Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுப்பு மூலை: வலி தெரியாதவரின் அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு மூலை: வலி தெரியாதவரின் அரசியல்

நந்தி முனி

வன்னியப்புவின் உறவினர் ஒருவர் இறந்து போய்விட்டார். வன்னியப்பு சாவீட்டுக்குப் போனார். ஐயர் இன்னமும் வரவில்லை. சனங்கள் ஆங்காங்கே வெற்றிலை பாக்குத் தட்டத்தை சுற்றியிருந்து வெற்றிலையோடு அரசியலை சப்பித் துப்பிக் கொண்டிருந்தார்கள். வன்னியப்பு இதில் எதிலும் இணைய விரும்பாது ஒதுங்கிப்போய் தனிய இருந்தார். ஆனாலும் பேப்பர் ரிப்போட்டர் அவரைக் கண்டுவிட்டார். கிளாக்கரும் கண்டு விட்டார். இருவரும் ஒரு வெற்றிலைத் தட்டத்தையும் தூக்கிக் கொண்டு அப்புவுக்கு அருகே வந்து குந்தினார்கள்.

ரிப்போட்டர் - என்னப்பு தனிய வந்து குந்திட்டீங்க

அப்பு - உதுகளுக்குள்ள போயிருந்தா வெத்தலையோட அரசியலையும் சப்பித் துப்ப வேண்டியது தான். அது தான் தனிய வந்து இருந்தனான். ஐஞ்சு வரியத்துக்கு முந்தி உயிர்கள குடுத்து செய்த அரசியல்.. இப்ப உப்பிடி வெறுவாய் சப்பிற விசயமாய் போச்சுது...  அது தான் ஒண்டும் வேணாம் எண்டு போட்டு தனிய வந்து குந்தினான்.

கிளாக்கர் - உண்மை தான் அப்பு... எங்களால இப்ப கதைக்க மட்டும்தானே ஏலும். எலெக்சன் வந்தா வோட் போடுவம். பிறகு பேப்பர் பாப்பம், இணையம் பாப்பம். முகநூலில வீரம் பறக்க மானம் பறக்க மோதுவம்... அவ்வளவும் தான்.

ரிப்போட்டர் - இல்ல இல்ல... இன்னுமொண்டு செய்யிறம். வருசா வருசம் கட்சி மாநாடு கூட்டுறம். அதில பிரகடனங்களும் விடுறம்.

வன்னியப்பு - ஓமடா தம்பி, நீ சொல்லத்தான் ஞாபகம் வருது. தமிழரசு கட்சி மாநாட்டில என்ன புதினமாம்?

ரிப்போட்டர் - ஒரு புதினமும் இல்ல.. எல்லாம் வழமை தான். மாவை நாப்பத்திரண்டு பக்கத்தில ஏதோ எழுதி வச்சிருக்காராம். அத வாசிக்க போறாராம். இடையில மயங்கி விழாட்டி சரி.

வன்னியப்பு - ஏன் இந்த கூத்து?

3891b79b-6615-45f5-ade3-ed23372eeb384.jp

கிளாக்கர் - கூத்தில்லையப்பு உதுக்குள்ள வேற ஒரு உள்ளோட்டம் இருக்கு

ரிப்போட்டர் - அது என்ன உள்ளோட்டம்?

கிளாக்கர் - மாவைக்கு அல்வா குடுக்கிறாங்கள். முன்னமும் வட மாகாணசபை தேர்தலில மாவையை காய் வெட்டினவங்கள். இப்ப உந்த பதவிய குடுத்து அவர தாக்காட்டப் பாக்கிறாங்கள்.

வன்னியப்பு - ஏன் தாக்காட்டோணும்.. மூப்பின்படி அவருக்குத் தானே அந்தப் பதவி வர வேணும்.

கிளாக்கர் - அது சரி தான். ஆனா, உங்களுக்குத் தெரியும்தானே.. தமிழரசுக் கட்சி தான் கூட்டமைப்பில உள்ள பெரிய கட்சி. அப்பிடிப் பாத்தா... அதின்ட தலைவர் தான் சம்பந்தனுக்குப் பிறகு வருங்காலத்தில கூட்டமைப்பு தலைவரா வரவேணும்.

வன்னியப்பு - ஓம் ஓம் அப்படித்தானே வரவேணும்.

கிளாக்கர் - இல்ல அது நடக்காது போல தெரியுது... வாற தேர்தலில சுமந்திரன் களம் இறங்கிறார். அவர எப்பிடியும் வெல்ல வைப்பாங்கள். இப்பவே கூட்டமைப்பில அவர் தான் பட்டத்து இளவரசன் மாதிரி. தேர்தலில வெண்டா இளவரசன், குதிரையேற்றத்தில, யானை ஏற்றத்தில சித்தி பெற்றது போலத்தான். பிறகு படிப்படியா அவர கூட்டமைப்புத் தலைவரா மாத்துவாங்கள்.

ரிப்போட்டர் - உது எப்பிடி நடக்கும்? மாவை விடுமே?

வன்னியப்பு - ஏன் விக்கினேஸ்வரன் வரேக்க மாவை விட்டது தானே? மாவையை மேவித் தானே விக்கியர கொண்டு வந்தவங்கள்

கிளாக்கர் - சரியா சொன்னீங்க. மாவைக்குத் தகுதி காணாது, மொழிப் புலமை காணாது, எண்டெல்லாம் சொல்லி மாவையை அமத்திப்போட்டு தான் சம்பந்தர், விக்கிய கொண்டு வந்தவர். வருங்காலத்தில சுமந்திரன் விசயத்திலயும் அவர் அப்பிடிச் செய்யக்கூடும்.

வன்னியப்பு - நீங்கள் சொல்லுறபடி பாத்தா, மாவையை தமிழரசுக் கட்சித் தலைவராக்கி அவர அதிலயே வச்சுக்கொண்டு.. சுமந்திரன மேல தூக்கப் போறாங்கள். அப்படித்தானே?

கிளாக்கர் - அப்படித் தான் ஒரு ஊகம் இருக்கு..

ரிப்போட்டர் - ஏன் அப்படிச் செய்யோணும்.

கிளாக்கர் - முடிவெடுக்கிற ஆக்கள் கொழும்பு மைய தலைமையளா இருக்க வேண்டும் எண்டு தான்.

வன்னியப்பு - அப்பிடியிருந்தா என்ன நடக்கும்?

கிளாக்கர் - கொழும்பு மைய தலைமையெண்டா தீவிரம் காட்டாது. குடுக்கிறத வாங்கும். கொழும்புக்கும் அதுதான் விருப்பம். இந்தியாவுக்கும் அதுதான் விருப்பம், அமெரிக்காவுக்கும் அது தான் விருப்பம்.

ரிப்போட்டர் - ஓ அததான் மோடி தெளிவா சொல்லிட்டாரே

வன்னியப்பு - என்ன சொன்னவர்?

கிளாக்கர் - நாங்கள் தாறத நீங்கள் வாங்குவீங்கள். ஆனா எத குடுத்தாலும் உங்கட புலம்பெயர்ந்த ஆக்கள் திருப்திப்பட மாட்டினம். அவையள கொஞ்சம் உங்கட பிடிக்குள்ள கொண்டு வாங்கோ எண்டு.

வன்னியப்பு - ஏன் அப்படிச் சொன்னவர்? இதுக்கு முந்தின இந்திய தலைவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்களை பற்றி அப்படி ஒண்டும் சொல்லேல. இலங்கை அரசாங்கம்தான் புலம்பெயர்ந்த தமிழர கண்டு பயப்படுறது. இப்ப மோடியும் அப்படி கதைக்கிறார் ஏன்?

ரிப்போட்டர் - புலம் பெயர்ந்த தமிழர்களை கட்டுப்படுத்தினால் இஞ்சயுள்ள அரசியல ஒரு மித நிலைக்கு கொண்டு வரலாம் என்டு எல்லாரும் நம்பினம். தமிழ்ச் சனத்தின்ட போராட்ட நெருப்ப புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் அணையவிடாமல் வச்சிருக்கினம் எண்டு எல்லாரும் நம்பினம்.

வன்னியப்பு - அது உண்மையே?

கிளாக்கர் - அங்க தான் பிரச்சினையே இருக்கு... அது முழுக்க முழுக்க உண்மையில்ல. பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர் எப்ப நாட்டுக்கு வந்து போகலாம் எண்டு தான் யோசிக்கினம். அரசாங்கத்தின்ட தடைப்பட்டியல்ல பெயர் வரக்கூடாது எண்டு யோசிக்கத் தொடங்கீட்டினம். ஒரு கொஞ்சம் புலம்பெயர்ந்த தமிழர்கள் தான் உண்மையா விசுவாசமா அர்ப்பணிப்போட செயற்படினம். அவை இப்ப தான் செயற்படினம் எண்டில்ல. 2009 இக்கு முன்னிருந்தே அவயள் தான் செயற்பட்டு வரினம்... மற்றது கொஞ்சம் பேர் 2009 மே மாசத்துக்கு பின்னுக்கு கிளம்பின ஆக்கள். இவையளில கனபேர் இஞ்ச சண்ட நடக்கேக்க வெளிநாடுகளில தஞ்சம் கோரினவை தான். தங்கட வயசொத்த பிள்ளைகள் இஞ்ச செத்துக் கொண்டிருக்க இவையளெல்லாம் அங்க படிச்சுத் தேறினவை. அப்பிடி படிச்சு பெற்ற பட்டங்கள இப்ப முகநூலில பெருமையா கொழுவி வச்சுக்கொண்டு ஒவ்வொரு நாளும் வீராவேசமா எழுதிக் கொண்டிருக்கினம்... இன்னொரு கொஞ்சம் பேர் இயக்கச் சொத்துக்கள தனிச் சொத்துக்களாக்கி அனுபவிச்சுக் கொண்டிருக்கினம். இவையளுக்கு புலம்பெயர்ந்த நாடுகளில மேல் மட்ட உறவுகளும் இருக்கு. இவையளும் தான் இப்ப கூடத் தீவிரம் காட்டுறது.

வன்னியப்பு - அங்க நிண்டு என்ன வீரம் காட்டுறது, உண்மையான வீரம் எண்டா நாட்டுக்கெல்லோ வரோணும்?

ரிப்போட்டர் - அவையள் வர ஏலாதாம். வந்தா ஏயார்போட்டில வச்சு பிடிப்பாங்களாம்.

வன்னியப்பு - போராட வாறவன் ஏன் ஏயார்போட்டால வரோணும்? நேர இந்தியாவுக்கு போய் கடலால வரட்டும். வந்து இஞ்ச வீரத்த காட்டட்டும்.

கிளாக்கர் - கடைசி மட்டும் வரமாட்டாங்கள். கோழைப் பயலுகள். எல்லாரும் நடிப்புச் சுதேசியள். சாகத் தயார் எண்டால் இவங்கள் சண்ட நடக்கேக்க வந்திருக்கோணும். குறஞ்சது 2002இல சமாதானம் வரேக்க வன்னியில வந்து குடியேறி இருக்கோணும்.... ஒரு பொம்பிளப்பிள்ள அது தான் ஒரு டொக்டர்.... சனல் நாலுக்கு பேட்டி குடுத்துதே. அதுக்கு என்ன பெயர்...? ஆ... வாணி குமார்... அந்தப்பிள்ள வெளில இருந்து வந்து கடைசி சண்ட மட்டும் நிண்டது தானே? அப்பிடி வேறயும் கொஞ்சம் பேர் வந்து நிண்டவ தானே? அவையளப் போல இவையள் ஏன் வரேல?

ரிப்பாட்டர் - 2009 க்கு முந்தி வீரம் கதைச்சால் புலியோட சேர வேண்டியிருந்தது. ஏனென்டால் அப்ப வீரம் கதைக்கிறவ, அத நிரூப்பிக்கிறதுக்கு ஒரு சண்டைக் களம் இருந்தது. இப்ப அப்படி இல்ல.. சண்டைக்களம் இல்ல. வீரம் கதைக்கிற எவனும் சாகப்போறதில்ல.

கிளாக்கர் - அந்த துணிச்சலில தான் எல்லாரும் வாளை விசுக்கிக் கொண்டு திரியுறாங்கள். இஞ்ச யாழ்ப்பாணத்திலயும் கொஞ்ச பேர் கடும் தீவிரமா கதைக்கிறாங்கள். ஆனா யாருமே 95இல வன்னிக்கு வரத் தயாரா இருக்கேல்ல. குறைஞ்சது 2002லயும் வன்னிக்கு வராதவதான். 2009 க்கு முன்னுக்கெல்லாம் வராத வீரம் இப்ப பீறிட்டுக் கிளம்புது. திரும்பி ஒரு சண்ட வந்தா முதலில ஓடிப் பதுங்கிறது உந்தக் கள்ளர் தான்.

வன்னியப்பு - உண்ம தான் நாங்கள் அடுத்தடுத்து இடம்பெயரேக்க கொத்துக் கொத்தா சாகக்குடுக்கேக்க எங்களோட நிக்காதவ தான் இப்ப எங்கட பிரதிநிதியள்...

ரிப்போட்டர் - எங்கட எம்.பிமார்ல ஒருவருமே கடைசிச் சண்ட மட்டும் நிக்கேல.. மாகாண சபை உறுப்பினர்களிலயும் மிகச் சிலர் தான் வட்டுவாகல கடந்து வந்தவை.

வன்னியப்பு - வலி தெரியாதவன் எல்லாம் வலியைச் சொல்லி வாக்குக் கேட்டு இப்ப வெள்ளையும் சொள்ளையுமா மாலையும் கழுத்துமா திரியுறான்.

கிளாக்கர் - தமிழ் மக்களின்ட பிரச்சினையே இப்ப அது தான். வலி தெரியாதவனெல்லாம் தமிழ் மக்களின்ட வலிகளுக்கு தலைமை தாங்க பார்க்கிறான். ஒரு புறம் கொழும்பிலயும் இந்தியாவிலயும் சொத்துக்களையும் இனசனங்களையும் வச்சிருக்கிறவன்... இன்னொரு புறம் புலம்பெயர்ந்த நாட்டில நல்லா வேர் விட்டவன்.... இந்த ரெண்டு பகுதியும் தங்கட சொத்துக்களையும் சுகங்களையும் மேல் மட்ட உறவுகளையும் தங்கட சனத்துக்காக தியாகம் செய்து காட்டட்டும் பாப்பம்?

ரிப்போட்டர் - கடைசி மட்டும் செய்ய மாட்டாங்கள். முதலில உந்த இரண்டு பகுதிட்ட இருந்தும் எங்கட சனத்திண்ட அரசியல விடுதலை செய்ய வேணும். அது தான் ஒரு சரியான தொடக்கமா இருக்கும்.

வன்னியப்பு - சரியாச் சொன்னியடா.. ஆனா ஆர் விடுதலை செய்யிறது?

வன்னியப்பு வெற்றிலைய துப்பி விட்டு எழுந்தார். ஐயர் வந்து விட்டார். பறை ஓயத் தொடங்கியது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=3891b79b-6615-45f5-ade3-ed23372eeb38

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.