Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன். முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன் அந்த இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டால், படம் இன்னும் தெளிவாகப் புரிய வாய்ப்பு உள்ளது.
 
1. Interstellar and Time Travel 2. Interstellar and Black Holes
ஒருவேளை எந்த விபரமும் தெரியாமல் இந்தப் படத்துக்குப் போகிறோம் என்று வைத்துக்கொண்டாலும், அதில் சொல்லப்படும் விஷயங்கள் அத்தனை கடினமானவை அல்ல. அவை வரும்போதே அவற்றுக்கான விளக்கமும் தெளிவாகப் படத்தில் வருகிறது. இருந்தாலும் இந்தக் கட்டுரையில் படத்தைப் பற்றி நன்றாகக் கவனிக்கப்போவதால் படத்தில் வரும் அனைத்து விஷயங்களையும் எளிமையாகப் பார்த்துவிடுவோம்.
 
முதலில், சென்ற வருடம் லீக் செய்யப்பட்ட திரைக்கதை எழுதப்பட்டது 2008ல். எழுதியிருந்தவர் ஜொனாதன் நோலன். உதவியவர்கள் விஞ்ஞானி கிப் தார்ன் மற்றும் பிரபல தயாரிப்பாளர் லிண்டா ஆப்ஸ்ட். அந்தத் திரைக்கதை லீக் செய்யப்பட்டதுமே இரண்டு நோலன்களும் அமர்ந்து அதனை மாற்றிவிட்டனர். ஆனால் முழுதாக மாற்றவில்லை. ஒருசில முக்கியமான பகுதிகளை மட்டுமே மாற்றியிருந்தனர். காரணம், எழுதப்படும்போது அத்தனை முக்கியமான சம்பவங்களையும் வைத்து விரிவாக உருவாக்கப்படும் ஒரு திரைக்கதையை அப்படியே மாற்றுதல் மிகவும் கடினம். இப்போது இண்டர்ஸ்டெல்லார் படத்தைப் பார்த்தபின் யோசித்துப் பார்த்தால், லீக் செய்யப்பட்ட திரைக்கதைதான் இரண்டிலும் சிறந்ததாகப் படுகிறது. அதில் சில விஷயங்கள் மிகத்தெளிவாக விளக்கப்பட்டிருந்தன. ஆனால் இணையத்தில் கசிந்ததால் வேறு வழியின்றி அதனை நோலன்கள் மாற்றியதில் அந்த சம்பவங்களின் முக்கியத்துவம் குறைந்து, திரைக்கதையும் ஒரு டிபிகல் ஹாலிவுட் மசாலா திரைக்கதையாக மாறிவிட்டது.
 
ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இது ஒரு நோலன் படம் என்று சொல்லக்கூடிய பகுதிகள் படத்தின் மிகக்கடைசியில்தான் வருகின்றன. அந்தப் பகுதிகளையுமே இப்போதைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஒருவகையில் பார்த்தால் நான் ஏற்கெனவே டார்க் நைட் ரைஸஸ் தொடர் கட்டுரைகளில் சொல்லியதுபோல் நோலனின் திறமை முற்றிலும் மங்கி, அவரை ஹாலிவுட் ஒரு டிபிகல் இயக்குநராக மாற்றியது இந்தப் படத்தில் நன்றாகத் தெரிகிறது. இனி டூடில் பக், மொமெண்டோ, ப்ரஸ்டீஜ் போன்ற படங்களை இயக்கிய நோலனை நாம் பார்ப்பது மிகவும் கடினம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நோலனின் பின்னணி தெரியாமல், டார்க் நைட் ட்ரையாலஜியை மட்டும் பார்த்துவிட்டு (இன்ஸெப்ஷனையும் சேர்த்துக்கொள்ளலாம்) நோலனின் வெறியர்கள் கும்பல் ஒன்று இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நோலனின் பின்னணி எதுவும் தெரியாது. இலக்கியத்துக்கும் நோலனுக்கும் உள்ள தொடர்பு, இன்ஸெப்ஷனுக்கு உந்துதலாக இருந்த ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ் பற்றிய அறிவு, நோலனின் படமெடுக்கும் முறை போன்ற எதுவும் தெரியாது. அவற்றை அறியும் நோக்கமும் இல்லை. ’தல நோலன் பின்றார்ரா’ என்ற கருத்தை அடிக்கடி ஃபேஸ்புக்கில் பார்க்கிறேன். ஆனால் உண்மையில் இதுதான் டார்க் நைட் ரைஸஸ் படத்துக்குப் பின் நோலனின் மிகமிகச் சாதாரணமான படம்.
 
இருந்தாலும்,  நோலன் படம் என்ற tag இல்லாமல் பார்த்தால் இந்தப் படம் சுவாரஸ்யமானதுதான். இதுவரை ஹாலிவுட் படங்களில் மோம்போக்காகச் சொல்லப்பட்ட, ஜிகினா வேலைகள் செய்து பிரம்மாண்டமாகக் காட்டப்பட்ட இரண்டு விஷயங்கள் இந்தப் படத்தில் மிக மிக உண்மையாகவும் நிஜமான கணக்குகள் மற்றும் equations மூலமாக முடிந்தவரை உண்மைக்கு மிக அருகில் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் என்னால் இந்தப் படத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்க்க முடிந்தது.
 
அவற்றில் முதல் அம்சம் – Wormhole. இது என்ன என்பதை மேலே நான் கொடுத்திருக்கும் முதல் கட்டுரையில் விபரமாகப் படிக்கலாம். இருந்தாலும், இந்தப் படத்தில் வார்ம்ஹோல் ஒன்று முக்கியமான பங்கை வகிப்பதாலும், படத்தில் அருமையாகக் காட்டப்பட்டிருக்கும் ஒரு விஷயம் என்பதாலும், இனி நமது அனாலிஸிஸை ஆரம்பிக்கலாம்.
இங்கே இருந்து படத்தின் ஸ்பாய்லர்கள் விவாதிக்கப்படுகின்றன. படம் பார்த்தவர்களுக்கு இந்தப் பகுதிகள் சுவாரஸ்யமாக இருக்கலாம். படம் பார்க்காதவர்களில், இவற்றைப் படித்தால் உதவும் என்று நினைப்பவர்கள் மட்டும் படிக்கலாம். எந்தத் தகவலும் தெரியாமல்தான் பார்ப்பேன் என்று நினைப்பவர்கள், ஸ்பாய்லர்களின் முடிவுக்குப் போய்விடலாம்.
The Spoilers begin here- இங்கே ஸ்பாய்லர்கள் துவக்கம்.
 
Wormholes and Interstellar
வார்ம்ஹோல் என்பது, விண்வெளியின் இரண்டு இடங்களை ஒன்றுசேர்க்கும் ஒருவித டன்னல். இந்த இரண்டு இடங்களுக்கு இடையே எத்தனை தூரம் இருக்கிறதோ அதுதான் அந்த வார்ம்ஹோலின் நீளம். இந்த வார்ம்ஹோலின் ஒரு ஓட்டைக்குள் நுழைந்து உடனடியாக இன்னொரு பக்கம் வந்துவிடமுடியாது. உண்மையில் இது ஒரு ஓட்டையே கிடையாது. ஒரு நீளமான குழாய் (Sphere shaped) என்றுவேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். குழாயின் இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள். குழாயின் நீளம் என்பது அந்த ஓட்டைகளுக்கு இடையே இருக்கும் தூரம். ஓட்டைகள் = விண்வெளியின் இரண்டு தனிப்பட்ட இடங்கள். இரண்டுக்கும் இடையே எத்தனை தூரமோ அத்தனை நீளத்தையும் கடந்தால்தான் மறுபக்கம் போய்ச்சேர முடியும். இந்த வார்ம்ஹோல் இயற்கையாக உருவாகவே முடியாது. புவியீர்ப்பு விசையை இஷ்டத்துக்குக் கட்டுப்படுத்த முடிந்த, அறிவிலும் விஞ்ஞானத்திலும் பலமடங்கு முன்னேறிய உயிரினங்கள்தான் இப்படி ஒரு வார்ம்ஹோலை உருவாக்கமுடியும்.  வார்ம்ஹோலின் ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால், மறுபக்கத்தில் இருக்கும் உலகங்கள் சற்றே குழம்பிய நிலையில் தெரியும். குழப்ப நிலைக்குக் காரணம் ஈர்ப்புவிசை. கீழே உள்ள படம் இண்டர்ஸ்டெல்லாரில் வரும் வார்ம்ஹோலைக் காட்டுகிறது. அதில் தெரியும் சிறு உருண்டைதான் விண்கலம்.
 
 
Interstellar-wormhole.jpg?resize=770%2C3
பூமியில் இப்போதைய காலகட்டத்தில் இருந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து, பயிர்களுக்கிடையே பரவும் ஒருவிதக் கிருமிகளால் பல உணவுப்பயிர்களும் சில வருடங்களுக்கு ஒருமுறை அழிந்து வருகின்றன. சோளம் மட்டுமே இன்னும் அழியாமல் உள்ளது. கூடவே புழுதிப் புயல்களும் அடிக்கடி உலகம் முழுக்க சேதங்களை விளைவிக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்னும் சில வருடங்களில் உலகில் உள்ள மனித இனம் அழியப்போகிறது என்ற நேரத்தில் – ஒரு வார்ம்ஹோல் திடீரென்று சனி கிரகத்தின் அருகே ஒருநாள் தோன்றுகிறது. யார் இதனை உருவாக்கினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. உடனடியாக உஷாராகும் நாஸா, அதனுள் சில ஆளில்லாத விண்கலங்களை அனுப்புகிறது. அவற்றில் இருந்து கிடைத்த தகவல்களால் தைரியமடைந்து, இந்தக் கதை நிகழ்வதற்குப் பத்து வருடங்கள் முன்னர் சில கைதேர்ந்த விஞ்ஞானிகளைத் தேர்வு செய்து, அவர்களை இந்த வார்ம்ஹோலுக்குள் அனுப்புகிறது நாஸா. அவர்களில் மொத்தம் மூவரிடம் இருந்து இன்னும் சிக்னல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த மூவரும்தான் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்/அவர்களின் விண்கலங்கள் பழுதடையவில்லை என்பது இதன்மூலம் விளங்குகிறது. அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால், உயிர்வாழத் தகுதியான ஒரு இடத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
இதனால், தனது வீட்டுப் புத்தக அலமாரி திடீரென்று அதிர்வதால் (இது ஏதோ பேயின் வேலை என்பது பத்து வயது மகள் மர்ஃபியின் கருத்து) உருவாகும் சில Co-ordinatesகளை வைத்துக்கொண்டு கதாநாயகன் கூப்பர் ஒரு ரகசியமான இடத்துக்குச் செல்கிறான். அது, நாஸாவின் மிச்சமிருக்கும் சில விஞ்ஞானிகள் அடங்கிய இடம். வார்ம்ஹோலுக்குள் சென்றவர்களின் சிக்னல்களை வைத்துக்கொண்டு அவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று மனித இனம் உயிர்வாழத் தகுதியான கிரகங்களைக் கண்டுகொள்வதே இவர்கள் வேலை. அப்படிப்பட்ட ஒரு mission, அங்கே கூப்பர் வந்துவிட்டதால் அவனுக்கும் தரப்படுகிறது. உயிரையே வைத்திருக்கும் மகள் மர்ஃபியையும் மகன் டாமையும் இறந்த மனைவியின் தந்தை டொனால்டையும் விட்டுவிட்டு இந்தப் பயணத்தில் பங்கேற்கிறான்.
 
 
பயணத்தில், இந்த வார்ம்ஹோலை இரண்டு வருடங்கள் கழித்து இந்தக் குழு அடைகிறது. கிட்டத்தட்ட 1.25 மைல்கள் சுற்றளவையும், பத்து பில்லியன் ஒளி வருடங்கள் நீளத்தையும் கொண்டிருக்கிறது இந்த வார்ம்ஹோல். அதாவது, வார்ம்ஹோலின் இந்தப் பக்கத்துக்கும் மறுபக்கத்துக்கும் இடையேயான தூரம் பத்து பில்லியன் ஒளி வருடங்கள் (ஆறு ட்ரில்லியன் மைல்கள் அல்லது பத்து ட்ரில்லியன் கிலோமீட்டர்கள்). மனித இடம் நினைத்தே பார்க்கமுடியாத தூரம். இந்த வார்ம்ஹோல் இருப்பதால் மட்டுமே அந்தத் தூரத்தை நொடியில் கடந்து விண்வெளியின் இன்னொரு பக்கத்துக்குப் போவது சாத்தியப்பட்டிருக்கிறது.
 
உள்ளே நுழைந்து மறுபக்கம் வருகிறார்கள் கூப்பர் குழுவினர். மறுபக்கத்தில் இவர்களை மிகப்பிரம்மாண்டமான ஒரு கருந்துளை வரவேற்கிறது. பொதுவாகக் கருந்துளை என்பது, இருப்பதே தெரியாமல் இருண்டுபோய் இருக்கும் ஒரு விஷயம். நிறையில் அளவுகடந்துபோய்விடும் நட்சத்திரம் ஒன்று திடீரென்று கற்பனைக்கெட்டாதவாறு சுருங்கிக் கருந்துளையாக மாறுகிறது. இதன் நடுவே ஆழத்தில் அந்த நட்சத்திரத்தின் கணக்கிடமுடியாத நிறை இன்னும் இருப்பதால், அந்த ஈர்ப்பு விசையால் அருகே இருக்கும் அனைத்தையும் இந்தக் கருந்துளை உறிஞ்சிக்கொள்கிறது. ஒளிகூட இதிலிருந்து தப்பமுடியாது. படத்தில் வரும் இந்தக் கருந்துளையின் பெயர் கார்கான்ச்சுவா (Gargantua). இதன் நிறை, சூரியனின் நிறையைவிட நூறு மில்லியன் நிறைகள் அதிகம். இது கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் 99.8 சதவிகித வேகத்தில் சுழன்றுகொண்டிருக்கிறது.
 
இந்தக் கருந்துளையின் Orbitடில்தான் இவர்கள் செல்லவேண்டிய முதல் கிரகம் உள்ளது. ஆனால் இந்தக் கருந்துளையின் அருகே இருப்பதால், இதன் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய ராட்சத அலைகள் இந்தக் கிரகத்தில் அடிக்கடி உருவாகிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் கருந்துளை என்பதன் ஈர்ப்புவிசையால் நடக்கக்கூடிய ஒரு முக்கியமான மாறூதலும் இந்தக் கிரகத்துக்குள் நடக்கிறது.
 
Black Hole and Interstellar
interstellar-black-hole.jpg?resize=644%2
 
என்னவெனில், எங்கெல்லாம் ஈர்ப்புசக்தி மிக அதிகமோ, அங்கெல்லாம் காலம் சற்றே குறையும். இதுதான் ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிடி தியரி. இதனால், கருந்துளையைச் சுற்றிவரும் கிரகம் ஒன்றில் கருந்துளையின் ஈர்ப்புசக்தி மிக அதிகமாக இருப்பதால் அந்தக் கிரகத்துக்குள் சென்றால், அங்கு ஒரு மணி நேரத்தில் பூமியில் 7 வருடங்கள் ஓடியிருக்கும். காரணம் கருந்துளையின் ஈர்ப்புசக்தி, பூமியின் ஈர்ப்புசக்தியை விடப் பலமடங்கு அதிகம் (படத்தின் இந்தத் தகவல் விஞ்ஞானபூர்வமாகத் தவறு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. காரணம் ஒரு மணி நேரம் = 7 வருடம் என்பது உண்மையாக இருக்கவேண்டும் என்றால் அந்தக் கிரகம் கருந்துளையின் வெளிவிளிம்பின் மிக மிக அருகே இருக்கவேண்டும். அத்தனை அருகே இருந்தால் கருந்துளையின் ஈர்ப்பால் உறிஞ்சப்பட்டு ஒரே நொடியில் உள்ளே சென்று அழிந்துவிடும். எனவே இது சுவாரஸ்யத்துக்காக நோலன் குழுவினர் நுழைத்த கப்ஸா). இப்படி வேகமாகக் காலம் ஓடும் என்பதால் நாயகன் கூப்பர் தயங்குகிறான். காரணம் அங்கு சென்று சில மணி நேரங்கள் இருந்துவிட்டு வந்தால் பூமியில் அவனது பத்து வயது மகள் மர்ஃபி கிட்டத்தட்டக் கிழவியாகிவிடக்கூடும். இருந்தாலும் அந்தக் கிரகத்தில் இருந்து வந்த சிக்னலின் காரணமாகவும், அதுதான் இவர்களுக்கு மிக அருகே இருப்பதாலும் வேறு வழியில்லாததால் அங்கு செல்கிறார்கள்.
 
சென்றபின்னர்தான் ராட்சத அலைகளைப் பற்றி இவர்களுக்குப் புரிகிறது. அதில் இவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தக் கிரகத்துக்கும் பூமிக்கும் இருக்கும் கால வித்தியாசத்தால், பூமியில் பத்து வருடங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட மில்லர், இந்தக் கிரகத்துக்கு ஒரே ஒரு மணி நேரம் முன்னர்தான் வந்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஒருசில நிமிடங்கள் முன்னர் அடித்த ராட்சத அலையால்தான் அவர் இறந்திருக்கிறார் என்று உணர்கிறார்கள். சில நிமிடங்கள் முன்னர் வந்திருந்தால் மில்லரைக் காப்பாற்றியிருக்கலாம். அங்கிருந்து தப்பிக்கிறார்கள். அப்போது எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசத்தால் பூமியில் 23 வருடங்கள் ஓடிவிடுகின்றன. எனவே இப்போது கூப்பரின் மகள் மர்ஃபிக்கு 33 வயது. இது தெரிந்து கூப்பர் மனம் உடைகிறான்.
இருந்தாலும், இப்போது இருக்கும் எரிபொருளை வைத்து பாக்கியிருக்கும் இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றுக்குத்தான் செல்லமுடியும் என்ற சூழல். ஒன்றில் பத்து வருடங்கள் முன்னர் கிளம்பிய பயணங்களுக்குத் தலைமைதாங்கிய Dr. Mann இருக்கிறார். இன்னொன்றில் கூப்பருடன் வந்திருக்கும் அமேலியாவின் காதலன் எட்வர்ட் இருக்கிறான். இறுதியாக, Dr.Mann இருக்கும் இடத்துக்கே செல்லலாம் என்று முடிவாகிறது. அங்கே செல்கிறார்கள். அப்போதுதான்,  உயிர்வாழத் தகுதியில்லாத அந்தக் கிரகத்தில் பல ஆண்டுகாலத் தனிமையினால் பாதிக்கப்பட்ட Dr. Mann, போலியான சிக்னல்களைக் கொடுத்திருப்பது தெரிகிறது. அப்போதுதானே பூமியில் இருந்து அங்கே வந்து அவரைக் காப்பாற்றுவார்கள்? இதன்பின் அவர் கூப்பரைக் கொன்று, அவனது விண்கலத்தை எடுத்துக்கொண்டு பாக்கியிருக்கும் எட்மண்டின் கிரகத்துக்குச் சென்று, இவர்கள் கொண்டுவந்திருக்கும் மனித இனம் தழைப்பதற்கான முட்டைகளை வைத்து ஒரு colonyயை உருவாக்க நினைக்கிறார். கூப்பர், மகளைப் பிரிய இனிமேலும் மனமில்லாமல் பூமிக்குச் செல்ல முடிவெடுத்திருப்பதுதான் காரணம்.அப்போது நிகழும் சண்டையில் Dr. Mann இறக்க, இவர்கள் அந்தக் கிரகத்தில் இருந்து  தப்பிக்கிறார்கள்.
 
Again comes the Black Hole – the Pre-climax
இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் – எட்மண்டின் கிரகத்துக்குச் செல்வது. ஆனால் எரிபொருள் கிட்டத்தட்ட காலி. இதனால் கூப்பர் ஒரு யோசனையைச் சொல்கிறான். பிரம்மாண்டமான கருந்துளையின் அருகே சென்றால், அது ஒளியின் வேகத்தில் சுழல்வதால் இவர்களின் கலத்தையும் ஈர்த்துச் சுழலவைக்கும். மெல்ல உள்ளேயும் இழுக்கும். அப்போது அந்தச் சுழற்சியில் நன்றாக வேகமெடுத்ததும் இவர்களின் கலத்தைக் கிளப்பினால், அது அந்தச் சுழலின் வேகத்திலேயே கருந்துளையின் orbitடில் இருந்து வெளியேறி வீசப்படும். இதனால் எளிதில் அந்தக் கிரகத்துக்குச் சென்றுவிடலாம். இந்த யோசனை செயல்படுத்தப்படும்போது, கூப்பர் இருக்கும் கலம் திடீரென்று கருந்துளையை நோக்கி விழுகிறது. அப்போதுதான், அதிகமான எடையை விடுவித்தால்தான் கலம் இலக்கை நோக்கிச் செல்லும் என்பதால் கூப்பர் தன்னைத்தானே தியாகம் செய்துகொண்டது அமேலியாவுக்குப் புரிகிறது.
கருந்துளையின் நடுவே விழுந்த கூப்பர் என்ன ஆனான்? இதில்தான் ஒட்டுமொத்த பூமியின் எதிர்காலமும் உள்ளது. காரணம், புவியீர்ப்பு விசையை மீறி அத்தனை மக்களையும் எப்படிப் பிற கிரகங்களுக்குக் கொண்டுசெல்வது என்பதுதான் இதுவரை மிகப்பெரிய கேள்விக்குறி. இதற்காகத்தான் பல ஆண்டுகள் அமேலியாவின் தந்தை ப்ராண்ட் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் (அல்லது அப்படி நடித்தார்). இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், கற்பனைக்கெட்டாத அளவு அதிகமான ஈர்ப்புவிசைகொண்ட கருந்துளையின் உள்ளே இழுக்கப்படும் பொருட்கள் என்ன ஆகின்றன என்பது தெரிந்தால் போதும். அதைவைத்துப் பூமியில் இருந்து புவியீர்ப்பு விசையை மீறி அத்தனை மக்களும் வெளியேறும் விதத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.
 
Cooper and the Tesseract
கருந்துளையின் உள்ளே படுவேகமாக உறிஞ்சப்படும் கூப்பர், திடீரென்று ஏதோ ஒரு உலகில் இறங்கியிருப்பதை உணர்கிறான். அது, அவனது வீட்டின் நூலகம். அதன் ஒரு புறத்தில் இவன் இருக்கிறான். இன்னொரு புறத்தில் பத்து வயது மர்ஃபி. அப்போதுதான், படத்தின் ஆரம்பத்தில் நூலகத்தில் இருந்து தானாகவே புத்தகங்கள் விழுந்தது கூப்பருக்கு நினைவு வருகிறது. அது இவனது செயல்தான். காரணம், அப்போதுதான் இவன் அங்கே அடைபட்டிருக்கிறான் என்பது மர்ஃபிக்குப் புரியும் என்பதால் இவனாகவே அந்தப் புத்தகங்களை வீழ்த்தியிருக்கிறான். அப்போது, பயணம் கிளம்பும்போது இவன் மர்ஃபிக்குக் கொடுத்த கடிகாரத்தின் நினைவு அவனுக்கு வருகிறது. கருந்துளைக்கு உள்ளே இருந்து ரோபோ டார்ஸ் கொடுத்த விபரங்களை மோர்ஸ் கோடில் அந்தக் கடிகாரத்தின் வினாடி முள்ளில் பதிகிறான்.
 
படத்தில் நாற்பது வயதாகும் மர்ஃபி, ஒரு முக்கியமான கட்டத்தில் அந்த நூலகம் வருகிறாள். அப்போது அதுவரை நடந்த நிகழ்வுகளை வைத்து யோசித்துப்பார்க்கிறாள். அப்போதுதான், முப்பது வருடங்கள் முன்னர் கிளம்பிய கூப்பர்தான் தன்னுடன் இப்படித் தொடர்புகொண்டிருக்கிறான் என்பது அவளுக்குப் புரிகிறது. இது தெரிந்ததும் அந்தக் கடிகாரத்தையும் எடுத்துப் பார்க்கிறாள். அதிலிருக்கும் செய்தியை வைத்து உடனடியாகப் பல ஆண்டுகள் பதிலில்லாமல் இருந்த கேள்விக்குப் பதில் கிடைக்கிறது. இதனால் மனிதர்கள் மொத்தமாக இந்த வர்ம்ஹோலை வைத்து வேறு கிரகங்களுக்குச் சென்று வாழ முடிகிறது. மனித இடம் தழைக்கிறது.
வேலை முடிந்ததும் கூப்பர் இருக்கும் இடம் மறைகிறது. அது என்ன இடம் என்றால், அது ஒரு Tesseract. கருந்துளைக்குள் சென்ற கூப்பர் எப்படி ஒரு டெஸராக்டினுள் வந்தான்?
முதலில் டெஸராக்ட் என்றால் என்ன?
டெஸராக்ட் என்றால், நான்கு பரிமாணங்கள் உள்ள ஒரு வஸ்து. க்யூப் என்பது முப்பரிமாணம் உடையது என்று எல்லோருக்கும் தெரியும். அதைவிட ஒரு பரிமாணம் அதிகமுள்ளது டெஸராக்ட். மூன்று பரிமாணங்கள் என்பது Length (நீளம்), Breadth (அகலம்), Height (உயரம்), Depth (ஆழம்) மற்றும் Width (அகலம்) ஆகியவற்றில் ஏதேனும் மூன்று பரிமாணங்கள் சேர்ந்து காட்டப்படுவது. உலகில் எந்தப் பொருளாக இருந்தாலும் உயரம், நீளம், அகலம் ஆகியவை இருக்கும். அதுதான் முப்பரிமாணம். இத்துடன் காலம் என்பதையும் சேர்த்தால் அது நான்கு பரிமாணம். இந்த நான்காவது பரிமாணம் உள்ள வஸ்துதான் டெஸராக்ட். இதனுள் இருந்தால், காலம் என்பதை வைத்துக்கொண்டு இதற்குள் முன்னும் பின்னும் காலத்தில் பயணிக்கலாம்.
கருந்துளைக்குள் விழுந்த கூப்பர், அத்தகைய ஒரு டெஸராக்டில் கண்விழிக்கிறான். அவனாக அதில் விழவில்லை. காரணம், கருந்துளைக்குள் விழுந்தால், அதீதமான ஈர்ப்பால்  கைகால்கள் இழுக்கப்பட்டு உடலே பிய்ந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் நடப்பதற்குள் அவன் டெஸராக்டில் இருப்பதற்குக் காரணம் யாரென்றால், திடீரென்று படத்தின் ஆரம்பத்தில் வார்ம்ஹோலை உருவாக்கி சனி கிரகத்தின் அருகே நிறுத்தினார்களே அவர்கள்தான். ஆனால் அது யார்? இதற்கான பதில் படத்தில் உள்ளதா?
இருக்கிறது. டெர்மினேட்டர் 2 படம் பார்த்திருக்கிறீர்கள்தானே? அதில், வருங்காலத்தில் இருந்து ஒரு வில்லன் ரோபோ தற்காலத்துக்கு வரும். காரணம், தற்காலத்தில் சிறுவனாக இருக்கும் மனித இனத்தின் வருங்காலத் தலைவனை இப்போதே கொன்றுவிட்டால் வருங்காலத்தில் அவன் இருக்கமாட்டான் என்பதால்தான். அதேபோல, வருங்காலத்தில் விஞ்ஞானத்தில் அதிகபட்ச வளர்ச்சி அடைந்த மனிதர்கள்தான், பூமி அழியாமல் காப்பாற்ற அப்படிப்பட்ட வார்ம்ஹோலை உருவாக்கி, முன்னொருகாலத்தில் தாங்கள் எப்படித் தப்பித்தார்களோ அப்படி அந்தக் காலகட்டத்தில் இருக்கும் தற்போதைய பூமிவாசிகள் தப்பிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அந்த ஏற்பாட்டின்படி, கருந்துளைக்குள் விழுந்த கூப்பரை அவர்கள்தான் டெஸராக்டில் வைத்து, கருந்துளைக்குள் இருந்து கிடைத்த தகவல்களை அவனது மகளுக்குத் தெரியப்படுத்தி, அதன்மூலம் மக்கள் அனைவரும் வேறு கிரகங்களில் குடியேற வாய்ப்புச் செய்து கொடுத்திருக்கின்றனர்.
இப்போது ஒரு கேள்வி எழலாம். வருங்காலத்தினர் இப்படிச் செய்திருந்தால், அவர்கள் சாதாரண மனிதர்களாக இருந்தபோது அவர்கள் எப்படிப் பிழைத்தார்கள்? அவர்களுக்கும் அவர்களின் பிற்காலச் சந்ததியினர் இப்படி வார்ம்ஹோலைக் காட்டியிருக்கலாம். இது ஒரு infinite loop.
இந்த infinite loopதான் நோலனின் முத்திரை. இன்ஸெப்ஷனில் வரும் சில காட்சிகளை இது ஒத்திருக்கிறது. அதில் முடிவே இல்லாமல் வளையும் பரப்பு, வயதான கதாபாத்திரங்கள் இளமையான அவர்களுடனே பேசுவது போன்றதெல்லாம் நோலன் போர்ஹேஸிடம் இருந்து எடுத்த இன்ஸ்பிரேஷன்கள். நோலன் ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பதால் இது சாத்தியம்.
இங்கே ஸ்பாய்லர்கள் முடிகின்றன – The Spoilers end here
இத்தகைய கருந்துளைகள், வார்ம்ஹோல்கள் ஆகியவையெல்லாம் இந்தப் படம் முழுதும் நோலனுடன் இருந்த விஞ்ஞானி கிப் தார்னால்தான் சாத்தியமானது. கருந்துளைகளைப் பற்றிய அவரது பல ஃபார்முலாக்கள், கிட்டத்தட்ட ஒண்ணரை வருடங்கள் ஆராயப்பட்டு முப்பது பேர் அடங்கிய குழு ஒன்றால் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட ஸிஜி கருந்துளை, இயல்பாகவே தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் உள்ளே இழுக்கத் துவங்கி, சுற்றிலும் இருக்கும் வெளியை வளைக்கவும் துவங்கியது. அப்போதுதான் தன்னுடைய ஃபார்முலாக்கள் எத்தனை துல்லியமானவை என்று கிப் தார்ன் கண்டுகொண்டார். அவரது கூற்றுப்படி, இதுவரை இத்தனை துல்லியமான கருந்துளை எந்தப் படத்திலும் காட்டப்படவில்லை. இந்தப் படத்தின் கருந்துளையும் அப்படியே சுற்றியிருக்கும் வெளியை வளைப்பதைப் பார்க்கலாம். கூடவே, அவற்றின் ஒளியையும் உள்வாங்கி, இதனாலேயே மேலே, கீழே மற்றும் அதனைச் சுற்றிலும் வீங்கிய தோற்றத்தை அது பெற்றிருப்பதையும் கவனிக்கலாம்.
இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இப்படியெல்லாம் அட்டகாசமான conceptகளைப் படங்களில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. கடைசியாக அப்படிப் பார்த்து ரசித்தது Event Horizon.
 
சரி. இவற்றையெல்லாம் எடுத்துவிட்டுப் பார்த்தால், ஒரு படமாக இண்டர்ஸ்டெல்லார் எப்படி? அதைப்பற்றி நாளை வெளிவரும் இரண்டாவது பகுதியில் கவனிக்கலாம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே திரைக்கதை அலுப்பாக உள்ளது என்று சொல்லியிருக்கிறேன். ஆனாலும் படத்தைப் பற்றிச் சொல்ல இன்னும் பல விஷயங்கள் உள்ளன (உதா: டாரண்டினோ இந்தப் படத்தை டர்க்காவ்ஸ்கி படம் போல உள்ளது என்று சொன்னது சரியா? ஸ்டான்லி க்யுப்ரிக்கின் 2001: ஸ்பேஸ் ஆடிஸ்ஸி படத்தை நோலன் மிஞ்சிவிட்டார் என்று இணையத்தில் படித்தோமே? அதெல்லாம் உண்மையா?) இதிலேயே அதையும் எழுதியிருந்தால் கட்டுரை கொட்டாவி வரவழைக்கும் விதமாக மாறியிருக்கும் (ஆல்ரெடி அப்படித்தானோ?).
தொடரலாம்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் இண்டர்ஸ்டெல்லார் படத்தின் சில முக்கியமான ஸ்பாய்லர்களைப் பார்த்தோம். அந்த ஸ்பாய்லர்களிலேயே, இன்னும் சில விஷயங்களைப் பற்றி ஆடியன்ஸுக்குக் குழப்பம் இருக்கிறது என்பது ஃபேஸ்புக் கமெண்ட்களில் தெரிந்தது. அவற்றையும் முதலில் பார்க்கலாம். பின்னர் படத்தைப் பற்றிக் கவனிப்போம்.
இங்கு ஸ்பாய்லர்கள் தொடங்குகின்றன. கட்டுரையின் இறுதிவரை ஸ்பாய்லர்கள்தான்.
1. கருந்துளைக்குள் விழும் கூப்பர் திடீரென்று டெஸராக்டுக்குள் இருக்கிறான். அவனை அங்கு வரவைத்தது, விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் அப்போதைய மனிதர்களைவிடவும் பலமடங்கு முன்னேறிய, ஐந்து பரிமாணங்களில் வாழக்கூடிய எதிர்கால மனிதர்கள் என்று கூப்பரே சொல்கிறான். அப்படியென்றால், அந்த எதிர்கால மனிதர்களும் ஒரு காலத்தில் படம் நடக்கும் சூழலில்தான் இருந்திருப்பார்கள். அப்போது அவர்கள் எப்படி அழிவிலிருந்து தப்பினார்கள்?
இது ஒரு infinite loop என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம். அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன். அவர்களுக்கும் இப்படித்தான் அவர்களுக்குப் பிறகு வருபவர்களிடம் இருந்து உதவி கிடைத்திருக்கும். இப்படியே அந்த லூப் போய்க்கொண்டு இருக்கும். இதற்கு ஆதி காரணம் என்ன என்பது நோலனால் விளக்கப்படவில்லை. நாமே எதைவேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம். எல்லாவற்றுக்கும் முதன்முறையாக இந்த சம்பவம் நடந்திருக்கும்போது எதுவோ ஒரு சம்பவம் எதேச்சையாக நடந்து, அதன்மூலம் அவர்கள் ஈர்ப்புசக்தியைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொண்டிருக்கலாம்.
2. கருந்துளைக்குள் விழுந்த கூப்பர் ஏன் அழியவில்லை?
ஏனென்றால், அவன் அழியக்கூடாது என்பது வருங்கால மனிதர்களின் விருப்பம். அப்போதுதான் அவனுக்குக் கிடைத்த கருந்துளைக்குள்ளிருக்கும் தகவல்களை அவனது மகள் மர்ஃபிக்கு அவன் தெரிவிக்க முடியும். அதனால்தான் பூமியில் இருந்து மனிதர்கள் பிற கிரகங்களுக்குச் சென்று வாழமுடியும். எனவே அவன் விண்கலத்தில் இருந்து எஜக்ட் ஆகி வெளியேறியதும் டெஸராக்டுக்குள் கூப்பர் வைக்கப்படுகிறான். அங்கே அவனது கடிகாரத்துக்குள் தகவல்கள் அவனால் வைக்கப்பட்டு அதை மர்ஃபி புரிந்துகொண்டதும் அந்த டெஸராக்டுக்குள் கூப்பர் வைக்கப்பட்ட வேலை முடிந்துவிட்டதால் அது மெல்ல அழிகிறது. உடனேயே கூப்பர் அங்கிருந்து சனி கிரகத்தின் அருகே இருக்கும் வார்ம்ஹோலின் அருகில் விடப்படுகிறான். பூமியில் இருந்து வருபவர்களால் காக்கப்படுகிறான்.
இவைதான் படத்தின் இரண்டு மிகப்பெரிய சந்தேகங்கள் என்று புரிந்தது. இப்போது படத்தைப் பற்றிப் பார்ப்போம்.
இண்டர்ஸ்டெல்லார் போன்ற, விஞ்ஞானபூர்வமான கருத்துகளை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் இதற்குமுன்னர் ஹாலிவுட்டில் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன. ஸ்டான்லி க்யுப்ரிக் எடுத்த 2001: A Space Odyssey படத்தைவிடவும் ஒரு அட்டகாசமான உதாரணம் வேண்டாம். இன்னும் ஃபாண்டஸிகளான Back to the Future Trilogy, Independence Day, Men in Black Trilogy, Star Wars series, Star Trek, Cowboys & Aliens, Abyss, Alien Series, Predator, Prometheus போன்ற எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. ஆனால், இவையெல்லாமே கற்பனைகள் அதிகமாக நுழைக்கப்பட்டு, நிஜமான விஷயங்கள் எதுவும் (பெரும்பாலும்) இல்லாத படங்கள். பெரும்பாலும் துல்லியமான, நிஜமான விஞ்ஞானமும் நல்ல திரைக்கதையும் இணையும் படங்கள் கொஞ்சம் குறைவுதான்.  பிற வழக்கமான மசாலா படங்களில் எல்லாம் படத்தில் வருபவர்கள் கண்டபடி துள்ளி விளையாடுவார்கள் (அது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்றாலும் விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு துளி அறிவு கூட இல்லாமல் வேண்டுமென்றே மசாலா காட்சிகள் அவற்றில் இடம்பெறும்).
உடனே, ‘இண்டர்ஸ்டெல்லார்’ படத்தில் அப்படிப்பட்ட மரன மசாலா காட்சிகள் இல்லையா? என்று கேட்டால், அவசியம் இதில் ஏராளமான – பக்கா ஹாலிவுட் கமர்ஷியல் மசாலாக்கள் இருக்கின்றன. அந்தக் காட்சிகளை மட்டும் வைத்துப் பார்த்தால் இண்டிபெண்டன்ஸ் டே படத்துக்கும் இண்டர்ஸ்டெல்லாருக்கும் வித்தியாசங்கள் இல்லை என்றுதான் சொல்வேன். உதாரணமாக, முன்பின் ராக்கெட்டில் பயணித்த அனுபவமே இல்லாத கூப்பர், முதன்முறையாக அந்தப் பயணத்தில் இடம்பெற்று, ராக்கெட்டை ஏதோ ரிமோட் கன்ட்ரோல் விமானம் போல இஷ்டத்துக்குச் செலுத்துகிறான். படத்தில் ஒரு இடத்தில் Dr. Mann இறந்தபின்னர் இவர்களது விண்கலத்தை ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் மேன்யுவலாகக் கூப்பர் இணைக்கும் காட்சியில் தியேட்டரே கைதட்டலால் அதிர்வதை இப்படத்தைப் பார்த்தவர்கள் கவனித்திருக்கலாம். அதெல்லாம் நிஜத்தில் சாத்தியமே இல்லாத மசாலாக்களே. போலவே திடீர் திடீரென்று பயணத்தைப் பற்றிய முடிவுகளைக் கூப்பர் எடுப்பது, கருந்துளைக்குள் கூப்பரின் கலம் ஈர்க்கப்படும்போது கலத்துக்கு எதுவுமே ஆகாதது (மெதுவாகக் கலம் சூட்டில் பிய்வதைக் காட்டுகிறார்கள். உண்மையில் ஒரே நொடியில் கலம் பிய்க்கப்பட்டு அழிந்துவிடும்) போன்றவையெல்லாம் வேண்டுமென்றே மசாலாக்களாக எழுதப்பட்ட காட்சிகள்தான்.  இப்படிச் சில காட்சிகள் இருந்தால்தான் ஆடியன்ஸைக் கவர முடியும் என்பது நோலனின் கருத்து. இப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் 2001:A Space odysseyல் இருக்காது. நமக்கெல்லாம் மசாலாக் காட்சிகள் இருந்தால்தான் படம் வேகமாக ஓடும் என்று தோன்றுவதால், பலருக்கும் அப்படம் மிகவும் மெதுவாகத்தான் செல்லும். இருந்தாலும், இந்த இரண்டு படங்களையும் ஒப்பிடவே முடியாது என்பதால் இதை எழுதினேன். அவசியம் க்யுப்ரிக்கின் படம்தான் (இப்போதும்) சிறந்தது. அதை மிஞ்சும் படம் இன்னும் வரவில்லை.
‘எங்கெல்லாம் என் படத்தில் ஆடியன்ஸை ஏமாற்றினேன் என்பது எனக்கே நன்றாகத் தெரியும். படம் முழுக்க என்னுடன் இருந்த கிப் தார்னிடமும் (விஞ்ஞான ஆலோசகர்) அவைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.. ஆனால் இப்போது இணையத்தில் அது தவறு இது தவறு என்றெல்லாம் எழுதுகிறார்களே.. அவையெல்லாம் இல்லை. அவை என்ன என்று தெரிய நீங்கள் கிப் தார்னின் புத்தகத்தை ஒருமுறையாவது படிக்கவேண்டும்’ என்பது நோலனின் பதில். இந்த பதில் ஏன் என்றால், படத்தில் வரும் தண்ணீர் சூழ்ந்த கிரகத்தில் ஒரு மணி நேரம் ஆகிறது என்பது பூமியில் ஏழு வருடங்கள் என்ற கருத்தைத் தவறு என்று இணையத்தில் விமர்சிக்கும் சில பதிவுகள் தவறு என்ற நோலனின் கருத்தைச் சொல்வதற்கே. அது துல்லியமாகக் கணிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்கிறார் நோலன்.
அடுத்ததாக, படத்தில் ஆரம்பம் முதல் கொடுக்கப்படும் க்ளூக்கள் (மர்ஃபியின் நூலகம் அதிர்வது, Stay என்ற மோர்ஸ் கோட் உருவாவது, புத்தகங்கள் விழுவது) சற்றே செயற்கையாக இருந்தன. எப்படியும் பின்னால் இவை விளக்கப்படப்போகின்றன என்பது ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டாலும், இவை நீண்டுகொண்டே சென்றது கொஞ்சம் அலுப்பையே ஏற்படுத்தியது. போலவே பயிர்கள் அழிகின்றன; ஒவ்வொரு பயிராக ஒவ்வொரு வருடமும் அழிகிறது; புழுதிப்புயல் போன்றவையெல்லாம் நம்பும்படி இல்லை. அவை மிகவும் அவசரமாகக் காட்டப்பட்டு, கூப்பர் விண்வெளிக்குப் பறக்கும் காட்சியை நோக்கியே நம்மைக் கொண்டுசெல்வதால், திரையில் எதுவோ ஓடிக்கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தையே ஏற்படுத்தின. அடுத்ததாக இந்திய விமானம் ஒன்றைக் கூப்பர் கட்டுப்படுத்துவது கதைக்குத் தேவையே இல்லாத காட்சி. முதலில் லீக் ஆன திரைக்கதையில் இது ஒரு முக்கியமான காட்சி. காரணம், அவன் இதற்கு அடுத்து ஒரு தீவுக்கு இதைப்போன்ற கைவிடப்பட்ட இயந்திரங்களைத் தேடிச் செல்வான். அதேபோல், அந்த வெர்ஷனில் இது ஒரு சைனீஸ் விமானம். அதற்கும் படத்தின் பின்னால் வரும் காட்சிகளுக்கும் நேரடித் தொடர்பு இருந்ததால் அந்தக் கட்சி தேவையானதாக இருந்தது. ஆனால் இந்தத் திருத்தப்பட்ட திரைக்கதையில் இந்தக் காட்சிக்கு எந்தத் தேவையும் இல்லை. எனவே இவையெல்லாம் அலுப்பையே ஏற்படுத்தின.
படத்தின் ஆரம்பம் முழுக்கவே கூப்பர் விண்வெளிக்குப் பறக்கும் காட்சியை நோக்கியே இருக்கிறது. முடிந்தவரை வேகமாக அந்தக் காட்சி வந்துவிடவேண்டும் என்று நோலன்கள் நினைத்திருக்கலாம். இதனால், கதாபாத்திரங்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் எதுவுமே தெரிவதில்லை. கூப்பர் எப்படிப்பட்டவன்? அவனுக்கும் அவனது மகன் டாமுக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது? அவனுக்கு விவசாயம் மட்டுமேதான் முழுநேர வேலையா? இயந்திரங்களையும் கூப்பர் உருவாக்குகிறான். இருந்தாலும், திடீரென்று அவன் ஒரு ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்குச் செல்வது துளிக்கூட நம்பும்படி இல்லை. அட்லீஸ்ட் அவன் ஒரு பைலட் என்பதையாவது இன்னும் தெளிவாக, பின்னால் அவன் ராக்கெட்டில் போகப்போகும் காட்சியை ஜஸ்டிஃபை செய்யவாவது காட்டியிருக்கலாம் என்று தோன்றியது. மேத்யூ மெக்கானஹி நல்ல நடிகர்தான். ஆனால் அவருக்கு நடிக்க எந்த வாய்ப்புமே தரப்படவில்லையே? நோலனின் பிரம்மாண்டமான theme, கதையின் பிற அம்சங்கள் ஆகியவைதான் மெக்கானஹியை முந்திக்கொண்டு தெரிகின்றன. அதுதான் நோலனின் பிரச்னையும் கூட. இன்ஸெப்ஷனில் லியனார்டோ டி கேப்ரியோவுக்கு நடிக்க எங்கே வாய்ப்புத் தரப்பட்டது? நோலனின் puppet போன்றுதான் படம் முழுக்க அவர் வந்தார். அதுவேதான் க்ரிஸ்டியன் பேலுக்கும் – Dark Knight Seriesன் முதல் படத்தைத் தவிர, பாக்கியிருக்கும் இரண்டு படங்களிலும் அவர் நடித்தே நான் பார்க்கவில்லை. மொமெண்டோ, இன்ஸோம்னியா, ப்ரஸ்டீஜ் (ஏன்? டூடில்பக்கில் கூட) கதாநாயகர்கள் நன்றாகவே நடித்திருப்பார்கள். ப்ரஸ்டீஜ்ஜோடு (பேட்மேன் பிகின்ஸையும் சேர்த்துக்கொள்ளலாம்) கதாநாயகனின் personal குணாதிசயங்களை நாம் காண்பது போயே போய்விட்டது.
அடுத்ததாக, படத்தின் வசனங்கள். பல இடங்களில் செயற்கையான வசனங்கள் உள்ளன. இவை எழுதப்பட்ட காரணம், படத்தின் Themeஆக Fourth Dimension என்ற விஷயம் இருக்கிறது. அது பின்னால் வரப்போகிறது என்று ஆடியன்ஸுக்குக் கட்டியம் கூறுவதற்காகவே. இதனாலேயே அவை வழவழா கொழகொழா என்று ஆகிவிடுகின்றன. விண்கப்பல் கிளம்பியதும் கூப்பரும் அமேலியாவும் பேசிக்கொள்ளும் எல்லாக் காட்சிகளிலுமே இப்படிப்பட்ட – கேட்பதற்கு எதுவோ அர்த்தம் பொதிந்ததாக இருந்தாலும்- அவற்றில் எந்த அர்த்தமும் இல்லாமல், 4th dimension மட்டுமே இலக்காகக் கொண்ட வசனங்கள் – இருக்கின்றன. உதாரணமாக ஒரு வசனம் இங்கே.
Love is the one thing that transcends time and space (Thanks – IMDB)
இது அமேலியா கூப்பரிடம் சொல்வது. கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் இது எப்படி சாத்தியம்? காலம் மற்றும் வெளி ஆகிய இரண்டையும் தாண்டி அன்பு அல்லது காதல் இருக்க முடியுமா? இந்த வசனத்தைக் கவனித்தால், பின்னால் அமேலியா வேறு ஒரு கிரகம் செல்லப்போகிறாள்; அவளைத் தேடிக் கூப்பரும் கிளம்பப்போகிறான்; அதற்கு ஒரு justification வேண்டும்; எனவே முதலிலேயே இப்படி ஒரு வசனத்தை வைத்துவிடுவோம் என்று யோசித்தே வைத்ததுபோல இருக்கிறது (நோலன்களைக் கேட்டால், கூப்பர் தனது மகள் மர்ஃபிமேல் பல வருடங்களாக அன்பைத் தேக்கி வைத்திருக்கிறான் அல்லவா? அது காலத்தையும் வெளியையும் தாண்டிய அன்புதானே? என்று வாதிடக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட contextடில் இந்த வசனம் வரவில்லை. ’காதல்’ என்ற கண்டக்ஸ்டில்தான் படத்தில் வருகிறது).
ஆனால், இவையெல்லாம் தாண்டி எனக்குப் பிடித்தவை இரண்டு விஷயங்கள் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். வார்ம்ஹோலும் கருந்துளையுமே அவை. இவ்வளவு realisticஆக நான் இதுவரை எங்குமே இவற்றைப் பார்த்ததில்லை. வார்ம்ஹோல் என்பது செயற்கை வஸ்து. இயல்பில் அவை உருவாவதில்லை. எனவே அவற்றையாவது இஷ்டத்துக்குக் கற்பனை செய்யலாம். ஆனால் கருந்துளை என்பது நிஜத்தில் இருந்துகொண்டிருப்பது. நமது பால்வீதியின் மத்தியிலேயே ஒரு மிகப்பெரிய கருந்துளை உண்டு என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. மட்டுமில்லாமல் இன்னும் பலப்பல கேலக்ஸிகளின் நடுவேயும் கருந்துளைகள் உண்டு என்றே சொல்கிறார்கள். எனவே நிஜத்தில் இருக்கும் ஒரு வஸ்து திரையில் எப்படிக் காண்பிக்கப்படுகிறது என்பதில் ஆர்வம் இருந்தது. படத்தில் வரும் வண்ணமயமான கருந்துளை, நிஜமாகவே கிட்டத்தட்ட ஒரு வருட உழைப்பில் உருவானது. கிப் தார்ன் பல்வேறு equationsகளைப் பற்றி விளக்கியும் ஆராய்ந்தும் தனது முடிவுகளை ஸிஜி டீமிடம் தந்திருக்கிறார். அவற்றை வைத்துக்கொண்டு அவர்கள் உருவாக்கியதுதான் இந்தக் கருந்துளை. இதனை ஸிஜியில் சிமுலேட் செய்யும்போது, கிப் தார்ன் எதிர்பாராத வகையில் கருந்துளையின் மேலே, கீழே மற்றும் அதைச் சுற்றியும் இருக்கும் ஸ்பேஸ் என்பது உள்ளிழுக்கப்படும்போது வண்ணச் சிதறல்கள் தானாகவே ஒளிவட்டம் போலத் தோன்றின. படத்தில் கவனித்தால், கருந்துளையைச் சுற்றியிருக்கும் இந்த ஸ்பேஸ், வேகமாக உள்ளிழுக்கப்படுவது தெரியும். இவற்றை வைத்துக்கொண்டு குறைந்தபட்சம் இரண்டு விரிவான பேப்பர்களை ப்ரஸண்ட் செய்யப்போவதாகவும் கிப் தார்ன் சொல்லியிருக்கிறார்.
இதற்கு முன்னர் இப்படிப்பட்ட வார்ம்ஹோல்களைக் கொஞ்சமாவது உண்மையாகக் காட்டிய படம், Event Horizon. ஆனால் அதில் வார்ம்ஹோல் மற்றும் கருந்துளை ஆகியவை நன்றாகக் காட்டப்பட்டிருக்காது. (X Men: Days of the Future Past, Harry Potter and the Prisoners of Azkaban போன்ற படங்களில் காட்டப்படுவதெல்லாம் வார்ம்ஹோல்தான் என்றாலும், விண்வெளி, வார்ம்ஹோலிலுள் பயணித்தல் ஆகிய விஷயங்களை அவை காட்டவில்லை. அவை வெறும் ஃபாண்டஸிகளே).
இதுவரை வந்திருக்கும் நோலன் படங்களில் செண்ட்டிமெண்ட் குறைவு. மெமெண்டோவில் கொஞ்சமும், இன்ஸெப்ஷன், பேட்மேன் சீரீஸில் கொஞ்சமுமே இருக்கும். செண்ட்டிமெண்ட்டை விட, திரைக்கதையை நம்புபவர் நோலன். ஆனால் இதில் செண்ட்டிமெண்ட் அதிகம். கூப்பருக்கும் மர்ஃபிக்கும் இடையேயான பல காட்சிகளில் செண்டிமெண்ட் ஆறாக ஓடுகிறது. ஆனால் அது செயற்கையாக இல்லை. கூப்பர் விண்வெளியில் மாட்டிக்கொண்டபின்னர் அவனது மகன் டாம் அனுப்பிய வீடியோக்களைப் பார்க்கையில், ஆடியன்ஸின் மனம் கொஞ்சமாவது அசையாமல் இருக்காது. தனிமை – இனி எப்போதும் அவர்களைப் பார்க்க இயலாது – டாம் வளர்ந்து பெரியவனாகிவிடுதல் போன்ற பல உணர்வுகள் அதில் உள்ளன. அதைப்போலவேதான் மர்ஃபி முதன்முறையாகக் கூப்பருடன் பேசுவதும்.
இதைத்தவிர, படத்தில் தேவையில்லாத காட்சிகள் பல உள்ளன. Dr. Mann வரும் அத்தனை காட்சிகளும் அப்படிப்பட்டவையே. இப்படித்தான் நடக்கப்போகிறது என்பது அவர் பேசும் வசனங்களிலேயே புரிந்துவிடுகிறது. காரணம் அவருக்கும் நோலன்கள் கூப்பரும் அமேலியாவும் பேசுவதைப் போலவே அழகான – ஆனால் அர்த்தமே இல்லாத வசனங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
டார்க் நைட் ரைஸஸ் படத்தில் க்ளைமேக்ஸில் டாலியாவை யாரென்று ஆடியன்ஸ் தெரிந்துகொள்ளும்போது அது ஒரு பயங்கரமான ட்விஸ்ட்டாக இருக்கும் என்று நோலன்கள் நினைத்துத்தான் அப்படி வைத்தனர். ஆனால் பேட்மேன் ரசிகர்களுக்குக் கடைசிவரை ட்விஸ்டே படத்தில் சிக்கவில்லை. அவர்களுக்கு டாலியா யாரென்று ஏற்கெனவே தெரியுமே? அதைப்போல்தான் இதிலும் வசனங்கள் மூலமாகப் பின்னால் வரும் காட்சிகளுக்குக் க்ளூ கொடுக்கலாம் என்று நோலன்கள் யோசித்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. இது ஒரு பழைய திரைக்கதை டெக்னிக். இதை மைக்கேல் பே செய்யலாம். நோலன் செய்யக்கூடாது. இருந்தாலும், நோலன் இப்போது ஒரு டிபிகல் ஹாலிவுட் இயக்குநர் என்பதால் அவரும் இதைச் செய்ய உரிமை இருக்கிறது.
படத்தின் க்ளைமேக்ஸில் கூப்பரின் டெஸராக்ட் அழியும்போது அவன் அமேலியாவுடன் கைகுலுக்குகிறான் (அல்லது அவளது கையைத் தொடுகிறான்). படத்தில் அமேலியாவின் கையை ஒரு அலை போன்ற அமைப்பு தொடுவதை ஆரம்பத்திலேயே பார்க்கிறோம். ‘That, is the first Contact’ என்று அமேலியா அவளுடன் இருக்கும் கூப்பரிடம் சொல்கிறாள். கூப்பர் டெஸராக்டில் இருந்து சனி கிரகத்துக்குப் பக்கத்தில் வருங்கால மனிதர்களால் அனுப்பப்படும்போதுதான் இது நடக்கிறது. இதுவும் மேலே சொன்ன ’க்ளூ’ காட்சிதான்.
எனவே, படத்தில் எக்கச்சக்க ஹாலிவுட் மசாலாக் காட்சிகள் உள்ளன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் டார்க் நைட் ரைஸஸ் படத்தில்கூட இத்தனை டிபிகல் காட்சிகள் இல்லை என்பது புரிகிறது. இருந்தாலும், கருந்துளையையும் வார்ம்ஹோலையும் தத்ரூபமாகக் காட்டி, அதனால் படம் பார்ப்பவர்களின் ஆவலைத் தூண்டிவிட்டு அவர்களை இயற்பியலின் பக்கம் திருப்பிய நோலனின் திறமையைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். கிப் தார்ன், ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்ற பெயர்கள் இப்போது இணையத்தில் மிக அதிகமாக அடிபடுகின்றன. அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் படிக்கப்படுகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நானுமே இண்டர்ஸ்டெல்லார் திரைக்கதையை ஃபிப்ரவரியில் படித்தபின்னர்தான் மறுபடியும் இயற்பியலின் பக்கம் வந்தேன்.
படத்தில் சில பதிலில்லாத கேள்விகளும் உள்ளன.
ஏற்கெனவே பார்த்த கேள்வி. வருங்கால மனிதர்கள்தான் கூப்பருக்கு உதவுகிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு இந்தச் சம்பவங்கள் pastடில் நடந்தபோது யார் உதவியிருப்பார்கள்?
அமேலியா, படத்தின் இரண்டாம் பாதியில் கூப்பர் டஸராக்டில் கடிகாரத்தில் கருந்துளையின் உள்ளிருந்து கிடைத்த தகவல்களைப் பதியும்போது, தனது பழைய நூலகத்திற்கு வந்தால்தான் தனக்கு ஏற்ற பதில் கிடைக்கும் என்பது மர்ஃபிக்கு எப்படித் தோன்றுகிறது? படத்தில் மிகத் தற்செயலாகவே அவளுக்குத் தோன்றுவதாக இருக்கும். படத்தின் மிக முக்கியமான சங்கதி இப்படித் தற்செயலாகச் சொல்லப்படுவது நெருடல்தானே?
வருங்கால, fifth dimension மனிதர்கள்தான் தனக்கு உதவுகிறார்கள் என்பதும் ஒரு ஃப்ளாஷ் போல கூப்பரின் மூளையில் தோன்றுவதுதான். அது எப்படி? படத்தின் ஆரம்பத்தில் இருந்தே கூப்பர் இப்படிப்பட்ட முக்கியமான விஷயங்களை அன்றாட வாழ்க்கையில் கடைக்குச் சென்று டீ சாப்பிடுவது போலவே பேசிக்கொண்டே இருக்கிறான். வாழ்க்கை முழுதும் ஆஸ்ட்ரனாட்களாக இருக்கும் அமேலியா போன்றவர்களையே அதிரடியான யோசனைகளை வானில் சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறான். இதெல்லாம் எப்படி சாத்தியம்?
இறுதியில் அமேலியா, அவர்கள் செல்ல இருந்த மூன்றாவது கிரகத்திலோ அல்லது அதன் அருகிலோ இருக்கிறாள். அங்கே யாருமில்லை. அப்படியென்றால் கூப்பருக்குப் பிறகு யாரும் அங்கே செல்லவில்லையா? கூப்பரே சனி கிரகத்துக்கு அருகே இருக்கும் கூப்பர்’ஸ் ஸ்டேஷனில்தானே இருக்கிறான்? அது ஏன்? கூப்பரேதான் மறுபடியும் அவளைத் தேடிச்செல்லவேண்டும் என்பதாலா?
பல கேள்விகள். நோலனுக்குத்தான் பதில் தெரியும்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இது சராசரி மசாலாவாக ஆகியிருக்கவேண்டிய படம். ’க்ரிஸ்டோஃபர் நோலன்’ என்ற tag ஒட்டிக்கொண்டிருப்பதால் மட்டுமேதான் இப்போது பேசப்படும் படமாக ஆகியிருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. அப்படி இல்லை என்று மறுப்பவர்கள் Contact படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அது ஏன் பேசப்படவில்லை? அதுவும் கிட்டத்தட்ட இதே conceptதான். கூடவே, இதே படத்தை மைக்கேல் பே எடுத்திருந்தால் – திரைக்கதையின் ஒவ்வொரு வரியுமே மாறாமல் அச்சு அசலாக அதேபோல் இருந்திருந்தாலும் கூட- நாம் பார்த்திருப்போமா? பார்த்திருந்தாலும் இப்படியெல்லாம் பேசியிருப்போமா?
இது நோலனுக்கு நன்றாகத் தெரியும். தனது பெயரை எப்படி மார்க்கெட்டிங் செய்யவேண்டும் என்பது நோலனுக்கு அத்துபடி. எனவே, அடுத்த நோலன் படத்தையும் இப்படித்தான் நாம் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் படத்தின் திரைக்கதையிலும் எக்கச்சக்க டிபிகல் காட்சிகள் அவசியம் இருக்கும். இருந்தாலும், இண்டர்ஸ்டெல்லாரில் வந்த கருந்துளை & வார்ம்ஹோல் போல வேறு எதையாவது நோலன் வைத்திருப்பார். இன்ஸெப்ஷனின் nested dream loop போல. ப்ரஸ்டீஜ்ஜின் இரட்டையர்கள் போல. எனவே அந்தப் படமும் இப்படியே பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பத்தில் நாம் கவனித்த ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கும் இண்டர்ஸ்டெல்லாருக்கும் அதுதான் வித்தியாசம். உதா: ப்ராமிதியஸ் படத்தையும் இண்டர்ஸ்டெல்லாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதிலும் மனித குலத்தின் துவக்கம் என்ற விஷயம் கையாளப்படுகிறது. அது யோசித்துப் பார்க்கச் சுவாரஸ்யமானதுதான். இருந்தாலும் அந்தப் படத்தில் பிற ஏலியன் படங்களில் இருக்கவேண்டிய அனைத்து டெம்ப்ளேட் காட்சிகளும் இருந்தன. படமும் மிகவும் அலுப்பானதாக இருந்தது.  அங்கேதான் நோலன் கொஞ்சம் வித்தியாசப்படுகிறார்.
இண்டர்ஸ்டெல்லார் படத்தைப் பார்த்ததும் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் எழுவது இயல்பு. முதலில் இந்த டாக்குமெண்ட்ரியைப் பாருங்கள். பின்னர் கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.
 
References:
1. இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இதற்கு முந்தைய அனைத்துக் கட்டுரைகள்
பி.கு – ஹான்ஸ் ஸிம்மரின் இசை பற்றிச் சொல்ல எதுவுமில்லை. நோலனை மிகவும் நெருக்கமாகப் பின்தொடர்ந்துள்ளார் ஸிம்மர். படத்துக்கு ஏற்ற இசை.  எனக்குப் பிடித்தது.
 
 

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டிலும் கலக்கும் 'இன்டர்ஸ்டெல்லார்'

interstellar_2206073f.jpg
இன்டர்ஸ்டெல்லார் படத்தில் ஒரு காட்சி | கோப்புப் படம்

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'இன்டர்ஸ்டெல்லார்' திரைப்படம், முதல் வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 1.28 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

ஹாலிவுட்டில் 'மெமென்டோ'வைத் தொடர்ந்து பிரபலமான கிறிஸ்டோபர் நோலன், 'இன்செப்ஷன்' மற்றும் 'டார்க் நைட்' படங்களின் மூலம் உலகளவில் பெயர் பெற்றார். தமிழகத்தில், ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூனைப் போல நோலனுக்கும் கணிசமான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

நோலனின் சமீபத்திய படமான இன்டர்ஸ்டெல்லார், தமிழ்நாட்டில், வெளியான முதல் வாரத்தில் 1.28 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை கண்காணித்து வரும் வல்லுநர் த்ரிநாத் கூறுகையில், “நோலனின் முந்தைய படங்களும் தமிழகத்தில் நன்றாக ஓடியிருக்கின்றன. இன்டர்ஸ்டெல்லார் படத்தின் மூலம், இதுவரை தமிழகத்தில் வெளியான ஆங்கிலப் படங்களின் வசூல் சாதனைகளை, முதல் வாரத்தில் நோலன் முந்தியுள்ளார்.” என்றார்.

மனிதர்கள் வாழ, பூமியைத் தவிர வேறு கிரகங்கள் இருக்கிறதா என்பதை சில விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமான இன்டர்ஸ்டெல்லார், உலகம் முழுவதும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, வசூலிலும் அசத்துவது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/cinema/hollywood/தமிழ்நாட்டிலும்-கலக்கும்-இன்டர்ஸ்டெல்லார்/article6602788.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.