Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவப்பாகும் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பாகும் இலங்கை - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - தேவ அபிரா :-

22 செப்டம்பர் 2014

இன்று முகப்புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழ்ப்பெண் போல் உடையணிந்த சீனப்பெண் ஒருவர் பாடசாலைச் சிறுவர்களுடன் நிற்கும் படத்தைக் காண நேர்ந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்குப் பிறகு தமிழ்ச் சமூகம் வெளி உலகுடன் நேரிடையாகத் தொடர்பாடலை நிகழ்த்தி வருகிறதென்பது வெள்ளிடை மலை. ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலத்தில் சீனத் தோற்றம் கொண்ட சில பிக்குகள் யாழ்நகர வீதிகளில் றாபானைத்தட்டிக் கொண்டு சென்றது நினைவுக்கு வருகிறது. அவர்கள் அரசின் உளவாளிகள் எனக்கருதப்பட்டுப் போராளிகளால் கைது செய்யப்பட்டதும் நினைவுக்கு வருகிறது. இந்தச் சீனப் பெண்மணிக்கு அவரின் பின்னணி எதுவாக இருந்த போதும் அன்று நிலவியது போன்ற ஆபத்து இன்று இல்லை.

வேறு இன மக்கள் தமிழ் மக்களது பாரம்பரிய உடைகளை உடுத்தும் போது, தமிழைப் பேசும் போது தமிழ் மொழியிற் தேவாரம் பாடும் போது நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். முகநூலில் இப்படியான விடையங்களைத் தெரிவிக்கும் பல படங்களும் ஒளிப்பதிவுகளும் வலம் வருகின்றன. இந்த மகிழ்ச்சிக்கு இன்னொரு முகமும் இருக்கிறது அண்மையிற் புலம் பெயர்ந்த தமிழ்க் குடும்பத்துடன் இலங்கைக்குச் சுற்றுலாவுக்கு வந்த அய்ரோப்பியப் பெண்மணி ஒருவர் கசூரினாக்கடற்கரையில் அவரது கலாசார முறைப்படி நீராடிக் கொண்டிருந்த போது அவரிடம் பாலியற் சேட்டைகளைச் செய்யவும் இச்சில மகிழ்ச்சி முகங்கள் முயன்றிருக்கின்றன.

இலங்கையில் வாழும் தமிழர்களை விடவும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஏனைய இனங்களுடன் தவிர்க்க முடியாதபடி ஊடாடி வருகிறது. புலம் பெயர்ந்த முதற் தலைமுறையில் ஒரு சிலரும் இரண்டாம் தலைமுறையில் பலரும் ஏனைய இனங்களுடன் திருமணக்கலப்பு வரை சென்றுள்ளனர்; செல்கின்றனர்.

உலகம் கிராமமாக மாறும் போது ஒரு சமூகமாக எமது எண்ணங்களும் பார்வைகளும் அகன்று செல்கின்றன.

இன்னுமேன் வடக்கு கிழக்கில் பரந்து செறிந்திருக்கும் இராணுவத்துடனும் கூட தமிழ் சமூகத்தின் சில உறுப்பினர்களுக்கு உறவும் நெருக்கமும் ஏற்பட்டு வருகிறது. (சாதியம் தொடர்பான விடையத்தில் மட்டும் நமது சமூகம் தனது பார்வைகளைக் குறுக்கி வைத்திருப்பது சமூகவீனமானது)

எவ்வாறாயினும் தமிழ் அடையாளம் என்பது நெகிழ்வுத்தன்மைக்கு உட்பட்டு வருகிறது. சரி பிழைக்கு அப்பால் பண்பாட்டுத்தளத்தில் இது காலப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

மிக வேகமாக வளர்ந்து வரும் சீனப்பொருளாதாரம் காரணமாகச் சீனா அபரிமிதமான அந்நியச்செலவாணியைக் கொண்டிருக்கிறது. இதனால் தனக்குத் தேவையான எரிபொருள் மற்றும் அத்தியாவசியமான உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களைப்பெற்றுக்கொள்வதற்காக சீனா தனது சந்தைகளை விரிவுபடுத்தும் நோக்குடன் உலகளாவிய ரீதியிற் முதலீடுகளைச் செய்து வருகிறது. இதன் வழி சீனா இலங்கையிலும் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தனது முதலீடுகளைச் செய்து வருகிறது

அண்மையில் என்னுடன் பேசிய நண்பர் ஒருவர் இலங்கை சிவப்பு மயமாகி வருகிறதாகச் சொன்னார். இலங்கையில் அதிகரித்து வரும் செஞ்சீன ஆதிக்கத்தைத் தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் முன்னொருகாலம் எழுச்சியுற்றிருந்த சீன சார்பு இடதுசாரிகள் இன்றிருந்தால் இதனையிட்டுச் சந்தோசப்பட்டிருப்பார்கள் என்றும் சீன சார்புக் கட்சியான ஜேவிபி இலங்கையில் ஏற்பட்டு வரும் சீன ஆதிக்கத்தையிட்டு ஒரு வார்த்தை பேசவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேற்குலகம் மனசாட்சியின்றி யுத்தக்குற்றங்களை வேண்டுமென்றே நிகழ விட்டுப்பின் அதைக்காட்டி இலங்கையை வழிக்கு கொண்டு வரலாம் என்று இலவுகாத்த கிளிபோலிருக்க சிங்களச் சிங்கம் செங்கம்பளம் விரித்துச் சீனச் சிங்கத்தை ஓடோடிச் சென்று வரவேற்ற காட்சியை மேற்குலகம் இயலாமையுடன் பார்த்திருப்பதை அவர் நினைவு படுத்தினார்.

சீன ஆதிக்கம் இலங்கைக்கு கொண்டு வரப்போகும் நன்மைகளை விடவும் தற்போதைய ஆட்சியாளர்களின் இருப்புக்கு கொண்டு வரப்போகிற நன்மைகளே அதிகம்.

அண்மையில் நிகழ்ந்த அநாகரிக தர்மபால அவர்களின் 150 வது பிறந்த தின நிகழ்வில் இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்கள் தாங்கள் தங்களைச் "சிங்களபௌத்தர்கள்" எனப் பெருமையுடன் சொல்லக் கூடிய நிலைக்கு அல்லது துட்டகெமுனு குறித்துப் பெருமையுடன் பேசக் கூடிய நிலைக்கு நாட்டைத் தனது அரசாங்கம் மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டுக்கான அடித்தளத்தை நிறுவிய ஒருவரின் பிறந்த நாளில் பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களச் “சிங்கள பௌத்தர்கள்” என்று சொல்லக்கூடிய பெருமை நிலைக்கு வந்தமைக்கு தாமே காரணம் என்று பெருமையாகக்கூறிக் கொண்ட சனாதிபதி இலங்கையின் சிறுபான்மை இனங்கள் தங்களை “முஸ்லீம்கள்” என்றோ “தமிழர்கள்” என்றோ பெருமையுடன் கூறக் கூடிய சூழ்நிலைகள் நிலவவில்லை என்பதை வேண்டுமென்றே தான் கூறாமல் விட்டிருப்பார். ஏனென்றால் அவர்கள் “வெறும் இலங்கையர்கள் ”

இலங்கையில் சீன ஆதிக்கம் கொண்டு வரப்போகும் சுரண்டல்கள் மற்றும் கலாசார பண்பாட்டுத்தாக்கங்கள் குறித்துச் சிங்கள அடிப்படைவாதிகள் ஏற்கனவே கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இலங்கை சனாதிபதிக்கு இருக்கும் கவலைகள் இவைதான்:

· ஒன்று மேற்குலகு விரித்து வரும் யுத்தக்குற்ற விசாரணை வலையில் இருந்தும் ஆட்சிமாற்றச் சதிகளில் இருந்தும் இருந்து தப்பிக்கொள்ள வேண்டும்

· சிங்கள பௌத்த பேரினவாத உணர்வுகளைத் தூண்டி வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

சீன சனாதிபதியின் இலங்கை வரவின் போது இலங்கையும் சீனாவும் இணைந்து பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவற்றிக்கான தமது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன இந்த நிலையில் ஆசிய அரசியல் கட்சிகளின் 8ம் சர்வதேச மாநாட்டை கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் ஆரம்பித்து வைத்துப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அனைத்து பயங்கரவாதிகளும் ஒரே விதமானவர்கள் எனவும் அனைத்து பயங்கரவாதிகளும் அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்யவே தயாராகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கேயும் கூட அவர் வேண்டுமென்றே கூறாமல் விட்ட விடையம் என்ன வெனில் அனைத்து அரசாங்கங்களும் கூட ஒரேமாதிரியானவை என்பது தான்.

சீனாவில் சிறுபான்மை இனங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாமல் இருக்குமளவுக்கு இலங்கை சனாதிபதி முட்டாளல்ல. ஏனெனிலில் காஸ்மீரிலும் மணிப்பூரிலும் நாகலாந்திலும் ஆந்திரக்காடுகளிலும் நிகழும் மனித உரிமை மீறல்களைக் கூறி இந்தியாவைப்பார்த்துக் கொடுப்புக்குள் சிரிக்கும் மகிந்த அவர்களுக்கு திபெத்திலும் ஒய்கூரிலும் நடக்கும் இன ஒடுக்குமுறைகள் தெரியாதவை அல்ல.

உலகத்தின் அனைத்து அரசாங்கங்களும் கூட அப்பாவி மக்களைக் கொல்லத் தயாராகத்தான் இருக்கின்றன என்ற உண்மையைச் சாதாரண மக்கள் அறிந்து தான் இருக்கிறார்கள்.

இலங்கை சிவப்பாகி வருகிறது என்று கவலைப்பட்ட நண்பருக்கு நான் சொன்னேன் சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை நான்கு முறை உண்மையிலும் சிவப்பாகி இருக்கிறது தெரியுமாவென்றேன். தெரியாதென்றார்

1971ம் ஆண்டிலும் 1989 ஆண்டிலும் நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது கிளர்ச்சியாளர்களும் அரசும் ஒருவரை ஒருவரும் அப்பாவிமக்களையும் கொன்ற போது போது இலங்கை இரண்டு முறைகள் மனிதர்களின் இரத்தத்தால் சிவப்பானது. பின்னர் இந்திய இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்ற போது இலங்கை மூன்றாம் முறை சிவப்பானது. இறுதியாக முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போது இலங்கை நான்காம் முறையும் சிவப்பானது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111806/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.