Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் விஷேட பேட்டி ​அரசியலமைப்பு சீரமைப்புக்கு எதிரணிகளின் ஆதரவு தேவை

Featured Replies

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிரணியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களும் அப் பக்கமே சென்றுவிடுவார்கள் என்ற தோற்றப்பாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை என்றும், மூன்றில் ஒரு பெரும்பான்மையே போதுமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

 

 அண்மையில் அலரிமாளிகையில் வைத்து வாரப் பத்திரிகைகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயங்களை குறிப்பிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ தமது புதிய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும், அப்படி எதிர்க்கட்சியினருக்கு அது தேவையில்லையெனில் தங்களுக்கும் அதற்கான அவசியம் கிடையாது என்றும் தெரிவித்தார்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய நேர்காணலை கேள்வி, பதில் வடிவில் இங்கே தருகிறோம்;

 

கே: தேர்தலுக்கு இன்னும் 3நாட்கள் தான் இருக்கின்றன. நாடு முழுவதும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தேர்தலில் உங்களுக்கு கடுமையான போட்டி இருப்பதாக கருதுகிறீர்களா?

 

பதில்: உண்மையில் போட்டி எதுவும் கிடையாது. அப்படியான போட்டி எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கொழும்பு வந்தால் மட்டும் தான் என்னைச் சுற்றி இருப்பவர்கள் தேர்தலில் போட்டியொன்று இருப்பதை பற்றி பேசுகின்றனர். அதற்கு வெளியில் கிராமப் பிரதேசங்களில் அவ்வாறான எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 

 

கே: 2015 ஆம் ஆண்டில் உங்களது இலக்கு என்னவாக இருக்கப் போகிறது?  

 

பதில்: வீடொன்றை நிர்மாணிப்பதென்றால் அதற்கு சிறந்த அடித்தளமொன்று அவசியம். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் தான் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முதன் முதலில் மறை பெறுமானத்துக்கு சென்றிருந்தது. 30 வருட காலமாக இடம்பெற்றிருந்த யுத்தம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முக்கிய தடையாக இருந்தது. எனினும், 4 வருடங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம். ஆனால், நல்லாட்சி பற்றி பேசுகின்றனர். சரியான முகாமைத்துவம் இல்லாதிருந்திருந்தால் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது.

 

அதன் பின்னர் பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். அதன் பிரதிபலனாக தற்போது எம்மால் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடிந்துள்ளது. நாம் இங்கு இட்ட அடித்தளத்தை முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது.

 

அந்த வகையில், நல்லாட்சி மற்றும் சட்டத்தை சரியாக நிறைவேற்றி சிறந்த சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதே எமது நோக்கம். எவ்வாறிருப்பினும், நல்லாட்சி இல்லாமல் இருந்திருந்தால் எம்மால் இந்த அடித்தளத்தை உருவாக்கியிருக்க முடியாது.

 

 கே: நல்லாட்சி பற்றி இன்று பரவலாக பேசப்படுகிறது. தற்போது நல்லாட்சி பற்றி பேசுபவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போது அது பற்றி குரல் கொடுத்திருக்கிறார்களா?

 

பதில்: தற்போது நல்லாட்சி பற்றி பேசும் எவரும் அப்போது பேசியிருக்கவில்லை. அப்படி பேசியவர்கள் அனைவரும் எம்முடன் தான் இருக்கின்றனர். சுகாதார அமைச்சினால் தான் அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் அதிகமான தடவைகள் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன.

 

கேள்வி மனுக் கோரல்களும் அப்படி தான். இது தொடர்பில் நான் 3 தடவைகள் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறேன். அமைச்சரவை செயலாளரின் மூலம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இது பற்றி கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவையில் பேசுவதற்கு அனைவருக்கும் சுதந்திரம் இருந்தது. வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, விமல் வீரவன்ச போன்ற அமைச்சர்களின் வாயை என்னால் மூடி வைக்க முடியுமா?

 

 கே: தற்போது எதிரணியின் பொது வேட்பாளராக இருக்கும் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் இறுதியாக முன்வைத்த கோரிக்கை என்ன?

 

பதில்: அப்படி அவர் எந்தக் கோரிக்கையையும் முன்வைத்திருக்கவில்லை.

 

கே: அரசாங்கத்தில் அமைச்சர்கள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ராஜபக்ஷ சகோதரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி உங்களது கருத்து என்ன?

 

பதில்: எந்த சகோதரரும் எந்தவொரு அமைச்சரினது விடயத்திலும் தலையிடவில்லை. அப்படி செய்தால் அவர்கள் வீடுகளுக்குத் தான் செல்ல வேண்டிவரும். எனினும், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் பத்திரங்களை ஆய்வு செய்து தமது அபிப்பிராயங்களை முன்வைக்கும் உரிமை அமைச்சரவை அமைச்சர்கள் சகலருக்கும் இருக்கிறது. அவ்வாறு முன்வைக்கப்படும் அவதானிப்புகளை நாம் ஆராய்வோம்.  

 

அதுமட்டுமல்லாது, அமைச்சரவைக்கு வராமலேயே எத்தனையோ விடயங்கள் உயர் நீதிமன்றத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. உண்மையில் நாம் தேவைக்கு அதிகமான சுதந்திரத்தை கொடுத்திருந்தோம். எந்த அமைச்சரினது பணியிலும் தலையிடவில்லை.

 

கே: பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இன்னும் முற்றாக விலகவில்லை என்றும், சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் இன்னும் செயற்பட்டு வருவதாகவும் கூறப்படும் நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் மனோ கணேசன் போன்றோர் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவது எவ்வளவு தூரம் பாதிப்பாக அமையும்?

 

 பதில்: என்னை சந்தித்த ஒருவர் இதை தோல்வியாளர்களின் கூட்டு என்று குறிப்பிட்டார். அவர்கள்  கூறுவதை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தோல்வியாளர்களின் கூட்டு தெரிவிப்பதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அப்படியான அழுத்தங்கள் இருக்கின்றன.

 

ஐரோப்பாவில் (விடுதலைப் புலிகள் மீதான) தடை நீக்கப்பட்டதும் எமக்கு ஏற்பட்ட நிலைமைகளை ஆராய்ந்தே நாம் ஓமந்தையில் சோதனையிடும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தோம். விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் புத்துயிரளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 கே: தமது ஆட்சியிலேயே 75 சதவீதம் யுத்தம் முடிக்கப்பட்டு விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருக்கிறாரே?

 

பதில்: இவ்வாறான நகைச்சுவைகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியதில்லை. எது உண்மை என்பது மக்களுக்குத் தெரியும்.

 

கே: உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல் மறுசீரமைப்பை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறீர்கள்? சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் நியமிக்கப்படுமா?

 

பதில்: அரசியல் மறுசீரமைப்பு என்பது அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். எதிரணி அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அரசியல் மறுசீரமைப்பு என்பது எனது மறுசீரமைப்பாக இருக்க முடியாது. மக்களினதும், அனைத்துத் தரப்பினரதுமான மறுசீரமைப்பாக அது இருக்க வேண்டும்.

 

அரசியலமைப்பு மாற்றத்தை பாராளுமன்றம் தான் செய்ய வேண்டும். இதேநேரம், இலங்கையில் எந்தக் காலத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் இருந்தன என்று கூறுங்கள் பார்ப்போம். முதலில் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்றால் என்ன? அவ்வாறான சுயாதீன ஆணைக்குழுக்கள் எப்போது இங்கு இருந்தன. சிலர் கூடி பரிந்துரை செய்யும் ஒருவரை நியமிப்பார்கள். இது எப்படி சுயாதீனமாக முடியும். அதற்கு தற்போது இருக்கும் ஆணைக்குழுக்களின் சுயாதீனம் எவ்வளவோ மேலானது.

 

கே: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியமைக்கான காரணம் என்ன?

 

பதில்: அவர்கள் கிழக்கில் தனியொரு சுயாதீன நிர்வாக வலயமொன்றை கேட்டனர். ஆனால், அவர்கள் கூறிய பகுதிகளில் ஏனைய இனத்தவர்களும் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாது, முஸ்லிம், தமிழ், சிங்களம் என்று இன ரீதியான வலயங்களை ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கவில்லை. இனங்களின் அடிப்படையில் வலயங்களை ஒதுக்குவதற்கு கொள்கை ரீதியாக நாம் விரும்பவில்லை.  

 

கே: அரச ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படுவதாக, குறிப்பாக ஆளுந்தரப்புக்கே சார்பாக செயற்படுவதாக குற்றஞ்சாட்டப் படுகிறதே?

 

பதில்: நான் அண்மையில் ஊடகங்களை பெரிதாக அவதானித்திருக்கவில்லை. ஆனால், அரச ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் சுயாதீனமாகவே செயற்பட வேண்டும். இதில் அரச ஊடகங்கள் பற்றி மட்டும் குறை கூறாது ஏனைய அனைத்து ஊடகங்களுமே சுயாதீனமாக இருக்க வேண்டும்.

 

தேர்தல் காலங்களில் ஊடகங்களின் செயற்பாடுகள் பற்றி தேர்தல்கள் ஆணையாளர் வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். இதேநேரம், சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் மட்டும் தான் ஊடகங்கள் தொடர்பில் என்னால் பொதுவான வழிக்காட்டலொன்றை வழங்க முடியும். ஆனால், சகலரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தரப்பு ஊடகம் மட்டும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அதை செய்ய முடியாது.

 

கே: பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்ற ஒருவர் அரசில் இருந்து வெளியேறுவதற்கு எது காரணமாக அமைந்தது?

 

 பதில்: என்ன காரணம் என்று எனக்கு தெரியாது. அது பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.  

 

கே: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தங்களின் ஆதரவை வெளியிட்டிருப்பது பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

 

பதில்: அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆரம்பத்திலேயே அவர்கள் எடுத்துவிட்ட முடிவு தான் அது. கடந்த தேர்தலிலும் முழு வடக்கிலும் எனக்கு 46 ஆயிரம் வாக்குகள் தான் கிடைத்திருந்தன. ஆனால், இம்முறை வடக்கில் அதைவிட அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

 

 கே: பிரபல இந்தி திரைப்பட நடிகர் சல்மான் கான் உங்களது பிரசார நடவடிக்கைகளுக்காக அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறதே?

 

பதில்: அவர் எனக்கு ஆதரவு திரட்ட வந்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும். அப்படியாக எதுவும் கிடையாது. பிரபல நடிகர் ஒருவருக்கு இலங்கை வர முடியாதா? இதற்கு முன்னரும் வந்து யாழ்ப்பாணமும் சென்றிருக்கின்றார். அவர் இங்கு வந்தபோது நிவாரணப் பணிகள் பற்றியே எம்முடன் கலந்துரையாடினார்.  

 

கே: உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில், சிறைகளிலுள்ள வடக்கு இளைஞர்கள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் நல்லிணக்கத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றி எதுவும் குறிப்பிட்டு கூறப்படவில்லையே?

 

பதில்: அரசியல் தீர்வு என்று வரும் போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். ஆனால், அவ்வாறு அரசியல் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்கான தேவையோ, அக்கறையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கிடையாது. அமெரிக்கா, இந்தியா அல்லது ஜெனீவா மூலம் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தீர்வொன்றை காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆர்வம் கிடையாது. ஏனெனில், தீர்வு வழங்கப்பட்டு விட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும்.

 

அதனால், தங்களது அரசியல் தேவைகளுக்கு தான் இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதற்கு முன்வராமல், பிச்சைக்காரன் புண் போல அதை வைத்து க்கொண்டிருக்கின்றனர். நாளைக்கே வேண்டுமென்றாலும் எம்மால் தீர்வு தர முடியும். ஆனால், அவர்கள் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர்) அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்களே வந்து பேசி தீர்வொன்றை காணுமாறும் நாம் அழைப்பு விடுத்தோம்.

 

தீர்வு பற்றி பாராளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, நாமல்ல. அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதுடன், அதற்கென செயன்முறையொன்றும் இருக்க வேண்டும். 10 அல்லது 20 நாட்களில் முடிக்கும் விடயம் என்றால் நாம் அதை செய்துவிடுவோம்.

 

ஆனால், இது நீண்டகால பிரச்சினை. அதற்கொரு செயன்முறை அவசியம். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரும் போது வடக்கு, கிழக்கு பிரச்சினை முற்றிலும் தீர்ந்துவிடும் என்றார்கள். ஆனால், மக்களின் முன்னிலைக்கோ பாராளுமன்றத்துக்கோ சமர்ப்பிக்கப்படவில்லை. அதையும் தாண்டி என்ன செய்ய முடிந்தது. தற்போது ஒருவர் வடக்கை கேட்கிறார் என்றால், மற்றவர் கிழக்கை கேட்கிறார். இதுதான் நிலைமை.  

 

கே: தேர்தல் காலத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியவர்கள், ஜனவரி 8 ஆம் திகதியின் பின்னர் உங்களால் ஏற்படுத்தப்படக்கூடிய புதிய ஆட்சியில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்படுவார்களா? ஏனெனில், அரசாங்கம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்து விட்ட நிலையில், நீங்கள் கூறும் அரசியலமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொள்வதில் அது சிக்கலை ஏற்படுத்தாதா?

 

பதில்: அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை. மூன்றில் ஒரு பெரும்பான்மையே போதும். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியில் மூன்றில் ஒரு பெரும்பான்மை பலம் தான் அரசுக்கு இருந்தது. அரசியலமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள நாம் எதிர்க்கட்சியினரது ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். அப்படி அவர்களுக்கு அது அவசியமில்லை என்றால் எமக்கும் தேவையில்லை. மகிந்த ராஜபக்ஷவுக்கு தேவையான மறுசீரமைப்பை நாம் வழங்கப்போவதில்லை. மக்களுக்கு தேவையான மறுசீரமைப்புத் தான் இங்கு தேவை. ஆகவே, வெளியேறியவர்களை சேர்க்கமட்டோம்.  

 

கே: உங்களது தற்போதைய பதவிக்காலம் நிறைவடைவதற்கு 2 வருடங்களுக்கு முன்னரே தேர்தலை நடத்துவதற்கான காரணம் என்ன?

 

பதில்: அது தான் ஜனநாயகம். எமக்கு பதவி ஆசை கிடையாது.  

 

கே: ஒப்பீட்டளவில் பார்க்கும் போது வடக்கு மக்களின் வாக்குகள் உங்களுக்கு குறைவாகவே கிடைக்கின்றன. அதற்கான காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  

 

பதில்: வடக்கில் நாம் அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் கூட, அங்கு நாம் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கவோ அல்லது அரசியல் செய்யவோ இல்லை. அதனால், வாக்குகளில் சில சதவீதம் குறைந்திருக்கலாம். எனினும், இம்முறை மக்கள் வாக்களிக்கும் வரை தற்போதைய நிலைமை பற்றி கூற முடியாது. யாருக்கு அம் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது உறுதியாகத் தெரியாது.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணிப் பக்கம் சென்று விட்டமையால் மக்களும் அப் பக்கமே சென்றுவிடுவார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், நிலைமைகள் மாறலாம். எமக்கும் வடக்கில் பிரதிநிதிகள் இருக்கின்றனர்.

 

முதற் தடவையாக சுதந்திரக் கட்சியில் இருந்து அங்கஜன் வட மாகாண சபைக்கு தெரிவாகியிருக்கிறார். வவுனியாவிலும் இருந்தும் இரு சிங்கள உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அங்குள்ள மக்கள் தற்போது எம்முடன் சுமுகமாக பேசுகின்றனர். அந்த வகையில் இம்முறை வடக்கில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். விடுதலைப் புலிகளால் 30 வருடங்களாக அம் மக்கள் மத்தியில் குரோத உணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

 

அது கொஞ்சம் கொஞ்சமாக தான் குறையும். நாம் முதற் தடவை சென்றதிலும் பார்க்க அடுத்த தடவை சென்ற போது கிடைத்த பிரதிபலிப்புகள் சிறப்பாக இருந்தன. யாழ். தேவியில் யாழ்ப்பாணம் சென்ற போது கிடைத்த பிரதிபலிப்புகள் மிகவும் சிறப்பாக இருந்தன. நாட்டை அபிவிருத்தி செய்யும் போது நாம் அதை கொழும்புடன் மட்டும் மட்டுப்படுத்தி விடவில்லை. அதனால் தான் வடக்குக்கு 400,  500 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளோம்.  

 

 http://thinakkural.lk/article.php?article/yyzulhgkxq1580dc5c768b5d3727yi3awc76a084531934b34601977xghfk#sthash.vzZTwMRF.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.