


அவரது உடல் இன்னும் சில மணி நேரங்களில் ஒரு தனிப்பட்ட சடங்கு ஒன்றில் தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

திங்கட்கிழமை அவருக்கு ஒரு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ் ,கார்சியா மார்க்வெஸின் மரணம் தனது நாட்டுக்கு " ஒரு ஆயிரம் ஆண்டு தனிமையையும் சோகத்தையும்" தந்திருப்பதாகக் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா விடுத்த இரங்கல் செய்தியில், மார்க்வெஸ் தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் என்றார்.

மார்க்வெஸ் நெடுங்காலமாக சண்டையிட்டுக்கொண்டிருந்த பெரு நாட்டைச் சேர்ந்த மற்றொரு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மாரியோ வர்காஸ் லோசா, அவரை ஒரு மாபெரும் எழுத்தாளர் என்றும், அவரது புதினங்கள் என்றென்றும் வாழும் என்றும் கூறினார்.

ஆங்கில நாவலாசிரியரும், திரைப்பட கதை வசனகர்த்தாவுமான இயான் மக் இவான் பிபிசியிடம் பேசுகையில், மார்க்வெஸின் இலக்கிய வாழ்க்கை அசாதாரணத் தன்மை வாய்ந்தது என்றார்

http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/04/140417_gabriel.shtml
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்பிற்க்கு கிருபன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகநூல் குறிப்புகள்: ஒரு நூற்றாண்டு தனிமையின் மரணம்

ஹெச்.ஜி.ரசூல் - முகநூல் குறிப்புகள்

கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் என்ற பெயரை விட ஒரு நூற்றாண்டு தனிமை (One Hundred Years of Solitude )என்பதே அதிகமான பரிச்சயப்பட்ட பெயராகவே இருக்கிறது. 1967ல் வெளிவந்த இந்த நாவல் பல பதிப்புகள் கண்டு 30மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன.ஆனால் இவரது அறியப்படாத தடை செய்யப்பட்ட நாவல் ஒன்றும் உண்டு. Memories of My Melancholy Whores நாவல் ஈரானில் முதற்கட்டமாக ஐயாயிரம் பிரதிகள் விற்ற நிலையில் தடை செய்யப்பட்டது . உலக வாசகர்களின் கவனிப்பிற்கும் கொண்டாட்டத்திற்கும் ,நேசிப்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த லத்தின் அமெரிக்க, கொலம்பியா படைப்பாளி கப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ் நேற்று தனது 87வது வயதில் மறைந்தார். தனது எழுத்துக்களை மேஜிக்கல் ரியலிசம் என்னும் ஜால யதார்த்த பாரம்பர்ய கதை சொல்லும் முறையில் நாவலை படைத்துக் காட்டியவர். 1982களில் நோபல்பரிசினை பெற்ற மார்க்யுஸ் காலனிய ஆட்சிக்கால குரூரங்களைஎழுதிப் பார்த்தவர். தனது மூதாதைகளின் கதை சொல்லல் முறையினையும் மார்க்வெஸ் தனது எழுத்தின் உயிரோட்டத்தில் இணைத்தவர். துவக்கத்தில் பத்திரிகையாளராக இருந்த மார்க்யுஸ் கதையற்ற எழுத்துக்களில் தனது பயணத்தை துவக்கி கதையுலகிற்குள் நுழைந்தார். 1967 களில் வெளிவந்த ஒரு நூற்றாண்டு தனிமை(One Hundred Years of Solitude) நாவல் படைப்புலகின் புது மாதிரியான மேஜிக்கல் ரியலிசத்தை அறிமுகப்படுத்தியது. யதார்த்த வாழ்வை புனைவின் ரூபத்தில் புதிர்மைகளோடு படைப்பாக்கம் செய்த அவரது உத்தி பிரபலமானது.ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்கு பிறகு கவி சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் இந் நாவல் சென்ற ஆண்டு தமிழுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்பும் மார்க்யுஸின் மொழிபெயர்ப்புகள் தமிழின் மிகத் தீவிர எழுத்தாளர்களால் அறிமுகம் ஆகியிருந்தது.

தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியமாக தொண்ணூறுகள் வரை சோவியத் இலக்கியங்கள் மிகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. யதார்த்தவாதம் ,இயல்புவாதம் என்பதான் படைப்பு உத்திகள் சார்ந்து இப்படைப்பிலக்கியங்கள் பேசப்பட்டன.தல்ஸ்தாய், மக்ஸிம் கார்க்கி, செகாவ், தஸ்தாவெஸ்கி என்பதான் படைப்பாளர்களின் உலகமாக இது தென்பட்டது. தொடர்ந்ததொரு மொழிபெயர்ப்பின் திசையாக லத்தின் அமெரிக்கப் படைப்பாளிகளின் உலகம் வெளிப்பட்டது. அர்ஜென்டைனாவைச் சேர்ந்த ஜோர்ஜ் லூயி போர்ஹே, கொலம்பியாவைச் சேர்ந்த காப்ரியேல் கார்ஸியா மார்க்யுஸ், என்பதான வரிசையில் ஜெர்மினியின் குந்தர்கிராஸ் போன்ற படைப்பாளிகளும் வெளிப்பட்டனர்.

இந்த இலக்கியப் புனைவுகளில் சாதாரண சம்பவ சித்தரிப்புகள் வினோதமான கனவுஅம்சங்களுடன் புனையப்பட்டன. தொல்கதை மரபுகள் மறு உருவாக்கம் பெற்றன. யதார்த்தம் மாந்திரீக யதார்த்தமாக உருமாறியது. இயல்பான கதை சொல்லல் வினோதம் நிறைந்த கதை சொல்லல்லாக மாறுபாடடைந்தது. மார்க்யுஸுக்கு தனது மூதாதையான தாத்தாவின் கதைகள் அரசியல் சித்தாந்த பார்வையை கொடுத்திருக்கிறது.காலனிய ஆதிக்கத்தின் கீழ் பட்ட துயரங்களும் வரலாறுகளும் போராட்டங்களும் , அவரின் வழியாகவே மார்க்யுஸை சென்றடைந்திருக்கிறது.கார்ஸியா மார்க்யுஸ் சோசலிச சிந்தனையாளராகவும்,அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், நவகாலனிய ஒடுக்குமுறைக்கு எதிரான படைப்பாளியாகவும் வெளிப்பட இந்த துவக்க கால கருத்தாக்கங்கள் முக்கியப் பங்கை வகித்திருக்கின்றன. இதுபோன்றே தனது பாட்டியிடமிருந்து மாயஜாலங்கள் நிறைந்த , நம்பமுடியாத அதிசயங்கள் நிறைந்த கதைகளை கேட்டுப் பழகியதன் விளைவே அவரது பிற்கால நாவல் உலகத்தின்படைப்புமுறையையே மாற்றிக் காட்டியுள்ளது.

மார்க்யுஸின் பிற படைப்புகளில் Leaf Storm, Autumn of the Patriarch , Chronicle of a Death Foretold , Love in the Time of Cholera என நீள்கிறது. 2004 அக்டோபரில் வெளியான Memories of My Melancholy Whores நாவல் ஈரானில் முதற்கட்டமாக ஐயாயிரம் பிரதிகள் விற்ற நிலையில் தடை செய்யப்பட்டது . இந் நாவல் தொண்ணூறு வயதான ஒரு முதியவரின் காதல் கதை. வாலிப பருவம் அடைகிற ஒரு இளம் பெண் தொண்ணூறு வயது முதியவரோடு திருமணமின்றி கூடிவாழும் சாகசமான காதல் கதை.

1996 களின் வெளியான News of a Kidnapping – போதைப் பொருள் பயங்கரவாத குழுக்களின் ஆட்கடத்தல் அரசியல்கொலைகள் உள்ளிட்ட செய்திகளை நூலாக எழுதிச் சென்றது. திரைத்துறையிலும் மார்க்யுஸின் பங்களிப்பு இருந்தது. பிரிட்டீஷ் இயக்குநர் மிக் நிவெல் Love in the Time of Cholera நாவலை இயக்கினார்.ஹவன்னா திரைப்பட நிறுவன படத்தயாரிப்பாளர் மார்க்யுஸின் Love and Other Demons, நாவலை திரைப்படமாக்கினார்...

கியூப அதிபர் பெடரல் காஸ்ட்ரோஉடனான தனது நட்பின் வலு புத்தகங்களின் அடிப்படையில் உருவானது. காஸ்ட்ரோ மிகவும் பண்பாடுமிக்க நபர், நாங்கள் சந்திக்கும் தருணங்களில் இலக்கியங்கள் பற்றியே பேசியிருக்கிறோம் என்கிறார் கப்ரியல் கார்ஸியா மார்க்யுஸ் . உலக அளவில் படைப்பாளிகள் மார்க்யுஸின் மரணத்திற்கு அஞ்சலி செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2069:2014-04-20-01-48-55&catid=48:2012-06-19-04-13-01&Itemid=67

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.