Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் எதிர் இந்தியா கிரிக்கெட் தொடர்

Featured Replies

  • தொடங்கியவர்

அஸ்வின் அபாரம்: வங்கதேசம் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
 

 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணி முதலில் பேட் செய்து 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மிர்பூரில் இந்திய அணி வெற்றி பெற 308 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் எடுத்த அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதிரடியாகத் தொடங்கி இடையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ங்கிய போது, 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அதாவது 123/1 லிருந்து அஸ்வினின் பந்து வீச்சில் அடுத்தடுத்து 3 விக்கெடுகளை இழந்து 146/4 என்று சரிந்தது.

 

இதில் தமிம் இக்பால் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 60 ரன்களையும், முன்னதாக சவுமியா சர்க்கார் 56 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 54 ரன்களையும் எடுத்திருந்தனர், தொடக்க விக்கெட்டுக்காக 13.4 ஓவர்களில் 102 ரன்களை இருவரும் அனாயசமாகக் குவித்தனர்.

 

முதலில் சவுமியா சர்க்கார், ரெய்னாவின் அபாரமான நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோரை அஸ்வின் வீழ்த்தினார்.

பிறகு ஷாகிப் அல் ஹசன், ஷபீர் ரஹ்மான் இணைந்து 14 ஓவர்களில் 83 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஜடேஜா நன்றாக வீசிவந்த வேளையில் சபீர் ரஹ்மான் 41 ரன்களில் பவுல்டு ஆனார். ஸ்லாக் ஸ்வீப் செய்து தோல்வி அடைந்தார் சபீர்.

 

நசீர் ஹுசைன் இறங்கி 2 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசி 19 ரன்களில் 26 ரன்கள் எடுத்திருந்த போது, 68 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த ஷாகிப் அல் ஹசன், உமேஷ் யாதவ்வின் எங்கு வேண்டுமானாலும் அடிக்க வேண்டிய பந்தை பாயிண்டில் கேட்ச் கொடுத்தார்.

 

34 ரன்கள் எடுத்த நசீர் ஹுசைன், ஜடேஜாவின் அருமையான கேட்சுக்கு யாதவ்விடம் வீழ்ந்தார். மஷ்ரபே மோர்டசா 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்கதேசம் 307 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

 

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் தீவிரம் இல்லை, வேகம் இல்லை. அச்சுறுத்தலும் இல்லை. மாறாக ஸ்பின்னர்கள் 28 ஓவர்களில் 139 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். குறிப்பாக அஸ்வின் 51 ரன்களுக்கு 3 விக்கெட் என்பது இந்தப் பிட்சில் அதிசிக்கனமான வீச்சே. ரெய்னா ஆகச் சிக்கன பவுலர், விக்கெட் எடுக்காவிட்டாலும் 10 ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஜடேஜா 8 ஓவர்களில் 48 ரன்களுக்கு 1 விக்கெட். குமார் 7 ஓவர்கள் 37 ரன்கள் 2 விக்கெட். யாதவ் 8 ஓவர் 58 ரன் 2 விக்கெட். மோஹித் சர்மா மறக்க வேண்டிய போட்டி 4.4 ஓவர்களில் 53 ரன்கள் ஒரு விக்கெட். கோலியும் வீசினார் 2 ஓவர்கள் 12 ரன்கள் விக்கெட் இல்லை.

 

வங்கதேசம் 25 ரன்கள் குறைவாக எடுத்ததாக ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு நல்ல பேட்டிங் பிட்ச். எனவே இந்தியா 308 ரன்களை எப்படி துரத்துகிறது என்பது ஆர்வமூட்டுவதாக அமையும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-307-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article7329879.ece

  • தொடங்கியவர்

தவற விட்ட கேட்சுக்கு தவறாக அவுட் கொடுத்த நடுவர்: தப்பினார் ஷிகர் தவண்
 

 

வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் 308 ரன்கள் இலக்கைத் துரத்தி வரும் இந்திய பேட்டிங்கின் போது நடுவர் தவறால் சிறு சுவாரசியம் ஏற்பட்டது.

 

ஆட்டத்தின் 10-வது ஓவரை மஷ்ரபே மோர்டசா வீசினார். தவண் 15 ரன்களில் மோர்டசாவின் 2-வது பந்தை எதிர்கொண்டார். பந்து அருமையாக உள்ளே வந்து தவணின் மட்டை உள்விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்சாகச் சென்றது.

 

சுலபமான அந்தக் கேட்சை அவர் கோட்டைவிட்டார். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக நடுவர் ராட் டக்கர் அவுட் என்றார். அவர் பார்க்கும் போது பந்து பிடிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் முஷ்பிகுர் மிக மோசமாக அதனை தவற விட்டது தெரியாமல் கேட்ச் பிடிக்கப்பட்டதாக டக்கர் அவுட் என்றார்.

தவணும் பந்தைக் கவனிக்காமல் அவுட் என்று பெவிலியன் நோக்கி சில அடிகள் நடக்கத் தொடங்கினார். கேட்சை விட்டது தெரிந்தவுடன் வங்கதேச வீரர் ஒருவர் தவணை ரன் அவுட் செய்தார், அதற்கும் முறையீடு எழுப்பப் பட்டது பெரிய வேடிக்கை.

 

காரணம் பேட்ஸ்மென் தவறான அவுட்டுக்கு வெளியேறும்போது அது ரன் ஓடியதாக கணக்கில் வராது, எனவே அது விதிமுறைகளின் படியே ரன் அவுட் இல்லை.

 

ஆனால் வங்கதேச வீரர்கள் கேட்ச் கோட்டைவிட்ட ஏமாற்றத்தில் இதற்கும் அப்பீல் செய்தனர். பிறகு நடுவர்கள் வந்து அவர்களுக்கு புரிய வைக்க நேரிட்டது.

 

இந்தியா தடவலாகத் தொடங்கினாலும் அதன் பிறகு சில ஷாட்களை ஆடத் தொடங்கி 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது.

 

தவண் 20 ரன்களுடனும், ரோஹித் சர்மா 3 பவுண்டரி ஒரு அபாரமான சிக்சருடன் 45 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D/article7329960.ece

  • தொடங்கியவர்

இந்தியா 188/7   36.5 ஓவரில்

 

பங்களாதேஷ் வெற்றியை நோக்கி......

  • தொடங்கியவர்

ரன் ஓடும் போது குறுக்கே வந்த பவுலரை இடித்துத் தள்ளிய தோனி
 

 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரன் ஓடும் போது குறுக்கே வந்த வங்கதேச பவுலரை தோனி இடித்துத் தள்ளினார்.

 

இந்திய அணி 123/4 என்று தோல்வியைத் தவிர்க்க போராடி வந்த நேரத்தில் ஆட்டத்தின் 25-வது ஓவரில் அறிமுக இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தோனிக்கு ஒரு பந்தை யார்க்கர் லெந்தில் வீசினார். தோனி அதனை மிட் ஆஃபில் தட்டி விட்டு ஒரு விரைவு சிங்கிளுக்காக ரன்னர் முனை நோக்கி ஓடி வந்தார்.

 

அப்போது பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் இடது புறமாக வேண்டுமென்றே நகர்ந்து வந்து தோனியின் ஓட்டத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துமாறு வந்தார்.

தோனி அவரை பலமாக இடித்துத் தள்ளினார். இதனால் பவுலருக்கு லேசாக பொறி கலங்கிவிட்டது. உடனேயே தோனி நடுவரிடம் பவுலர் வேண்டுமென்றே குறுக்காக வந்தார் என்று சைகை செய்தார்.

 

ஆனால், பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் பொறிகலங்கி அந்த ஓவர் பந்து வீசாமல் பெவிலியன் சென்றார். இந்த பவுலருக்கு குறுக்கே வரும் பழக்கம் இருந்தது. அவரை ஒருவரும் எச்சரிக்கவில்லை. மாறாக தோனியிடம் தன் வேலையை அவர் காட்ட இடித்துத் தள்ளினார் தோனி. பேட்ஸ்மென் ஓடும் பாதையில் குறுக்காக ஒருவரும் வரக்கூடாது. ஏற்கெனவே மிட்செல் ஜான்சனை ஒருமுறை தோனி இதுபோன்று இடித்து நகர்த்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

சிறிது நேரம் தோனி செய்கை பற்றி அதிர்ச்சி நிலவினாலும் தமிம் இக்பால் நடந்ததைப் புரிந்து கொண்டு புன்னகைக்க, அவர் தோள் மீது கைபோட்டபடி தோனி எதையோ பேசியதும் நிகழ்ந்தது.

 

ஆனால், நகைமுரண் என்னவெனில் இதனால் கவனம் இழந்த தோனி அடுத்த ஓவரில் ஷாகிப் அல் ஹசன் பந்தை டிரைவ் ஆட முயன்றார் பந்து வெளியே சென்றது. எட்ஜ் ஆனது, முஷ்பிகுர் ரஹிம் கேட்சை எடுத்தார் தோனி 5 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களில் தடுமாறி வருகிறது.வங்கதேச அணி லேசாக வெற்றியின் வாடையை முகர்ந்ததாகவே தெரிகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article7330052.ece

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் 79 ஓட்டங்களால் வெற்றி.

  • தொடங்கியவர்

அபாரமான பந்துவீச்சின் மூலம் இந்தியாவுக்கு பாடம் கற்பித்த வங்கதேசம் வெற்றி

 

மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆக்ரோஷமாக பந்து வீசிய வங்கதேசம் இந்திய அணிக்கு பாடம் கற்பித்து வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் இடையில் ஏற்பட்ட சரிவுக்குப் பின் மீண்டெழுந்து 307 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி 228 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. வங்கதேசம் சொந்த நாட்டில் பெறும் 9-வது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடத்தில் இல்லாத வேகம், ஆக்ரோஷம் அனைத்தும் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்களிடத்தில் இருந்தது, கட்டுக்கோப்பும் நேர்த்தியும் இருந்தது. அனைத்திற்கும் மேலாக இந்திய அணியின் பலவீனத்தை அறிந்தார் போல் தெரிகிறது. ஒரு பேட்டிங் சாதக ஆட்டக்களத்தில் ஒரு அபாரமான பந்துவீச்சினால் இந்த வெற்றியை வங்கதேசம் தங்களுக்காக பெருமுயற்சியுடன் வருவித்துக் கொண்டது என்றே கூற வேண்டும். இந்திய அணி சிந்திக்க வேண்டியது நிறைய உள்ளது.

 

வங்கதேசத்தின் அறிமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் முக்கிய கட்டத்தில் ரோஹித் சர்மா, அஜிங்கிய ரஹானே விக்கெட்டை சாதுரியமான பந்துவீச்சில் வீழ்த்த, பிறகு தோனியின் குறுக்கே வந்து அவரால் பலமாக இடித்து தள்ளப்பட்டதில் நிலைகுலைந்து பெவிலியன் சென்றார், பிறகு

மீண்டும் பந்து வீச வந்து ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ரெய்னா, மற்றும் அஸ்வினை வீழ்த்தி ஹேட்ரிக் வாய்ப்பை பெற்றார். ஆனால் புவனேஷ் குமார் ஹேட்ரிக்கை தடுத்தார். ஆனால் சிறிது நேரத்தில் ஜடேஜாவையும் வீழ்த்தி அறிமுக ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார்.

 

தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா மற்றும் தவண் ஆகியோரை தனது ஸ்விங்கினால் சற்றே நெருக்கடிக்குள்ளாக்கினார் இந்த அறிமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஹ்மான்.

 

தவண் 3 நல்ல பவுண்டரிகளை அடித்தாலும் முஷ்பிகுர் ரஹிம் அவருக்கு 2 கேட்ச்களை அடுத்தடுத்து கோட்டை விட்டார். அதில் ஒன்றுதான் இன்சைடு எட்ஜ் கேட்ச். அதைத்தான் நடுவர் கேட்ச் பிடிக்காதபோதே அவுட் என்று கூறி சுவாரசியம் ஏற்படுத்தினார். ஆனால் அதன் பிறகு இரண்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாத தவண் ஆக்ரோஷமாக வீசிய டஸ்கின் அகமது பந்தை ஒதுங்கிக் கொண்டு அடிக்கப்போனார், பந்து அவருக்கு நெருக்கமாக எழும்ப அப்பர் கட் செய்ய முயன்று எட்ஜ் செய்து முஷ்பிகுரிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் வெளியேறினார்.

 

16 ஓவர்களில் 95/1 என்று இந்தியா நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ரோஹித் சர்மா இடது கை வேகப்பந்து அறிமுக வீச்சாளர் ரஹ்மானை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு அபாரமான புல் ஷாட் அடித்து ஸ்டெடியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது கோலி இறங்கினார்.

 

மோசமான விராட் கோலியின் டவுன் ஆர்டரை மாற்ற வேண்டிய தேவை உள்ளது:

விராட் கோலி களமிறங்கினார். 1 ரன் எடுத்தார். பிறகு டஸ்கின் அகமது வீசிய ஒரு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தொட்டார், கெட்டார்.

பந்து கொஞ்சம் பவுன்ஸ் கூடுதலாக இருந்தது. ஒன்று அதனை பளார் என்று அறைந்திருக்க வேண்டும், இல்லையேல் விட்டிருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் தொட்டுக் கொடுத்து கேட்ச் அளித்து வெளியேறினார். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியில் சதம் எடுத்ததையடுத்து உருப்படியாக ஒரு இன்னிங்ஸை கூட கோலி ஆடவில்லை.

 

அவரது டவுன் ஆர்டரை 1ம் நிலையிலிருந்து ஜடேஜா டவுனுக்கு மாற்ற வேண்டும், ரஹானேயை அவர் டவுனில் இறக்க வேண்டும். இல்லையேல் அவருக்கு எச்சரிக்கை அளிக்குமாறு அணியில் இருந்து ஒரு போட்டிக்கு உட்கார வைத்து விட்டு அம்பாத்தி ராயுடுவை களமிறக்கியிருக்க வேண்டும். ஒரு சர்வதேச தரம் வாய்ந்த வீரராகக் கருதப்படுபவர் 1 ரன்னில் அவுட் ஆவதென்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதுவும் அவர் ஆடி அவுட் ஆன ஷாட் லீக் வீரர் ஆடும் ஷாட் வகையைச் சேர்ந்தது. கோலி பற்றி உயர்த்திப் பேசப்படும் அவரது தரநிலைகளுக்கு அவர் பொருத்தமானவர்தானா என்ற கேள்வியை அவரது இன்றைய ஷாட் எழுப்பியுள்ளது, இவர் ஆட்டமிழந்ததுதான் திருப்பு முனையாக அமைந்து விட்டது.

 

3-ம் நிலை என்பது மிகவும் முக்கியமான டவுன் ஆர்டர். ஏனெனில் 150 நோ லாஸ் என்றாலும், 0வுக்கு 1 விக்கெட் என்றாலும் ஆட்டம் 3-ம் நிலை வீரர் கையில்தான் உள்ளது. எனவே இந்த முக்கிய டவுனில் இன்னும் பொறுப்புடன் ஆடக்கூரிய வீரரைக் களமிறக்குவது அவசியம்.

 

இவர் ஆட்டமிழந்தவுடன் 68 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா ரன் எடுக்க முடியாமல் இருந்த சமயத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய பந்தை முன்கூட்டியே மட்டையை மடக்க பந்து முன் விளிம்பில் பட்டு மிட் ஆஃபில் மஷ்ரபேவுக்கு எளிதான கேட்ச் ஆனது.

 

ரஹானேவுக்கு முதல் ரன்னை எடுக்கவே மிகவும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. 10 பந்துகள் எடுத்துக் கொண்டார். கடைசியில் ரன் விகிதம் எகிற, வங்கதேச வீச்சும் ஆக்ரோஷமாகவும், கட்டுக்கோப்புடனும், நேர்த்தியாகவும் ஆக ரஹானே 25 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ரோஹித் போலவே ஸ்லோயர் பந்தை ஆட முன்னமேயே பேட்டை மடக்க, பந்து முன் விளிம்பில் பட்டு ஆஃப் திசையில் நசீர் ஹுசைனிடம் கேட்ச் ஆனது, அவர் பந்தை பிடித்து விட்டு மகிழ்ச்சியில் அதனை காலால் ஒரு உதை உதைத்தார்.

 

கவனம் சிதறிய தோனி:

115/4. 23 ஓவர்கள் முடிந்த நிலையில் தோனி களமிறங்கினார். அவர் இன்னிங்ஸை நிலைநிறுத்தி பிறகு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அதே வேளையில் ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் தேவைப்படும் விகிதமும் எகிறிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் ஒரு நெருக்கமான சிங்கிளை அவர் ரஹ்மான் பந்தில் எடுக்க முயன்ற போது பவுலர் ரஹ்மான் குறுக்கே வேண்டுமென்றே வந்தார். தோனி அவரை பலமாக இடித்துத் தள்ளினார். இடியின் பலம் காரணமாக நிலை குலைந்த அவர் அந்த ஓவரை முடிக்காமலேயே பெவிலியன் சென்றார்.

இந்தச் சம்பவத்தினால் சற்றே சலசலப்பு நிகழ, தோனி எப்பவும் கூலாக இருப்பவர் சற்றே கவனம் இழந்தாற்போல்தான் ஆனது. அடுத்த ஓவரில் ஷாகிப் அல் ஹசன் வீசிய பந்தை அவர் எப்போதும் ஆட விரும்பாத ஒரு ஷாட்டை ஆடி எட்ஜ் செய்து வெளியேறினார்.

 

 

முஸ்தபிசுர் ரஹ்மான் அபாரமான பந்து வீச்சு:

ரெய்னாவும், ஜடேஜாவும் சேர்ந்து ஸ்கோரை 128/5 என்ற நிலையிலிருந்து 188 வரை உயர்த்தினர். 35-வது ஓவரில் பவர் பிளே எடுக்கப்பட்டது. ஜடேஜா, ரூபல் ஹுசைனை 2 பவுண்டரிகள் விளாசினார். ஏற்கெனவே ஒரு சிக்சரை அடித்த ரெய்னா 37-வது ஓவரில் ரஹ்மானை அபாரமாக கவர் திசையின் மேல் ஒரு சிக்சர் விளாசினார். ஆனால் அதே ஓவரில் வேகத்தை திடீரென குறைத்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ரெய்னாவின் ரீச் செல்லாத இடத்தில் ஒரு பந்தை பிட்ச் செய்து உள்ளே கொண்டு வந்தார். ரெய்னா க்ரீஸிலிருந்தே அதனை டிரைவ் ஆட முயன்றார் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

 

அடுத்த பந்தை அஸ்வினுக்கு குறுக்காக ஸ்விங் செய்ய அஸ்வின் தொட்டார், கேட்ச் ஆனது வெளியேறினார். அறிமுக போட்டியிலேயே ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார் ரஹ்மான்.ஆனால் புவனேஷ் குமார் அடுத்த பந்தில் 1 ரன் எடுத்து ஹேட்ரிக்கைத் தடுத்தார்.

 

ஜடேஜா 42 பந்துகளில் போராடி 32 ரன்கல் எடுத்து முஸ்தபிசுர் ரஹ்மானின் 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார். ஒரு கட்டர் பந்து, அதனை தூக்கி அடித்து லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகள்! தோனியிடம் இடி வாங்கிய பிறகு எழுச்சிபெற்றார் முஸ்தபிசுர் ரஹ்மான்.

புவனேஷ் குமார், ஷாகிப் அல் ஹசனை ஒரு பவுண்டரியும், டீப் மிட்விக்கெட்டில் ஸ்லாக் ஸ்வீப்பில் ஒரு சிக்சரும் அடித்தார்.

 

மஷ்ரபே மோர்டசாவிடம் மோஹித் சர்மா மறுமுனையில் முஷ்பிகுரிடம் 5-வது கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2 கேட்ச்களை விட்டு மோசமாகத் தொடங்கிய முஷ்பிகுரிடம் இந்திய வீரர்கள் 5 கேட்ச்களை கொடுத்துள்ளார்கள் எனும்போது இந்திய வீரர்களின் ஷாட் தேர்வு என்ன தரத்திலானது என்பது தெரிகிறது.

 

வங்கதேசம் இன்னின்ஸை முடிக்க சற்று நேரம் ஆனது. புவனேஷ் குமார் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 25 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். உமேஷ் யாதவ்வை, ஷாகிப் அல் ஹசன் எல்.பி. செய்ய இந்தியா 228 ரன்களுக்கு 46-வது ஓவரில் சுருண்டது.

 

வங்கதேச அணியின் ஹீரோ அறிமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், இவர் 9.2 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்தார். டஸ்கின் அகமது 21 ரன்களுக்கு 2 விக்கெட். ஷாகிப் அல் ஹசன் 33 ரன்களுக்கு 2 விக்கெட்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7330122.ece

  • தொடங்கியவர்

தோனியிடம் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் வற்றி விட்டதா?

 

இந்தியா- வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி மிர்பூரில் நடந்தது. இந்த போட்டியில், 4வது ஓவர் வீசிய வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்ஃதாபீர் ரக்மான் அடிக்கடி பிட்சின் குறுக்கே வந்தார். அப்போது பேட் செய்த ரோகித் சர்மா ரக்மானை எச்சரித்தார். அடுத்து 24வது ஓவரை ரக்மான் வீசிய போது, அந்த ஓவரின் 2வது பந்தை தோனி தட்டி விட்டு ரன் எடுக்க ஓடி வந்தார். அப்போதும் ரக்மான் பிட்சின் குறுக்கே வந்து நின்று கொண்டிருந்தார்.

 

ரக்மான் பிட்சின் குறுக்கே நிற்பதை சற்று முன்னாடியே பார்த்து விட்ட தோனி, அவரை விட்டு விலகி ஓட முயற்சிக்கவில்லை. மாறாக வந்த வேகத்தில் ரெஸ்லிங் வீரர் மோதுவது போல மோதி ரக்மானை தள்ளி விட்டார். இதில் நிலை தடுமாறிய ரக்மான் காயம்பட்டு அதிர்ச்சியில் களத்தை விட்டே வெளியேறி விட்டார். இந்த சூழலில் ரக்மான் மீது தப்பே இருந்தாலும் இது போன்று வேகமாக தோனி மோதியிருக்க வேண்டியதில்லை.

 

             

கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி இது போன்று உணர்ச்சிவசப்பட்டு நடந்தது அவருக்குள்ள நெருக்கடியையே காட்டியது. எதிரணி வீரர் மீது தப்பே இருந்தாலும் அதனை நயமாக எடுத்து சொல்ல வேண்டியது கேப்டன் என்பவரின் பொறுப்பு. அதை விடுத்து விட்டு ரக்மான் மீது அவர் ஆவேசம் காட்டியது தோனியிடம் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் குறைந்து விட்டதையே காட்டுகிறது.

 

பிட்சின் ஊடே வந்து நின்றது ரக்மானின் தவறு என்பதால் இந்த விஷயத்தை நடுவர்கள் பெரிதுபடுத்தவில்லை. அதே வேளையில் வங்கதேச வீரர் ஒருவர் இவ்வாறு நடந்திருந்தார் இந்திய ஊடகங்கள் அமைதி காக்குமா? என்றும் சொல்ல முடியாது. இந்த போட்டியில் தோனி 5 ரன்களை மட்டுமே எடுக்க, களத்தை விட்டு வெளியே சென்ற முஸ்தாஃபீர் ரக்மான் மீண்டும் திரும்பினார். நேற்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

 

எங்கே ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் இல்லையோ அங்கே வெற்றியும் தங்காது என்பது போல இந்திய அணி நேற்று 79 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

 

http://www.vikatan.com/news/article.php?aid=48205

  • தொடங்கியவர்

ரன் ஓடும்போது பவுலரை இடித்த குற்றத்திற்காக டோணிக்கு சம்மன்!

 

டாக்கா: ரன் ஓடும்போது வங்கதேச பவுலரை இடித்து தள்ளியதற்காக இந்திய கேப்டன் டோணிக்கு மேட்ச் ரெப்ஃரி சம்மன் அனுப்பியுள்ளார். நேற்று நடைபெற்ற வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் 25வது ஓவரில், இந்திய வீரர் டோணி, ரன் அடித்துவிட்டு மறுமுனைக்கு ஓடினார்.

eqnztf.jpg

அப்போது குறுக்கே நின்ற பவுலர் முஷ்தபிகுர் ரஹ்மானை இடித்துவிட்டார்.

 

பலசாலியான டோணி இடித்ததாலோ என்னவோ, ரஹ்மான், காயமடைந்தார். அந்த ஓவரை கூட முழுமையாக வீசாமல் ஓய்வுக்கு சென்றுவிட்டார். இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதா, தவறுதலாக நடந்ததா என்பதை மேட்ச் ரெப்ஃரியான ஜிம்பாப்வேயின் ஆன்டி பைக்ரோப்ட் ஆய்வு செய்து வருகிறார். சம்பவம் பற்றி டோணியிடம் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பவுலரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

 

விசாரணை முடிவில் டோணிக்கு தண்டனை கிடைக்குமா இல்லையா என்பது இன்று மாலைக்குள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி லெவல் 1 படியான தவறு என்றால், அபராதம் விதிக்கப்படும். லெவல் 2ன்கீழ் தவறாக ரெப்ஃரி கருதினால், டோணி போட்டியில் ஆட தடை விதிக்கப்படலாம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ms-dhoni-summoned-match-referee-pushing-mustafizur-rahman-229150.html

  • தொடங்கியவர்

ரன் ஓடும்போது பவுலரை இடித்த டோணிக்கு அபராதம்.. தடையில் இருந்து தப்பினார்!

 

டாக்கா: ரன் ஓடும்போது வங்கதேச பவுலரை இடித்து தள்ளியதற்காக இந்திய கேப்டன் டோணிக்கு போட்டி ஊதியத்தில் 75 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளார் மேட்ச் ரெப்ஃரி. நேற்று நடைபெற்ற வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டியின் 25வது ஓவரில், இந்திய வீரர் டோணி, ரன் அடித்துவிட்டு மறுமுனைக்கு ஓடினார். அப்போது குறுக்கே நின்ற பவுலர் முஷ்தபிகுர் ரஹ்மானை இடித்துவிட்டார்.

 

 

 பலசாலியான டோணி இடித்ததாலோ என்னவோ, ரஹ்மான், காயமடைந்தார். அந்த ஓவரை கூட முழுமையாக வீசாமல் ஓய்வுக்கு சென்றுவிட்டார். இந்த சம்பவம் வேண்டுமென்றே நடத்தப்பட்டதா, தவறுதலாக நடந்ததா என்பதை மேட்ச் ரெப்ஃரியான ஜிம்பாப்வேயின் ஆன்டி பைக்ரோப்ட் ஆய்வு செய்தார். சம்பவம் பற்றி டோணி, இந்திய அணி மானேஜர் பிஸ்வாரப் டே, அணியின் இயக்குநர், ரவி சாஸ்திரி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நேற்றிரவே, சம்மன் அனுப்பினார். பாதிக்கப்பட்ட பவுலரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து ரெப்ஃரி முன்னிலையில், இந்திய தரப்பில் மூவரும் ஆஜராகி, விளக்கம் கொடுத்தனர். இந்திய அணி மற்றும் டோணி தரப்பில் ஒரு வாதம் முக்கியமாக முன் வைக்கப்பட்டது. அதாவது, டோணி வேண்டும் என்றே பவுலரை இடிக்கவில்லை.

 

அவர் தனது கையை உயர்த்தவில்லை. தோளோடு சேர்ந்துதான் கை இருந்தது. எனவே, லெவல்-2ன்கீழான தவறில் இது வராது என்று வாதிட்டனர். டிவி ரிப்ளேயிலும், இந்திய அணி சார்பில் கூறப்பட்டது உண்மைதான் என்பதை ரெப்ஃரி உறுதி செய்தார். ஆனால் உடலால் பிற வீரர்களுக்கு காயம் ஏற்படுத்தினாலே அது லெவல்-2ன் கீழான குற்றம்தான் என்று விதிமுறை இருப்பதால், ரெப்ஃரி அந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தார்.

 

அந்த விதிமுறையின்கீழ், போட்டி ஊதியத்தில் 50 முதல் 100 சதவீதம் அபராதம் விதிக்கவும், ஒரு போட்டியில் தடை விதிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனல், ரெப்ஃரி டோணிக்கு 75 சதவீத அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனால், அடுத்த போட்டியில் டோணி ஆடுவதற்கு எந்த இடையூறும் இல்லை.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ms-dhoni-summoned-match-referee-pushing-mustafizur-rahman-229150.html

  • தொடங்கியவர்

வங்கதேசத்திடம் தோற்றதற்கு வண்டி வண்டியாய் காரணம் வச்சுருக்கு இந்திய அணி...!

 

டாக்கா: வங்கதேசத்திடம் முதல் ஒரு நாள் போட்டியில் தோற்றுப் போனதற்கு ஏகப்பட்ட காரணங்களை கையில் லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறது இந்திய அணி. அடடே இவ்வளவு நடந்து போச்சா.. அச்சச்சோ என்று ரசிகர்கள் இதை நம்பி ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் காரணங்களைக் கூறுகிறது இந்திய அணி. இரு அணிகளும் முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் மோதின. போட்டி டிரா ஆனது.

osyiyd.jpg

அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்கியுள்ளது. நேற்று முதல் போட்டி நடந்தது. பிரமாதமாக பேட் செய்த வங்கதேசம் 307 ரன்களைக் குவித்தது. இந்தியாவும் நன்றாகத்தான் சேஸிங்கைத் தொடங்கியது. ஷிகர் தவானும், ரோஹித் சர்மாவும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால் பின்னர் வந்தவர்கள் காலரா வந்த கோழி போல ஒடுங்கிப் போய் ஓடி போய் விட்டனர்.

 

 பொறுப்பே இல்லாமல் ஆடியவர்கள்தான் நேற்று இந்திய அணியில் அதிகம். முன்னணி வீரர்கள் பலரும் நேற்று சரிவர சோபிக்கவில்லை. விளைவு கேவலமான தோல்வியில் போய் முடிந்தது. தோல்வி குறித்து கேப்டன் டோணி நிறையக் காரணங்களை அடுக்கியுள்ளார். அதிலிருந்து சில...

 

வங்காளதேசம் ஓரு அணியாக சிறப்பாக விளையாடியது. அவர்கள் முதலில் இருந்தே நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

 

மழை எங்களுக்கு உதவியது. இதனால் 300 ரன்னுக்கு கட்டு படுத்தினோம்.

 

ஆனால் பேட்டிங் சாதகமாக அமையவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினர். குறிப்பாக சுரேஷ் ரெய்னா பங்கு முக்கியமானது.

 

வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சரியாக செய்ய வில்லை.

 

அதை வங்கதேச வீரர்கள் திறம்பட எதிர் கொண்டனர்.

 

இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் நடுவர் செய்த குழப்பம் வேறு பிடுங்கித் தின்றது. இந்தியா பேட் செய்தபோது 10வது ஓவரின்போது வங்கதேச கேப்டன் மோர்தசா பந்து வீசினார். அதை எதிர்கொண்ட ஷிகர் தவான் அடித்தார். அது நேராக விக்கெட் கீப்பரிடம் போனது. ஆனால் கீப்பர் முஷிபிகுர் ரஹீம் கேட்ச் பிடிக்காமல் விட்டு விட்டார். இதை நடுவர் கவனிக்கவில்லை. டக்கென விரலை உயர்த்தி விட்டார் மேல் நோக்கி. ஆனால் தான் செய்த தவறை உணர்ந்ததும் உடனே நாட் அவுட் என்று அறிவித்தார். இந்த சமயத்தில் தவான் சற்று கிரீஸை விட்டு நகர்ந்து போயிருந்ததைப் பயன்படுத்தி ஸ்டம்ப்பை நோக்கி பந்தை வீசி ரன் அவுட்டாச்சும் கொடுங்க என்று வங்கதேச வீரர்கள் முட்டாள்தனமாக கேட்க, நடுவர் நிராகரித்து விட்டார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/why-india-lost-bangladesh-229133.html

  • தொடங்கியவர்

'வேண்டுமென்று மோதவில்லை...அதுவாக நடந்துவிட்டது!'- தோனி விளக்கம்

 

வங்க தேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீர் ரக்மான் மீது வேண்டுமென்று மோதவில்லை; எதிர்பாராமல் நடந்துவிட்டது என இந்திய அணியின் கேப்டன் தோனி விளக்கமளித்துள்ளார்.

மிர்பூரில் நேற்று நடந்த போட்டியின் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது,  25வது ஓவரில் ரன் எடுக்க ஓடிய தோனி, பிட்ச்சின் குறுக்கே வந்த வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாஃபீர் ரக்மான் மீது மோதினார். மோதிய வேகத்தில் பிட்ச்சின் வெளியே வீசப்பட்ட ரக்மான், பெவிலியன் சென்று சிறிது நேர ஓய்வுக்கு பின்னரே மீண்டும் களத்திற்கு திரும்பினார்.

 

இந்த போட்டியில்தான் முதன் முதலாக வங்கதேச அணிக்காக 19 வயது ரக்மான் களமிறங்கினார். 50 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

 

இந்நிலையில் ரக்மான் மீது மோதியது குறித்து தோனி விளக்கமளித்துள்ளார், '' நான் விலகி ஓடுவேன் என்று அவர் நினைத்தார். அவர் விலகிவிடுவார் என்று நான் நினைத்தேன்.ஆனால் இரண்டு பேருமே விலகவில்லை மோதல் நடந்து விட்டது. விளையாட்டு போட்டியில் இது சகஜம்தான். இதனை பெரிதுபடுத்த ஒன்றும் இல்லை. போட்டி முடிந்ததும் ரக்மானிடம் நான் பேசினேன்'' என தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கேப்டன் தோனிக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதமும் வங்கதேச பந்துவீச்சாளர் ரக்மானுக்கு 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

வங்கதேச பத்திரிகைகள், தோனியின் கால்பந்து திறமையை இந்த சம்பவம் காட்டுகிறது என்று எழுதியுள்ளன.

 

http://www.vikatan.com/news/article.php?aid=48230

  • தொடங்கியவர்

பதிலடி கொடுக்குமா இந்தியா: இன்று வங்கத்துடன் 2வது மோதல

 

India, Bangladesh, One Day International Cricket, Mirpur

மிர்புர்: மிர்புரில் இன்று நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் தோற்ற இந்திய அணி இம்முறை பதிலடி கொடுக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.                        

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வீழ்ந்தது. இரண்டாவது போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.                         

கோஹ்லி எழுச்சி: முதல் போட்டியில் ரோகித் சர்மா (63), தவான் (30) சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். இவர்கள் மீண்டும் அசத்தலாம். பேட்டிங்கில் சொதப்பி வரும் விராத் கோஹ்லி, கடைசியாக விளையாடிய மூன்று ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் (3, 1, 1) தான் எடுத்தார். இவர், ‘பார்முக்கு’ திரும்பினால் நல்லது. கடந்த போட்டியில் சொற்ப ரன்னில் அவுட்டான  ரகானே (9) எழுச்சி காண வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ ஓரளவு ஆறுதல் தந்த ரெய்னா (40), ரவிந்திர ஜடேஜா (32) மீண்டும் கைகொடுத்தால் வெற்றிப் பாதைக்கு திரும்பலாம். வங்கதேசத்தின்  ரஹ்மானை இடித்த சர்ச்சையை கடந்து தோனி சாதிக்க வேண்டும். சமீபகாலமாக இடது கை சுழற்பந்துவீச்சாளருக்கு எதிராக திணறி வரும் இவர், தவறை திருத்துவது அவசியம். கேப்டனாக புதிய உத்திகளை கையாள வேண்டும்.

அஷ்வின் நம்பிக்கை: வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஓரளவு நம்பிக்கை தருகின்றனர். முதல் போட்டியில் 4.4 ஓவரில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்த மோகித் சர்மா, ரன் வழங்குவதை தவிர்த்தால் நல்லது. ‘சுழலில்’ அஷ்வின் அசத்துகிறார். 

இக்பால் எதிர்பார்ப்பு: இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் வங்கதேச அணி உள்ளது. தமிம் இக்பால், சர்கார் நல்ல ‘பார்மில்’ உள்ளனர். முஷ்பிகுர் ரஹிம் பொறுப்பாக விளையாட வேண்டும். ‘மிடில்–ஆர்டரில்’ அசத்திய சாகிப் அல் ஹசன் (52), சபிர் ரஹ்மான் (41), நாசிர் ஹொசைன், கேப்டன் மொர்டசா இன்றும் கைகொடுக்கலாம்.                        

முஸ்தபிஜுர் அசத்தல்: அறிமுக போட்டியில் 5 விக்கெட் கைப்பற்றிய முஸ்தபிஜுர் ரஹ்மான், மீண்டும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தர முயற்சிக்கலாம். இவருக்கு டஸ்கின் அகமது, கேப்டன் மொர்டசா ஒத்துழைப்பு தர வாய்ப்பு உள்ளது. முதல் போட்டி போல மீண்டும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் வங்கதேச அணி களமிறங்கலாம்.

தடுக்குமா            

முதல் போட்டியில் வென்ற வங்கதேச அணி, இன்று மீண்டும் சாதிக்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கலாம். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் தொடர்ச்சியாக மூன்றாவது கோப்பை வெல்லலாம். ஏற்கனவே ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றியது. இன்று இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் வங்கதேசத்தின் கனவை தடுக்கலாம்.

முன்னதாக இவ்விரு அணிகள் மூன்று முறை (2004–05, 2007, 2014) ஒருநாள் தொடரில் மோதின. இதில் அனைத்திலும் இந்திய அணி தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது            

முற்றுப்புள்ளி வைக்குமா

சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணி தொடர்ச்சியாக 9 வெற்றியை (ஜிம்பாப்வே 5 + பாகிஸ்தான் 3 + இந்தியா 1 போட்டி) பெற்றது. இந்த வெற்றிநடைக்கு இன்றும் இந்தியாக முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது.

மழை வருமா            

இரண்டாவது ஒருநாள் போட்டி நடக்கவுள்ள மிர்புரில் வெப்பநிலை அதிகபட்சமாக 36, குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசாக இருக்கும். மதியம் இடியுடன் கூடிய மழை வர வாய்ப்பு உள்ளதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்படலாம். இரவில் வானம் தெளிவாக காணப்படும்.

 

http://sports.dinamalar.com/2015/06/1434813013/IndiaBangladeshOneDayInternationalCricketMirpur.html

  • தொடங்கியவர்

2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி தட்டுத்தடுமாறி 200 ரன்களை எட்டியது!

வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியிலும் வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தாபீகுர் ரக்மான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிரிக்கெட் வரலாற்றில் களமிறங்கிய முதல் இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் இவர். இதற்கு முன் ஜிம்பாப்வே வீரர் பிரையன் விட்டோரி இத்தகையை சாதனையை படைத்துள்ளார்.
 

koli.jpg

முதல் ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, மிர்பூரில் இன்று டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோகித் சர்மா டக்அவுட் ஆக,விராட் கோலி ஷிகர் தவானுடன் இணைந்தார். இந்த ஜோடி வங்கசே பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. விராட்கோலி 23 ரன்களில் வெளியேறினார். அடுத்து கேப்டன் தோனி தவானுடன் சேர்ந்தார்.

koli1.jpg

இந்திய அணி 109 ரன்களை எட்டிய போது 3வது விக்கெட்டை இழந்தது. தவான் 60 பந்துகளை சந்தித்து 53 ரன்களை எடுத்தார். இதில் 7பவுண்டரிகளும் அடக்கம். அடுத்து வந்த அம்பாத்தி ராயுடு ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 110 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை எடுத்து தவித்தது.

பின்னர் சுரேஷ் ரெய்னா- தோனி இந்திய அணியின் ரன்னை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் வங்கதேச பந்துவச்சை எதிர்கொண்டு ரன் சேர்ப்பது கடினமான காரியமாகவே இருந்தது. தோனி 47 ரன்கள், ரெய்னா 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனதும் கிட்டத்தட்ட இந்திய அணியின் இன்னிங்சும் முடிவுக்கு வந்து விட்டது. 174 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த நிலையில்,ரவீந்தர ஜடேஜாவும் அஸ்வினும் இந்திய அணியின் ரன் வேகத்தை உயர்த்த போராடினர். அதற்குள் மழையும் வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.மழை விட்டதும் போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. இந்திய அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

வங்கதேசத்தின் இளம் பந்துவீச்சாளர் முஸ்தாபிகுர் ரக்மான் 10 ஓவர்கள் வீசி, 43 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் போட்டியிலும் இவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார்.

 

http://www.vikatan.com/news/article.php?aid=48320

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் 10.4 ஓவரில் 50/1

  • தொடங்கியவர்
கிரிக்கெட்: வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

 

 

மிர்பூர் : 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும், வங்கதேச அணி டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம்-இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 43.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. பின் அரைமணி நேர தாமதத்திற்கு போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 200 ரன்களுக்கு 'ஆல் அவுட்டானாது'. இதையடுத்து 'டக் வெர்த்லீவிஸ்' முறைப்படி வங்கதேச அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய வங்கதேச அணி 38 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை, வங்கதேச அணி முதல் முறையாக வென்றது. மூன்றாவது ஒரு நாள் போட்டி, வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1280074

 

  • தொடங்கியவர்

முஸ்தபிஸுரிடம் மூழ்கியது இந்திய அணி: தொடரை வென்றது வங்கதேசம்

 
படம்: ஏபி
படம்: ஏபி

முஸ்தபிஸுர் ரஹ்மானின் விக்கெட் மழையில் மூழ்கிய இந்தியாவை வீழ்த்தி, ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ரஹானேவுக்குப் பதிலாக அம்பட்டி ராயுடு சேர்க்கப்பட்டார். கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய உமேஷ் யாதவ், மோஹித் சர்மா ஆகியோருக்குப் பதிலாக தவல் குல்கர்னி, அக் ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசிய முஸ்தபிஸுர் ரஹ்மான், 2-வது பந்தில் ரோஹித் சர்மாவை (0) வீழ்த்தி இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து ஷிகர் தவனுடன் இணைந்தார் விராட் கோலி. இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 12.1 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்தது. கோலி 27 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் தோனி களம்புகுந்தார். மறுமுனையில் பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய தவன் 54 பந்துகளில் அரைசதம் கண்டார்.

இந்தியா 109 ரன்களை எட்டியபோது தவன் 53 ரன்களில் (60 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன்) ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த அம்பட்டி ராயுடு டக் அவுட்டாக, தோனியுடன் இணைந்தார் ரெய்னா. 5-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை முஸ்தபிஸுர் ரஹ்மான் பிரித்தார். 55 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்பிறகு முழுமையாக ஆதிக்கம் செலுத்திய முஸ்தபிஸுர் ரஹ்மான், 40-வது ஓவரில் தோனி (75 பந்துகளில் 47 ரன்கள்), அக்ஷர் படேல் (0) ஆகியோரை வீழ்த்தினார். பின்னர் வந்த அஸ்வின் 4 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தபிஸுர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையடுத்து ஜடேஜாவுடன் இணைந்தார் புவனேஸ்வர் குமார். இந்தியா 43.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஜடேஜா 19 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ஆனால் அடுத்த 7 பந்துகளில் இரு விக்கெட்டுகளை இழந்த இந்தியா 200 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 19 ரன்களிலும், புவனேஸ்வர் குமார் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை காரணமாக, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வங்கதேச அணிக்கு 47 ஓவர்களில் 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த அணி பேட் செய்ய ஆரம்பித்தது.

துவக்க ஆட்டக்காரர்களான தமீம் இக்பால் 13 ரன்களும், சர்க்கார் 34 ரன்களும் சேர்த்தனர். லிட்டன் தாஸ் 36 ரன்களும், முஸ்தபிஸுர் ரஹ்மான் 31 ரன்களும் எடுத்தனர். ஹசன் ஆட்டமிழக்காமல் 51 ரன்களும், சபீர் ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 22 ரன்களும் சேர்த்து வெற்றி இலக்கை எளிதில் எட்ட வழிவகுத்தனர். 38 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எளிதில் எட்டியது வங்கதேசம்.

இதன்மூலம், இந்தியாவுக்கு மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் அசத்தலாக கைப்பற்றியது வங்கதேச அணி.

முஸ்தபிஸுர் சிறப்பிடம்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான முஸ்தபிஸுர் ரஹ்மான், அந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார்.

இதன்மூலம் முதல் இரு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை சாய்த்த 2-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முதல் வீரர் ஜிம்பாப்வேயின் பிரையன் விட்டோரி ஆவார்.

 

http://tamil.thehindu.com/sports/முஸ்தபிஸுரிடம்-மூழ்கியது-இந்திய-அணி-தொடரை-வென்றது-வங்கதேசம்/article7341657.ece

  • தொடங்கியவர்

இந்திய அணி ‘பேட்டிங்’

 

Underfire India loook to salvage pride in final ODI Bangladesh

மிர்புர்: இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று மிர்புரில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வீழ்ந்த இந்திய அணி 0–2 என, ஏற்கனவே தொடரை இழந்து விட்டது.

இரு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

இதனிடையே ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.  இந்திய அணியில் ஜடேஜா, புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ், ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டனர். 

http://sports.dinamalar.com/2015/06/1435075988/UnderfireIndialoooktosalvageprideinfinalODIBangladesh.html

  • தொடங்கியவர்

தவான், தோனி அரைசதம் ரெய்னா 'கோப' விளாசல்: வங்கதேசத்துக்கு 318 ரன்கள் இலக்கு!

மிர்பூரில் நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணிக்கு 318 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஷிகர் தவான் 75 ரன்களும் கேப்டன் தோனி 69 ரன்களும் அடித்தனர்.சுரேஷ் ரெய்னா மின்னல் வேகத்தில் 38 ரன்களை எடுத்தார்.
 

ravi.jpg

இந்தியா- வங்கதேச அணிகளுக்கிடையேயான முன்றாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் சற்று முன் தொடங்கியது. ஏற்கனவே தொடரை இழந்த நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளார் மோர்டசா.இந்திய அணியில் சர்ச்சைக்குரிய வகையில் நீடித்து வந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வர்குமாருக்கும் இடம் இல்லை.  உமேஷ் யாதவ் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

dav.jpg

வங்கதேச அணியில் காயமடைந்த டஸ்கினுக்கு பதிலாக, அராபத் சன்னி  சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்தும், தவானும் இறங்கினர். இந்திய அணி 39 ரன்களை எட்டிய போது முதல் விக்கெட்டை இழந்தது. 29 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா முஸ்தாபீசூர் ரஹ்மான் பந்தில் அவுட் ஆனார்.பின்னர் துணை கேப்டன் விராட் கோலி, தவானுடன் இணைந்தார். இவர்கள் வங்கதேசத்தின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். இந்திய அணி 18வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. அதே வேளையில் தவான் 7 பவுண்டரிகளுடன் அரை சதத்தை கடந்தார்.ஷிகர் தவான் அடித்த 14வது அரை சதம் இதுவாகும்.114 ரன்களை இந்திய அணி எட்டிய போது, 25 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி வீழ்ந்தார். அடுத்து தோனி களமிறங்கினார்.

do.jpg

தவான் 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மோர்டசா பந்தில் அவுட் ஆனார். பின்னர் ஜடேஜாவுக்கு பதில் களமிறக்கப்பட்ட அம்பாத்தி ராயுடு, கேப்டன் தோனியுடன் இணைந்தார். இந்த ஜோடி வங்கதேச பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டது. இதனால் இந்திய அணியின் ரன்வேகம் அதிகரித்தது. ராயுடுவும் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் முனைப்பில் பொறுப்பை உணர்ந்து விளையாடினார்.

இதனால் இந்திய அணி 35.1 ஓவர்களிலேயே 200 ரன்களை எட்டியது. தோனி ஒரு சிக்சர் 4 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் அடித்துள்ளார். தோனி அடிக்கும் 59வது அரைசதம் இதுவாகும். தோனி 69 ரன்களிலும், ராயுடு 44 ரன்களிலும் அவுட் ஆனார்கள்.

கடைசி ஓவர்களை சுரேஷ் ரெய்னாவும் பின்னியும் எதிர்கொண்டனர்.இதில் சுரேஷ் ரெய்னா வங்கதேச பந்துவீச்சை விளாசித் தள்ளினார். 21 பந்துகளை சந்தித்த ரெய்னா 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சருடன் 38 ரன்களை மின்னல் வேகத்தில் குவித்தார். பின்னியும் பந்துகளை வீணாக்காமல் ரன்கள் அடித்தார். இதனால இந்திய அணி 48.2 ஓவர்களில் 300 ரன்களை எட்டியது. சுரேஷ் ரெய்னாவுக்கு பிறகு வந்த அக்ஷார் பட்டேல் உடனடியாக ஒரு  சிக்சர் அடித்து அசத்தினார். கடைசி கட்டத்தில் பின்னி 11 பந்துகளில் 17 ரன்களும் அக்ஷார் பட்டேல் 5 பந்துகளில் 10 ரன்களும் எடுத்தனர். இந்தியா 50 ஓவர்களில் 317 ரன்களை அடித்தது.

http://www.vikatan.com/news/article.php?aid=48468

  • தொடங்கியவர்

'ஒயிட் வாஷ்' இல்லை! இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி

 
சவுமியா சர்க்கார் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி கொண்டாட்டம். | படம்: ஏ.எஃப்.பி.
சவுமியா சர்க்கார் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி கொண்டாட்டம். | படம்: ஏ.எஃப்.பி.

மிர்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 3-வதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-2 என்று தொடரை இழந்து ‘ஒயிட் வாஷ்’ சங்கடத் தோல்வியை தவிர்த்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி, ஷிகர் தவண், கேப்டன் தோனி ஆகியோரது அரைசதங்களாலும் ராயுடுவின் நிதானமான 44 ரன்கள் மற்றும் ரெய்னாவின் அதிரடி 38 ரன்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 47 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவியது. ஆனால் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இந்தத் தோல்வி மூலம் தொடர்ச்சியான அதன் வெற்றிக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

318 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்த முறை நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. 3-வது பந்தே ரன் அவுட் வாய்ப்பு வந்தது. உமேஷ் யாதவ் மிட் ஆனில் மிஸ் பீல்ட் செய்ய தமிம் பாதுகாப்பு எய்தினார். பின்னியும், தவல் குல்கர்னியும் தொடங்கினர்.

பின்னி முதல் ஓவரை வீச 2-வதாக வீசிய தவல் குல்கர்னியின் ஓவரில் தமிம் இக்பால் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை உள்ளே கொண்டு வர அது தமிமின் பேடைத் தாக்கியது, நடுவர் கையை உயர்த்தினார். அவ்வளவு திருப்திகரமாக தீர்ப்பாக அது தெரியவில்லை.

அவர் அவுட் ஆனவுடன் சவுமியா சர்க்கார் அடித்து ஆடத் தொடங்கினார். ஸ்டூவர்ட் பின்னியின் குறைந்த வேகம் மற்றும் லெந்த் அவருக்கு சவுகரியமாக அமைய மிட் ஆனில் பிளாட் சிக்ஸ் ஒன்றையும், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியையும் அடித்தார். அவருடன் இப்போது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் இணைந்திருந்தார். தொடர்ந்தும் பின்னியை அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார்.

குல்கர்னி வீசிய ஒரு பவுன்சரும் அருமையான ஹூக் ஷாட்டில் சிக்ஸருக்குப் பறந்தது. வங்கதேச ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்தது. 7-வது ஓவர் உமேஷ் யாதவ் வந்தார், ஆனாலும் சவுமியா சர்க்கார் அடங்கவில்லை அவரையும் 2 பவுண்டரிகள் விளாசினார். அதே ஓவரில் மோசமான ஒரு பந்து 5 வைடுகள் ஆனது. 7வது ஓவர் முடிவில் 56/1 என்று அதிரடி தொடக்கமானது.

ஆனால் 10-வது ஓவரில் தவல் குல்கர்னி பழிதீர்த்தார். குல்கர்னி ஒரு ஸ்லோ பந்தை வீச மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 34 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முஷ்பிகுர் ரஹிம் இறங்கியவுடன் அஸ்வினை அபாரமாக லாங் ஆனில் சிக்ஸ் அடித்து ஆக்ரோஷம் காட்டினார். 18 ஓவர்களில் ஸ்கோர் 110/2 என்ற நிலையில் 30 பந்துகளில் 24 ரன் எடுத்த முஷ்பிகுர் ரஹிம், ரெய்னா பந்தை கட் ஆட முயன்று தோனியின் அருமையான கேட்சிற்கு வெளியேறினார்.

லிட்டன் தாஸ் ஒரு முனையில் தனது 34 ரன்களுக்கு 50 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக, அக்சர் படேலின் நேர் பந்தில் பவுல்டு ஆனார்.

ஷாகிப் அல் ஹசன் 2 பவுண்டரிகளுடன் 21 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆக்ரோஷம் காட்டினார், ஆனால் அவரும் ரெய்னாவின் பந்தை தவறாக எடைபோட்டு பெரிய ஸ்லாக் ஸ்வீப் ஆட முயன்று லாங் ஆனில் தவல் குல்கர்னி கேட்ச் பிடிக்க நடையைக் கட்டினார்.

அதன் பிறகு சபீர் ரஹ்மான் அருமையாக ஆடினார் அவர் 38 பந்துகளில் 6 பவுண்டரி அடித்து ஸ்டூவர்ட் பின்னியின் ஸ்லோ ஆஃப் கட்டர் பந்தில் பவுல்டு ஆனார். உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆகி வெளியேறினார்.

இவருக்குப் பிறகு மொர்டசா 9 பந்துகள் விளையாடி ரன் எதுவும் எடுக்காமல், அஸ்வின் பந்துக்கு முன்னமேயே மேலேறி வர அஸ்வின் இழுத்து விட, பவுல்டு ஆனார். இன்னொரு முனையில் நசீர் ஹுசைன் 30 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தை ஷாட் ஆடி, பந்து லீடிங் எட்ஜ் எடுக்க கவரில் கேட்ச் ஆனார்.

ரூபல் ஹுசைன், ரெய்னாவை ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரெய்னா 7 ஓவர்கள் 35 ரன்கள் 3 விக்கெட். கடைசியில் முஸ்தபிசுர் ரஹ்மானை, அம்பாத்தி ராயுடு யார்க்கரில் எல்.பி. செய்தார். 47-வது ஓவரில் வங்கதேசம் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவியது. ராயுடு எடுத்தது மெய்டன் விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் பின்னி ரன்களை விட்டுக் கொடுத்தார். தவல் குல்கர்னி 8 ஓவர்களில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் 10 ஓவர்கள் 1 மெய்டன்35 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ரெய்னா 8 ஓவர்களில் 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ராயுடு 5 ரன்னுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயகனாக முஸ்தபிசுர் ரஹ்மானும் தேர்வு செய்யப்பட்டனர். வங்கதேச அணி இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/ஒயிட்-வாஷ்-இல்லை-இந்தியாவுக்கு-ஆறுதல்-வெற்றி/article7350781.ece

  • தொடங்கியவர்
சந்தோஷம்தான்.. ஆனாலும் லேசா சில "கறை" இருக்கு.. அதை சரி செய்யனும்.. டோணி

 

மிர்பூர்: 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்றது சந்தோஷம் அளிப்பதாக இருந்தாலும் அணியில் பல விஷயங்களை நாம் சரிப்படுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளோம் என்று கேப்டன் டோணி கூறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரு ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா அதிர்ச்சிகரமாக தோல்வியுற்று தொடரை இழந்து பெரும் அவமானத்தைச் சந்தித்தது.

இந்தத் தோல்விக்கு வங்கதேசத்தின் சிறப்பான ஆட்டம் காரணமாக கூறப்பட்டாலும் கூட இந்திய அணியில் கோஹ்லி ஆதரவாளர்கள், டோணிக்கு சிக்கலை ஏற்படுத்த சரிவர ஆடவில்லை என்ற பரபரப்பும் கிளம்பியது. இந்த நிலையில் நேற்று நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றது. கோஹ்லி வழக்கம் போல குச்சியைக் காட்டி விட்டுச் சென்று விட்டார். ஆனால் டோணி, ஷிகர் தவான், ரெய்னா உள்ளிட்டோர் பொறுப்பாக ஆடி அணியை கரை சேர்த்தனர். போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டோணி அணியின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவரது பேட்டியிலிருந்து...

மொத்தமாக ஆடினோம் அணியினர் அனைவரும் சேர்ந்து உழைத்து இந்த வெற்றியை அடைந்துள்ளோம். இது மகிழ்ச்சி தருகிறது. இருப்பினும் சில விஷயங்களில் நாம் முன்னேற்றத்தை செய்ய வேண்டியுள்ளது.
 
பந்து வீச்சில் கவனம் தேவை நமக்கு உண்மையிலேயே அதி வேகமான பவுலர்கள் தேவையா அல்லது அதி வேகமாக வீசாத பவுலர்கள் தேவையா அல்லது சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசும் பவுலர்கள் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
 
பங்கா பெஸ்ட்தான் வங்கதேச வீரர்கள் நல்ல அணியினர். சிறந்த திறமையுடன் உள்ளனர். நிலைத்து ஆடுகின்றனர். சிறந்த அணிகளில் ஒன்றாக வங்கதேசம் உருவெடுத்துள்ளது.
 
ரன் குவிச்சா போதும் ஸ்கோர்போர்டில் ரன் குவிய வேண்டும். அப்போதுதான் அதை டிபன்ட் செய்ய முடியும். அதைத்தான் நாங்கள் இன்று செய்தோம். பந்து வீச்சாளர்களையும் அது இயல்பாக பந்து வீச வைக்கும். அவர்களுக்கு வேலை எளிதாகும் என்றார் டோணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.