தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்
இடம்: கோத்தகிரி சாலை
படம்: எம்.சத்தியமூர்த்தி
தமிழினி
Updated on: 18 Mar 2026, 4:00 pm
1 min read
சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய (18 மார்ச்) நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ. 42.65 கோடி ஆகும். தமிழகம் முழுவதும் ரூ. 2.37 கோடி ரொக்கமும், ரூ.0.18 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 2.88 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.16.42 கோடி மதிப்பிலான விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.20.80 கோடி மதிப்பிலான இலவசங்கள் / பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.