Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்: மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி

Featured Replies

thaa_2437663f.jpg

சதாசிவம் தொடர்புக்கு: 9843014073

 
‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது.
 
இதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம் ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ர விருதைப் பெற்றவர் இவர்.
 
புதுமை நீர்ப் பாய்ச்சல்
 
தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அவர் உருவாக்கியுள்ள ஐக்கியப் பண்ணை - கோவை பண்ணையில், மூலைக்கு மூலை இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பிரம்மாண்டக் குட்டைகளை வெட்டி வைத்திருக்கிறார். துளியும் வீணாகாமல் இங்கே சேகரமாகும் மழைநீர்தான் இந்தப் பண்ணைக்கு ஆதாரம்.
 
இந்தப் பண்ணையில் பயிரிடப் பட்டிருக்கும் மா, பலா, மாதுளை, நெல்லி, காட்டுக்கத்தரி, கொடுக்காய்ப்புளி, செஞ்சந்தனம், தேக்கு உள்ளிட்ட 240-க்கும் மேற்பட்ட மர வகைகளுக்குப் பாத்தி கட்டப்படவில்லை, வாய்க்கால் வெட்டப்படவில்லை, மோட்டார் போட்டு நீர் பாய்ச்சவும் இல்லை. குட்டைகளின் மூலம் சேகரிக்கப்படும் மழைநீர் இயற்கையாகவே இந்த மரங்களுக்கு ஊடுருவுகிறது.
 
இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சுக்காம் பாறையாகக் காட்சியளித்த இந்தப் பூமியை, அடர்ந்த சோலைவனமாக இன்றைக்கு மாற்றியிருக்கிறார். இந்த மரங்கள் எதுவும் ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி வாசமோ படவில்லை என்பது கூடுதல் விசேஷம்.
 
இப்படி அனுபவப் பாடமாகத் தான் கற்ற நீர் சேகரிப்பு நுட்பங்களை, மனித குலத்துக்கு அர்ப்பணம் செய்திருக்கும் சதாசிவம், இந்த முறை குறித்துப் பகிர்ந்துகொண்டது:
 
மழை இறங்கா மண்
 
“இப்போது போல் செ.மீ, மி.மீட்டரில் இல்லாமல் ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று மழையளவைக் குறிப்பிடுவது பரம்பரை விவசாய முறை. பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.
 
இது மண்ணுக்கு மண் வேறுபடும். சில நிலங்களில் தண்ணீர் இறங்கிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சம் மழைநீர் இறங்கக்கூடியது செம்புரை மண் (laterite soil). இது ஒரு அடிமண். இந்த மண்ணின் தன்மைப்படி ஓர் அடிக்குக் கீழே, மழைநீர் அவ்வளவு சுலபமாக இறங்காது.
 
இந்த மண்ணில் எவ்வளவு மழை பெய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தில் இறங்காமல் வழிந்தோடி கடலுக்குச் சென்றுவிடுகிறது. தஞ்சாவூர், காரைக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் இந்த மண் நிறைந்த நிலங்களே பெருமளவு காணப்படுகின்றன. இந்த மண்ணுள்ள நிலத்தை வளமாக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான சராசரி மழையளவைக் கணக்கிட்டு, அந்த மழைநீர் கடலுக்குச் செல்வதைத் தடுத்து, நீரைத் தேக்கும் குட்டைகளை வெட்டி நீரைச் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.
 
15 ஆண்டு கால முயற்சி
 
ஒரு முறை இப்படிச் செய்தால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படாது. உதாரணமாக, ஒரு உழவு மழையில் ஒரு ஏக்கருக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். ஒரு குட்டையில் ஒரு சதுர அடிக்கு நாலரை லிட்டர் தண்ணீர் தேக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 44,440 சதுர அடி குட்டை வெட்டினால் ஒரு உழவு மழை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.
 
தோராயமாக 25 ஏக்கர் நிலமிருந்தால், அதை வளமாக்க இரண்டே முக்கால் ஏக்கர் அளவுக்கு ஏழு அடி ஆழத்துக்குக் குட்டை வெட்டினால், அதில் தேங்கும் நீர் 10 மாதங்களுக்குப் பயன்படும். அந்தக் குட்டையில் தேங்கும் நீரை அப்படியே விடும்போது, அதே ஆழத்துக்குப் பக்கத்து நிலங்களிலும் அது நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும். இந்த முறை மூலம் காலங்காலமாக நிலத்தடி நீர் காணாமல் போயிருந்ததும், மழைநீர் கடலுக்குச் சென்று விரயம் ஆவதும் தடுக்கப்பட்டுள்ளது.
 
ஒவ்வொரு குட்டையையும் சுற்றி 22 ஏக்கருக்கும் வெவ்வேறு மர வகைகளை நடலாம். அந்த மரங்களின் வேர்களே நிலத்தில் சுரக்கும் நீரை உறிஞ்சி, அடுத்த மரத்துக்கும் தரும். என்னுடைய பண்ணையில் மூன்று குட்டைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கே 240 வகை மரங்கள் வளர்கின்றன. இந்த 15 ஆண்டு காலப் பரீட்சார்த்த முயற்சியில் இதைக் கண்டறிந்துள்ளேன்!” என்கிறார்.
 
செலவில்லை
 
இந்த நீர் சேகரிப்பு பிரம்மாண்டக் குட்டைகள் வெட்ட நிறைய செலவு ஆகாதா? “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள்! அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன்!” - எந்தச் சலனமும் இல்லாமல் சொல்கிறார் இ.ஆர்.ஆர்.சதாசிவம்.
 
சதாசிவம், தொடர்புக்கு: 9843014073
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.