Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்ய விமான விபத்து: தோற்ற மயக்கம்

Featured Replies


ரஷ்ய விமான விபத்து: தோற்ற மயக்கம்
 
 

article_1447304345-sd.jpg-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

விமான விபத்துக்கள் இயல்பானவையல்ல. கடந்த சில ஆண்டுகளாகக் கோரமான விமான விபத்துக்கள் பல நிகழ்ந்துள்ளன. அவற்றிற் கணிசமானவை அரசியல் முக்கியமுடையவை. அண்மைய ரஷ்ய விமான விபத்தும் அத்தகையதே. இவ் விமான விபத்துக்கள், மாறிவரும் உலக அரசியலின் குறிகாட்டிகளா என எண்ணத் தூண்டும் வகையில் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

விமான விபத்துக்களின் அரசியல் சிக்கலானது. 1961ஆம் ஆண்டு கொங்கோவில் அமெரிக்க ஆசியுடன் நடந்த சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பின் விளைவாக ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் இருக்கையிற் கொல்லப்பட்ட கொங்கோ ஜனாதிபதி லுமும்பாவின் மரணம் பற்றி விசாரிக்கச் சென்ற ஐ.நா. செயலாளர் நாயகம் டாக் ஹமர்ஷீல்ட் விமான விபத்தில் கொலையுண்டார்.

1994இல் ருவாண்டா, புரூண்டி நாடுகளின் ஜனாதிபதிகள் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. அது ருவாண்டாவில் இனப் படுகொலையைத் தொடக்கக் காரணமாக இருந்தது. இவ் விமான விபத்தைத் தொடர்ந்த 100 நாட்களில் 300,000 பேர் கொல்லப்பட்டனர். இவ் வகையில், விமான விபத்துக்கள் வரலாற்றில் முக்கியமானவையாக மட்டுமன்றிப் பல சமயங்களிற் தற்செயலாகவன்றித் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.   

கடந்த வாரம் ரஷ்யாவுக்குச் சொந்தமான மெட்ரோஜெட் நிறுவனத்தின் A321-200 எயார்பஸ் வகை விமானம் எகிப்தின் சினாய் பகுதியில் விபத்துக்குள்ளானது. அதிற் பயணித்த 224 பேரும் மரித்தனர். விபத்து நடந்த மறுநாள் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாங்களே இவ் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக உரிமை கொண்டாடினர்.

இன்று சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுக்கும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்கட்கும் எதிராக ரஷ்யா விமானத் தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இதை அமெரிக்கா கண்டிக்கிறது. இப் பின்புலத்திலேயே இவ் விமான விபத்தை நோக்க வேண்டும். விபத்துக்கான சரியான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் அதைப்பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

எகிப்தின் பிரதமர், இந்தப் பேரழிவுக்கு தொழில்நுட்பக் கோளாறே முக்கியக் காரணமாக இருக்கலாம் என்கிறார். எகிப்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹொசாம் கமால், அந்த விமானத்தில் எப் பிரச்சினையும் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்கிறார். விமான நிறுவனமான மெட்ரோஜெட், 18 வயதாகும் அவ் விமானம் பறப்பதற்கு முழுத் தகுதியுடனேயே இருந்தது என்கிறது. 'வெளிக் காரணிகளே' விமானம் நொறுங்கி விழக் காரணம் என மெட்ரோஜெட் வலியுறுத்துகிறது. விமானத்தை ஓட்டிய விமானியான வலேரி நெமோவ், 12,000 மணிகளுக்கு மேலான பறப்பு அனுபவமுடையவர் எனவும் அவ் விமான நிறுவனம் கூறுகிறது.

விமானம் நடு வானில் பிளவுண்டு நொறுங்கி விழுந்தது என ரஷ்யாவின் மூத்த விமானத் துறை வல்லுநர் விக்டர் சோரோசென்கோ கூறுகிறார். விமானத்தில் குண்டு வெடித்தே விமானம் விழுந்து நொறுங்கியதற்கு இதுவரை ஒரு தடயமும் இல்லை.

பாதுகாப்புக் கெடுபிடிகள் மிகுந்த எகிப்தின் ஷரம் அல் ஷேக் விமான நிலையத்தில் இருந்தே விமானம் புறப்பட்டது. எனின் இவ்விமான நிலையத்தின் ஊடாகவே தற்கொலைக் குண்டுதாரியோ வெடிகுண்டோ விமானத்தினுள் சென்றிருக்கலாம். அவ்வாறாயின் அது திட்டமிட்டு நடந்ததா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

இவை விமான விபத்து தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள். மறுபுறம் மேற்குலக ஊடகங்கள் இவ் விபத்து ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் தாக்குதலின் விளைவு என்பதை உண்மையாக்கப் போராடுகின்றன. இதை ரஷ்யாவுக்கு கிடைத்த அடியாகக் கொண்டாடிக் குதூகலிப்பதிற் சில ஊடகங்கள் முன்னிற்கின்றன.

பெரும்பாலான மேற்குலக ஊடகங்கள் இதைப் பயங்கரவாதச் செயலாகக் கருதவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இஸ்லாமியத் ஜிகாதிகளை விடப் பயங்கரமான எதிரி ரஷ்யா. எனவே, ரஷ்யாவுக்குத் துன்பம் நேர்வது இன்பமானது. ஆனால், அமெரிக்க அதிகாரிகளோ இத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் நிகழ்த்தவில்லை என்றும் விமானங்களைத் தாக்கக் கூடிய ஆயுதங்கள் அதனிடம் இல்லை என்றும் அடித்துக் கூறுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ்-இடம் என்னென்ன ஆயுதங்கள் உண்டென்று அமெரிக்காவுக்கு எவ்வாறு தெரியும், இல்லை என்று அடித்துச் சொல்ல இவர்கட்கு எவ்வாறு முடிகிறது?

உண்மை யாதெனில், ஐ.எஸ்.ஐ.எஸ், அமெரிக்கா ஊட்டி வளர்த்த அமைப்பாகும். அதை உருவாக்கி ஆயுதங்களை வழங்கி இன்று அதற்கெதிராகப் போராடுவது போன்றதொரு தோற்ற மயக்கத்தை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. இவ்விமான விபத்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஏவுகணைத் தாக்குதலாலேயே நடந்தது என்று நிறுவப்படுமாயின் ஏவுகணைகளை அவர்கட்குக் கொடுத்தது யார் என்ற கேள்வி எழும். அது ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கும் அமெரிக்காவுக்குமிடையிலான கூட்டுக்களவாணித்தனத்தை வெளிப்படுத்தும்.

இதனாலேயே மேற்குலக வல்லுநர்கள் விமானத்தில் வைக்கப்பட்ட குண்டே இவ்விபத்துக்குக் காரணம் என நிறுவ முனைகின்றனர். இதை எகிப்து கடுந்தொனியில் மறுக்கிறது. எகிப்துக்கு இது பாதுகாப்புப் பிரச்சினையாகும். ரஷ்யாவும் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தை மறுக்கிறது.

கூர்மையடையும் அமெரிக்க-ரஷ்ய மோதலின் இன்னொரு அத்தியாயமாக இதைக் கருதலாம். ரஷ்யா பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறது என அமெரிக்காவோ மேற்குலகோ என்றுமே ஏற்பதில்லை. கெடுபிடிப் போர் முடிந்ததன் பின்  ரஷ்யா மீது தொடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்குலகு கொண்டாடியிருக்கிறது. இதன் வரலாறு நீண்டது. 1999 இல் 300 உயிர்களைக் காவுகொண்ட மாடிவீடுகளின் மீது நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கள் முதல் 2004இல் பெஸ்லானில் பாடசாலை மாணவர்கள் 189 பேர் உள்ளிட்ட 334 பேரை செச்னிய பிரிவினைவாதிகள் படுகொலை செய்தது வரை பலவற்றை நினைவுகூரலாம். 

1994ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய செச்னிய பிரிவினைவாதிகள் ரஷ்யாவுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இவர்களுக்கான அமெரிக்க ஆதரவு வெளிப்படையானது. ஒருபுறம் இஸ்லாமிய ஜிகாத்துக்கெதிராகப் போராடுவதாகச் சொல்லும் அமெரிக்கா, மறுபுறம் செச்னிய இஸ்லாமியத் தீவிரவாதவாதிகளை ஆதரிக்கிறது. இது அமெரிக்கா-ரஷ்யா-இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற முக்கோணத்தில் யார் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை விளங்கப் போதுமானது.

இப்போது நிகழ்ந்த விமான விபத்தின் முக்கியத்துவத்தை விளங்க, இதற்கு முன் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்துக்களின் பரிமாணங்களை நோக்குதல் தகும். சில காலம் முன் விபத்துக்குள்ளாள மலேசிய விமானம் பலத்த கவனத்தைப் பெற்றது. காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல் அதன் இரண்டாவது வாரத்தில் நுழைந்து, இஸ்ரேலிய அட்டூழியங்கள் பற்றி; மேலும் ஆதாரங்கள் வெளிவந்து உலகெங்கும் பரந்தளவிலான சீற்றம் வெளிப்பட்டிருந்த நிலையில், உக்ரேன்  வான்பரப்பில் பறந்தகொண்டிருந்த மலேசிய பயணிகள் ஜெட் விமானமொன்று (ஆர்-17) ஏவுகணைத் தாக்குதலால் வீழ்ந்தது.

இவ் விபத்துக்கு சிலநாட்கள் முன், கிழக்கு உக்ரேனிய நகரங்களான டொனெட்ஸ்க்கையும் லூஹன்ஸ்க்கையும் பாதுகாப்பதற்காக, ரஷ்ய சார்புப் போராளிகள் குழுவுக்கு எதிராக மேற்குலக ஆதரவுடைய உக்ரேனிய ஆட்சியின் துருப்புகளின் தாக்குதலுக்கிடையே, ரஷ்ய எல்லையோர நகரமொன்றின் மீது உக்ரேன் குண்டுவீசியதற்கு, ரஷ்ய அதிகாரிகள் பதில் நடவடிக்கை எடுப்பதாகச் சூளுரைத்திருந்த நிலையில் பதற்றங்கள் மிகுந்திருந்தன. புதிய உலக ஒழுங்கின் புதிய போர்க்களமாக உக்ரேன் மாறியிருந்த சூழலில், உக்ரேனிய வான்பரப்பில் இவ்விபத்து நடந்தது.

அவ்வாறே ரஷ்ய விமான விபத்தையும் நோக்க வேண்டியுள்ளது. சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா படாதபாடுபடுகையில், சிரிய அரசாங்கத்துக்கு ஆதரவாக ரஷ்யா சில வாரங்களுக்கு முன் களமிறங்கி, சிரிய அரசாங்கத்துக்கெதிராகப் போராடிவரும் மேற்குலக ஆதரவு பெற்ற அல்-நுஸ்ரா, சிரிய விடுதலை இராணுவம்,  ஐ.எஸ்.ஐ.எஸ் ஆகியவற்றுக்கெதிராக விமானத் தாக்குதல்களை மேற்கொண்டது. இத் தாக்குதல்கள் பாரிய சேதங்களை விளைத்த நிலையில், ரஷ்யாவின் இந் நடவடிக்கையைக் அமெரிக்கா கண்டித்தது. ரஷ்ய நடவடிக்கையின் விளைவாக சிரிய இராணுவம் சிரியாவின் பல பகுதிகளை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வந்துள்ளது.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா, 'ஐ.எஸ்.ஐ.எஸ்' ஆயுதக்குழுவை அழிப்பதற்காக அமெரிக்க சிறப்புப்படைகளை சிரியாவுக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளார். இது ரஷ்யாவுக்கு நேரடியாகச் சவால் விடும் நடவடிக்கையாகும். ஆனால், ஏற்கெனவே ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் புகுந்த அமெரிக்கப் படைகள் இன்று வெளியேறுவதற்கு வழி தெரியாமல் தவிக்கின்றன. இந் நிலையில், சிரியாவுக்கு நேரடியாக இராணுவத்தை அனுப்புவதை அமெரிக்க மக்கள் விரும்பமாட்டார்கள். அதற்கான ஒப்புதலைப் பெறுவது கடினம். இந் நிலையிலேயே இவ்விமான விபத்து கவனம் பெறுகிறது.

கடந்த வாரம் நேட்டோ, ரஷ்ய எல்லையோர நாடுகளில் 4,000 சிறப்புப் படைகளை நிலைகொள்ளச் செய்யும் திட்டத்தை வெளியிட்டது. ரஷ்ய எல்லையில் பால்டிக் கடலையண்டியுள்ள முன்னாள் சோவியத் நாடுகளான லித்துவேனியா, லற்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளிற் படைகளை நிறுத்தும் ஆயத்தங்களை அது மேற்கொள்கிறது. இது ரஷ்யாவை நேரடியாகச் சீண்டும் நடவடிக்கையே. மேற்சொன்ன பால்டிக் நாடுகளில் வசிப்பவர்களிற் கணிசமானோர் ரஷ்யர்களாயினும் அவர்களை அவமதிக்குஞ் செயல்களை அந்நாட்டு அரசாங்கங்கள் மேற்கொள்கின்றன. மேலும் இரண்டாம் உலகப் போரின் போது நாற்ஸிகளுக்கு உதவியவர்;களைப் பெருமைப்படுத்துகின்றன. இவை இன்று கிழக்கு ஐரோப்பாவாவெங்கும் திட்டமிட்டுப் பரப்பப்படும் ரஷ்ய விரோதத்தின் பகுதியே.

கடந்த சில ஆண்டுகளில், நேட்டோவில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள், தங்கள் பாதுகாப்புச் செலவீனத்தை 10 மடங்கு அதிகரித்துள்ளன. இவை மோசமாகி வரும் பொருளாதார நெருக்கடியின் பின்ணணியிலும் நிகழ்கின்றதென்றால் அது சொல்லும் செய்தி வலிது. இன்று கூர்மையடையும் பொருளாதார நெருக்கடியும் முதலாளித்துவத்தின் இயலாமையும் தவிர்க்கவியலாமல் ஒரு யுத்தத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்கின்றன. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் இப்போது மீண்டும் உலகை மீளப் பங்கிட வேண்டிய கட்டாயத்தை தோல்வியை எதிர்நோக்கும் முதலாளித்துவமும் அதன் துணை விளைவான ஏகாதிபத்தியமும் உணர்கின்றன.

இன்று ரஷ்யாவுடனான உறவு பற்றி நேட்டோ நாடுகளிடையே ஒருமித்த கருத்து இல்லை. அமெரிக்காவும் பிரித்தானியாவும் விரும்புவது போன்று, ரஷ்ஸியாவுக்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைப் பிற நேட்டோ உறுப்பு நாடுகள் விரும்பவில்லை. ஏற்கெனவே மிக மோசமாகவுள்ள ஐரோப்பிய பொருளாதாரம், ரஷ்ய விரோத நடவடிக்கைகளால் மேலும் மோசமடையலாம் என அவை அஞ்சுகின்றன. அத்தோடு, ரஷ்யா, பத்து ஆண்டுகள் முன்னர் இருந்தது போல தனித்த சக்தியல்ல என அவை நன்கறியும். பெர்லின் சுவரின் வீழ்ச்சிக்குப் பின்னரான இரண்டு தசாப்தகாலம் ஒற்றை மைய உலகின் ஆபத்துக்களை பல நாடுகளுக்கு இடித்துரைத்துள்ளது. எனவே இவை இன்னொரு கெடுபிடிப்போரையல்லாது உலகப்போரையே ஏற்படுத்தவல்லன.

இப் பல்பரிமாணச் சிக்கலின் ஓர் அம்சமாக ரஷ்ய விமான விபத்தை நோக்கல் தகும். கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புப்பெட்டி சில உண்மைகளை உரைக்கவுங்கூடும். பல உண்மைகளை மறைக்கவுங் கூடும். போருக்கு வேண்டியது உண்மையல்ல, தொடங்க ஒரு சாட்டு மட்டுமே.

- See more at: http://www.tamilmirror.lk/158902/%E0%AE%B0%E0%AE%B7-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-#sthash.9LiWmUoC.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.