Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நளாயினி – ஜி.விஜயபத்மா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நளாயினி – ஜி.விஜயபத்மா

நளாயினி .. பொன்னிற மேனியும், பார்ப்பவரை வசீகரம் செய்யும் அழகானவள். அவள் அழகுக்கு சற்றும் பொருத்தமே இல்லாத மௌத்கல்ய முனிவருக்கு மனைவியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் மனைவியாகி இல்வாழ்வை மனமகிழ்வுடன் துவங்க இசைகிறாள். ஆனால் மௌத்கல்யர் இயல்பிலேயே சந்தேக குணமும், முன் கோபமும் கொண்டவர். அவரால் நளாயினி தன்னை கணவனாக ஏற்றுகொள்ளத்தயாரானதை ஒத்துக்கொள்ளவே இயலவில்லை. குள்ளமாக, கருப்பாக அவலட்சணத்துடன் இருக்கும் தன்னுடன் நளாயினி நிச்சயம் மனமொத்து வாழ இயலாது என்று அவருக்கு தாழ்வுணர்ச்சி ஏற்பட்டது. இதனால் தன் மனைவி நளாயினியின் அன்பை சோதித்து அவள் அதில் தேர்வு பெற்றாள் மட்டுமே அவளுடன் இல்லறவாழ்வை துவங்குவது என்று முடிவு செய்தார்.

தன் தவவலிமையால் பெற்ற யோக சக்தியில், தன்னை முதியவனாக மாற்றிக்கொண்டு அறைக்குள் படுத்துக்கொண்டார். இளமைக்கே உரிய கனவுகளுடன் கணவனைக்காண அறைக்குள் நுழைந்தாள் நளாயினி. இளமையும் அழகும் ஒருங்கிணைந்த ஒரு பெண்ணுக்கு தாம்பத்தியம் குறித்த கனவுகள் இருந்தாலும், தான் வளர்ந்த சூழலும், கட்டுப்பாடும் அவள் அதை வெளிப்படுத்த சந்தர்ப்பங்களே தருவதில்லை. தன் மொத்த தாபத்தையும் தீர்த்து கொள்ள அவளுக்கு கிடைக்கும் ஒரே வடிகால் கணவன்தான். அதனாலேயே நம் குல பெண்களுக்கு கல்லானாலும் கணவன் என்ற தாரக மந்திரத்தை அவள் கருவில் இருக்கும்போதே விதைத்து விடுகின்றனர். அதுவும் பத்தினித்தன்மை கொண்டாடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த நளாயினியின் வாழ்க்கை சூழலில், இல்வாழ்க்கை குறித்த பார்வை எப்படியிருந்திருக்கும்? இளமையின் தினவினை அவள் எங்கு போய் தொலைக்க முடியும்?

அறைக்குள் நுழைந்த நளாயினி, அசந்து தூங்கி கொண்டிருக்கும் ஒரு கிழவனை கண்டதும் அவளுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. அவளுக்கு சொல்லப்பட்டது மௌத்கல்ய முனிவருக்கு நாற்பது வயதானாலும் இருபது வயது வாலிபனுடைய திடத்துடன் இருப்பார் என்று. ஆனால் அவள் காண்பது அதற்கு எதிர்மறையான ஒரு உருவத்தை. ஆனாலும் அவள் தன் ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் தான் உள்ளே நுழையும் சப்தம் கேட்டு கணவன் விழித்து விட கூடாதே என்ற கவனத்துடன் மெதுவாக வந்து அவனருகில் அமர்ந்து தன் முந்தானையால் அவன் உடலில் இருக்கும் வியர்வைத்துளிகள் போக விசிறி விட்டாள்.

திடீரென்று தன் உடலில் குளிர்ந்த காற்று வீசியவுடன்,தூக்கம் கலைந்து இருமிக்கொண்டே எழுந்தார் முனிவர். அழகே உருவாக தன் அருகே அமர்ந்திருக்கும் நளாயினியை தன் இடுங்கிய கண்களால் பார்த்தவர் முகம் சுளித்தபடி “உன்னைப்பார்த்தால் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு பிடித்த மனைவியாக என்று நீ மாறுகிறாயோ அன்றுதான் உனக்கும் எனக்கும் இடையில் தாம்பத்யம். போ.. போ.. தள்ளிப்போ..” என்று சீறுகிறார். பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாக ஒதுங்கி அமர்கிறாள் அழகுதேவதை நளாயினி.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் கணவனுக்கு பணிவிடை செய்வதும், அவள் எப்படி பணிவிடை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து அவளைத்திட்டி தண்டிப்பத்து கணவனான மௌத்கல்யரின் செயலாகவும் ஆனது. தன் தவவலிமையால் மௌத்கல்யர் தன் மேனியில் தொழுநோய் பரவ செய்தார். அதனால் அவர் உடலில் இருந்து நீர் வடிவதும் துர் நாற்றம் வருவதும் அதிகமானது. நளாயினி அது குறித்து கொஞ்சம் கூட அருவெறுப்பு படாமல் எப்பொழுதும் கணவனின் மேனி முழுவதும் துடைத்து விட்டு, நாற்றம் தெரியாமல் இருக்க வாசனை திரவியங்களைத்தடவி அவரை மிகவும் அன்புடன் கவனித்துக்கொண்டாள்.

நளாயினியின் பொறுமையும், அமைதியான சேவையும் கண்ட முனிவருக்கு அவள் மேல் நம்பிக்கை வருவதற்கு பதில் சந்தேகமே அதிகமானது. எந்த பெண்ணும் கல்யாண சுகமே இல்லாமல், நோயாளி கணவனை பேணும் வாழ்க்கையே சுகம் என்று வாழ முடியவே முடியாது எனவே இவளை இன்னமும் சோதிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார். எப்பொழுதும் கணவன் சாப்பிட்டு வைக்கும் மிச்சத்தையே உண்ணும் வழக்கம் கொண்டவள் நளாயினி. அன்றும் வழக்கம்போல் கணவன் சாப்பிட்ட இலையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். அவள் சொற்றின் நடுவே தொழுநோயால் விண்டு விழுந்த கணவனின் விரல் ஒன்று இருந்தது.

இப்பொழுது நளாயினியின் முகபாவத்தை வைத்து அவளது உண்மையை கண்டு பிடித்து விடவேண்டும் என்று தூங்குவதுபோல் பாசாங்கு செய்து படுத்திருந்தார் முனிவர். நளாயினி எந்தவித உணர்வினையும் வெளிக்காட்டாமல், அந்த விரலை தன் இலையிலேயே ஒரு ஓரமாக வைத்து விட்டு, சாப்பாட்டை மிகவும் ஆசையுடன் சாப்பிட ஆரம்பித்தாள். முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. நாம் என்ன செய்தாலும் இவளை ஒண்ணும் செய்ய இயலவில்லையே என்று யோசித்தார். சாப்பிட்டு கொண்டு இருந்தவளை எட்டி உதைத்தார்.

” எனக்குள் காமம் பெருக்கெடுத்து என்னை தவிக்க வைக்கிறது. ஆனால் உன்னைப்பார்த்தால் எனக்கு அந்த ஆர்வம் அடங்கி குமட்டல் எடுக்கிறது. இப்பவே என்னை பக்கத்து ஊரில் வசிக்கும் நாட்டியக்காரியிடம் கூட்டிச்செல். அவள் மட்டும்தான் என் மோகவெறியை தீர்க்க முடியும்.” என்று வெறிக்கொண்டு கத்துகிறார் முனிவர். பக்கத்து ஊரில் வசிக்கும் நடன மங்கை தொழில் முறை தாசி. அவள் படுக்கை சுகமளிக்க பணத்திற்கு பதில் தங்க நகைகளை மட்டுமே பெற்றுக்கொள்வாள். நளாயினி தன் கழுத்தில் உள்ள தாலிச்சரடை கழட்டி விட்டு, தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து கொண்டு,கணவனை பக்கத்து ஊருக்கு கொண்டு செல்ல தயாரானாள்.

தன் கணவனை ஒரு பெரிய போர்வை கொண்டு போர்த்தி,பெரிய கூடையில் உட்காரவைத்து தன் தலையில் சுமந்து கொண்டு பக்கத்து ஊருக்கு நடந்தே செல்ல ஆரம்பித்தாள். வழி நெடுக அவளைப்பார்த்த ஊர் மக்கள் ,”இவளுக்கு என்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா… இப்படி வாட்டும் கொடுமைக்கார கணவனை தாசி வீட்டிற்கு சுமந்து செல்கிறாளே…ஒரு பெண் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கலாம். தன் கணவனையே இன்னொருத்திக்கு விட்டு கொடுக்க இயலுமா” என்று ஒருவருக்கொருவர் பேசி, அவளைப்பார்த்து கிண்டலாக சிரித்தனர். யாருடைய நகைப்பினையும் பொருட்படுத்தாமல், சலனம் எதுவும் இல்லாமல் தன் கணவனை மிகவும் பொறுமையாக தாசியின் படுக்கையில் படுக்கை வைத்து விட்டு, தன் பசிக்கு உணவு கூட உண்ணாமல், தாசியின் வீட்டு வாசலிலேயே பொழுது சாய்ந்து தன் கணவன் வெளியில் வரும்வரை தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

கிழவன் உருவத்தில் இருக்கும் இளைஞன் என்று அறியாமல் தாசி “இவன் கிழவன்தானே” என்ற அலட்சியத்துடன் அவனை அணுகினாள். ஆனால், தன் மனதில் அடக்கியிருந்த காமவெறியை தணிக்கும் வேகத்துடன் தாசியிடம் இயங்கியவனின் வேகம் கண்டு சில மணிநேரங்களிலேயே இயலாமல் தாசி அயர்ந்து போனாள். அவள் என்ன முயன்றும் அந்த கிழவனை திருப்திபடுத்த இயலவில்லை.

அவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல்,வீட்டிற்கு வெளியில் ஓடிவந்து,

” நளாயினியைப்பார்த்து இவனை முதலில் இங்கிருந்து தூக்கி செல். இவனுடன் எப்படிதான் தாம்பத்யம் நடத்துகிறாயோ?” என்று இயலாமையின் கோபத்துடன் திட்டினாள். சூரியன் அஸ்தமனமாகி வானம் இருளத்துவங்கியது. சின்ன சின்னதாக நட்சத்திரங்கள் உதித்து வானில் கண்சிமிட்டி சிரிக்கத்துவங்கின. மனதின் இச்சை தீர்ந்த உற்சாகத்துடன் தன் புண்ணான கால்களினால், பொன்னான நளாயினியை எட்டி உதைத்து,” களைப்பாய் இருக்கிறது, சீக்கீரம் போ என்று உதைத்து, குஷியுடன் நகைத்தான் முனிவன்.

உலர்ந்து போன மனதுடன், உலகையே மறந்து கணவனை சீக்கிரம் இன்னொரு மழை வருவதற்குள் வீட்டிற்கு தூக்கி செல்ல வேண்டுமே என்ற பதைப்புடன் ஓட்டமும், நடையுமாக கணவனை சுமந்து வேகமாக நடந்து சென்றாள் நளாயினி. அவளுடைய பொல்லாத நேரம் கவனமில்லாமல், வழியில் கழுமரத்தில் ஏற்றி கொல்லப்பட வேண்டும் என்று மன்னனால் தண்டனை விதிக்கப்பட்டு, கூர்மையான மரத்தில் உட்காரவைக்கப்பட்டு, பின்புற சதையைத்துளைத்து ரத்தம் சொட்ட சொட்ட தொங்கி கொண்டிருந்த மகரிஷி மாண்டவியாரை கவனிக்காமல், அவர் கால்களில் மோதி விட்டாள். வேதனையின் உச்சத்தில் இருந்த மகரிஷிக்கு நளாயினி சுமந்திருந்த கூடையின் விளிம்புகள் உரசி அவர் பாதங்கள் இரண்டு ஊஞ்சல் போல் ஆட, வேதனை அதிகரித்து கழுமர கூர்மை அவர் உடலை இன்னும் ஒரு அங்குலம் இறக்கியது. தாங்க இயலா வேதனையுடன் தன்னை இடித்தவர் யார் என்று பார்க்க, மிக வேகமாக கூடையில் கணவனை சுமந்து செல்லும் நளாயினி தெரிந்தாள்.

தன்னை இடித்ததும் அல்லாமல் நின்று பதில் கூட சொல்லாமல் செல்லும் நளாயினியை பார்த்து மகரிஷி

” ஏய் பெண்ணே என்னை இடித்து வேதனைப்படுத்தி விட்டு, எதுவும் நடவாதது போல் ஓடுகிறாயே… எந்த கணவனை நீ தெய்வமாக சுமந்து செல்கிறாயோ அவன் இந்த இரவு விடியும் போது இறந்து போவான். நீ விதவையாவாய்… நிச்சயம்” கத்தினார். கணவனை சுமந்து ஓடிக்கொண்டிருந்த நளாயினி வேகமாக திரும்பி வந்து ,” மகரிஷீ, நான் தங்களை வேதனைப்படுத்த வேண்டும் என்று செய்யவில்லை. என் கணவன் துரிதமாக செல் என்று ஆணையிட்டதால், எனக்கு சுற்றுப்புறம் பற்றிய சிந்தனையில்லாமல் வேகமாக சென்று விட்டேன். தயவு செய்து என் தவறை மன்னியுங்கள். நான் செய்த தவறுக்கு ஒரு பாவமும் அறியாத என் கணவன் இறக்க வேண்டும் என்று சபிப்பது நியாயமல்ல. தங்கள் சாபத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்” என்று ரிஷீயிடம் கெஞ்சினாள். ரிஷியோ அவளை ஏறெடுத்தும் பாராமல் நான் பட்ட வேதனையை நீ உணர வேண்டும்.

என் சாபத்தை திரும்ப பெற மாட்டேன் ” என்று தீர்மானமாக கூறினார்.

நளாயினி வேதனையுடன், ” மகரிஷீ நான் இன்னமும் இல்வாழ்க்கையை துவங்காத புதுமணப்பெண். எனக்கு கணவன் இறந்து விடுவான் என்று சபிப்பது நியாயமா? என்னை மன்னிக்க கூடாதா? என்று கண்ணீர் மல்க வேண்டினாள். ஆனால் மகரிஷி உடல் வேதனை அதிகரிக்க, கண்களை மூடிக்கொண்டு பதில் ஏதுவும் பேசாமல் மவுனமானார். அதுவரை கெஞ்சிகொண்டிருந்த நளாயினிக்கு கோபம் வந்தது,

” முப்பது முக்கோடி தேவர்களே… தேவர்களின் மன்னன் இந்திரன், இந்திராணி அவர்களே கேளுங்கள். இன்னமும் திருமண வாழ்வை துவங்காத, கன்னியான என்னை கைம்பெண்ணாக சபித்த மகரிஷீ மந்தவராயரின் சாபம் பலிக்க வேண்டுமாணால் நாளை காலை சூரியன் உதிக்க வேண்டும். சூரியனே.. நீ உதிப்பதால் என் கணவன் இறக்க நேரிடுமானால்.. இனி நீ இப்பூவுலகில் உதிக்கவே கூடாது. இது என் ஆணை” என்று மறைந்து கொண்டிருக்கும் சூரியனை நோக்கி கூவினாள்.

அவள் சப்தமாக பேசிய வார்த்தைகள் கேட்டு சுற்றிலும் இருந்த மரங்கள் ஒரு நிமிடம் தன் இயக்கத்தை நிறுத்தின. காற்று ஒரு நிமிடம் நின்று வீசியது. ஆனால் எதுவும் நடவாததுபோல் நளாயினி தன் கணவனை சுமந்து கொண்டு வீடு திரும்பினாள்.

மனதில் எந்த சலனமும் இல்லாமல் கணவனை சுத்தப்படுத்தி அருகம்புல் மெத்தையில் படுக்க வைத்து அவன் தூங்கும் வரை கால் கைகளில் வாசனைத்தைலங்களை தடவி, வலி நீங்க அழுத்தி பிடித்து விட துவங்கினாள்.

அந்த இரவு விடியவேயில்லை. தேவர்களின் மன்னன் இந்திரன் சூரியனை தேடிப்போக சூரியன் தன் கதிர்களை மேரு மலையின் பின்னால் மறைத்துக்கொண்டு உதிக்காமல் இருந்தான். தன்னைத்தேடிவந்த தேவர்களிடம், ” என்னை மன்னிக்க வேண்டும். நளாயினியின் ஆணையை என்னால் மீற இயலாது என்று கூறினான். இந்திரன் மகரிஷி மந்தவராயரிடம் சென்று அவரை கழுமரத்தில் இருந்து இறக்கி, அவர் வேதனையை நீக்கி, ,”மகரிஷீ தயை கூர்ந்து நளாயினியினிக்கு கொடுத்த சாபத்தை திரும்ப பெறுங்ககள் என்று வேண்டினான்.

மகரிஷி தன் சாபத்தை விலக்கி கொள்ள, நளாயினியும் தன் ஆணையை திரும்ப பெற சூரியன் உதிக்க துவங்கினான்.

தன் மனைவி நளாயினிக்கு தன் மேல் இவ்வளவு காதலா என்று பிரம்மித்து போனார் ரிஷி மௌத்கல்யர். அவர் மிகுந்த காதலுடன் மனைவி நளாயினியை அணைக்க, அவருடைய வயோதிகம் மாறி , பழைய கட்டுடல் திரும்ப வந்தது. காதல் மயக்கத்தில் மனைவி நளாயினியிடம்,” உனக்கு என் மேல் இருக்கும் காதல் என்னை வியக்க வைக்கிறது. இனி என் வாழ்நாள் முழுக்க உன்னை மகிழ்விப்பதே என் லட்சியம். இந்த ஏழு உலகிலும் உன்னை கவர்ந்த ஆண்மகன் யார் என்றாலும் கூறு அவன் வடிவெடுத்து உன்னை தாம்பத்யத்தில் திருப்தி படுத்துவேன்” என்று கூறினார்.

திருமணம் ஆகியும் தன் தாம்பத்ய சுகம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்த நளாயினி மோகவெறியுட இந்திரனில் ஆரம்பித்து தான் ரசித்த அத்தனை ஆண்களையும் ஒருவர் ஒருவராக கூறினாள். மௌத்கல்யரும் சளைக்காமல் நளாயினி கூறிய அனைவரின் உருவத்திற்கு உருமாறி அவளுடன் கூடி உறவாடி மகிழ்வூட்டினார். ஆனால் ஒவ்வொரு உடலுறவின் போதும் வேறு வேறு ஆடவர்களையே கூறிய நளாயினி ஒருபோதும் தன்னை கூறவில்லை என்று மௌத்கல்யருக்கு குறையாக இருந்தது. அவரும் பொறுமையுடன் என்றாவது தன் பெயரை கூற மாட்டாளா என்று தவித்தார். வருடங்கள் கடந்தது போயின. ஆனால் ஒரு போதும் நளாயினி மௌத்கல்யரின் பெயரை கூறவில்லை. இதனால் மனம் வெறுத்து போன மௌத்கல்யர், ஒரு நாள் நீண்ட தாம்பத்யத்தில் வெறுப்படைந்து, சுகத்தில் திளைத்து மயக்கத்தில் இருந்த நளாயினியிடம்,” நானும் இன்று வரை என்றாவது நீ என் பெயரை கூறுவாய் என்று காத்திருந்தேன்.

நீ ஒரு போதும் என் பெயரை சொல்லவில்லை. இனியும் சொல்வாய் என்று எனக்கு நம்பிக்கையில்லை. கேட்டு பெறவும் எனக்கு விருப்பமில்லை. ” என்று கூறினார். அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் உடல் தினவு அடங்க கிறங்கிய பார்வையுடன் , மெல்ல எழுந்த நளாயினி,

” முனிவரே, நான் தங்களை விரும்பி காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை. நிர்பந்தத்தில் தங்களுக்கு மனைவியானேன். ஆனால் தங்களுடன் மனப்பூர்வமாக இல்வாழ்வில் இணைந்து வாழும் மனநிலையிலேயே பள்ளியறை நுழைந்தேன். ஆனால், நீங்கள் என்னை சோதிக்க வேண்டும் என்ற முயற்சியில் உருமாறி என் இளமையின் கனவுகளை கொன்று என்னை வேதனைப்படுத்தீனீர்கள். ஆனாலும் கணவனே என் தெய்வம் என்று என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திகொண்டு தங்களுக்கு சேவை செய்தேன். ஒரு நாளும் மனதால் கூட பிற ஆடவனை எண்ணாமல், இளமைக்கே உரிய காமத்தை அடக்கி வாழ்ந்தேன். அழகிலோ வயதிலோ எனக்கு ஏற்றவராக தாங்கள் இல்லாவிடினும் தாங்களே என் கணவர் என் உடலுக்கு சொந்தக்காரர் என்று எண்ணியிருந்தேன். ஆனால் தாங்களோ, முதன் முதலாக நாம் உடலுறவில் இணையும் போது கூட மனைவி என்ற உணர்வு இல்லாமல் வேறு எந்த ஆடவனுக்கோ என்னை தாரைவார்ப்பதற்கு ஈடாக வேறு உரு எடுத்து என்னை புணர்ந்தீர்கள்.

உங்கள் விருப்பம் அதுவாக இருக்கும் போது, நிர்ப்பந்தத்தில் மனைவியான நான் எப்படி தங்கள் உடலை விரும்பி கேட்பேன் என்று எதிர்பார்க்கிறீர்கள்.?” என்று கேட்டாள். நளாயினியின் உண்மையான வார்த்தைகள் மௌத்கல்யரை சங்கடப்படுத்தியது. அவள் கேள்விக்கு தன்னிடம் நியாயமான பதில் எதுவும் இல்லை என்பது அவரை கோபப்படுத்தியது. கோபத்தின் உச்சத்தில் தன் குற்ற உணர்வை மறைக்கும் முயற்சியாக,” நளாயினி நீ என்ன சொன்னாலும் சரி .. நீ கணவனான என்னுடன் தாம்பத்யம் பண்ண தயாராக இல்லை என்பதே உண்மை. நீ உன்னுடைய அடுத்த பிறவியில் ஐவருக்கு மனைவியாக, பார்க்கும் ஆண்கள் அனைவரும் உன்னை புணரும் ஆசையில் பகை உருவாகி நீ அலைக்கழிக்க படுவாய்.ஐவருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் இன்னொருவர் மேல் காதலாகி என்றும் தீராத காதலுடன் வாழ்ந்து இறப்பாய்” என்று சாபமிட்டார்.

மௌத்கல்யரின் சாபத்தை ஏற்று கொண்ட நளாயினி சின்ன புன்னகையுடன்,” பெண்களுக்கு காமமும், காதலும் , அன்பும் தீராது. அதனால்தான் அவள் தன் கணவன், காதலன், குழந்தைகள் எல்லொரிடமும் எப்பொழுதும் அன்பாக இருக்க முடிகிறது. ஆண்கள் எல்லோரும் தன் குற்றவுணர்ச்சியை கோபத்தாலேயே மறைக்க முயல்கின்றனர். இது பொது விதியாக இருக்கிறது. ஒரு பெண்ணுடன் புணர்ந்தவுடனேயே அவளை அவன் வெற்றிகொண்டதான மமதையில் அவள் தன் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். பெண்ணுடல் மட்டுமல்ல அவள் மனதையும் ஒரு சேர புணர வேண்டும் அப்பொழுதுதான் அந்த உறவு பூரணமானது. இத்தனை வருடம் என்னை மகிழ்வித்தேன் என்ற மமதையில் நீங்கள் சாபம் கொடுக்கிறீர்கள். அதை மனைவி என்பதால் நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இத்தனை வருட உடலுறவில், நீங்கள் என்னை ஒருநாளும் திருப்தி படுத்தவில்லை. என் உடலை மட்டுமே உங்களால் திருப்தி படுத்த முடிந்தது.

மனதையல்ல. அது இன்னமும் காதலுக்காக ஏங்குகிறது. காதலால் நிறைந்த கணவனின் அன்பான அணுகுமுறை மட்டுமே திருப்திகரமான உடலுறவைத் தரும் அதுவே சுகமான தாம்பத்யம். யார் யார் உருவிலோ வந்து என்னுடன் உறவு கொண்டால் அது யார் யாருக்கோ போன உறவே தவிர, இன்று வரை உங்களுக்கும் எனக்குமான உறவு என்று எதுவுமேயில்லை” என்று வார்த்தைகளில் தடுமாற்றம் இல்லாமல் நிதானமாக பேசினாள் நளாயினி. மௌத்கல்யருக்கு அவள் வார்த்தைகளில் இருந்த உண்மை புரிய ஒரு பெண்ணின் முன்னால் தான் தோற்று நிற்கிறோம் என்று அவமானமாக இருந்தது.

பெண்ணுடலில் எவ்வளவு வெறியுடன் இயங்கினாலும் அது அவளை முழுமையாக தன் ஆத்மாவில் இணைப்பது இல்லை. ஆத்மார்த்தமான காதலுடன் இணையும் போது மட்டுமே ஒரு பெண்ணை வெற்றிகொள்ள முடியும் என்ற உண்மை அறிவு நிறைந்த மௌத்கல்ய முனிவருக்கு அன்றுதான் புரிந்தது.

கணவரும் மௌத்கல்ய முனிவரின் சாபத்தின் விளைவாக நளாயினி தன் அடுத்த பிறவியில் திரௌபத மன்னனின் மகள் திரௌபதியாக பிறந்து பஞ்ச பாண்டவர்களுக்கும் மனைவியாகி கடைசி வரையில் கர்ணனின் மேல் கொண்ட காதல் தீராமலே வாழ்ந்தாள்.

••••

http://malaigal.com/?p=6147

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.