Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருவள்ளுவராண்டு 2047 இல் நம்பிக்கையோடு எடுத்து வைப்போம்: - நக்கீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திருவள்ளுவராண்டு 2047 இல்  நம்பிக்கையோடு  எடுத்து வைப்போம்.     நக்கீரன்    தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்      ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள்,  கிழமை, மாத சஞ்சிகைள் தீபாவளி மலர் வெளியிடுவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தன. பொங்கல் மலர் வெளியிடுவதில்லை.  ஆனால் திராவிட தேசியத்தின் வளர்ச்சி காரணமாக இன்று பொங்கல் விழா தமிழர்களின் தனிப் பெரும் விழாவாக பரிணமித்துள்ளது.

திருவள்ளுவராண்டு 2047 இல் நம்பிக்கையோடு எடுத்து வைப்போம்.

நக்கீரன்

தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள், கிழமை, மாத சஞ்சிகைள் தீபாவளி மலர் வெளியிடுவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தன. பொங்கல் மலர் வெளியிடுவதில்லை. ஆனால் திராவிட தேசியத்தின் வளர்ச்சி காரணமாக இன்று பொங்கல் விழா தமிழர்களின் தனிப் பெரும் விழாவாக பரிணமித்துள்ளது.

   

இன்று உலகளாவிய அளவில் பொங்கல் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றின் மீதுள்ள பற்றும் தமிழின உணர்வும் தமிழ்மக்களிடம் மேலோங்கிக் காணப்படுவதே.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் 2002 ஆண்டு தொடக்கம் (2013,2014 நீங்கலாக) பொங்கல் விழாவோடு தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் - திருவள்ளுவர் பிறந்த நாள் - எனச் சேர்த்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறது.

தூய தமிழ்ப் பெயர்களுக்கு பொற்கிழி அளித்தல் பொங்கல் கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாகும். குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தூய தமிழ்ப் பெயருக்கு 1,000 வெள்ளிகள் முதற்பரிசாக அளிக்கப்படுகிறது. இரண்டாவது பரிசு, ஆறுதல் பரிசு ஆகியவும் அளிக்கப்படுகின்றன. தமிழ்ப் பெயர்கள் தமிழாக இருந்தால் மட்டும் போதாது. அதில் சொற்சுவை, பொருட்சுவை, ஒசைநயம இனிமையும் இருக்கிறதா எனப் பார்த்தே பரிசுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்தப் பரிசுத் திட்டத்தின் பயனாக பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்கள் வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஓரளவாவது பிறந்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் பண்பாட்டு கையேடு என்ற சிறு நூலை வெளியிட்டுள்ளது. அதில் ஆண், பெண் குழந்தைகளுக்குரிய தூய தமிழ்ப் பெயர்ப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு கனடாத் தமிழ்க் கல்லூரியில் படித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் நடத்தும் இளங்கலை (தமிழ்) படிப்பில் பட்டம் பெற்ற 25 பட்டதாரிகளுக்கு சான்றிதழும் பொற்பலகையும் கொடுத்து மதிப்பளிக்கப்பட்டது. அதே வண்ணம் பல்கலைக் கழக நுழைவுக்குத் தமிழில் திறமை சித்தி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. தமிழர்களின் புத்தாண்டு தையா? சித்திரையா? என்ற சொற்போர் தொடர்ந்து நடைபெறுகிறது.

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் மூன்று முக்கிய முடிவுகளை அப்போது எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.

2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.

3. திருவள்ளுவர் காலம் கிமு 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 அய்க் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும்)

1971 இல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்ப்படுத்தப்பட்டு வருகின்றது. 1969 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதால் தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவிக்கும் சட்டத்தை தமிழக அரசு கடந்த 1.2.2008 அன்று சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றியது. அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு சொல்லப்பட்டிருந்தது.

பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள் இனி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி வண்ண வண்ணக் கோலங்கள் இட்டு, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட மழலையர், மாணவர், மங்கையர், மகிழ்ச்சியில் தோய்ந்து, புத்தாடை புனைந்து, தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும் ஆடியும் சமத்துவ உணர்வு பரப்பியும் தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் என எதிர்பார்த்தனர். ஆனால் மே 2011 இல் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதாமுன்னைய அரசின் சட்டத்தை திருத்தி சித்திரை முதல்நாளை புத்தாண்டு என அறிவித்துவிட்டது.

சித்திரை புத்தாண்டு குறித்து மறைந்த பண்டிதர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு கூறியிருந்தார்.

“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? – தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன."

சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாக தொடர்ந்து கொண்டாடி வரலாம். ஆனால் அது தமிழ்ப் புத்தாண்டு ஆக கொண்டாடக் கூடாது. இந்துப் புத்தாண்டு (Hindu New Year) என அதனைக் கொண்டாடலாம். அப்படித்தான் அது கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல் நாள் (April 14) வேனில் காலத்தின் தொடக்க நாள் அதுவே புத்தாண்டின் தொடக்க நாள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வேனில் காலம் புவியின் அச்சு பின்னோக்கி நகர்வதால் (Precession of Equinoxes) மார்ச்சு 20 அல்லது 21 இல் தொடங்கி விடுகிறது. இது பஞ்சாங்கம் கணிப்போருக்குத் தெரிவதில்லை. அல்லது தெரிந்தும் கணக்கில் எடுப்பதில்லை. பருவ காலங்கள் புவிக்கும் ஞாயிறுக்கும் இடையில் உள்ள தொடர்பை வைத்தே நிருணயிக்கப்படுகிறது. பருவ காலங்களுக்கும் கோள்கள் அல்லது நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இல்லை.

சித்திரை முதல்நாள் ஞாயிறு மீன இராசியில் இருந்து விலகி மேட இராசி, அசுவனி நட்சத்திரத்துக்குள் நுழைகிறது. எனவே வானியல் அடிப்படையில் அதுவே புத்தாண்டு பிறக்கும் நாள் என்று சொல்லப்படுவது சரியே.

சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போலவே தைப் புத்தாண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. தை முதல்நாள் ஞாயிறு தனது தென்திசைப் பயணத்தை (தட்சணாயம்) முடித்துக்கொண்டு வடதிசைப் பயணத்தை (உத்தரயாணம்) மேற்கொள்கிறது. அதாவது ஞாயிறு தனு இராசியை விட்டு விலகி மகர இராசியில் நுழைகிறது. எனவே தை முதல் நாளுக்கும் வானியல் அடிப்படை உண்டு என்பது தெளிவாகும்.

பொங்கல் தமிழர்க்கே உரித்தான தனித்துவமான விழாவாகும். தமிழ் மக்கள் சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் விழாவே சமயம் சாராத பகுத்தறிவுக்கு ஒத்த இனிய விழாவாக விளங்குகிறது. கழனி திருத்தி, எருவிட்டு, வரம்பு கட்டி, உழுது, விதைவிதைத்து நெல்மணிக் கதிர்களை அறுவடைசெய்ய உதவியாக இருந்த ஞாயிறுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அந்த விழாவும் உழவர்களுக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் கொண்டாடப்படும். மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற பொருளும் உண்டு.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வேறுபட்ட சூழலில் வாழ்ந்தாலும் அவர்களது வண்ணமயமான பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் பொங்கல் போன்ற இனிய விழாக்களைத் தவறாது கொண்டாட வேண்டும். அதன் மூலம் தமிழ் மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை தமிழர்கள் பேணிக் காப்பாற்ற முடியும். இப்படியான விழாக்களை தமிழர்கள் கொண்டாட மறந்தால், அவற்றை அவர்கள் கைவிட்டால் எங்கள் மொழி, கலை, பண்பாடு காலப் போக்கில் அழிந்து போகும் ஆபத்து இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலை, பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள். அது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

உலகின் தொன்மையான ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. ஏனையவை இலத்தீன், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ மற்றும் சமற்கிருதம் ஆகும். தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப் பேசுகின்றனர். ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை, சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது. தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான உருசியத்திலும் இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும் மூன்றாவதாக உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும் நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப் படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு உருசியர்கள் கூறும் காரணத்தை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் இரண்டு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி" தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று உருசியர்கள் கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குத் தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. தமிழர்களுக்குத்தான் தெரியவில்லை. தமிழில் எழுதுங்கள், தமிழில் பேசுங்கள், தமிழில் வழிபாடு செய்யுங்கள், பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர் வையுங்கள் என்பதற்கு ஒரு போரட்டமே நடத்த வேண்டியுள்ளது!

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்க் கலை பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழ் எங்கள் உயிர்! தமிழ்க் கலை எங்கள் மூச்சு! தமிழ்ப் பண்பாடு எங்கள் வாழ்வு! திருக்குறள் எங்கள் வழிகாட்டி! என்பன அதன் முழக்கமாகும்.

இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசுவதில்லை என நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் உரையாடியது. பிறக்கும் குழந்தைகளுக்கு பைந்தமிழில் பெயரிட வேண்டும். திருமணங்கள் திருக்குறள் ஓதி செந்தமிழில் நடைபெற வேண்டும். திருக்கோயில் வழிபாடு வண்டமிழில் இருக்க வேண்டும்.

உங்கள் உறவுகளை தமிழில் அழையுங்கள். அப்பா, அம்மா என்ற அழகு தமிழ் இருக்க டடி, மமி எங்களுக்குத் தேவையில்லை. அங்கிள், ஆன்ரி வேண்டாம். மாமா, மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள். திருநாவுக்கரசர் இறைவனை ‘அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ’ என்று பாடியிருப்பதை கவனியுங்கள். தமிழ்மக்கள் தங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைச் சொற்றமிழில் செய்ய வேண்டும். கடவுளுக்கு மொழிச் சிக்கல் இல்லை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும். சிவனார் 'அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழ் பாடுக' என்று சுந்தரரைப் பணித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியிருக்கிறார். சுந்தரர் 'இறைவன் தமிழை ஒத்தவன்' என்றும் நாவுக்கரசர் 'பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்' என்றும் 'தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' என்றும் சேக்கிழார் 'ஞாலமளந்த மேன்மை தெய்வத் தமிழ்' என்றும் இறைவனை தமிழாகவே போற்றியிருக்கிறார்கள்.

வள்ளலார் 'எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!' என்றுபாடி “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முத்தமிழில் அழகும் இனிமையும் சொற்சுவையும் பொருட்சுவையும் ஓசைநயமும் நிறைந்த தனித் தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும். இப்படிச் செய்வது தமிழ்மக்கள் அன்னைத் தமிழுக்குச் செய்யக்கூடிய குறைந்தளவு தொண்டாகும். தமிழ்க் குழந்தைகளின் பெயர் பெரும்பாலும் வடமொழியாய் இருப்பதற்கு சோதிடம், சாதகம், நாள், நட்சத்திரம், எண் கணியம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்புவது காரணமாகும். தமிழனைத் தமிழன் என அடையாளங்காட்ட முடியாத பெயர்களை குழந்தைகளுக்குச் சூட்டுவது தமிழுக்கு பெற்றோர்கள் தெரிந்தே செய்யும் மிகப்பிரிய இரண்டகமாகும். அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் இழிபொருள் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அஸ்வின், அஸ்வினி, ஆசா, கோசா, யூரேனியா, நிரோஜன், நிரோஜினி, நிஷாந்தன், கஜீஜன், லவீசன், அபிஷா, ஷர்மிளா, ஷர்மினி, ஷாமியா, ஷாமியன், ஷாலினி, டில்ஷன், டில்ஷி எனப் பொருள் இல்லாத அல்லது முறைகேடான பெயர்களை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள். நிரோஜன் என்றால் ரோசமற்றவன் எனப் பொருள். நிரோஜினி என்றால் ரோசமற்றவள் என்று பொருள். அஸ்வினி என்றால் குதிரை என்று பொருள். மேலும் அபர்ணா, தூஷிகா (தூசிகா), வாசுகி, மகிஷன் (மகிசன்), சுந்தரலிங்கம் ஆகிய வடமொழிப்பெயர்கள் முறையே ஆடையற்றவள், பீளை (கண்மலம்), வந்துநுகர், எருமை, அழகிய ஆண்குறி என்னும் பொருள்படுவதாகும்.

பெற்றோர்களுக்குத் தமிழ் எது வடமொழி எது என்ற குழப்பம் இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. பெயர்களில் ஜ,ஸ,ஷ,ஹ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்கள் இருந்தால் அவை வடமொழிப் பெயர்களாகவே இருக்கும். மேலும் தமிழில் சொற்களுக்கு முன்வராத ட, ர, ல, ங, ண, ழ, ள, ற, ன எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தமிழ்ச் சொற்களாக இருக்க முடியாது.

தமிழ்மொழி வெறும் மொழி மட்டுமல்ல. அஃது ஓர் பழம் பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம். கருவூலம். மூவாத் தமிழில் அழகும் இனிமையும் பொருளும் நிறைந்த பெயர்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கின்றன. அரசி, அருளரசி, அன்பரசி, தமிழரசி, கலையரசி, கலைமகள், திருமகள், நிலமகள், நாமகள், பூமகள், வள்ளி, கோதை, நிலா, அரசன், மாறன், அழகன், முருகன், கண்ணன் எனச் சின்னக் குழந்தைகளுக்கு நல்ல நல்ல வண்ணப் பெயர்கள் இருக்கின்றன.

எங்கள் மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உண்டு. தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் சோறு போடுமா? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். சோற்றுத் தமிழர்கள் சோற்று மொழியைத் தேடிக்கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார்? அவன் அடையாளம் என்ன? அவன் பண்பாடு எது? மரபு யாது?

பிறக்கப் போகும் இந்தத் தைப் புத்தாண்டில் எமது தாயக உறவுகளின் இன்னல்கள், துன்பங்கள் துயரங்கள், அல்லல்கள், அவலங்கள், அனர்த்தங்கள் தொலைந்து அவர்களது வாழ்வில் இன்பம் பொங்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களைப் பீடித்த பீடுகள் அனைத்தும் மறைந்தொழியும் என நம்புகிறோம்.

பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும். உலகளாவிய தமிழ்மக்கள் இன்பம் பொங்கட்டும். அந்த நம்பிக்கையோடு திருவள்ளுவராண்டு 2047 இல் காலடி எடுத்து வைப்போம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=149237&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.