Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லவனாக இருப்பதால் எனக்கு இடையூறு செய்கிறார்கள் : கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவனாக இருப்பதால் எனக்கு இடையூறு செய்கிறார்கள் : கமல்ஹாசன் ஸ்பெஷல் பேட்டி

kamal-press-meet.jpg

உச்சி வெயில் மண்டையைப் பிளக்க நிருபர்களை தனது ‘உத்தம வில்லன்’ படத்துக்காக சந்தித்தார் நடிகர் கமல். ‘உத்தம வில்லன்’ எப்படிப்பட்ட படம்? கே.பாலச்சந்தர் உடனான நினைவுகள், லிங்கா பிரச்சனையில் ரஜினி நடந்து கொண்ட விதம் என பல விஷயங்களை மனம் திறந்து பேசிய கமல் சென்சார் போர்டின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்க வகையில் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

இதோ இனி கமல் உங்களோடு பேசுவார்

‘உத்தம வில்லன்’ உங்களுடைய சொந்தக் கதையா? இதில் யார் உத்தமன் யார் வில்லன்?

இது ஒரு நட்சத்திர நடிகனின் கதை. என்னுடைய எல்லா படங்களிலும் எனது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி இருக்கும். ஜெயகாந்தன் எழுதிய எல்லா கதைகளிலும் அவருடைய ஒரு பகுதி இருக்கத்தான் செய்யும். அது எங்கே, எப்படி என்பதுகூட நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும். இப்படத்தை எந்த இந்திய நடிகர் பார்த்தாலும் அவர் தனது வாழ்வை ஒப்பிட்டுக் கொள்ள முடியும். மற்றபடி, இது சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படமில்லை. ஒரு நடிகனின் வாழ்க்கை அவ்வளவு தான்.

உத்தமன் வில்லன் ரெண்டுமே ஒரே ஆள் தான். வில்லன் என்ற வார்த்தையை ஆங்கிலச் சொல்லாகவே எடுத்துக் கொள்கிறோம். வில்லன் என்பது தமிழ்ச்சொல்லும் கூடத்தான். வில்லுக்கு விஜயன் என்று சொல்வோமே அந்தமாதிரி. வில்லுப்பாட்டு இப்படத்தில் ஒரு சிறுபகுதியாக இடம்பெற்று இருக்கிறது. இரண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையை இணைப்பது கே.பி சார் தான் என்று வைத்துக் கொள்ளலாம். முன் ஜென்மம் கதையெல்லாம் இப்படத்தில் இல்லை.

நீங்களே ஒரு இயக்குனராக இருக்கும் போது ஏன் கதை, திரைக்கதை மட்டும் நீங்கள் எழுதிவிட்டு இயக்குனராக ரமேஷ் அரவிந்த்தை போட்டீர்கள்?

அதற்கு காரணம் நாங்கள் இரண்டு பேருமே ஒரே குருவிடம் சிஷ்யர்களாக இருந்தவர்கள். இருவருமே ரொம்ப நாளாக படம் பண்ண வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நிறைய கதைகள் பேசும்போது அவர் தேர்ந்தெடுத்த கதை இது. என்னிடம் எப்போதுமே 30 கதைகள் வைத்திருப்பேன். என்னிடம் நீங்கள் செய்ய நினைக்கும் பாத்திரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும்போது எனக்கு சிரிப்புத் தான் வரும். கதையே 30 வைத்திருக்கிறேன். அதே மாதிரி ரமேஷ் அரவிந்திடம் நிறைய கதைகள் பேசும்போது, அவர் இது நல்லாயிருக்கும் என்று தேர்ந்தெடுத்தார். அவரது தேர்வு எனக்கு பிடித்திருந்தது, அது தவிர எனக்கும் இப்படத்தில் வேறு வேலைகள் இருந்தது.

ரமேஷ் அரவிந்த் என்னுடன் பல கதை விவாதங்களில் கலந்து கொண்டவர். அதை அவரது சொந்த பயிற்சியாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ‘தசாவதாரம்’, ‘விருமாண்டி’ இப்படி பல கதைகள் அவருக்கு தெரியும். ஏனென்றால் வேறு ஒருவர் பார்த்து குற்றம் கண்டுபிடிப்பதற்கு முன்னால், பாசமாக இருக்கும் ஒருவர் குற்றம் கண்டுபிடித்தால் தவறில்லை. என்னிடம் இருக்கும் 30 கதைகளில் 20 கதைகள் ரமேஷ் அரவிந்திற்கு தெரியும். நீங்கள் இப்படத்தை இயக்குங்கள் என்று சொன்னபோது வியப்பு ஏதுமில்லை, சந்தோஷம் இருந்தது. என்றைக்காவது ஒரு நாள் நான் சொல்வேன் என்பது அவருக்கு தெரியும்.

கே.பாலசந்தரின் கடைசிப் படத்தை நாம் இயக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா?

கே.பாலசந்தரை நான் இயக்கவில்லை என்று நான் வருத்தமடையவில்லை. இதை பல இயக்குநர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நான் பாலசந்தருடைய பள்ளியில் பயின்றவன். பல சமயங்களில் தன்னுடைய உதவி இயக்குநரைக் கூட இயக்க விட்டுவிடுவார். அந்த மாதிரி நிறைய நேரம் அனுபவித்தவன் நான். ஏண்டா அவன் ரெண்டு பொருளை தூக்கிட்டு வர்றானே? அதுல ஒண்ணை நீ வாங்கிட்டு வாடாம்பார். எங்கே அவர் வாங்கிவிடக் கூடாதே என்று நான் தூக்கி கொள்வேன். இந்த மாதிரி நான் வியந்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஆகையால், நான் இயக்கவில்லை என்ற வருத்தம் எல்லாம் இல்லை.

”நான் சொந்தமாக பட நிறுவனம் ஆரம்பித்தபோது, அதன் முதல் படத்தை இயக்கும் பொறுப்பை கே.பி ஏற்க வேண்டும் என்று கேட்டேன். உடனே அவர், எல்டாம்ஸ் ரோட்டிலுள்ள என் வீட்டுக்கு வந்து அட்வான்ஸ் தொகைக்கான செக் வாங்கிக்கொண்டு சென்றார். நானே உங்கள் வீட்டுக்கு வந்து தருகிறேன் என்று சொன்னபோது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஜாம்பவான் அவர். ஆனால், கடைசிவரை அவர் என் நிறுவனத்துக்கு படம் இயக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதுபோல், ‘ராஜபார்வை’ படத்தில் நடிப்பதற்காக சாவித்திரிக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். ஏனோ அந்த சந்தர்ப்பமும் அமையவில்லை.

திரையுலகில் நான் இந்தளவு வளர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு காரணம் கே.பி மட்டும்தான். நான் முதன்முதலாக அவரை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கிறது. ஒருமுறை அவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உதவி இயக்குனராகத்தான் சேர்த்துக்கொள்ளப் போகிறார் என்று, எல்டாம்ஸ் ரோட்டில் இருந்து வாடகை சைக்கிளில் அவர் வீட்டுக்கு சென்றேன். அதற்கு முன் என் தாயார், ‘போறதுதான் போற… கையில் ஒரு போட்டோவை எடுத்துக்கிட்டு போடா’ என்றார். அவர் எதிர்பார்த்தது என்னவென்றால், பாலசந்தர் என்னை நடிக்க வைக்கப் போகிறார் என்று.

ஆனால் நான் போட்டோ எடுக்க மறுத்து விட்டேன். உடனே அம்மா, வலுக்கட்டாயமாக ஒரு போட்டோவை என் கையில் திணித்தார். அதை வேண்டாவெறுப்பாக என் பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன். அப்போது நான் மிகவும் இறுக்கமான பேண்ட், சர்ட் அணிவேன். பேண்ட்டில் பாக்கெட் கிடையாது. அதனால், கிடைத்த இடத்தில் அந்த போட்டோவை நான்காக, எட்டாக மடித்து வைத்துக்கொண்டு, கடுமையான வெயிலில் வியர்க்க, விறுவிறுக்க வாடகை சைக்கிளில் பாலசந்தர் வீட்டுக்கு சென்றேன். என்னைப் பார்த்த அவர், ‘போட்டோ எடுத்துக்கிட்டு வந்தியா?’ என்று கேட்டார். அப்போது என் அம்மாவை மனதிற்குள் திட்டினேன். மடங்கி கசங்கிப் போயிருந்த போட்டோவை பாலசந்தரிடம் கொடுத்தேன்.

என்னை உதவி இயக்குனராக தேர்வு செய்யாத அவர், திடீரென்று நடிகனாக்கி விட்டார். அந்த போட்டோவில் இரண்டு கைகளையும் பலசாலி போல் தூக்கியபடி போஸ் கொடுத்திருப்பேன். அதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டோ என்னவோ, அவர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படத்தில், அதுபோல் நான் போஸ் கொடுத்து நடித்த ஒரு காட்சியைப் படமாக்கினார். பாலசந்தர் இல்லை என்றால், கமல்ஹாசன் இல்லை. அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, ‘உத்தம வில்லன்’ படத்தில் அவரை நடிக்க வைத்திருக்கிறோம்.

இவ்வளவு நாளும் ஏன் கே.பி சாரை நடிக்க கூப்பிடவில்லை?

நான் ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். மாட்டேன் மாட்டேன் என்று அவர் தான் விலகிப் போய் கொண்டிருந்தார். நான், சிவாஜி, பாலசந்தர் மூவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று நண்பர் பிரதாப் போத்தனிடம் இருந்து ஒரு டைட்டிலை எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். கடைசியில் அந்தப்படம் நடக்காமலே போய் விட்டது. பிறகு அந்த டைட்டிலில் பாலா படமெடுத்தார். அதுதான் ‘பிதாமகன்’. முன்பெல்லாம் அவர் வேண்டாம் என்று சொன்னால் பதில் பேசாமல் போய் விடுவேன். ஆனால் இந்த முறை அவரை நடிக்கக் கூப்பிட்ட போது வீம்பு பிடித்து, நடித்தே ஆக வேண்டும் என்றேன். அதட்டி சொன்னால் பதில் பேசாமல் வந்துவிடுவேன். இந்த முறை வாதாடி செய்ததால் நடித்துக் கொடுத்தார். நல்லவேளையாக நான் வீம்பு பிடித்தேன்.

நீங்கள் பார்த்த படங்களும், படித்த இலக்கியங்களின் பாதிப்பும் உத்தம வில்லன் படத்தில் இருக்கிறதா? இந்தக் கதை எதன் இன்ஸ்பிரேஷன்?

என்னுடைய எல்லா படங்களுமே நான் பார்த்த படங்களின் சாயலும், கேள்விப்பட்ட படங்களின் சாயலும் தான். நான் வந்து ஒரிஜினல் ஆள் கிடையாது. நான் என் அம்மா அப்பா மாதிரி இருக்கிறேன் என்று சொன்னாலே நான் ஒரிஜினலாக இல்லை என்று தானே அர்த்தம். என் நண்பர்கள் நல்லவார்த்தைகள் பேசும்போதும் கெட்டவார்த்தைகள் பேசும் போதும் அதை நானும் பின்பற்றுகிறேன். உங்களைப் போல நானும் ஒருவன் தான். சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை என்பார்கள் இல்லையா. அப்படி ஒரு ஆள் தான் ‘உத்தம வில்லன்’. இப்படத்தில் என்ன இல்லைவெல்லாம் இல்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதாவது கார்கள் தலைக்குப்புற விழுந்து வெடிப்பதும், ஒருவர் மீது ஒருவர் கால் கொண்டு பலமாக தாக்குவதும், மூன்று குட்டிக்கரணங்கள் அடிப்பதும் இதில் கிடையாது. இந்தப்படம் வன்முறை அற்ற ஒரு படமாக வாய்த்துவிட்டது.

நீங்கள் என்ன படம் எடுத்தாலும் அதற்கு இடையூறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறதே?

உண்மைதான். ‘பாபநாசம்’ படத்தின் கதை என்னுடைய கதை என்று ஒருவர் வழக்கு தொடுத்தார். இப்போது வரைக்கும் அவர் எழுந்து நிற்கவில்லை. எங்கிருந்து வந்து கேஸ் கொடுத்தார், எதற்காக கொடுத்தார், எல்லாமே தெரியும். அதேபோல தான் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ பெயர் வைக்கக்கூடாது என்றார்கள். ரயில்வே நிலையத்தில் செய்ய வேண்டிய விஷயத்தை படத்தில் செய்ய சொன்னார்கள். விரைவு வண்டி என்று யாரும் சொல்வது இல்லையே. மும்பைக்கு எப்படி தமிழ் பெயர் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அதே போல பல விஷயங்கள் இருக்கிறது. அதேபோல சண்டியர் படம் எடுத்தபோது பிரச்சனை செய்தார்கள். அதே பெயரில் சமீபத்தில் ஒரு படம் வந்தபோது அமைதியாக இருந்தார்கள். ஒருவேளை இந்த வண்டி நல்லவண்டி என்பதால் டிக்கெட்டே எடுக்காமல் ஓசியில் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள் போல…

சமீபகாலமாக தணிக்கைக் குழுவின் தலையீடு படங்களில் அதிகரித்து விட்டது. இது ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை பறிப்பது போல் ஆகி விடாதா?

உண்மை தான். இப்போதுள்ள தணிக்கை குழு ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை தேசம் முழுவதும் பாதிக்கும் அளவிற்கு தணிக்கை குழுவாக இருக்கிறது. அது வெறும் சான்றிதழ் அளிக்கக் கூடிய குழு தான். ஆனால் அதையும் தாண்டி சில விஷயங்களை செய்கிறார்கள். அது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு விஷயம். நீ யார் கண்டிப்பது என்று கேட்டால், நான் கலைஞன். நான் ஒரு விஷயத்தைச் சொல்லத் துடிப்பவன். மொழியும், கலையும் என் கைவசம். அதைச் சொல்ல உரிமையும், கடமையும் எனக்கு இருக்கிறது. மீண்டும் ஒரு பிரிட்டிஷ் ஆட்சி போல, என்ன சொல்ல இருக்கிறேன் என்பதை எழுதி காட்டிவிட்டு முத்திரை வாங்கிக் கொண்டு படம் எடுக்கும் அவசியம் என் பேச்சு சுதந்திரத்தில் கால் பதித்து விட்டதாக நான் நினைக்கிறேன்.

‘மருதநாயகம்’ எடுக்கப்போவதாக செய்திகள் வருகிறதே?

ஆமாம் என் நண்பர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறேன். இது தமிழ்ப்படம் அல்ல. ஒரு ஆங்கிலப்படத்துக்கு நிகரான தமழிப்படம். இந்தப் படம் எவ்வளவு பெரியது என்றும் கூறியிருக்கிறேன். உலகப் படம், ஆங்கிலப் படம், பிரெஞ்சு படம் என்றெல்லாம் நினைவில் கொள்ளும்படி கூறியிருக்கிறேன்.

‘உத்தம வில்லன்‘, ‘பாபநாசம்‘, ‘விஸ்வரூபம் 2′ என தொடர்ச்சியாக உங்களது படங்கள் வெளிவர இருக்கிறதே?

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு நான் இடைவெளி விட்டதால் நிறைய படங்கள் சேர்ந்து விட்டது. என்னால் சும்மா இருக்க முடியாது. எனக்கு இருக்கும் கால நேரத்தை கணக்கில் கொண்டு ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆசை இருக்கிறது, திறமை ஓரளவிற்கு இருக்கிறது என்பதால் களத்தில் இறங்கி விட்டேன். இப்போது ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ முடியும் தருவாயில் இருக்கிறது. ‘விஸ்வரூபம் 2′ அதற்குப் பிறகு வரும். அதுக்கு மேலும் ஆஸ்கார் பிலிம்ஸ் தாமதித்தால் இன்னொரு புதிய படம் வரும்.

சினிமா கலையா? வியாபாரமா?

அது என்னைப் போன்ற கலைஞனுக்கு கலை. ஒரு தயாரிப்பாளருக்கு அது வியாபாரம் தான்.

அப்படியானால் ஒரு படம் தோல்வி அடையும் பட்சத்தில், அந்த நஷ்டத்தை விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி கேட்பது பற்றி உங்களது கருத்து?

யாருக்குத் தான் பண ஆசை இல்லை. உங்களுக்கு எனக்கு எல்லோருக்குமே இருக்கிறது. ரஜினியைப் பொருத்தவரை அவர் வினியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்திருக்கக் கூடாது. ஆனால் அந்த ஆசை படம் பார்க்கும் ரசிகருக்கும் வந்துவிடக் கூடாது என்பது தான் முக்கியம். நாளைக்கே அவன், பாதி படம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது. மீதி பிடிக்கவில்லை. அதனால் பாதி காசை திருப்பிக் கொடு என்று கேட்டால் என்ன செய்வது? இப்போது வருகின்ற பெரும்பாலான படங்கள் அப்படித்தான் இருக்கின்றன.

‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்துக்குப் பிறகு இளையராஜாவுடன் நீங்கள் மீண்டும் இணையவில்லை ஏன்?

அவரையும் என்னையும் ஏன் இணையவில்லை என்றெல்லாம் கேட்க முடியாது. ‘சிங்காரவேலன்’ படத்துக்குப் பிறகு ஏன் அவர் என்னை வைத்து படம் எடுப்பதில்லை என்று கேட்பது இருக்கிறது. ஆனால் அவரை தேவைப்படும் சமயங்களில் என் படங்களில் பயன்படுத்த எப்போதுமே தயாராக இருக்கிறேன். அது என் விருப்பமும் கூட.

சேரனின் ‘சி டூ ஹெச்’ உட்பட டிஜிட்டல் சினிமா வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

மெத்தனமாக இருந்து விட முடியாது. பல நேரங்களில் ஒப்புக் கொள்ளாமல் போன விஷயங்கள் எல்லாம், இப்போது நினைவில் இல்லாமல் போய்விட்டது. டிஜிட்டல் சினிமாவின் வரவு கிட்டதட்ட 15 வருடங்கள் தாமதமாக வந்திருக்கிறது. ‘அதை வெள்ளைக்காரன் முடிவு பண்றான், நாம எப்படி சார் முடிவு பண்ண முடியும்’ என்று நாம் நினைக்கிறோம். 1000 சினிமாக்கள் உருவாகும் ஒரு மாமல்லன் இந்திய சினிமா. சீன சினிமா இந்த இரண்டு நாட்டு சினிமாக்களும் இணைந்து ஒரு முடிவு எடுத்தால் அதை உலக சினிமா கேட்டுக் கொள்ள வேண்டும். இது தான் வியாபார நிஜம். இதை சீனா புரிந்து கொண்ட அளவிற்குக் கூட இந்தியா புரிந்து கொள்ளவில்லை.

சமீபகாலமாக மாற்றுமொழிப்படங்களை அப்படியே திருடி படமெடுப்பது அதிகமாகி விட்டதே? இது சரியா?

முன்பை விட இப்போது தான் கதை திருட்டு குறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முன்பு சுட்டிக் காட்டுவதற்கு நிறைய பேர் இல்லை.

தேங்காயும் கையுமாக காஸினோ தியேட்டருக்குப் போய் தேங்காயை உடைத்து இது என்னுடைய கதை என்று சொன்னவர்களை எனக்குத் தெரியும். ஏனென்றால் அங்கேயே உடைத்து விட்டதால், கதை அவருடையது ஆகிவிடும் என்று எண்ணம். இப்போது இதுவெல்லாம் மாறி, ஒரு சின்ன கர்வம் தமிழனுக்கு வந்திருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. நல்ல விஷயம் ஒரு ஊரில் இருக்கிறது என்றால், அதை நம்ம ஊருக்கு எடுத்து வருவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். எல்லாம் கம்பன் செய்த வேலை தான். என்றார் கமல்.

http://www.soundcameraaction.com/hot-news/kamal-speech-at-uththama-villain-press-meet/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன் என்பதற்கு கமலிடம் உள்ள வரைவிலக்கணம் என்ன..?! :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.