Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர் தேடும் படலம்

Featured Replies

"

"இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?"

அவ்வப்போது சிரித்துக்கொண்டே கேட்பார் மனேஜர்.

ஏன் நடக்காதா எல்லாம் சரியாத்தானே இருக்கு?"

"இட்ஸ் ஒக்கே நான் சும்மா கேட்டன் நீர் என்ன நினைக்கிறீர் பாப்பம் எண்டு..."

"என்னவாம் தம்பி.. தண்ணி கொண்டு வரப் போறாராமோ?

சிறி இடையில் வந்து "இப்பிடித்தான் முந்தியும்..." கதைசொல்ல ஆரம்பிப்பார். 'அடப்பாவீங்களா நடக்காதுன்னு நினைச்சுக்கொண்டா வேலை செய்யுறீங்க?' எனத் தோன்றும்.

"என்ன இப்பிடி கதைக்கிறீங்க? இயக்கமே ஓக்கே சொல்லிட்டாங்களே?"

"என்னமோ பாப்பம்... எங்களுக்கு நல்லா பே பண்ணீனம் சந்தோஷமா வேலை செய்துட்டு போக வேண்டியதுதான் இட்ஸ் ஒக்கே" - மனேஜர்

'இட்ஸ் ஒக்கே' என்பதே மனேஜரின் தாரக மந்திரம். 'ஒரு பொல்லாப்புமில்லை' என்கிற 'விசர்ச்செல்லப்பா' என்கிற நல்லூர் செல்லப்பா சுவாமிகளின் வார்த்தைக்கு ஈடானதாக அடிக்கடி சொல்வார். மனேஜரும் நல்லூரடிதான். ஏதேனும் லிங்க் இருக்குமோ என்னமோ என நினைத்துக்கொள்வேன்.

முதல் வேலை எங்களுக்கு என்னமாதிரியான அனுபவங்களைக் கொடுத்திருக்கும்? அதுவரை நாம் பார்த்து வளர்ந்தது வெளியுலகம், மனிதர்கள் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லாத வாழ்க்கையின் பாதுகாப்பான ஒருபகுதியை மட்டுமே. நாங்கள் சொந்தமாக, சுயாதீனமாக யோசிப்பதற்கோ, பிறரை எடை போடுவதற்கோ எந்த அவசியமும் அவ்வளவாக இருந்ததில்லை. முதல்வேலை வேறு ஒரு உலகத்திற்குள் புகுவது போன்றது. நிறையக் கற்றுக் கொடுக்கும், அரசியலைக் கூட! - நாங்கள் விழிப்புடன் இருந்துகொண்டால்! என்முதல்வேலையும் அப்படித்தான்!

எல்லாவற்றையும் விட அதுவரை எனக்குத் தெரியாத முக்கியமான ஒரு உண்மையைப் புரியவைத்தது. அது, யாழ்நகரப் பகுதியில் நான் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகில் மூன்று கிலோமீட்டருக்குள்ளேயே நல்ல தண்ணீர் கிடையாது என்பது. நீர்வழங்கல் சபை மூலம் குடிநீர் குழாய்மூலம் வழங்கப்படுகிறது என்பது. ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவுமிருந்தது. பக்கத்திலுள்ள பிரச்சினையே தெரிந்திருக்கவில்லையே என. நாங்கள் ஒருபக்கம் தண்ணீரைக் கணக்கின்றிக் கவலையின்றித் 'தண்ணீராய்' இறைத்துக் கொண்டிருக்கிறோம். அருகிலேயே பற்றாக்குறை. சற்றுத்தள்ளி, தீவுப் பகுதிகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கே தண்ணீர்ப் பஞ்சம். இதற்கெல்லாம் தீர்வு? அதற்கான திட்டம்தான் எங்களின் ப்ராஜெக்ட்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், இரணைமடுக் குளத்திலிருந்து யாழ் குடாநாட்டிற்கு நீர் வழங்கும் திட்டம்! அதற்கான சாத்தியக்கூற்று ஆய்வு ஒன்பது மாதங்களுக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

நான்தான் அங்கே இருந்தவர்களிலேயே சின்னப்பையன். பாலா, வேணு தவிர எல்லோருமே மாமாக்கள், தாத்தாக்கள்! டீம் லீடர் இங்கிலாந்துக்காரர். அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட வேற்று நாட்டவர்கள், இலங்கையின் பொறியியல் துறையின் விரிவுரையாளர்கள், துறை சார்ந்த வல்லுனர்களுடன் பணிபுரியும் அனுபவம் வாய்த்தது. தவிர விதவிதமான தமிழர்களுடன், சிங்கள இனத்தவருடனும் பழகுவதற்கு வாய்ப்பளித்தது. நிறையக் கற்றுக் கொடுத்தது.

"தம்பி உமா நீங்கள் சின்னப்பிள்ளையள், இதெல்லாம் பழகவேணும்.. இப்பிடி வர்ற நேரத்தப் போடக்கூடாது.. மேல சைன் பண்ணியிருக்கிற ஆளின்ர டைம் பாத்து அதுக்கேற்றமாதிரிப் போடவேணும்" - பழகவில்லை, இன்றும் 8.41 என்றுதான் செல்பேசியைப் பார்த்து எழுகிறேன். பதினோரு மணிக்கு அலுவலகம் வந்து ஒன்பது மணி என்று வருகைப் பதிவேட்டில் பதிவதன் சூட்சுமம் புரிந்தது. முன்னாள் அரசாங்க உத்தியோகத்தர்களின் அவ்வப்போதான அறிவுரைகள் அவை.

நாவலர் வீதியில் அலுவலகம் அமைந்திருந்தது. இயங்க ஆரம்பித்த முதல் இருவாரங்கள் மிக நகைச்சுவையான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் புதிதாக ஒருவர் அறிமுகமாகிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பாலா மிகமுக்கியாமனவர். இன்றுவரையும் திட்டத்தில் இணைந்திருப்பவர். வேணு அண்ணன்தான் முதலில் அறிமுகமான நண்பர்.

டீம் லீடர் மட்டும் முதல் நாளிலிருந்தே வெகு தீவிரமாக தனது வேலையை ஆரம்பித்துவிட்டார், உப அணித்தலைவரான நாகாவும் அப்படித்தான்! நான் AutoCAD இல் படித்ததை அவ்வப்போது பயிற்சி செய்வதுபோல வரைந்துகொண்டிருக்க, அருகில் பாலா. சற்றுத்தள்ளி வேணு. சிறி அங்கிள் ஒரு பெரிய யாழ்ப்பாணத்தின் வரைபடத்தை டைனிங் டேபிளில் பரப்பி வைத்து மூன்று நாட்களாக விடாது முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்தவாரம் இலேசாக நடுவில் கிழிந்து போயிருந்த வரைபடத்தைக்காட்டி, "பாலாண்ணே இங்க பாருங்க பார்வையின்ர கொடூரம் தாங்கமுடியாம மைப் தானாக் கிழிஞ்சுபோச்சு!"

பொறியியல் மாணவி கலா டிரெயினிங்கிற்காக வந்திருந்தார். தன் அருகில் வந்தமர்ந்தவரைப் பார்த்து சிறி கேட்டார், "இதில எங்கட ஒஃபிஸ் எங்கயிருக்கெண்டு கண்டுபிடியும் பாப்பம்" சில நாட்கள் இருவரும் சேர்ந்து வரைபடத்தை தீவிரமாக முறைத்தார்கள்.

ஒரு கன்சல்டண்ட் தாத்தா அப்துல் கலாம் குழந்தைகளைக் கனவு காணச் சொன்னதை அப்படியே பின்பற்றினர். தனது அறையில் உட்கார்ந்த படியே தூங்கிக் கொண்டிருப்பார். திடீரென கண்விழித்து ஏதாவது ஐடியாக்களோடு வருவார். எல்லாமே தேவையில்லாததுதான். சமூகவியலாளரான ஒரு தமிழ்க் கன்சல்டன்ட்டின் அறையில் ஒரே கள்வாசம் வீசும். மற்றபடி தொந்தரவில்லை, சமூகம் மேசையில் தலைகவிழ்ந்து தூங்கியபடியே இருக்கும்.

வேலையில்லாத நேரத்தில் அசிரத்தையாக உட்கார்ந்திருப்பது, சுவரை வெறித்துக் கொண்டிருப்பது, கணணியை சும்மா வெறித்துப் பார்ப்பது, கதிரையில் மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்ப்பது என ஒவ்வொருவர் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றவரைப் பார்த்துச் சிரித்துக் கொள்வது வழக்கம். மனேஜர் வித்தியாசமானவர். தன் எதிரே சற்றுத்தள்ளி இருக்கும் கதிரைகளில் அலுவலக உதவியாளர்களும், டீம் லீடரின் வாகனச் சாரதியும் உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது அவர் சட்டம். ரங்கா அண்ணன் எல்லோருக்கும் டீ கொடுத்துவிட்டு இந்திய ராணுவம் அடித்தது, பூசா முகாமில் கொண்டுபோய் வைத்திருந்தது, உள்ளிட்ட தனது மலரும் நினைவுகளைச் சிரிப்புடன் சொல்வார். இன்னொரு நாள் டிரைவர் ஜெயா தனது கதை. இப்படியே முன்னாள் நீர் வழங்கல் சபையின் உத்தியோகத்தர்களின் கதைகள், நாட்டு நடப்பு எனக் க(ளை)தை கட்டியது.

"வேலையில்லாம இருந்தாலும் ஆக்கள் பாக்கேக்குள்ள அப்பிடியிருக்கக் கூடாது. நானெல்லாம் ஒஃபிசில அப்பிடித்தான் சும்மா இருக்கிற ஃபைலை அங்க வச்சு அங்க இருக்கிறதா இங்க வச்சு அடிச்சுப் பிடிச்சு ஏதாவது செய்வன்" மனேஜர் சிரித்துக் கொண்டே உதவிக் குறிப்புகள் வழங்கினார்.

இதெல்லாம் முதல் பதினைந்து நாட்கள் மட்டுமே. ஒரேமாதத்திலேயே வேலை சூடுபிடித்துப் பரபரப்பாகப் போய்க் கொண்டிருந்தது. ஒருசிலர் மட்டும் தொடர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டே இருந்தார்கள், ஆய்வுக்காலம் முடியும் வரைக்குமே.

முதன்முறையாக எனக்குப் பண்ணைப்பாலம் கடந்து தீவுப்பகுதிகளுக்குச் செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. லெவலிங் வேலைகளுக்காக ஊர்காவற்துறை, புங்குடுதீவு, வேலணை, சரவணை, அராலித்துறை பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாகச் சுற்றிக் கொண்டிருந்தோம். நயினாதீவு, நெடுந்தீவு எழுவைதீவு, அனலைதீவு பிரதேசங்களுக்கு ஒருமுறைமட்டுமே செல்லநேர்ந்தது. சென்று கொண்டிருந்தோம். ஏனைய பிரதேசங்களுக்கு அடிக்கடி. காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்குமிடையில் 'பார்ஜ்' ஒடுவதேலாம் அப்போதுதான் தெரியும். இடைப்பட்ட நாட்களில் பண்ணைப்பாலம் திருத்தும் பணிகள் வேறு நடைபெற்றதால் காரைநகர் சென்றே செல்ல வேண்டியிருந்தது. குறிப்பாகத் தீவுப்பகுதியெங்கும் தீர்க்கமுடியாதிருந்த தண்ணீர்த்தேவை பற்றி அப்போதுதான் முழுமையாகப் புரிந்தது. அநேகமான வீடுகளில் கிணறுகள் வற்றிப்போய், பரிசோதனைக்கு ஒரு வாளி நீர் கூட அள்ள முடியாத நிலை. யாழ்ப்பாணத்தின் தண்ணீர்ப் பிரச்சினை பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.

யாழ்குடாநாட்டில் மக்களின் அன்றாடத் தேவைக்கான நீர் பெறப்படுவது நிலக்கீழ் நீர் மூலமாகவே. விவசாயமும் நிலத்தடி நீரான கிணறு, சிறியளவில் மழைநீரையும் நம்பியே மேற்கொள்ளப்படுகிறது. இன்னொரு நீர் மூலமான மேற்பரப்பு நீர் அதாவது ஆறு, குளம் போன்றவை கிடையாது. வழுக்கியாறு எனப்படும் மழைக்கால ஆறு ஒன்றுள்ளது. ஏனையவை சிறு மழைக்காலக் குளங்கள் அல்லது குட்டைகள் மட்டுமே. மழை நீரைத் தேக்கி வைத்திருப்பதற்கான பாரிய நீர்நிலைகள் கிடையாது. மழை நீர் அப்படியே வழிந்தோடிக் கடலில் கலக்கிறது.

நிலத்தடிநீர் தொடர்ந்து எடுக்கப்படுகிறதே தவிர, அது பிரதியீடு செய்யப்படுவதில்லை. மீண்டும் நிலத்துக்குக் கீழ் செலுத்தப்படும் வாய்ப்புகள் மிகக் குறைவு. பெருமளவு விவசாய நிலங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்தன. ஏனைய பிரதேசங்களிலும் பயிர்ச்செய்கை மேற்கொள்வது குறைந்துவிட்டது. பயிர்நிலங்களுக்கு நீர் பாய்ச்சும்போது ஒரு சிறிய சதவீதமான நீர் நிலத்துக்குக் கீழ் செல்ல வாய்ப்புண்டு. அதுபோல மழை நீரும் மிக மிகக் குறைந்தளவே உட்செல்லும். தற்போது வீட்டுக் கூரையிலிருந்து இறங்கும் மழை நீரை நிலத்தின் கீழ் செலுத்தும் முறை பின்பற்றப்படுகிறது. புதிதாகக் காட்டப்படும் வீடுகளுக்கு இது கட்டாயம். சல்லிக் கற்கள், மணல் நிரப்பப்பட்ட குழியினுள் பீலிக் குழாய் நீரைச் செலுத்துதல். இது நீண்டகால அடிப்படையில் கொஞ்சம் பலன்தரும்.

இப்படியே போனால், ஒருகட்டத்தில் என்னவாகும்? நிலத்தடி நீர் தீர்ந்து போகும். அதற்கு முன்னர் ஆழமான பாறைகளுக்குக் கீழேயுள்ள நீர் மாசடையும். கடல் நீர் உட்புகுந்து கலக்க, உப்புத்தன்மையாகும். 2030 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் முழுவதும் சுத்தமான நிலத்தடி நீர் அற்றுப் போகும் வாய்ப்புண்டு என்பதுதான் திட்டத்திற்கான அடிப்படை.

ஆக, யாழ்குடாநாட்டின் நீர்த்தேவைக்கான பாரியதொரு நீர்நிலை வேண்டும். அதுதான் இரணைமடு.

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தண்ணீர் கொண்டுவருவதெல்லாம் சாத்தியமா?

"இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?" என்று மனேஜர் அடிக்கடி கேட்பதிலும் ஒரு நியாயமிருந்தது. பத்திரிகைகளில் இதுபற்றிச் செய்தி வெளியானபோதே பலருக்கும் பலவித சந்தேகங்களிருந்தன. முக்கியமான பிரச்சினையாக குளம் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்தது, அவர்கள் சம்மதிப்பார்களா? இதயப் பகுதியான வன்னியிலிருந்து எந்த வளமும் சுரண்டப்படுவதை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்பது போன்ற கேள்விகள் இருந்தன.

முடியும் என்பதில் எந்த சந்தேகமுமிருக்கவில்லை. ஆரம்பத்திலேயே இத்திட்டம் பற்றி முழுமையாக விளக்கப்பட்டு, புலிகளுடன் பேசி' அவர்களின் முழுச் சம்மதத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் தரப்பில் தூயவன் என்பவருடன் பேசிய அவுஸ்திரேலியா வாழ் தமிழ்க் கன்சல்ட்டன்ட் சொல்லிக்கொண்டிருந்தார். "அவர் என்னை சேர் எண்டு கூப்பிட்டார், நான் அவரை அண்ணை எண்டு கூப்பிட்டன், தூயவன் அண்ணை கேட்டார், 'இரணமடு பற்றி நிறைய நியூசுகள் கேள்விப்பட்டிருப்பீங்கள்தானே.. நீங்கள் அணைக்கட்டை உயர்த்துறதால ஏதும் பாதிப்பு வருமோ?"

"இல்ல அப்பிடியெல்லாம் ஆகாது"

இரணைமடுவில் விமான ஓடுபாதை இருக்கிறது என்பதெல்லாம் அப்போது ஊர்ஜிதமற்ற செய்திகளாகவேயிருந்தன.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் ஒரு குறிப்பிட்டளவு மட்டுமே விவசாயத்திற்குப் பயன்படுகிறது. மேலதிக நீர் மழைக்காலத்தில் கடலுக்குள் திறந்து விடப்படுகிறது. இந்த மேலதிக நீரை மாத்திரமன்றி, அணைக்கட்டின் உயரத்தை அதிகரிப்பதன் மூலம் கொள்ளளவை அதிகரித்து, அதன் மூலம் சேகரிக்கப்படும் நீரை யாழ் குடாநாட்டின் நீர்த்தேவைக்குப் பயன்படுத்துதலே திட்டத்தின் நோக்கம்.

ஒருமுறை டீம் லீடருக்கும், கன்சல்டண்ட் பாலாவுக்கும் ஒருவருக்குமிடையே தொழில்நுட்ப விஷயத்தில் கடுமையான விவாதம். பாலா அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த தமிழர். எங்களிடம் மிக அக்கறையாகப் பேசுவார். இன உணர்வு, தாயகப்பற்று மிக்கவர். டீம் லீடரின் பார்வையில் ஐரோப்பியப் பார்வையில் இலங்கை என்பது இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஒரு நாடு என்பதாக மட்டுமே தெரிந்தது. அப்படியில்லை உண்மையில் இனவேறுபாடு, அதனாலேற்பட்ட யுத்தம் என்கிற மோசமான விளைவுகள், பின்னடைவுகள் தவிர இலங்கை பல விடயங்களில் ஏனைய தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிட முடியாதது என்பதை பாலா வலியுறுத்தினார். பாலா சத்தமாகப் பேசி, மேசையில் குத்தி, டீம் லீடர் பாவமாக முகம் சிவந்து ஓரிரு நாட்கள் தொடர்ந்த விவாதத்தின் இறுதியில் தமிழர் பாலாவின் யோசனை எல்லா மட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மிகவும் சோகமாக இருந்தார். "என்ன இருந்தாலும் அவர் எங்களுக்காக லண்டன்ல இருந்து வந்திருக்கிறார். சந்தோஷமா வேலை செய்துட்டு சந்தோஷமா அனுப்பி வைக்கவேணும் இப்பிடி சண்டை பிடிச்சு..."

நாட்டு மக்களின் எதிர்கால தண்ணீர்ப் பிரச்சினைக்கான தீர்வுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவளித்து ஆய்வு செய்யும் திட்டத்தில் ஒரு வெள்ளையரின் சந்தோஷத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் அப்பாவி மனேஜர். அவர் எங்களுக்காக ஒன்றும் வரவில்லை, அவர் ஐரோப்பாவில் நியமிக்கப்படாமல் எல்லாமே ஆசியாவின் திட்டங்களில் பணியாற்றக் காரணம், அவருக்கு பிரெஞ்சு தெரியாததுதான் என்கிற உண்மையெல்லாம் பற்றி மனேஜருக்குக் கவலையில்லை. என்ன இருந்தாலும் பாலா செய்தது சரியில்ல என்கிறமாதிரியான நிலைப்பாட்டில் இருந்தார்.

சமூகவியலாளர் என்றொருவர் ப்ரோஜெக்ட்களில் இருப்பார். ஆரம்பத்தில் இவர் எதற்காக என்றொரு கேள்வி தோன்றும். சமூகத்தை ஆய்வு செய்து எப்படி முன்னேற்றலாம் எனக்கண்டறிய முயல்கிறார்களா? என்றொரு சந்தேகம் இருந்தது. அதெப்படி? எங்கோ தாய்வானில் பிறந்த ஒருவர், எக்கச்சக்கமான சம்பளத்துடன் வேலைக்கு வந்து, மடிக்கணணியுடன் ஓர் ஏசி அறையில் அமர்ந்துகொண்டு யாழ்ப்பாணம் பாஷையூரில் இரவு கடற்தொழிலுக்குச் செல்லும் ஒருவரின் வாழ்க்கைத்தரத்தை, Excel, SPSS மென்பொருட்களின் உதவியுடன் உயர்த்தமுடியும்? என்கிற ரீதியில் கோக்குமாக்காக சிந்தித்ததுண்டு. எங்கள் ப்ரொஜெக்டில் உண்மையைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

அலுவலகத்தில் பெண் சமூகவியலாளர் ஆய்வின்மூலம் மக்களால் இரண்டுரூபாய் கொடுக்க முடியுமா எனக் கண்டறிந்து விடும் திட்டத்தில் இருந்தார். ஒரு யூனிட் நீருக்கான விலை இரண்டுரூபாய் என்று அப்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதைச் செலுத்த முடியுமா என்பதற்காக ஒரு கள ஆய்வு. அப்போது யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறிய சமூகவியல் படித்த கலைப்பிரிவு மாணவிகள் பத்துபேர் இதற்கென உள்வாங்கப்பட்டிருந்தார்கள். கேள்விக் கொத்து தயாரிக்கப்பட்டு குறித்த பிரதேச மக்களுக்கு வழங்கப்படிருந்தது.

வீட்டில் தென்னை மரம் இருக்கிறதா? சைக்கிள், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா? வீட்டில் ஆடு, கோழி வளர்க்கிறீர்களா? உள்ளிட்ட ஏராளம் கேள்விகள்.

இதைப்பார்த்த மனேஜர் கேட்டார், "தம்பி நான் சும்மா கேக்கிறேன். ஏன் இப்பிடியெல்லாம் கேக்கினம் நேரடியா ரெண்டுரூபா தருவீங்களா மாட்டீங்களா எண்டு கேக்க வேண்டியதுதானே?"

நம் மக்கள் பெரிய அரசியல் நகைச்சுவையை செய்திருந்தார்கள்.

கேள்வி : வெளிநாட்டில் யாராவது இருக்கிறார்களா?

ஆம். கனடாவில் இரண்டு பேர், லண்டனில் ஒருவர்.

மாதவருமானம்?

2500/-

கூசாமல் நிரப்பியிருந்தார்கள் ஒரிருவரல்ல. அநேகமான எல்லோருமே.

யாராவது குடும்ப விவரம் கேட்டு ஒரு விண்ணப்பப்படிவத்தை நிரப்பக் கொடுத்தால், அவ்வளவுதான். 'நிவாரணம் தரப்போறாங்கள் போல' என்றே மக்கள் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்கப் பழகியிருந்ததன் விளைவு அது!

பேச்சுவார்த்தையும் இழுபறியாக இருந்த நேரம். புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறியிருந்தனர். இதனைக் காரணம்காட்டி நம் தமிழர் சிலர் அலுவலகத்தை கொழும்புக்கு மாற்ற முனைந்தனர். 'நிலைமை மோசமாகிவிட்டது, எப்போதும் தாக்குதல்கள் ஆரம்பிக்கலாம்', 'இனி யாழ்ப்பாணத்தில் வாழமுடியாது' என்றெல்லாம் கொழும்புக்குத் தலைமையகத்திற்குப் பிரச்சாரம் செய்யத் தலைபட்டார்கள். உண்மையில் அதற்கு வலுவான காரணங்கள் இருந்தன. சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட குடும்ப, மருத்துவ நலன்கள் சார்ந்ததவை அவை.

உபதலைவர் நாகா யாழில்தான் தொடர்ந்தும் இயங்கவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார். கள ஆய்வு உள்ளிட்ட முழுவேலையும் இங்கே இருந்தன. இறுதியில் டீம் லீடர் பீதியூட்டபட்டு, கொழும்பு சென்றார். களவேலைகளுக்குச் சென்று பாதுக்காப்புச் சிக்கல்களை எதிர்கொள்ளும் அவசியமில்லாதோர், அலுவலகத்திலேயே வேலையேதுமின்றித் தூங்குவோர் என ஒருசிலரும் கொழும்பு சென்றார்கள்.

கொழும்பு சென்ற தமிழர்கள், யாழ்நிலைமை குறித்த எதிர்மறையான பிரச்சாரத்தில் ஈடுபட, இங்கே மனேஜர் அதை வெற்றிகரமாக முறியடிப்பதில் முன்னின்றார். பணி நிமித்தம் வரும் சிங்கள கன்சல்டன்களிடம் 'இங்கே எந்தப்பிரச்சினையும் இல்லை, சுமுகமாகவேயுள்ளது' என நம்பிக்கையூட்டுவார். ஒருமுறை இரு சிங்கள ஆய்வாளர்கள் இரணைமடு சென்றவேளையில், அவர்கள் வாகனத்தை மோட்டார் சைக்கிள் ஒன்று நீண்ட நேரம் பின்தொடர்ந்துள்ளது. டிரைவர் ஜெயா அண்ணன் சொன்னாராம், "நீங்கள் தென்பகுதியிலிருந்து வந்திருப்பதால் உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கத்தான் வருகிறார்கள்" - இதைச் சொன்னதும் மனேஜர் மிக மனமகிழ்ந்து பாராட்டினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்லது பின்னாளில் வாய்க்கப்பட்ட(?) அந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் யாழில் உண்மையிலேயே நிலைமை மாறத் தொடங்கியது.

ஒரு மாலை நேரம் மூன்று மணி இருக்கலாம். ஒரு கிரனைட் வெடிக்கும் ஓசையும் அதனைத்தொடர்ந்து நீண்ட காலத்துக்குப் பின்னர் துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தன. செல்பேசிகள் ஒலிக்கத் தொடங்கின. "தட்டாதெருச் சந்தியால போற ஆக்களுக்கு ஆமி அடிக்கிறானாம்.. வீட்ட பாத்து வா" அப்பா.

யாழ்ப்பாணத்தில் முறுகல் நிலை ஆரம்பித்திருந்தது. நீண்ட கால இடைவெளியின் பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்திருந்தன. அதனைத் தொடர்ந்து ஆங்காங்கே அசம்பாவிதம் நிகழும்பட்சத்தில் அப்பகுதியில் வீதியில் செக் பொயிண்ட் கடந்து செல்லும் மக்களுக்கு அடி விழவும் ஆரம்பித்திருந்தது.

எங்கள் அலுவலகத்தில் வைத்திருந்த GPS இரண்டும் அனுமதி பெறாதவை. ஆமிக்குக் காட்டவேண்டாம் என்றுமட்டும் அறிவுறுத்தியிருந்தார்கள். அப்போது யாழ்ப்பாணத்தில் முறைப்படி பதிவு செய்து அனுமதி பெற்றுத்தான் வைத்திருக்க வேண்டும். அல்லது விசரனையின்றிக் கைதுசெய்யலாம் என்கிற தகவலும் தெரிந்தது. சாதாரண GPS, ஏதோ பெரிய ஆயுதத்தை வைத்திருப்பது போலப் பீதியைக் கொடுத்தது.

மண்டைதீவு செல்லும் சோதனைச் சாவடி. டாஷ்போர்டில் மறைத்து(?!) வைத்திருந்த GPSஐ எடுத்து அனுமதியுள்ளதா எனக் கேட்டு, யோசனையுடன் பார்த்தார்கள். ஆமியிடம் அதனைக் கொடுத்துவிட்டுச் செல்வது அவ்வளவு உசிதமல்ல எனத் தீர்மானித்த சிறி தனது ராஜதந்திரத்தைப் பிரயோகித்தார், "அப்ப இவர இங்க விட்டுட்டுப் போறம்".

'அடப்பாவிங்களா! அவங்களே யோசிச்சிட்டு விடுற மாதிரி இருக்கானுங்க நீங்க ஏன்யா என்னைப் பிடிச்சுவைக்க ஐடியா குடுக்கிறீங்க? சரி அப்பிடியே இருந்தாலும் ரெண்டு பெருசுங்க நீங்க இருக்கீங்க நான்தான் ஆமிகூட இருக்கணுமா?'

கொலை வெறியிலிருந்தேன். ஆமிக்காரன் அசுவாரசியமாக GPSஐ என்னிடமே தந்துவிட்டு சற்றுத்தள்ளியிருந்த பேரூந்து தரிப்பிடம் போன்ற சிறிய குடிலில் போய் அமர்ந்திருக்குமாறு சொன்னான். ‘நாடு இருக்கும் நிலையில் இப்படி வந்து..’ மிகுந்த கடுப்புடன் அமர்ந்திருக்கையில் ஒருவர் வந்து எதிரே அமர்ந்தார்.

வியாபாரம் செய்பவர். ஏதோ அனுமதிக்காக காத்திருப்பதாகச் சொன்னார். நிறையப் பேசினார். ஏற்கனவே எனக்கு நல்ல மனநிலை. திடீரென என்னைப் பற்றியும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

"ஏன் இங்க இருக்கிறீங்க?"

விவரத்தைச் சொன்னேன்.

"இதவச்சு என்ன செய்யிறது? ஃபோன் மாதிரி இருக்கு.."

"இப்ப இந்த இடத்தின்ர பொயின்ர காட்டுது பாருங்க. இத வன்னிக்கு அனுப்பினா இந்த இடத்துக்கு ஷெல் அடிப்பாங்க"

"இது உங்கடையா?"

"இல்ல ஒஃபீஸ்ல இருந்து..."

"நீங்க இயக்கமோ"

"இல்லண்ணே..இது வேற விஷயத்துக்கு பாவிக்கிறம் நாங்க.."

சற்று நேரம் நம்பாமல் யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர், "தம்பி நான் வாறன்"

"அப்ப நீங்கள் தண்ணி கொண்டு வாறதெண்டுதான் நிக்கிறியள்" - காலை ஆறுமணிக்கு தீவுப்பகுதிகளுக்குப் புறப்படும்போது மனேஜர் சிரித்துக் கொண்டே கேட்பார்.

"ஓம் வரும்தானே... கொண்டு வருவம்" - செல்வா.

செல்வா உறுதியாக நம்பினார். தீவுப் பகுதிகளில் களத்தில் நிற்கும்போது ஊர் மக்களுடன் பேசுகையில் அவ்வளவு நம்பிக்கையுடன் பேசுவார். "இரணை மடுவிலருந்து தண்ணி கொண்டு வரப்போறம் அதான் வந்திருக்கிறம்"

பொதுவாக இப்படியான ஆச்சரியமளிக்கும் பெரிய விஷயத்தை எப்படிச் சொல்ல வேண்டும்? உயரமான ஒரு வெள்ளைநிறப் பிக்கப்பில் வந்திறங்கிய, குளிர் கண்ணாடியணிந்த ஒரு வெள்ளை நிற வெளிநாட்டுக்காரர் ஆங்கிலத்தில் சொல்ல, அதை ஒருவர் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டும். காலங்காலமாக அதுதானே நம்பகத் தன்மையுடையதாக இருக்கிறது? அப்படித்தானே நாம் நம்புகிறோம்? அதுதானே முறை?

அப்படியல்ல, எண்ணெய் வைத்துப் படிய வாரிய தலையுடன், ஹையேஸ் வானில் வந்திறங்கிய, கட்டம்போட்ட அரைக்கைச் சட்டையணிந்த தமிழர் சொன்னாலும் கூட ஏற்றுக்கொள்ளலாம் போலயே என எண்ணவைக்கும் அளவுக்கு 'தண்ணீர் இந்தா இந்தச் சந்தீல வந்து நிக்குது...கையத்தட்டிக் கூப்பிட்டா ஓடி வந்திடும்' பாணியிலிருக்கும் அவர் உடல்மொழியும், பரபரப்பான பேச்சும்.

கேட்கும் எல்லோரும் ஒருவழியாக தயக்கம் கடந்து நம்பிக்கை கொள்ளும் அதேநேரம் பார்த்துச் சரியாக முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்பார்,

"தேங்காய் இஞ்ச என்ன விலை போகுது?"

ஒன்பது மாதங்கள் போதாமல் ப்ரொஜெக்ட் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. களவேலைகள் நிறைவு பெற்றதால் யாழ் அலுவலகம் மூடப்பட்டு உபதலைவர் நாகா, பாலாவுடன் எனக்குக் கொழும்புத் தலைமையகத்தில் வேலை.

இறுதிப்பணிகளில், சில சமயங்களில் இரவு பத்து மணிவரை மூன்றுபேரும் கடும் வேலையிலிருப்போம். உபதலைவர் நாகா எங்கள்மீது எப்போதும் அக்கறை கொண்டவர். வெளியே பெரிதாகக் காட்டிக் கொள்ள மாட்டார். அக்கறை என்பது பேச்சில் தெரியவேண்டியதில்லையே. இப்போதும் எனது கடுமையான நம்பிக்கை அது!

பாலா! சிலசமயங்களில் ஒற்றை ஆளாக இந்தத் திட்டத்தைக் கொண்டு செல்பவராகத் தோன்றியிருக்கிறார். நீண்டகாலம் இணைந்திருப்பவர். முதல்வேலையில் எல்லாருமே மறக்க முடியாதவர்கள்தான். ஆனால் எனது வழக்கம்போல யாருடனும் தொடர்பில் இல்லை. இன்னும் நான் நல்ல நண்பராக தயக்கங்களின்றித் தொடர்பு கொண்டு பேசக்கூடிய அளவில் நெருக்கமாக உணர்வது அண்ணன் பாலாவிடம் மட்டுமே. நீண்ட நாட்களாக அவரிடம் பேசவில்லை.

சென்ற ஆண்டு பழைய தலைமை அலுவலகத்திலிருந்தபோது, கிளிநொச்சி , பரந்தனில் அமையவிருக்கும் நீர்த்தாங்கிகளின் வரைபடங்கள் இருந்தன. கட்டுமான வேலைகள் ஆரம்பித்து நடைபெறுவதாக அவ்வப்போது செய்திகள் பார்க்கக் கிடைத்தது. பின்பு பல சலசலப்புகள், குழப்பங்கள்! விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக, இரணைமடுத்திட்டம் கைவிடப்படுவதாக, இழுபறியில் உள்ளதாக, கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ஆரம்பிப்பதாக என பல்வேறுபட செய்திகள். ஒன்றும் புரியவில்லை. எல்லாம் சரியாகத்தானே இருந்தது? வன்னிமக்களின் நலன்கள் பாதிக்கப்படும் திட்டத்துக்குப் புலிகள் சம்மதித்திருப்பார்களா? என்னதான் பிரச்சினை? அவசரமாக வெளியே செல்கையில், பாலா ஒருமுறை இதுகுறித்து டீவியில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

சில மாதங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பேசும்போது கேட்டேன். "என்னண்ணே நடக்குது?" ஒரே சொல்லில் பதில் சொன்னார்.

"அரசியல்!"

http://www.4tamilmedia.com/social-media/

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.