Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹாங்காங் - 5

Featured Replies

ஹா – ஹாங்காங் -1

 

honkong_2196702f.jpg

 

பொருளாதாரத்தில் அப்படி யோர் அப்பப்பா வளர்ச்சி! எனவே அந்த நான்கு பகுதிகளையும் ‘ஆசியப் புலிகள்’ என்று கூறுகிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதத்துக்கும் அதிகம் என்கிற அளவில் பொரு ளாதார வளர்ச்சி. வெகு வேகமான தொழில் முன்னேற்றம்.
 
சிங்கப்பூர், தென் கொரியா, தைவான் ஆகியவற்றுடன் கைகோத்து கர்வம் பொங்க இப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பகுதி ஹாங்காங்.ஹாங்காங் என்றால் சீன மொழியில் ‘‘நறுமணம் வீசும் துறைமுகம்’’ என்று பொருள். ஆனால் இன்று அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் ‘’எங்கள் மூச்சுக் காற்றே தடை பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நறுமணத்தை எங்கே சுவாசிப்பது?’’ என்கிறார்கள் விரக்தியோடு. அவர்களைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பதுதான் இப்போதை க்கு அவர்களுக்கான சுவாசம்.
 
சீனாவும் அதன் ஒரு பகுதி யான ஹாங்காங்கும் கோபம் கொண்ட கணவன் மனைவி போல முறைத்துக் கொண்டும் விரைத் துக் கொண்டும் இருக்கின்றன. விவாகரத்து நடந்து விடுமோ? அவ்வளவு சுலபத்தில் ஆகிவிடாது என்றாலும் அதற்கான தொடக்கம் தொடங்கிவிட்டது என்பவர்களும் உண்டு. மொத்த பரப்பளவே சுமார் 1060 சதுர கிலோ மீட்டர்கள்தான். என்றாலும் ஹாங்காங்கில் வசிப்ப வர்கள் 70 லட்சத்துக்கும் அதிகம்.
 
பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் ஹாங்காங்கில் உள்ளன. மின்னணுக் கருவிகள், உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் என்று இங்கு தயாரிக்கப்படும் அத்தனை பொருள்களுமே ஏற்றுமதிக்குதான். அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் என்று பல முக்கிய வாடிக்கையாளர்கள் ஹாங்காங்குக்கு உண்டு. சீனாவுடன் ஒட்டிக் கொண்டுள்ள இந்த தீபகற்பத்தில் 230க்கும் மேற் பட்ட சிறிய தீவுகள் உண்டு. ஹாங்காங் இவ்வளவு பிரபலமடைய ஒரு முக்கிய காரணம் அது ஆசியாவின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்று.
 
அது ஓர் இலவசத் துறைமுகம். அதாவது பிற பகுதிகளிலிருந்து இங்கு வந்து சேரும் பொருள்களுக்கு இறக்குமதி வரி கிடையாது. இதனால் குறைந்த விலையில் ஹாங்காங்கில் பொருட்களை வாங்குவது சாத்தியமாகிறது.
 
சீனாவில் பிற பகுதிகள் (தைவான் நீங்கலாக) அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்க சம்மதம் என்பதுபோல் மெளனம் சாதிக்க, ஹாங்காங்கில் மட்டும் ஏன் சுதந்திரக் காற்று வீசுகிறது? அவர்களுக்கு மட்டும் (மேலும்) விடுதலை வேட்கை ஏன்?
 
ஒரு நாடு என்றால் அது முழுவதுக்கும் ஒரே வகை நாணயம்தானே? ஆனால் சீனாவின் நாணயம் யுவான். ஹாங்காங்கின் நாணயம் ஹாங்காங் டாலர். ஏன் ஒரே நாட்டின் இரு பகுதிகளில் இந்த வேறுபாடு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்க வேண்டுமென்றால் நம் முன்னால் கொசுவர்த்தி சுழல வேண்டும். அதாவது ஃப்ளாஷ் பாக். நூறு வருடங்களையும் தாண்டி பின்னோக்கிச் செல்வோம்.
 
நிலத்தை குத்தகைக்கு விடுவார் கள். வீட்டையும் குத்தகைக்கு விடுவதுண்டு. நாட்டின் ஒரு பகுதியை குத்தகைக்கு விடுவார் களா? அந்த அதிசயம் நடந்தது ஹாங்காங்கில்தான். ஒரு போதைப் பொருள் இந்த அதிசயத்தை நிகழ்த்தியது.
 
ஐரோப்பியர்கள் - முக்கியமாக பிரிட்டிஷ்காரர்கள் – தங்கள் நாட்டில் விளைந்த ஓபியத்தை சீனாவுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பதிலுக்கு சீனத்துப் பட்டுகளை அள்ளிச் சென்றார்கள். சீன வைத்திய முறையில் அபினியைப் (அபினிதான் ஓபியம்) பயன்படுத்தினார்கள்தான். என்றா லும் சீனர்கள் அபினியை ஒரு போதைப் பழக்கமாக்கிக் கொள்ளவில்லை. இருமல் மருந்துகளில் ஆல்கஹால் இருந்தாலும், இருமல் மருந்து குடிப்பவர்களில் பலரும் மதுப் பழக்கம் இல்லாதவர்கள் தானே? அப்படித்தான்.
 
ஆனால் சீனர்களுக்கு அப்படி யொரு பழக்கம் (இருமல் மருந்து அல்ல, ஓபியம்) இருந்தால் நல்லது என்று பிரிட்டிஷார் கருதினார்கள். அப்போதுதானே தங்கள் கைவசம் உள்ள பகுதிகளில் விளையும் அபினியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து பணம் பார்க்கலாம். (அப்போது ஆங்கிலேயர் வசம் இருந்த பகுதிகளான ஒடிஷா, வங்காளம், பிஹார் ஆகிய பகுதிகளிலும் அபினி உற்பத்தி செய்து அதன் வியாபார உரிமை களைத் தாங்களே எடுத்துக் கொண்டிருந்தது கிழக்கிந்திய கம்பெனி).
 
“புகைத்துப் பாருங்கள். சொர்க்கம் புலப்படும்” என்பது போல் சீனாவில் பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் என்ன தான் இருக்கிறது பார்ப்போமே என்று அபினியை சுவைக்கத் தொடங்கிய சீனர்கள் அதற்கு அடிமையானார்கள். சீனா முழு வதுமே அபினிப் பழக்கம் ஒரு தொற்றுநோய் போல பரவத் தொடங்கியது. குறிப்பாக அந்நிய வியாபாரிகள் அனுமதிக்கப்பட்ட ஒரே சீனத் துறைமுக நகரமான காண்ட்டன் பகுதியில்.
 
சீனாவின் அப்போதைய சக்ர வர்த்தி டாவோ குவாங் பதறினார். மக்களின் உடல்நலம், நாட்டின் பொருளாதாரம் இரண்டுமே சீரழிகிறதே!
 
அபினி தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்தார் சக்ரவர்த்தி. அபினி இறக்குமதி நின்றது - அதாவது பகிரங்க இறக்குமதி மட்டும்! இதற்குப் பிறகு கள்ளத்தனமாக அபினியை சீனாவுக்கு கடத்தியது கிழக்கிந்திய கம்பெனி. தான் நேரடியாக இந்த வியாபாரத்தில் தலையிடாமல் தனிப்பட்ட வியாபாரிகளுக்கு லைசன்ஸ் அளித்து சாமர்த்தியமாக நடந்து கொண்டது.
 
கோபம் கொண்ட சக்ரவர்த்தி லின் என்ற அதிகாரியை விசேஷ அதிகாரங்களுடன் காண்ட்டன் நகருக்கு அனுப்பினார். அந்த அதிகாரி சுறுசுறுப்பானவர். உடனடியாக ஓர் உத்தரவை வெளியிட்டார். “இன்னும் மூன்று நாட்களுக்குள் சீனாவில் உள்ள எல்லா அன்னிய வியாபாரிகளும் தங்களிடம் உள்ள அபினியை ஒப்படைத்துவிட வேண்டும்”.
 
எந்த அந்நிய வியாபாரியும் இதற்கு மதிப்பு கொடுக்கவில்லை. ஆனால் லின் இதை அதோடு விடுவதாக இல்லை. அந்நிய வியாபாரிகள் வசித்த பகுதியைச் சுற்றி காவல்படைகளை நிறுத்தி வைத்தார். வியாபாரிகள் காவல் கைதிகள் போல் ஆகிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் அபினியை வேண்டா வெறுப்பாக ஒப்படைத் தனர். பிரிட்டிஷார் பறிகொடுத்த அபினியின் மதிப்பு அப்போதே சுமார் ஒரு கோடி ரூபாய்!
 
அந்த அபினியுடன் சுண்ணாம் பைக் கரைத்து சமுத்திரத்தில் கொட்டினார் லின். “இனி அபினி வியாபாரம் செய்தால் மரண தண்டனைதான்” என்றார். போதாக்குறைக்கு காண்ட்டன் துறைமுகத்தில் இனி வெளிநாட்டு வணிகம் கிடையாது என்றார். ஆனால் சீனா சிறிதும் எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டன. அதில் ஹாங்காங்கின் விதி மாற்றி எழுதப்பட்டது.
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

ஹா – ஹாங்காங் 2

 

china_2198413f.jpg

 

பிரிட்டன் - சீன உறவை மேலும் சீரழிக்கும் வகையில் 1839 ஜூலை மாதத்தில் நடந்தது ஒரு சம்பவம். ஹாங்காங் துறைமுகத்தில் வந்து இறங்கியது ஒரு பிரிட்டிஷ் கப்பல். இதன் பயணிகள் சிலர் கோலூன் அருகிலிருந்த ஒரு ஆலயத்தை அழித்தனர். மதவெறி!
 
அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற லின் வெயிக்ஸ’ என்ற சீனனைக் கொன்று விட்டனர். 'சம்பந்தப்பட்ட மாலுமியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றது சீன அரசு. 'இறந்தவனின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு என்றால் ஓ.கே. ஆனால் மாலுமியை ஒப்படைக்க முடியாது' என்றது பிரிட்டன். 'அப்படியானால் இனி பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் வியாபாரம் கிடையாது' என்றார் லின் – இவர் சீனச் சக்ரவர்த்தியால் நியமிக்கப்பட்ட விசேஷ அதிகாரி.
 
அதற்கு அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் 16 பிரிட்டிஷ் யுத்தக் கப்பல்கள் காண்ட்டன் துறைமுகத்தை அடைத்துக் கொண்டு நின்றன. பிரிட்டிஷ் கப்பல்கள் எங்கு காணப்பட்டாலும் அதை சீனர்கள் தாக்கலாம் என்று உத்தரவு கொடுத்தார் சீனச் சக்ரவர்த்தி. தொடங்கியது 'அபினி யுத்தம்'. அதாவது ‘ஓபியம் வார்’. 1842ல் பல ஆற்றங்கரைப் பகுதிகள் பிரிட்டனின் வசமானது. அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் சீனாவினால் பிரிட்டனை எதிர்கொள்ள முடியவில்லை.
 
பிரிட்டனின் ராட்சதப் படை சீனாவின் சில சிறிய தீவுகளைத் தன் வசமாக்கிக் கொண்டதும், சீனச் சக்ரவர்த்தி நடுங்கத் தொடங்கினார். அவர் சிந்தனை வேறு கோணத்தில் பாய்ந்தது. “எல்லாம் இந்த ‘லின்’னால் வந்தது. ராஜதந்திரம் இல்லாமல் நடந்து கொண்டுவிட்டான்’’. லின் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவர் இடத்துக்கு சீ ஷான் என்பவர் நியமிக்கப்பட்டார்.
 
பிரிட்டனிடம் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மூன்று முக்கிய நிபந்தனைகள் நிறைவேறினால்தான் யுத்தம் நிற்கும் என்றது பிரிட்டன். தங்கள் வியாபாரிகளின் அபினியைப் பறித்ததற்காக அறுபது லட்சம் சீன டாலர்கள் அபராதம் அளிக்க வேண்டும். எந்தவித நிபந்தனையுமின்றி காண்ட்டன் துறைமுகத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
 
மூன்றாவது நிபந்தனை? “ஹாங்காங்கை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்”. சீன சமாதானத் தூதுவன் சீ ஷான் பிரிட்டிஷாரின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டு விட, பிரிட்டனும் தாற்காலிகமாக யுத்தத்தை நிறுத்தியது. ஆனால் சீனாவின் தலைமை அரசாங்கம் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ள மறுத்தது. 'அறுபது லட்சம் சீன டாலரா? ஹாங்காங்கை தாரைவார்ப்பதா? சான்ஸே கிடையாது” என்றது.
 
மீண்டும் தொடங்கியது போர். காண்ட்டன், ஷாங்காய், அமாய் ஆகிய துறைமுக நகரங்களை பிரிட்டனால் எளிதில் கைப்பற்ற முடிந்தது. அடுத்து நான்கிங் நகரையும் பிரிட்டன் முற்றுகையிடத் தொடங்க, சீன அரசு மீண்டும் வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டது. அதை சமாதானக்கொடி என்பதை விட அடிமை சாஸனம் என்றே கூறிவிடலாம். அப்படித்தான் அமைந்தது 1842 ஆகஸ்டு 29 அன்று இருதரப்பிலும் கையெழுத்திடப்பட்ட நான்ஜிங் உடன்படிக்கை.
 
210 லட்சம் டாலர் நஷ்ட ஈடு தர சம்மதித்தது சீனா. கூடவே ஹாங்காங்கையும்! ஐந்து துறைமுகப் பட்டினங்களில் பிரிட்டிஷார் பகிரங்க வியாபாரம் செய்யலாம். ஆக எல்லாமே ஒருதரப்பாகவே நடந்து முடிந்தது. வெற்றிக்கு அடையாளமாக ஹாங்காங் தீவை எடுத்துக் கொண்ட பிரிட்டன், அந்தத் தீவின் தெற்குப் புறமுள்ள கோலுன் தீபகற்பத்தையும் கொசுறாக எடுத்துக் கொண்டது. பின்னர் ஒரு சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி சீனா ஹாங்காங்கை முழுவதுமாக தாரை வார்க்க வேண்டாம். 99 வருடங்களுக்குக் குத்தகை விட்டால் போதும்!
 
பிற்காலத்தில் ஹாங்காங் எப்படியெல்லாம் வளரப் போகிறது என்பதை அப்போது இரு தரப்புமே அறிந்திருக்கவில்லை! 1984 டிசம்பர் 13 அன்று சீன – பிரிட்டிஷ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. தொடக்கத்தில் ஹாங்காங்கில் உள்ள சீனர்கள் சீன சட்டத்தின்படியும், பிறர் பிரிட்டிஷ் சட்டத்தின்படியும் நடத்தப்படுவார்கள் என்று கூறியது பிரிட்டன். ஆனால் காலப்போக்கில் அனைவருக்குமே ஆங்கிலேயர்களின் சட்டம்தான் - இதில் நிர்வாக வசதியும் இருந்தது என்பதுடன் ஹாங்காங்கில் வசித்த சீன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும் முக்கியம்.
 
இந்தக் காலகட்டத்தில் ஹாங்காங் செழித்து வளர்ந்தது. ஒரு துறைமுகமாக அது வணிகத்தில் மிளிர்ந்தது. ‘’எங்கள் மணிமகுடத்தில் மின்னும் மாணிக்கக்கல் ஹாங்காங்’’ என்று பிரிட்டன் பெருமிதப்பட்டுக் கொண்டது. காலச் சக்கரம் தன் பணியைச் செய்தது. குத்தகைக் காலம் முடியும் காலம் நெருங்கியது. தான் சொன்ன சொல்லை பிரிட்டன் காப்பாற்றுமா? அப்படிக் காப்பாற்றவில்லையென்றால் சீனா பிரிட்டனுடன் போரிடுமா? பிரிட்டன் ஹாங்காங்கை மீண்டும் சீனாவுக்கே அளிக்க ஒத்துக் கொண்டது.
 
ஆனால் குத்தகைக் காலம் முடிந்தவுடன் - அதாவது 1997 ஜூன் 30ம் தேதி - டக்கென்று ஹாங்காங் கைமாறிவிடுவது சாத்தியமா? இதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை முன்பே யோசித்து தீர்வு கண்டால் நல்லதுதானே?இப்படி ஒரு ஞானோதயம் சீனா, பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுக்குமே ஏற்பட, அவர்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுதிட்டார்கள். இதன்படி குத்தகைக் காலம் முடிந்ததும் சீனாவின் ‘சிறப்பான நிர்வாக கேந்திரமாக’ ஹாங்காங் விளங்கும்.
 
சீனா ஹாங்காங்கின்மீது கணிசமான கட்டுப்பாட்டைச் செலுத்தலாம். ஆனால் வெளியுறவுக் கொள்கை, ராணுவம் ஆகிய இரண்டு விஷயங்களையும் ஹாங்காங்கின் இடத்துக்கே விட்டுவிட வேண்டும். சீனாவில் சோஷலிஸ அமைப்புதான் என்றாலும் ஹாங்காங்கில் இப்போது நிலவும் சந்தைப் பொருளாதாரம் அப்படியே தொடரும்.இந்த ஒப்பந்தம் 1997லிருந்து அடுத்த ஐம்பது வருடங்களுக்குச் செல்லுபடியாகும்.
 
 
  • தொடங்கியவர்

ஹா – ஹாங்காங் 3

 

honkong_2200626f.jpg

பிரிட்டனிடம் இருந்து சீனாவிடம் ஹாங்காங் கைமாறிய நிகழ்ச்சி | கோப்புப்படம்

 

ஹாங்காங் கைமாறும் (மீண்டும்) சடங்கு 1997 ஜூன் 30 அன்று நடந்தேறியது. முக்கிய விருந்தினராக வேல்ஸ் இளவரசர் வந்திருந்து அரசியின் சார்பில் ஒரு பிரியாவிடை உரையாற்றினார். அப்போதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேரும் வந்திருந்தார். சீனாவின் சார்பில் அதன் தலைவர் ஜியாங் ஜெமின் வந்திருந்தார்.
 
ஹாங்காங் மீண்டும் சீனாவின் பிடிக்குள் வந்தது. பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஹாங்காங்கிற்கு சுதந்திரமான சிறப்பு அந்தஸ்து தர ஒத்துக் கொண்டாலும் சீனா தன் கெடுபிடிகளை அவ்வப்போது காட்டத்தான் செய்கிறது.
 
‘ஹாங்காங் பள்ளிகளில் தேசிய உணர்வு குறைவாகவே ஊட்டப்படுகிறது’ என்று சீன உயர் அதிகாரி ஒருவர் கருத்து கூறினார். தங்களுடன் மீண்டும் இணைந்த ஒரு பகுதி தனித்துவத்துடன்தான் இருப்பேன் என்பதைச் சீனா எப்படி அனுமதிக்கும் என்ற கேள்வி நியாயமானதுதான். இதற்கு மேலும் வலு சேர்க்கிறது சீனாவின் அரசியல் சூழல்.
 
‘ஒரே கட்சியின் பிடியில் சிக்கிக்கொண்ட சர்வாதிகார அரசு’ என்பதுதான் சீன அரசைப் பற்றிய உங்கள் எண்ணமா? ஆனால் அது முழு உண்மையல்ல. சீனாவுக்கும் அரசியலமைப்புச் சட்டம் உண்டு! அங்கு ஜனாதிபதியாக வேண்டுமானால் ‘நாற்பத்தைந்து வயதாகியிருக்க வேண்டும். இருமுறைக்கு மேல் ஜனாதிபதியாக இருக்க முடியாது’ என்று மட்டும்தான் சொல்கிறது அவர்கள் அரசியலமைப்பு சட்டம். அதாவது ஒரு ‘காம்ரேட்’ மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்பதில்லை. ஆனால் ..
 
தேசிய மக்கள் பேரவை என்ற அமைப்புதான் சீன நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும். (கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் கைகாட்டும் நபரைத்தான் பேரவை ஒப்புக் கொள்ளும்). ஒவ்வொரு தேர்தலிலும் ஒரே ஒருவரைத்தான் தேசிய மக்கள் பேரவை பரிந்துரைக்கும்! அவர்தான் சீனாவின் ஜனாதிபதி. அதாவது போட்டியே கிடையாது. இவ்வளவு சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் (சேர்மென்) பதவியில் இதுவரை நான்கு பேர்தான் இருந்திருக்கிறார்கள். சென் டுக்ஸியூ, மாசேதுங், ஹுவா குவாஃபெங், ஹூயாவோ பாங்.
 
இப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தலைவர் என்று யாரும் இல்லை. 1982க்குப் பிறகு அந்தப் பதவியின் சிறப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டன. அப்போதிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவிதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இதற்குத் தகுந்தாற்போல் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது. சீனக் குடியரசின் ப்ரிமீயர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்தான் நாட்டை வழிநடத்திச் செல்வார். கட்சி, அரசு ஆகிய இரண்டிலுமே ஜனாதிபதி தலையிடமாட்டார்.
 
இப்படி அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்ட பிறகு பெரும்பாலும் சீனாவின் ஜனாதிபதியே கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் ‘தேர்ந்தெடுக்கப்படுகிறார்’. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர பிற கட்சிகளும் உண்டு என்றால் நம்ப வேண்டும். ஆனால் இவை தேர்தலில் போட்டியிடுவதில்லை. கலை, கல்வி, மருத்துவம் போன்ற தனிச்சிறப்புப் பெற்ற துறைகளில்தான் இவை கவனம் செலுத்துகின்றன. இப்படி மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வொரு மாநிலக் குழுவிலும் போனால் போகிறது என்று இடம் தருகிறது சீன அரசு. இந்தக் கட்சிகள் ஆலோசனை கூறுவதோடு அடங்கிவிட வேண்டும்.
 
சீனா ஒரு வியப்புக்குரிய நாடாகவே இருந்து வருகிறது. ஒருபுறம் சந்தைப் பொருளாதாரம், மற்றொருபுறம் அதிகார மையம், ஒரே கட்சி ஆட்சி! ஜனநாயகம் ஏன் சீனாவில் இன்னமும் மலரவில்லை? அப்படி மலர வேண்டும் என்ற முணுமுணுப்பு அங்கு அவ்வப்போது எழத்தான் செய்கிறது. ஆனால் உடனே எங்கிருந்தோ ‘தேசியவாதம்’ எனும் வாதம் பிரமாண்டதாக எழும். “இஷ்டத்துக்கு சுதந்திரம் கொடுத்தால் தைவான், திபெத் போன்ற `அலங்கோல நிகழ்ச்சிகள்’ தான் நடக்கும்’’ என்பார்கள். முணுமுணுப்புகள் அடங்கிவிடும்.
 
தவிர, “திடீரென்று ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தினால் குழப்பங்கள் விளையும். அது பொருளாதார மற்றும் அரசியல் தற்கொலைக்கு ஒப்பானதாகும்’ என்று கருதுபவர்களும் உண்டு. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வெளிநாட்டினரால் பலவிதங்களில் சிறுமைப்படுத்தப்பட்ட சீனர்கள் பிற நாடுகளை ஒருவித அச்சத்தோடும் வெறுப்போடும்தான் இன்னமும் பார்க்கிறார்கள்.
 
1839-ல் பிரிட்டனோடு தொடங்கிய ஓபியம் யுத்தத்திலிருந்து 1945-ல் முடிந்த ஜப்பானிய முற்றுகை வரை அவர்கள் கண்டதெல்லாம் அவமானமும் ஆக்கிரமிப்பும்தான். பரப்பில் படர்ந்த, பழங்கால சிறப்பு கொண்ட தங்கள் தேசத்துக்கு இவ்வளவு இழிவா எனும் அவமானம் அவர்கள் மனதில் நிறைந்திருக்கிறது. பிற நாட்டு சக்திகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றிய காரணத்தால் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கிட்டத்தட்ட’ சர்வாதிகாரத்தை அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளச் செய்திருப்பது இந்த உணர்வுதான்.
 
ஆனால் ஹாங்காங் மக்கள் சுதந்திரத்தை இடையே அனுபவித்து விட்டவர்கள். பொருளாதார வளத்தினால் உண்டான நியாயமான கர்வம் வேறு. அதனால் மோதல்கள் பலமாகவே தொடங்கின.
 

 

  • தொடங்கியவர்

ஹா ஹாங்காங் 4

 

honkong_2203289f.jpg

ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிரான போராட்டக்காரர்களின் ஜனநாயக ஆதரவு வாசகம். | கோப்பு படம் - ராய்ட்டர்ஸ்

 

உனக்கென்ன குறை? தனியாக உள்ளூர் அரசாங்கம் - அதுவும் எங்களுக்குச் சிறிதும் பிடிக்காத ஜனநாயகம். கட்டுப்பாடு இல்லாத ஊடகங்கள், உனக்கென உள்ள தனி கலாச்சாரம். இத்தனையை யும் கொடுத்த பிறகும் எதற்காக இன்னும் மூக்கால் அழுகிறாய்? என்கிறது சீனா.

 
ஆனால் ‘‘குறையொன்றும் இல்லை. ஜின்பிங் கண்ணா’’ என்று பாட ஹாங்காங் தயா ரில்லை. (ஜின்பிங் சீனாவின் தற்போதைய அதிபர்). இதற்குப் பல காரணங்கள்.
 
என்னதான் சீனாவின் ஒரு பகுதி யாக சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இருந்தாலும், ஹாங்காங் கின் கலாச்சாரம் பலவிதங்களில் மாறிவிட்டது. பிரிட்டனின் ஆட்சி யில் ஹாங்காங் மக்கள் வேர்களில் இருந்து விலகி புதிய நடத்தைகளை வளர்த்துக் கொண்டு விட்டார்கள்.
 
முதலில் சமூக நடவடிக்கை களையே எடுத்துக் கொள்வோம். ஹாங்காங் மக்களுக்கு பொது இடங்களில் எச்சில் துப்புவது பிடிக்காது. சீனர்களுக்கோ (இந்தக் கட்டுரையில் சீனா என்றும் சீனர்கள் என்றும் குறிப்பிடும்போது ‘ஹாங்காங் நீங்கலான சீனா/சீனர்கள்’ என்று அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள்) பொது இடங்களில் எச்சில் துப்புவதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?’ என்ற எண்ணம். முக்கி யமாக படிப்பறிவில்லாத கிராமத்தினர் இது தங்கள் உரிமை என்பதுபோல் நடந்து கொள்கி றார்கள். ஹாங்காங் மக்களால் இதை ஏற்க முடியவில்லை.
 
சுரங்கப்பாதைகளில் சாப்பிட்டுக் கொண்டே நடப்பது. மிச்சத்தை அங்கேயே போடுவது என்பதெல்லாம் பல சீனர்களால் தவிர்க்க முடியாத, எந்தவொரு ஹாங்காங் குடிமகனாலும் ஒத்துக் கொள்ள முடியாத செயல்கள்.
 
அதுவும் சார்ஸ், பறவைக் காய்ச்சல் போன்றவற்றால் ஹாங்காங் பெருமளவில் பாதிக் கப்பட்ட பிறகு சுத்தம், சுகாதார விஷயங்களுக்கு மேலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டது ஹாங்காங். படிப்பறிவில்லாத சீனர்களில் பலரும் மாலை நேரமாகிவிட்டால் போதும், தங்கள் வீட்டுக்கு முன் காகிதங்களை கொளுத்துவார்கள். பலரது வீடுகளில் தெருப்பக்கமாக உள்ள சுவர்களில் வண்ணக் காகிதங்கள் ஒட்டப்பட்டிருக்கும். இதெல்லாம் எதற்காக? பேய்களும், பிசாசுகளும் தங்களை நெருங்கா மல் இருப்பதற்குதான்.
 
சீனர்களுக்கு ஹாங்காங்வாசி கள் மீது மிகவும் பொறாமை. அவர்களில் சிலருக்கு ஹாங்காங் கிற்கு உள்ள தனித்துவமும் அதற்கு அளிக்கப்படும் சலுகைகளும் கண்ணை உறுத்துகிறது. ஹாங் காங்கை ‘நன்றி கெட்ட நாய்’ என்று திட்டுகிறார்கள். பதிலுக்கு ஹாங்காங் மக்கள் சீனர்களை ‘ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்’ என்று அனல் கக்குகிறார்கள்.
 
எதற்காக இந்த உயிரினங்கள் இவர்கள் வாயில் அரைபடுகின்றன? சீனாவின் ஒரு பகுதியாக இருந்தும் ஹாங்காங் பிரிட்டனிடம் விசுவாசமாக இருக்கிறது, மேலை நாட்டு பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறது என்பதால் ஹாங்காங் நாயுடன் ஒப்பிடப்படுகிறது.
 
சீனர்கள் என் அட்டையுடன் ஒப்பிடப்பட வேண்டும்? காரணம் உண்டு. சீனத்தில் கர்ப்பமடை யும் பெண்களில் கணிசமானவர் கள் ஏதாவது காரணத்தைக் கூறிக்கொண்டு பிரசவகாலத்தில் ஹாங்காங்கிற்கு வந்து விடுகிறார் கள். காரணம் ஹாங்காங்கில் நிறைய சுதந்திரமும், பொருளா தாரச் செழிப்பும் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களும் இருக்கின்றன. ஹாங்காங்கில் பிறப்பவர்களுக்கு இங்கே பல சலுகைகள் உண்டு என்பதால் இங்கு குழந்தை பிறந்தவுடன் அதைப் பதிவு செய்து கொண்டு மீண்டும் சீனா செல்லும் தாய் தன் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரம் வந்தவுடன் ஹாங்காங்கிற்கு இடம் மாறுகிறார். தானும் சீனா வின் ஒரு பகுதி என்பதால் ஹாங்காங் கால் இதைத் தடுக்க முடியவில்லை.
 
தவிர சீனாவில் விற்கப்படும் பால் பவுடர் தரம் குறைந்தது என்ற சந்தேகம் பரவலாக இருப்பதால், ஹாங்காங்கிற்கு வரும் பெற்றோர் அங்கு பால் பவுடர் டின்களை எக்கச்சக்கமாக வாங்கிக் கொண்டு சீனாவிற்குத் திரும்புகிறார்கள். அடுத்ததாக ஹாங்காங்கின் நீதிமுறைச் செயல்பாட்டுக்கு வருவோம்.
 
சீனாவின் பிற பகுதிகளுக்கெல்லாம் ஒரு நீதித் துறை என்றால், ஹாங்காங்கிற்கு தனியானதொரு நீதித்துறை. 1997-க்குப் பிறகும்கூட ஹாங்காங் வாசிகளுக்குப் பல சட்ட உரிமைகளை அளிக்கும் வகையில் ஓர் அடிப்படை விதி (Basic law) உருவாக்கப்பட்டது.
 
ஹாங்காங் காவல் துறையின ருக்கு முழு சுதந்திரம் உண்டு. இதனாலும், அவர்களுக்கே உரிய திறமையாலும் சிறப்பாகச் செயல்படும் ஹாங்காங் காவல் துறையினருக்கு பிற நாடுகளிலும் நன்மதிப்பு உண்டு. ஆனால் காட்சிகள் மாறுகின்றனவோ என்று தோன்றுகிறது.
 
சில மாதங்களுக்கு முன்பு பெய்ஜிங் ஒரு வெள்ளை அறிக் கையை வெளியிட்டது. சீனத் தலைவர்களின் விருப்பம் தொடர்ந்தால் மட்டுமே ஹாங்காங் கில் சுயாட்சி தொடரும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? ஒரே அர்த்தம்தான் என்கிறார்கள் பெரும் பாலான ஹாங்காங் மக்கள். வருங் காலத்தில் தங்களது சுயாட்சி கேள்விக் குறியாகிவிடும்.
 
போதாக்குறைக்கு நீதித் துறைக்கு சீன அரசு கூறியிருக் கும் ஓர் ஆலோசனை ஹாங்காங் வாசிகளை பதற வைத்திருக்கிறது. ‘‘நீதித்துறை என்பது அரசின் ஒர் அங்கம்தான். எனவே நீதித் துறையிடம் தேசப்பற்று இருக்க வேண்டுமென்பதை இந்த அரசு எதிர்பார்க்கிறது’’. பொதுவாக இப் படிச் சொன்னாலே அதில் குற்றம் கண்டுபிடிக்க முடியும். அதுவும் சீன அரசு இப்படிச் சொல்கிறது என்றால் அது ஹாங்காங்கை மனதில் வைத்துதான் என்பது தெளிவு. இதுபற்றி ஹாங்காங்கில் உள்ள போராட்டக்காரர்கள் விளக் கம் கேட்க, சீன அரசு மெளனம் காக்கிறது.
 
(இன்னும் வரும்..)
 
  • தொடங்கியவர்

ஹா ஹாங்காங் 5

 

honkong_2205582f.jpg
ஹாங்காங்கில் சீன எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்ட மாணவர்கள். - கோப்பு படம் - ஏஎப்பி
 

ஜனநாயகம் ஹாங்காங்கில் இருக்குமென்று கூறினாலும், இதுவரை சீனா கைகாட்டிய நபர்கள்தான் ஹாங்காங்கை ஆட்சி செய்து வருகிறார்கள்.

 
ஹாங்காங் அடிப்படைச் சட்டத்தின் 23-வது பிரிவு பலத்த விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தப் பிரிவின்படி ஹாங்காங் ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி. சீன அரசுக்கு எதிரான போக்குகளைத் தடுக்கவோ, தடுப்பது தொடர்பாகவோ, அரசு ரகசியங்களைத் திருடுவது தொடர்பாகவோ, வெளிநாட்டு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொள்ளத் தடை என்பது தொடர்பாகவோ ஹாங்காங்கே தனக்குரிய சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்.
 
2002 செப்டம்பர் 24 அன்று சீன அரசு இதில் திருத்தம் கொண்டு வந்தது, Anti-subversion சட்டம் என்று கூறப்பட்ட இத்திருத்தம். கடும் எதிர்ப்புக்குப் பின் வாபஸ் பெறப்பட்டது.
 
இந்த நிலையில் ‘2017ல் நடை பெறவுள்ள தேர்தலில் ஹாங்காங் கின் முக்கிய செயலதிகாரி தேர்ந்தெடுக்கப்படுவார். ஹாங்காங் மக்களே அவரைத் தேர்ந்தெடுப்பார்கள்’ என்று சீன ஆட்சி மையம் அறிவித்ததும், ஹாங்காங்கின் மகிழ்ச்சி பெரிதும் ஊதப்பட்ட பலூன் போல உற்சாகத்தில் விரிந்தது.
 
‘நாங்கள் சிலபேரை சுட்டிக் காட்டுவோம். அவர்களிலிருந்து ஒருவரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்று அடுத்ததாக சீனாவின் அதிகார மையம் செக் வைத்து பலூனில் ஊசியைச் செருகியது.
 
பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தனர் ஹாங்காங் மக்கள். முதலில் எதிர்ப்புக் கொடியைப் பிடித்தவர்கள் ஹாங்காங்கில் உள்ள பல்கலைக்கழங்களின் ஆசிரியர்கள்தான். ஆனால் போதிய அளவு அவர்களுக்கு பகிரங்க ஆதரவு கிடைத்ததாகத் தெரியவில்லை. ‘மனுக் கொடுப்போம். மற்றபடி எதற்காக தெருவில் ஊர்வலம் என்பதெல்லாம்?’ என்ற எண்ணம் பரவலாக இருந்தது.
 
ஆனால் நிகழ்ந்தது ஒரு திருப்புமுனை. நூற்றுக்கணக்கில் சாலைகளில் திரண்டவர்களின் எண்ணிக்கை திடீரென லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்தது. காரணம் ஹாங்காங்கின் கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் குதித்ததுதான்.
 
அமைதியான முறையில் போராடுகிறார்கள் என்பதையும் பங்கெடுத்துக் கொள்ளாதவர்களை எந்தவிதத்திலும் அச்சுறுத்துவதில்லை என்பதையும் பிற மாணவர்கள் (முக்கியமாக சென்னையில் உள்ள வன்முறைக்குப் பெயர் பெற்ற ‘அந்த ஐந்து கல்லூரிகளின் மாணவர்கள்’) கவனத்தில் கொள்வார்களா?
 
2020ல் ஹாங்காங் தனக்கான சட்டசபையை (இதற்கு அங்கு பார்லிமெண்ட் என்றுதான் பெயர்) உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் சீனா உறுதியளித்தது. இப்போதைக்கு அங்குள்ள அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட கொஞ்சம் பேரையும், சீனாவின் மையக்குழு நியமித்த மீதிப் பேரையும் கொண்டதாக இருக்கிறது.
 
பிரிட்டனின் பிடியில் இருந்த போதுகூட ஹாங்காங்கிற்கு இதே நிலைதான். அதாவது ஜனநாயகம் தழைத்ததில்லை. காலனி ஆட்சிதான். சுதந்திரக் காற்றை முழுமையாக சுவாசிக்கப் போகிறோம் என எண்ணிய ஹாங்காங் மக்களுக்கு கடும் ஏமாற்றம்.
 
ஜூன் 22, 2014 அன்று ‘ஆக்குபை சென்ட்ரல்’ (Occupy Central) என்ற இயக்கம் மைய ஆட்சி யின் நடவடிக்கைகளுக்கு எதிரானவர்களை எல்லாம் ஓரணியில் திரட்டுவதில் வெற்றி கண்டிருக்கிறது. ஹாங்காங்கின் அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்று அதன் மக்கள் கருதுகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தியது.
 
கணக்கெடுப்பின் முடிவில் மூன்று சாய்ஸ்களை சீன அரசுக்கு அளித்தது ஹாங்காங். ‘மூன்றில் எதைக் கொடுத்தாலும் ஹாங்காங் தனது பிடியிலிருந்து நழுவி விடும். அல்லது இவற்றில் ஒன்றை ஒத்துக் கொள்வது நாளைய பிரிவினைக்கு அடிகோலிவிடும்’ என்று கருதிய சீனா மூன்றையுமே ஏற்க மறுத்து விட்டது.
 
ஆனால் ஒன்றை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எக்கச்சக்கமான லாபத்தை உருவாக்கி சீனப் பொருளாதாரத்துக்கு உதவும் ஹாங்காங்கிற்கு வேறொரு விஷயத்தில் சீனா போதிய வசதிகளை செய்து தருகிறது. முக்கியமாக சுங்கம் மற்றும் வரிகள் தொடர்பான விதிகளை ஹாங்காங்கே வகுத்துக் கொள்ள வழி செய்யப்பட்டிருக் கிறது.
 
இனி என்ன நடக்கலாம்?
 
சீனாவின் பிற பகுதிகளைவிட ஹாங்காங்கிற்கு பொருளாதாரச் செழிப்பும் அதிகம், அளிக்கப்பட்டுள்ள சுதந்திரமும் அதிகம். எனவே பிரிவினை லெவலுக்கு ஹாங்காங் உடனடியான முடிவுக்கு வரத் தயங்கும்.
 
அதே சமயம் ஹாங்காங்கால் தங்கள் நாட்டுக்கு உண்டாகியுள்ள பொருளாதார ஆதாயமும், அது ஒரு பொன்முட்டையை இடும் வாத்து என்பதையும், அளவு தாண்டிய அடக்குமுறையை அங்கு ஏவிவிட்டால் உலக அளவில் தாங்கள் தனிமைப்ப டுத்தப்பட வாய்ப்பு உண்டு என்பதும் புரிந்திருப்பதால் சீனாவும் ஹாங்காங்கிற்கு செக் வைக்காது. குறைந்தது வெளிப்படையாகவும் சட்டங்கள் மூலமாகவும் அடக்குமுறை அதிகம் நடை பெறாது. சூழ்ச்சிகரமாக வலை பின்னலாம்.
 
ஒருபுறம் அடக்குமுறைக்குப் பெயர்போன, அதே சமயம் மின்னல் வேகத்தில் பல முன்னேற்றங்களைக் கண்ட சீனா, மற்றொரு புறம் தனது ஒப்பந்த உரிமைகளை சீக்கிரமே நிலைநாட்டத் துடிக்கும் சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்! - கயிறு இழுக்கும் போட்டி கனகச்சிதமாகத் தொடங்கி விட்டது.
 
(முடிந்தது.)
 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.