Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனால் நிராகரிக்க முடியாத தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனால் நிராகரிக்க முடியாத தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை - யதீந்திரா

<p>சம்பந்தனால் நிராகரிக்க முடியாத தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை</p>
 

 

சில நாட்களாக ஊடகங்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட நகல் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போன்று, அது வெளியிடப்பட்ட பின்னர் பெரியளவில் விவாதங்களோ அல்லது சர்ச்சைகளோ இடம்பெறவில்லை. ஏனெனில் பெரியளவில் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதுவும் அதில் இல்லை. ஒருவேளை குறித்த யோசனையில் விடுதலைப் புலிகளின் சாயல் தெரிந்திருந்தால், அது ஒருவேளை சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் குறித்த தீர்வு நகலை தயாரிக்கும் நிபுணர்குழுவில் இருந்தவர்கள், மிகுந்த அவதானத்துடன் விடயங்களைக் கையாண்டிருக்கின்றனர். கடந்த காலத்தில் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளின் அடிப்படையிலேயே குறித்த நகல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கூட்டமைப்பின் சார்பில் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் மாகாண சபை தேர்தலின் போதான விஞ்ஞாபனங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே குறித்த வரைவு தயார் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் குறித்த நிபுணர் குழுவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அங்கம் வகித்திருந்தார். உண்மையில் இந்த வரைவு தொடர்பில் ஆரம்பத்தில் நிலவிய சந்தேகங்களுள் ஒன்று, இதில் பெருமளவு கஜேந்திரகுமாரின் வசனங்கள்தான் இடம்பெறும். இறுதியில் அது கஜேந்திரகுமாரின் வரைவாகவே இருக்கும் என்பது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் வரைவு அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தி நிற்கவில்லை. தற்போது வெளிவந்திருக்கும் வரைவு சம்பந்தனால் நிராகரிக்க முடியாதளவிற்கே தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்னர், கூட்டமைப்பின் பேச்சாளரும், இலங்கை தமிழரசு கட்சியில் சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் இயங்கும் தலைவருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: மக்களால் நிராகரிக்கப்பட்டதை வேறு பெயர்களில் எவரேனும் தங்களிடம் கொண்டு வருவார்களானால், அதனை தாங்கள் பரிசீலிக்கப் போவதில்லை என்றார். இதனை கருத்தில் கொண்டுதான் இவ்வாறானதொரு வரைவு வெளியிடப்பட்டதா என்னும் வினாவை தொடுக்கும் வகையிலேயே தற்போதைய வரைவு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் ஒரு சமஸ்டிக் கோரிக்கைக்கான மக்கள் ஆணையையே கோரியிருந்தது. இப்போதும் சம்பந்தன் அவ்வப்போது இந்த வாசகத்தையே உச்சரித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது பேரவையின் குறித்த தீர்வு யோசனையின் அடித்தளமும், சமஸ்டி அரசியல் யாப்பொன்றேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக முன்மொழிந்திருக்கிறது. ஒரேயொரு வித்தியாசம்தான் இதில் உண்டு. சம்பந்தன் வெறுமனே 'சமஸ்டி' என்று உச்சரித்துக் கொண்டிருக்கிறார், பேரவையோ அதன் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்று தெளிவாக வரையறை செய்திருக்கிறது. ஆனால் சம்பந்தனின் அண்மைக்கால அணுகுமுறைகளுக்கு மாறுபாடான வகையிலான ஒரு விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, அரசியலமைப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு முன்னர் கூட்டமைப்புடன் ஓர் உடன்பாட்டை செய்துகொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த வரைவில் கூட்டமைப்பு என்று குறிப்பிடப்படவில்லை, ஆனால் சம்பந்தப்பட்ட தரப்பு என்பது இன்றைய நிலையில் கூட்டமைப்பல்லாது வேறு எவர்?

குறித்த உடன்படிக்கையில் இடம்பெற வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் பேரவையின் வரைவு சுட்டிக்காட்டிருக்கிறது. அதற்கு உதாரணமாக பொஸ்னிய முரண்பாட்டின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட 'டேய்டன்' உடன்படிக்கை, அதேபோன்று, அயர்லாந்து முரண்பாட்டின் போது ஏற்படுத்தப்பட்ட 'குட் பிறைடே' உடன்படிக்கை போன்ற உடன்பாடுகளுக்கு ஒப்பான வகையில், தமிழர் தரப்புடனும் ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பேரவையின் வேண்டுகோள். அதேவேளை, இந்த உடன்பாடு மூன்றாம் தரப்பு ஒன்றால், குறிப்பாக இந்தியா அல்லது அமெரிக்கா அதுவும் இல்லாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை ஆகிய ஒன்றினால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உடன்படிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை மேற்படி உடன்படிக்கை தன்னிச்சையாக சிறிலங்கா அரசாங்கத்தால் கிழித்தெறியப்படுமானால், தமிழ் மக்கள் பொதுசன வாக்கெடுப்பொன்றின் மூலம் தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்னும் உத்தரவாதமும் மேற்படி உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பேரவை வலியுறுத்தியிருக்கிறது.

இந்த விடயங்களை உற்று நோக்கினால் தமிழ் மக்கள் ஒரு 'தனித் தரப்பு' என்னும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமேயொழிய வெறும் இலங்கையர்கள் என்னும் அடிப்படையில் விடயங்கள் நோக்கப்படக் கூடாது என்பதே இங்கு அழுத்தப்பட்டிருக்கும் வாதம். ஆனால் இந்த விடயம் கூட சம்பந்தனுக்குப் புதிதல்ல. மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கின்ற போது, சம்பந்தன் தமிழர் தரப்பு என்னும் வகையில் பேச்சுக்கள் இடம்பெற வேண்டுமென்றுதான் வலியுறுத்தி வந்தார். எனவே தமிழர் தரப்பு என்னும் நிலையில் உடன்படிக்கை அவசியம் என்பது கூட சம்பந்தனுக்கு பிரச்சினையான விடயமல்ல. ஆனால் தற்போதைய நிலையில் அவ்வாறானதொரு உடன்பாடு அவசியம் என்று கருதும் நிலையில் சம்பந்தன் இருக்கிறாரா? மேலும் தமிழர் தரப்பை ஒரு தனித்தரப்பாக கருதி பேசக்கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றதா?

சம்பந்தனை பொறுத்தவரையில் ஆட்சிமாற்றத்தின் போது எவ்வாறு எந்தவொரு நிபந்தனையுமில்லாமல் பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்திருந்தாரோ, அவ்வாறானதொரு மனநிலையுடன்தான் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரத்தையும் கையாண்டு வருகிறார். ஏனெனில் சம்பந்தன், தமிழ் மக்களுக்கான ஒரு தனியான அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு உடன்படிக்கையையும் மேற்கொள்ளும் நிலையில் இல்லை. எவ்வாறு ஆட்சிமாற்றத்தின் போது சிலரை நம்பி செயற்படப் போவதாக கூறியிருந்தாரோ, அவ்வாறானதொரு மனிநிலையில்தான் தற்போதும் இருக்கின்றார். எவ்வாறு உடன்பாடு ஒன்றை செய்தால் அது மகிந்தவிற்கு ஆதரவான அலையை தென்னிலங்கையில் ஏற்படுத்துமென்று ஆட்சிமாற்றத்தின் போது கருதினாரோ, அவ்வாறே தற்போதும் செயற்படுகின்றார்.

தமிழ் மக்கள் சார்பில் விடயங்களை அழுத்தினால், எங்கு இந்த ஆட்சி சரிந்துவிடுமோ என்பதே அவரின் புரிதலாக இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவே தெற்கிற்கு ஒரு கதையையும் வடக்கிற்கு வேறொரு கதையையும் சம்பந்தன் கூறி வருகின்றார். அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசுகின்ற போது, நாங்கள் தமிழீழத்தை கோர மாட்டோம் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். ஆனால் அப்போதும்கூட வடக்கு கிழக்கு இணைந்த தனியலகில் சமஸ்டிக் கட்டமைப்பு என்னும் தன்னுடைய தேர்தல் கால வாக்குறுதியை அழுத்திக் கூறியிருக்கவில்லை. அதே சம்பந்தன் சில தினங்களுக்கு பின்னர் கிளிநொச்சியில் பேசுகின்ற போது, ஒற்றையாட்சி கட்டமைப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. சமஸ்டிக்கு குறைவான தீர்வொன்றையும் நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறி, மேசையில் ஓங்கி அடித்திருந்தார்.

சம்பந்தன் கைவிட்டுவிட்ட தமிழீழத்தை தற்போது இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரனும், ‘இனி நாங்கள் அதனை கைவிடுவோம்’ என்று சம்பந்தனை வழிமொழிந்திருக்கிறார். தமிழீழத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்று சம்பந்தனோ அல்லது சிறிதரனோ சொல்ல வேண்டியதில்லை. கொழும்பு பெட்டாவில் சறம் விற்றுக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண சிங்கள வியாபாரிக்குகூட தெரியும், சம்பந்தன் தமிழ் ஈழத்துக்குரியவர் அல்லவென்று. தமிழர்களில் அனேகருக்குத் தெரியாத விடயம் ஒன்றும் உண்டு. 1976 வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது சம்பந்தன் தமிழரசு கட்சியிலேயே இல்லை. அவர் அந்த நிகழ்வில்கூட பங்கு பற்றியிருக்கவில்லை. சம்பந்தன் தமிழீழத்தை மேடைகளில் உச்சரித்தவர் கூட அல்ல.

<p>சம்பந்தனால் நிராகரிக்க முடியாத தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை</p>

எனவே சிங்கள மக்களுக்கு இப்படியான விடயங்களில் தங்களை நிரூபித்துக் காண்பிக்க வேண்டிய தேவையொன்றும் தமிழ் தலைவர்களுக்கு இல்லை, முக்கியமாக அதில் சம்பந்தன் ஈடுபடவேண்டிய தேவை எவ்விதத்திலும் இல்லை.  பிரபாகரனின் மரணத்திற்கு பின்னர் தமிழீழம் என்பது வெறுமனே ஒரு மேடைச் சொல் மட்டுமே என்பது சிங்கள அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். ஆனால், அவர்கள் தங்களின் வாக்குவங்கியை பேணிப் பாதுகாப்பதற்கு சில சுலோகங்கள் தேவைப்படுவதால் இவ்வாறான விடயங்களை அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர்.

பேரவை எதிர்பார்க்கும் எந்தவொரு விடயமும் சம்பந்தன் பக்கத்திலிருந்து நடக்க வாய்ப்பில்லை. அதேபோன்று, பேரவை எதிர்பார்ப்பது போன்று, தமிழ் மக்களை ஒரு தரப்பாக கருதி, தேசிய அரசாங்கமும் எந்தவொரு முன்னெடுப்பையும் மேற்கொள்ளப் போவதில்லை. இன்று சம்பந்தன் நம்பும் சந்திரிக்கா கூட ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிடுகின்றார். புலிகள் இருக்கின்ற போது பேசப்பட்ட விடயங்களை இப்பொழுது பேசாதீர்கள். அது வேறு விடயம். அதன் மூலம் அவர் உணர்த்த முற்படும் விடயம் என்ன? தமிழர்கள் ஒரு தரப்பாக நிற்பதற்குரிய தகுதிநிலையில் தற்போது இல்லை என்பதுதானே அது. தெற்கு, தமிழர்களை ஒரு தனித்தரப்பு என்னும் நிலையில் அணுகப் போவதில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. தமிழர்கள் ஒரு தரப்பு என்னும் கருத்துநிலையை வலியுறுத்தும் அரசியல் அணுகுமுறையை ஆட்சிமாற்றத்தின் அரம்பத்திலேயே சம்பந்தனும் கைவிட்டுவிட்டார்.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ் மக்கள் பேரவை என்ன செய்யப் போகிறது? இதில் இந்தியாவுடன் பேசும் திட்டம் தொடர்பிலும் சிலர் அபிப்பிராயப்படுவதாக தகவல் உண்டு. அது முடியாத காரியமல்ல. ஆனால் அதற்குரிய காலமும் பெருமளவிற்கு கடந்துவிட்ட ஒரு சூழலில்தான் தற்போது பேரவை இவ்வாறானதொரு வரைவை முன்வைத்திருக்கிறது. ராஜபக்ச ஆட்சியில் இருக்கின்ற போதே ஒரு திட்ட வரைவை முன்வைக்குமாறு இந்தியா கோரியதாகவும் தகவல் உண்டு. ஆனால் அதனையும் சம்பந்தன் செய்யவில்லை. ஆனால் பேரவை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது ஒன்றும் தவறான விடயமல்ல. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. சம்பந்தன் இந்த வரைவை முக்கியமான விடயமாக கொள்ளப் போவதில்லை. அதேவேளை பகிரங்கமாக நிராரிக்கப் போவதுமில்லை. ஏனெனில் அது அவரால் நிராகரிக்க முடியாதளவிற்கு எழுதப்பட்டுள்ளது.

பேரவையின் யோசனையை சம்பந்தன் நிராகரிப்பது அவரது தேர்தற்கால வாக்குறுதியை அவரே நிராகரிப்பதாகவே அமையும். ஆனால் இதனை வெளிப்படையாக ஏற்காமலும் அதேவேளை நிராகரிக்காமலும் இருக்கும் ஒரு அணுமுறையே அவர் தெரிவு செய்யக்கூடும். சம்பந்தனை பொறுத்தவரையில் அவர், ஏதோ வருவதை பார்த்துக் கொள்வோம் என்னும் தன்னுடைய கடைசிக் காலத்தில் இருக்கின்றார். ஆகக் குறைந்தது 13வது திருத்தச் சட்டம் ஏன் ஒரு தீர்வு என்னும் நிலையில் தோற்றுப் போனது என்பதைக் கூட ஆக்கபூர்வமாக அவர் இதுவரை பேசவில்லை.  

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=7016585c-fea7-4bdc-9626-3d658b80e0c8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.