Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கள்ளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளி

இளங்கோ-டிசே

தோ ஒரு வாசனை என்னைப் பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அந்த வாசனையை முதலில் எங்கே நுகர்ந்தேன் என்பது சரியாக நினைவினில் இல்லை. அநேகமாய் நிரம்பி வழியும் மாலைநேரத்து சப்வேயில்தான் அந்த நறுமணம் எனக்குள் நுழைந்திருக்க வேண்டும். பிதுங்கித் ததும்பும் மனிதக் கூட்டத்திடையே, காலையோ கையையோ கூட சற்றும் நகர்த்த முடியாத பொழுதொன்றில் இப்படியான வாசத்தை நினைவில் கொண்டிருத்தல் என்பதே சற்று அதிகப்படியானதுதான். ஆனால் நான் விடும் மூச்சே மற்றவரின் காதுக்குள் நுழைந்துவிடும் அபாயமுள்ள நெரிசலில் எனக்கு இந்த வாசத்தை பின் தொடர்வது சற்று ஆசுவாசமாயிருந்தது. மேலும் இந்த நறுமணம் யாரோ ஒரு பெண்ணிலிருந்துதான் வருகின்றது என எண்ணிக்கொள்வது இன்னும் குதூகலத்தைத் தருவதாயிருந்தது. மனித உடல்களின் கடலில் இருந்து, கவனத்தைத் திசை திருப்பி இந்த வாசம் இதுவரை அறியாத இன்னொரு உலகிற்கு மெல்ல மெல்ல என்னை அழைத்துச் சென்றுகொண்டிருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல அந்த வாசம் என்னைத் தொடர்வதை விட, நான் அதற்குப் பின்னே தொடர்ந்து போகின்ற நிலை ஏற்படத் தொடங்கியது. அந்த வாசத்திற்காகவே சரியாக நேரத்தைக் கணக்கிட்டு மாலை நேரத்துச் சப்வேயில் ஏறுபவனாக மாறிப்போனேன். சிலவேளைகளில் பாதாளச் சுரங்கத்திற்குள் முன்னரே வந்திருந்தாலும், சரியான நேரம் வரும்வரை காத்திருந்து முன்னர் வரும் இரெயின்களை எல்லாம் போகவிட்டு, குறிப்பிட்ட ரெயினில் மட்டும் ஏறிச் செல்லத் தொடங்கினேன். ஆனால் இந்த நேரக்கணக்கிலும் ஒரு சிக்கல் வந்திருந்தது. உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் செலவு கூடிய நகர்களில் ஒன்றான ரொறொண்டோவில்தான், உலகில் மிகவும் மோசமான பாதாள இரயில் சேவையும் இருக்கிறது. அவ்வப்போது சேவை தாமதமாவதும், அதற்கு மாற்றீட்டாய் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதும் வழமையான ஓரு நிகழ்வு. தொடக்கத்தில் சேவைகள் குழம்பும்போது கெட்ட வார்த்தைகளால் மனதிற்குள் திட்டிய நானும் நாட்போக்கில் களைப்படைந்து, பின்னர் ஒரு பபிள்கம்மை எடுத்து வாயில் போட்டு எனது கோபத்தையும் சேர்த்து சப்பத்தொடங்கிவிடுவேன்.

இவ்வாறாக வாசத்தைப் பின் தொடர்வது பின்னேரங்களில் மட்டுமில்லாது எந்நேரமும் ஆக அது ஆகிப்போனதில்தான் எனக்குப் பிரச்சினை வரத் தொடங்கியது. இரவுகளில் கூட கனவுகளில் நான் அந்த வாசத்தைப் பின் தொடர்கின்றவனாய் மாறத் தொடங்கியிருந்தேன். இதுவரை என் கனவுகள் எழுந்தமானமாய் என்னால் கட்டுப்படுத்த முடியாது வெளிக்கிளம்பியதைப் போலவன்றி இந்த வாசம் என் கனவுகளைக் கட்டுப்படுத்தவும், திசைகளைத் திருப்பவும் தொடங்கியிருந்தது.. இக்கனவுகளில் எப்போதும் சூரியகாந்தித் தோட்டங்களின் இடையிலோ அல்லது லாவண்டர் தோட்டங்களில் நடுவிலேயோ ஒரு பெண் ஓடிக்கொண்டிருப்பவளாகவும், அவளின் முகம் எப்படி இருக்கும் எனக் கண்டுபிடிப்பதில் நான் தோற்றுக் கொண்டிருப்பவனாகவும் இருந்துகொண்டிருந்தேன். என்றேனும் ஒருநாள் அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்டுபிடித்தால் நான் இந்த வாசனையைப் பின் தொடர்வதைக் கைவிட்டு விடுவேன் என நம்பவும் தொடங்கியிருந்தேன்.

னவுகளுக்குள் நுழைந்து இன்னுமிச்சிக்கலை ஆழப்படுத்துவதை விட, இவ்வாசனை வந்த மூலத்தில் வைத்தே பிரச்சினையைக் களைவோம் என ஒருநாள் முடிவு செய்தேன். முதலில் மாலை நேரத்து பிதுங்குத்தள்ளும் ரெயினில் நான் அடிக்கடி சந்திக்கும் பெண்களை மனதிற்குள் பட்டியலிட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இந்த வாசனையைப் பரப்பக் கூடியவர்கள் என்று நான் நம்பியவர்களை, நினைவில் வைத்திருப்பதற்காய் அவர்கள் ஒவ்வொருவரிலும் வித்தியாசமாக என்னைக் கவர்ந்த விடயங்களை ஒரு பேப்பரில் எழுதத் தொடங்கினேன். விஞ்ஞான பாடத்திற்கு அத்தியாவசியமான மூலகங்களின் ஆவர்த்தனப்பட்டியலைப் போல, இயற்கையாகவே தலைமயிர் பொன்னிறம் உடையவர், புருவத்தில் ரிங் குத்தியிருப்பவர், அடர்ந்த சிவப்பு நிறத்தில் உதட்டுக்கு வர்ணம் பூசுபவர், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தன் தலைமயிரின் வடிவத்தை மாற்றிக் கொண்டிருப்பவர், குதியுயர்ந்த காலணிகளை அணிந்தபடி எப்போதும் நெரிசலில் யாரோ ஒருவரின் காலை மிதித்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருப்பவர், பின்னங்கழுத்தில் டிராகன் டட்டூ குத்தியவர் என இப்படி அட்டவணைப்படுத்திக் கொண்டு போகவே, பேப்பர் ஒரு பக்கத்தையும் தாண்டி நீண்டு கொண்டிருந்தது. இதை இன்னும் எளிதாக்க என் கடந்தகால வாழ்க்கையில் சிலிர்க்க வைத்த பெண்களின் பெயர்களை இவர்களுக்குச் சூட்டத் தொடங்கினேன். தமிழே பேசமுடியாத முகங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைப்பது அபத்தம் தான் என்றாலும் தரணியெங்கும் தமிழ்ப் பரப்பும் பணியை இன்னொருவிதத்தில் செய்துகொண்டிருந்ததில் எனக்குள் கொஞ்சம் சந்தோசமும் எட்டிப்பார்த்தது.

பெயர்களை வைப்பது எளிது. ஆனால் இவர்களில் யாரிடமிருந்து வாசனை வருகிறதென்பது கண்டுபிடிப்பதுதான் கடினம். என் மூக்கின் மேல் எனக்கு அபார நம்பிக்கை இருந்தாலும், ஆகக் குறைந்து சற்று அருகில் நெருங்கிப்போய்ப் பார்த்தால் 'உண்மை'யைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் இந்தச் சன நெரிசலுக்குள் எப்படி ஒவ்வொருத்தருக்கும் அருகில் போய் நின்று மூக்கைச் சுழட்டித் துழாவிப் பார்க்க முடியும். இரண்டு கால்களை நெருக்கி வைக்கவே சிறு இடம் கண்டுபிடிப்பதே பெரும்பாடாய் இருக்கையில், எப்படித்தான் நினைத்த இடத்திற்கு நகர முடியும். தலைக்கு மேலே தொங்கும் ஒன்றிரண்டு கம்பிக்கே சனம் -கடைசியாய் இருக்கும் ஒரு ரிக்கெட்டுக்காய் தியேட்டரில் அடிபடுவது போல- அல்லற்பட்டுக் கொண்டு நிற்கும்போது, வாசத்தின் ரிஷிமூலத்தைத் தேடுவதென்பது பகல் கனவாய்த்தானிருக்கும்.

 

1.jpg

இப்படி சப்வேயில் பயணிக்காத பொழுதுக்கும், வாசனையைப் பின் தொடரும் கனவுகள் வராத இரவுகளுக்கும் இடையில் கிடைத்த சொற்பநேரத்தில், யோசிக்க முடிந்ததில் ஒரு தீர்வைக் கண்டடைந்தேன். இப்படியான வாசத்தைப் பின் தொடர்பவனாக நான் மட்டும் இருக்கமுடியாது. வேறு பலரும் இருப்பார்கள். ஆகக் குறைந்தது இந்த வாசனையின் ஊற்றின் இருப்பிடமாய் இருப்பவர், தான் அனுப்பும் சமிக்ஞையை யார் கவனத்தில் கொள்கிறார் எனப் பார்க்கவும் விரும்புவார் அல்லவா? அவரைக் கண்டுபிடிப்போம் எனத் தீர்மானித்து சனம் மிதமாக இருக்கும் ஒரு வாரவிறுதியைத் தேர்ந்தெடுத்தேன். மாலை நேரந்தான். ஆனால் இப்போது பிதுக்கித் தள்ளும் சனம் இல்லை. வழமைக்கு மாறாய் ஒன்றிரண்டு இருக்கைகள் காலியாகக் கூட இருந்தன. நானேறும் குறிப்பிட்ட அந்த நேரத்து ரெயினிற்குள் நுழைந்தபோது எனக்குப் பரிட்சயமான வாசம் வந்துகொண்டிருந்தது. சுற்று முற்றும் விழிகளை எறிந்து பார்த்தேன். வழமையாகச் சந்திக்கும் முகங்கள் எதையும் காணவில்லை. அப்படியாயின் இந்த நறுமணம் நான் நினைக்கின்ற பெண்களிடமிருந்து வரவில்லையா என்கின்ற ஏமாற்றந்தான் முதலில் என்னைத் தாக்கியது.

இரக்கூன் தெருவைக் கடக்கும்போது தன் தற்காப்புக்காய் மிக மோசமான நாற்றத்தை சுரந்துவிட்டுப் போகும். ஆனால் அது கடந்தபின்னும் நீண்ட நேரத்திற்கு அந்த வாசனை பரவியபடியே இருக்கும். சிலவேளை அவ்வாறுதான் இந்தச் சப்வேயிலும் நான் தேடிய பெண் தன் வாசனை விட்டுவிட்டுப் போய்விட்டாரோ என யோசித்தேன். ரெயினுக்கான டோக்கனைப் போட்டுவிட்டு உள்ளே வந்தாயிற்று அதற்காகவேனும் கொஞ்சத் தூரமாவது பயணித்துவிட்டுத் திரும்புவோம் எனத் தீர்மானித்து 'நவ்' பேப்பரையும் எடுத்துக்கொண்டு காலியிருக்கையொன்றில் அமர்ந்தேன்.

எனக்கு எப்போதும் ஓரு பழக்கமிருக்கிறது. புதுப் புத்தகம் என்றால் என்ன புதுப் பத்திரிகை என்றால் என்ன உடனேயே நுகர்ந்து விடுவது. அந்த வாசனை நான் அந்தப் புத்தகத்திற்குள் இருக்கும் எழுத்துக்களோடு பரிட்சயம் ஆக முன்னரே என்னோடு நட்பாகிவிடும். பிறகு புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை ஒரு துணையாக வந்திருக்கும். ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒவ்வொரு வாசனை. சிலவேளைகளில் அந்த வாசனையே ஒரு புத்தகம் நல்லதொரு வாசிப்பைத் தருமா இல்லையா என்பதைக் கூட சொல்லிவிடக்கூடும்.

'நவ்' 'வை எடுத்த போதும், உடனேயே நுகர்ந்து பார்க்க ஆசையிருந்தும் ஆட்கள் பார்த்துவிடுவார்களே என்ற தயக்கத்தில் அதை ஒத்திப் போட்டேன். பக்கங்களைப் புரட்டுவதும் அவ்வப்போது சில செய்திகளை வாசித்தபடியும் இருந்தபோது, பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணின் கண்களும் இந்தப் பக்கங்களில் மேய்வதைக் கண்டேன். '.நவ்'வின் பிற்பக்கங்களில் அழகான பெண்கள் மிகக் குறைந்த ஆடைகளுடன் 'எங்களை அழையுங்கள்' எனக் கூறியபடி சிரித்துக்கொண்டிருப்பார்கள். அழைத்துப் பேசுவதற்கு மட்டும் இவ்வளவு கட்டணமா என்று ஒரு காலத்தில் வாய் பிளந்துண்டு. ஆனால் எல்லா வியாபார விளம்பரங்களிலும் சொல்லப்பட்டதை விட சொல்லப்படாததில்தான் நிறைய விடயங்கள் உட்பொதிந்து இருக்கின்றன என்பதைப் பின்னர் அறிந்தபோது திறந்த வாய் தானாய் மூடிக்கொண்டது. ஒரு சஞ்சிகையை முழுதாய் வாசிக்காமல் வைப்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. எனினும் பக்கத்திலொரு பெண் இருக்கும்போது, 'அழைப்புவிடும் பெண்களின்' பக்கங்களைப் பார்ப்பது சற்று அந்தரமாக இருக்கும். அந்தப் பக்கங்களைப் புரட்டாமலே மடியில் சஞ்சிகையை வைத்துக் கொண்டு கண்களை மூடினேன். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் பிடித்த வாசத்தைப் பின் தொடரத் தொடங்கியிருந்தேன்.

'நீ வாசிக்கவில்லையெனில் பேப்பரைக் கொஞ்ச நேரம் இரவல் பெற முடியுமா?' என ஒரு குரல் ஒலித்தது.

சூரியகாந்தித் தோட்டத்திலும் லாவண்டர் நிலப்பரப்புக்களிலும், நான் பின் தொடரும் பெண்தான் இன்று கதைக்கவும் தொடங்கிவிட்டாரோ என்றுதான் முதலில் நான் நினைத்தேன்.

'ஓ...! நீ உறங்கிவிட்டாய் போலும்!' என மன்னிப்புக் கோரும் மெல்லிய குரல் கேட்கவும் நான் விழிகளை விரித்துப் பார்த்தேன்.

அருகிலிருந்த பெண்தான் கதைத்திருக்கின்றார். நான் அதற்குள் வழக்கமான என் கனவுக்குள் மூழ்கிவிட்டிருக்கின்றேன்..'தாராளமாக, நீ வாசிக்கலாம்' என பேப்பரை அவரிடம் நீட்டினேன்.

நாம் எந்தப் பக்கங்களைத் தவிர்த்தேனோ அவர் அந்தப் பக்கங்களுக்கே நேரடியாகப் போய், யாருடையதோ தொலைபேசி இலக்கத்தைத் தேடுவது போல நிதானமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கும் அந்தப் பக்கங்களை அவரோடு சேர்நது பார்க்க மனம் குறுகுறுத்தாலும், அவர் அதைப் பார்த்துவிட்டால் என்ன நினைப்பாரோ என்கின்ற அந்தரமும் ஒருங்கே சேர, கொதிக்கின்ற உலையாய் தவித்துக்கொண்டிருந்தேன். இவரும் 'எங்களை தொலைபேசியில் அழையுங்கள்' எனக்கூறும் பெண்களைப் போலத் தொழில் செய்கின்றாரோ என என் மனம் விழித்துக்கொண்டது.

இப்படி நான் அல்லாடிக்கொண்டிருக்கையில், திடீரென்று அவர் 'வாசனைகளைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருப்பது என்பது குதூகலமும் துயரம் ஒருங்கே சேர்ந்ததுதான் அல்லவா?' என்றார்.

எனக்கு அவர் என் மனதை இப்படியாக வாசித்தது, அவர் நவ் பேப்பரின் இறுதிப்பக்கங்களைப் பார்த்ததைவிட இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை எளிதாக நம்பவும் முடியவில்லை.

ப்படித்தான் சில வருடங்களுக்கு முன் ஹவானா போயிருந்தபோது மந்திரக்காரி மாதிரியான தோற்றத்தில் பெரும் ஹவானா சுருட்டைப் பிடித்தபடி ஒரு மனுசி இருந்தார். அவர் எங்களுக்கான சீட்டுக்களை எடுத்து வாசித்து எதிர்காலத்தைக் கணிப்பார் என்றும் எங்களின் சுற்றுலா வழிகாட்டி கதை மேல் கதை சொல்லி நம்பவும் வைத்திருந்தார். அவரிடம் எனக்குப் பிடித்த நடிகையான அஸினை நான் எப்போதாவது சந்திக்க வாய்ப்பிருக்கா என்கின்ற முக்கியமான கேள்வியைப் பத்து பெஸோ கொடுத்துக் கேட்டேன். அடுத்த வருடத்திற்குள் அஸின் கனடா வருவார், நீ சந்திக்க மட்டுமில்லை அவரோடு சேர்ந்து டின்னருக்குப் போவாய் என உறுதியாய்க் கூறியிருந்தார். இதைக் கேட்ட சந்தோசத்தில் இன்னும் ஐந்து பெஸோ மேலதிகமாய் அந்த மனுசிக்குக் கொடுத்து விட்டு வந்திருந்தேன். ஆனால் அஸினோ அடுத்த வருடம் கனடா வரவில்லை. இலங்கைக்குத்தான் போயிருந்தார். என்னோடு டின்னர் வருவதற்குப் பதிலாக இலங்கை ஜனாதிபதியின் துணைவியாரோடு எங்கையோ போய்ச சாப்பிட்ட படமும் வெளிவந்ததைக் கண்டு நான் நொந்து போனதுதான் மிச்சம்.

 

 2.jpg

ஆக கடந்தகால வரலாற்றிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்ட நான், இன்னொரு முறை இப்படி 'மனதைப் படிப்பவர்களிடம்' ஏமாறத் தயாராக இருக்கவில்லை. என்றாலும், அவரிடம் 'எப்படி நான் வாசனைகளைப் பின் தொடர்கின்றவன் என்று உனக்குத்த் தெரியும்?' எனக் கேட்டேன். 'வாசனைகளைப் பின் தொடர்பவர்கள் தங்களுக்கென்று சில தனித்துவமான சமிக்ஞைகளை வைத்திருக்கின்றார்கள். என்னால் அவற்றை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். மேலும் நானும் அவ்வாறாக வாசனையைப் பின் தொடர்பவர்களில் ஒருத்தி தான்' என்றாள்.

வாசனைகளைப் பின் தொடர்வது ஒருவிதமான நோயோ என நினைத்துக்கொண்ட எனக்கு அப்படி வேறு சிலரும் இருக்கின்றார்கள் என்பதை அறிந்ததில் சற்று ஆறுதலாக இருந்தது.

'ஆம், நான் பஞ்சாப்பில் இருந்தபோது சிறுவயதில் இருந்தே கோதுமைகளின் வாசனையை எங்கு சென்றாலும் பின் தொடர்பவளாக இருந்திருக்கிறேன். அதுவும் கோதுமை அறுவடைக் காலத்தில் மிகவும் உச்சமான குதூகலத்தையும், அறுவடை முடிந்தபின் மிகப் பெரும் வெறுமையையும் அனுபவித்திருக்கின்றேன். பின்னாளில் வாசனை இல்லாது என் வாழ்வு முழுமையடையாது போல ஏதோ ஒரு வாசனையைப் பின் தொடர்ந்தபடியே இருக்கின்றேன். உனக்கு அப்படி சிறுவயது நினைவுகள் இல்லையா?' என என்னைப் பார்த்துக் கேட்டாள்.

நினைவுகளைச் சுழற்றிப் பார்க்கையில், சிறுவயதில் பனம்பழத்தினதும் விளாம்பழத்தினதும் வாசனையைப் பின் தொடர்ந்தவனாக நானும் இருந்தது தெரிந்தது. எங்கள் வீட்டில் இருந்து மூன்று வீடுகள் தள்ளி இருந்த விளாமரத்தில் பழங்கள் பழுப்பதை என்னால் நுகர முடிந்திருக்கிறது.. இப்படி வாசனையை மோப்பம் பிடிப்பதைப் பார்த்து, ‘உனக்குப் பாம்பின் தன்மையடா' என அம்மாவே அடிக்கடி கூறியிருக்கின்றார். இவளுக்கு இதைச் சொன்னால் நானொரு பாம்பு மனிதன் என நினைத்துக்கொள்வாளோ என்கிற அச்சத்தில் அப்படியேதும் குறிப்பிடும்படியாக எதுவுமில்லையென இதை மறைத்தேன். மேலும் பிறகான காலத்தில் ஆட்லறிகளினதும், கிபீர்க் குண்டுகளினதும் வாசனையை நுகர்வதே வாழ்வதற்கான ஒரேயொரு வழியாக ஆகிப்போனதை எப்படி இவளுக்கு உணர வைப்பது. எனினும் அரசியல் இன்றி இவ்வுலகில் எதுவும் அசையாது என்பதால், 'உங்களின் இராணுவம் எங்களின் நாட்டுக்குள் வந்தபோது அவர்களிடமிருந்து தனித்துவமான மணம் வந்ததை அறிந்திருக்கின்றேன். ஆனால் அது எனக்குப் பிடிக்காத வாசம், வெறுப்பைத் தருகின்ற நாற்றம்' என்றேன். சற்று நேரம் முன்னரே அறிமுகமான ஒருத்தியிடம் இப்படிக் காட்டமாகக் கூறியது தவறோ என சொன்னதன் பிறகுதான் உறைத்தது.

னக்கு இந்திய இராணுவ கால அனுபவத்தினால் பஞ்சாபிகள் மீது சற்று வெறுப்பு இருந்தது. ஆனால் இவள் மீது ஏனோ அதையும் தாண்டி ஏதோ ஈர்ப்பு ஏற்பட்டது போலத் தோன்றியது. ஆனால் அவள் ஏன் 'நவ்' பேப்பரின் பிற்பக்கங்களை உற்றுப் பார்த்தாள் என்பது மர்மமாயிருந்த்து. சிலவேளை இவளும் அவர்களைப் போன்ற தொழில் ஏதேனும் செய்கின்றாளோ என்கின்ற சந்தேகம் வந்தது. வாய் விட்டுக் கேட்கலாந்தான், ஆனால் இப்படிக் கேட்டுவிட்டால், நான் இதுவரை கஷ்டபட்டுக் கட்டியமைத்த ‘நல்ல மனுஷன்' பிம்பம் காற்றில் பறந்துபோய்விடுமே என்பதுதான் சங்கடமாய் இருந்தது.

பூடகமாய்த்தான் இதைக் கேட்க வேண்டும் என நினைத்து 'நீ என்ன வேலை செய்கின்றாய்?' என்றேன்.

'நான் 'நவ்' பேப்பரின் பிற்பக்கங்களைப் பார்த்ததால் உனக்கு இப்படிக் கேட்கவேண்டும் போலத் தோன்றியதா என்றாள் சட்டென்று.

இது எனக்கு இரண்டாவது அதிர்ச்சி. இவள் எப்படி என் மனதில் தோன்றுவதை எல்லாம் உடனே உடனே அறிந்து கொள்கிறாள்?

'இல்லை, நானும் வேலை ஒன்று தேடிக்கொண்டிருக்கிறேன்....அதுதான் கேட்டேன்' எனச் சமாளித்தேன்.

'சரி, நீயென்ன எனது உறவா இல்லை என்னைக் காதலிப்பவனா... உண்மையைச் சொல்வதில் நானேன் தயங்கவேண்டும். ஆமாம் நானும் இந்தப் பெண்களைப் போலத்தான் தொழில் செய்து சம்பாதிக்கின்றேன், அதிலேதும் உனக்குப் பிரச்சினையா?' என்றாள்.

மயிர் நீக்கின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை நம் பரம்பரை எனச் சொல்லித் தரப்பட்ட எனக்கு இதற்குப் பிறகு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனவே மவுனத்தைத் தேர்ந்தெடுத்தேன். அவள் மேலும் தொடர்ந்தாள்...

'ஆனால் நான் என் வாடிககையாளர்களை நேரடியாகச் சந்திப்பதில்லை. தொலைபேசியில் மட்டுமே உரையாடுவேன். உங்களைப் போன்ற ஆண்களுக்குத்தானே சற்றுக் கிறக்கமாய்க் கதைத்தாலே எல்லாவற்றிலும் உச்ச நிலைக்குப் போய்விடுவீர்களே. கொஞ்சம் குரலில் கிறக்கமும், மொழியில் நெருப்பும் இருந்தால் போதும். ஆதனால் இந்த வேலை பெரிய கஷ்டமில்லை' என்றாள்.

எனக்கு அவள் இப்படிச் சொன்னது இன்னும் அந்தரமாகப் போய்விட்டது. ஏதோ என் வீட்டுக்குள் வந்து பார்த்தது மாதிரியல்லவா எல்லாவற்றையும் போட்டுடைக்கிறாள். இனி இவளோடு கவனமாகக் கதைக்கவேண்டும் என எச்சரிக்கை நிலைக்குப் போயிருந்தேன்.

'இப்படி நான் இந்தத் தொழிலைச் செய்கிறேன் என்றால் எல்லா ஆண்களும் நிறையக் கேள்விகள் கேட்பார்கள். நீயின்னும் அதைத் தொடங்கவில்லையே?' என்றாள்.

ஏற்கனவே என் இரகசியங்களை அறிந்த அவளின் முன் அம்மணமாக நிற்பதாய் உணர்ந்துகொண்டிருக்கின்றவனுக்கு இது ஒரு கேடா என நினைத்துக்கொண்டேன்..செஸ்டர் ஸ்ரேசனை ரெயின் நெருங்கிக்கொண்டிருந்தது. இது, தான் இறங்குவதற்கான தரிப்பிடம் என அவள் சொன்னாள். என்னைப் போல வாசனைகளைப் பின் தொடர்கின்றவள் என்பதில் ஒரு நெருக்கத்தை உணர்ந்து அவளிடம் தொலைபேசி இலக்கத்தைக் கேட்போமோ என முதலில் யோசித்தேன். அது அவ்வளவு நல்லதில்லையென நினைத்து எனது இலக்கத்தை 'நவ்' பேப்பரின் ஓரத்தில் கடகடவென எழுதிவிட்டு அவளிடம் கிழித்துக் கொடுத்தேன். 'நீயும் அவர்களில் ஒருவன் தானோ' என நினைத்தாளோ தெரியாது, ஆனால் வாங்கிக் கொண்டாள்.

வள் என்னை எப்போதாவது தொலைபேசியில் அழைப்பாளென எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அழைப்பு வரவில்லை. என்னைப் போல எத்தனை பேரைக் கண்டிருப்பாள். நான் கொடுத்த இலக்கத்தை அந்தக்கணமே கசக்கியெறிந்துவிட்டுப் போயிருக்கக் கூடும். ரெயில்கள் ஒரு தரிப்பிடத்தில் மட்டும் தங்கி நிற்காதது போல, அவளைப் போன்றவர்களும் ஓடிக் கொண்டிருக்க விருப்பமுடையவர்களாக இருக்கக்கூடும். என்னைப் போன்ற பயணிகள் தான் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் தினமும் இறங்கி சலித்துப் போன வாழ்க்கையை வாழவேண்டியிருக்கிறது..

அடுத்த வாரவிறுதி வந்தபோது, வீட்டிலிருந்தால் பஞ்சி இன்னொரு போர்வையாய் என்னைப் போர்த்திவிடுமென்பதால் அவசரமவசரமாய் வாசனையை நுகரப் புறப்பட்டேன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. மரங்கள் எல்லாம் மஞ்சளாய் இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தன. நான் இரெயினுக்குள் என்னுடைய வழமையான நேரத்திற்கு ஏறிப் பயணித்தபோது, அவள் செஸ்டர் ஸ்ரேசனில் ஏறுவதைப் பார்த்தேன். 'என்ன ஆச்சரியமாக இருக்கிறதா' என்றாள். ' அப்படி இல்லையே...' என, அவள் என்னை இதுவரை தொலைபேசியில் அழைக்காத ஏமாற்றத்தை மறைத்துப் பதில் சொன்னேன். அவளுக்கு இது விளங்கியதோ என்னவோ தெரியாது. 'வாசத்தைப் பின் தொடரும் நமக்கு தொலைபேசி அழைப்புக்கள் அவ்வளவு முக்கியமில்லை. வாசம் சொல்லாத செய்தியையா தொலைபேசி சொல்லிவிடும்? என்றாள். உண்மைதான், இந்த நறுமணம் எனக்கு ஏதோ இரகசிய அழைப்புக்களை விடுத்துக்கொண்டிருப்பதால்தானே மற்ற அனைத்தையும் மறுத்து இதன் பின்னால் நான் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறேன் என நானும் நினைத்துக் கொண்டேன்.

இவ்வாறாக ஒவ்வொரு வாரவிறுதியும் சந்தித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வாசனைகளினூடாக அனுப்பப்படும சிக்கலான சமிக்ஞைகளை அறிவதில் இன்னும் தேர்ச்சி பெறுவதைப் பற்றி நிறையக் கதைத்தோம். எனது நாட்கள் வாசனைகள் நிரம்பிய அழகிய உலகமாய் இருந்தது. நான் கொஞ்சங் கொஞ்சமாய் நண்பர்களை வழமையாகச் சந்திக்கும் கோப்பிக்கடைகளில் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன். வருகின்ற தொலைபேசி அழைப்புக்களையும் தவிர்த்து, வாசத்தின் மொழியினூடு வரும் அழைப்புக்களோடு பேசவும் தொடங்கியிருந்தேன். ஒருமுறை அவளிடமிருந்து கோதுமை வாசம் வருவது போலத் தோன்றியது. 'நீ கோதுமை மணத்தை உடையவள்' என்றேன். இல்லை நான் நீராலானவள். உன்னைப் போன்றவர்கள் நினைக்கும் வாசங்களுக்கு ஏற்ப மாறிவிடக் கூடியவள்' எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள்.

ருநாள் அவளைச் சந்தித்தபோது சற்றுப் பதற்றமாயிருந்தாள். வாசங்களைப் பற்றிக் கதைப்பதை மறந்து விட்டு, யாரோ அவளைப் பின் தொடர்வது போன்ற அச்சத்திலிருந்தாள். மெல்லிய குரலில் 'உன்னோடு கொஞ்ச நாளைக்கு வந்து தங்கியிருக்க முடியுமா?' என்றாள். நான் அப்போது ஒரு தமிழ்க் குடும்பத்தின் வீட்டின் நிலவறையில் வாடகைக்கு இருந்தேன். ‘அதுவல்ல பிரச்சினை, உன்னை என்னறையில் வைத்திருக்கலாம். ஆனால் நான் நேசித்துக்கொண்டிருப்பவள் நோர்வேயில் தற்சமயம் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது?' எனக் கேட்டேன். 'நீ அவளுக்கும் வாசனையின் மொழியைச் சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். அது தெரிந்திருந்தால் அவள் எதற்காய் நான் இப்படிக் கேட்கிறேன் என்பதை மட்டுமில்லை, என்ன சிக்கலில் மாட்டியிருக்கின்றேன் என்பதையும் புரிந்திருப்பாள்' எனச் சொல்லிவிட்டு எனக்கொரு முத்தத்தைத் தந்துவிட்டு செஸ்டர் ஸ்ரேசனில் இறங்கிப் போகத் தொடங்கினாள். இந்த முறை பனம்பழத்தின் வாசனை அவளிலிருந்து வீசுவது போலத் தோன்றியது. இரெயின் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தது. நான் அவள் இறங்கிப் போகும் ஸ்ரேசனிலிருந்து பனம்பழத்தின் வாசனையைப் பின் தொடரத் தொடங்கியிருந்தேன்.

அதன் பிறகு அவளை நான் சந்திக்கவில்லை என்பது மட்டுமின்றி எனக்குப் பிடித்த அந்த வாசனைகளும் எனனை விட்டுபோய்விட்டன. மீண்டும் மீண்டும் நினைவிலும் நுகர்விலும் கொண்டு வர எத்தனை பிரயத்தனப்பட்டாலும் என்னால் அந்த வாசனையை மீளக் கொண்டுவர முடியவில்லை. இப்போது எல்லாம் சனம் பிதுங்கும் நெரிசலில் மனிதர்களின் வியர்வை நாற்றத்தைத்தான் என்னால் நுகர முடிந்தது. அவளும் இல்லாது போனதன்பின், வாரவிறுதிகளில் குறிப்பிட்ட ரெயினுக்காய் காத்திருந்து வாசனையைத் தேடிப் போவதை எல்லாம் நிறுத்திவிட்டிருந்தேன். நான் சந்தித்த அந்தப் பெண் தான் இந்த வாசனையைக் காவிய கடைசிப் பெண்ணாக இருந்திருக்க வேண்டும். ஒரு முதியவர் இறக்கும்போது ஒரு நூலகமே இல்லாமற் போய்விடுகின்றதெனும் சீனப் பழமொழியைப் போல இந்த நறுமணத்தின் இறுதித் தூதுவர் செஸ்டர் ஸ்ரேசனில் இருந்து நீங்கிப் போயிருக்க வேண்டும். ஆனால் அவள் நேரடியாக இருக்காதபோதும் முன்னர் எப்படி என்னால் அந்த வாசனையை சப்வே ரெயினுக்குள் நுகர முடிந்தது என்பதுதான் அதிசயமாயிருந்தது. சிலவேளைகளில் அவளோடு தொலைபேசியில் கதைக்கும் வாடிக்கையாளர்களின் மூலந்தான் ரெயினில் வாசம் பரவியபடி இருந்ததோ தெரியவில்லை. நேரே சந்திக்காமல் காற்றலைகளினூடு பேசுவதன் மூலம் நறுமணத்தைப் பரப்பவர்கள், வாசனையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள் என்பதைப் பிறகு அறிந்துகொண்டேன். அவர்களால் வாசனையைக் கொண்டு எதுவும் செய்யமுடியும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் நான் விரும்பும் வாசத்திற்கேற்ப அவளால் வாசனைப் பரப்ப முடிந்திருக்கிறதென நினைத்துக் கொண்டேன்.

ஒரு வெள்ளிக்கிழமை, வாரவிறுதியில் வரப்போகும் ஓய்வை எண்ணித் திளைத்தபடி ரெயினில் 'மெட்ரோ' பேப்பரை வாசித்துக்கொண்டு போனேன். இலங்கையில் யாரோ ஒரு ராஜபக்சே தன் மனைவி நாய் வேண்டியதற்காய் ஐரோப்பாவிற்கு தனி விமானம் அனுப்பியிருந்ததை ஒரு செய்தியாய்ப் போட்டிருந்தார்கள். மனைவி மீது இவ்வளவு பிரியமாயிருக்கும் ராஜபக்சேக்கள் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் சற்றேனும் மனிதாபிமானத்தோடு இருந்திருக்கலாமென நினைத்துக் கொண்டேன். செஸ்டர் ஸ்ரேசனைத் தாண்டும்போது அவளின் ஞாபகம் வந்தது. எனது தொலைபேசி இலக்கதைக் கொடுத்திருந்தபோதும் அவள் ஏன் என்னை அழைக்கவில்லை எனவும் யோசித்தேன். ஆகக் குறைந்தது அவளிடம், நான் நீண்டகாலம் தேடி அலைந்த வாசனையை அவளை இறுதியாச் சந்தித்தபின் காணாமற் போய்விட்டதென்பதைச் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். ஒரேயொரு முறையாவது எனக்குப் பதின்மங்களில் பிடித்த ஈரப்பலா வாசனையை அவளின் உடலில் இருந்து நுகர்ந்து பார்க்கவேண்டுமெனவும் ஆசை கிளர்ந்தது.

இவ்வாறு நினைவுகள் அலைக்கழிக்க, மெட்ரோவின் அடுத்த பக்கத்தைப் புரட்டினேன். பஞ்சாப்பில் பிறந்த ஜஸ்மீட்ற் என்பவர் வன்கூவரில் நீண்டகாலம் வசித்தவர் என்றும், அங்கே முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்ததால் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு ஓடிவந்தவர் எனவும், ரொரண்டோவிற்கு சிலமாதங்களுக்கு முன் வந்து தலைமறைவாக வாழ்ந்த அவரை யாரோ நேற்று இரவு டொன்வெலி வீதியிலுள்ள பாலத்தின் கீழே கொன்று போட்டிருக்கின்றனர் எனவும் போடப்பட்டிருந்தது. செய்தியோடு பிரசுரிக்கப்பட்ட புகைப்படம் நான் சந்தித்த பெண்ணின் சாயலில் இருந்ததைப் பார்த்து மனம் அதிர்ச்சியில் உறைந்தது. மேலும் இது தற்செயலாய் நடந்த கொலையல்லவெனவும், கெளரவக் கொலையாக இருக்குமெனவும் கிடைக்கப்பெறும் ஆதாரங்களினூடாக பொலிஸ் சந்தேகிப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது.

அவளை யாரோ பின் தொடர்கிறார்கள் என்று சந்தேகித்ததால் தான் என்னோடு கொஞ்சநாள் வந்து இருக்கலாம் எனக் கேட்டிருக்கின்றாள் போலும். நான் தான் அவளின் சிக்கலை விளங்கிக் கொள்ளாமல், என் கெளரவத்தைப் பார்த்து அவளைக் கைவிட்டிருக்கின்றேன். அவளைக் கொன்றவர்கள் மட்டுமில்லை, நானுங்கூட என் கெளரவத்தின் பொருட்டு ஒரு கொலை நிகழக் காரணமாயிருக்கின்றென நினைக்க மிகுந்த கவலையாயிருந்தது.

ஒரு பெண்ணின் அகால மரணம் நிகழும்போது உலகில் இருந்து ஒரு வாசனை இல்லாமற் போகின்றது. நம் இதிகாசத்திலும் சூர்ப்பணகையின் மூக்கை வெட்டியது கூட அவள் தனக்குப் பிடித்தமான ஒருவனின் வாசனையைப் பின் தொடர்ந்து போய்விடக்கூடாது என்கின்ற அச்சத்தினால்தான் நிகழ்ந்திருக்கின்றது போலும்.

பொறுப்பற்றதன்மையால் ஒருத்தியைக் கொலை செய்துவிட்டென குற்றவுணர்வுடன் நோர்வேயில் படித்துக்கொண்டிருந்த காதலிக்கு நடந்ததைத் தொலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தேன். கணங்கள் கழியக் கழிய என் அறை எங்கும் கோதுமையின் வாசனை பரவத் தொடங்கியது. எனக்குத் திடீரென்று, அருகில் இல்லாமலே காற்றலைகளினூடு பேசுவதன் மூலம் நறுமணத்தைப் பரப்புபவர்கள் நினைவில் வந்தார்கள். மேலும் வாசனையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற அவர்களால் வாசனையைக் கொண்டு எதுவும் செய்யமுடியும் என்பதும் ஞாபகத்தில் வந்தது. அப்படியாயின் என் காதலி இவர்களில் ஒருத்திதானோ? ஆக தொலைவில் இருக்கும் அவள் என்னை வாசனைகளால் எந் நேரமும் பின் தொடந்து கொண்டிருக்கின்றாளா? இப்போது கோதுமை வாசம் போய் ஈரப்பலா வாசம் கமிழத் தொடங்கியிருந்தது. எனக்குப் பயத்தில் உடல் வேர்க்கத் தொடங்கியது.. அப்படியாயின் நான் உண்மையாகவே அந்தப் பஞ்சாபிப் பெண்ணைச் சந்திக்கவேயில்லையா?

.......................

('அம்ருதா' - ஜூலை, 2014)

நன்றி: ஓவியம்: ராஜா சேகர்

 

http://djthamilan.blogspot.co.uk/2014/07/blog-post_16.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.