Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் சவாலாகவுள்ளது: ஐங்கரநேசன்

Featured Replies

யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகிவிட்டது, வடக்கு மாகாண சபை பொறுப்பேற்று ஒரு வருடங்கள் கடந்துவிட்டது. விவசாயப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கட்டியெழுப்புவதென்பது எமக்கு பெரும் சவாலாகவே உள்ளதாக வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். 
 
வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இடம்பெற்றது. அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இறுதியாக எடுத்துக்கொள்ளப்பட்;ட விவசாய அமைச்சுக்கு நிதி தொடர்பான விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து கூறுகையில், 
 
வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய விவசாயம் மூன்று தசாப்த காலப் போரின் விளைவாகச் சீர்குலைந்து போயுள்ளது. போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டது, வடக்கு மாகாணசபை பொறுப்பேற்று ஒரு வருடமாகிவிட்டது இந்தநிலையில் விவசாயப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கட்டியெழுப்புவதென்பது எமக்குப் பெரும் சவாலாகவே உள்ளது.
 
இங்கே காங்கேசன்துறை முனை தொடக்கம் வடக்கின் எல்லை கிராமங்களான கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் வரை பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள வளம்மிக்க விவசாய பூமி படை முகாம்களுக்கெனவும் குடியேற்றங்களுக்கெனவும் அரசால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. எல்லை காவலர்கள் இல்லாத காரணத்தால் நிலப்பறிப்பு இன்றும் நிகழ்ந்தேறி வருகிறது. இந்தமண் வெறுமனே பயிர் விளையும் வயல்கள் இல்லை. எமது விவசாயப் பெருங்குடிகளைப் பொறுத்த வரையில் பொன் விளையும் பூமி. 
 
மற்றைய எல்லா தொழிற்துறையினருடனும் ஒப்பிடும்போது, விவசாயிகள் பொன்னோடும் பொருளோடும் சீரும் சிறப்புமாக ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள். இன்று, பெரும்பாலான விவசாயிகள் மீள முடியாத அளவுக்குக் கடன் சுமையால் அழுந்திக்கொண்டிருக்கிறார்கள். அநேகமானோர் விவசாயத்தை கைவிட்டு தினக்கூலிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
 
பொதுமக்களின் விளைநிலங்கள் மாத்திரம் அல்ல, வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உரித்தான நிலபுலங்கள் கூட படையினர் வசம் உள்ளன, வடக்கின் விவசாயத்தை மேம்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பை நல்கிவந்த வட்டக்கச்சி விதை உற்பத்தி பண்ணை, இரணைமடு சேவைக்கால பயிற்சி நிலையம், கனகராயன்குளம் தாய்த்தாவரப் பண்ணை, புளியங்குளம் விவசாய போதனாசிரியர் அலுவலகம், மன்னார் விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் உட்பட ஏறத்தாழ 425 ஏக்கர் பரப்பளவு படைத்தரப்பின் ஆளுகையின் கீழேயே உள்ளது.
 
விடுதலைப்புலிகள் தங்களது காலத்தில் முல்லை மாவட்டத்தில் முத்தையன்கட்டிலும், தேராவிலிலும், மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளத்திலும் பண்ணைகளைத் திறம்பட நிர்வகித்து வந்தார்கள். திரைகடலோடி அரிய பயிர்த் திரவியங்கள் பலவற்றைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினார்கள். இன்று, இந்தப் பண்ணைகளையும், கறையான் புற்றெடுக்க பாம்புகள் குடிகொண்ட கதையாக படையினரே ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
எமது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழுள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்களான முத்தையன்கட்டு குளத்தினது நீரேந்து பரப்பிலும், விசுவமடுக் குளத்தினது நீரேந்து பரப்பிலும் எமது அனுமதியின்றி சட்டத்துக்கு முரணாக படையினர் பெரும் பண்ணைகள் அமைத்து பயிர் செய்து கொண்டிருக்கிறார்கள். 
 
எமது மக்களின் விளைநிலங்களிலும், மாகாண அரசுக்கு உரித்தான நிலங்களிலும் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் படையினர் உற்பத்திகளை சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு நிலக்குத்தகை இல்லை, வங்கியில் கடன்பட்டு மாதாமாதம் எங்களது விவசாயிகள் போன்று வட்டி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இதனால், சந்தை மதிப்பை விடக் குறைந்த விலைக்கு வந்தது இலாபம் என்று விற்று வருகிறார்கள். இதனால் எமது விவசாயிகள் தங்களது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
 
படையினர் எமது நிலங்களில் பயிர் செய்துகொண்டு மாத்திரம் இருக்கவில்லை. எமது பசுக்களில் பால் கறந்து கொண்டும் இருக்கிறார்கள். மன்னர் ஆட்சிக்காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுக்கும்போது முதலில் அந்நாட்டின் ஆ நிரைகளைக் கவர்ந்து செல்வார்கள் என்று இலக்கிப் பதிவுகள் உள்ளன. 
 
அது இங்கும் நிகழ்ந்தேறியிருக்கிறது. கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்கிய வன்னிப் பெருநிலப்பரப்பை இராணுவம் முற்றுகையிட்டு மக்களை இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பிய பின்னர், நல்லின மாடுகளையும் ஆடுகளையும் தங்கள் முகாம்களுக்குக் கவர்ந்து சென்றுள்ளார்கள். மீள்குடியேறிய மக்களிடம் இவை முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. அது மாத்திரம் அல்;ல இராணுவம் கால்நடைகளின் கடத்தலுக்கும் துணைபோகின்றது.
 
பொதுமக்கள் யாரேனும் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு தனது ஒரு கால்நடையையேனும் கொண்டு செல்வதாக இருந்தாற்கூட, கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்திடம் முறையான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். அம்மாடுகளின் காதுகளில் கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தின் இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் எடுத்துக் செல்லப்படின் அது கடத்தலாகவே கருதப்பட்டு அப்பொதுமகன் தண்டிக்கப்படுகிறார். கால்நடைத் திருட்டைத் தடுக்கவும், கால்நடைகளிடையே தொற்றுநோய் பரவாமல் இருக்கவுமே இந்த ஏற்பாடு.
 
ஆனால், இங்கு எமது கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல், எங்கிருந்து எப்போது? யாரால்? எடுத்து வரப்பட்டன என்று தெரியாமல், நூற்றுக்கணக்கான பசுக்கள் அண்மையில் இராணுவத்தின் பங்கேற்புடன் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
 
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் வடக்கில் தேவைக்கு அதிகமாக படையினரை அரசாங்கம் நிலைகொள்ள வைத்திருப்பதே காரணம் ஆகும். போர்க்காலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் தென்னிலங்கை இளைஞர்களையும் யுவதிகளையும் உள்வாங்கிப் படைப்பலத்தைப் உப்பி பெருப்பித்த அரசாங்கத்துக்கு, போர் முடிந்த பின்னர் அவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. இதனால் அவர்களை மரக்கறி வியாபாரம் தொடங்கிப் பலசரக்கு வியாபாரம் வரை வாணிபத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
 
வடக்கின் யதார்த்தம் இவ்வாறு இருக்கும்போது, எமது மக்களுக்கு நிலக்கடலை விதைகளையும், விதை நெல்லையும், கால்நடைகளையும், கோழிக்குஞ்சுகளையும் வழங்குவது மட்டுமே விவசாய அமைச்சின் பணியாக இருக்க முடியாது. 
 
இதை மட்டுமே செய்வதென்றால், இதற்கென அரச சார்பற்ற நிறுவனங்கள் பல இங்கே இருக்கின்றன. இதனால்தான், எம்மை தங்களின் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்து இந்தச் சபைக்கு அனுப்பிய எமது மக்களின் வாழ்வுரிமைகளையும் தொழில் உரிமைகளையும் பறிக்கும் விதமாக அவர்களது நிலங்களில் நிலை கொண்டிருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். 
 
எதிர்க்கட்சியினர் நாம் இராணுவத்தை வெளியேற சொல்வதை விடுத்து அபிவிருத்தியில் அக்கறை காட்ட வேண்டும் என்றும், இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்திச் செய்யக்கூடிவற்றையும் நாம் செய்யாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டியும் வருகிறார்கள்.
 
எங்களுக்கு இருக்கும் அதிகாரம் எத்தகையது என்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. எமது மாகாண விவசாயப் பணிப்பாளரின் கீழ் ஒவ்வொரு மாவட்டங்களுக்கென்றும் பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் உள்ளார்கள். ஆனால், மத்திய அரசு இப்போது மாவட்டச் செயலகங்களில் மாவட்ட விவசாயப் பணிப்பாளரை நியமித்து எமது பிரதி விவசாயப் பணிப்பாளரின் பணிகளில் தலையீடு செய்து வருகிறது. 
 
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலம் சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் யாவும் மாகாணசபையின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்ற போதிலும் இதுவரை இக்குளங்கள் எமக்குக் கையளிக்கப்படவில்லை. இதை போன்று ஏராளமானவற்றை நாம் பட்டியலிட முடியும். ஆனால், நமக்கு இருக்கின்ற அற்ப அதிகாரங்களையும் ஒதுக்கப்படுகின்ற சொற்பநிதியையும் பயன்படுத்தி எமது சக்திக்கும் மேலாகவே உழைத்து வருகின்றோம் என்று இந்த கௌரவ சபையில் அழுத்திக் கூறிவைக்க விரும்புகிறேன். 
 
எனது அமைச்சின்கீழ் கடந்த ஒருவருடமாக ஒதுக்கப்பட்டிருந்த விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றாடல் துறைகளோடு, கடந்த 10 ஆம் திகதியில் இருந்து மேலதிகமாகக் கூட்டுறவு அபிவிருத்தி, நீர்வழங்கல், உணவு வழங்கலும் விநியோகமும் ஆகியதுறைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
 
இந்தத் துறைகளினூடாக நடப்பு 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கென மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையாக நிதிஆணைக்குழுவிடம் 1011.75 மில்லியன் ரூபாய்களை கோரியிருந்தோம். ஆனால், யானைப்பசிக்குச் சோளப் பொரி போன்று 173 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன் கொடையாக 13 மில்லியன் ரூபாயும், மீண்டெழும் செலவின நோக்கங்களுக்காக திரட்டிய கொடையாக 828.224 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் எனது அமைச்சுக்கு 1014.224 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடாகியுள்ளது.
 
குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையான 173 மில்லியன் ரூபாயும், பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையான 13 மில்லியன் ரூபாயும் சேர்ந்த 186 மில்லியன் ரூபாய் மாத்திரமே அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கானது ஆகும். இந்நன்கொடை நிதியில் இருந்து அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கென அமைச்சருக்கு 6 மில்லியன் ரூபாய், அமைச்சு அலுவலகத்துக்கு 2 மில்லியன் ரூபாய், விவசாயத் திணைக்களத்துக்கு 84 மில்லியன் ரூபாய்;, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கு 43 மில்லியன் ரூபாய், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு 43 மில்லியன் ரூபாய், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு 7 மில்லியன் ரூபாய், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கு 1 மில்லியன் ரூபா என்றவாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் வேறு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை அப்படியே வடக்குக்குப் பிரதிபண்ண முடியாது. வடக்கில் தேவைகள் வேறு விதமானவை. இங்கு அபிவிருத்தித் திட்டங்களை  முன்னெடுக்கும்போது நாம் பல விடயங்களைக் கருத்தில் எடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். 
 
எமது தரைப்பகுதி மயோசின் காலத்துச் சுண்ணாம்புப் பாறைகளாக இருப்பது வடக்குக் கிடைத்த ஒரு பெரும் வரம். பேராறுகளோ, நீர்வீழ்ச்சிகளோ இல்லாத வடக்கில் பெய்கின்ற மழைநீரை மயோசின் பாறைகளில் உள்ள நுண்துளைகளும் வெடிப்புகளும் கீழே வடிய விடுவதால்தான் நிலத்தடி நீர்வளம் என்ற அரிய செல்வம் எமக்குக் கிடைத்துள்ளது. 
 
வடக்கில் மனிதக்குடியேற்றங்களுக்கு இந்த நிலத்தடி நீரே காரணம் ஆகும். அதே சமயம், சுண்ணப்பாறைகளின் துளைகள் தற்போது சாபமாகவும் மாறி உள்ளன. செறிவு வேளாண்மை முறையில் நாம் மிதமிஞ்சிப் பயன்படுத்துகின்ற விவசாய இரசாயனங்கள் இந்நுண்துளைகளினூடாகக் கசிந்து நிலத்தடி நீரை மாசுறுத்தி வருகின்றன. குறிப்பாக யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீரில் விவசாய இரசாயன மாசுகள் அதிகம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாய அபிவிருத்தியில் சூழலுக்கு இசைவான, இயற்கை அல்லது சேதன வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
 
சுன்னாகம் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ள அனர்த்தமானது, சுற்றுச்சூழல் நட்புமிக்க மாற்றுச் சக்தி மூலங்களைத் தேடவேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. 
 
புலோப்பளை மற்றும் வள்ளிமுனைப்பகுதிகளில் தலா 10 மெகாவாற் மின்சாரத்தை பிறப்பிக்கவல்ல, இரண்டு காற்று மின் ஆலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதும், சங்கானையில் இரண்டு காற்று மின்னாலைகளை அமைப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை சமீபத்தில் அனுமதி வழங்கியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் வரட்சியான பிரதேசங்கள் மேன்மேலும் வரட்சியடையும் என்று எதிர்வு கூறப்பட்டுவரும் நிலையில் வரட்சியை தாக்கு பிடிக்கக்கூடிய பயிர்களையும், குறைந்தளவு நீர் தேவைப்படுகின்ற பயிர்களையும், நீரை விரயமாக்காத தொழில் நுட்பங்களையும் விவசாய அபிவிருத்தியின் போது கருத்தில்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். 
 
அதேசமயம் பெய்கின்ற சொற்ப மழை தன்னும் வீணாகாமல் இருக்கும் நோக்கில் மழைநீர் சேகரிப்புக்கும் குளங்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களின் புனரமைப்புக்கும் முன்னுரிமை தரவேண்டியவர்களாக உள்ளோம்.
 
வடமாகாண சபை உருவாக்கப்படுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட இரணைமடுத்திட்டம் இரணைமடு குள புனரமைப்பு, இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் விநியோகம், மற்றும் கழிவகற்று வடிகாலமைப்பு என மூன்று திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருந்தது. 
 
இப்போது இத்திட்டம் மீளவடிவமைக்கப்பட்டு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இரணைமடு குளத்தைப் புனரமைப்பதற்கும், குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகத்தை மருதங்கேணியில் இருந்து கடல்நீரை குடிநீராக மாற்றி மேற்கொள்ளுவதற்கும், யாழ் மாநகர எல்லைக்குள் கழிவகற்று வடிகால்களை அமைப்பதற்கும், மத்திய அரசின் நீர்வழங்கல் வடிகால் அமைச்சுக்கும், கடன் வழங்குநரான ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், வடக்கு மாகாண சபைக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. 
 
அது மாத்திரம் அல்லாமல், எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட சுன்னாகம் பிரதேசமும் கடல் நீரில் இருந்து குடிநீர் பெறும் இடங்களில் ஒன்றாக உள்வாங்கப்பட்டுள்ளது. பழைய திட்டத்தை மாற்றியமைக்குமாறு கோரியபோது, ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிபோகும் என்று பலராலும் சொல்லப்பட்டு வந்த நிலையில் முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த தொகையின் இரட்டிப்பு மடங்காக, ஏறத்தாழ 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் புதிய திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 
 
வடக்கு போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணம் என்பதன் அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், நிர்க்கதியாக நிற்கும் முன்னாள் போராளிகள் போன்ற தரப்பினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அபிவிருத்திட்டங்களை அடையாளம் கண்டு முன்னுரிமைப்படுத்த வேண்டியவர்களாகவும் நாம் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.