Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிடுங்க.. சந்தோஷம்தான்: சொல்வது டோணி

Featured Replies

என்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிடுங்க.. சந்தோஷம்தான்: சொல்வது டோணி
 
 மிர்பூர்: கிரிக்கெட் உலகில் 'சுண்டைக்காய்' அணியாக கருதப்படும் வங்கதேசத்தில் கேவலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தம்மை நீக்கினால் மகிழ்ச்சியே என்று டோணி கூறியுள்ளார். வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியுடனான இதுவரையிலான 2 போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது.
 

 இதனால் இந்திய அணி மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து டோணி கூறியுள்ளதாவது: என்னைப் பொறுத்தவரையில் கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். என்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கினால் இந்திய அணி நன்றாக விளையாடுமெனில் மகிழ்ச்சியோடு விலகிக் கொள்கிறேன்.

 

நான் ஒரு சாதாரண வீரராகவே விளையாடிவிட்டு போகிறேன்.  கேப்டன் என்கிற பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அதை எடுத்துக் கொள்ள விரும்பினார்கள் எனில் எடுத்துக் கொள்ளட்டும். இவ்வாறு டோணி கூறினார்.

  • தொடங்கியவர்

கேப்டன் பதவியில் இருந்து விலக தயார்: தோனி அதிரடி அறிவிப்பு !

dhoni.jpgமிர்புர்: தோல்விக்கு நான்தான் காரணம் என்றால், கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி அதிரடியாக கூறி உள்ளார்.

முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்று வங்க தேசம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணி கேப்டன் தோனி, செய்தியாளர் சந்திப்பின் போது, ''இந்திய கிரிக்கெட் தொடர்பாக நடக்கும் அனைத்து மோசமான விஷயங்களுக்கும் நான் தான் காரணாம் என்று என் மீது தான் குற்றம் சுமத்தப்படுகிறது. எல்லாம் என்னால் நடக்கிறது என்பது போல, இதை கேட்டு வங்க தேசத்தை சேர்ந்த ஊடகங்கள் கூட சிரிக்கின்றன.

ஊடகங்கள் என்னை மிகவும் நேசிக்கின்றன. எவ்வளவு காலம் நீங்கள் கேப்டனாக இருப்பீர்கள் என்ற கேள்வி எப்போதும் என்னிடம் கேட்கப்பட்டு கொண்டே இருக்கிறது. என்னை நீக்குவது நியாயம் என்று நினைத்தால், அதன் பிறகு இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று நினைத்தால், என்னை கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு ஒரு விளையாட்டு வீரராக மட்டும் தொடர தயாராக உள்ளேன்.

என்னை பொருத்த வரையில், கேப்டன் யார் என்பது ஒரு விஷயமே இல்லை. நான் எப்போதுமே கேப்டன் ஆக வேண்டும் என வரிசையில் நின்றது கிடையாது. கேப்டனாக இருப்பது என்பது ஒரு வேலை, மற்றோரு பொறுப்பு அவ்வளவுதான். கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்க விரும்பினால் அதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை" என்றார்.

இந்திய அணி கேப்டன் தோனியின் இந்த அதிரடி அறிவிப்பு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=48328

  • தொடங்கியவர்

தோனி கேப்டனாக நீடிக்க முன்னாள் வீரர்கள் ஆதரவு

 
கோப்புப் படம்: ஏ.பி.
கோப்புப் படம்: ஏ.பி.

வங்கதேசத்துக்கு எதிராக தொடரை இழந்ததை அடுத்து கேப்டன் பொறுப்பிலிருந்து விலகத் தயார் என்று தோனி கூறினார். ஆனால் அவர் கேப்டன் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து முன்னாள் வீரர்கள் பேடி, வெங்சர்க்கார், அஜித் வடேகர், சேத்தன் சவுகான், சந்து போர்டே, சையத் கிர்மானி, கிரண் மோரே ஆகியோர் தோனி விலகக் கூடாது என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திலிப் வெங்சர்க்கார்: தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. உலகக்கோப்பை அரையிறுதி வரை அணியை வழிநடத்திச் சென்றார். அதன் பிறகு இந்தத் தொடர் வந்துள்ளது. அவர் தொடர வேண்டும், என்றார்.

பிஷன் சிங் பேடி: நான் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் குறைகூற மாட்டேன். அணியின் மந்தமான ஆட்டமே தோல்விக்குக் காரணம். தோனியின் கேப்டன்சி பற்றி நான் அதிகம் எதுவும் கூற விரும்பவில்லை. இந்தத் தருணத்தில் தெளிவாக எதுவும் புரியவில்லை. ஊடகத்தில் அவர் கூறியிருப்பது வெறுப்பின் அடிப்படையில் எழுந்த வாசகங்களாகும். அவர் நையாண்டியாக பேசியுள்ளார் என்றே நான் கருதுகிறேன்.

வென்றால் பாராட்டப்படுவதும் தோற்றால் விமர்சிக்கப்படுவதும் ஒரு அணியின் தலைவராக வழக்கமாக எதிர்கொள்ள வேண்டியவையே. டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து அவர் ஏற்கெனவே விலகிவிட்டார். ஒருநாள் போட்டிகளைப் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் முதல் முறையாக அவர் இவ்வாறு வெறுப்பில் பேசியுள்ளார், இது நல்ல அறிகுறியல்ல, என்றார்.

அஜித் வடேகர்: ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு தோனியே இன்னும் சிறந்த தலைவர். வங்கதேசத்தை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருநாள் தொடருக்கு தயாரித்துக் கொள்ள போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை, என்றார்.

சையத் கிர்மானி: தோனி தொடர வேண்டும் என்றே நினைக்கிறேன், அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர். வெற்றியும் தோல்வியும் அணியின் ஆட்டத்திறனைப் பொறுத்ததே. சிலவற்றை வெல்ல முடியும், சிலவற்றில் தோற்போம். இது கற்றுக்கொள்ளலின் அடிப்படை, என்றார்.

சந்து போர்டே: தோனி தொடர வேண்டும். இது ஒரு ஏமாற்றமான தோல்விதான். இதிலிருந்து மீள கொஞ்ச காலம் பிடிக்கும். வங்கதேசம் நமக்கு அதிர்ச்சியளித்துள்ளது, நமது வீரர்கள் ஆட்டத்தில் தீவிரம் இல்லை. மாறாக அவர்களது உடல் மொழி தீவிரத்தை பறைசாற்றியது.

சேத்தன் சவுகான்: இந்த ஒரு தொடரை வைத்து தோனி மீதான அவசர நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது. அடுத்த உலகக்கோப்பை டி20 வரை தோனியே தொடர வேண்டும். அதன் பிறகு தலைமையை மாற்றுவது பற்றி யோசிக்கலாம். அவர் இன்னமும் திறமையான தலைவர்தான், சிறந்த வீரர்தான்,

கிரண் மோர்: தோனிதான் இன்னமும் சிறந்த தலைவர் அவரை அகற்ற வேண்டிய தேவையில்லை. இது ஒரு தனிப்பட்ட தருணம், இதற்கெல்லாம் பதட்டமடையக் கூடாது, அணிச்சேர்க்கையை மாற்றிப்பார்க்கவேண்டும், புதுமுகங்களை களமிறக்க வேண்டும்.

அணியில் சில பிரச்சினகள் இருக்கின்றன, நான் ஜடேஜாவின் ஆட்டம் பற்றி திருப்தி அடையவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் மோசமாக ஆடினார். அவருக்கு இடைவேளை தேவை. புவனேஷ் குமாரும் சிறப்பாக தெரியவில்லை. நல்ல லெக் ஸ்பின்னர்கள் தேவை, என்றார்.

http://tamil.thehindu.com/sports/தோனி-கேப்டனாக-நீடிக்க-முன்னாள்-வீரர்கள்-ஆதரவு/article7342451.ece

  • தொடங்கியவர்

‘நான் தான் காரணமா’ * கொதிக்கிறார் தோனி

Dhoni, India, Captain, Cricket

தாகா: ‘‘இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் அனைத்து மோசமான தோல்விகளுக்கும் நான் தான் காரணம் என்றால் கேப்டன் பதவியில் இருந்து உடனடியாக விலகத் தயாராக உள்ளேன், ஒரு வீரராக அணியின் வெற்றிக்கு உதவத் தயார்,’’ என, தோனி தெரிவித்தார்.

இந்திய ஒருநாள் அணி சமீபகாலமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. உலக கோப்பை தொடர் தவிர, கடைசியாக பங்கேற்ற 6 ஒருநாள் போட்டிகளில் 5ல் (முத்தரப்பு தொடரில் 3, வங்கதேசத்துடன் 2) இந்திய அணி தோற்றது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.

வங்கதேசத்துக்கு எதிராக முதன் முறையாக தொடரையும் இழந்தது.

இதுகுறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:

ஒவ்வொரு முறை இந்திய அணி தோற்கும் போதெல்லாம் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழும். ஒருவேளை என்னை நீக்கினால் தான் இந்திய கிரிக்கெட் வெற்றி பாதைக்கு திரும்பும் என்றால் அதை நிரூபிக்க வேண்டும். 

விலகத் தயார்:

தற்போது அடையும் அனைத்து மோசமான தோல்விகளுக்கும் நான் தான் காரணம் என்றால் கேப்டன் பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளேன். ஒரு வீரராக அணியின் வெற்றிக்கு உதவத் தயார்.

கேப்டனாக யார் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். இது ஒரு பிரச்னையே இல்லை. ஏனெனில் இப்பதவிக்கு வருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. கேப்டன் பதவி எனக்கு கொடுக்கப்பட்ட வேலை. 

இது அவர்களாக கொடுத்தது. இதனால் பொறுப்பெடுத்து செயல்பட்டேன். இப்போது அதை எடுத்துக் கொள்ள விரும்பினால் மகிழ்ச்சியாக வழிவிடத் தயார். என்னைப் பொறுத்தவரை இந்திய அணி வெற்றி பெற வேண்டும், அவ்வளவு தான். இதற்கு எனது பங்களிப்பு இருக்க வேண்டும்.

ஜடேஜா சரிதான்:

ஜடேஜா தேர்வு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். பொதுவாக ஒவ்வொரு பவுலரின் திறமைக்கு ஏற்ப அவர்களை பயன்படுத்துகிறோம். ஜடேஜாவை முதல் 10 ஓவர்களில் பயன்படுத்த விருப்பம் இல்லை. இதன் பின் வரும் ‘பவர் பிளே’ உள்ளிட்ட ஓவர்களில் அவர் நன்றாகவே செயல்படுகிறார். மற்றபடி இவர் தேர்வை நியாயப்படுத்துவது என்பது கடினம் தான்.

ஏனெனில் பேட்டிங் செய்ய ஜடேஜாவுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை. முதல் 20 ஓவர்களில் 4 அல்லது 5 விக்கெட்டுகள் விழுந்து விட்டால் தான், இவருக்கு நல்ல வாய்ப்பு வரும். அதேபோல சர்வதேச போட்டிகளில் அனைத்து இன்னிங்சிலும் 50 அல்லது அதற்கு மேலான ரன்கள் எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. இது முடியாத காரியம். ‘டாப் ஆர்டர்’ நன்றாக விளையாடுவதால் பின் வரிசை வீரர்களை சோதிக்க வாய்ப்பு இருக்காது.

வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகளில் பின் வரிசை வீரர்களுக்கு நெருக்கடி அதிகம் ஏற்பட்ட நிலையில், ஜடேஜா பேட்டிங் குறித்து முடிவுக்கு வருவது கடினம்.

பிளட்சருக்கு பாராட்டு:

முன்னாள் பயிற்சியாளர் பிளட்சரை கடைசிவரை ‘மீடியா’ பாராட்டவே இல்லை. இந்திய அணியுடன் பல ஆண்டும் இணைந்திருந்த இவர், வெற்றிக்கு கடினமாக பாடுபட்டார். பல்வேறு கடின தொடர்கள் வந்தன.

தோல்விக்கு பயிற்சியாளர் உள்ளிட்டோர்களை குற்றம் சுமத்துவது சரியாகாது. ஏனெனில் வீரர்கள் தான் களத்தில் விளையாடுகின்றனர். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை சரி செய்து கொண்டு அவர்கள் தான் திறமை வெளிப்படுத்த வேண்டும்.

அவசரம் வேண்டாம்:

மற்றபடி பயிற்சியாளர் இருந்தால் இதெல்லாம் நடக்காது என்று கூறினால் தவறு. தற்போது ஏராளமான துணை பயிற்சியாளர்கள் உள்ளனர். அவர்கள் வீரர்கள் மீது கவனம் செலுத்துவர்.

இப்போதைக்கு பயிற்சியாளர் பதவி காலியாக உள்ளது என்பதற்காக அவசரப்பட்டு இதை நிரப்ப வேண்டாம். அது காலியாகவே இருந்து விட்டுப் போகட்டும்.

இவ்வாறு தோனி கூறினார்.

 

பயிற்சியாளர் புகார்

தோனியின் பயிற்சியாளர் பன்சல் பட்டாச்சார்யா கூறுகையில்,‘‘ இந்திய அணியின் ‘டிரசிங் ரூம்’ சூழ்நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். இதனால் கேப்டன் தோனி ஒரு விதமான ‘டென்ஷன்’ நிலையில் காணப்படுகிறார்,’’ என்றார்.

 

நெருக்கடி காரணமா

பேட்டிங் ஆர்டர் குறித்து தோனி கூறுகையில்,‘‘ கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக பேட்டிங்கில் 6வது இடத்தில் களமிறங்கினேன். இந்த அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு வழியில் நெருக்கடி இருந்ததால் சரியாக பேட்டிங் செய்ய முடிவதில்லை. சரி அடித்து விளையாடலாம் என முடிவெடுக்கும் போது எதிர் முனையில் ஒரு சில விக்கெட் விழுந்து விடும். அடுத்து நல்ல ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்து விட்டு மீண்டும் அடிக்க முயற்சிக்கும் போது, மறுபடியும் விக்கெட் விழுகிறது. இதனால் தான் மிர்புர் போட்டியில் 4வதாக வந்தேன்,’’ என்றார்.

 

குழப்பத்தில் உள்ளார்

முன்னாள் கேப்டன் கங்குலி கூறுகையில்,‘‘ கேப்டன் தோனி குழப்பமான மனநிலையில் உள்ளார். இதனால் ‘கூல்’ கேப்டன் தோனி தற்போது பொறுமையில்லாமல் காணப்படுகிறார்,’’ என்றார். 

 

வெற்றிக் கேப்டன்

சமீப காலமாக சறுக்கினாலும், ஒருநாள் அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டனாக ஜொலிக்கிறார் தோனி. இவ்வரிசையில் ‘டாப்–5’ கேப்டன்கள்:

வீரர் போட்டி வெற்றி தோல்வி டை முடிவு இல்லை வெற்றி சதவீதம்

தோனி 180 100 65 4 11 60.35%

அசார் 174 90 76 2 6 54.16%

கங்குலி 146 76 65 0 5 53.90%

டிராவிட் 79 42 33 0 4 56.00%

கபில்தேவ் 74 39 33 0 2 54.16%

 

3

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடத்தப்படும் மூன்று முக்கிய தொடர்களான ‘டுவென்டி–20’ உலக கோப்பை (2007), 50 ஓவர் உலக கோப்பை (2011), மினி உலக கோப்பை/சாம்பியன்ஸ் டிராபி (2013) தொடர்களில் கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனை படைத்தார் தோனி.

 

12

உலக கோப்பை அரங்கில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டன்கள் பட்டியலில் தோனி (12 வெற்றி, 14 போட்டி, ஒரு தோல்வி, ஒரு டை) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் கபில்தேவ் (11 வெற்றி) உள்ளார்.

 

62

அன்னிய மண்ணில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றி தேடித்தந்த இந்திய கேப்டன்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார் தோனி. இவர், இதுவரை 115 போட்டிகளில் பங்கேற்று 62 வெற்றி தேடித் தந்துள்ளார். இவரை அடுத்து சவுரவ் கங்குலி (58 வெற்றி) உள்ளார்.

 

183

ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார் தோனி. கடந்த 2005ல் இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் 183* ரன்கள் எடுத்தார். இவரை அடுத்து ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (172 ரன், எதிர்–ஜிம்பாப்வே, 2004) உள்ளார்.

 

1

ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய முதல் கேப்டன் என்ற சாதனை படைத்தார் தோனி. கடந்த 2008ல் தோனி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் கோப்பை வென்றது. இதில் மூன்றாவது அணியாக இலங்கை விளையாடியது.

http://sports.dinamalar.com/2015/06/1434959402/DhoniIndiaCaptainCricket.html

  • தொடங்கியவர்

பதவி பறிபோகும் அச்சத்தில் ‘கேப்டன் கூல்’?

 
dhoni_cool_2449392f.jpg
 

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா கண்டுள்ள படுதோல்வியைவிட, ‘கேப்டன் கூல்’என புகழப்பட்ட இந்திய கேப்டன் தோனி தனது பொறு மையை இழந்து உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கும் பேச்சுதான் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது அலசி ஆராயப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயம்.

இதற்கு முன்பு எத்தனையோ முறை இக்கட்டான, நெருக்கடி யான தருணங்களை தாண்டி வந்தி ருக்கிறார் தோனி. கிரிக்கெட் உலகையே உலக்கிய ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் தோனி யின் பெயர் இணைத்து பேசப்பட்ட போதும், அது தொடர்பாக அவரிடம் கடுமையான கேள்வி எழுப்பப்பட்ட போதும்கூட, அதைப் பற்றியெல் லாம் கவலைப்படாமல் மவுனம் காத்திருக்கிறார். நேரம் வரும்போது அதைப் பற்றி பேசுகிறேன் என தட்டிக் கழித்திருக்கிறார்.

தோனியின் உணர்ச்சிவசம்

எந்த நெருக்கடிக்காகவும் அலட்டிக்கொள்ளாத உறுதியான மனத்திடம் கொண்டவரான தோனி, வங்கதேசத்திடம் தொடரை இழந்தபோது, ‘என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினால்தான் இந்திய அணி நன்றாக விளையாடும் என்றோ; இந்தியாவின் தோல்விக்கு நான்தான் காரணம் என்றோ எண்ணினால் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிடுகிறேன். ஒரு வீரராக விளையாடத் தயார்” என உணர்ச்சிவசப்பட்டு பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, எல்லா விளையாட்டுகளிலுமே ஓர் அணி தோற்கும்போதோ அல்லது அதன் செயல்பாடு மிக மோசமா கும்போதோ அது தொடர்பாக ஊடகங்கள் கேள்வியெழுப்புவது புதிதல்ல. சச்சினிடம் கூட எப்போது ஓய்வு பெறப்போ கிறீர்கள் என பலமுறை கேள்வி யெழுப்பப்பட்டிருக்கிறது. அதே போன்றுதான் கேப்டன்ஷிப் விஷயத் தில் உங்களின் நிலைப்பாடு என்ன வென்று தோனியிடம் கேட்கப் பட்டது.

பதவி பறிபோகும் அச்சம்

கேப்டன் பதவி எனக்கு கொடுக் கப்பட்டதால் ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னிடம் இருந்து கேப்டன் பதவியை பறிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தால் மகிழ்ச்சியாக அதை விட்டுவிடு வேன் என தோனி கூறியிருப்பதில் இருந்தே அவராகவே கேப்டன் பதவியில் இருந்து விலகமாட்டார் என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.

அதேநேரத்தில் நம்முடைய கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வு தோனிக்குள் எழுந்துவிட்டதை அவருடைய பேச்சில் இருந்த தெரிந்துகொள்ள முடிகிறது. 2012-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ‘ஒயிட் வாஷ்’ ஆனபோது கேப்டன் பதவியிலிருந்து தோனியை நீக்க, தேர்வுக்குழுவினர் முடிவு செய்தார்கள். ஆனால் அப்போதைய பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் தேர்வுக்குழுவினரின் முடிவை நிராகரித்து தோனியை காப்பாற்றினார்.

இப்போதும் தேர்வுக்குழு வினரின் முடிவை நிராகரிக்கும் உரிமை பிசிசிஐ தலைவருக்கு இருக்கிறது. ஆனால் தோனியின் ஆதரவாளராகக் கருதப்படுபவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான என்.சீனிவாசன் இப்போது பிசிசிஐ தலைவராக இல்லை.

தற்போதைய தலைவர் ஜக்மோகன் டால்மியா வும், செயலாளர் அனுராக் தாக்குரும் தேர்வுக்குழுவினரின் முடிவை நிராகரிக்க வாய்ப்பில்லை என்பது தோனிக்கு பெரிய பின்னடை வாகும். அதுதான் அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி யிருக்கிறது.

பேட்ஸ்மேனாக…

ஒரு வீரராக அணியில் விளை யாட தயார் என்று தோனி கூறியி ருந்தாலும், கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகமே? அதை தோனியும் நிச்சயம் உணர்ந்திருப்பார். கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டால், பேட்ஸ்மேன் என்ற தனி அடையாளத்தோடுதான் அவர் விளையாடியாக வேண்டும்.

ஆனால் இந்திய அணியின் கேப்டன் என்பதைத் தவிர்த்து ஒரு பேட்ஸ்மேனாக தோனியின் செயல்பாட்டை பார்த்தால் அது மெச்சும்படியில்லை. கடைசியாக 2013 ஜூலையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 45 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்தத் தொடர் வரை தோனியின் ஆட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் சராசரியாக 13 ஆட்டத்துக்கு ஒரு முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

ஆனால் கடைசியாக விளையாடிய 38 ஆட்டங்களில் அவர் ஒன்றில்கூட ஆட்டநாயகன் விருதைப் பெறவில்லை. ஆக மொத்தத்தில் கேப்டன் பதவியை இழந்தால், அணியில் தனக்கான இடத்தையும் இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் தோனி.

அணி தேர்வில் பாரபட்சம்

சர்வதேச அளவில் 50 ஓவர் உலகக் கோப்பை, மினி உலகக் கோப்பை (சாம்பியன்ஸ் டிராபி), டி20 உலகக் கோப்பை என மூன்றையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தோனி. அதற்கு அவர் பெற்ற திறமையான வீரர்கள் அடங்கிய அணிதான் முக்கியக் காரணம்.

ஆனால் இன்றைய இந்திய அணி அப்படி இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. அணி தேர்வு விஷயத்தில் தோனி சிலருக்கு ஆதரவாக செயல்பட்டது அப்பட்ட மாக அனைவரும் அறிந்ததுதான். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து சொதப்பி வந்தாலும் இன்று வரை அணியில் நீடிக்கிறார்.

ஜடேஜாவுக்கு ஆதரவு

இந்திய அணியின் வெற்றியில் ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு என்பது மிகமிகக் குறைவு. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப் பளித்து வரும் தோனி, அவரை காப்பாற்றுவதில் இப்போதும் தீவிர மாக இருக்கிறார். ஆல்ரவுண்டர் இடத்தை நீண்ட நாட்களாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஜடேஜாவே, இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் என இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறார்.

சில நேரங்களில் ஜடேஜா பந்துவீசு வதில்லை. பேட்டிங்கிலும் அவர் செயல்பாடு மெச்சும்படியில்லை. ஆனால் தோனியோ, ஜடேஜா 7-வது வீரராக களமிறங்குகிறார். அந்த இடத்தில் ரன் குவிப்பது கடினமானது என சப்பைக்கட்டு கட்டுகிறார்.

மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் பாக்னர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் 6, 7, 8, 9-வது இடங்களில் களமிறங்கி அதிரடியாக ரன் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றி தேடித்தந்திருக்கிறார்கள். 2013-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் கடைசி ஒருநாள் போட்டியில் ஜேம்ஸ் பாக்னர் 7-வது பேட்ஸ்மேனாக களமிறங்கித்தான் 73 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார்.

தோல்விக்கு காரணம்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இடத்தைப் பொறுத்தவரையில் ஜடேஜாவைத் தவிர வேறுயாருக் கும் வாய்ப்பளிப்பதை தோனி விரும்பவில்லை. அதனால்தான் அக் ஷர் படேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் உலகக் கோப்பை போன்றவற்றில் ஒதுக்கியே வைக் கப்பட்டார்கள். மோஹித் சர்மா வின் பந்துவீச்சில் ‘லைன் அண்ட் லென்த்’ இல்லை என வெளிப்படை யாகவே விமர்சித்தார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

ஆனாலும் மோஹித் சர்மா இப்போது வரை இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளும், பரீட்சார்த்தமுறையில் மற்றவீரர் களுக்கு வாய்ப்பளிக்காததும் தான் வங்கதேசத்திடம் இந்தியா மண்ணை கவ்வியதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் வங்கதேச வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடியதை யும் மறந்துவிடக்கூடாது. மொத் தத்தில் இந்திய அணியில் சரியாக விளையாடாத ஜடேஜா போன்ற வர்களை நீக்கிவிட்டு திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய தருணம் இது.

அதேநேரத்தில் கேப்டன் பொறுப் பிலிருந்து தோனியை மாற்றலாமா என்பது தற்போதைய தருணத்தில் விவாதப் பொருளாக இருந்தாலும், அது சரியான முடிவாக இருக்காது. அடுத்த சில தொடர்களுக்கு இந்திய அணியின் கேப்டனாக தோனி தொடர்வதே இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மை பயப்பதாக அமையும்.

http://tamil.thehindu.com/sports/பதவி-பறிபோகும்-அச்சத்தில்-கேப்டன்-கூல்/article7349535.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.