Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள இராணுவம் தமிழ்மக்களது காலைச் சுத்திக் கொண்ட பாம்பு! எந்த நேரமும் கடிக்கலாம்! - நக்கீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் தமிழ்மக்களது காலைச் சுத்திக் கொண்ட பாம்பு! எந்த நேரமும் கடிக்கலாம்! - நக்கீரன் photo.png 

[Friday 2014-08-01 11:00]
karainagar-rape-article-310714-150.jpg

இந்த மாதம் யூலை16 அன்று யாழ்ப்பாணம், காரைநகர், ஊரிக் கிராமத்தில் 11 அகவை நிரம்பிய சிறுமியொருவர் அப்பகுதியில் முகாமிட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களால் தொடர்ச்சியாக 12 நாட்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டார். காரைநகர் ஊரி கிராமத்தில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலைக்கு செல்லும் போது அந்தச் சிறுமி சிப்பாய்களால் வழி மடக்கப்பட்டு அருகிலுள்ள கண்டல் காட்டினுள் கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். "வெளியில் யாருக்கேனும் ஒரு சொல் சொன்னாலும் கொலை செய்து விடுவோம்" என குறித்த சிறுமி மிரட்டப்பட்டிருந்ததால் அவர் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் இருந்து மறைத்துவிட்டார். ஆனால் சிறுமி படித்துவந்த பள்ளிக் கூடம் அந்தச் சிறுமி அடுத்தடுத்து 11 நாட்கள் பள்ளிக் கூடத்துக்கு ஏன் வரவில்லை என்று பெற்றோரிடம் விசாரித்த போதுதான் தங்களது பிள்ளை பள்ளிக்கூடம் போகவில்லை என்ற உண்மை பெற்றோர்களுக்குத் தெரிய வந்தது.

  

அந்தச் சிறுமி பகல் நேரத்தில் கடற்படைச் சிப்பாய்களால் தடுத்து வைக்கப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்படும் நேரம் பார்த்து விடப்பட்ட காரணத்தால் பெற்றோர்கள் பிள்ளை பள்ளிக்கூடத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். சிறுமிக்கு ஏற்பட்ட குருதிப் பெருக்கினையடுத்து அவரை வினாவிய போதே உண்மை வெளிவந்தது. இதனை அடுத்து சிறுமி யாழ்ப்பாணம் கற்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

யூலை 17 அன்று சம்பவம் இடம்பெற்ற ஊரிக்கு நேரில் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். இந்த ஊரில் வாழும் மக்கள் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள். அடிப்படை வசதிகளின்றி வறுமையில் உழல்பவர்கள்.

 

 

karainagar-rape-article-310714%20(1).jpg

 

ஜனாதிபதி மகிந்த இராஜபக்சே கடற்படையினர் மீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் R.D.P. விமலசேனாவுக்கும் ஊர்காவல்துறை துணை மேலாளர் R.K.B. செனிவிரத்தினவுக்கும் தனது நாடாளுமன்ற செயலாளர் குமாரசிறி கெட்டிகே ஊடாக கட்டளை பிறப்பித்தார்.

தொலைபேசியில் ஊர்காவல்துறை மேலாளர் செனிவிரத்தின அவர்களைத் தொடர்பு கொண்ட கெட்டிக்கே சம்பந்தப்பட்ட கடற்படை சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டால் கடற்படையின் ஒழுக்கக்கேடு அம்பலம் ஆகிவிடும் என்றும் எனவே அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் இந்தக் கட்டளையையும் மீறி 7 கடற்படைச் சிப்பாய்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக "அகவை குறைந்த சிறுமியைக் கடத்தியது, தொடர் பாலியல் வல்லுறவு மேற்கொண்டது" என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு யூலை 18 இல் வழக்கு பதிவு (13/2014) செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டை அடுத்தே வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

karainagar-rape-article-310714%20(2).jpg

 

குறித்த சிறுமியையும் குடும்பத்தினரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அலைக்கழித்த கடற்படையினர் சம்பவத்தைப் பெரிதாக்காமல் விடும்படியும் அங்கு இருக்காமல் வேறு இடத்திற்கு மாறிச் செல்லும்படியும் இல்லாவிடில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் மிரட்டி இருக்கிறார்கள். யூலை 18 க்கு முந்திய இரவு சிறுமியின் வீட்டுக்குச் சென்ற கடற்படை சிப்பாய் குழு ஒன்று வீட்டுக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

கடத்தல் பாலியல் வல்லுறவு குற்றங்கள் சுமத்தப்பட்ட கடற்படைச் சிப்பாய்களின் பெயர்கள் பின்வருமாறு.

1. அஜித் குமார்

2. ரூபசிங்கி ஆராய்ச்சிலாகே ஷமார இன்டிகா

3. நடீரா டில்ஷாண் இரத்னாயக்கா

4. குடபலகே ஜெயவீரா

5. இன்டிகா குமார விதானாராய்ச்சி

6. இரணசிங்கி சுமித் சுபாஷ்

7. விக்கும் சேனகே பியசிறி திஸ்சநாயக்கா

மேற்குறிப்பிட்ட சிப்பாய்கள் காரைநகர், ஊர்காவல்துறை ஊரிக்குளம் பகுதியில் ஊர்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள். காரைநகர் கடற்படை முகாமில் நீண்ட காலம் பணி புரிந்தவர்கள்.

 

karainagar-rape-article-310714%20(3).jpg

 

யூலை 18 இல் சந்தேக நபர்கள் அடையாள அணிவகுப்புக்கு தோற்றுவிக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் கடற்படை தொப்பி, சீருடை அணிந்திருந்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியால் இவர்களில் எவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நா.உ இ. சரவணபவன் உண்மையான சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்புக்கு நிறுத்தப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். சந்தேக நபர்களை அடையாளம் காட்டத் தவறியதற்கு அதுவே காரணம் என்றும் சொன்னார்.

தலைமை நீதவான் சந்தேக நபர்களை காவலில் வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார். ஆனால் பின்னர் வழக்கறிஞர் ஒருவர் பதில் நீதவானாக நியமிக்கப்பட்டார். அவர் எல்லோரையும் உரூபா 250 மற்றும் மூன்று சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு கொடிய குற்றமாகும். மேலும் 11 அகவை சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது மிகவும் கொடிய குற்றமாகும். அப்படியிருக்க வெறுமனே உரூபா 250 பிணையில் செல்ல பதில் நீதவான் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 

karainagar-rape-article-310714%20(4).jpg

 

கடற்படைச் சிப்பாய்களைப் பிணையில் விட்டது சட்டத்தை கேலி செய்வதாகும். இந்த வழக்கு எப்படி முடியும் என்பதற்கான சமிக்ஞை ஆகும்.

இந்த 11 அகவை சிறுமியோடு அவரது உறவினரான இன்னொரு 9 அகவை சிறுமியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் 9 அகவைச் சிறுமியைப் பொறுத்தளவில் சட்டம் தனது கடமையைச் செய்யவில்லை.

யூலை 19 அன்று காரைநகர் மக்கள் சிறீலங்கா கடற்படைச் சிப்பாய்கள் பிணையில் விடுவித்தததை எதிர்த்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தினார்கள்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, இ. சரவணபவன், சி. சிறீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ததேமமுன்னணி இன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் காரைநகர் கடற்படை முகாமை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்றும் சந்தேக நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்கள்.

ஆனால் இராணுவப் பேச்சாளர் கோசல வருணகுலசூரியா தமிழ் அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டிவிட்டு இராணுவத்தை கட்டாயப்படுத்தி பின்வாங்க முயற்சிக்கிறார்கள் எனப் பதிலுக்குக் குற்றம் சாட்டினார்.

இப்போது இந்த 7 கடற்படைச் சிப்பாய்களும் காலி கடற்படை முகாமுக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட 'தண்டனை' இது மட்டுமே. அண்மையில்தான் கடற்படைத் தளபதியாக ஜெயந்த பெரேரா பதவி நியமனம் செய்யப்பட்டார். பதவி ஏற்கும் வைபவத்தில் அவரது இரண்டு பெண்பிள்ளைகள் உடனிருந்தார்கள். ஒரு 11 அகவை சிறுமி இன்னொரு 9 அகவைச் சிறுமி ஆகியோர் மீது 11 நாட்கள் தொடர் பாலியல் வல்லுறவு மேற்கொண்டவர்களை வெறுமனே மாற்றம் செய்ததன் மூலம் கடற்படைத் தளபதி தனது பெண்பிள்ளைகளுக்கும் பெண்குலத்துக்கும் தீராத அவமானத்தைத் தேடிக் கொடுத்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு அய்.நாடுகளின் இனப்படுகொலை வழக்காற்றில் (Convention) குறிப்பிடப் படாவிட்டாலும் 1998 ஆம் ஆண்டளவில் பாலியல் வல்லுறவு (Rape) பன்னாட்டு சட்டதிட்டத்தில் இனப்படுகொலையாகக் (genocide) கருதப்படலாம் என்பது தெளிவாகத் தெரியவந்தது. ரூவண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் ஒரு இனத்தை அழிப்பதற்கு இனப்படுகொலை பரவலாகவும் முறையாகவும் பயன்படுத்த முடியும் எனக் கண்டறிந்தது.

இனப்படுகொலை என்பது ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தை, இனத்தை, இனக்குழுமத்தை முழுதாகவோ அல்லது கூறாகவோ அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் செயலாகும்.

1998 இல் நடந்த ரூவண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் வழக்குத்தொடுநர் - குற்றவாளி அகாயேசு (Prosecutor v. Akayesu.) வழக்கில் வழங்கிய தீர்ப்பு நிலைமையை மாற்றிவிட்டது.

இந்த வழக்கில் தொடக்கத்தில் இனப்படுகொலைக் குற்றம் சேர்க்கப்படவில்லை. இந்த ரூவண்டாவுக்கான பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் 1994 இல் பெரும்பான்மை Huto இனத்தவருக்கும் சிறுபான்மை Tulsi இனத்தவருக்கும் இடையில் இடம்பெற்ற படுகொலையை விசாரிக்கவே உருவாக்கப்பட்டது.

ஜேன் - போல் - அகாயேசு ( Jean-Paul Akayesu) Huttu இனத்தைச் சார்ந்தவர். ஓர் ஆசிரியர். தாபா என்ற நகரின் மேயராக இருந்தார். இவர் மீது இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஜெனீவா வழக்காறுகள் மீறப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வழக்கு விசாரணையின் போது ஒரு சாட்சி கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து வழக்குத்தொடுநர் இந்தக் குற்றங்களை இட்டு மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார். தேவை ஏற்படின் குற்றச்சாட்டுப் பட்டியலைத் திருத்தவேண்டி வரும் என்றும் சொன்னார். நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மேலதிக சான்றுகள் வெளிவந்தன.

சாட்சி மாறி சாட்சி பாலியல்வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை பரவலாகவும் முறையாகவும் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை முன்வைத்தார்கள்.

1998 செப்தம்பர் 2 இல் வழக்கு விசாரணை முடிவுற்றது. மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் அகாயேசு மீதான 15 குற்றச்சாட்டுகளில் 9 குற்றச்சாட்டுகளில் அவரைக் குற்றவாளியாகக் கண்டது. அவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. அந்த மூன்று நீதிபதிகளில் நவநீதம்பிள்ளை ஒருவராவர்.

வட - கிழக்கை இராணுவமயப்படுத்தியதிற்கும் இப்படியான பாலியல் வன்முறைகளுக்கும் "நெருங்கிய தொடர்பு" இருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தமிழ் காடியன் ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

1980 களில் உருவாக்கப்பட்ட காரைநகர் கடற்படை முகாம் 2003 ஆம் ஆண்டு (அமைதி உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலத்தில்) விரிவுபடுத்தப் பட்டது. பக்கத்துக் காணிகளில் வாழ்ந்த 153 குடும்பங்களுக்கு சொந்தமான 78 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டது. இந்த முகாமுக்கு அருகில் 1 1/2 கி.மீ தூரத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் வாழ மறுத்தார்கள்.

2013 ஆம் ஆண்டு வவுனியா, நெடுங்கேணி என்ற ஊரில் 6 அகவை பெண்பிள்ளை ஒன்று இராணுவ சிப்பாயினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். சந்தேக நபர் மீது வழக்கு தொடரப்பட்டாலும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அது வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டது.

ஒரு புறம் சிறீலங்காவுக்கு எதிராக சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், மனித உரிமைகள் தவறாகப் பயன்படுத்தல், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை அய்.நா. மனித உரிமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய பன்னாட்டு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. மறுபுறம் 11 அகவை சிறுமி கடற்படை சிப்பாய்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இப்படியான குற்றங்கள் இடம்பெறுவதற்கு இராணுவ ஆக்கிரமிப்பு, அவசரகாலச் சட்டங்கள், ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்தல், சட்ட ஆட்சியின் அடிப்படையைத் தகர்ப்பது, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற கோட்பாடு மற்றும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நீதித்துறை துணை நிற்கின்றன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே ஒரு நேர்காணலில் "இராணுவம் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படாவிட்டால்தான் நான் ஆச்சரியப்படுவேன்" ("I will be surprised if my military did not rape Tamil women�.) எனக் கூறியிருக்கிறார்.

Headlines Today என்ற ஊடகத்துக்கு செவ்விகொடுத்த கோத்தபாய போர்க்காலத்தில் வன்னியில் தொண்டராகப் பணியாற்றிய தமிழ்வாணி குமார் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

"இப்போது அவர் (தமிழ்வாணி குமார்) பாலியல்வல்லுறவு மற்றும் கொலைகள் என்பவை இடம்பெற்றதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இவரது அழகு இராணுவத்தினரை மயக்கக் கூடியது. காரணம் அவர் மற்றவர்களைவிட மிகவும் வித்தியாசமானவர்." (Now, she [Damilvany Kumar] says that there had been all these alleged rape and murder and all these things. Now she is one person who will get attracted by soldiers, because she is so different from others.)

2014 மார்ச்சு மாதம் வரை பாதுகாப்புப் படையினரால் இழைக்கப்பட்ட 75 பாலியல்வல்லுறவு சம்பவங்களை (31 ஆண்கள், 41 பெண்கள், 18 அகவைக்கு உட்பட்ட பெடியன்கள்) மனித உரிமைக் காப்பகம் பட்டியல் இட்டுள்ளது. (http://www.hrw.org/sites/default/files/reports/srilanka0213webwcover_ 0.pdf)

மனித உரிமை வழக்கறிஞரும் அய்.நா. வல்லுநர் குழுவில் இடம்பெற்ற யஸ்மின் சூகா சமர்ப்பித்த இன்னொரு அறிக்கை "முடிவுறாத போர்: சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை" சித்திரவதைக்கும் வன்முறைக்கும் மே 2009 - மார்ச் 2014 இடையில் ஆளான 40 பேர்களது சாட்சியங்களை ஆவணப்படுத்தியுள்ளது. (Report released on 21st March 2014 titled, An Unfinished War: Torture and Sexual Violence in Sri Lanka , May 2009 � March 2014, by Yasmin Sooka. Full Report: http://www.tamilguardian.com/files/File/STOP%20report%20Yasmin%20Sooka%2021Mar2014.pdf )

போர்க் காலத்தில் பாலியல் வல்லுறவுவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திய சிங்கள இராணுவம் போர் முடிந்த பின்னரும் அதனைத் தொடர்கிறது!

சிங்கள இராணுவம் தமிழ்மக்களைப் பொறுத்தளவில் அவர்களது காலைச் சுத்திக் கொண்ட பாம்பு! எந்த நேரத்திலும் கடிக்கலாம்!

http://www.seithy.com/breifNews.php?newsID=114182&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.