Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்

4e7705c26-e1450866891322.jpg

 

படம் | UNHCR

“எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம்.

“என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர் அனுஷா, பாடசாலையில் எனது பெயர் திலினி” – இது ஒரு சிறுமியின் பதில். “என் அம்மாவின் பெயர் சரோஜா, அப்பாவின் பெயர் பெருமாள், எனது வீட்டுப் பெயர் ஷோபா, பாடசாலைக்கு கிஷானி” – இது மற்றொரு சிறுமியின் பதில். “அம்மாவின் பெயர் குமாரி, அப்பா செல்லமுத்து, மஞ்சு என என்னை வீட்டில் அழைப்பார்கள், ஆனால், பாடசாலையில் நான் தேஷாணி” – இது இன்னுமொரு சிறுமியின் பெயர் பற்றிய விளக்கம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் அண்மையில் தென் மாகாண சிங்கள மீனவர்கள் மற்றும் தென் மாகாணத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய கள ஆய்வொன்றிற்காக பயணித்திருந்தபோது நேரில் சந்தித்த அனுபவங்களாகும். யுவதியுடனான உரையாடல் மாத்தறை நகரில் இடம்பெற்றது. சிறுமிகளுடனான உரையாடல் தென் மாகாணம் மாத்தறை மாவட்டம் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட கிருவானகங்க தோட்டத்தில் ஞாயிறு ‘தஹம் பாசல’ (பௌத்த அறநெறி பாடசாலை) முடிந்து அந்த பௌத்த அறநெறி பாடசாலை உடையில் தோட்டத்திலுள்ள வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இடம்பெற்றது.

இந்த யுவதியின் ஆதங்கமும், சிறுமிகளின் பெயர் பற்றிய விளக்கங்களும்தான் இன்றைய இலங்கை தென்மாகாணத் தமிழர்களின் யதார்த்த நிலைமைக்கான எடுத்துக்காட்டுகளாகும். இவை யாவும் தென் மாகாணத் தமிழர்கள் எவ்வாறு சிங்கள – பௌத்தர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர்/ மாற்றப்படுகின்றனர் என்பதற்கான சிறந்த நடைமுறை அனுபவங்களாகும்.

இன்று உலகளவில் தமிழர்கள் மற்றியும், தமிழ் மொழி பற்றியும் பேசப்படுகின்றது. இலங்கையின் வடக்கு – கிழக்கு தமிழரின் பிரச்சினை உலகெங்கும் பேசு பொருளாக உள்ளது. ஆனால், வடக்கு – கிழக்கு தமிழர்களில் அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களின் எல்லையில் வாழும் மக்கள் பற்றியோ, புத்தளம் மாவட்ட தமிழ் மக்கள் பற்றியோ, தென் மாகாணம், கறுத்துறை மாவட்டம், மொனறாகலை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், கேகாலை மாவட்டம், ஏன் கொழும்பு மாவட்டத்தின் எல்லையில், அவிசாவளையில் விளிம்பு நிலையில் வாழ்கின்ற மலையத் தமிழ் மக்கள் பற்றியோ பேசப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது.

நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் செறிந்து வாழும் மலையகத் தமிழர் பற்றியே அனைத்து மட்டங்களிலும் விரிவாக பேசப்படாத நிலையில் விளிம்பு நிலை மக்கள் பற்றிய கவனத்தை ஈர்ப்பது மிகவும் கடினமான காரியம்தான். இந்த இடைவெளியை நிரப்பும் ஒரு முயற்சியாகவே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான தென் மாகாணம் இலங்கையின் தென் பகுதியில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய கரையோர மாவட்டங்களை உள்ளடக்கிய சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாகும். தேயிலை, இறப்பர், தென்னை, விவசாயம், மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை என்பன இங்கு பிரதான தொழில்களாகும். ஏலம், கராம்பு, கருவா, பாக்கு, பழங்கள் போன்றவையும் இங்கு விளைகின்றன.

2012ஆம் ஆண்டு குடிசனக் கணிப்பீட்டின் பிரகாரம் தென் மாகாணத்தின் மொத்த சனத் தொகை 2,465,626 ஆகும். காலி மாவட்டத்தில் 1,055,046 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 810,703 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 595, 877 பேரும் வசித்தனர். இந்த கணிப்பீட்டின் படி காலி மாவட்டத்தில் 20,869 தமிழர்களும், மாத்தறை மாவட்டத்தில் 20,546 தமிழர்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,247 தமிழர்களும் வசிக்கின்றனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேரடி கள ஆய்வின் அனுபவங்களூடாகவும் தென் மாகாணத் தமிழ் புலமையாளர்களின் கருத்துப் படியும் களப் பணியாளர்களின் மதிப்பீடுகளின் பிரகாரமும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் மேற் சொன்ன தென் மாகாணத் தமிழர் பற்றிய கணிப்பீடு நடைமுறையோடு பொறுத்தப்பாடு அற்றதாக உள்ளது. கள அனுபவங்களும், குடிசன மதிப்பீடுகளும் தென் மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வாழ்வதை உளுதி செய்கின்றன.

இந்த கணிப்பீட்டு இடைவெளிக்குப் பல காரணங்களைஅங்குள்ள மக்கள் மூலமாகவே அறியக் கூடியதாக உள்ளது.

தென் மாகாணத்தில் காணப்படுகின்ற அநேகமான சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் தோட்டங்களில் வசித்து வரும் பெரும்பாலான தமிர்கள் சூழ்நிலையின் நிமித்தம் தங்களை சிங்களவர்களாகக் காட்டிக் கொள்கின்றமை அல்லது கட்டாயத்தின் பேரில் அடையாளத்தை மாற்றி சிங்களவர்களாக பதிந்தமை.

பெரும்பாலான சிறு தேயிலை தோட்டங்களில் சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பாடசாலைகளில் சேர்ப்பதற்கும், நாட்டிலே கௌரவமாக வாழ சிங்களவர்களாக மாறவேண்டும் என்ற மனப்பாங்கு அவர்களை சிங்களவர்களாக மாறுவதற்கு பலவந்தமாகத் தள்ளியுள்ளது. இந்நிலைமை மாத்தறை மாவட்டத்தின் தெனியாய தேர்தல் தொகுதியின் பல்லேகம, நாக்கியா தெனிய, பலபிட்டி, அம்பலாங்கொட, எல்பிட்டி பிரதேசங்களிலேயே அதிகமாகக் காணப்படுகிறது.

கணக்கெடுப்பின்போது பல தமிழர்கள், கணக்கெடுப்பாளர்களினாலேயே சிங்களவர்களாகப் பதியப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுத் தொழில்களுக்காகச் சென்றவர்களின் வீடுகளில் உள்ளவர்கள் கணக்கெடுப்புக்கு உள்வாங்கப்படாமையும், வெளி மாவட்டங்களில் தொழில் புரிகின்றவர்களின் வசிப்பு புதுப்பிக்கப்படாமையும்.

தென் மாகாணத் தோட்டங்களிலிருந்து வெளியேறி தென் மாகாண நகரங்களில் குடியேறிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போரும், மீன்பிடித் தொழில் வெய்வோரும், அரச உத்தியோகத்திலுள்ளவர்களும் தங்களை முழுமையாக சிங்களவர்களாக மாற்றிக் கொண்டமை.

நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்களாக காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்ட நகரங்களில் தொழில் புரிகின்ற தமிழர்கள் முழுமையாக சிங்களவர்களாக மாறுகின்ற நிலைமையும கவனத்தில் கொள்ளத்தக்கது.

இவ்வாறான இனத்துவ அடையாளம் மாற்றங்களுக்கு மத்தியில் தமிழ் அன்னையின் குரல் தெனியாய மலைகளிலே ஒலிக்கத்தான் செய்கின்றது. மாவட்டத்தின் ஒருபுறத்தில் கடலை எல்லையாகக் கொண்ட மாத்தறை மாவட்டத்தில்தான் 1,400 அடி உயரத்தில் தெனியாய நகரம் அமைந்துள்ளது. தெனியாய சுற்றுப்புறத்திலும், தமிர்கள் மிக செறிவாக வாழும் காலி, மாத்தறை மாவட்ட தோட்டப் புறங்களிலும் தமிழர்கள் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தம் இனத்துவ அடையாளங்களைப் பேணி வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு தமிழ் மொழியில் கற்பதற்கான வசதி அப்பகுதிகளில் (தமிழ் அல்லது முஸ்லிம் பாடசாலைகள்) காணப்படுகின்றமையே பிரதான காரணமாகும்.

இதே போன்றே பெரும்பாலான தோட்டங்களில் இன்று வீட்டு மொழியாக மட்டுமே, அதுவும் பேச்சு மொழியாக மட்டுமே தமிழ் மொழி உள்ளது. தமிழ் மொழி மூல பாடசாலை வசதிகள் மிக மிக குறைவாக காணப்படுவதால் தமிழ் மொழியைக் கற்பதற்கோ அதனைப் பயன்படுத்தவதற்கோ வாய்ப்புகள் காணப்படாமையே இந்நிலைமைக்குப் பிரதான காரணமாகும். வீடுகளிலும் இதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் தாய் மொழியை/ தாய் மொழியில் கற்பதற்குப் பெரும் சவால்களை எதிர்கொள்வதுதான் மறுபுறத்தில் இனத்துவ அடையாளத்தைப் பேணுவதில் அடிப்படைச் சிக்கல்களை உருவாக்கி உள்ளது. தென் மாகாணத்தில் மாத்தறை, காலி மாவட்டங்களில்தான் பரவலாக தமிழர்கள் வாழ்கின்றார்கள். மாத்தறை மாவட்டத்தை உதாரணத்திற்கு எடுத்து நோக்குவோமாயின், பிரதானமாக தெனியாய தேர்தல் தொகுதியில்தான் தமிழர்கள் கணிசமானளவில் வசிக்கின்றனர் (தெனியாய தொகுதியின் பெரும் பங்கு சிங்கராஜ வனத்தை எல்லையாகக் கொண்டிருப்பதுடன், அதன் மறுபுறத்தே இரத்தினபுரி மாவட்டம் காணப்படுகின்றது).

தெனியாய தேர்தல் தொகுதி மூன்று பிரதேச செயலகங்களைக் கொண்டது (மாத்தறை மாவட்டம் மொத்தம் 16 பிரதேச செயலகங்களைக் கொண்டது). அவை முறையே கொட்டப்பொல, பஸ்கொட, பிற்றப்பெத்த ஆகியனவாகும். கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவில் தமிழ் மொழியில் உயர்தரம் வரை இரண்டு பாடசாலைகளே உள்ளன. அவை தெனியாய மெத்தியூஸ் கல்லூரியும் (இது தமிழ், சிங்கள கலவன் பாடசாலை), ஹேன்போர்ட் தமிழ் வித்தியாலயம் என்பனவாகும். சாதாரண தரம் வரை படிப்பதற்காக அணில்கந்த தமிழ் வித்தியாலயம், செல்லவகந்த (என்சல்வத்த) தமிழ் வித்தியாலயம், பெவர்லி தமிழ் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளே காணப்படுகின்றன. பிற்றப்பெத்த பிரதேச செயலகப் பிரிவில் உலன்டாவ தமிழ் வித்தியாலயம் மட்டுமே உயர்தரம் வரை கற்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. மேற்சொன்ன ஆறு பாடசாலைகள் மட்டுமே முழு மாத்தறை மாவட்டத்திற்குமான தமிழ் மொழி மூல (முஸ்லிம் பாடசாலைகள் தவிர்த்து) பாடசாலைகளாகும். தெனியாய தொகுதியின் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவில் கணிசமான தமிழர்கள் வாழ்ந்தாலும் அங்கு தமிழ் மொழி மூல பாடசாலை ஒன்றுகூட இல்லாதது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். இந்த ஆறு பாடசாலைகளும் கூட பெரும் வளப் பற்றாக்குறையுடனேயே இயங்குகின்றன.

தமிழர்கள் தமது இனத்துவ அடையாளங்களை இழந்து கிங்கள பௌத்தர்களாக மாறுகின்ற போக்கு தெனியாய தேர்தல் தொகுதியின் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவிலேயே மிக வேகமாக இடம்பெற்று வருகிறது. இதற்கு அங்குள்ள தமிழர்கள் “தமிழ்மொழி மூலம் கல்வி கற்று தங்கள் தமிழ் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்மொழி மூல பாடசாலை ஒன்று இல்லாமையே” என்று கூறுகின்றனர். நேரடி அவதானிப்புகளின்போது இந்த நிலைமையானது திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. தமிழர்களை மறைமுகமாக சிங்கள பௌத்தர்களாக மாற்றுவதற்கான வழிமுறையாகவே இவை கையாளப்படுகின்றன. தமிழர்கள் செறிந்து வாழும் தோட்டங்களிலுள்ள அறிவிப்புப் பலகைகள் கூட சிங்கள, ஆங்கில மொழிகளிலேயே உள்ளன. இவற்றை வாசிப்பதற்கும், அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் சிங்கள மொழி இங்கு முறைமுகமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளதாலும், தமிழ்மொழி மூல பாடசாலை கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிங்களமொழி மூல பாடசாலைகளை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். அங்கு பௌத்தத்தைத் தமது மதமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இயல்பாகவே ஏற்படுகிறது. இங்கு சிங்கள மொழியைக் கற்பதைத் தவறெனக் கூறவில்லை. தமிழர்களுக்கே தமிழ் மொழி மறுக்கப்படுவதையே அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதவேண்டியுள்ளது.

தமிழ் மொழி மூல பாடசாலை கல்வி மறுப்பு, இனத்துவ அடையாள அழிப்பு என்பவற்றுக்கு அப்பால் தென் மாகாணத் தமிழர்கள் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு இன்று முகம்கொடுத்துள்ளனர். சிங்கள பௌத்த அடையாள மாற்றம் என்பதையும் தாண்டி தமிழர் செறிந்து வாழும் காலி, மாத்தறை மாவட்டங்கள் புதிய சபைகள் ஊடாக கிறிஸ்தவ மத மாற்றம் வெகு தீவிரமாகவே இடம்பெறுகிறது. இந்த சபையினர் கூட மத மாற்றத்தைப் பிரதானமாகக் கொண்டு செயற்படுகின்றனரே தவிர இந்த மக்கள் தங்கள் தாய் மொழியையும், இனத்துவ அடையாளத்தையும் இழப்பதையிட்டு கரிசனை கொண்டதாகத் தெரியவில்லை. தமிழரின் பண்டிகையான தைப்பொங்கள், இந்துக்களின் பண்டிகையான தீபாவளி என்பன மாறி இன்று தென் மாகாணத் தமிழரின் பண்டிகை சித்திரை மாதத்தில் வரும் சிங்கள – தமிழ் புது வருடமும், மார்கழி மாத கிறிஸ்மஸ் பண்டிகையும் இடம்பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இந்துக் கோவில்களும் தமிழரின் குல தெய்வங்களும் இன்று சிங்கள வடிவம் பெற்று படிப்படியாக பௌத்தத்தின் ஒரு பிரிவாக மாறி வருகின்ற நிலையையும் காணலாம். இந்து சமய அலுவல்கள் திணைக்களமும் இவ்வாலயங்களைப் பதிவுசெய்ய மறுக்கின்ற போக்கும் இம்மக்களை வேதனையடையச் செய்துள்ளது.

தென் மாகாணத் தனியார் தோட்டங்களில் இன்றும் கொத்தடிமை முறைமை தொடரவே செய்கின்றது. இத்தோட்டங்களில் வதியும் தமிழர்கள் தோட்டங்களுக்கு வெளியில் சென்று வருவதனாலும் தோட்ட உரிமையாளரின் அனுமதியுடனேயே சென்று வரவேண்டும். இது நவீன கொத்தடிமையின் ஒரு கூறாகவே வெளிப்படுகின்றது. மலையக அரசியல்வாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தென் மாகாணத் தோட்டங்களுக்குச் செல்வதே கிடையாது. அவர்களின் கவனமெல்லாம் அவர்களுக்கான வாக்கு வங்கிகளாக இருக்கக்கூடிய மத்திய மாகாணமும், பதுளை மாவட்டமும்தான். இவர்களைப் பொறுத்த வரை தென் மாகாணத் தமிழர்கள், சிங்களவர்களின் ஒரு பிரிவினராகவே கருதுகின்றனர். அவர்களை சிங்களவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற மனப்பாங்கிலேயே உள்ளனர்.

இப்பகுதிகளைப் பொறுத்த மட்டில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் மலையக அரசியல்வாதிகளூடாகவோ, அரசாங்கத்திலிருந்து நேரடியாகவோ இந்த தோட்டங்களை எட்டுவதில்லை. மொத்தத்தில் தென் மாகாண மலையத் தமிழர்கள் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் ரீதியாக மிகவும் பின்தள்ளப்பட்ட தன் இனத்துவ அடையாளங்களைத் தக்கவைப்பதற்காக போராடுகின்ற ஒரு சமூகமாக இன்று மாறியுள்ளனர். ஒரு தெனியாய தமிழ் புலமையாளரின் கருத்திலேயே கூறுவதானால், “நாம் இன்று சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் ரீதியாக அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்” என்ற கூற்று யதார்த்தபூர்வமானது.

தென் மாகாணத் தமிழர்களின் இன்றைய நிலைமையானது ஒன்றில் சிங்களவர்களாக மாறவேண்டும், இல்லையெனில், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட, இனத்துவ அடையாளங்களை தக்கவைப்பதற்காகப் போராட வேண்டிய, தலைமைத்துவமற்ற ஒரு சமூகமாக விளங்குகின்றனர். இந்நிலைமையை மாற்ற உரிமைகள் பெற்ற ஒரு சமூகமாக, சொந்த இனத்துவ அடையாளங்களுடன் முன்னோக்கிச் செல்வதற்கான ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியது அக்கறையுள்ள அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.

சி.பிரபாகரன்

மலையக சமூக ஆய்வாளர்

 

http://maatram.org/?p=4107

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.