இரான் போருக்கு எதிர்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி ராஜினாமா - கடிதத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஜோ கென்ட் நீண்டகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளராகவும், அமெரிக்க இராணுவத்தின் கௌரவிக்கப்பட்ட ஒரு படைவீரராகவும் இருந்து வருகிறார்.
கட்டுரை தகவல்
பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர்
வெள்ளை மாளிகையிலிருந்து
13 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரான் உடனான போரின் காரணமாக, டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் தனது "முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், இரானால் அமெரிக்காவிற்கு "உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.
"இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள சக்தி வாய்ந்த அதன் ஆதரவு சக்திகளின் அழுத்தம் காரணமாகவே இந்த நிர்வாகம் போரைத் தொடங்கியது" என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகை இந்தக் கடிதத்தை நிராகரித்துள்ளது. இரான் முதலில் அமெரிக்காவைத் தாக்கப் போகிறது என்பதற்கான "வலுவான ஆதாரங்கள்" அதிபரிடம் இருப்பதாக அது கூறியுள்ளது.
அமெரிக்காவின் வெறுப்புணர்வைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்று, கென்ட் "யூத எதிர்ப்பு உணர்வுகளைத்" தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஜோ கென்ட்டின் விலகல், டிரம்ப் நிர்வாகத்திற்குள்ளேயே இருந்து இரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதலைப் பகிரங்கமாக விமர்சித்த மிக உயர்மட்ட நபராக அவரை மாற்றியுள்ளது.
செவ்வாய்க்கிழமை ஓவல் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், கென்ட் ஒரு "நல்ல மனிதர்", ஆனால் "பாதுகாப்பு விஷயத்தில் பலவீனமானவர்" என்று கூறினார். கென்ட்டின் ராஜினாமா கடிதம் குறித்து பேசிய டிரம்ப் "அவர் வெளியேறியது ஒரு நல்ல விஷயம்" என்பதைத் தனக்கு உணர வைத்திருப்பதாக கூறினார்.
கடிதத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
டிரம்பிற்கு எழுதிய கடிதத்தில், "உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரிகள்" மற்றும் செல்வாக்கு மிக்க அமெரிக்க பத்திரிகையாளர்கள் "தவறான தகவல்களைப்" பரப்பியதாகவும், இது அதிபரின் "அமெரிக்காவே முதன்மை" என்ற கொள்கையை சீர்குலைக்க வழிவகுத்ததாகவும் கென்ட் குற்றம் சாட்டியுள்ளார்.
"இரான் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலாக இருப்பதாக உங்களை நம்ப வைக்க இந்தத் தவறான தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இது ஒரு பொய்," என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக டிரம்பின் ஆதரவாளராக இருந்த கென்ட், இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். டிரம்ப் நிர்வாகத்தின் தொடக்கத்திலேயே அவர் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு, மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வென்று பதவியேற்றார். 2022 தேர்தலின் போது 'பிரவுட் பாய்ஸ்' (Proud Boys) என்ற தீவிர வலதுசாரி குழுவின் உறுப்பினரை ஆலோசகராக நியமித்ததற்காக கென்ட் மீது ஜனநாயகக் கட்சியினர் விமர்சனம் வைத்திருந்தனர்.
தனது நியமன உறுதிப்படுத்தல் விசாரணைகளின் போது, அமெரிக்க கேபிட்டலில் ஜனவரி 2021-ல் நடந்த கலவரத்தை பெடரல் ஏஜென்ட்கள் தூண்டிவிட்டார்கள் என்றோ, 2020 தேர்தலில் டிரம்ப் தோற்கடிக்கப்படவில்லை என்றோ அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்க கென்ட் மறுத்துவிட்டார்.
எதிர்ப்புகளும் எதிர்வினைகளும்
அமெரிக்காவின் யூத எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்பான 'அவதூறு எதிர்ப்பு லீக்' (ADL), கென்ட்டின் குற்றச்சாட்டுகள் "பழைய கால யூத எதிர்ப்பு கருத்துகளைப் பிரதிபலிக்கின்றன" என்று கூறியுள்ளது. "அவர் இஸ்ரேல் மீதும் ஊடகங்கள் மீதும் பழி சுமத்துவதில் ஆச்சரியமில்லை," என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஆதரவு குழுவான அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு (Aipac), ADL-இன் அறிக்கையை எக்ஸ் தளத்தில் மீண்டும் பதிவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு பிபிசி விடுத்த கோரிக்கைக்கு Aipac உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
தாராளவாத இஸ்ரேல் ஆதரவுக் குழுவான ஜே ஸ்ட்ரீட்டின் மூத்த அதிகாரியான இலான் கோல்டன்பெர்க், கென்ட்டின் கடிதத்தை "மிக மோசமான யூத-விரோதக் கருத்துகளைப் பயன்படுத்தும் அருவருப்பான விஷயம்" என்று விவரித்தார்.
சொந்த வாழ்க்கை மற்றும் பின்னணி
45 வயதான கென்ட், அமெரிக்கச் சிறப்புப் படை மற்றும் சிஐஏ (CIA) ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது மனைவியும், கடற்படை குறியீட்டு தொழில்நுட்ப வல்லுநருமான ஷானன் கென்ட், 2019-ல் சிரியாவில் நடந்த ஒரு தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படை உட்பட, அமெரிக்க ராணுவத்துடன் 11 முறை வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டார்.
பின்னர் சிஐஏ-வில் துணை ராணுவ அதிகாரியாகப் பணியாற்றினார், அதன்பின்னர் தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து அரசுப் பணியிலிருந்து விலகினார்.
தனது கடிதத்தில் இராணுவச் சேவை மற்றும் மனைவியின் இறப்பைக் குறிப்பிட்டுள்ள கென்ட், "அமெரிக்க மக்களுக்கு எந்த நன்மையும் தராத, அமெரிக்க உயிர்களின் இழப்பிற்கு நியாயம் கற்பிக்க முடியாத ஒரு போரில் அடுத்த தலைமுறையினரைச் சண்டையிட அனுப்புவதை என்னால் ஆதரிக்க முடியாது" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில், கென்ட் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டின் கீழ் பணியாற்றினார். கென்ட்டின் ராஜினாமாவைத் தொடர்ந்து, துளசி கப்பார்ட் இரான் மீதான டிரம்பின் போர் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "அதிபர் அனைத்து தகவல்களையும் ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவை எடுத்தார்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"முப்படைத் தளபதி என்ற முறையில், எது உடனடி அச்சுறுத்தல், எது அச்சுறுத்தல் அல்ல என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அதிபருக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.
"தனக்கு முன் இருந்த அனைத்து தகவல்களையும் கவனமாக ஆய்வு செய்த பின்னர், இரானில் உள்ள பயங்கரவாத இஸ்லாமிய ஆட்சி உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்ற முடிவுக்கு டிரம்ப் வந்தார், அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுத்தார்," என்று அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
வெள்ளை மாளிகைப் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், "மற்றவர்களின் செல்வாக்கின் பேரில்தான் டிரம்ப் இந்த முடிவை எடுத்தார் என்ற கென்ட்டின் கருத்து அவமதிப்புக்குரியது மற்றும் வேடிக்கையானது," என்றார்.
"டிரம்ப் வெளிப்படையாக கூறியது போல, இரான் முதலில் அமெரிக்காவைத் தாக்கப் போகிறது என்பதற்கான வலுவான சான்றுகள் அவரிடம் இருந்தன," என்றார்.
பழமைவாத ஊடக விமர்சகரான டக்கர் கார்ல்சன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனக்கு நெருங்கிய உறவான கென்டைப் பாராட்டினார்.
"எனக்குத் தெரிந்தவர்களிலேயே ஜோதான் மிகவும் தைரியமானவர், அவரை ஒரு மனநிலை பிறழ்ந்தவர் என்று ஒதுக்க முடியாது," என்று கார்ல்சன் கூறினார்.
"உயர்மட்ட, தொடர்புடைய உளவுத் தகவல்களை அணுகும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய ஒரு வேலையை அவர் விட்டுச் செல்கிறார். அதற்காக பழமைவாதிகள் அவரை அழிக்க முயற்சிப்பார்கள்."
"அது தெரிந்தும் அவர் அதைச் செய்தார்," என்றார் அவர் .
கென்ட் விலகலை தொடர்ந்து, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் அமலாக்க இயக்குநர் மார்கரெட் ரியான் மற்றும் கென்னடி மையத்தின் தலைவர் ரிக் கிரெனெல் உட்பட, டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இருப்பினும் முந்தைய 2017-21 காலகட்டத்தை விட இப்போது அதிகாரிகளின் மாற்றம் குறைவாகவே உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/c70n0zdjryro
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.