Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கப்பலேறுவோர் கதைகள்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலேறுவோர் கதைகள்…

ஜெரா

image-e1406800624477.jpg

படம் | THE CANADIAN PRESS/Jonathan Hayward, Ctvnews

“எங்களோடு வந்த நேசன் என்ற ஒருத்தர் கப்பலுக்குள்ளயே கடும் வருத்தத்தில செத்துப் போயிட்டார். அங்கயே சடங்குகள செய்திட்டு, கிடந்த இரும்பில பொடிய சேர்த்துக் கட்டி கடலுக்க எறிஞ்சிட்டம்…” என்று சொன்னவர், அடுத்த வார்த்தையைத் தொடங்கும் முன், ஒரு முடக்குத் தண்ணீர் குடிக்குமளவிலான இடைவெளி எடுத்துக் கொள்கிறார். அந்த நினைவு அவரை அசையாதிருக்கச் செய்திருக்க வேண்டும்.

அவர் சுரேன் கார்த்திகேசு. இறுதிப் போர் முடியும் வரைக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்து ஊடகப் பணியாற்றிய பத்திரிகையாளர். “முள்ளிவாய்க்காலில இருந்த ஹொஸ்பிடலுக்குத் தரையாலயும், கடலாலயும் வந்து ஆமிக்காரர் அடிக்கேக்க நானும் அங்க காயப்பட்டு படுத்துக் கிடந்தனான். நான் பாக்கவே அந்த இடத்தில 15 சனங்கள் செத்தது. அந்த சம்பவத்த நேரில பார்த்த சாட்சியான பத்திரிகையாளன் நான், என்று அவர் குறிப்பிடுகையில், அவரைப் பற்றிய மேலதிக அறிமுகம் அர்த்தமறுகின்றது. போர் முடிந்த கையோடு, நாடு தாண்டியவர்களில் சுரேனும் ஒருவர். தாய்லாந்திலிருந்து அவரின் கதையை ஆரம்பிக்கின்றார்.

“தள்ளாம் காசு” பயணம்தான். அதாவது, போய் இறங்கியவுடன் காசு தருவோம் என்ற உடன்படிக்கையில் பயணித்தல். 5 ஆயிரம் டொலர்களிலிருந்து 60 ஆயிரம் டொலர்கள் வரை தலையொன்றுக்கான பயணப் பெறுமதி அமைந்தது. அது, 2010ஆம் ஆண்டின், ஏப்ரல் 30ஆம் திகதி. அன்றைய நாளில் நான் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலிருந்து 800 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் கடற் பகுதி ஒன்றுக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டேன். எம்மை நாடு மாற்றும் ஏற்பாட்டாளர்கள் பயண ஒழுங்குகளைச் செய்திருந்தார்கள். கடற்கரையிலிருந்து சிறு படகொன்றில் ஏற்றினார்கள். அந்தப் படகின் 10 நிமிட பயணம் கடந்து இன்னுமொரு ரோலர் வகைப் படகிற்கு மாற்றினார்கள். அது ஒன்றரை நாள்கள் பயணித்து மே, 02ஆம் திகதி சன் சீ கப்பலை சென்றடைந்தது. அன்று ஆரம்பித்தது என் கடல்பயணம், என்று சுரேன் பேசி முடிக்கையில், இது மாதிரியான பயணமொன்றை ஏன் விரும்பினீர்கள் என்ற கேள்வி அடுத்ததாக இயல்பாகவே எழும்.

“கப்பலேறிய நாளிலிருந்து எனக்கு வருத்தம். உணவு ஒழுங்கின்மையால், யாரின் துணையின்றியும் எழுந்து நடக்க முடியாதளவுக்கு உருக்குலைந்திருந்தேன். என்னோடு சுகவீனமுற்றிருந்தவர்தான் நேசன். அவருக்கு நடந்த மரணம் அனைவரையுமே அச்சுறுத்தியது. அவருக்கு அடுத்த நிலையில் நான்தான் இருந்தேன்.

இது மிகவும் கசப்பானது. வாழ்வில் இனி மரணத்தைத் தவிர எதுவுமே இல்லை என்ற வெறுநிலை வரும்போதுதான் இப்படியான படகுப் பயணங்களைத் தெரிவுசெய்கிறோம். போர் ஏதுமற்றவர்களாக்கி தெருவில் வீசிய வெறுமை நாள்களில் இந்தப் பயணத்தை தெரிவுசெய்தேன். கடலில் விழுந்தால் சாவு, கரையேறினால் வாழ்வு என்ற நிலையைத் தெளிவாக உணர்ந்த பின்பே, என்னோடு கப்பலேறிய அனைவரும் இருந்தனர்.

சலிப்புக்கு நிகரான மனநிலையுடனும், வெறுமையுணர்வுடனும் மறு கேள்விக்கும் தயாராகுகையில், அவரே தொடர்கின்றார்.

என்னைப் போலவே வேறு சில இடங்களிலிருந்தும் தொகுதி தொகுதியாக ஆட்கள் வந்து கப்பலில் ஏறினார்கள். நான் கப்பலேறிய நாளிலிருந்து ஜூலை மாதம் 05ஆம் திகதி வரை சன் சீ அந்த இடத்திலேயேதான் நின்றது. அந்த நாளில்தான் தன் பயணத்தை ஆரம்பித்து, ஒரு மாதம் கடந்து ஓகஸ்ட் 13ஆம் திகதியில் கனடாவின் கரையைக் கண்டது.

இடைப்பட்ட ஒருமாதக் கஷ்டங்களையும் ஓரிரு வரிகளில் அவரால் சொல்லிவிடமுடியாது என்பதைத் தெரிந்துகொண்டே மறுகேள்வியைக் கேட்டேன். சில கஷ்டங்களை மட்டும் பகிர்ந்துகொண்டார்.

படகேறி சிலநாள்களுக்கு உணவுப் பிரச்சினை இருக்கவில்லை. மதியம் ஒரு தரம் ஒரு பிடியளவு சோறு தருவார்கள். இரவில், கஞ்சி கிடைக்கும். அதிலும் உணவு வழங்கும்போது முந்தியவனுக்குத்தான் கிடைக்கும். சாப்பாட்டுக்காக பெரும்போராட்டமே நடக்கும். கப்பலுக்குள்ளும் தமிழர்களின் குணம் தெளிவாகப் பின்பற்றப்பட்டது. அதில் பயணித்த 492 பேரும் வன்னியிலிருந்து வந்தவர்கள், யாழிலிருந்து வந்தவர்கள், மட்டக்களப்பிலிருந்து வந்தவர்கள், கொழும்பிலிருந்து வந்தவர்கள் என்று கூட்டம் கூட்டமாகப் பிரிந்து இடம்பிடித்துக்கொண்டனர். நான் குப்பைகள் போட ஒதுக்கப்பட்ட பகுதியில் படுத்தே கிடந்தேன். கப்பலேறிய நாளிலிருந்து எனக்கு வருத்தம். உணவு ஒழுங்கின்மையால், யாரின் துணையின்றியும் எழுந்து நடக்க முடியாதளவுக்கு உருக்குலைந்திருந்தேன். என்னோடு சுகவீனமுற்றிருந்தவர்தான் நேசன். அவருக்கு நடந்த மரணம் அனைவரையுமே அச்சுறுத்தியது. அவருக்கு அடுத்த நிலையில் நான்தான் இருந்தேன். அங்கு மருத்துவ வசதிகள் மிகக் குறைவாக இருந்தன. சரியான சீரியஸ் என்றால் ஒரு சேலைன் ஏற்றுமளவுக்கு மருத்துவ நிலைமையிருந்தது. தண்ணீருக்குப் பெருந்தட்டுப்பாடு. மழை பெய்தால் சொப்பின் பைகளை எடுத்துக் கொண்டு, கப்பலின் மேல்தளத்துக்கு சென்றுவிடுவோம். அதில் மழை தண்ணியைப் பிடித்து குடித்தோம்.

பயணம் குறித்த அதிக கதைகளை சுரேன் வைத்திருந்தார். வாசிப்பவர்களின் நலன்கருதி கதையை சுருக்கிக் கொள்ள, கனடாவுக்குள் போனதன் பின்னரான நிலைமைகளைச் சொன்னார்.

கனடா அரசு எங்களை சரியாக, அந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டே நடத்தியது. அனைவரும் விசாரணைப் பிரிவு என்ற ஒரு பெரிய கொட்டகைக்குள் தங்க வைக்கப்பட்டோம். அங்கேயே விசாரணை உட்பட சகல வசதிகளும் இருந்தன. விசாரணை நிறைவடைய எங்களோடு வந்தவர்கள் வெவ்வேறு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்டனர். நான் ஆறுமாதங்கள் கடந்து, வெளியேற்றப்பட்டேன். ஈழநாதம் பத்திரிகையில் பத்திரிகையாளராகப் பணியாற்றினேன் என்றதற்காக அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட நிலையில் இப்போது இருக்கிறேன். என்னோடு வந்தவர்களில், விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட இருவரில் ஒருவர் விபத்தொன்றில் மரணித்ததாகவும், மற்றையவர் காணாமல் போய்விட்டதாகவும் அறிகிறேன். ஆனாலும், இந்த நாட்டில் இப்போது எனக்கு பிரச்சினையில்லை. எம்மவர்தான், (தமிழர்கள்) “கப்பல்காரர்கள்” என்று தனித்துப் பிரித்துப் பார்க்கிறார்கள்.

என்று அவர் தன் கதையை முடிக்கையில், அந்த நாட்டில் நடு இரவைக் கடக்கிறது காலம்.

கப்பலில் பயணித்த இன்னொருவர் ஷியா. ஷியாவின் கணவர் கப்பல் உரிமையாளர்களில் ஒருவராக கனேடிய விசாணை அதிகாரிகளால் குற்றஞ்சுமத்தப்பட்டு, கடந்த நான்கு ஆண்களாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரின் கதை இன்னும் துயரமானது.

“தானும் இதில பயணம் செய்ய வேணும் எண்டதுக்காக அந்தக் குழுவில் ஒருவர் எண்டு கையெழுத்து வைக்குமாறு சொன்னதாலதான் கையொப்பம் இட்டதாவும், அந்த விண்ணப்பம் முழுவதும் தாய்லாந்து பாசையில் இருந்ததால் தன்னால் அது என்ன எண்டு விளங்கிக் கொள்ள முடியாமற் போயிட்டுது எண்டும் கவலைப்படுறார்.

அவருக்கு இப்ப கேஷ் எதுவும் நடக்கிறதில்ல. சும்மா வைச்சிருக்கு. ரெண்டு வருசத்துக்கு முதல் 20,000 கனேடியன் டொலர் தொகை பிணையாகக் கட்டினன். ஆனால், இன்று வரை எந்த முடிவும் இல்லை. அரச வக்கீல் ஒருத்தரைத்தான் அவருக்கு வக்கீலா வைச்சிருக்கினம். அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்ல. எங்களுக்கு அவர் எதுவும் தெரியப்படுத்துறேல்ல. என்ன நடக்குது? இனி என்ன நடக்கும்? எண்டு எதுவும் சொல்லத் தெரியாமல் இருக்கு. இப்போ குற்றச்சாட்டின் பேரில்தான் உள்ள இருக்கிறார். அதுவே நான்கு வருடங்களையும் கடந்திட்டுது. இங்க எங்களப் பற்றி கதைக்க எந்த வலுவான தமிழ் அமைப்புக்களும் இல்லை. யாரிட்ட போய் என்ன கதைக்கிறது? யாரிட்ட இதைப் பற்றி ஆலோசனை கேட்பது என்று கூட தெரியேல்ல. உயிர்ப்பிச்சை கேட்டுத்தான் இந்த நாட்டுக்கு வந்து துலைஞ்சம். எங்கட நாடு நல்லா இருந்தா இங்க வரவேண்டிய அவசியம் இருந்திருக்காது . திருப்பிப் போகவும் முடியாமல், இங்கு சுதந்திரமாய் வாழவும் முடியாமல் நாங்க படும்பாடு சொல்லிமாளாது. அவரைப் பாக்கப் போக எங்கட இடத்தில இருந்து இரண்டு மணித்தியாலம் வேணும். ஒரு மாதத்துக்கு ஒருக்கா போய் பார்ப்போம். அதுவும் சும்மா கண்ணாடிகளுக்கு வெளியில் நிண்டுதான் தொலைபேசியில் கதைப்பம். மகள் பிறந்ததிலயிருந்து இண்டை வரைக்கும் அப்பா தூக்கின​தே இல்ல மகளுக்கும் இப்ப மூண்டு வயதாகிட்டது. வேலை செய்யவும் ஏலாது. பிள்ளையப் பார்க்க யாரும் இல்லை. வந்தவர்களில் பலர் எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சி, தங்கட குடும்பம், தங்கட வேலை எண்டு சந்தோஷமாக இருக்கினம். இந்தக் கப்பல் சம்பந்தப்பட்டவையளும், வன்னியை வாழ்விடமாகக் கொண்டவையளும்தான் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கினம்.

அப்பா – மகள் உறவு எப்பிடி?

சில நேரம் அப்பாட்ட போகோனும் எண்டு சொல்லுவா. அப்பாட படத்தை எடுத்துக் குடுத்தா, அதுக்கு முத்தம் குடுத்திட்டு மறந்து போயிடுவா. பள்ளிகளில் யாரும் நண்பர்களின்ர அப்பாவைப் பார்த்து தானும் அப்பா எண்டு கூப்பிடுவா. மற்றப் பிள்ளையளைப் பார்த்து தானும் தன்ர கையை உயர்த்திக் கொண்டு நிப்பா, தன்னையும் தூக்க சொல்லி.

எனக்கு எல்லா உரிமையும் தந்திருக்கினம். நாங்கள் வந்த சன் சீ கப்பலின் சொந்தக்காரன் அவர்தான் எண்டு கனேடிய அரசு குற்றம் சுமத்தி வைச்சிருக்கு. ஆனா அவர் தனக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையெண்டு சொல்றார்.

தானும் இதில பயணம் செய்ய வேணும் எண்டதுக்காக அந்தக் குழுவில் ஒருவர் எண்டு கையெழுத்து வைக்குமாறு சொன்னதாலதான் கையொப்பம் இட்டதாவும், அந்த விண்ணப்பம் முழுவதும் தாய்லாந்து பாசையில் இருந்ததால் தன்னால் அது என்ன எண்டு விளங்கிக் கொள்ள முடியாமற் போயிட்டுது எண்டும் கவலைப்படுறார்.

என்று அவர் கூறி முடிக்கையில் மறுகேள்வி தொடுப்பதை தடுக்கிறது ஷியாவின் கண்ணீர். பெருமூச்சொன்றை விட்டபடி செய்தி இணையத்தைப் பார்க்கிறேன், தமிழ் அகதிகள் 157 பேருடன் அவுஸ்திரேலியாவுக்குப் போய் பிரச்சினைப்படுகிறதாம் இன்னுமொரு படகு என்ற செய்தி பரபரப்பாகிறது. கப்பல் பயணம் எவ்வளவு சிரமமானதும், துயரமானதும் என்பதைக் காட்ட எம்மவருக்கு இன்னும் எத்தனைத் துயரக் கதைகளைக் காட்டுவதோ?

http://maatram.org/?p=1617

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.